மறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை!

பல விசயங்களை இலக்காக கொண்டு வாழும் நாம் நமது விருப்பங்களை அடைவதற்காக அல்லும் பகலுமாக பாடுபட்டுவருகிறோம். இந்நேரத்தில் நமது குறிக்கோளுக்கு முட்டுக்கட்டையாக ஏதாவது நடந்துவிட்டால் தலை வெடிக்கின்ற அளவிற்கு கவலை கவ்விக்கொள்கிறது. முட்டுக்கட்டையை களைவதில் முனைப்புடன் செயல்படுகிறோம். நேசித்த பொருள் கை நழுவிச் சென்றால் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாலய சிரமத்திற்குப் பின் நாடியது கிடைத்தால் ஆனந்த வெள்ளம் கண்களில் வெளிப்படுகிறது. இக்கவலைகள் முஸ்­ம் முஸ்­ம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் அனைவருக்கும் வருகிறது.

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களிடத்தில் பிரத்யேகமாக இருக்க வேண்டிய கவலைகளும் உள்ளது. நாம் ஆண்மீக ரீதியில் பண்பட்டு இவ்வுலகிலும் மறுஉலகிலும் வெற்றியை பெறுவதற்கு அவசியமான சில கண்ணீர் சொட்டுகளும் இருக்கின்றன. அர்ப்பமான விசயங்களுக்கு கண்ணீர் துளிகளை செலவழிக்கும் நம் சமுதாயம் நல்ல வழிகளில் அதை செலவழித்தால் பண்பட்ட சமுதாயமாக நிச்சயமாக விளங்கும். எனவே பயனுள்ள கவலை எது என்ற கேள்விக்கான விடையை இத்தொடரில் விரிவாக பார்க்கப்போகிறோம்.

குர்ஆனை செவியேற்று அழுதல்

 குர்ஆன் கூறும் கருத்துக்களை உணர்ந்து படிப்பவர்களால் நிச்சயமாக அழாமல் இருக்க முடியாது. படிப்பவரின் உள்ளத்தை நெகிழச் செய்யும் ஆற்றல் திருக்குர்ஆனிற்கு அதிகம் அதிகமாகவே உள்ளது. முரடர்கள் மற்றும் வீரர்கள் அழுவதை நம்மால் எளிதில் பார்க்க முடியாது. திருக்குர்ஆனைப் படித்து ஒருவர் அழுவதற்கு வீரமோ முரட்டுத்தனமோ ஒரு போதும் தடையாக இருக்காது. இறைநம்பிக்கை ஒன்று இருந்தால் அவர் எவ்வளவு பெரிய வீரராக பலசாளியாக இருந்தாலும் அவரை அழவைக்கும் ஆற்றல் திருக்குர்ஆனிற்கு உள்ளது.

வாழ்க்கையில் நொந்தவர்கள் திருக்குர்ஆனைப் படித்தால் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்திற்கு களிம்பு தடவி ஆறுதல் கூறும் அற்புத வேதம் திருக்குர்ஆன். அக்கரமங்களில் ஈடுபடுபவர்கள் திருக்குர்ஆனைப் படித்தால் அவர்களை எச்சரிக்கும் எழில் மறை வேதமாக திருக்குர்ஆன் விளங்குகிறது. எனவே தான் இதன் பொருளை உணர்ந்து படிக்கும் போது நல்லடியார்களுக்கு கண்ணீர் வந்துவிடுகிறது.

அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்ப­ல் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, ஸஜ்தாவில் விழுவார்கள்.
அல்குர்ஆன் 19 : 58

இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். ”எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!” என அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 5 : 83

மாவீரர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் வசனங்களை கேட்டு அழுதுள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­) அவர்கள் கூறியதாவது : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் எனக்கு (குர்ஆனை) ஓதிக்காட்டுங்கள் என்று சொன்னார்கள். நான் தங்கள் மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதைக் கேட்க விரும்புகிறேன் என்று சொன்னார்கள். ஆகவே நான் அவர்களுக்கு அந்நிஸா அத்தியாயத்தை ஓதிக்காட்டினேன். ஒவ்வொரு சமுதாயத்தி­ருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும் (நபியே) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாகக் கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும் எனும் (4 : 41) வது வசனத்தை நான் அடைந்தபோது நபி (ஸல்) அவர்கள் நிறுத்துங்கள் என்று சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்துகொண்டிருந்தன.
நூல் : புகாரி (4582)

உலத்திற்கு குர்ஆனை போதித்த நபி (ஸல்) அவர்கள் பிறர் ஓதுவதை தன்னுடைய செவியால் கேட்டு மகிழ வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள். தனது சமுதாயத்தின் நிலை என்னவாகுமோ என்ற கவலையில் அழுதுள்ளார்கள். நாம் என்றைக்காவது பிறருடைய ஓதுதலைக் கேட்டு அழுதுள்ளோமா? நமது நிலையை நினைத்தாவது கவலைப்பட்டுள்ளோமா? நம்மை சுற்றி வாழும் மக்களின் நிலை மறுமையில் என்னவாகும் என்ற கவலை நமக்கு எழுந்துள்ளதா? இப்படி கேள்விகளை அடிக்கிக்கொண்டே செல்லலாம்.

