மார்க்க கேள்வி பதில்கள்!

பதில்கள்மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன்: 

கேள்வி: கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா?     அல்லாஹ்வின் அடிமை (ஊர் இல்லை)

பதில்: நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னால் நீங்கள் கேட்காத இன்னொரு கேள்விக்கும் பதில் சொல்ல வைத்து விட்டீர்கள்! நீங்கள் இப்படிக் கேள்வி கேட்பதே ஏதோ தவறான செயல் என்று கருதுவதால் தான், உங்கள் ஊரையும் முகவரியையும் எழுதாமல் விட்டுள்ளீர்கள் என தோன்றுகிறது. மார்க்கத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன வெட்கம்? நபித்தோழர்கள் இவ்வாறு இருந்திருந்தால் பல சட்டங்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் மார்க்கம் மிகவும் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளது. நீங்கள் தான் கேட்டுத் தெரிந்து கோள்ள வேண்டும்.

பார்ப்பதற்கு எவ்வித தடையுமில்லை. ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்:- “உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள்(போன்று) ஆவார்கள். நீங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்”(2:223) மாதவிடாய்க் காலத்தில் உறவு கொள்வதையும், பின் துவாரத்தில் உறவு கொள்வதையும் தவிர மற்ற எதனையும் இஸ்லாம் தடுக்கவில்லை. இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியுள்ள இஸ்லாம் இதைத் தடுக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ‘அதா’வு என்பவர் இதுபற்றி நேரடியாக கேட்ட போது, பார்ப்பதற்கு அனுமதி உள்ளதாக சூசகமாக உணர்த்தினார்கள் என்ற ஹத{ஸ் இப்னு ஹப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை மேற்கொள் காட்டி ஹாபிழ் இப்னு ஹஜர் இஸ்கலானி இமாம் அவர்கள் “ஆண் தன் மனைவியின் மர்மஸ்தலங்களையும் பெண் தன் கணவனின் மர்மஸ்தலங்களையும் பார்க்கலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும் என்று குறிப்பிடுகிறார்கள். (பத்ஹுல் பாரி, பாகம்-1, பக்கம்-290)

இவ்வாறு பார்ப்பதால் குருட்டுத் தன்மை ஏற்படும் என்றும், ஊமைத் தன்மை ஏற்படும் என்றும் ஹதீஸ்கள் என்ற பெயரால் கூறப்படுபவை இட்டுக்கட்டப்பட்டவைகளாகும். இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) என்ற நூலில் இந்த ஹதீஸை எழுதி, இட்டுக்கட்டப்பட்டவை என்று அடையாளம் காட்டுகிறார்கள்.

——————————————-

கேள்வி: பொய் சொல்வதை இஸ்லாம் எந்தச் சந்தர்ப்பத்திலாவது அனுமதிக்கிறதா?  முகம்மது ஷஹீத், ஷார்ஜா.

பதில்: மூன்று சந்தர்ப்பங்களில் அனுமதிக்கின்றது. (இல்லற நன்மையைக் கருதி) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் பேசும் போதும் – போர்க்களங்களிலும் – மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பொய் பேசுவதற்கு நபி ஸல்லல்லாஹு அவைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்துள்ளனர் என்று உமமுகுல்ஸும் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் “முஸ்லிமில்” பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதன் முதலில் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் வேறு விதமாக புரிந்து கொள்ள வேண்டாம். ஒருவன் தன் மனைவியிடம் “உன்னைப் போன்ற அழகி இல்லை” என்கிறான். அவளைவிட அழகு படைத்தவர்கள் இருந்தாலும் அப்படிச் சொல்கிறான். இது போன்ற பொய்களுக்குத் தான் அந்த அனுமதி பொருந்தும். இல்லறம் ஒழுங்காக நடைபெற சமயத்தில் இது அவசியமாகவும் ஆகிவிடும். இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதற்காகவோ, மோசடி செய்வதற்காகவோ, சொல்லப்படும் பொய்களுக்கு அனுமதி இல்லை. மோசடி ஏமாற்றைக் கண்டிக்கும் ஏனைய ஹதீஸ்கள் உள்ளன.

——————————————-

கேள்வி: தாலிகட்டுவது இஸ்லாத்தில் உண்டா? தாலி இல்லாவிட்டால் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதை எப்படித் தெரிந்து கொள்வது? அப்துல் பத்தாஹ், ஷார்ஜா.

