கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.

இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும்.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன.
கூட்டுக் குடும்பமாக நாம் வாழ்ந்து வந்தாலும் அதில் மார்க்கம் கூறுகின்ற ஒழுக்க மாண்புகளை முறையாகப் பேணிப் பின்பற்றினால் இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்தும் நம் சமுதாயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தங்கை உறவா? தடுக்கப்பட்ட உறவா?
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் பெண் மக்களை உடன் பிறந்த அக்கா, தங்கை போன்று கருதி அவர்களோடு நெருங்கிப் பழகி வருகின்றனர். வீடுகளில் தனிமையில் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது, வாகனங்களில் பின்னால் வைத்து அழைத்துச் செல்வது போன்று பல விதங்களில் கலந்து பழகி வருகின்றனர். இத்தகைய பழக்க வழக்கங்கள் பல நேரங்களில் அவர்களுக்கு மத்தியில் தவறான தொடர்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது.
ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அல்லது ஒரு தந்தைக்குப் பிறந்தவர்கள் மற்றும் பால்குடிச் சகோதரர்களுக்கு மத்தியில் தான் அண்ணன் தங்கை உறவு ஏற்படுமே தவிர மார்க்க அடிப்படையில் வேறு யாருக்கு மத்தியிலும் அண்ணன் தங்கை உறவு ஏற்படாது.
திருமணம் செய்வதற்கு தடுக்கப் பட்ட உறவுகளை திருமறைக் குர்ஆன் விவரித்துள்ளது. இந்த உறவினர்களை மணக்க அனுமதியில்லை.
ஆண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்
1. தாய், 2. மகள், 3. சகோதரி, 4.தாயின் சகோதரி, 5. தந்தையின் சகோதரி, 6. சகோதரனின் புதல்விகள், 7. சகோதரியின் புதல்விகள், 8. பாலூட்டிய அன்னையர், 9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள், 10. மனைவியின் தாய், 11. மனைவியின் புதல்வி, 12. மகனின் மனைவி, 13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்
 
பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்:
1. தந்தை 2. மகன் 3. சகோதரன் 4. தாயின் சகோதரன் 5. தந்தையின் சகோதரன் 6. சகோதரனின் மகன் 7. சகோதரியின் மகன் 8. பாலூட்டிய அன்னையின் கணவன் 9. பாலூட்டிய அன்னையின் மகன் 10. கணவனின் தந்தை 11. கணவனின் புதல்வன் 12. புதல்வியின் கணவன் 13. சகோதரியின் கணவனை, சகோதரியுடன் வாழும் போது மணப்பது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.
 
திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.
உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். திருக்குர்ஆன் 4:23
இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.
அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.
அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களானால் அவர்களை மணக்கக் கூடாது.
இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவு முறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2451, 4719
இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.(பார்க்க: புகாரி 4719)
மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.
மேற்கண்ட பட்டியலில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் இடம் பெறவில்லை. இதிலிருந்து பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் அந்நியப் பெண்களே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களைத் திருமணம் செய்வது ஆகுமானதாகும்.
ஆனால் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஹராமாக்கி வைத்துள்ளனர். இதனை எந்த ஆலிம்களும் வெள்ளி மேடைகளில் கண்டித்து உரையாற்றுவது கிடையாது. யாராவது பேசினாலும் அவர்களை ஒரு விதமாக பார்க்கக் கூடிய நிலை தான் காணப்படுகிறது.
எனவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அந்நிய ஆணும் பெண்ணும் அண்ணன் தங்கை போன்று கலந்து வாழ்கின்ற இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே:
அது போன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அண்ணியை அன்னை போன்றோ அக்கா போன்றோ கருதி அவர்களோடு நெருங்கிப் பழகக்கூடிய நிலையும் அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய உறவும் பலவிதமான தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாக அமைகின்றது. இவ்வாறு கலந்துறவாடுவது மார்க்கம் காட்டுகின்ற மாண்பிற்கு எதிரானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், ”அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: புகாரி 5232

அனுமதி கோரல்:
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் மார்க்கத்திற்கு எதிரான பல்வேறு நடைமுறைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒன்று, வீடுகளுக்குள் நுழையும் போது பேண வேண்டிய ஒழுக்கங்கள் பின்பற்றப் படுவதில்லை.
கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் அதற்குரிய தனித்தன்மை காக்கப்பட வேண்டும். அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் தனித் தனி அறைகளை ஏற்பாடு செய்து, மார்க்கம் கூறுகின்ற ஒழுக்கங்களை அங்கு மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்தால் பல்வேறு விதமான ஒழுக்கச் சீர்கேடுகள் அரங்கேறுவதை விட்டும் நம் குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் வீடுகளுக்குள்ளோ மற்றவரின் அறைகளுக்குள்ளோ செல்லும் போது அனுமதி பெற்றுச் செல்வதாகும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)
 
அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.
கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.
அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ”திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)
 
இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார். ‘நான் வாசல் தேடி வந்தேன்; உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நிற்க வைத்தே அனுப்பி விட்டார்’ என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றிக் குறை கூறிப் பொறுமுகின்றார். இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கு அவர் இடமளிக்க மாட்டார்.
தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்:
வாசலில் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டுத் தன் பெயரை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மொட்டையாக ‘நான் தான்’ என்று கூறக் கூடாது.
என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், ”யாரது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”நான் தான்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நான் தான் என்றால்…?” என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 6250

மூன்று முக்கிய நேரங்கள்:

 கூட்டாக வாழ்கின்ற வாழ்க்கையில் நம்முடைய குழந்தைகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்கங்களையும் நாம் அவர்களுக்கு முறையாகக் கற்பிக்க வேண்டும். பின்வரும் வசனத்தில் மூன்று நேரங்களில் குழந்தைகள் கூட அனுமதி பெற்றுத் தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:57, 58)
இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும். இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்கள் அனுமதி பெறாமல் வரலாமா?
மூன்று முறை அனுமதி கோரல்:
நான் அன்சாரிகளின் அவை ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். ”நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது வீட்டிற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி), ”(உங்களை வரச் சொல்லியிருந்தேனே) நீங்கள் ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு நான், ”மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப் படவில்லை. ஆகவே நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும். அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்றால் அவர் திரும்பி விடட்டும்” என்று கூறியுள்ளார்கள்” என்று கூறினேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள்.
 
அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ”அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சி சொல்ல) வருவார்” என்று சொன்னார்கள். அங்கு நான் தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே நான் அபூமூஸா (ரலி) அவர்களுடன் சென்று, ”நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 6245

பார்வையை உள்ளே செலுத்தாதிருத்தல்:

ஒருவர் இன்னொருவர் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் நுழைவதற்கு அனுமதி பெறுவதற்கு முன், வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் அந்நியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடக் கூடாது என்பது தான் நபி (ஸல்) அவர்களது கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்ப்பதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், ”நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலுள்ளவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி 5294

பார்வையைப் பறித்தாலும் பாவமில்லை:

 இதனையும் மீறி பார்வையை உள்ளே செலுத்துபவர் மீது கையில் இருப்பதை விட்டெறிந்து கண்ணைப் பறித்தால் கூட தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களது கட்டளை அமைந்துள்ளது.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்முனையுடன் அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்துவதற்குச் சென்றதை இப்போதும் நான் பார்ப்பது போல் உள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 6242
உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அபுல்காஸிம் (முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6902
அடுத்தவர் வீட்டுக்கு ஒருவர் செல்லுகையில் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதருடைய கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திரையைத் தொங்கவிடுதல்:
வீட்டிற்கு வருபவருக்கென்று ஒழுங்கு முறைகள் இருப்பது போல் வீட்டில் உள்ளவருக்கும் அனுமதியளிக்கும் விஷயத்தில் வரைமுறைகள், ஒழுங்கு முறைகள் உள்ளன. வீட்டில் இருப்பவர்கள் வருவோர், போவோர், தெருவில் கடந்து செல்வோர் யாரும் பார்வைகளைச் செலுத்துவதற்கு வசதியாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. திரைகளைத் தொங்கப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட வசனங்களிலும், ஹதீஸ்களிலும் வீட்டில் இருப்பவர்களும் இது போன்று அடுத்தவர் பார்வையில் படும்படி இருக்கக் கூடாது என்பதையும் சேர்த்தே தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்களது வீட்டிலும், அவர்களது மகளார் பாத்திமா (ரலி) வீட்டிலும் திரைகள் தொங்கிக் கொண்டிருந்ததை புகாரி மற்றும் இதர நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.
தமிழகத்தின் சில பகுதிகளிலுள்ள முஸ்லிம் பெண்களிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் பேருந்துகளில் செல்லும் போது தாடி, தலைப்பாகையுடன் யாரேனும் பேருந்தில் ஏறினால் அப்பெண்கள் தங்கள் புர்க்காவை நன்கு இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள். வெட்கப்படுவதற்கு இவர்கள் மட்டும் தகுதியானவர்கள், மற்றவர்கள் கிடையாது என்ற போங்கில் இவர்களது இந்தச் செயல் அமைந்திருக்கும். அது போல் இன்று புர்கா சட்டத்தைப் பேணக் கூடிய முஸ்லிம்கள் குறிப்பாக குர்ஆன், ஹதீஸைப் பேணக் கூடியவர்களின் வீட்டிலும் ஒரு விநோதம் நடக்கின்றது.
ஓரளவுக்கு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள் வந்தால் ஒழுக்க மரியாதையுடன் முறைப்படி அனுமதி அளிக்கின்றனர். பேணுதலுடன் நடந்து கொள்கின்றனர்.
ஆனால் அதே சமயம் கார் டிரைவர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், பூக்காரர்கள், வளையல்காரர்கள், சிட்டை வட்டிக்காரர்கள், தங்கள் வயல்களில் உழும் விவசாயிகள், வயர்மேன்கள், பிளம்பர்கள் குறிப்பாக பொற்கொல்லர்கள் ஆகியோர் சர்வ சாதாரணமாக வீட்டிற்கு வந்து செல்கின்றார்கள். இவர்களைப் பெண்கள் கண்டு கொள்வதே கிடையாது. இத்தகையவர்கள் சமையலறை வரை சர்வ சாதாரணமாகப் பவனி வருகின்றார்கள்.
பெண்கள் அடுக்களையில் சமையல் பணியில் இருக்கும் போது முற்றிலும் தங்கள் ஆடைகளைச் சரி செய்து கொண்டு நிற்க இயலாது. இது போன்ற கட்டங்களைப் பெண்களும் வெட்கப்படுவதற்குரிய கட்டங்கள் என்று கருதுவது கிடையாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்நிய ஆண்களை சர்வ சாதாரணமாக வீட்டிற்குள் அனுமதிப்பது இறைக் கட்டளைக்கு மாற்றமானதாகும்.
இதற்கெல்லாம் காரணம், அல்லாஹ்வின் கட்டளையை முழுமையாக உணர்ந்து செயல்படாதது தான்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். அல்குர்ஆன் 24:31
இந்த இறைக் கட்டளையைப் பெண்கள் பேணி நடக்க வேண்டும். இந்த இறைக் கட்டளைகளைப் பேணி நடந்தால் நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாக, ஒழுக்கமான வாழ்க்கையாக, மறுமையில் வெற்றி பெறக் கூடிய வாழ்க்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.