பெண்களும் ஜியாரத்தும்!

இறந்தவர்களுக்கு கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய செல்லக்கூடாது என்று மவ்லவிகளிடையே கருத்தொற்றுமை இருந்து வந்தது. சமீப காலமாக “பரேல்வி” கொள்கையுடைய சில மவ்லவிகள் “பெண்கள் ஜியாரத்து செய்ய அனுமதி உண்டு” என்று கூறத் துவங்கியுள்ளனர். அதற்கு ஆதாரமாக ஒரு சில ஹதீஸ்களை எடுத்து வைத்து அதில் தங்கள் சொந்த அபிப்பிராயங்களையும் கலந்து நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இன்று ஜியாரத்தின் பெயரால் நடக்கின்ற அநாச்சாரங்கள், அவலங்கள்,அலங்கோலங்கள் இவற்றை கண்கூடாகக் கண்ட பின்பும், இதற்கு முழுக் காரணம் தான் என்பதை உணர்ந்த பின்பும் அவர்களின் இத்தீய செயலுக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் ஒழுக்கக் கேட்டிற்கு பரிந்து பேசுகிறார்கள் என்றால் அவர்களை என்ன செய்வது?

அவர்கள், பெண்கள் ஜியாரத்தை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் ஆதாரங்களைள ஒவ்வொன்றாக நாம் அலசுவோம்.

முதல் ஆதாரம்

கப்ருக்கு அருகே அழுதுகொண்டிருந்த பெண் ஒருத்தியை நபி(ஸல்) அவர்கள்ள கடந்து சென்ற போது, “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையைக் கடைப்பிடி!” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களை முன்பின் பாத்திராத அந்தப் பெண்மணி” எனக்கு ஏற்பட்ட துன்பம் உங்களுக்கு ஏற்படவில்லை. உங்கள் உபதேசத்தை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார். பின்னர் வீடு தேடி வந்து “உங்களை அறியாததால் அப்படிப் பேசி விட்டேன்” என்றார்.

இந்த ஹதீஸ் அனஸ்(ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டு புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் கப்ருக்கு அருகே அந்தப் பெண்மணி அழுது கொண்டிருந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணிடம் “ஏன் கப்ருக்கு வந்தாய்?” என்று கேட்கவில்லை. எனவே கப்ருக்கு வரலாம் என்று எதிர் தரப்பினர் கூறுகின்றனர்.

சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு இதில் பெண்கள் ஜியாரத்துக்கு எப்படி ஆதாரமும் இல்லை என்பதும், மாறாக பெண்கள் ஜியாரத் கண்டிக்கத்தக்கது என்பதும் விளங்கும்.

அந்தப் பெண்மணி கப்ருக்கு அருகே அழுது கொண்டிருக்கிறார்” அதாவது கப்ருக்கு வந்தது ஒரு காரியம். அழுதது ஒரு காரியம்’ இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று கூறகிறார்கள்.

அல்லாஹ்வின் அச்சத்துக்கு மாற்றமாக அந்தப் பெண்மணி என்ன செய்தார்? அழுதது அல்லாஹ்வின் அச்சமற்ற செயலா? கப்ருக்கு வந்தது அல்லாஹ்வின் அச்சமற்ற செயலா? இதை நாம் ஆராய வேண்டும்.

இறந்தவர்களுக்காக அழுதிட இஸ்லாம் அனுமதிக்கின்றது.

“நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் ஆஜரானார்கள், ஒரு பெண்மணி அழுவதைக் கண்ட உமர்(ரழி) அவர்கள் அந்தப் பெண்ணை அதட்டினார்கள். அதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், “உமரே! அவனை விட்டுவிடு! கண்கள் கண்ணீர் சிந்தத்தான் செய்யும்! உள்ளமும் துன்பத்தால் பீடிக்கப்பட்டுள்ளது. என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல் : இப்னுமாஜா

துன்ப நேரங்களில் அழுவதற்கு – பெண்கள் அழுவதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். நபி(ஸல்) அவர்களே கூட அவர்களின் பேரக் குழந்தை இறந்த போதும், மகன் இபுராஹிம் இறந்த போதும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள். இப்னுமாஜாவிலும் இன்னும் பல நூல்களிலும் இதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.

அழுததைக் கண்டிப்பதற்காக “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களே (ஒப்பரி இல்லாமல்) அழுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணி கபுருக்கு வந்ததற்காகத் தான், “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்!” என்று அந்தப் பெண்ணை கண்டிக்கவும் செய்கின்றனர்.

பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்பதற்கு அவர்கள் ‘எடுத்து வைக்கின்ற இந்த ஹதீஸ், பெண்கள் ