இறையச்சம்…

எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி , இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.
இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? இதைத் தடுக்க எத்தனை தடா, பொடாக்கள் வந்தாலும் அந்தக் கொடுமைகளை ஆட்சியாளர்களால், அதிகாரிகளால் தடுக்க முடிகின்றதா? இல்லை என்பது தான் யதார்த்தமான மறுக்க முடியாத உண்மை.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங் கொடுமைகள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உரிமை மீறல்கள் இது போன்ற ஆயிரக்கணக்கான குற்றங்களைத் தடுக்க லட்சக்கணக்கான சட்டங்கள் இருந்தும் மனிதனைத் திருத்த முடியவில்லை.  அது இயலாது.  சட்டங்களைப் போட்டு கால்நடைகளைத் தடுக்கலாம்.  ஆனால் பல திட்டங்களைப் போட்டு மனிதத் தீமைகளைத் தடுக்க இயலாது என்பது நாம் பார்த்து விடுகின்ற உண்மை.

அப்படியெனில் உலகில் மலிந்து கிடக்கின்ற குற்றங்களைக் களைய, தடுக்க முடியவே முடியாதா? இத்தீமைகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? இதற்குப் பரிகாரம் தான் என்ன?  இஸ்லாத்தை நோக்கிப் பார்ப்போம்.
இஸ்லாம் கூறுகின்றது.  இது என்ன? இதை விடப் பன்மடங்கு தீமைகள் இருந்தாலும் அதையும் தடுக்க முடியும்.  மனித சட்டங்களால் அல்ல! இறையச்சத்தால் மட்டுமே!
இப்பொழுது நடக்கின்ற கொடுமைகளை விட, பல்லாண்டு காலமாக பல கொடுமைகளைச் செய்தவர்கள் தாம் அரபியர்கள்.  அவர்களுக்கு வட்டி, மது, மாது, சூது இவைகள் அனைத்தும் அத்துப்படி.  அவர்களிடமிருந்து தான் இங்குள்ளவர்கள் இந்தத் தீமைகளைப் படித்திருக்க வேண்டும்.  இப்படிப் பட்டவர்களிடம் சில காலத்தில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது எது?  இறையச்சம் தான்.
நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்கின்றார்கள்.  ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடக்கின்றது.  அதைப் பார்த்த நபியவர்கள், ”இது ஸதகா, தர்மப் பொருளாக இல்லாமலிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி
ஸதகா பொருள் நபியவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது.  எனவே தான் தெருவில் கிடந்த பொருளைப் பார்த்த மாத்திரத்தில் அதைச் சாப்பிடாமல் விடுகின்றார்கள்.  காரணம் இது தடை செய்யப்பட்ட பொருளாக இருக்குமோ? இதனால் இறைவன் நம்மைத் தண்டித்து விடுவானோ? என்று அஞ்சி இவ்வாறு செய்கின்றார்கள்.
பொதுச் சொத்துக்களை எப்படியாவது அபகரித்து விட வேண்டும் என்று இன்று பல தலைவர்கள் தங்களின் தலையை பிய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் பொதுச் சொத்து தம்மிடம் இருந்து விடக் கூடாது; அது பொது மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதில் முழுக் கவனம் செலுத்தினார்கள்.
”நபி (ஸல்) அவர்களுடன் ஒரு நாள் அஸர் தொழுதேன்.  அவர்கள் தொழுகை முடிந்தவுடன் மிக வேகமாக மனைவியரின் வீட்டுக்குச் சென்றார்கள்.  நபியவர்களின் விரைவைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியுற்றனர்.  மீண்டும் நபியவர்கள் பள்ளிக்கு வந்து மிக விரைவாகச் சென்றதன் காரணத்தை மக்களுக்குக் கூறினார்கள்.  ”என்னிடத்தில் (பொது மக்களுக்குச் சேர வேண்டிய) சில பேரீத்தம் பழங்கள் இருந்தன.  அது என்னிடம் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கிட்டுக் கொடுப்பதற்காகத் தான் நான் சென்றேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா (ரலி) நூல்: புகாரி
இப்படிப்பட்ட தூயவரிடத்தில் படித்த நபித்தோழர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையில் இறையச்சத்தைக் கடைப்பிடிக்கின்றார்கள் என்று பார்ப்போம்.
