வெட்கம்…

நாம்மிடத்தில் உள்ள பல தன்மைகள் விலங்குகளிடத்தில் காணப்பட்டாலும் நம்முடைய சில தன்மைகளால் அவைகளுக்கும் நமக்கும் வித்தியாசம் ஏற்பட்டுவிடுகின்றது. உதாரணமாக சாப்பிடுவது, உறங்குவது, மலம், ஜலம், கழித்தல் ஆகிய காரிங்களை நாம் செய்வது மட்டுமல்லாமல் பிராணிகளும் செய்கின்றன. சில பிராணிகள் இக்காரியங்களில் மனிதனையே மின்ஞிவிடுகின்றன. பெண்ணாகிறவள் ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தை அல்லது அரிதாக இரு குழந்தைகளை பெற்றெடுப்பாள். ஆனால் முயல், நாய், பன்றி போன்ற பிராணிகள் டஜன் கணக்கில் ஈன்றெடுக்கின்றன. இணைப்பெருக்கத்தில் நம்மை மிகைத்துவிடுகின்றன. 

நாம் கட்டக்கூடிய கட்டிடங்கள் பெரும் மழை அல்லது பலத்த காற்று அடித்தால் அடியோடு சாய்ந்துவிடுகின்றன. ஆனால் பறவைகள் கட்டக்கூடிய கூடுகள் இதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது கூட நிலைத்து நிற்கின்றன. தூக்கணாங் குருவி வலுமையாக கூடுகட்டுவதில் பேர்போனப் பறவை. இப்படி பல காரியங்களில் நம்மைப் போன்றோ அல்லது நம்மை விட சிறப்பாகவோ இவைகள் செயல்படுகின்றன. என்றாலும் இறைவன் இந்த பிராணிகளிடம் இல்லாத பகுத்தறிவு, நல்லது கெட்டதை அறிதல், நீதம், நேர்மை, மனிதாபிமானம், உதவுதல் போன்ற தனித்தன்மைகளால் நம்மை மேம்படுத்தியுள்ளான்.

இப்படி கால்நடைகளை விட நம்மை சிறப்பிக்கும் தன்மைகளில் ஒன்று தான் வெட்கம் என்பது. அல்லாஹ் இந்த வெட்கத்தை மனித குலத்திற்கும் மட்டும் வழங்கி சிறப்பித்துள்ளான். மிருகங்கள் ஆடை அணியாமல் இருப்பதினாலோ அல்லது குப்பைக் கூளங்களில் புரலுவதினாலோ அல்லது தனது இனம் முன்னிருக்க மலம் ஜலம் கழிப்பதினாலோ இவற்றின் மானமரியாதைக்கு பங்கம் வந்து விடும் என்று இவைகள் வருந்துவதில்லை. இந்தக் கவலை சுயநினைவை இழந்த பைத்தியக்காரன் மற்றும் குடிகாரனைத் தவிர மற்ற எல்லோரிடமும் அவசியம் இருக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆனால் சூழ்நிலையின் மாறுபாட்டால் சில மனித ஜென்மங்கள் இந்த வெட்கத்தை உதிர்த்து விட்டு ஆடுமாடுகளைப் போன்று வாழ்வதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் முரடர்கள் தான் எதற்கும் வெட்கப்பட மாட்டார்கள். இதனால் அவர்களை யாரும் நேசிக்கவும் மாட்டார்கள். வெட்கம் உள்ளவர்களில் பெரும்பாலானோர் மென்மையான குணம் கொண்டவராக இருப்பதை நம்மால் பார்க்க முடியும். இப்பண்பினால் அவர்களை பலரும் நேசிப்பார்கள்.

