இறைவனாக மாறும் அவ்லியாக்கள்?

அவர்கள் வாதம்: மவ்லிதை வயிற்றுப் பிழைப்புக்காக ஓதுகிறார்கள் என்று கூறுபவர்கள் தான் சுப்ஹான மவ்லிது, முகைதீன் மவ்லித், சாகுல்ஹமீத் மவ்லித் என்று புத்தகங்கள் அச்சிட்டு வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

நமது பதில்: சில ஆலிம்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மவ்லித் ஓதி வருகிறார்கள் என்ற நமது குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல், மவ்லிதை வைத்துப் புத்தகம் அச்சிட்டு வருமானம் ஈட்டி வருவதாக நம்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதைக் காண்போம்.
மவ்லிதில் உள்ள மார்க்கத்திற்கு முரணான செய்திகளை அடையாளம் காட்டுவதற்காக, புத்தக வடிவில் நாம் அச்சிட்டு விற்பனை செய்து வருவதும் அதற்குச் சிறிய அளவில் இலாபம் வைத்து வருவதும் உண்மை தான்.

அதே நேரத்தில் நமது இணைய தளத்தில் இந்தப் புத்தகங்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம். விரும்புகிறவர்கள் அதை எந்தச் செலவும் இல்லாமல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயனடையலாம். நமது நோக்கம் இலாபம் மட்டும் என்றிருந்தால் இலவசமாக இந்நூல்களைப் பதிவிறக்கம் செய்ய அனுமதித்திருக்க மாட்டோம். மக்களிடம் உண்மையைச் சேர்க்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்கும்.

புத்தகமாக அச்சிடுவதற்கு முதலீடு செய்கிறோம். அதைப் புத்தகமாக மாற்றுவதற்குப் பேப்பர் வாங்க வேண்டும்; அச்சிட வேண்டும்; பைண்டிங் செய்ய வேண்டும்; அச்சிடப்பட்டதைப் பாதுகாக்க இடம் வேண்டும்; இதனை விற்பனை செய்ய கடை வேண்டும்; அதற்கு வேலையாள் வேண்டும் என்று எத்தனையோ செலவுகள் இருக்கின்றன. இவற்றிற்குப் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.

ஆனால் மவ்லித் ஓதும் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள்? மவ்லித் ஓதும் சபைகளுக்குச் சென்று வாய்களை அசைத்து விட்டு வரும் நீங்கள் அதற்கு எவ்வளவு செலவு செய்தீர்கள்? அன்றைய காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பணத்தைப் பெற்று வரும் புலவர்களைப் போன்று தானே செய்கிறீர்கள்? இதற்கு என்ன முதலீடு தேவைப்படுகிறது?

எந்த முதலீடும் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை கிடைக்கிறது. ஆனால் முதலீடு செய்து ஐந்து வருடத்திற்கு ஐந்தாயிரம் கிடைக்கும் தொழிலும், இதுவும் ஒன்றா? இரண்டையும் ஒப்பிட முடியுமா?

நமது கேள்வி: சாகுல் ஹமீத் அவர்கள் தொடர்ந்து 12 வருடங்கள் நோன்பு நோற்றார்கள், அவர்கள் தூங்கவும் இல்லை என்ற மவ்லித் வரிகளை எடுத்துக் கூறி ஒருவர் 12 வருடங்கள் தொடர்ந்து நோன்பு பிடிக்க முடியுமா? அதுவும் இடையில் எந்த உணவும், தண்ணீரும் அருந்தாமல் இருக்க முடியுமா? இதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? 12 வருடங்கள் தொடர்ந்து தூங்காமல் தான் ஒரு மனிதரால் இருக்க முடியுமா? என்று கேட்டோம்.

அவர்களின் பதில்: நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பு பிடித்ததாக புகாரி உட்பட பல நூல்களில் பதிவு செய்யபட்டுள்ளது. தொடர் நோன்பு என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு நோற்பது. இதை நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களே? ஏன் இது போன்று அவ்லியாக்களால் செய்ய முடியாது?

நமது பதில்: நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து நோன்பு வைத்துள்ளார்கள். அதற்கு விசால் நோன்பு என்று பெயர். விசால் என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் நோன்பு நோற்பது. நாம் எப்படி மஃக்ரிப் ஆனவுடன் நோன்பு துறப்போமோ அது போன்று இல்லாமல் தொடர்ந்து பல நாட்கள் நோன்பாக இருப்பது. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள், பத்து நாட்கள் என்று நோன்பு வைப்பார்கள். இதை எடுத்துக் காட்டி நபி (ஸல்) அவர்களே இவ்வாறு நோன்பு நோற்றிருக்கும் போது ஏன் பன்னிரண்டு வருடங்கள் ஷாகுல் ஹமீத் அவர்கள் நோன்பு நோற்க முடியாது? என்று கேட்கிறார்கள். அவர்கள் அந்த ஹதீஸை முதலில் முழுமையாகப் படிக்கட்டும்.

