குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்!

மகத்துவமும்,கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில்… 

 என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்) அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ‘என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு’ என்று கேட்டார். ‘என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார்.இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, ‘இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம் என்று அவரை அழைத்துக் கூறினோம். இதுதான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர். (அல்குர்ஆன் 37:100-111) 

ஒரு வணக்கத்தை அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான் என்று சொன்னால் அதை செயல்படுத்துவதன் மூலம் நம்மிடமிருந்து இறைவன் எதை முக்கியமாக எதிர்பார்க்கிறான் என்பதை உணர்ந்து அவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டும். குர்பானியின் நோக்கத்தை புரியாத பலர் புகழுக்காக அதை செய்வதைப் பார்க்கிறோம். வணக்கத்தின் நோக்கம் இறையச்சத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டுமேயல்லாது மற்ற எண்ணங்களுக்கு இடந்தந்து விடக்கூடாது.
அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவது, தியாக சிந்தனைகளை நினைவுகூர்வது என்ற அடிப்படையில் வல்லநாயன் அல்லாஹ்தான் குர்பானி கொடுப்பதை முஸ்லிம்களின் வழிமுறையாக ஆக்கியுள்ளான் என்றும், அதை ஒரு வழிபாடு என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்விடம் நெருக்கத்தைப் பெற்றுத்தரும் இவ்வணக்கத்தைச் செய்வதில் நாம் ஆர்வங்கொள்வோமாக!

குர்பானி யார் மீது கடமை?