மனிதனுக்கு வெறும் உடலுறுப்புகள் மாத்திரம் அழகூட்டுவதில்லை. மாறாக அவனிடத்தில் உள்ள குணங்களும் இதில் முக்கியப் பண்பு வகிக்கிறது. நாணம் இல்லாமல் பெண் இல்லை. அவளுக்கு அழகே வெட்கம் தான். ஒரு பெண் எவ்வளவு பெரிய அழகியாக இருந்தாலும் அந்த அழகுடன் வெட்கம் சேரும்போது தான் அவளுடைய மதிப்பு உயர்கிறது. மொத்தத்தில் வெட்கம் தான் மனிதனுக்கு அழகை அதிகரிக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கெட்டவார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப்படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அப்பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ர­)
நூல் : திர்மிதி (1897)

இன்று உலகத்தவரால் மிகவும் நேசிக்கப்படுகின்ற நம்முடைய தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அனைவரின் உள்ளத்தில் அழகுபடுத்தி காட்டுவது அவர்களுடைய நடைமுறைகள் மற்றும் ஒழுக்கமாண்புகளாகும். இந்த உயரியப் பண்புகளில் வெட்கமும் அவர்களிடத்தில் முக்கிய பங்கை வகித்தது. சத்தியத்தை கூற அஞ்சாதவராகவும் மாபெரும் வீரராகவும் திகழ்ந்த நபி (ஸல்) அவர்கள் அதிக வெட்கமுள்ளவராகவும் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுள்ளவராக இருந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ர­)
நூல் : புகாரி (3562)

ஆட்கள் போய் வருவதை கவனிக்காமல் இன்று பாதையோரத்தில் சிலர் மலம் ஜலம் கழிப்பதைப் பார்க்கிறோம். தன் அருகில் வந்து ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது கூட அவர்களுக்கு கூச்சம் ஏற்படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் அதிக வெட்கமுள்ளவராக இருந்தமையால் மலம் ஜலம் கழிக்கும் போது வெகுதொலைவில் செல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கும் இடுத்திற்குச் சென்றால் தூரமாகச் சென்றுவிடுவார்கள்.
அறிவிப்பவர் : அல்முஹீரா பின் ஷ‎‎ ஃபா (ர­)
நூல் : நஸயீ (17)

நவீன காலத்தில் ஆண்களும் பெண்களும் நவீன நீச்சல் குளத்தில் சென்று குளிக்கிறார்கள். பிறர் பார்க்கிறார்களே என்று கூச்சம் கூட இல்லாமல் அறைகுறையான ஆடைகளில் காட்ச்சித்தருகிறார்கள். குளியல் உட்பட நபி (ஸல்) அவர்கள் வெட்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஆண் என்ற காரணத்தினால் எப்படி வேண்டுமானாலும் குளிக்கலாம் என்று நினைத்துவிட முடியாது. நான்கு அறைக்குள் தனியாக குளித்தால் கூட மறைக்க வேண்டியப் பகுதிகளை முறையாக மறைத்தாக வேண்டும்.

வெட்டவெளியில் (மறைக்க வேண்டியவை வெளிப்படுமாறு) ஒரு மனிதர் குளித்துக்கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே மெம்பரின் மீது ஏறி அல்லாஹ்வைப் புகழ்ந்துரைத்துவிட்டு சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சகிப்புத்தன்மை மிக்கவன். (நாம் செய்யும் குறைகளை) மறைப்பவன், அவன் வெட்கத்தையும் மறைப்பதையும் விரும்புகிறான். உங்களில் யாரேனும் குளித்தால் அவர் மறைப்பை ஏற்படுத்திக்கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : யஃலா பின் உமய்யா (ர­)
நூல் : நஸயீ (403)

நான் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் மறைக்க வேண்டியப் பகுதிகளில் எவற்றை மறைக்க வேண்டும். எவற்றை நாங்கள் மறைக்காமல் விட்டுவிடலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உன்னுடைய மறைவிடத்தை உனது மனைவி மற்றும் நீ அடிமையாக்கிய பெண்ணிடத்திலேத் தவிர மற்றவர்களிடத்தில் மறைத்துக் கொள் என்று கூறினார்கள். அப்போது ஒருவர் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருந்தாலுமா? (மறைக்க வேண்டும்) என்று கேட்டார். அதற்கு அவர்கள் அதை எவரும் பார்க்கமுடியாதவாறு உம்மால் (மறைக்க) முடிந்தால் நீ மறைக்க வேண்டும். நான் (அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் தனியாக இருந்தால் (மறைக்க வேண்டுமா?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அவர் வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஹய்தா (ர­).
நூல் : திர்மிதி (2693)