பதில்: இஸ்லாத்துக்கும், தாலிக்கும் சம்பந்தமில்லை. ‘பாத்திமா நாயகி தாலி கட்டினார்கள்” என்று ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு நம்மவர்கள் அதை மார்க்கமாக எண்ணிக் கொண்டுள்ளனர். தாலி என்று சொல்லாமல் “கருகமணி” என்று பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு ஏராளமான மெளட்டீகங்களும் நடைமுறையில் இருந்து வருகின்றன. கருகமணி அறுந்து விட்டால், அறுந்து விட்டது என்று கூட சொல்லக் கூடாதாம். பெருகி விட்டது என்று சொல்ல ேவண்டுமாம். இப்படி பெருகி விட்ட(?) பின் புதிய நூலில் கோர்த்து கட்டுவதற்கு ஒரு பாத்திஹாவும் ஓத வேண்டுமாம்! இவைகளெல்லாம் அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குச் சொல்லித் தராதவைகளாகும். ஒரு பெண்ணிற்குத் திருமணம் ஆகி விட்டதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது? அப்படியே அவசியமேற்பட்டால் ஊரில் விசாரித்தால் சொல்லப் போகிறார்கள்.

எனக்கொரு சந்தேகம்! ஒரு ஆணுக்குத் திருமணம் ஆகிவிட்டதை எப்படித் தெரிந்து கொள்வதாம்?

———————————————

கேள்வி: என்னுடைய பெண் குழந்தைக்கு ஆயிஷா என்று பெயர் வைத்துள்ளேன். அவ்வாறு பெயர் வைக்கக் கூடாது என்று சிலர் கூறுகிறார்கள். ‘ஆயிஷா’ என்று பெயர் வைக்கக் கூடாதா?

பதில்: ‘ஆயிஷா’ என்றால் ‘வாழக் கூடியவள்’ என்று பொருள். தாரளமாகப் பெயர் வைக்கலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு மனைவியின் பெயர் ஆயிஷா. அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பேரறிவைப் பெற்று உங்கள் மகளும் வாழட்டும்!

————————————————

கேள்வி: அகீகா கொடுப்பது அவசியமா? அதன் முறை என்ன? ஆஸம், சென்னை.

பதில்: “அகீகா” பற்றிய நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொன்மொழிகளை அவர்கள் காலத்து நடைமுறையைப் பார்ப்போம்.

“ஆண் குழந்தைக்காக ‘அகீகா’ உண்டு. அவன் சார்பாக இரத்தத்தை ஒட்டுங்கள்” (நபிமொழி)

அறிவிப்பவர் : சல்மான் இப்னு ஆமிர் (ரழியல்லாஹு அன்ஹு)

நூல்கள் : புகாரி, அஹ்மத், அபுதாவூது, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா.

ஒவ்வொரு ஆண் குழந்தையும் ‘அகீகா’வுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளான். அவன் சார்பாக ஏழாம் நாள் அறுத்துப் பலியிடவும்! அன்றே பெயர் வைக்கவும்! அவன் தலை(மயிரை) களையவும்! (நபிமொழி)  அறிவிப்பவர்: சமுரா ரழியல்லாஹு அன்ஹு

நூல்கள்: அஹ்மத், நஸயீ, அபூதாவூது, திர்மிதீ, இப்னுமாஜா ஹாகீம், பைஹகீ.

‘ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள்’ என்றும், ‘பெண் குழந்தை சார்பாக ஒரு ஆடு’ என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐபு ரழியல்லாஹு அன்ஹு நூல்கள்: அஹ்மத், அபூதாவூது, நஸயீ

இந்த நபிமொழியில் ‘விரும்பினால்’ கொடுக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் ‘அகீகா’ கட்டாயமான ஒன்றல்ல என்றும் உணரலாம்.

‘அகீகா’ அரபு நாட்டில் வழக்கமாகவே நடந்து வந்த நடைமுறையாகும். இஸ்லாம் வந்தபின், அதை அங்கீகாரம் செய்தது. ஆனால், ‘அகீகா’வின் பெயரால் நடந்த வேறு சில சடங்குகளை இஸ்லாம் ஒழித்தது.

