இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!

இன்று இஸ்லாமின சமுதாயத்தின் பெரும் பகுதியினர் ‘தக்லீத்’ என்ற பெயரில் மரியதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கைக் கொண்டு, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழி தவறிச் செல்வதால் , ‘தக்லீத்’ தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரண்பட்டிருப்பவை மார்க்கமாகி விட்டதற்கான முக்கிய காரணங்களை நாம் கவனிப்போம்.

பரீட்சையில் காப்பி அடிப்பதே தக்லீத்!

“அவர்கள் சொல்லைக் கேட்டு, அவற்றில் அழகானதைப் பின்பற்றுவார்கள்; அல்லாஹ் நேர் வழியில் செலுத்தியது இத்தகையோரைத்தான். இவர்களே அறிவடையவர்கள்” (அல்குர்ஆன் 39 : 18)

என்ற இந்த இறை கட்டளைப்படி ஒருவரின் சொல்லைக் கேட்டு அல்லது எழுத்தைப் பார்த்து, அதில் அழகானதை – அதாவது குர்ஆன், ஹதீஸுக்கு ஒத்ததை எடுத்துப் பின்பற்றுவது ‘தக்லீத்’ ஆகாது.

“நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் ‘திக்ரை’ உடையவர்களிடம் கேளுங்கள்” (அல்குர்ஆன் 16 : 43) என்ற வசனத்தில் கேட்டு விளங்கிச் செயல்படச் சொல்கிறானே அல்லாமல், “கல்லிதூ அஹ்லத் திக்ரி” என்று திக்ரை உடையவர்களைத் தக்லீத் செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை.

கேட்டு விளங்குவதற்கும், கண்மூடிப் பின்பற்றுதலுக்கும் (தக்லீத்) மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.

கணக்குத் தெரியாத மாணவன் ஆசிரியரிடம் கேட்பது என்றால், அந்தக் கணக்கின் ஆரம்பம் முதல் இறுதி விடை வரை எப்படிப் போடுவது என்பதைத் தெரிந்து, தனது மூளையில் ஏற்றிக் கொள்வதைத் தான் குறிக்கும். போடும் முறை அறியாமல் இறுதியில் வரும் விடையை மட்டும் தெரிந்து கொள்வது, கணக்கை அறிந்து கொண்டது ஆகாது. கண்ணை மூடிக் கொண்டு கடைசியில் உள்ள விடையை மட்டும் அறிந்து கொள்வது போன்றது தான் ‘தக்லீத்’ ஆகும். இது தடை செய்யப்பட்டது என்பதை எந்தப் புத்திசாலியும் மறுக்க மாட்மான்.

பரீட்சை எழுதும் மாணவர்களில் திறமை மிக்கவனிடம், மந்த புத்திக்காரன், பரீட்சைக்கு முன் கேட்டு, கேள்விகளையும் விடைகளையும் புரிந்து மனதில் இருத்திக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவதே அவனுக்கு உண்மையான நன்மையைத் தரும். அவன் தனது திறமையில் நம்பிக்கை இழந்து, பக்கத்தில் உள்ளவனைப் பார்த்து காப்பி அடிப்பது, உண்மையில் பரீட்சை எழுதியது ஆகாது பிடிபட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவான். காப்பி அடித்து பாஸாகி விட்டாலும் ஆற்றல் மிக்கவனாக ஆக முடியாது.

மனிதர்களால் நடத்தப்படும் பரீட்சைகளில் அவர்களை ஏமாற்றி காப்பி அடிக்க வாய்ப்பாவது கிடைக்கும். ஆனால் அல்லாஹ் (ஜல்) நடத்தும் இந்த வாழ்க்கைப் பரீட்சையில் அல்லாஹ்வை ஏமாற்றி காப்பி அடிக்கவும் முடியாது என்பதை முஸ்லிம் பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகவே முகல்லிதுகள் எப்படி வெற்றி பெற முடியும் என்பதை அவர்களே சிந்திக்கட்டும்.