நான் என் அடிமையை சாட்டையால் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தேன்.  அப்பொழுது எனக்குப் பின்னாலிருந்து ”அபூ மஸ்வூதே!” என்ற சப்தம் வந்தது. இருப்பினும் என் கோபத்தினால் அந்த சப்தத்தை நான் விளங்கவில்லை.  என்னை அவர் நெருங்கி விடுகின்றார்.  நான் பார்த்தால் அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.  அப்பொழுது நபியவர்கள், ”அபூ மஸ்வூதே! தெரிந்து கொள்ளுங்கள்! அபூ மஸ்வூதே! தெரிந்து கொள்ளுங்கள்!” என்றார்கள்.  என் கையில் இருந்த சாட்டை கீழே விழுந்து விடுகின்றது.  மீண்டும் நபியவர்கள், ”இந்த அடிமையை அடிப்பதற்கு எந்த அளவுக்கு உம்மால் முடியுமோ அதை விட அல்லாஹ்வால் உம்மைத் தண்டிப்பதற்கு முடியும்” என்று கூறினார்கள்.  இதற்குப் பிறகு ஒரு காலத்திலும் நான் என் அடிமையை அடிக்கவில்லை. அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: முஸ்லிம்
மனித நேயம் என்றால் என்ன என்று கூடத் தெரியாத மோசமான வாழ்க்கை வாழ்ந்த நபித்தோழர்களின் அடிப்படை குணத்தையே மாற்றி விடுகின்றது. அடிமைகளை, விலங்குகளை விட மட்டமாக நடத்தியவர்களை, அவர்களும் மனிதர்கள் தாம்; அவர்களுக்கு ஒரு சிறு தீங்கும் ஏற்படுத்தக் கூடாது என்று செயல்பட வைத்தது இந்த இறையச்சம் தான்.
எல்லா தீமைகளுக்கும் முன்னோடிகள் என்று பெயர் எடுத்தவர்கள் கொஞ்ச காலத்திலேயே இறைவனால் பாராட்டப்பட்டனர் என்றால் அதற்குக் காரணம் இறையச்சம் தான்.  அது தான் மனித உருவில் மிருகங்களாக வாழ்ந்தவர்களை புனிதர்களாக மாற்றியது.  இன்னும் அந்த அரபு நபித்தோழர்களின் பெயர்களை நாம் சொல்லும் போது நாமும் சேர்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கின்றோம்.
எல்லா செயல்பாடுகளுக்கும் அடிப்படையாக இறையச்சம் இருக்க வேண்டும்.  அது இல்லை என்றால் எவ்வளவு பெரிய நன்மையை ஒருவன் செய்தாலும் அதை இறைவன் நிராகரித்து விடுவான் என்கின்றது இஸ்லாம்.
(குர்பானியின்) மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும் அல்குர்ஆன் 22:37
”இறைவன் உங்கள் தோற்றத்தையோ உங்களையோ பார்ப்பதில்லை.  மாறாக உங்கள் உள்ளத்தை (இறையச்சத்தை) பார்க்கிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: முஸ்லிம்
மேற்கூறிய செய்திகளைப் பார்க்கும் போது எல்லாவற்றுக்கும் ஆணிவேர் இறையச்சம் தான் என்பது புரியும்.
இன்றைக்கு இறையச்சம் என்றால் முஸ்லிம்களுக்கு மத்தியில், மிகப் பெரிய தாடி இருக்க வேண்டும்;  ஜுப்பா அணிந்திருக்க வேண்டும்;  தலைப்பாகை அணிந்திருக்க வேண்டும்;  உலக ஆசைகள் எதுவுமே இல்லாமல் 24 மணி நேரமும் தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டும்; இப்படியெல்லாம் இருந்தால் அவர்கள் தான் இறையச்சத்தால் உயர்ந்தவர்கள்; இல்லையென்றால் அவர்களிடம் இறையச்சம் இல்லை என்ற நிலை உள்ளது.
இஸ்லாம் இறையச்சத்திற்கு இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை கூறவில்லை. மனைவி மக்களை விட்டு விட்டு வனவாசம் செல்வது தான் இறையச்சம் என நினைப்பது இஸ்லாத்திற்கு விரோதமானது என்று இஸ்லாம் கூறுகின்றது.