நாங்கள் அறியாமைக் காலத்தில் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து, குழந்தையின் தலைமயிரை நீக்கி, அந்த ஆட்டின் இரத்தத்தை குழந்தையின் தலையில் பூசிக் கொண்டிருந்தோம். அல்லாஹ் இஸ்லாத்தைத் தந்தபோது ஒரு ஆட்டை அறுப்போம், குழந்தையின் தலைமயிரை நீக்குவோம். தலையில் குங்குமப் பூவைப் பூசுவோம் என்று புரைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்கள் : அஹ்மத், அபூதாவூது, நஸயீ.

இதற்கு முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்களில் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் என்று குறிப்பிடப்பட்டதைப் பார்த்தோம். இந்த ஹதீஸில் ஒரு ஆட்டை ெகாடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஹதீஸிலிருந்து ஆண் குழந்தையின் சார்பாக ஒரு ஆடும் கொடுக்கலாம் என்று உணர முடிகின்றது. இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்புடையது என்பதை முன் சொன்ன ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. ஒரு ஆடும் கொடுக்கலாம் என்பதற்குப் பின் வரும் நபி வழியும் சரியான ஆதாரமாகின்றது.

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு சார்பாக ஒவ்வொரு ஆடு “அகீகா” கொடுத்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு  நூல்கள்: அபூதாவூது, இப்னு ஹப்பான், ஹாகிம், பைஹகீ

இந்த நபிவழி ஒரு ஆடு கொடுக்கலாம் என்ற அனுமதியை உணர்த்துவதோடு, பெற்றவர்கள் தான் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை, மிக நெருங்கிய உறவினர்களும் கொடுக்கலாம் குறிப்பாக குழந்தையின் பாட்டனார் கொடுக்கலாம் என்பதையும் உணாத்துகின்றது. குழந்தையின் பெற்றோர் உயிருடன் இருக்கும் போதே பாட்டனார் கொடுக்கலாம் என்பதையும் இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது. ஹஸன்(ரழி) ஹுஸைன்(ரழி) இருவரின் பெற்றோர்கள் இருந்தபோதே அவர்களின் பாட்டனாராகிய நபி(ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளனர்.

“குழந்தை பிறந்த ஏழாம் நாள் அகீகா கொடுக்கப்பட வேண்டும்” என்பதை, இரண்டாவதாக நாம் குறிப்பிட்ட ஹதீஸ் குறிப்பிடுகின்றது. எனினும், பதினான்காம் நாள், இருபத்தி ஒன்றாம் நாளிலும் கொடுக்கலாம் என்று நபி(ஸல்) கூறியதாக “பைகஹீ” யில் ஹதீஸ் உள்ளது. ஏழாம் நாளிலோ கொடுக்கலாம். அது தவறி விட்டால் வேறு நாட்களில் கொடுக்க வேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

“நபியாக ஆக்கப்பட்ட பின் நபி(ஸல்) அவர்கள் தனக்காக ‘அகீகா’ கொடுத்தார்கள் என்று ‘பைஹகீ’யில் இடம் பெற்றுள்ள ஹதீஸ், நிராகரிக்கப்பட்டதாகும். இதன் அறிவிப்பாளர்களில் அப்துல்லாஹ் இப்னு முஹர்ரர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் நிராகரிக்கப்படக் கூடியவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) கூறுகிறார்கள். இமாம் நவபீ அவர்கள் ‘இது பொய்யான ஹதீஸாகும்” என்று ‘ஷரஹுல் முஹத்தப்” நூலில் குறிப்பிடுகிறார்கள்.

ஆக மேற்கூறிய ஹதீஸ்களிலிருந்து ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு என்றும் – ஒரு ஆடு கொடுப்பது போதுமானது என்றும் – அது கட்டாயக் கடமையானதல்லவென்றும் 7,14,21 ஆகிய நாட்களில் கொடுக்க வேண்டும் என்றும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அதன் மாமிசத்தை எப்படிபட பங்கிடப்பட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடாததாலும், ஸஹாபாக்கள் இதுபற்றி கேட்காததாலும், குர்பானி மாமிசம் பங்கிடப்படுவது போன்றே இதுவும் பங்கிடப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானம் செய்யலாம்.

