நபிவழியே நல்வழி!

நபிவழியே நல்வழி,நாயன் அன்பைப் பெறும் வழி! நபிவழி இன்றேல் நாயன் அன்பில்லை!

(இத்திபாவும், இதாஅத்தும்)

(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராயிருப்பின், என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கிறார்.

மேலும், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடவுங்கள் என்றும் கூறுவீராக! அவர்கள் (அதைப்) புறக்கணித்து விட்டால், நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய காபிர்) புறக்கணிப்போர்களை நேசிக்க மாட்டான். (3:31,32)

நாம் மேற்காணும் திருவசனங்களின் வாயிலாக அல்லாஹ்வின் அன்பை அடைவதற்கு அருமை நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்பதையும், அவ்வாறு பின்பற்றி நடப்பதால் கிட்டும் பலாபலன்களையும் அறிந்து கொள்வதுடன், அல்லாஹ்வுக்கும் அவன் தன் தூதருக்கும், அவசியம் வழிப்பட்டாக வேண்டும். இல்லையேல் அல்லாஹ்வின் சட்டத்தை மீறி, காபிர் என்னும் துர்பாக்கிய நிலையை அடைய நேரிடும் என்பதையும் உணர்கிறோம்.

பின்பற்றல் என்பது வேறு, வழிப்படல் என்பது வேறு!

மேற்காணும் வசனங்களில் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றல், அவர்களுக்கு வழிப்படுதல் ஆகிய இரு விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. மேலெழுந்தவாறு பார்க்கும் போது, இரண்டும் ஒன்று போல் தோன்றினாலும், உண்மையில் பின்பற்றல் என்பது வேறு, வழிப்படுதல் என்பது வேறு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இத்திபாஉ (பின்பற்றல்) என்றால்!

நமக்கு நமது நபி(ஸல்) அவர்கள் மீதுள்ள அன்பை அடிப்படையாகக் கொண்டு நமது விருப்பத்தின்படி, முடியுமானஅளவு, எடுத்து நடக்க வேண்டிய, கடமைக்கு அதிகமாக உபரியான வகையில் செய்யும் நன்மையான செயலே இத்திபாஉ ஆகும்.

உதாரணமாக சொல், செயல், உண்ணல், குடித்தல், ஆடையணிதல், அலங்கரித்தல், உரோமம் வளர்த்தல், அவற்றைக் களைதல், அழுதல், சிரித்தல், பிறருடன் அன்புடன் பழகல், பிறர் தன்னோடு அன்புடன் பழகும் வண்ணம் தன்னை அமைத்துத் கொள்ளல், முதலிய காரியங்களில் நபி(ஸல்) அவர்களின் புனித மிகு தூய வாழ்க்கை முறைகளை முன் மாதிரியாக வைத்து, அவர்களின் உயர் பண்புகளை நடை, உடை, பாவனை அனைத்திலும் பிரதிபலிக்கச் செய்வதாகும்.

நாம் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றி நடப்பதன் மூலமே, அல்லாஹ்வின் அளப்பரிய அன்பை அடைவதோடு, அவனிடம் பாவமன்னிப்பையும், உயர்பதவியையும் பெற்று, அவனுக்கு மிக நெருக்கமான நல்லடியாரில் ஒருவராக நம்மை ஆக்கிக் கொள்ள முடியும்.

இதாஅத் (வழிப்படுதல்) என்றால்

அல்லாஹ்வுக்கு நம்மீதுள்ள அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அவனது விருப்பத்தின்படி, முழுமையாக அமுல் நடத்தப்பட வேண்டிய கட்டாயக் கடமையே இதாஅத் ஆகும்.