தொழுகையில் நாம் எதை ஓதுகிறோம். அதன் பொருளென்ன என்று விளங்காமல் பலர் தொழுதுகொண்டிருக்கிறோம். வசனங்களின் பொருள் தெரியாத காரணத்தினால் தான் நமது தொழுகை உள்ளச்சத்துடன் அமைவதில்லை. வசனங்களை கேட்கும் போது அழுகையும் வருவதில்லை.
பொருள் தெரியாவிட்டாலும் நாம் செய்த தீமைகளையும் அருளாளனின் அளவற்றை கருணையையும் மனக்கண் முன் கொண்டு வந்தால் கள்நெஞ்சம் கூட கரைந்துவிடும். அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கிறோம் என்ற பயம் ஒன்றே நமக்கு அழுகையை வரவழைத்துவிடும். ஆனால் இந்த விசயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கவிடாமல் சைத்தான் நம்மை தடுத்துக்கொண்டிருக்கிறான்.

நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன். சட்டி கொதிப்பதைப் போன்ற சப்தம் அவர்களுடைய நெஞ்சி­ருந்து வந்துகொண்டிருந்த நிலையில் அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். அதாவது அழுதுகொண்டிருந்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஷகீர்
நூல் : அந்நஸயீ (1199)

நபி (ஸல்) அவர்கள் இறந்த போது உமர் (ர­) அவர்கள் உட்பட பெரும்பாலான நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் இன்னும் இறக்கவில்லை என்றே நினைத்தார்கள். துக்கம் தலைக்கு ஏறும் போது சரியான முடிவை பெரும்பாலானவர்கள் எடுக்கமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் மரண விசயத்தில் மக்களெல்லாம் தடுமாறிய நேரத்தில் அபூபக்கர் (ர­) அவர்கள் எந்த விதமான சலனத்திற்கும் ஆளாகாமல் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று மக்களுக்கு புரிய வைத்தார்கள்.

இவ்வளவு உறுதியும் மனவ­மையும் கொண்ட அபூபக்கர் (ர­) அவர்கள் குர்ஆர் வசனங்களை கேட்கும் போது கடுமையாக அழுபவர்களாக இருந்தார்கள். தங்களுடைய மனைவிமார்கள் மற்றும் குழந்தைகளை அபூபக்கரின் அழுகை இஸ்லாத்திற்கு மதம்மாறச் செய்துவிடுமோ என்று அபூபக்கர் (ர­) அவர்களின் அழுகையை கண்ட இணைவைப்பாளர்கள் பயந்தார்கள்.

மக்கத்து குரைஷிகள் இப்னு தகினாவிடம் தமது வீட்டில் தமது இறைவனைத் தொழுது வருமாறும் விரும்பியதை ஓதுமாறும் அதனால் எங்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதை பகிரங்கமாகச் செய்யாதிருக்கும் படியும் அபூபக்கருக்கு நீர் கூறுவீராக. ஏனெனில் அவர் எங்களது மனைவி மக்களை குழப்பி (சோதனைக்குள்ளாக்கி) விடுவார் என நாங்கள் அஞ்சுகிறோம் என்றனர். இதை இப்னு தகினா அபூபக்கர் (ர­) அவர்களிடம் தெரிவித்தார். பிறகு அபூபக்கர் (ர­) அவர்கள் வீட்டிற்கு வெளியே தொழுது ஓதி பகிரங்கப்படுத்தாமல் தம் வீட்டிற்குள்ளேயே தம் இறைவனை வணங்கலானார்கள். பிறகு அவர்களுக்கு ஏதோ தோன்ற தமது வீட்டிற்கு முன்புறத்திலுள்ள கா­யிடத்தில் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டி வெளியே வந்(து தொழு)தார்கள். அந்தப் பள்ளிவாச­ல் தொழவும் குர்ஆன் ஓதவும் தொடங்கினார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமக்கள் திரண்டு வந்து ஆச்சரியத்துடன் அவரை கவனிக்கலானார்கள். அபூபக்கர் (ர­) அவர்கள் குர்ஆன் ஓதும் போது (மனம் உருகி வெளிப்படும்) தமது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுபவராக இருந்தார்கள். இணைவைப்பவர்களான குரைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தியது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­) அவர்கள்
நூல் : புகாரி 2297

ஒரு சமுதாயமே தவறான கருத்தில் இருக்கும் போது அவர்களை கட்டுப்படுத்திய அபூபக்கர் (ர­) அவர்களுக்கு குர்ஆனை கேட்கும் போது தனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. இறைவனுடைய பயத்தால் அவரையும் மீறிக் கொண்டு கண்களில் கண்ணீர் பொங்கிவழிந்தது. இந்த பாக்கியத்தை நம்மில் எத்தனை பேர் பெற்றிருக்கிறோம்?