வெட்கத்தை அவசியம் நிறைத்திருக்க வேண்டிய பெண்களில் பலர் இந்த நாணத்தை தொலைத்து விட்டு பெண்மையை இழந்து நிற்கிறார்கள். முறையான ஆடைகளை அணியாமல் ஆண்களை விட குறைவான ஆடையை அணியும் பெண்கள் வெட்கப்படுவதில்லை. தெருக்களில் உட்கார்ந்து அண்ணிய ஆண்கள் வந்து போவதை பொருட்படுத்தாத பெண்கள் வெட்கத்தை இழந்து நிற்கிறார்கள்.
வெட்கம் உள்ளவன் எதை செய்தால் நாகரீகமாக இருக்கும். எதை செய்தால் அநாகரீகமாக இருக்கும் என்று சிந்தித்துப்பார்த்து நல்லவற்றை செய்வான். தீமைகளை அவன் செய்வதற்கு மாபெரும் தடையாகத் திகழ்கிறது.

அபூசுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு நபி (ஸல்) அவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக இருந்தார். ரோம் நாட்டு மன்னரான ஹிர்கல் என்பவர் நபி (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்துகொள்வதற்காக அரபுக் கூட்டத்தைப் பார்த்து உங்களில் முஹம்மதைப் பற்றி யார் நன்கு அறிந்தவர்? என்று கேட்டார். உடனே அன்று பெருமானாரின் எதிரியாகத் திகழ்ந்த அபூசுஃப்யான் (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றி தவறானத் தகவல்களைத் தர வேண்டும் என்பதற்காக முந்திக்கொண்டு எனக்குத் தெரியும் என்று சொன்னார். ஆனால் மன்னர் இவர் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று கண்டுபிடிக்க அவருக்குப் பின்னால் உள்ள மக்களைப் பார்த்து நான் இவரிடத்தில் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பொய்யான பதில் கூறினால் என்னிடத்தில் தெரியப்படுத்திவிடுங்கள் என்று கூறினார். இப்போது பொய் கூறினால் நாம் சபையோர்களின் முன்னிலையில் அசிங்கப்பட்டுவிடுவோம் என்ற வெட்கத்தின் காரணமாக அபூசுஃப்யான் அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய உண்மைகளை சற்றும் மாற்றாமல் எடுத்துரைத்தார். இஸ்லாத்தை தழுவிய பின்பு இதைப் பற்றி அபூசுஃப்யான் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

நான் பொய் கூறியதாக இவர்கள் சொல்­விடுவார்கள் என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்களைப் பற்றி நான் பொய்யுரைத்திருப்பேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)
நூல் : புகாரி (7)

வெட்கம் மாத்திரம் தடுக்காவிட்டால் பெருமானாரைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பி இருப்பார். இறைமறுப்பாளராக இருக்கக்கூடியவரை கூட வெட்கம் தீமைசெய்ய விடாமல் தடுக்கும் என்பதற்கு இது சிறந்த சான்றாக உள்ளது.

அபூசுஃப்யான் (ர­) அவர்களிடத்தில் இருந்த வெட்கமாவது இன்று நம்மிடத்தில் உள்ளதா? அல்லாஹ்விற்கு அஞ்சாவிட்டாலும் நம்முடைய மானத்திற்கு அஞ்சியாவது பிறரிடத்தில் வம்புக்குச் செல்லாமல் இருக்கின்றோமா? பிறரைப் பற்றி வீண்பேச்சுக்களைப் பேசி நம் மானத்தை நாமே கெடுத்துக்கொள்கிறோம். கடன் நிறைய வாங்கியவர்கள் நாம் வாங்கியக் கடமை திரும்பக் கொடுக்காவிட்டால் கொடுத்தவன் நம்மை தெருவில் நின்று அவமானப்படுத்திவிடுவானே என்று வெட்கப்படாமல் பொருப்பின்றி வீண்விரயங்களை செய்கிறார்கள். பெண் பருவ வயதை அடைந்துவிட்டால் அதை மறைக்காமல் நபி வழிக்கு மாற்றமாக ஒரு விழாவாக அதை சிலர் நடத்துகிறார்கள். இந்தச் செயலை செய்ய இவர்கள் வெட்கப்பட வேண்டாமா?