வெள்ளைத்தாளில் கருப்பு மையில் எழுதுவது மட்டும் தான் பரீட்சை என்று பரீட்சையைப் பற்றி விளங்காமல் சொல்பவர்கள் மட்டுமே இந்தக் கண்மூடிப் பின்பற்றலை (தக்லீதை) சரி காண்முடியும். அதல்லாமல் மாணவனுடைய திறமையை அறிந்து கொள்வதற்காகத்தான் பரீட்சை நடத்தப்படுகிறது என்பதை அறிந்த நடுத்தர அறிவு படைத்தவனும் இதை ஒப்புக் கொள்ள மாட்டான், தக்லீதின் நிலை குறித்து இதற்கு மேலும் விளக்க அவசியப்படாது என்று கருதுகிறோம்.

விளங்கிச் செயல்படுவது தகலீத் அல்ல!

இந்த அடிப்படையில் பிக்ஹு சட்டங்களைத் தந்த இமாம்கள் ஹதீஸ் நூல்களைத் தந்த இமாம்கள் அதற்குப் பின்னால் வந்த பல நூறு இமாம்கள், ஏன்? சாதாரண நபர் முதல் யார் சொல்லி இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீஸ்படி இருக்கின்றதா? என்று பார்த்து விளங்கி ஏற்று நடப்பதை அல்லாஹ்(ஜல்) அனுமதிக்கிறான். அதேபோல் யாருடைய கூற்றாக இருந்தாலும் அது குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அதைப் புறக்கணித்தாலே அல்லாஹ்(ஜல்) வுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருக்கும். இவைகளுக்கான பல ஆதாரங்களை நமது டிசம்பர் இதழில் பல ஆயத்துக்கள் ஹதீஸ்களின் அடிப்படையில் காட்டியுள்ளோம்.

குர்ஆனை அனைவருக்கும் விளக்குவதே கட்டாயக் கடமை

தக்லீத் நியாயப்படுத்துவோர் கூறக் கூடிய அடுத்த ஆதாரத்தைப் பார்ப்போம்.

அதாவது “குர்ஆனையும் ஹதீஸையும் உங்களைப் போன்ற பாமர மக்களால் விளங்க முடியும். எங்களைப் போன்ற மெளலவிகளின் கூட்டம் தான் விளங்க முடியும். எங்களுக்கு விளங்கி நாங்கள் எதைச் சொல்கிறோமோ அதை நீங்கள் சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்” இதுதான் அவர்கள் தக்லீதை நியாயாப்படுத்த எடுத்து வைக்கின்ற அடுத்த ஆதாரம். இது சரிதானா? என்பதை குர்ஆன் ஹதீஸ் வழியில் ஆராய்வோம்.

இப்படி அல்லாஹ்(ஜல்) வும் அவனது ரஸுல்(ஸல்) அவர்களும் சொல்லி இருந்தால் எவ்வித மறுப்பும் இன்றி ஒவ்வொரு முஸ்லிமும் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். ஆனால் குர்ஆனின் எந்தப் பக்கத்திலும் அப்படிப்பட்ட அறிவிப்பைப் பார்க்க முடியவில்லை. ஹதீஸிலும் பார்க்க முடியவில்லை. குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத விதியை விதித்தது யார்? அதுவும் தெரியாது. அதையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வதே முஸ்லிம்களின் தலை எழுத்து போலும்!

“ஜின் வர்க்கத்தையும், மனித வர்க்கத்தையும் என்னை வணங்குவதற்காக அன்றிப் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51 : 56)

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். (அல்குர்ஆன் 67 : 2)

இந்த இரு வசனங்களின்படி அனைவரும் அல்லாஹ்வை வணங்கக் கடமைப்பட்டுள்ளனர். அனைவரும் சோதனைக்கு உட்பட்டவர்கள் யாருக்கும் விதிவிலக்கில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. பரீட்சை என்றால் அனைவரும் விளங்கிததான் ஆக வேண்டும், யாரும் யாரையும் காப்பி அடிக்கக் கூடாது. இந்த அடிப்படையில் முயற்சி செய்தால் குர்ஆனையும், ஹதீஸையும் அனைவரும் விளங்கிக் கொள்ள முடியும் என்பதே உண்மையான பேச்சாகும்.