பரம்பரை முஸ்­ம் என்று சொல்­க்கொண்டும் தினந்தோறும் பல வசனங்களை ஓதிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கும் நாம் குர்ஆனைப் படித்து கண்கலங்குவதில்லை. ஆனால் நஜ்ஜாஸி என்ற அபீசீனிய நாட்டு மன்னர் கிரிஸ்தவராக இருந்தார். அவருடைய அவையில் பல கிரிஸ்தவ பாதரியார்களும் இருந்தார்கள். நபித்தோழர்கள் அவர்களிடத்தில் குர்ஆனைப் படித்துக்காட்டிய போது தாடி நினைகின்ற அளவிற்கு அம்மன்னர் அழுததாக வரலாறு கூறுகிறது.
நஜ்ஜாஸி ஜஃபர் (ர­) அவர்களிடத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தி­ருந்து கொண்டு வந்த ஏதாவது செய்தி உன்னிடம் உள்ளதா? என்று கேட்டார். அதற்கு ஜஃபர் (ர­) அவர்கள் ஆம் என்றார்கள். அதை எனக்கு ஓதிக்காட்டுங்கள் என்று நஜ்ஜாஸி கூறினார். ஜஃபர் (ர­) அவர்கள் கஃப் ஹா யா அய்ன் ஸாத் என்ற அத்தியாயத்தின் ஆரம்பத்தை ஓதிக்காட்டினார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நஜ்ஜாஸி தன்னுடைய தாடி நினைகின்ற அழவிற்கு அழுதார். ஜஃபர் (ர­) அவர்கள் ஓதிக்காட்டியதை கேட்டபோது அவருடைய பாதரிமார்களும் ஏடுகள் நினைகின்ற அளவிற்கு அழுதார்கள். பின்பு நஜ்ஜாஸி கூறினார் இதுவும் (குர்ஆனும்) மூஸா கொண்டு வந்த வேதமும் ஒரே அடிப்படையைக் கொண்டதாக உள்ளது.
அறிவிப்பவர் : உம்மு சலமா (ர­) அவர்கள்
நூல் : அஹ்மத் 21460

இறை பயத்தால் கண்ணீர் வடித்தல்

 தீயவயர்களுக்கு இறைவன் ஏற்பாடு செய்திருக்கும் நரகத்தை நினைவில் கொண்டு வர வேண்டும். நபி (ஸல்) அவர்கள் விவரித்த நரக தண்டனைகளை சிந்தனைக்கு கொண்டுவர வேண்டும். இதன் பின் நாம் செய்த பெரிய சிறிய பாவங்களை எண்ணிப்பார்த்து இறைவனை பயப்பட வேண்டும். இந்த பயம் கண்டிப்பாக நம்மை மேலும் மேலும் தவறு செய்யவிடாது. ஈமானை அதிகப்படுத்திக் கொள்வதற்கு இறை பயம் சிறந்த ஒன்று.

நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அல்குர்ஆன் (8 : 2)

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (இறைவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? (அதற்கு) முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப் போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா? காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிமானோர் குற்றவாளிகள்.
அல்குர்ஆன் (57 : 16)

மறுமை நாளில் அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இருக்காது. சூரியன் தலைக்கு அருகில் கொண்டுவரப்படும். இந்த உலகத்தில் வாழும் போது அல்லாஹ்வை நினைத்து இரண்டு சொட்டு கண்ணீர் வடித்திருந்தால் கொளுத்தும் அந்த வெயி­ல் அல்லாஹ்வின் சிம்மாசனத்திற்கு கீழே நிழல் பெற ஒதுங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அல்லாஹ்வை நினைத்து அழுததின் மதிப்பும் மகத்துவமும் அந்த இக்கட்டான நாளில் தான் புரியவரும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தமது நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கின்றான். அவர்கள் நீதியை நிலைநாட்டும் தலைவர் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊரிய இளைஞர் பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தை தொடர்புபடுத்திக்கொண்ட ஒரு மனிதர் அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள் உயர் அந்தஸ்த்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்கு தம்மை அழைக்கின்ற போது நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என்று சொல்லும் மனிதர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர் தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்.
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ர­)
நூல் : புகாரி (660)

இறைவனுடைய பயத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் இடங்களைக் கண்டால் கேளிக்கைகளில் ஈடுபடக்கூடாது. இந்த இடங்களுக்கு பயந்து நடுங்கியவர்களாக செல்ல வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைவனால் தண்டிக்கப்பட்ட இந்த (ஸமூத் கூட்டத்தினரின்) இடத்திற்கு அழுதவர்களாகவேத் தவிர நீங்கள் செல்ல வேண்டாம். நீங்கள் அழுதவர்களாக இல்லையென்றால் அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள். அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர­)
நூல் : புகாரி (433)

மரண பயத்தை ஏற்படுத்துவதற்காக மண்ணறைகளுக்கு நாம் சென்று வர வேண்டும் என்று இஸ்லாம் நமக்கு போதிக்கிறது. உஸ்மான் (ர­) அவர்கள் மண்ணறைக்குச் சென்றால் கப்ரில் வழங்கப்படும் தண்டனைகளை நினைத்து அழுவார்கள்.

