ரமழானும் நோன்பும்…

 உண்மை முஸ்லிம் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ஈமானுடனும் நன்மையை நாடியும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்).

    அவர் நோன்பின் மாண்புகளைப் புரிந்து நோன்புக்கு பொருத்தமற்ற, நன்மையை அழித்துவிடும்படியான அனைத்து தவறுகளிலிருந்தும் தனது நாவு, கண் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வார்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேசவேண்டாம், கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் “நான் நோன்பாளி’ என்று அவர் கூறட்டும்.” (ஸஹீஹுல் புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக்கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத்தேவையுமில்லை.” (ஸஹீஹுல் புகாரி)

    தன்னை நிழலிட்டுள்ள இம்மாதம் ஏனைய மாதங்களைப் போன்றதல்ல. இது நோன்பின் மாதம். நோன்பு அல்லாஹ்வுக்குரியது. அவனே கூலி கொடுக்கிறான். எவ்வித தேவையுமற்ற உபகாரியான அல்லாஹ்வின் கூலி மகத்தானது, பூரணமானது, விசாலமானது என்ற உறுதியான நம்பிக்கை நோன்பாளியின் மனதிலிருந்து மறைந்துவிடக் கூடாது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கும் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: “நோன்பைத்தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். அவன் மனோ இச்சையையும் உணவையும் எனக்காகவே விலக்கினான்.” நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு நோன்பு திறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி; மறுமையில் தனது இறைவனை சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசத்தைவிட மணமிக்கது” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    இதனால் மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் பரக்கத் பொருந்திய இம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் காலங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஒதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும் இரவுகளில் தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபடவேண்டும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதத்தில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹுல் புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் ரமழானில் மற்ற காலங்களைவிட மிக அதிகமாக வணக்கம் புரிபவர்களாக இருந்தார்கள். அதிலும் ரமழானின் இறுதிப் பத்தில் மிக அதிகமாக வணக்கம் புரிந்து வந்தார்கள்.

    அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: “நபி(ஸல்) அவர்கள் மற்ற மாதங்களைவிட ரமழானில் அதிகமாக அமல் செய்வார்கள். குறிப்பாக ரமழானின் ஏனைய நாட்களைவிட பிந்திய பத்து நாட்களில் அதிகம் அமல் செய்வார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் நுழைந்துவிட்டால் முழு இரவும் வணங்குவார்கள், குடும்பத்தினரையும் விழிக்கச் செய்வார்கள், தங்களது ஆடையை இறுக்கக் கட்டி உற்சாகத்துடன் வணக்கத்தில் ஈடுபடுவார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரைத் தேடுமாறு ஏவுவார்கள். “ரமழானின் கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) என்று கூறி அந்த இரவில் நின்று வணங்க ஆர்வ மூட்டுவார்கள். மேலும் கூறினார்கள்: “ரமழானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி)

    மேலும் கூறினார்கள்: “எவர் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை நாடியும் நின்று வணங்குவாரோ அவரது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    இதனால்தான் மகத்துவமிக்க இம்மாதம் தூய்மையான வணக்கங்கள் புரிவதற்கு ஏற்ற மாதமாகத் திகழ்கிறது. இம்மாத இரவுகளில் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டு நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, பஜ்ரு நேரம் உதயமாவதற்கு சற்றுமுன் சில கவளங்களைச் சாப்பிட்டுவிட்டு, படுக்கைக்குச் சென்று ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி, பஜ்ருத் தொழுகையைத் தவறவிடுவது முஸ்லிமுக்கு சற்றும் பொருத்தமற்ற செயலாகும்.

    இறையச்சமுள்ள, மார்க்க நெறிகளை அறிந்த முஸ்லிம் இஷா தொழுகையை முடித்துவிட்டால் விழித்திருக்காது உறங்கச் செல்ல வேண்டும். சிறிது நேர தூக்கத்திற்குப் பிறகு இரவுத் தொழுகைக்காக எழுந்து தொழுதுவிட்டு ஸஹ்ருடைய உணவை உண்ண வேண்டும். பின்னர் பஜ்ருத் தொழுகையை நிறைவேற்ற பள்ளியை நோக்கிச் செல்லவேண்டும்.