மூன்று நபர்கள் நபி (ஸல்) அவர்களது மனைவிமார்களின் வீட்டிற்கு வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடு பற்றிக் கேட்டனர்.  அதற்கு நபியின் மனைவியார் நபியுடைய வணக்கத்தைப் பற்றி விவரித்தார்கள்.  அப்பொழுது, ”முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வணக்கம் இப்படி இருந்தால் நாமெல்லாம் எங்கே!” என்று வந்தவர்கள் வியந்தனர்.  எனவே அவர்களில் ஒருவர், ”நான் இனி இரவு முழுவதும் தொழுது கொண்டிருப்பேன்” என்றார்.  மற்றவர், ”நான் காலமெல்லாம் நோன்பு நோற்பேன்.  நோன்பை விடவே மாட்டேன்” என்றார்.  மூன்றாமவர், ”நான் பெண்களைத் தொட மாட்டேன்.  திருமணமே செய்ய மாட்டேன்” என்று கூறினார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள்.  ”இப்படி இப்படியெல்லாம் சொன்னவர்கள் நீங்கள் தாமா?” என்று வினவினார்கள்.  ”உங்களை விட அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவன் நான் தான்.  நான் நோன்பு வைக்கிறேன்.  நோன்பு வைக்காமலும் இருக்கின்றேன்.  நான் இரவு நேரத்தில் தொழுகின்றேன்.  உறங்கவும் செய்கின்றேன்.  நான் பெண்களைத் திருமணம் செய்துள்ளேன்.  என் இந்த வழிமுறையை யார் புறக்கணிக் கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி
நம்முடைய பார்வையில் இந்த மூன்று பேரும் தவறான முடிவு எதையும் எடுத்து விடவில்லை.  ஏதோ தீமையை செய்யப் போகிறோம் என்று கூறவில்லை.  ஆனால் அந்தத் தோழர்களை நபி (ஸல்) அவர்கள் கடிந்து கொண்டார்கள் என்றால் இறையச்சம் என்பதன் அளவுகோலை விளங்கலாம்.
இறையச்சம் என்பது அதிகமான நன்மை செய்வது அல்ல! 24 மணி நேரமும் வணக்கத்தில் ஈடுபாடு கொள்வது அல்ல!  மனைவி மக்களைப் பிரிந்து, துறவறம் மேற்கொள்வது அல்ல!  குடும்பத்துடன் இருந்து கொண்டு இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்வது தான் இறையச்சம் என்பதை இந்தச் செய்தி தெளிவாகத் தெரிவிக்கின்றது.
ரமளான் மாதம் முழுவதும் முஸ்­ம்கள் நோன்பு நோற்கின்றோம்.  பகல் முழுவதும் உணவு எதையும் உட்கொள்ளாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் கழிக்கின்றோம்.  எல்லாம் எதற்காக? இங்கு தான் இஸ்லாம் மனிதனைப் பக்குவப்படுத்துகின்றது.
நோன்பு நோற்றிருக்கும் போது வீட்டில் உணவு சமைக்கப்பட்டிருக்கும். தனிமையில் இருக்கும் போது அதை உண்டு விட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை.  அவன் நினைத்தால் அந்த உணவைச் சாப்பிடலாம்.  ஆனால் அவன் சாப்பிடாமல் இருக்கின்றான்.  ஏன் தெரியுமா? அவன் நோன்பு நோற்ற நிலையில் உணவு உட்கொண்டதை மனிதர்களில் யாருமே பார்க்கா விட்டாலும் தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.  அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற இறையச்சம் தான் அந்த நோன்பாளியை சாப்பிட விடாமல் தடுக்கின்றது.
தனக்குச் சொந்தமான பொருளாக இருந்தாலும் அதை ரமளான் மாதத்தின் பகல் பொழுதில் உண்பதற்கு இறைவன் தடுத்து விட்டான்; அதைச் சாப்பிட்டால் அவன் நம்மைத் தண்டிப்பான் என்ற காரணத்தால் அதைச் சாப்பிடாமல் புறக்கணிக்கின்றான்.  நோன்பு நேரத்தில் தன்னுடைய பொருளையே இறையச்சத்தின் காரணமாக சாப்பிடாதவன் அடுத்தவர்களுடைய பொருளைச் சாப்பிட முன்வருவானா?
அடுத்தவர் பொருளை அநியாயமாக அபகரிக்க ஒருவன் நினைக்கும் போது, இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் அவனுக்கு வந்து விட்டால் அந்த அநியாயத்தை அவன் செய்ய மாட்டான். நோன்பு மட்டுமல்லாது இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கமுமே இறையச்சத்தை வளர்ப்பதற்கு உறுதுணையாக அமைந்துள்ளன.
சுருக்கமாகக் கூறினால் இறையச்சம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று.  அது இல்லையெனில் மனிதன் மனிதனாக வாழ முடியாது. மிருகக் குணம் கொண்டவனாக மாறி விடுவான் என்பது மறுக்க முடியாத உண்மை!
எனவே தீய செயல்களைக் களைந்து, நல்லறங்கள் புரிவதற்குத் தேவையான இறையச்சத்தை இறைவன் நமக்குத் தருவானாக!
Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.