—————————————–

கேள்வி: காயிப் ஜனாஸா தொழலாமா? ஹனபி மத்ஹப் கூடாது எனிகிறார்களே?  – T. ஷேக் ஜாகிர் ஹுஸைன், கடையநல்லூர்.

பதில்: தொழலாம். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு வஸல்லம் வெளியூர் சென்றிருந்த போது, உம்முஸஃது என்பவர் இறந்து விடுகிறார். ஒரு மாதம் கழித்து மதீனா வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள், காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள் என்று திர்மிதீயில் ஹதீஸ் உள்ளது. இன்னும் பைகஹீ தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் காயிப் ஜனாஸா பற்றி ஹதீஸ்கள் உள்ளன. இவைகள் காயிப் ஜனாஸாத் தொழலாம் என்று தெளிவாகக் காட்டுகின்றன.

ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் கிடைத்தால் அதையே பின்பற்றும்படி இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹு அலைஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

——————————————–

கேள்வி: அல்குர்ஆன் 60:13 உடைய அர்த்தம் என்ன? மரணித்தவர்களுக்கு எல்லா வல்லமையுயம் உண்டு என்று அதற்கு பொருள் உண்டா? -ஹலிக்குல் ஜமான், பரங்கிப்பேட்டை.

பதில்: நீங்கள் குறிப்பிட்ட ஆயத் இதுதான்.

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர் மீது கோபம் கொண்டிருக்கின்றானோ அந்த சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள். ஏனெனில் காபிர்கள் கப்ரு வாசிகளைப் பற்றி நம்பிக்கை இழந்து விட்டதைப் போல், மறுமையைப் பற்றி அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்”.

உங்கள் கடிதம், இந்த வசனத்திற்கு தங்கள் மனம் போன போக்கில் எவரோ விளக்கம் தந்திருப்பார்கள் என்று தெரிவிக்கின்றது.

குர்ஆனுக்குத் தங்கள் சொந்த அபிப்பிராயப்படி எவன் விளக்கம் தருகின்றானோ அவன் தங்குமிடமாக நரகத்தை ஆக்கிக் கொள்ளட்டும்! -(அபூதாவூத், நஸயீ, திர்மிதீ)  என்ற நபிமொழியின் எச்சரிக்கையை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பாடம் பயின்ற இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த ஆயத்துக்குத் தருகின்ற விளக்கத்தைப் பார்ப்போம்.

கப்ரு வாசிகள் எழுப்பப்படுவார்கள் முன்கர் நகீர் மூலம் விசாரிக்கப்படுவார்கள் என்பதில் காபிர்கள் நம்பிக்கை இழந்து விட்டது போல், என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் தந்துள்ளார்கள். (தப்ஸீர் இப்னு அப்பாஸ் பக்கம் 468 – இப்னு கஸிர்) நீங்கள் குறிப்பிட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

—————————————

கேள்வி: குத்பிய்யத் மற்றும் ஷிர்க்கான காரியம் செய்யும் இமாமின் பின்னே நின்று தொழலாமா?-முகம்மது சித்தீக், இடலாக்குடி.

பதில்:  குத்பிய்யத் மற்றும் ஷிர்க்கான காரியமாகும். ‘ஷிர்க்’ செய்பவன் முஸ்லிம் அல்ல. முஸ்லிமல்லாதவரைப் பின்பற்றித் தொழுவது கூடாது. குத்பிய்யத், ஷிர்க் என்பதற்கு விரிவான ஆதாரங்கள் “ஓதுவோம் வாருங்கள்” பகுதியில் இடம் பெறும்.

———————————————

கேள்வி: இறந்தவர்களுக்கு ‘யாஸீன்’ சூரா ஓதுவதற்கு ஹதீஸில் அனுமதி உண்டா? -முஹம்மது அபூபக்கர், (B.Sc.,) காரைக்கால்.