    ஷஹர் உணவில் மிக அதிகமான நன்மைகள் இருப்பதால் நபி (ஸல்) அவர்கள் அதை வலியுறுத்தி, “ஸஹர் செய்யுங்கள்! நிச்சயமாக ஸஹர் உணவில் பரக்கத் இருக்கிறது” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    காரணம் என்னவெனில், ஸஹர் நேரத்தில் விழித்தெழுவது இரவில் நின்று வணங்க வாய்ப்பை எற்படுத்தும். பஜ்ரு தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதற்காக உற்சாகத்துடன் பள்ளியை நோக்கி நடக்கச் செய்வதுடன், நோன்பு நோற்க உடல் வலிமையையும் தருகிறது. இதை நபி (ஸல்) அவர்கள் தானும் செய்து தனது தோழர்களுக்கும் பயிற்சியளித்தார்கள்.

    ஜைது இப்னு ஸப்பித் (ரழி) அவர்கள் “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் உணவை உண்டோம். பிறகு தொழுகைக்குச் சென்றோம்” என்று கூறினார்கள். ஒருவர் “அந்த இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரம் (இடைவெளி) இருந்தது?” என்று கேட்டார். “50 ஆயத்துகள் (ஒதும் நேரம்)” என ஜைது (ரழி) பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

     இறையச்சமுடைய முஸ்லிம் ரமழான் அல்லாத மாதங்களிலுள்ள நபிலான நோன்புகளைத் தவறவிடக்கூடாது. அரஃபா நாள் (துல்ஹஜ் பிறை 9) மற்றும் முஹர்ரம் பிறை 9,10 போன்ற காலங்களில் நோன்பு நோற்பது பாவங்களைத் துடைத்தெறியும் சிறந்த அமலாகும்.

    இது குறித்த நபிமொழிகள்:
அபூ கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாளின் நோன்பைப்பற்றி கேட்கப்பட்டபோது, “அது கடந்த ஒரு வருடம் மற்றும் வரக்கூடிய ஒரு வருடப் பாவங்களுக்கு பரிகாரமாகும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

    இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளின் நோன்பை நோற்றார்கள்; அதைப் பிறருக்கும் ஏவினார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நாளின் நோன்பைப் பற்றி கேட்கப்பட்ட போது: “அது சென்றுபோன வருடத்துக்கு பரிகாரமாகும்” எனக் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

    இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் வரும் ஆண்டு உயிருடன் இருந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

     அவ்வாறே ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பதும் சிறந்த அமலாகும். அந்த நோன்பின் மாண்பைப்பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவர் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் தொடர்ச்சியாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கிறாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவராவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது முஸ்தஹபாகும். இது குறித்து அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, இரண்டு ரக்அத் ளுஹா தொழுவது மற்றும் தூங்கச் செல்லுமுன் வித்ரு தொழுவது என்ற மூன்று விஷயங்களை எனது நேசராகிய நபி (ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்தார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    அபூதர்தா (ரழி) அவர்கள் கூறியதாவது: “எனது நேசர் எனக்கு மூன்று விஷயங்களை உபதேசம் செய்தார்கள். நான் மரணிக்கும்வரை அதை விடவே மாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ளுஹா தொழுவது இன்னும் வித்ரு தொழாதவரை நான் தூங்காமலிருப்பது.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வருடம் முழுவதும் நோற்பது போன்றாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    நபிமொழியில் சுட்டிக்காட்டப்பட்ட மூன்று நாள்கள் என்பது ஒவ்வொரு மாதத்தின் பிறை 13, 14, 15வது நாட்களைக் குறிக்கும். அதனை அய்யாமுல் பீழ் என்று கூறப்படும். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் எந்த நாட்களையும் மூன்று நோன்புக்காக குறிப்பாக்காமல் நோற்றதற்கான ஆதாரங்களும் உள்ளன.

    முஅதத்துல் அதவிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பிருந்தார்களா?” என்று கேட்டேன். அன்னையவர்கள் “ஆம்!” என்றார்கள். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்றார்கள்?” எனக் கேட்டேன். “மாதத்தின் எந்தப் பகுதியில் நோற்பது என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை” என பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.