உஸ்மான் (ர­) அவர்கள் மண்ணறைக்குச் சென்றால் தனது தாடி நினைகின்ற அளவிற்கு அழுவார்கள். சொர்க்கம் நரகத்தைப் பற்றி சொல்லப்படும் போது நீங்கள் அழுவதில்லை. ஆனால் இதற்காக (மண்ணறைக்கு வந்தால்) அழுகிறீர்களே என்று அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அதற்கு உஸ்மான் (ர­) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மண்ணறை என்பது மறுமையில் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் அடியான் தப்பித்துவிட்டால் இதற்குப் பின்பு உள்ள (நிலை) இதை விட இலகுவாக இருக்கும். இதில் அவன் வெற்றிபெறவில்லையானால் இதற்குப் பிறகுள்ள (நிலை) இதை விட கடுமையாக இருக்கும். மண்ணறைகளில் (நடக்கும்) காட்சியை விட மோசமான எந்த ஒரு காட்சியையும் நான் பார்க்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹானிஃ (ரஹ்)
நூல் : திர்மிதி (2230)

பிறர் சிரமப்படும் போது கவலைப்படுதல்

 நமக்கருகில் வாழ்ந்து வந்த ஒரு முஸ்­மிற்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால் உடனே நாம் கவலைக்குள்ளாக வேண்டும். நம்மால் இயன்றால் அவருக்கு ஏற்பட்ட அந்தத் துன்பத்தை அகற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இந்நேரத்தில் சகோதரனின் நலனில் எந்த விதமான அக்கரையும் காட்டாமல் உதாசீனப்படுத்துவது இறைநம்பிக்கையாளருக்கு அழகல்ல.

அழுகை வராவிட்டாலும் அழுவதைப் போன்று நடிக்க வேண்டும். என்று பின்வரும் செய்தி உணர்த்துகிறது. நீண்ட ஹதீஸின் ஒரு சிறு பகுதி தான் இந்த செய்தி.
உமர் (ர­) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்கர் (ர­) அவர்களும் அமாந்து அழுதுகொண்டிருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே நீங்களும் உங்களுடைய தோழரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேன் என்று கூறினேன்.
நூல் : முஸ்­ம் (3621)

நல்லகாரியம் தவறியதற்காக அழுகுதல்

 ஏராளமான நன்மைகளை சம்பாரிப்பதற்கு பல வழிகளை நம் மார்க்கம் நமக்கு சொல்­த்தருகின்றது. சில விசயங்களை கண்டிப்பாக செய்தாக வேண்டும் என்று கட்டளையும் இடுகிறது. ஆனால் நம்மீது வதியாக்கப்பட்ட காரியத்தை நாம் செய்யத்தவறியதற்காக என்றைக்காவது பலத்த கவலையில் யாராவது ஆழ்ந்திருப்போமா?

அற்ப விசயங்களை இழந்ததற்காக அழுகின்ற நாம் சொர்க்கத்தை பெற்றுத் தரும் நற்காரியத்தை செய்யத்தவறியதற்காக என்றைக்காவது அழுதிருக்கிறோமா? ஆனால் நற்காரியங்கள் புரிவது மறுமை வாழ்க்கைக்கு லாபகரமாக அமையும் என்று நபித்தோழர்கள் உறுதியாக நம்பிய காரணத்தினால் தம்மால் நற்செயலை செய்ய முடியாமல் போகும் போது கண்ணீர்விட்டு அழுபவர்களாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்து போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பிய நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தங்களுக்கு வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடத்தில் வாகன வசதி இல்லாத காரணத்தினால் வாகனம் இல்லை என்று கூறிவிட்டார்கள். இதனால் அவர்களிடததில் வந்த நபித்தோழர்கள் அழுதுகொண்டு திரும்பிச் சென்றார்கள். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.

(முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் ”உங்களை ஏற்றி அனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை” என்று நீர் கூறிய போது, (நல் வழியில்) செலவிடுவதற்கு ஏதுமில்லை என்ற கவலையால் கண்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில் திரும்பிச் சென்றோர் மீதும் குற்றம் இல்லை.
அல்குர்ஆன் (9 : 92)

நல்லவற்றை செய்ய வாய்ப்புகள் கிடைக்காத போது செய்யமுடியவில்லையே என்ற ஏக்கம் அவர்களைத் தாக்கியது. இன்றைக்கு நன்மைகள் புரிவதற்கு பலவழிகள் இருந்தும் வாய்ப்புகளை தாராளமாக பெற்றிருந்தும் நன்மைகளை கொள்ளையடிப்பதற்கு நாம் பேராசைப்படுவதில்லை. நபித்தோழர்களிடத்தில் இருந்த கவலையும் பேராசையும் நம்மிடத்தில் வந்துவிட்டால் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடிக்கும் மக்களாக நாம் மாறிவிடுவோம்.

ஆயிஷா (ர­) அவர்கள் ஹஜ் செய்வதற்காக புறப்பட்ட போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுகிறது. நாம் ஹஜ் செய்வதற்கு மாதவிடாய் தடையாய் அமைந்துவிட்டதோ என்று நினைத்து அழுதார்கள்.

ஆயிஷா (ர­) அவர்கள் கூறியதாவது நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவி­ருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவை அடுத்துள்ள) ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுதுகொண்டிருந்த என்னைப் பார்த்து உனக்கு என்ன மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று வினவினார்கள். நான் ஆம் என்று சொன்னேன். இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாவை தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் மற்ற எல்லாக்காரியங்களையும் நீ செய்து கொள் என்று சொல்­விட்டு நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியருக்காக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : புகாரி (294)

குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தினமும் பத்திரிக்கைகளையும் தேவையற்ற புத்தகங்களையும் படித்துக்கொண்டிருக்கிறோம். இவ்விரு அற்புதத்தை படிக்காமல் காலத்தை வீணாக்கியதற்காக என்றைக்காவது நாம் கவலைப்பட்டிருப்போமா?
ஆனால் உம்மு அய்மன் என்ற நபித்தோழியர் கவலைப்பட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அல்லாஹ்வின் புறத்தி­ருந்து உபதேசங்கள் வஹியின் மூலமாக வந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பு வஹீ வரும் வாசல் அடைக்கப்பட்டுவிட்டது என்பது தான் அவர்களின் கவலை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததற்குப் பின்னால் அபூபக்கர் (ர­) அவர்கள் உமர் (ர­) அவர்களிடத்தில் என்னை உம்மு அய்மன் (ர­) அவர்களிடத்தில் அழைத்துச் செல்லுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு அய்மன் (ர­) அவர்களை சந்திக்கச் சென்றதைப் போல் நாமும் அவர்களை சந்திக்கச் செல்வோம். நாங்கள் உம்மு அய்மன் (ர­) அவர்களிடத்தில் வந்த போது அவர்கள் அழுதுவிட்டார்கள். அபூபக்கர் (ர­) மற்றும் உமர் (ர­) ஆகிய இருவரும் உம்மு அய்மன் (ர­) அவர்களிடத்தில் ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ்விடத்தில் உள்ளவை நபி (ஸல்) அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ்விடத்தில் உள்ளது தான் அல்லாஹ்வின் தூதருக்கு சிறந்ததாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாமல் நான் அழவில்லை. மாறாக இறைச் செய்தி வானத்தி­ருந்து (வருவது) முடிவுற்றுவிட்டது என்பதால் தான் அழுகிறேன். உம்மு அய்மன் (ர­) அவர்கள் அபூபக்கரையும் உமரையும் அழவைத்துவிட்டார்கள். உம்மு அய்மன் (ர­) அவர்களுடன் அவர்களும் சேர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர­)
நூல் : முஸ்­ம் (4492)

மார்க்கம் தடைசெய்த விசயங்கள் நமக்கு தெளிவாக தெரிந்தும் கூட துணிச்சலாக எந்த விதமான இறைபயமும் இல்லாமல் அந்தக் காரியங்களை செய்துகொண்டிருக்கிறோம். பிறர் தடுக்கப்பட்ட காரியங்களை செய்வதற்கு அழைக்கும் போது அவர்களுடன் கூட்டு சேர்ந்துகொள்கிறோம். நாம் இந்தக் குற்றத்தை செய்வது போதாதென்று நல்ல நண்பர்களையும் இந்த காரியங்களில் ஈடுபடுத்திக்கொள்கிறோம். பின்வரும் சம்பவம் நாம் படிப்பினை பெற்று திருந்திக்கொள்வதற்கு சிறந்த நிகழ்வாக அமைந்துள்ளது.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அலங்காரப்பட்டு நீளங்கி ஒன்றை அணிந்தார்கள். பின்னர் விரைவாக அதைக் கழற்றி உமர் பின் அல்கத்தாப் (ர­) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர்களிடம் ஏன் விரைவாக அதைக் கழற்றிவிட்டீர்கள் அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அதை அணிய வேண்டாம் என ஜிப்ரீல் என்னைத் தடுத்துவிட்டார் என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ர­) அவர்கள் அழுதுகொண்டே வந்து அல்லாஹ்வின் தூதரே தாங்கள் வெறுத்த ஒன்றை எனக்குக் கொடுத்துள்ளீர்களே? எனக்கு மட்டும் என்னவாம்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு இதை நான் தரவில்லை. இதை நீங்கள் விற்று (க் காசாக்கி)க் கொள்வதற்காகவே உங்களுக்கு வழங்கினேன் என்று சொன்னார்கள். எனவே அதை உமர் (ர­) அவர்கள் இரண்டாயிரம் திர்ஹங்களுக்கு விற்றுவிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­)
நூல் : முஸ்­ம் (4207)

நபி (ஸல்) அவர்கள் ஒரு விசயத்தை வெறுத்திருக்கும் போது அதை நாம் எப்படி செய்ய முடியும் என்று உமர் (ர­) அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அழுகை கூட வந்துவிடுகிறது. பல விசயங்களில் நபிவழிக்கு மாற்றமாக செயல்படும் நம் மக்கள் உமர் (ர­) அவர்களிடத்தில் படிப்பினை பெற வேண்டும்.
உபதேசங்களைக் கேட்கும் போது நமது ஈமான் கூடுகிறது. வேறு வேலைகளில் ஈடுபடும் போது நமது கவனம் மார்க்க விசயங்களைப் பற்றியதாக பெரும்பாலும் இருக்காது. இது போன்ற நிலை நபித்தோழர்களுக்கும் வந்தது. நபி (ஸல்) அவர்களிடத்தில் இருக்கும் போது மார்க்க சம்பந்தமான சிந்தனைகளில் திளைத்திருப்பார்கள். தங்கள் வீடுகளுக்கு சென்றால் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்களிடத்தில் இருக்கும் போது ஒரு விதமாகவும் வீட்டிற்குச் சென்றால் இன்னொரு விதமாகவும் நடந்துகொள்வது நயவஞ்சகத்தனம் என்று சிலர் கருதினார்கள். ஆகையால் தூய்மையான இறைநம்பிக்கையாளர்களாக அவர்கள் இருந்தும் கூட தங்களை நயவஞ்சகர்கள் என்று சொல்­க்கொண்டு கவலையுடன் நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தார்கள். தனது மார்க்கத்தின் மீது எல்லையில்லா அக்கரை இவர்களுக்கு இருந்த காரணத்தினால் தான் இவர்களுக்கு இந்தக் கவலை ஏற்பட்டது.