இது போன்ற எண்ணற்ற தீய செயல்கள் நம்மிடம் காணப்படுகிறது. வெட்கம் தீமையை தடுப்பதுடன் நல்லவற்றை செய்யவும் தூண்டுகிறது. தேர்தல் வந்து விட்டால் இன்றைக்கு வாக்குகளை அள்ளி வீசும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தப் பின்பு அவர்களிடத்தில் உண்மையில் வெட்கம் இருக்குமானால் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் முறையாக நிறைவேற்றுவார்கள். வெட்கத்தை இழந்தவர்கள் தான் வாக்குகளை வீசிவிட்டு அதை நிறைவேற்றமாட்டார்கள். இந்த நன்மையை அவர்கள் செய்வதற்கு முக்கிய காரணம் நாணம் தான். எனவே தான் நபி (ஸல்) வெட்கத்தைப் பற்றி பின்வருமாறு கூறினார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டுவராது.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹ‎ஸைன் (ர­)
நூல் : புகாரி (6117)

வெட்கம் இல்லாதவன் இதையெல்லாம் கவனிக்காமல் தன் மனம்போன போக்கில் செல்வான். யாராவது மோசமான ஒரு செயலை செய்துவிட்டு வந்தால் அவரைப் பார்த்து உனக்கு வெட்கம் இல்லையா? என்று கேட்கிறோம். வெட்கம் இல்லாதவன் தான் பிறர் நம்மை ஏளனமாக பார்க்க நேரிடும் என்பதை உணராமல் மோசமான கீழத்தரமான செயல்களை சாதரணமாக செய்துவிடுகிறான். எனவே தான் வெட்கம் இல்லாதவனுக்கு வழிமுறையோ கட்டுப்பாடோ இருக்காது என்ற கருத்து தூதுத்துவத்தின் போதனையாக இருந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இறைத்தூதர்களின் சொற்களி­ருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான் நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள் என்பது.
அறிவிப்பவர் : உக்பா பின் அம்ர் (ர­)
நூல் : புகாரி (3483)

நல்லதை செய்து தீமையை விட்டும் தவிர்ந்து கொள்வது அல்லாஹ்வை நம்பியவர்களின் பண்பு. ஏக இறைவனுக்கு இணைவைப்பவனோ அல்லது கடவுள் இல்லை என்று கூறுபவனோ நல்லவனாக இருக்க நினைத்தாலும் எப்படியோ அவர்கள் தீமைகளை அதிகமாக செய்துவிடுகிறார்கள். ஈமான் கொண்டவர்களிடத்தில் உள்ள அந்த மனஉறுதி இவர்களிடத்தில் இல்லை. எப்படி அல்லாஹ்வை ஏற்றவன் இந்தப் பண்பிற்கு உரித்தானவனாக இருக்கின்றானோ அதுபோல வெட்கம் உள்ளவனும் நல்லதை செய்து தீமையை விட்டு விலகுகிறான். இறைநம்பிக்கையாளர்களை ஈமான் தீமைசெய்வதி­ருந்து தடுப்பதைப் போல் வெட்கமும் தடுக்கிறது.

பொதுவாக ஒருபொருள் வேறொரு பொருள் போல் இருந்தால் அப்பொருளுக்கு அதன் பெயரையே சூட்டிவிடும் வழக்கம் நம்மிடம் உள்ளது. உதாரணமாக கடல் குதிரை என்றழைக்கப்படும் மீன் குதிரையைப் போல் இருப்பதால் அதற்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தான் நபி (ஸல்) அவர்கள் வெட்கமும் ஈமான் ஆகும் என்று கூறினார்கள்.

மேலும் இந்த உயரியப் பண்பு எவரிடத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இறைநம்பிக்கைக் கொண்டவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஒருவன் ஏற்றிருந்தாலும் அவனிடம் வெட்கம் இல்லாவிட்டால் அவ்விருவரும் கூறிய போதனைகள் அடிப்படையில் நிச்சயம் அவன் செயல்பட மாட்டான். வெட்கம் இல்லாதவனை இந்த உலகமே ஏற்றுக்கொள்ளாத போது எப்படி இறைவன் அவனை ஏற்றுக்கொள்வான். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இதை ஈமானில் ஒரு பகுதி என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஈமான் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்.
அறிவிப்பவர் : அபூஹ‎ரைரா (ர­)
நூல் : புகாரி (9)

