முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்…

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை என்ன? இப்போது முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதைப் பார்ப்போம்.

இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பவை..

1. மீன் சாப்பிடக் கூடாது

முஸ்லிம்களின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதம் வந்து விட்டால் பிறை 1 முதல் 10 வரை மீன் மற்றும் கருவாடு சாப்பிடாத திடீர் பிராமணர்களாக மாறி விடுவார்கள்.

2. தாம்பத்தியத்திற்குத் தடை

முஹர்ரம் பத்து வரை தம்பதிகளைத் தாம்பத்தியத்தில் ஈடுபட விடாமல் தடுப்பதை நடைமுறையில் செய்து வருகின்றனர்.

3. சீரழிவுக்கு வழி வகுத்தல்

ஒரு இளைஞன், ஒரு கன்னிப் பெண்ணைப் பார்த்து கண் ஜாடை செய்யவும், கை ஜாடை செய்யவும், யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் சந்தித்துப் பேசிக் கொள்ளவும் ஏதுவாக ஏழாம் பஞ்சா, பத்தாம் பஞ்சா என்ற பஞ்சாக்களை ஏற்படுத்தி, இள வயதினரின் மனதைப் பஞ்சாகப் பறக்க விடுகின்றனர்.

4. தீ குளித்தல்

முஹர்ரம் மாதத்தில் எடுக்கப்படும் ஏழாம் பஞ்சா மற்றும் பத்தாம் பஞ்சாவின் போது ஆண்களைக் குதிரையின் மேல் ஏற்றி ஊர்வலம் சுற்றுவதும், பெண்களைத் தீக்குளிக்கச் செய்வதும் வழமையாக வைத்துள்ளனர்.

5. உப்பு, மிளகு, மோர், கொழுக்கட்டை

பஞ்சா ஊர்வலமாக வரும் போது சாம்பிராணி புகை போட்டு, காணிக்கை என்ற பெயரில் காசு வாங்க சிலர் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் உப்பு ஒரு பார்சலும், மிளகு ஒரு பார்சலும் கொடுப்பார்கள். நமக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை இந்த உப்பு, மிளகு நீக்கி விடும் என்ற நம்பிக்கை. மேலும் ஆண் குழந்தை வேண்டும் என்பவர்கள் கொழுக்கட்டை செய்து பஞ்சா ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு விநியோகிப்பார்கள். ஹுசைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு தண்ணீர் கேட்டார்களாம். அப்போது நஞ்சு கொடுத்து கொல்லப் பட்டார்களாம். எனவே அந்நாளில் யாரும் தாகத்துடன் இருக்கக் கூடாதாம். எனவே அந்நாளில் புதிய மண் பானை வாங்கி அதில் மோர் அடைத்து மதிய நேரத்தில் விநியோகிப்பார்கள். அதே நாளில் நோன்பு நோற்கவும் சொல்லிக் கொள்வார்கள்.

6. மிருக வதை

பஞ்சா ஊர்வலத்தின் போது வாயில்லா ஜீவனாகிய குதிரையின் மீது இரண்டு நபர்களை ஏற்றி வைத்துக் கொண்டு தெருத் தெருவாக இழுத்துச் செல்வார்கள். குதிரைக்காரன் அதற்குரிய கூலியை வாங்கிக் கொள்ள, இவர்கள் குதிரையைக் கொடுமைப் படுத்துவார்கள்.

7. சித்ரவதை

மாற்று மதத்தினர் செய்வதைப் போன்று, இந்த முஹர்ரம் பத்தின் போது தங்கள் உடல்களைக் காயப்படுத்திச் சிதைக்கின்றனர். தங்களைத் தாங்களே சித்ரவதை செய்து கொள்கின்றனர்.

இது போன்ற பல்வேறு காரியங்கள் முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்களால் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் உண்மையில் இந்த முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? இஸ்லாம் நமக்கு என்ன கட்டளையிடுகின்றது? என்பதைப் பார்ப்போம்.

முஹர்ரம் மாதம் பிறை 9, 10 ஆகிய நாட்களில் நோன்பு நோற்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1916, 1917

இந்த ஹதீஸ்களின் படி முஹர்ரம் மாதத்தில் 9, 10 நோன்பு நோற்க வேண்டுமே தவிர, பஞ்சா போன்ற சப்பரங்களை எடுப்பதும், மீன் சாப்பிடக் கூடாது, தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடை விதிப்பதும் மார்க்கத்தில் செய்யப்படும் வரம்பு மீறுதல் ஆகும்.