பதில்: ‘உங்களில் இறந்தவருக்கு யாஸீன் ஓதுங்கள்” என்ற வார்த்தையில் ஒரு ஹதீஸ் வருகின்றது. இதை அபூதாவூது, நஸயீ, இப்னு ஹப்பான் ஆகியோர் தங்கள் நூல்களில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

ஆனால் அந்த ஹதீஸ் ஸஹீஹானதல்ல என்று இமாம்தார குத்னீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறுகின்ற அபூ உஸ்மான், தன் தந்தையின் மூலம் அறிவிப்பதாகச் சொல்கிறார். “அபூஉஸ்மானும், அவர் தந்தையும் யாரென்றே அறியப்படாதவர்கள்” என்று இமாம் இப்னுல் கத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். -(ஸுபுலுஸ் ஸலாம்)

அந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதை அறிவிக்கின்ற இப்னு ஹப்பான் அவர்களே அதை பதிவு செய்து விட்டு “மரணித்தவருக்கு ஓதுங்கள்!” என்பது இதன் பொருளல்ல. மரணத் தறுவாயில் இருப்பவனுக்கு அருகே ஓதுங்கள்! என்பதே இதன் பொருளாகும் என்று குறிப்பிடுகிறார்கள். இமாம் இப்னு ஹப்பான் அவர்களின் இந்தக் கருத்தை உண்மைப் படுத்தக்கூடிய விதத்தில் “மரணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவனுக்கு அருகே யாஸீன் ஓதினால் அல்லாஹ் அவனுக்கு (மரண வேதனையை) எளிதாக்குகிறான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூதர் – ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் சஹீஹான ஹதீஸ் ‘பிர்தவ்ஸ்’ என்ற நூலில் காணப்படுகிறது.

இறந்தவர்களுக்காக குர்ஆன் (யாஸீன் உள்பட) ஓதுவதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸும் இல்லை.

———————————————–

கேள்வி: நாகர்கோவில் பள்ளிவாசலின் இமாம் தங்கப் பல் கட்டியிருக்கிறாரே! தங்கம் ஆண்களுக்கு ஹராம் ஆயிற்றே! S. ஜலீலுத்தீன், குளச்சல். S.M. நாஸர், நாகர்கோவில்.

பதில்: தங்கம் ஆண்களுக்கு ஹராம் என்பது உண்மையே எனினும் சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் தங்கத்தைப் பயன்படுத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கின்றது.

“ஒரு போர்க்களத்தில் அர்பஜா என்ற நபித்தோழரின் மூக்கு அறுபட்டுவிட்டபோது, வெள்ளியினால் செயற்கை மூக்கைச் செய்து பொருத்திக் கொண்டார். அதனால் துர்வாடை ஏற்பட்டதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், தங்கத்தினால் மூக்கு செய்து பொருத்திக் கொள்ள அனுமதி வழங்கினாாகள்” என்ற ஹதீஸ் அஹ்மத், நஸயீ, திர்மிதீ, ஆகிய நூல்களில் காணப்படுகின்றது.

இதனை அடிப்படையாகக் கொண்டு உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கப்பல் கட்டி இருந்ததாக அஹ்மதில் ஹதீஸ் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

————————————————–

கேள்வி: திருமணம் ஆகாதவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? எத்தனை வயதில் செல்ல வேண்டும்?  A. அபுல்ஹஸன் ஷாதுலி (நாகூர்) துபை.

பதில்: “மக்காவுக்குச் சென்று திரும்ப, (உடல், பொருளால்) எவர் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் மீது ஹஜ் கடமை” என்பதை குர்ஆனின் 3:97-வது வசனம் குறிப்பிடுகிறது. திருமணம் ஆகியிருக்க வேண்டும்’ என்பதெல்லாம் ஹஜ்ஜின் விதி முறைகளில் உள்ளது அல்ல. யாரிடம் அதற்கான வசதிகள் உண்டோ அவர்கள் மீது ஹஜ் கடமையாகின்றது. ‘வயதான காலத்தில் தான் ஹஜ் செய்ய வேண்டும்’ சிலர் தவறாக எண்ணிக் கொண்டு அங்கே தள்ளாத வயதில் சென்று ஹஜ்ஜின் கடமைகளை முறையாக நிறைவேற்ற முடியாமல் சிரமப்படுவதை நாம் கேள்விப் படுகிறோம். இளமையில் ஹஜ்ஜு செய்பவர்கள் தான் எல்லாக் காரியங்களையும் முறையாகச் செய்ய முடிகின்றது.

———————————–

கேள்வி: நரி, மற்றும் உடும்பைச் சாப்பிடலாமா? H. அபூபக்கர், காரைக்கால்.

பதில்: கடல் பிராணிகளைத் தவிர மற்ற பிராணிகளைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு அடிப்படையை நம் முன் வைத்து விட்டார்கள்.