ஹன்ளலா (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடைய எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள் அபூபக்கர் (ர­) அவர்கள் என்னை சந்தித்து ஹன்ளலாவே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நான் ஹன்ளலா நயவஞ்சகராக ஆகிவிட்டார் என்று கூறினேன். அதற்கு அவர்கள் அல்லாஹ் தூய்மையானவன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் இருக்கும் போது அவர்கள் நமக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டுகிறார்கள். எந்த அளவிற்கென்றால் கண்கூடாக (அவற்றை) நாம் காண்வதைப் போல் (மார்க்க சிந்தனையில் இருக்கிறோம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து வந்துவிட்டால் மனைவிமார்களுடனும் குழந்தைகளுடனும் விளையாடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்துவிடுகிறோம் என்று கூறினேன். அபூபக்கர் (ர­) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாமும் இப்படித் தான் இருக்கிறோம் என்று கூறினார்கள். ஆகையால் நானும் அபூபக்கர் (ர­) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். நான் அல்லாஹ்வின் தூதரே ஹன்ளலா நயவஞ்சகனாகிவிட்டான் என்று கூறினேன். அதற்கு அவர்கள் என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எங்களுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் நினைவூட்டும் போது கண்கூடாக (சொர்க்கம் நரகத்தை) காணுவதைப் போன்ற நிலையில் உங்களிடத்தில் இருக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டால் மனைவிமக்களுடன் விளையாட ஆரம்பித்துவிடுகிறோம். வியாபாரம் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறோம். அதிகமான (மார்க்க) விசயங்களை மறந்துவிடுகிறோம் என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக என்னிடத்தில் நீங்கள் இருப்பதைப் போன்றும் இறைதியானத்திலும் நீங்கள் எப்போது திளைத்திருந்தால் வானவர்கள் (போட்டி போட்டுக்கொண்டு) நீங்கள் உறங்கச் செல்லும் இடங்களிலும் செல்லும் வழிகளிலும் உங்களிடத்தில் கை கொடுப்பார்கள். எனவே ஹன்ளலாவே சிறிது நேரம் (மார்க்க விசயங்களில் கவனத்தைச் செலுத்துங்கள்) சிறிது நேரம் (மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருங்கள்) என்று மூன்று முறை கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஹன்ளலா (ர­)
நூல் : முஸ்­ம் (4937)

அபூபக்கர் மற்றும் ஹன்ளலா (ர­) அவர்களிடத்தில் இருந்த மார்க்க கவலையைப் போன்று நமக்கும் இருந்தால் மார்க்கம் வழியுறுத்தும் சிறு சிறு நல்லறங்களைக் கூட விட்டுவிடமாட்டோம்.

நபித்தோழர்கள் தங்களது சொந்த ஊரான மக்காவை இஸ்லாத்திற்காக துறந்துவிட்டு மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தார்கள். இறைவனுக்காக அவர்கள் இந்த தியாகத்தை செய்தார்கள். பின்பு மக்கா வெற்றி கொள்ளப்பட்டது. என்றாலும் மறுபடியும் மக்காவை சொந்த ஊராக ஆக்கிக்கொள்ளக் கூடாது என்ற சட்டம் இவர்களுக்குப் போடப்பட்டது.

மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் செய்த தியாகிகளில் சஃத் (ர­) அவர்களும் ஒருவர். அவர்கள் மக்காவில் கடுமையான நோய்க்குள்ளாகி மரண தருவாயில் இருந்தார்கள். இந்த நிலையில் பயணம் செய்து சொந்த ஊராக ஆக்கிக்கொண்ட மதீனாவிற்கும் இவர்களால் செல்ல முடியவில்லை. மக்காவிலே தங்கி இறந்துவிட்டால் நாம் செய்த ஹிஜ்ரத் என்ற தியாகத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டானோ என்ற கவலை அவர்களுக்கு மேலோங்கியது.

பிறந்த மண்ணில் இறப்பதற்குத் அதிகமானோர் ஆசைப்படுவார்கள். ஆனால் சஃத் (ர­) அவர்கள் பிறந்த ஊர் மக்காவாக இருந்த போதிலும் மதீனாவில் மரணிக்க வேண்டும் என்று தான் விரும்பினார்கள். மரண நேரத்தில் தான் செய்த நற்காரியம் அழிந்துவிடக்கூடாது என்ற எண்ணித்தில் அவர்கள் புழுவாய் துடிதுடித்துக்கொண்டிருந்தார்கள்.

நாம் செய்கின்ற நல்லறங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. இந்தக் குறைவான நல்லறங்களை அழிக்கும் தீய காரியங்களை நிறைவாக செய்துகொண்டிருக்கிறோம். ஆவலுடன் சிரமத்துடன் சமைக்கப்ட்டப் உணவு மண்ணில் கொட்டிவிட்டால் எவ்வளவு கவலை ஏற்படுமோ அது போன்ற கவலை சஃத் (ர­) அவர்களுக்கு ஏற்பட்டதைப் போல் நமக்கும் ஏற்பட்டால் வெற்றி நிச்சயம்.