உதாரணமாக தொழில், ஜகாத் கொடுத்தல், நோன்பு நோற்றல், ஹஜ்ஜுப் செய்யல் போன்ற வணக்க வழிபாடுகளிலும், வியாபாரம், தொழில், உத்தியோகம், கொடுக்கல் வாங்கல், குடும்பப் பரிபாலணம் முதலிய காரியங்களிலும் நபி(ஸல்) அவர்களின் விதிமுறைகளுக்குக் கீழ்படிந்து நடத்தல். மேலும் ஷிர்க்கு, குஃப்ரு, பித்அத், கொலை கொள்ளை, பொய், களவு, சூது, விபச்சாரம், முதலிய பாவச் செயல்கள் குறித்து, அவர்கள் செய்துள்ள எச்சரிக்கை, தடை உத்தரவுகளை ஏற்று, மிக கவனத்துடன் அவற்றிலிருந்து தன்னைத் தவிர்த்துக் கொள்வதாகும். நாம் அல்லாஹ்வுக்கும், அவனது ரசூலுக்கும் முறையாக வழிப்பட்டு நடப்பதைக் கொண்டுதான், நமக்குரிய முஸ்லிம் (முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்) எனும் புனிதப் பெயரை ஒவ்வொரும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

அல்லாஹ்வையும், அவனது ரசூலையும் ஏன் நேசிக்க வேண்டும்?

“அல்லாஹ் தனது அருட்கொடையின் அடிப்படையில் உங்களுக்கு சதா உணவளித்துக் கொண்டிருப்பதனால் (அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) நீங்கள் அவனை நேசித்தாக வேண்டும்.

அவ்வாறே வல்ல அல்லாஹ் என்மீது அளப்பரிய அன்பு கொண்டிருப்பதனால் (அவனது அன்பை நீங்கள் அடைவதற்காக) என்னையும் நீங்கள் நேசித்தாக வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரழி), (திர்மீதி)

மேற்காணும் ஹதீஸின் வாயிலாக ஒவ்வொருவரும் வல்ல அல்லாஹ்வையும், அவனது தூதராகிய தன்னையும் ஏன் நேசிக்க வேண்டும் என்பதற்கான அடிப்படைக் காரணத்தை அருமை நபி(ஸல்) அவர்கள் மிக அழகாக விளக்கிக் காட்டியுள்ளார்கள்.

முமீன் எனக் கூறிக் கொள்ளும் தகுதி இழந்தோர்

“யாதொரு நபரும் என்னைத் தமது மனைவி, மக்கள், சொத்து, சுகம் மற்றும் ஏனைய மனிதர் (ஒரு அறிவிப்பில்) தமது உயிர் ஆகியவற்றைப் பார்க்கினும் மேலாக நேசித்தாலன்றி மூமினாக முடியாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ்(ரழி), (புகாரி, முஸ்லிம்)

நடைமுறையில் பிரதிபலிக்காத அன்பு ஒரு அன்பா?

மனித இயல்பின்படி, ஒருவருக்கு தனிப்பட்ட நபரின் மீது முழுமையான அன்பு ஏற்பட்டு விட்டால், அவர் பேசும் பாணியிலேயே தாமும் பேசுகிறார். அவர் ஆடை அணிவது போன்றே தாமும் அணிகிறார். அவர் முடி வளர்த்திருப்பது போன்றே தாமும் வளர்த்துக் கொண்டு, அதை அவர் சீவிக் கொள்ளும் விதத்திலேயே சீவியும் கொள்கிறார். சுருங்கக்கூறின் தாம் அவர் மீது கொண்டுள்ள அன்பைத் தமது நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் பிரதிபலித்துக் காட்டுகிறார். மேலும் அவர் அதன் மூலம் தாம் அவரது உண்மையான அன்பன், நேசன் எனும் உயர்பண்பை அடைய முற்படுகிறார்.