அந்த ஹதீஸ் இதோ: நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன் என்றார்கள். தொடர் நோன்பிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்த போது ஒரு நாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். அடுத்த நாளும் நோற்கச் செய்தார்கள்; பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்)அவர்கள், இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன் என்று தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போன்று கூறினார்கள். (புகாரி 1965)

தொடர் நோன்பு வைத்த நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தொடர் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்தார்களே? இதை ஏன் படிக்க மறந்தார்கள்? மேலும் உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன் என்றார்களே? இதை ஏன் கவனிக்க மறந்தார்கள்? இந்தத் தொடர் நோன்பை என்னைத் தவிர யாரும் வைக்கக் கூடாது என்றும் இவற்றை வைப்பதற்கு என்னைத் தவிர வேறு எவருக்கும் முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் ஷாகுல் ஹமீத் அவர்களைப் போன்று பன்னிரண்டு வருடங்கள் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவும் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் நோன்பை விட மாட்டார்களா? என்று எண்ணும் வண்ணம் சில நேரங்கள் தொடர்ந்து நோன்பு நோற்பார்கள். நோன்பு வைக்க மாட்டார்களா? என்று எண்ணும் வண்ணம் தொடர்ந்து நோன்பைவைக்காதாவர்களாகவும் இருந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்க மாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு சில மாதங்களில் அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்காமல் இருப்பார்கள். இந்த மாதம் அவர்கள் நோன்பை விட மாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சிலமாதங்களில்) நோன்பு நோற்பார்கள். அவர்களை இரவில் தொழும் நிலையில் நீ காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய். அவர்களை (இரவில்) உறங்கும் நிலையில் நீ காண விரும்பினால் அவ்வாறே காண்பாய் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 1141)

மேலும் தொடர்ந்து நோன்பு வைத்தவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். இந்த நோன்பு விசால் நோன்பு இல்லை. நாம் வைப்பதைப் போன்ற நோன்பு தான். ஆனால் இதையும் தொடர்ந்து செய்வதைத் தடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே! என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். நபி (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்! என்று கூறினார்கள். நான் சிரமத்தை வந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என் மீது சிரமம் சுமத்தப்பட்டு விட்டது! அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்! என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்! என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது? என்று நான் கேட்டேன். வருடத்தில் பாதி நாட்கள்! என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 1975

தொடர்ந்து நோன்பு நோற்று வந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அதிகப்பட்சமாக ஒரு நாள் விட்டு, ஒரு நாள் நோன்பு நோற்க வேண்டும். இதை விடக் கூடுதலாக நோன்பு நோற்பது சிறந்தது அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

ஷாகுல் ஹமீத் அவர்கள் அதிகம் நோன்பு நோற்க ஆசைப்பட்டிருந்தால் நபிகளாரின் அறிவுரைப்படி ஒரு நாள் விட்டு, ஒரு நாள் நோன்பு நோற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பன்னிரண்டு வருடங்கள் தொடர் நோன்பு வைத்தது (ஒருவேளை உண்மையாக இருந்தாலும்) நபிகளாரின் கட்டளையை அப்பட்டமாக மீறிய செயல் இல்லையா?

12 வருடங்களில், வருடத்திற்கு இரண்டு பெருநாட்கள் வரும். அந்த நாட்களில் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். மேலும் ஷஅபான் மாதத்தின் கடைசியில் ரமலான் நோன்பா? இல்லையா? என்ற சந்தேகம் வரும் நாள் உள்ளது. அந்த நாட்களில் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இப்படித் தடை செய்யபட்ட பல நாட்களிலும் தொடர்ந்து நோன்பு வைத்ததாக மவ்லிதில் இடம் பெற்றுள்ளது. இது சரியா?

அடுத்து பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து தூங்காமல் இருக்க முடியுமா? அப்படி யாரையாவது அல்லாஹ் படைத்திருக்கின்றானா? நபிகளார் தூங்கவில்லையா? என்ற கேள்விகளுக்கு அவர்கள் தரும்

பதில் இதோ: அவர்களின் வாதம்: இறை நேசர்களைப் பற்றி நபிகளார் அவர்கள் இறைவன் கூறுவதாக இவ்வாறு சொல்கிறார்கள்: அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வளவு சிறப்பு இருக்கும் அவ்வலியாக்களால் ஏன் பன்னிரண்டு வருடங்கள் தூங்காமல் இருக்க முடியாது?

நமது பதில்: நல்லடியார்களைப் பற்றி இவ்வாறு நபிகளார் கூறியிருப்பது உண்மை தான். இறைநேசர்கள் இறைவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக ஆகிறார்கள் என்றால் என்ன பொருள்? அவர்கள் இறைவனாகவே ஆகி விடுகிறார்களா? அப்படியானால் ஏன் ஷாகுல் ஹமீத் இறந்தார். அவர் இறந்தார் என்றால் அல்லாஹ் இறந்து விட்டான் என்று அர்த்தமா?

ஷாகுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்தீர்களே? அவரை அடக்கம் செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வை அடக்கம் செய்தீர்களா? நாகூரில் இருக்கும் கப்ர், பக்தாதில் இருக்கும் கப்ர் எல்லாம் அல்லாஹ்வின் கப்ரா?

சாப்பிட மாட்டான் என்பது இறைவனிடம் உள்ள தன்மை, எனவே இறை நேசரும் சாப்பிட மாட்டார் என்றால் இறக்க மாட்டான் என்று தன்மையும், முதுமை அடைய மாட்டான் என்ற தன்மையும் ஏன் அவரிடம் இருக்கவில்லை?

அப்படியானால் இந்த ஹதீஸின் பொருள் என்ன? நீங்களும் சொல்ல வேண்டாம்! நாமும் சொல்ல வேண்டாம் அந்த ஹதீஸின் வாசகமே அதைத் தெளிவுபடுத்துகிறது.

எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான)வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால்நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6502)

அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்ற இறுதி வாசகமே இதற்குப் பொருளாகும்.

கையாகி விடுவேன், காலாகி விடுவேன் என்றால் இறை நேசர்களின் கையாக அல்லாஹ் மாறி விடுவான் என்று பொருளல்ல.

அவ்லியாக்களிலேயே பெரிய அவ்லியா, நபி (ஸல்) அவர்கள் தாம். இறைநேசர்களின் கையாக, காலாக அல்லாஹ் மாறுவான் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலில் மாறியிருக்க வேண்டும். அப்படியானால் உஹுதுப் போரில் நபிகளாரின் பல் உடைக்கப்பட்டதே அது அல்லாஹ்வின் பல்லா? அவர்களுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தினார்களே அதுவும் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயமா?

இதன் உண்மையான பொருள் என்ன? பேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா? இல்லை! நமது நெருக்கத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் சொற்களாகும்.

அவரின் வலது கையை வெட்டினாலும் அல்லது அவரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் எனக்கு ஒன்றும் செய்யாது. நான் வேறு, அவர் வேறு தான்.

இதைப் போன்று கணவன் மனைவியைச் சொல்லும் போது இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். இரண்டு நபர்களும் ஒரு நபராக மாறி விட்டார்கள் என்று பொருளா? அல்லது இவர் சாப்பிட்டால் மனைவிக்கு வயிறு நிரம்பி விடுமா? அல்லது இருவரும் நெருக்கமாக அன்பாக இருக்கிறார்கள் என்று பொருளா?

மற்ற மனிதர்களின் நெருக்கத்தை விட அவ்லியாக்களுக்கு இறைவனிடம் நெருக்கம் அதிகம். இது தான் அதற்குப் பொருள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம்விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத்தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.

மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான். நூல்: முஸ்லிம் 5021

இந்த ஹதீஸில் பசியுடன் வருபவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் என்னை காண்பாய் என்று அல்லாஹ் கூறுகின்றானே! உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிச்சைக்காரன் அல்லாஹ்வாக மாறி விடுவான். அவனுக்கு ஏன் நீங்கள் தர்ஹா கட்டவில்லை.

இந்த ஹதீஸுக்கு இது தான் பொருளா? ஏழைக்கு உதவுதல் எனக்குப் பிடிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான். ஏழைக்கு உணவளிப்பது அல்லாஹ்விற்கு உணவளிப்பதாக ஆகாது. என்றாலும் என் கட்டளையை மதித்து ஏழைக்கு நீ உணவளித்ததால் நீ எனக்கு உதவியதைப் போன்று நான் எடுத்துக் கொண்டு உனக்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம்.

-பி. ஜைனுல் ஆபிதீன்
Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.