சஃத் பின் அபீவக்காஸ் (ர­) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (உடல் ந­வுற்றிருந்த) என்னை நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதேன். நபி (ஸல்) அவர்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் சஃத் பின் கவ்லா இறந்ததைப் போன்று நாடு துறந்து சென்ற இந்த மண்ணிலேயே (மக்காவிலேயே) இறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்று நான் சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இறைவா சஃதுக்கு குணமளிப்பாயாக சஃதுக்கு குணமளிப்பாயாக என மூன்று முறை பிரார்த்தித்தார்கள்.
நூல் : முஸ்­ம் (3352)

குர்ஆன் ஹதீஸை சரியாக புரிந்து முறையாக வாழ்பவர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்கிறார்கள். இஸ்லாத்தின் அடிப்படைக்கூடத் தெரியாமல் மூட நம்பிக்கைகளில் திளைத்த மக்கள் ஏராளம். அறீவீனத்தால் அசுப காரியங்களில் இவர்கள் ஈடுபடும் போது அதைப் பார்த்து கவலைப்பட வேண்டிய நாம் சிரித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்தச் சிரிப்பு வழிகெட்ட மக்களை வழிகாட்ட உதவாது. இந்த நேரங்களில் அவர்களின் பரிதாப நிலையை எண்ணி கவலைப்பட்டால் இக்கவலை நம்மை நல்லகாரியத்தில் முடக்கிவிடும் தூண்டுகோலாக அமைவதுடன் வழிகெட்ட மக்களுக்கு நேர்வழி காட்டும் கலங்கரை விளக்காகவும் அமையும்.

நபிவழி அடிப்படையில் மக்களுடைய தொழுகை இல்லாதிருப்பதை கண்டு அனஸ் (ர­) அவர்கள் அழுதார்கள். இன்றைக்கு எங்கு திரும்பினாலும் நபிவழிக்கு மாற்றமான காரியங்கள் தலைதூக்குவதை கண்கூடாக பார்க்கலாம். அனஸ் (ர­) அவர்களுக்கு ஏற்பட்ட கவலை நமக்கு வந்தால் இஸ்லாம் மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கி அசத்தியம் காணல் நீராகிவிடும்.

அனஸ் பின் மா­க் (ர­) அவர்கள் டமாஸ்கஸ் நகரி­ருக்கும் போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். ஏன் அழுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது என அனஸ் (ர­) கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸ‚ஹ்ரீ
நூல் : புகாரி (530)

குடும்பத்தார்களின் நேர்வழிக்காக கவலைப்படுதல்

நமது குழந்தைகள் சகோதர சகோதரிகள் பெற்றோர்கள் இந்த உலகத்தில் சிறப்புற்று வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் விசயத்தில் அதிக அக்கரை செலுத்துகிறோம். அவர்களுக்கு எவ்வழி முன்னேற்றத்தை தருமோ அந்த வழிகளைக் காட்டுகிறோம். உலக விசயங்களில் நமக்கு இவ்வளவு அக்கரை உள்ளது. இதேப் போன்று இவர்கள் மறுஉலக வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கான வழிகளை இவர்களுக்கு நம்மில் எத்தனை பேர் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

நபித்தோழர்கள் நபித்தோழியர்கள் மறுமை வாழ்க்கையில் தங்களது குடும்பத்தார்களின் நிலை குறித்து அதிகம் கவலைப்பட்டார்கள். மறுமை வாழ்க்கையின் பயங்கரமும் இனிமையான இன்பங்களும் நமது மனதில் ஆழமாகப் பதியாதக் காரணத்தினால் இக்கவலை நமக்கு வருவதில்லை. மறுமை வாழ்க்கையைப் பற்றிய நிலை நபி (ஸல்) அவர்களுக்கு ஆழமாகவும் உறுதியாகவும் தெரிந்த காரணத்தினால் இறந்துவிட்ட தன் தாயின் நிலை குறித்து அழுதார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தன் தாயின் மண்ணறைக்குச் சென்றார்கள். தானும் அழுது தன்னை சுற்றி இருந்தவர்களையும் அழவைத்துவிட்டார்கள். அப்போது அவர்கள் என் தாய்க்காக பாவமன்னிப்புத் தேடுவதற்கு என் இறைவனிடம் அனுமதி வேண்டினேன். அவன் எனக்கு அனுமதி தரவில்லை. என் தாயின் மண்ணறைக்குச் சென்றுவர அவனிடத்தில் அனுமதி கேட்டபோது எனக்கு அனுமதியளித்தான். மண்ணறைகளைக்குச் செல்லுங்கள். ஏனென்றால் அவைகள் மரணத்தை ஞாபகமூட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹ‚ரைரா (ர­)
நூல் : முஸ்­ம் ( 1777)

நாம் எதை மாபெரும் பாக்கியமாக விரும்புகிறோமோ அது நடந்துவிட்டால் நம்மை அறியாமல் நம் கண்ணில் ஆனந்த நீர் பொங்குகிறது. நாமும் நமது உறவினர்களும் நேர்வழி பெறுவதை விட சிறந்த பாக்கியம் ஒன்றுமில்லை என்ற நம்பிக்கை அபூஹ‚ரைரா (ர­) அவர்களிடத்தில் மேலோங்கியிருந்தது. எனவே இணைவைத்துக் கொண்டிருந்த தன் தாய் இஸ்லாத்தைத் தழுவிபோது ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.