நாமும் அவ்வாறே நமது நபி(ஸல்) அவர்கள் மீது அன்புள்ளம் கொண்டவராயிருக்கிறோம், என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் நமது நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் அவர்களின் புனிதமான சுன்னத்து(நடைமுறை)களைப் பிரதிபலித்துக் காட்டாதவரை எவ்வாறு முழுமையான உண்மை மூமினாக முடியும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களுக்கு வழிப்பட்டு நடப்பதில் ஸஹாபாக்களின் நிலை! அவர்களின் ஏவலை அமுல் படுத்தல்:

அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்: ஒருமுறை ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தான் சுவர்க்கம் புகுவதற்கான, நல் அமலைத் தனக்குக் காட்டித் தரும்படி கேட்டார். அதற்கவர்கள்,

* இறைவனுக்கு எப்பொருளையும் இணை வைக்காது, முறையாக அவனுக்கு வழிப்பட்டு நடக்க வேண்டும்.

* பர்லான ஐங்காலத் தொழுகைகளை முறையாகத் தொழுது கொள்ள வேண்டும்.

* (பர்லான) ஜகாத் (ஏழை வரியை) முறையாகக் கொடுத்து விட வேண்டும்.

* (பர்லான) ரமழான் நோன்பை (முழுமையாகப்) பிடித்துவிட வேண்டும் என்று கூறினார்கள்.

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அக்கிரமவாசியான ஸஹாபி “அல்லாஹ்வின் மீதாணையாக, இவற்றைப் பார்க்கினும் சிறிதும் கூட்டவோ, குறைக்கவோ மாட்டேன்” என்று கூறிச்சென்று விட்டார், அப்போது நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகிலேயே சொர்க்கவாசியைப் பார்க்க விரும்புவோர் இதோ இவரைப் பார்த்துக் கொள்வாராக என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அக்கிரமவாசியான ஸஹாபி “அல்லாஹ்வின் மீதாணையாக, இவற்றைப் பார்க்கினும் சிறிதும் கூட்டவோ, குறைக்கவோ மாட்டேன்” என்று கூறிச் சென்று விட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகிலேயே சொர்க்கவாசியைப் பார்க்க விரும்புவோர் இதோ இவரைப் பார்த்துக் கொள்வாராக என்று கூறினார்கள், (புகாரீ, முஸ்லிம்)

(மேற்காணும் ஹதீஸில் ஹஜ்ஜு பற்றி குறிப்பிடப்படவில்லை, காரணம் அதுசமயம் அது கடமையாக்கப்படவில்லை)

அவர்களின் விலக்கலை அமுல்படுத்துதல்

* இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார்கள்: (ஸஹாபாக்களில்) ஒருவரின் கையில் தங்கமோதிரம் அணிந்திருப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதை உடனே அவரிடமிருந்து கழற்றி வீசிவிட்டு, “உங்களில் எவரும் தமது கையில் நெருப்புத் துண்டை அணிந்து கொள்ள விரும்புவீரா?” என்று கேட்(டு விட்டுச் சென்று விட்)டார்கள்.

அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் அவரைநோக்கி, நீர் உமது அம்மோதிரத்தை எடுத்து (வேறுவகையில்) பயன்படுத்திக் கொள்ளும்” என்று கூறப்பட்டது, அதற்கவர் அல்லாஹ்வின் மீதாணையாக, “நபி(ஸல்) அவர்களால் கழற்றி வீசப்பட்ட அம்மோதிரத்தை இனி ஒருபோதும் எனது கையால் எடுக்கவே மாட்டேன்” என்று சொல்லி சென்று விட்டார். (முஸ்லிம்)

