மறுமை வெற்றிக்கு வழி…

இஸ்லாம் என்ற தூய மார்க்கத்தை நமக்கு எத்திவைப்பதற்காக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை தூதராக அனுப்பினான். நாம் அல்லாஹ்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும்? எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது போன்ற எல்லா விசயங்களையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். நமது கொள்கை கோட்பாடுகள் வணக்க வழிபாடுகள் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைத்துக்கொண்டால் தான் மறுஉலக வாழ்க்கையில் நாம் வெற்றி பெற முடியும்.

இதற்கு மாற்றமாக அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் அங்கீகாரம் தராத காரியங்களை அல்லது அவர்கள் தடுத்த காரியங்களை நாம் செய்தால் நரகத்திற்கு நாம் செல்லக்கூடிய கொடிய நிலை ஏற்படும். நரகத்தை விட்டும் அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.

இன்றைக்கு முஸ்­ம்களில் கணிசமான மக்கள் தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடத்தில் தங்களது தேவைகளை கேட்கிறார்கள். இறந்துபோன அவர்கள் தங்களுடைய நோய் வறுமையை போக்குவார்கள் என்றும் குழந்தை பாக்கியத்தை தருவார்கள் என்றும் நம்புகிறார்கள். இதனால் பீமா அப்துல்காதர் ஜைலானீ ஷாஹுல் ஹமீது பாதுஷா போன்றவர்களை அவ்­யாக்கள் என்று எண்ணிக்கொண்டு அவர்களுடைய மண்ணறைகளுக்கு மேல் கட்டடங்களை எழுப்பி அங்கு கந்தூரி போன்ற விழாக்களை கொண்டாடுகிறார்கள்.

இறந்தவர்களிடத்தில் துஆ செய்யுமாறு அல்லாஹ்வும் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்களும் சொல்லவில்லை. நபித்தோழர்களில் யாரும் தர்ஹாக்களை ஏற்படுத்தி நாம் செய்வதைப் போன்று செய்யவில்லை. இன்றைக்கு தர்ஹாக்களுக்கு சென்றுகொண்டிருக்கும் மக்கள் மறுமையில் நரகத்திற்குச் சென்றுவிடாமல் ஏக இறைவனை மட்டும் வழிபட்டு சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்காக குர்ஆன் ஹதீஸ் கூறும் செய்திகளை உங்களுக்குக் கூறியுள்ளோம். இவற்றை ஏற்று தன்னை திருத்திக்கொள்வது ஒவ்வொரு முஸ்­மின் மீது கடமையாகும்.

பிரார்த்தனையை இறந்தவர்களால் கேட்கவும் பதில்தரவும் முடியாது

உயிருடன் இருந்தவர் மரணித்துவிட்டால் அவரால் கேட்கமுடியாது பார்க்கமுடியாது என்பதை கண்கூடாக நாம் கண்டுவருகிறோம். அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதால் தான் அவர்களை அடக்கம் செய்கிறோம். திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் இறந்தவர்களுக்கு கேட்கும் சக்தி இல்லை என்று தெளிவாக கூறுகிறது.

இறந்தவர்கள் செவியேற்கமாட்டார்கள் என்று இஸ்லாம் கூறும் போது அவர்களிடத்தில் எப்படி துஆ செய்யலாம்.? நம்முடைய கோரிக்கைகள் இறந்தவர்களின் காதுகளில் விழாது என்றால் அவர்கள் எப்படி நமது தேவைகளை நிறைவேற்றுவார்கள்?
நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது!
அல்குர்ஆன் (27 : 80)

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாகமாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.
அல்குர்ஆன் (35 : 22)

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுறமாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
அல்குர்ஆன் (35 : 14)

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!
அல்குர்ஆன் (72 : 18)

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழி கெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.
அல்குர்ஆன் (46 : 5)

மேலுள்ள வசனங்கள் இறந்தவர்களை அழைப்பது வழிகேடு என்றும் அழைப்பை இறந்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்றும் கூறுகிறது. அவ்­யாக்களில் மிகப்பெரிய அவ்­யா நமது தூதர் நபி (ஸல்) அவர்கள் தான். நாம் கூறும் சலாத்தை அவர்களால் கூட கேட்கமுடியாது. மலக்குமார்கள் தான் நாம் கூறும் சலாத்தை நபி (ஸல்) அவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பூமியில் சுற்றிக்கொண்டிருக்கும் சில வானவர்கள் அல்லாஹ்விற்கு உள்ளனர். இவர்கள் என்னுடைய சமுதாயத்தினரிடமிருந்து சலாத்தை என்னிடத்தில் கொண்டுவருவார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ர­)
நூல் : நஸயீ (1265)

ஒரு நல்லடியாரை அல்லாஹ் 100 வருடம் மரணிக்கச் செய்கிறான். பிறகு அவரை எழுப்பி எவ்வளவு காலம் தூங்கினாய் என்று கேட்டான். அதற்கு அந்த நல்லடியார் ஒரு நாள் அல்லது சிறிது நேரம் தூங்கியிருப்பேன் என்று கூறினார். 100 வருடம் தூங்கியிருந்தும் தான் எத்தனை நாள் தூங்கினோம் என்பது கூட அந்த நல்லடியாருக்குத் தெரியவில்லை. அவர் கொண்டு வந்த கழுதை இறந்து மட்கிப்போன செய்தி கூட அவருக்குத் தெரியவில்லை. இறைவன் கூறிய பிறகு தான் அவருக்குத் தெரிகிறது.