அன்சாரிகளைச் சேர்ந்த ஒருமனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே அவரை (க் கண்டிக்காதீர்கள்) விட்டுவிடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ர­)
நூல் : புகாரி (24)

வெட்கம் நம்மை நல்வழியில் செலுத்துவதுடன் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை மதிப்பதற்கும் காரணமாக விளங்குகிறது. அதிக வெட்கப்படுபவரை நாம் பார்க்கும் போது அவருக்கென்று நாம் ஒரு விதமான மரியாதை செலுத்துகிறோம். மற்றவர்களிடம் சாதாரணமாக நடந்துகொள்வதைப் போல் அவரிடத்தில் நடந்துகொள்வதில்லை. மற்றவர்களிடத்தில் பேசுவதைப் போல் அவரிடத்தில் பேசாமல் அவருடைய கூச்சசுவாபத்திற்கு ஏற்றவாறு பேசுகிறோம். நபித்தோழர்களில் இச்சிறப்பை உஸ்மான் (ர­) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்வீட்டில் தன்னுடைய தொடைகளையோ அல்லது கெண்டைக்கால்களையோ திறந்தவராக படுத்திருந்தார்கள். அப்போது அபூபக்கர் (ர­) அவர்கள் (உள்ளே வர) அனுமதி வேண்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் இந்நிலையில் இருக்க அவருக்கு அனுமதி வழங்கினார்கள். பின்பு அவர்கள் (உள்ளே வந்து நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள். பின்பு உமர் (ர­) அவர்கள் (உள்ளே வர) அனுமதி கோரிய போது நபி (ஸல்) அவர்கள் இந்த நிலையிலே அவருக்கு அனுமதி வழங்க (உள்ளே வந்து நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார். உஸ்மான் (ர­) அவர்கள் அனுமதி கோரியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து உட்கார்ந்து தனது ஆடையை சரிசெய்தார்கள். பின்பு அவர்கள் உள்ளே வந்து பேசினார்கள். அவர்கள் சென்ற பின்பு நான் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) அபூபக்கர் (ர­) அவர்கள் நுழையும் போது அவர்களுக்காக நீங்கள் தயாராகாமலும் பொருட்படுத்தாமலும் இருந்தீர்கள். உமர் (ர­) அவர்கள் நுழையும் போதும் அவருக்காக நீங்கள் தயாராகாமலும் பொருட்படுத்தாமலும் இருந்தீர்கள். பின்பு உஸ்மான் (ர­) அவர்கள் வந்தபோது தாங்கள் எழுந்து அமர்ந்து ஆடையை சரிசெய்தீர்கள். (இதற்கு என்ன காரணம்) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் வானவர்கள் யாரைப் பார்த்து வெட்கப்படுகிறார்களோ அவரைப் பார்த்து நான் வெட்கப்படக் கூடாதா?. என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : முஸ்­ம் (4414)

உஸ்மான் (ர­) அவர்கள் அபூபக்கர் உமர் (ர­) ஆகியோரை விட அதிக நாணம் உள்ளவராக இருந்தார்கள். அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் அவ்விருவர் வரும் போது சாதாரணமாக நடந்துகொண்டதைப் போல் இவரிடம் நடந்துகொள்ளவில்லை. இந்த செய்தி வெட்கமுள்ளவருக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பதைக் காட்டுகிறது.

அதே நேரத்தில் வெட்கப்படுவது கல்வி போன்ற நற்காரியங்களை செய்யவிடாமல் நம்மை தடுத்துவிடக்கூடாது. தீமையை வெட்கம் தடுத்து நன்மை செய்யத் தூண்டுவதினால் இது பெரும் சிறப்பைப் பெற்றுள்ளது என்பதை முன்னாலே பார்த்தோம். தீமையைத் தடுக்காமல் நன்மை செய்வதைத் தடுத்தால் இந்த வெட்கத்தால் எந்தப் பயனும் இல்லை. மேலும் இது தீய குணமாகவும் இறைவனிடம் கருதப்படும்.

