இஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்

அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.

பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.

அவைகள்: –

1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர்.

2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது ஏற்படும் தாக்கங்கள். (Astrology)

இதில் முதலாவது வகை அறிவியலை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, திசைகளை அறிந்துக் கொள்வதற்காகவும், பல்வேறு கால நிலைகளை அறிந்துக் கொள்வதற்காவும், இறைவனின் படைப்பின் அற்புதத்தை கண்டு வியந்து அவனை துதி செய்வதற்காகவும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.

அதே நேரத்தில், ஒருவர் இத்தகைய கல்வியின் மூலம், இதனால் தான் மழை வருகிறது அல்லது குளிர் அல்லது வெயில் அடிக்கிறது என்று  கூறாதிருக்கும் பட்சத்தில் இதில் தவறில்லை என்கின்றனர். இவ்வாறு கூறுவது ஷிர்க் ஆகும் ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும், பருவ நிலை மாறி வரச் செய்வதும் இறைவனின் செயலாகும்.

ஜோதிடக் கலை: –

இரண்டாவது வகையான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கங்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி இஸ்லாம் முற்றுமுழுதாக தடுக்கும், ஒருவருடைய ஏகத்துவ நம்பிக்கையையே சிதைக்கும்  ஒரு கல்வியாகும்.

ஜோதிடக் கலையின் முக்கிய அம்சங்கள்: –

1) கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று நம்புவது.

இது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும். ஏனென்றால் நன்மை தீமைகளை உருவாக்கும் சக்தி அல்லாஹ்வைத் தவிர அவனுடைய படைப்பினங்களுக்கும், உண்டு என்று நம்புபவன் இணைவைத்தவனாவான்.

2) நட்சத்திரங்கள் மற்றும் கிரக நிலை மாற்றத்தினால் ஒருவருடைய வாழ்வில் இன்னின்ன மாறுதல்கள்  ஏற்படும் என்பதைக் கணித்துக் கூறுவது, அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருடைய வாழ்விலும் இன்னின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது.

இத்தகைய நம்பிக்கை, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்கள் இறைவனல்லாத ஜோதிடர்களுக்கும், குறி சொல்பவர்களுக்கும் தெரியும் என்று நம்புவதாகும். ஒருவர் தமக்கு மறைவான விஷயமாகிய எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் உண்டு என்று கூறுவாராயின் அது குப்ர் என்னும் இறை நிராகரிப்பாகும். அவர் இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவராகிறார்.

இராசிப்பலன்கள்: –

ஜோதிடக் கலையின் ஒரு அம்சமே ராசிப்பலன் பார்த்தல் ஆகும்.

படைப்பனங்களிலேயே சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனிலும் மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்கள் ஈடேற்றம் பெற்றிட வழிகாட்டியாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இராசிப்பலன்கள் பார்பதற்குரிய அனுமதி குறித்தோ அல்லது இவர்கள் கற்பனையாக வடிவமைத்திருக்கின்ற ராசி மண்டலங்கள் (Zodiac Signs) குறித்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக அல்-குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இவற்றிற்கு எதிராக ஏராளமான சான்றுகள் உள்ளன.

எந்தவொரு படைப்பினத்திற்கும் கொடுக்கப்படாத இரண்டு சிறப்பங்சங்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்றான். அவைகளாவன: –

1) நன்மை தீமைகளை பகுத்து ஆராயும் பகுத்தறிவு 2) ஒருவன் தாம் விரும்பும் பாதையை சுயமாக சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பம்.

ஒருவனுடைய பழக்க வழக்கங்கள், குணங்கள், தன்மைகள் ஆகியவை அவனுடைய கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தே தான் அமைகின்றதே தவிர வேறொன்றுமில்லை. இவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் மற்றும் இராசி மண்டலங்கள் என்று சொல்லப்படக்கூடிய வற்றிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒருவனுடைய பிறந்த தேதியோ அல்லது வருடமோ அவனுடைய வாழ்வில் எவ்வித பாதிப்பையோ நலவையோ ஏற்படுத்துவதில்லை.

ஒரு குறிப்பிட்ட கிரகமோ அல்லது நட்சத்திரமோ ஒருவருடைய வாழ்க்கையில் பாதிப்பையோ அல்லது நன்மையையோ ஏற்படுத்துகின்றது என்று நம்புவது மிகப்பெரும் பாவமாகிய ஷிர்க் எனும் இணைவைத்தலைச் சேர்ந்ததாகும்.

ஜோதிடம், ராசி பலன், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல், சகுனம் பார்த்தல் இவைகள் அனைத்தும் அறியாமைக்கால மக்களின் மூட நம்பிக்கைகளாகும். இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் தாம் உயர் கல்வியைப் பயின்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று விட்டதாக இருமாப்புக் கொள்ளும் அறிவு ஜீவிகளும் தமது அறிவை அடகு வைத்துவிட்டு, தம் வயிற்று பிழைப்புக்காக தம் மனப்போன போக்கில் உளறிக் கொண்டிருக்கும் உதவாக்கரைகளிடம், தம் வாழ்வை எதிர்காலத்தை தாமே வணப்படுத்திக் கொள்ள தெரியாதவர்களிடம் போய் மண்டியிட்டு, தங்களின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறுமாறு கோருகின்றனர். இதை விட வேறு அறிவீனம் உண்டோ?

ஜோதிடம், ராசி பலன் பார்த்தல் போன்றவற்றை இஸ்லாம் தடை செய்ததோடல்லாமல் இதை செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. இவற்றின் மீது நம்மிக்கை கொள்வது ஒருவருடைய நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதன் பங்கு அல்லாஹ்வைத் தவிர இந்த கிரகங்கள், நட்சத்திரங்களுக்கும் உண்டு என்று நம்புவதாகும்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த உண்மையான முஃமின்  இத்தகைய அறியாமைக் (ஜாகிலிய்யாக்) கால மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் முற்று முழுதாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.

ஈமானின் முக்கியமான நிபந்தனையான விதியை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஃமினும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: –

ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம். (அல்-குர்ஆன் 3:60)

உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்-குர்ஆன் 31:34)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி

அல்லஹ் நட்சத்திரங்களை மூன்று காரணங்களுக்காக படைத்திருக்கின்றான்.

1) வானத்தை அலங்கரிப்பதற்காகவும் 2) சைத்தானை விரட்டுவதற்கான எரி கற்கலாகவும் 3) கப்பலில் வழி காட்டியாகவும்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: –

“யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சூன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.

“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்”  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.

“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று வலியுறுத்திக் கூறுகிறது.

எதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது “இறைவனைத்’ தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்” என கூறுவது போலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: –

“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)

அறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்.

நன்றி:சுவனத்தென்றல்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.