குர்பானி கொடுப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். வசதியில்லாதவர்கள் சிரமப்பட்டு கடன்வாங்கியாவது குர்பானி கொடுக்க வேண்டுமென்பது அவசியமல்லாத ஒன்று. ஏனெனில் எந்த ஒருவரையும் அவரது சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
குர்பானி கொடுப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் பிறை 1 முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக்கூடாது.
‘ஒருவர் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை அவர் தனது முடியை, நகத்தை வெட்டவேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி)   நூல்: முஸ்லிம் 3655, நஸயீ 4285
ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. குடும்பத்தை நடத்திச் செல்பவர் தன் குடும்பத்தின் சார்பாக குர்பானி கொடுப்பார். அவர் மட்டும் முடி, நகங்களை களையாமல் இருக்கவேண்டும்.
குர்பானிப் பிராணிகள்
‘கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களிலே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்.   (அல்குர்ஆன் 22:28)
இவ்வசனத்தில் குர்பானிப் பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும்பொழுது ‘அன்ஆம்’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான். ‘அன்ஆம்’ என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே மேற்கண்ட பிராணிகளையே குர்பானி கொடுக்கவேண்டும். நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானி பிராணிகள்.
பிராணிகளின் தன்மைகள்
குர்பானிப் பிராணி நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்கவேண்டும்.
‘நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை, நோய், ஊனம், கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! கொம்பிலும், பல்லிலும் ஒருகுறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு ஹராமாக்கி விடாதே என்று கூறினார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: நஸயீ 4293
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரியக்கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
‘நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கொழுத்த இரண்டு ஆடுகளைக் குர்பானி கொடுத்திருக்கிறார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி 5554
நபி(ஸல்)அவர்கள் தேர்வு செய்ததுபோல் நல்ல கொழுத்த ஆடு, மாடுகளை வாங்கி கொடுப்பது சிறந்ததாகும். மேலும் குர்பானி கொடுப்பதற்குப் பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் தேர்வு செய்வதில்லை. பெண் பிராணியை அறுத்து பலியிடுவது தவறானது என்றும், அந்தஸ்து குறைவு என்றும் சிலர் நினைக்கிறார்கள். தடுக்கப்பட்ட பிராணிகளின் தன்மைகளை அல்லாஹ்வும், அவனது ரஸுல்(ஸல்) அவர்களும் விளக்கும்போது பெண் பிராணிகளை பலியிடக்கூடாது என்று கூறவில்லை.
குர்பானிப் பிராணியின் வயது
‘நீங்கள் முஸின்னத் தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள்! உங்களுக்கு சிரமமாக இருந்தால் தவிர. அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத்தை அறுங்கள்! அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம் 3631
நபி(ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளை பங்கிட்டுக் கொடுத்தார்கள். அதில் எனக்கு ஜத்வு கிடைத்தது, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக! என்றனர் அறிவிப்பவர் உக்பா பின் ஆமிர்(ரலி) நூல்: முஸ்லிம் 3634, புகாரி 5547
‘முஸின்னத்’தைத்தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னத் என்றால் இனவிருத்தி செய்வதற்கான பருவத்தை அடைந்தவை. ‘ஜத்அத்’, ‘ஜத்வு’ என்றால் பருவமடைவதற்கு முந்தைய நிலையிலுள்ள ஆடு. உறுதியான பற்கள் முளைப்பதற்காக, பிறக்கும் போது இருந்த பற்கள் விழும் பருவத்தை அடைந்தவை. இங்கே வயதைவிட பருவமடைவதுதான் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். காரணம் சில நாட்டின் தட்பவெட்ப நிலை காரணமாக பிராணிகள் மேற்சொன்ன பருவமடைவதில் கால வித்தியாசம் ஏற்படுகிறது. எனவே முஸின்னத்–ஜத்அத்–ஜத்வு போன்ற பருவ நிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ளோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எத்தனை ஆடுகள்?
‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூஅய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஒருவர் தமக்கும், தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார்கள். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது’ அறிவிப்பவர்: அதா பின் யஸார் நூல்: திர்மிதீ 1425, இப்னுமாஜா 3137
எனவே ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஆட்டைக் குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
எப்போது குர்பானி கொடுப்பது?
‘இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்குமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக்கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி)           நூல்: புகாரி 5566 முஸ்லிம் 3765
‘தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) நூல்: தாரகுத்னீ பாகம் 4 பக்கம் 284
இதன் மூலம் குர்பானிப் பிராணிகளை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு வந்ததிலிருந்து அடுத்து வரும் மூன்று நாட்கள் வரை அறுக்கலாம் என்று மார்க்கம் வழிகாட்டுகிறது.
அறுக்கும் முறை
பிராணிகளை அறுக்கும்போது அவற்றுக்கு சிரமம் தராமல் கத்தியை கூர்மையாக்கிக் கொண்டு விரைவாக அறுப்பதன் மூலம் அவற்றுக்கு நிம்மதி தரவேண்டும்.
‘நபி(ஸல்) அவர்கள் கறுப்பும், வெள்ளையும் கலந்த இரண்டு கொம்புள்ள ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். அதை தன் கையால் அறுத்;தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி 5565 முஸ்லிம் 3976
மற்றொரு அறிவிப்பில் ”பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்’ என்று கூறியதாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 3636
விநியோகம் செய்தல்
‘அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக்கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும் உண்ணக்கொடுங்கள்’ (அல்குர்ஆன் 22:36)
‘நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியை பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனுடைய இறைச்சி, தோல் ஆகியவற்றை எல்லாம் வினியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை அறுத்து, உரித்து பங்கிடக் கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ, தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளையிட்டார்கள்.   அலி(ரலி), நூல்: புஹாரி 1717
இந்த ஹதீஸிலிருந்து அறுப்பவருக்கு, உரிப்பவருக்கு தனியாகத்தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி பிராணியின் எந்த ஒரு பகுதியையும் கூலியாக கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
‘(குர்பானி இறைச்சியிலிருந்து) உண்ணுங்கள், சேமித்துக்கொள்ளுங்கள், தர்மம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் வாகித்(ரலி) நூல்: முஸ்லிம் 3643
மேலும் மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது. எனவே குர்பானி கொடுப்பவர்கள் தாங்களும் உண்டு, ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக்கொள்ளலாம். பிற ஊர்களுக்கும் எடுத்துச் செல்லலாம் என்பதை மேற்சொன்ன ஆயத், ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.
கூட்டுக்குர்பானி
ஒரு மாடு ஏழு நபருக்கும், ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டு சேரப் போதுமானதாகும்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)  நூல்: அபூதாவூத் 2425
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழுபேர் வீதமும், ஒரு ஒட்டகத்தில் பத்துபேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)          நூல்: திர்மிதீ 1421, நஸயீ 4316, இப்னுமாஜா 3122
மேலே கூறப்பட்டுள்ள ஹதீஸ்கள் மாடு அல்லது ஒட்டகத்தில் ஏழுபேர் கூட்டு சேரலாம் என்பதோடு, ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் கூட்டு சேரவும் ஆதாரம் உள்ளது என்பதை அறிய முடிகிறது.
Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s