நம்முடைய விஷயத்தில் யார் முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு நம் வழிகளை எளிதாக்குவோம். (அல்குர்ஆன் 29 : 69)

இதற்கு மாற்றமாகச் சொல்கிறவர்கள் ஏதோ சுயநலத்திற்காகவே சொல்கிறார்கள் என்பதை சாதாரண எறிவு படைத்தவனும் விளங்கிக் கொள்ள முடியும்.

குர்ஆன் விளங்கிக் கொள்ள எளிதானது; தெளிவானது; சந்தேகத்திற்கு இடமில்லாதது என்பதற்கு குர்ஆனில் பல வசனங்களே சான்றுகளாக இருக்கின்றன.

(அல்குர்ஆன் 12:1, 15:1, 16:64, 27:28:2, 36:69, 43:2, 54:17-22, 32, 40)

குர்ஆனை நம்புவதா? மனிதக் கூற்றுக்களை நம்புவதா? பொது மக்களாகிய நீங்களே சிந்தித்து முடிவு செய்யுங்கள்.

உண்மை என்னவென்றால் மார்க்கத்தைக் கற்றுக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையை விட்டு, மனித அபிப்பிராயங்களின் கல்வித் திட்டத்தை அமைத்துக் கொண்டதால் இந்த சமுதாயத்திற்கு இத்தனை பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறை, முஸ்லிமான ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவர்கள் பத்து வயதினர்களான இளஞ்சிரார்களாக இருந்தாலும் எண்பது வயது கிழடுகளாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மூன்று அல்லது நான்கு ஆயத்துக்களாக நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் நின்றும் மூன்று அல்லது நான்கு ஹதீஸ்களாகப் படிப்படியாக அறிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு குர்ஆனையும், ஹதீஸையும் எளிதான முறையில் கற்றுக் கொண்டார்கள். இந்த அழகான முறையை விட்டு, சமுதாயத்தில் வலுவில்லாத ஒரு சாராரின் குழந்தைகளை (சமுதாயத்தில் 5% கூட இருக்காது. ஆரம்பத்திலிருந்தே சுயநம்பிக்கை அற்றவர்களாகவும், மார்க்கம் தெரிந்தவர்களை சார்ந்திருப்பவர்களாகவும் ஆகும் சூழ்நிலையில் மார்க்கக் கல்வி என்ற பெயரால் குர்ஆன், ஹதீஸோடு மனித அபிப்பிராயங்களையும் கலந்து எழுதப்பட்ட பிக்ஹு நூல்களைக் கற்றுக் கொடுக்கும் முறையை நாடு முழுவதும் உண்டாக்கி வைத்திருக்கிறொம். இந்த முறை மாறி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குர்ஆனையும், ஹதீஸையும் கற்றுக் கொள்ளும் நபி(ஸல்) அவர்களது காலத்து கல்வித் திட்டம் அமுல் படுத்தப்படாதவரை, இந்த சமுதாயத்திற்கு விடிவே இல்லை.

குர்ஆன் இறங்கியது பாமர மக்களுக்காகவே!

உண்மையில் குர்ஆன் எழுதப் படிக்கத் தெரியாத அறியாமையிலும், பகிரங்க வழிகேட்டிலும் மூழ்கி இருந்த மக்களுக்காகத்தான் இறங்கியது.

“எழுத்தறிவில்லாத ஜனங்களுக்காகவே அவர்களிலே ஒரு தூதரை, அவன் அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னும் பகிரங்கமான வழிகேட்டிலிருந்த போதிலும் அவர், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்று கொடுக்கிறார்” (அல்குர்ஆன் 62 : 2)