அபூஹ‚ரைரா (ர­) அவர்கள் கூறியதாவது எனது தாய் இணைவைப்பவராக இருக்கும் போது அவரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்துக்கொண்டே இருந்தேன். ஒரு நாள் அவர்களை இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் வெறுக்கக்கூடிய (மோசமான வார்த்தையை) கூறிவிட்டார். எனவே நான் அழுதுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் வந்தேன். நான் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே எனது தாயாரை இஸ்லாத்திற்கு வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் வர மறுத்தார். இன்று நான் அவரை (இஸ்லாத்திற்கு வருமாறு) அழைத்தபோது நான் வெறுக்கக்கூடிய ஒன்றை உங்களைப் பற்றி அவர் கூறிவிட்டார். எனவே அபூஹ‚ரைராவின் தாயாருக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுமாறு பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா அபூஹ‚ரைராவின் தாயாருக்கு நேர்வழிகாட்டு என்று பிரார்த்தித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையால் மகிழ்ச்சியடைந்தவனாக (அவர்களிடமிருந்து வீட்டிற்கு) நான் வந்தேன். அப்போது வாசல் அடைக்கப்பட்டிருந்ததை கண்டேன். என் கால் சப்தத்தை என் தாய் கேட்டுவிட்டார். அபூஹ‚ரைராவே நீ அங்கேயே நில்லு என்று சொன்னார். தண்ணீர் சப்தத்தை நான் கேட்டேன். என் தாய் குளித்துவிட்டு ஆடையை அணிந்துவிட்டு விரைவாக முக்காடு போட்டுக்கொண்டார். நான் கதவைத் திறந்தேன். அப்போது அவர் அபூஹ‚ரைராவே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் இல்லை முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகவும் அவனது அடியாராகவும் இருக்கிறார் என்று ஒப்புக்கொள்கிறேன் என்று கூறினார். சந்தோஷத்தினால் அழுதவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நான் வந்தேன். (அவர்களிடத்தில்) நான் அல்லாஹ்வின் தூதரே சந்தோஷப்படுங்கள் திட்டமாக அல்லாஹ் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான். அபூஹ‚ரைராவின் தாயாருக்கு நேர்வழிகாட்டிவிட்டான் என்று கூறினேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து துதித்துவிட்டு நல்லது என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே இறைநம்பிக்கையாளர்களாக விளங்கும் அல்லாஹ்வின் அடியார்களுக்கு நானும் எனது தாயும் விருப்பமானவர்களாக இருப்பதற்கும் எனக்கும் என் தாய்க்கும் அவர்கள் விருப்பமானவர்களாக இருப்பதற்கும் அல்லாஹ்விடத்தில் பிரார்ததனை செய்யுங்கள் என்று கூறினேன். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா உனது இந்த அடிமையையும் அதாவது அபூஹ‚ரைராவையும் அவரது தாயாரையும் இறைநம்பிக்கையுள்ள உனது அடியார்களுக்கு விருப்பமானவர்களாக ஆக்குவாயாக இறைநம்பிக்கையாளர்களை இவர்களுக்கு விருப்பமானவர்களாக ஆக்குவாயாக என்று பிரார்த்தித்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனையின் விளைவாக) என்னைப் பற்றி கேள்விப்பட்டு என்னைப் பார்த்த எந்த இறைநம்பிக்கையாளரும் என்னை விரும்பாமல் இருந்ததில்லை.
நூல் : முஸ்­ம் (4546)

அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு உயிரை தியாகம் செய்யும் தியாகியாக தன் பிள்ளையை நபித்தோழியர்கள் உருவாக்கினார்கள். உயிர் நீத்த தன் மகனின் மறுமை வாழ்வு எப்படி அமையும் என்ற கேள்விக்கு மகிழச்சிகரமான பதிலை கேட்காத வரை அவர்கள் நிம்மதியாக இருக்கவில்லை. பிள்ளைகளின் மறுமை வாழ்க்கைக்கு அழகான வழியை காட்டுவதை விட அக்கரையான செயல் வேறொன்றும் இருக்க முடியாது.

ஹாரிஸா பின் சுராகா (ர­) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹாரிஸாவைப்பற்றி எனக்கு தாங்கள் செய்தி அறிவிக்கமாட்டீர்களா? அவர் பத்ரு போரன்று கொல்லப்பட்டிருந்தார். அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையை மேற்கொள்வேன். அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹாரிஸாவின் தாயே சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக்கொண்டார் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர­)
நூல் : 2809

நம் உறவினர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்கள் விசயத்தில் கவலைப்பட்டால் தான் அவர்களைத் திருத்த முடியும். ஆனால் சைத்தான் இந்த நல்லகாரியத்தில் ஈடுபடவிடாமல் நம் கவனத்தைத் திருப்புவான். அவர்களுக்கு நாம் ஏகத்துவத்தை சொல்­யிருக்கலாமே என்ற கவலை அவர்கள் இறந்த பிறகு தான் நமக்கு வரும். எல்லாம் முடிந்தப் பிறகு கவலைப் படுவது எள் அளவிற்கும் உதவாது. ஒரு சம்பவம் நடக்கும் போது இதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள் என்று யூதப்பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளது குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த போதுதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : புகாரி (1289)

எனவே அவசியம் கவலைப்பட்டாக வேண்டிய மார்க்க விசயங்களில் கவலைப்பட்டு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் உதவுவானாக.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.