மேற்காணும் இரு சம்பவங்களிலும் ஸஹாபா பெருமக்கள் நபி(ஸல்) அவர்களின் விதிமுறைகளான ஏவல் விலக்களுக்கு எவ்வாறு கீழ்ப்படிந்து நடந்துள்ளார்கள் என்பதையும், அவர்களின் எச்சரிக்கைகளை எவ்வளவு கவனத்துடன் பேணியிருக்கிறார்கள் என்பதையும் அறிகிறோம். அம்மோதிரத்தை அவர் எடுத்து வேறு வகையில் பயன்படுத்திக் கொள்ள மார்க்கம் அனுமதித்திருந்தும், ஒரு ஸஹாபியே அதை எடுத்து பயன்படுத்திக் கொள்ளும் என்று கூறியிருந்தும் கூட, அவர் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு அந்த வம்பே எனக்கு வேண்டாம் என்ற வகையில், பெறுமதியுள்ள தங்க மோதிரத்தையே எடுக்காது சென்று விட்டார் என்றால், அந்த ஸஹாபி அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வார்த்தைக்குக் கொடுத்த மதிப்புத்தான் என்ன?

நமது வாழ்க்கையோடு இச்சம்பவங்களை ஒத்துப்பார்த்து, நமது வாழ்க்கையையும் சீரான வாழ்க்கையாக செப்பனிட்டுக் கொள்வோமாக! இதுவே இபாதத் என்னும் கட்டாய வழிப்படுதல் என்பதாகும்.

நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடப்பதில் ஸஹாபாக்களின் நிலை நபியவர்களைப் போன்றே நானும் விலகிச் செல்கிறேன்!

* முஜாஹித் (ரழி) அறிவிக்கிறார்கள்:

நாங்கள் ஒரு பிரயாணத்தின் போது இப்னு உமர்(ரழி) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் பிரயாண வழியில் ஓரிடத்தில் (நடைபாதையை விட்டு) சற்று விலகிச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் ஏன் இவ்வாறு இவ்விடத்தில் சற்று விலகிச் செல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் (உமது) நபி (ஸல்) அவர்களை அவர்களின் பிரயாணத்தின் போது இவ்விடத்தில் இவ்வாறு சற்று விலகிச் சென்றதை நான் நேரில் பார்த்தேன். ஆகையால் நானும் அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே இவ்விடத்தில் சற்று விலகிச் செல்கிறேன் என்றார்கள். (அஹ்மத், பஜ்ஜார்)

நபியவர்களைப் போன்றே கழிப்பிடத்திற்குச் சென்ற ஸஹாபி!

அனஸ் பின் ஸீரின் அறிவிக்கிறார்கள்:

நான் ஒரு சமயம் அரபாத்திலிருந்து இப்னு உமர்(ரழி) அவர்களுடன் புறப்படலானேன். பிரயாணத்தின் போது குறுகிய பாதை ஒன்றை நாங்கள் அடைந்தவுடன், அவர்கள் தமது வாகனத்தை நிறுத்தினார்கள். நாங்களும் அவர்கள் தொழப்போகிறார்களோவெனக் கருதி எங்கள் வாகனங்களையும் நிறுத்தினோம். அப்பொழுது அவர்களின் வேலையாள் ஒருவர், அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) அவர்கள் தாம் தொழுவதற்காக இவ்விடத்தில் இறங்கவில்லை. (அவர்கள் இறங்கிய நோக்கம்)

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் இவ்வழியாகப் பிரயாணம் செய்யும் போது, இவ்விடத்தில் தமது வானத்தை நிறுத்தி கீழே இறங்கி, தமது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கழிப்பிடத்திற்குச் சென்றார்கள். அதை நினைவில் கொண்டவர்களாக இன்று உமர்(ரழி) அவர்களும் அதே இடத்தில் தாமும் இறங்கி, அவர்களைப் போன்றே தாமும் தமது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக விரும்பி, கழிப்பிடம் செல்வதற்காக இவ்விடத்தில் இறங்கியுள்ளார்கள் என்றார். (அஹ்மத்)

நபியவர்கள் படுத்தெழுந்த மரத்தடியில் நானும் படுத்தெழுகிறென்!