இறைவனால் நல்லடியார் என்று சொல்லப்பட்ட இவர் அடிக்கம் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்த போதிலும் இவரால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. நல்லடியார் என்று உறுதிசெய்யப்படாமல் தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாக மட்கிவிட்டவர் நாம் கேட்கும் பிரார்த்தனையை எப்படி கேட்பார்?

அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. ”இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்தான். ”எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். ”ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். ”அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக்காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது ”அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.
அல்குர்ஆன் (2 : 259)

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது என்று நாம் ஏற்றுக்கொண்டுள்ள லாயிலாஹ இல்லல்லாஹு என்ற க­மா கூறுகிறது. பிரார்த்தனை செய்வது வணக்கம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே இறந்தவர்களிடத்தில் துஆ செய்தால் துஆ என்ற வணக்கத்தை இறந்தவர்களுக்கு செய்தவர்களாகிவிடுவோம். இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுவோம்.
பிரார்த்தனை தான் வணக்கம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ர­)
நூல் : திர்மிதி (2895)

இறந்தவர்களால் உதவிசெய்ய முடியாது

அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.
அல்குர்ஆன் (7 : 197)

அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.
அல்குர்ஆன் (35 : 13)

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.
அல்குர்ஆன் (22 : 73)

இறந்துவிட்டவர் நல்லடியாராக இருந்தால் அவர் புதுமாப்பிள்ளை உறங்குவதைப் போல் உறங்குவார். கியாமத் நாள் வரைக்கும் உறங்கிக்கொண்டிக்கும் நல்லடியார்களுக்கு நாம் கேட்கும் பிரார்த்தனை எப்படி விளங்கும்.? நமக்கும் இறந்துவிட்டவர்களுக்கும் மத்தியில் வலுவான திரையை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். அல்லாஹ் ஏற்படுத்திய இந்தத் திரையை கிழித்துக்கொண்டு நம்முடைய சப்தம் தூங்கிக்கொண்டிருக்கும் நல்லடியார்களின் காதில் நிச்சயம் விழாது.
(நல்லவர்களுக்கு கப்ரில்) நன்றாக உறங்குங்கள் என்று சொல்லப்படும்.
அறிவிப்பவர் : அஸ்மா (ர­)
நூல் : புகாரி (7287)

முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது ”என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
அல்குர்ஆன் (23 : 100)

நல்லடியார்கள் என்று நினைத்துக் கொண்டு நாம் யாரை அழைக்கிறோமோ அவர்கள் இறந்துவிட்டார்கள். ஆனால் ஈஸா (அலை) அவர்கள் நல்லடியாராக இருப்பதுடன் இன்று வரை உயிருடன் இருக்கிறார். நல்லடியார் என்று உறுதிசெய்யப்பட்டு உயிருடன் இருக்கும் ஈஸா (அலை) அவர்களிடம் வேண்டுகின்ற கிரிஸ்தவர்கள் காஃபிர்கள் என்றால் நல்லடியார் என்று உறுதிசெய்யப்படாமல் இறந்துவிட்ட ஒருவரிடம் வேண்டுபவர் முஸ்­மாக முடியுமா?

மக்கத்து காஃபிர்கள் ஏன் காஃபிரானார்கள்

வானம் பூமி மலைகள் இவற்றையெல்லாம் படைத்தது அல்லாஹ் தான் என்பதை மக்கத்து காஃபிர்கள் நன்கு விளங்கி வைத்திருந்தார்கள். அல்லாஹ் கடவுள் என்பதை அவர்கள் மறுக்கவில்லை. மாறாக அவனை இறைவனாக ஏற்றிருந்தார்கள். இவ்வாறு பின்வரும் வசனங்கள் கூறுகிறது.

”வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ”அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் ”எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?”
அல்குர்ஆன் (29 : 61)

”வானத்தி­ருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ”அல்லாஹ்” என்றே கூறுவார்கள். ”அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.
அல்குர்ஆன் (29 : 63)

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
அல்குர்ஆன் (44 : 87)

இந்த அளவிற்கு அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் நம்பியிருந்தும் முஸ்­ம்களாக அவர்கள் இருக்கவில்லை. ஏனென்றால் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனையை வேண்டுவதைப் போல் நல்லடியார்களிடத்திலும் வேண்டினார்கள். அவ்­யாக்களிடம் பிரார்த்தனை செய்தால் அந்த அவ்­யாக்கள் இவர்களுக்காக பரிந்துரை செய்வார்கள் என்று கூறினார். அல்லாஹ்விடத்தில் தங்களை அவ்­யாக்கள் நெருக்கிவைப்பார்கள் என்றும் நம்பினர். இதனால் அல்லாஹ் அவர்களை காஃபிர் என்று கூறினான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ”அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். ”வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்­க் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (10 : 18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ”அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் (39 : 3)

மக்கத்து காஃபிர்கள் எண்ணியதைப் போல் நாமும் இறந்துவிட்ட அவ்­யாக்கள் நமக்காக பரிந்துரை செய்வார்கள் என்று எண்ணிக்கொண்டு இறந்தவர்களிடம் துஆ செய்தால் நமக்கும் அந்த காஃபிர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

கப்ரு வழிபாடு கூடாது

தர்ஹாக்களில் உள்ள கப்ருகள் பூசப்பட்டு அவற்றின் மேல் கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. விழாக்கொண்டாடும் இடமாக தர்ஹாக்கள் ஆக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இவற்றை செய்த காரணத்தினால் தான் யூத கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார்கள். தான் இறந்த பிறகு மக்கள் தனக்கு தர்ஹா கட்டிவிடக்கூடாது என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தன் சமுதாயத்தை கடுமையாக எச்சரித்துச் சென்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது சலவாத்து சொல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடைய சலவாத்து எனக்கு எத்திவைக்கப்படும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­)
நூல் : அபூதாவுத் (1746)

உம்மு ஹபீபா (ர­) அவர்களும் உம்மு சலமா (ர­) அவர்களும் தாங்கள் அபீஸீனியாவில் கண்ட உருவங்கள் இடம்பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை அவர்கள் எழுப்பிவிடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்துவிடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள் தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : புகாரி (427)

நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்த போது யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டனர் என்று கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரை திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கஸ்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பர் : ஆயிஷா (ர­)
நூல் : புகாரி (1330)

அலீ (ர­) அவர்கள் கூறுவதாவது : (அபுல் ஹய்யாஜே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ அதே பணிக்கு நான் உண்னை அனுப்பட்டுமா? எந்த உருவமானாலும் அதை அழிக்காமல் விட்டுவிடக்கூடாது உயர்ந்திருக்கின்ற எந்தக் கப்ரையும் தரைமட்டமாக ஆக்காமல் விட்டுவிடக்கூடாது என்று எனக்குக் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுல் ஹய்யாஜ் (ரஹ்)
நூல் : முஸ்­ம் (1609)

கப்ரை பூசுவதையும் அதன் மேல் உட்காருவதையும் அதன் மேல் கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர­)
நூல் : முஸ்­ம் (1610)

அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும்
நம்மைப் படைத்து வசதிகளை ஏற்படுத்தி நம்மை பாதுகாத்துக்கொண்டிருக்கும் அல்லாஹ் இறந்துவிட்ட நல்லடியார்களை விட பன்மடங்கு பன்மடங்கு அன்பிலும் கருணையிலும் உயர்ந்தவன். எதைக் கேட்டாலும் அதை தருவதற்குரிய சக்தி அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உள்ளது.

இப்படிப்பட்ட இறைவனை விட்டுவிட்டு மற்றவர்களிடத்தில் கையேந்தக்கூடாது என்பதற்காக தன்னிடத்தில் மட்டும் பிரார்த்தனை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்லாஹ் தனக்கு அருள் புரியமாட்டான். தன்னை மன்னிக்கமாட்டான். தன்னுடைய தேவையை நிறைவேற்றமாட்டான் என்று நம்புவர்கள் காஃபிர்கள் என்று கூறுகிறான்.

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்”
அல்குர்ஆன் (12 : 87)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
அல்குர்ஆன் (39 : 53)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரர்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்”(என்பதைக் கூறுவீராக!)
அல்குர்ஆன் (2 : 186)

”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்” என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
அல்குர்ஆன் (40 : 60)

மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்.
அல்குர்ஆன் (50 : 16)

”நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்” என (முஹம்மதே!) கூறுவீராக!
அல்குர்ஆன் (72 : 20)

அல்லாஹ்விடத்தில் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். இறந்துவிட்ட நல்லடியார்களிடத்தில் கையேந்தக்கூடாது. தர்ஹாக்கள் இஸ்லாத்திற்கு எதிரானது. அங்கு சென்று கந்தூரி போன்ற விழாக்களை கொண்டாடக்கூடாது என்றக் கருத்தை மேற்கண்ட குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் தெளிவாக உணர்த்துகிறது. இதற்குப் பிறகு எந்த ஒரு முஃமினும் இணைவைப்பு அனாச்சாரங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டான். அல்லாஹ் நம் அனைவரையும் இணைவைப்பை விட்டும் காப்பாற்றுவானாக.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.