இந்த வசனத்தின்படி நபி(ஸல்) அவர்களது காலத்தில், எழுதப் படிக்கத் தெரியாத 95% சஹாபாக்கள் குர்ஆனை நபி(ஸல்) அவர்களின் விளக்கத்தின் துணையோடு தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில் நாங்கள் தான் கற்றவர்கள், அரபி இலக்கிய விற்பன்னர்கள், கவிஞர்கள் என்று மார் தட்டி ‘தாருன் நத்வா’ வைச் சார்ந்த அன்றைய காலத்து அறிஞர்களுக்கு, மதவிற்பன்னர்கள் என்று மக்களால் போற்றப்பட்டவர்களுக்கு குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியவில்லை. தலைசிறந்த அறிஞர்கள் என்று போற்றப்பட்டவர்களை வடிகட்டிய ஜாஹில்கள் என்று தூற்றப்பட்டவர்களை தலை சிறந்த அறிஞர்கள் என்றும் உலகம் சொல்லும் ஒரு மாபெரும் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்திக் காட்டியது. உண்மையில் இது ஒரு பெரும் அதிசயம்தான்.

அகந்தை ஆகாது!

ஆம்! நாங்கள் தான் கற்றவர்கள் . அரபி இலக்கணஇலக்கியம் அறிந்தவர்கள் என்று அகந்தையுடன் மார் தட்டும் அறிஞர்கள் குர்ஆனை விளங்க முடியாது. அரபியைச் சரிவர உச்சரிக்கத் தெரிந்தவர்களாக இருந்தாலும் பயபக்தியுடையவர்களாகவும் (புலன்களுக்கு எட்டாத) மறைவானவற்றை நம்பியவர்களாகவும் ‘ஐங்காலத் தொழுகையை அதனதன் நேரத்தில் தவறாமல் நிறைவேற்றக் கூடியவர்களாகவும், அல்லாஹ் அளித்தவற்றிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதையும், அதற்கு முன்னால் அருளப்பட்டதையும் நம்பியவர்களாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதி விளங்க முற்பட்டால் நிச்சயமாக குர்ஆனைச் சரியாக விளங்கிக் கொள்ளமுடியும். இது அல்லாஹ்(ஜல்) கொடுக்கும் உத்திரவாதம்.

(அல்குர்ஆன் 2 : 2-5 திருவசனங்களின் கருத்து இதை மறுப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்கவே முடியாது.

இன்றைய தேவை என்ன?

இந்தச் சமுதாயத்திற்கு இன்று மிக மிகத் தேவை தக்வா(பயபக்தி)வுடைய வாழ்வும், குர்ஆனிலும், ஹதீஸிலும் பாடுபடும் முயற்சி மட்டுமே. அதற்கு மேல் அரபி இலக்கண் இலக்கியம் இருந்தால் அதை நாம் வரவேற்கிறோம். மறுக்கவில்லை. இன்னும் பாடு படுபவர்களில் சிலருக்கு ஞானத்தை அல்லாஹ் அதிகமாகவும் கொடுத்து விடலாம். இது அல்லாஹ் அவருக்குக் கொடுத்த சிறப்பு ஆகும்.

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ஞானத்தைக் கொடுக்கிறான். ஆதலால் எவர் ஞானம் கொடுக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக அநேக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார். ஆயினும் அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்ச்சி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 269)

இந்த வசனப்படி இந்தச் சிறப்பைக் பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டு, அந்த ஞானத்தைக் கொண்டு மற்ற மக்களுக்கும் குர்ஆன் ஹதீஸை (மனித அபிப்பிராயங்களை அல்ல) விளங்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டுமமே அல்லாது சமுதாயத்தை இரு பிரிவினர்களாக்கி, நாங்கள் தான் மார்க்கத்தைப் போதிக்கும் உரிமை பெற்றவர்கள் நாங்கள் சொல்வதைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதாரங்கள் கேட்காமல் ஏற்று நடக்க வேண்டும் என்று சமுதாயத்தில் உயர்வு தாழ்வை உண்டாக்க ஒரு போதும் முனையக் கூடாது. அல்லாஹ்வுக்கும் , அடியார்களுக்குமிடையில் தரகர்களை உண்டாக்க முனையக் கூடாது. இதனால் தான் ‘தக்லீத்” என்னும் கண்மூடிப் பின்பற்றலும் மதப் பிரிவுகளும் சமுதாயப் பிளவுகளும், வீழ்ச்சிகளும் ஏற்படுகின்றன.