* இப்னு உமர்(ரழி) அவர்கள் மக்காவுக்கும், ‘மதீனா’வுக்குமிடையில் ஓரிடத்திலுள்ள மரத்தின் அருகே வந்த போது, அம்மரத்தடியில் இறங்கி சிறிது நேரம் படுத்துத்தூங்கி எழுந்துவிட்டு,(எமது ஆத்ம நண்பர்) முஹம்மத்நபி(ஸல்) அவர்கள் இவ்விடத்தில், இம்மரத்தடியில் சிறிது நேரம் படுத்தெழுந்ததை நேரில் கண்ட (நானும் அவ்வாறு) எமது நபியைப் போன்றே, படுத்தெழுந்திருக்க வேண்டும் என விரும்பியே இவ்வாறு படுத்தெழுந்திருக்கிறேன் என்றார்கள். (பஜ்ஜார்)

மேற்கண்ட சம்பவங்களில் தாம் நபி(ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பைத் தமது செயல்வடிவில் பிரதிபலித்துக் காட்டிய அருமை ஸஹாபாக்கள், நபி(ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடந்தது ஒரு புறமிருக்க, அவர்கள் தற்செயலாகச் செய்த காரியங்களையுங் கூட கவனித்து, அவற்றைக் கடைப்பிடித்து நடப்பதில் ஆர்வம் காட்டியிருப்பதைக் காண்கிறோம்.

நபி(ஸல்) அவர்களின் செயல்கள் எதுவாயிருப்பினும் அதிலும் நன்மை இருக்கத்தான் செய்யும் என்ற ஸஹாபாக்களின் அசைக்க முடியாத பலமான நம்பிக்கையே இதற்கு மூல காரணமாகும்.

எனவே நாம் இன்று நமது சொல், செயல், நடை, உடை, பாவனைகளில் நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளை எந்த அளவு பின்பற்றி நடக்கிறோம் என்பதைச் சிறிதேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபியவர்களை நமது சமுதாயம் நடை, உடை, பாவனைகளில் முழுமையாகப் பின்பற்றி நடப்பது ஒருபுறமிருக்க, அவர்களுக்கு “இதாஅத்” வழிப்பட்டு நடத்தல் எனும் கட்டாயக் கடமைகளை அமுல்படுத்துவதிலும் கூட, முறையான கவனமில்லாது காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பது கடும் வேதனைக்குரிய விஷயமாகும்.

* நாம் நமது நபி(ஸல்) அவர்கள் மீது அன்புள்ளம் கொண்டவர்களாயிருக்கிறோம் என்பதற்கோர் எடுத்துக் காட்டாக, அவர்கள் மீது புகழ் பாடுகிறோம் என்ற வகையில் ஒரு சிலர் விளங்காமணி மாலைகளை (மவ்லூதுகளை) மட்டும் ஓதிவிட்டு, அதன் மூலம் அருமை நபியின் அன்பையும், அல்லாஹ்வின் அருளையும் அடைந்து விடலாம் என்று பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் வல்ல அல்லாஹ்வோ, அத்தகைய வாக்கியங்களை அடைவதற்கு, அருமை நபி(ஸல்) அவர்களுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடப்பதோடு, அவர்களின் புனிதமான வாழ்க்கை முறைகளையும் பின்பற்றி நடந்தாக வேண்டும் என்று , 3:31,32ல் பலமான நிபந்தனையிட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சொல் வீரர்களாக மட்டுமின்றி செயல் வீரர்களாகத் திகழ்வதற்கு வழிவகை செய்து கொள்ளாது, வெறுமனே புகழ்பாடிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது?

ஆகவே எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும், அவன் மீதும் அவனது தூதரின் மீதும், அளப்பரிய அன்பைத் தந்து அவ்வடிப்படையில் அவனுக்கு வழிப்பட்டு நடப்பதோடு, அவனது தூதராம் நமது நபி(ஸல்) அவர்களின் தூயவாழ்க்கை முறைகளைப் பேணி பின்பற்றி நடக்கும் பாக்கியத்தையும் தந்தருள்வானாக! ஆமீன்.

 

-அபூ ருகையா

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.