இந்தக் காரியங்கள் அனைத்தும் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் செயல் என்பதைப் பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரீ 2697

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 3243

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:  செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை யாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: நஸயீ 1560

மேலும் அல்லாஹ் சொல்லாததை சொல்வது அவனுக்கே பாடம் சொல்லிக் கொடுப்பதைப் போன்றதாகும்.

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்குர்ஆன் 49:16

எனவே அல்லாஹ்வின் வார்த்தைக்கு அஞ்சிக் கொள்ள வேண்டும். குர்ஆன், ஹதீஸின் இல்லாததை நாம் மார்க்கமாக எடுக்கக் கூடாது. அவ்வாறு எடுத்துக் கொண்டால் அதை அல்லாஹ் ஏற்க மாட்டான்.

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார்.

அல்குர்ஆன் 3:85

ஆஷூரா நோன்பு எதற்காக?

யூத, கிறிஸ்தவர்கள் திருவிழாக்களின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்களையும் அவர்கள் திருவிழாவாக,கந்தூரியாகக் கொண்டாட வேண்டும் என்று கருதிய நாட்களையும் அது நமக்கும் சிறப்பிற்குரியதாக இருந்தால் அந்த நாளில் நோன்பு நோற்பதைத் தான் நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.

யூதர்களில் ஒருவர் உமர் (ரலி)யிடம், அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அது எந்த வசனம்? எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்: இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன் (என்ற 5:3 திருவசனம் தான் அது)

அதற்கு உமர் (ரலி) அவர்கள், அவ்வசனம் எந்த நாளில், எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெரு வெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ்வசனம் இறங்கியது) என்றார்கள்.

அறிவிப்பவர்:  தாரிக் பின் ஷிஹாப்(ரலி)

நூல்: புகாரி 45

பெருநாளாக கொண்டாடி இருப்போம் என்று யூதர்கள் கருதிய அரஃபா நாளன்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு நோன்பு நோற்பதை வழிகாட்டியிருக்கிறார்கள். அது போன்று யூதர்கள், ஆஷூரா நாளையும் திருவிழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆஷூரா நாளை யூதர்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 2005, 2006

கைபர் வாசிகளான (யூதர்கள்) ஆஷூரா நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர். இன்னும் அதனைப் பெருநாளாகவும் கொண்டாடினார்கள். அந்நாளில் அவர்களுடைய பெண்களுக்குத் தங்களுடைய நகைகளையும் தங்களுக்குரிய அழகூட்டும் ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு வையுங்கள் என (எங்களுக்குக்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: முஸ்லிம் 1913

ஆஷூரா நாளைப் பெருநாளாகக் கொண்டாடுவது யூதர்களுடைய கலாச்சாரமாகும். இத்தகைய யூதர்களுடைய கலாச்சாரம் நம்முடைய சமுதாயத்தவர்களையும் பீடித்து இன்றைக்கு இஸ்லாமிய கலாச்சாரமாகவே மாறி விட்டது.

முஸ்லிம்கள் ஆஷூரா நாளில் முஹர்ரம் பண்டிகை என்ற பெயரில் அதனைப் பெருநாளாகக் கொண்டாடி வருகின்றனர். அத்தகைய வழி கேடுகளை விட்டும் சமுதாயத்தவர்களை எச்சரிக்கை செய்வது அறிந்தவர்களின் மிக முக்கியக் கடமையாகும்.

ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது என்ன நாள்? என்று கேட்டார்கள்.  இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள் என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3397

நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணை வைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ள வேண்டும்.

ஆஷூரா நோன்பின்  சிறப்புகள்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.

நூல்: புகாரி 2006

நாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறோம். அதனை அன்றே நாம் மறந்தும் விடுகின்றோம். நாம் பெரிதாகச் செய்த பாவங்களுக்காக மட்டும் தான் பாவமன்னிப்புத் தேடுகின்றோம். இதனால் சிறு பாவங்கள் அப்படியே கூடிக் கொண்டே வருகின்றன.

இது போன்ற சிறு பாவங்களை நாம் செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹ் மன்னிக்கின்றான். இப்படிப்பட்ட நல்லறங்களில் ஒன்று தான் ஆஷூரா நோன்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: முஸ்லிம் 1976

-அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியக மாணவிகள்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.