வஹி வந்து கொண்டிருந்த நபிமார்களைத் தவிர வேறு மனிதர்களில் மார்க்க விஷயத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்து, அல்லது ஒருவரை ஒருவர் பாதுகாவலராக்கிப் பின்பற்றி நடப்பதை அல்லாஹ்(ஜல்) மிக வன்மையாகக் கண்டிக்கிறான்.

“உங்களுக்காக உங்கள் இறைவனால் அருளப் பட்டதையே பின்பற்றுங்கள் அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்கு)ப் பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றாதீர்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவது வெகு சொற்பமே. (அல்குர்ஆன் 7 : 3)

இந்த வசனத்தில் இப்போது நாம் “எங்களுக்குக் குர்ஆனைத் தெரியாது, ஹதீஸைத் தெரியாது, அவற்றை அறிந்து கொள்ள அரபியும் தெரியாது. அதற்கு அவகாசமும் இல்லை. அந்த நாதாக்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் மார்க்கத்திற்காக அர்ப்பணித்தார்கள். பகல் இரவென்று பாராது பாடுபட்டவர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கரைத்துக் குடித்தவர்கள். அரபி இலக்கண இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், பதினாறு கலைகளையும் கற்றுத் தேர்ந்த விற்பன்னர்கள், குர்ஆனைப் பற்றியும் ஹதீஸைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாததையா நாங்கள் தெரிந்து கொள்ளப் போகிறோம். ஆகவே அவர்களை எங்களது பாதுகாவலர்களாக்கி, எங்கள் இமாமாக ஆக்கி அவர்களைப் பின்பற்றுகிறோம்” என்று சொல்கிறோமே இதை தான் மிக வன்மையாக அல்லாஹ்(ஜல்) கண்டித்துக் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறோம் என்றால் நாமாகப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று பல வசனங்களில் கட்டளை இட்டதை வைத்தே பின்பற்றுகிறோம், வேறு யாரையும் பின்பற்ற அல்லாஹ்(ஜல்) வசனம் எதையும் இறக்கி வைக்கவில்லை, அதனால் நபி(ஸல்) அவர்களைத் தவிர்த்து வேறு யாரையும் அது ஒருவராக இருந்தாலும் சரி. நல்லவர்களாக இருந்தாலும் சரி கெட்டவர்களாக இருந்தாலும் சரி பாதுகாவலர்களாக்கிப் பின்பற்றவே கூடாது.

“இதைத் தான் அந்த மரியாதைக்குரிய இமாம்கள் எங்களை தக்லீத் செய்யாதீர்கள். ஆதாரங்களை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடக்காதீர்கள்” என்று தெளிவாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் அல்லாஹ்(ஜல்) சொல்வது போல் நம்மில் வெகு சிலரே இந்த உண்மையை உணரச் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

“அவர்கள் (யூத கிறித்துவர்கள்) தங்கள் மத குருக்களையும் பாதிரிகளையும் அல்லாஹ்வை விட்டு ரப்புகளாக ஆக்கிவிட்டனர் (அல்குர்ஆன் 9 : 31) என்ற திருவசனம் இறங்கிய போது, கிறித்துவராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் இணைந்த ‘அதீ இப்னு ஹாதம்’ (ரழி) என்ற நபித் தோழர் ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே! (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே’) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும். அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித் தனமாக) நீங்களும் கருதினீர்கள் அல்லவா?

அதுதான் அவர்களை கடவுள்களாகக் கருதியதற்கு நிகரானது என்று விளக்கம் தந்தார்கள்.  (ஆதாரம்: அஹ்மத் – திர்மிதீ)

இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித் தனமாகப் பின்பற்ற எவருக்கும் அனுமதி இல்லை மார்க்க அறிஞர்கள் சொல்லி விட்டார்கள் என்பதற்காக அதற்குரிய ஆதாரங்களை அறிய முற்படாமல் பின்பற்றுவது மிகப்பெரும் குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்குத் தெளிவாக்குகின்றது.

அல்லாஹ்(ஜல்) நம் அனைவருக்கும் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்து அவனது நேர்வழியில் நடக்க அருள் புரிவானாக. ஆமீன்!

-K.M.H. அபூ அப்துல்லாஹ், நிர்வாகி

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.