“மிருகங்களில் விஷப் பற்கள் உடைய பிராணிகளையும், பறவைகளில் வளைந்த (கீறிக் கிழிக்கும்) நகங்களைக் கொண்டவைகளையும், (உண்ணுவதற்கு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடை செய்தனர்” என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு மூலும் அறிவிக்கப்படும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

இந்த இரண்டு அடிப்படைகளில் தான் இஸ்லாம் ஹலால், ஹராமை நிர்ணயம் செய்கின்றது. இந்த அளவு கோலில் அடங்காத பன்றி, கழுதையையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. உடும்பைப் பொருத்தவரை அதை உண்ணலாம் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளது.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் உடும்பை ஹராமாக்கவில்லை. இதன் மூலம் அல்லாஹ் பலருக்குப் பயன் தருகிறான். என்னிடம் உடும்பு இருந்தால் நான் உண்ணுவேன்” என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள். (முஸ்லிம்)

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னே உடும்பை (சமைத்து) வைக்கப்பட்டபோது அதை அவர்கள் சாப்பிடவில்லை. இதைக் கண்ட காலித் இப்னுல் வலீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் “இது ஹராமா?” என்று கேட்டனர், அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்” இல்லை, என் குடும்பத்தில் நான் காணாத உணவாகும்! அதனால் என் மனம் விரும்பவில்லை என்று கூறிய உடன், காலித் இப்னுல் வலீத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் “நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்துக் கொண்டிருக்க, தன்னருகே அதை இழுத்து வைத்துக் கொண்டு உண்ண ஆரம்பித்தார்கள்.

(நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, முஅத்தா)

“நரி”யைப் பொருத்தவரை அதற்கு விஷப்பற்கள் (வேட்டைப் பற்கள்) இருப்பதால் அது ஹராம் தான்.

————————————

கேள்வி: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைத்தடி வைத்துக் கொண்டு குத்பா ஓதியுள்ளார்களா? -அமீர்ஜான், மேலக்கொவரப்பட்டு

பதில்: ஆம்! கைத்தடியை ஊன்றிக் கொண்டு குத்பா ஓதியுள்ளனர்.

“நாங்கள் ஜும்ஆவுக்குச் சென்றோம். அப்பொது நபிஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் கைத்தடியை ஊன்றியவர்களாக எழுந்து நின்று இறைவனைப் புகழ்ந்தார்கள் … …. …. என்ற ஹதீஸ் அபூதாவூத், பைஹகீ, அஹ்மத், ஆகிய நூல்களில் ஹகம் இப்னு ஹஸ்ன் ரழியல்லாஹு அன்ஹு மூலம் அறிவிக்கப்படுகின்றது.

கேள்வி: ‘முத்ஆ’ நிக்காஹ் – இஸ்லாத்தில் அனுமதி உண்டா? -தஸ்னீம், நரிமேடு, மதுரை.

பதில்: ஆரம்ப காலத்தில் அது அனுமதிக்கப்பட்டிருந்தது பின்னர் அது ஹராமாக்கப்பட்டு விட்டது. மக்கா வெற்றியின் போது நபி ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் ‘முஆத்’ வுக்கு அனுமதி கொடுத்து விட்டுப் பின்னர் அதை ஹராமாக்கி விட்டனர். – (முஸ்லிம்)

மனிதர்களே! உங்களுக்கு ‘முத்ஆ’ நிக்காஹை நான் அனுமதித்திருந்தேன். அல்லாஹ் கியாம நாள் வரைக்கும் அதை ஹராமாக்கி விட்டான்” என்று நபிஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினர் (இப்னுமாஜா)

கேள்வி: தற்கொலை செய்து கொண்டவனுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தலாமா?

பதில்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒருவனுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்த மறுத்து விட்டனர் என்ற ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. -(அறிவிப்பவர் : ஜாபிர் (ரழி))

இத்தகையோருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தக்கூடாது என்று தெளிவாகத் தெரிகின்றது.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

One Response to மார்க்க கேள்வி பதில்கள்!

  1. safni119 says:

    AS.ALAIKUM
    ماشا الله
    இந்த பணியை தொடர்ந்து செய்யுங்கள் சஹோதரரே !!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s