இரயில் போன்ற வாகனங்களில் நாம் பயனம் செய்யும் போது தொழுகை நேரம் வந்த உடன் தொழ வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால் நம்மைச் சுற்றியும் மாற்று மதத்தவர்கள் அமர்ந்திருப்பார்கள். இப்போது இவர்கள் முன்னிலையில் தொழுவதற்கு நமக்கு கூச்சம் ஏற்படுவதால் பலர் தொழுகையை விட்டுவிடுகிறார்கள்.

படைத்த இறைவனின் நினைவு இல்லாமல் வெறுமனே நேரத்தை கழிக்கும் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். எல்லோரும் பார்க்க டீ குடிப்பதற்கும் நின்றுகொண்டு உண்பதற்கும் வெட்கப்படாத நாம் ஏன் தொழுவதற்கு வெட்கப்பட வேண்டும். நல்ல விஷயங்களில் வெட்கம் கூடாது என்று பின்வரும் ஹதீஸ்கள் கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச­ல் மக்களுடன் அமர்ந்துகொண்டிருந்த போது மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றுவிட்டார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஒரு இடைவெளியைக் கண்ட போது அதில் அமர்ந்து கொண்டார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து கொண்டார். மூன்றாமவர் திரும்பிச் சென்று விட்டார்.

நபி (ஸல்) அவர்கள் தம் பேச்சை முடித்ததும் கூறினார்கள். இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக்கொண்டான். மற்றவரோ வெட்கப்பட்டுக் கொண்டு (கடைசியில் உட்கார்ந்து) விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான்.

சபைக்கு வந்த இருவரில் ஒருவர் ஆர்வப்பட்டு முன்னால் வந்து அமர்ந்தார். ஆனால் மற்றொருவர் முன்னால் வர வெட்கப்பட்டுக் கொண்டு இறுதியில் அமர்ந்து கொண்டார். முன்னால் சென்று அமர்ந்தவருக்குக் கிடைத்த சிறப்பை பின்னால் அமர்ந்தவருக்கு கிடைக்கவிடாமல் செய்தது வெட்கம் தான். நபித்தோழியர்கள் மாதவிடாய் போன்ற சட்டங்களை அறிந்துகொள்வதற்காக கூச்சப்படாமல் நபி (ஸல்) அவர்களிடத்தில் கேள்விகளை கேட்பார்கள். இதை பின்வரும் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகச்சிறந்தவர்கள். (ஏனென்றால்) மார்க்கச் சட்டங்ளை அறிந்துகொள்வதை விட்டும் வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : முஸ்­ம் (500)

உம்முசுலைம் என்ற பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்க­தமானால் அவள் மீது குளிப்பு கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு (ஆம். அவள் உறங்கி விழித்ததும் தன் ஆடையில் இந்திரியத்) தண்ணீரைக் கண்டால் (குளிப்பது அவள் மீது கடமை தான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்டுக்கொண்டிருந்த) உம்மு ஸலமா (ர­) அவர்கள் தமது முகத்தை (வெட்கத்தால்) மூடிக்கொண்டு பெண்களுக்கும் ஸ்க­தம் ஏற்படுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நன்றாகக் கேட்டாய். ஆம். அப்படி இல்லையென்றால் அவளது குழந்தை (சில நேரங்களில்) எதனால் அவளைப் போன்றிருக்கிறது என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஸைனப் பின்து உம்மு சலமா (ர­)
நூல் : புகாரி (130)

சிறு குழந்தைகள் தானே என்று பெற்றோர்கள் நினைத்து அவர்களுக்கு ஆடைகளை அணிவிக்காமல் வெரும் மேனியில் அலையவிட்டுவிடுகிறார்கள். சிலருடை குழந்தைகள் ஐந்து வயதை அடைந்தும் கூட குளிக்கும் போது ஆடையில்லாமல் குளிப்பார்கள். சாதாரணமாக இந்நிலையிலே தெருவை வலம்வருவார்கள். நம் குழந்தைகளுக்கு இது போன்று தவறான வழிகாட்டல்கைளக் காட்டாமல் சிறுபிராயத்தி­ருந்தே வெட்க உணர்வு மிக்கவர்களாக அவர்களை வளர்கக வேண்டும். அப்போது தான் அவர்கள் பிற்காலத்தில் மானமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடப்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.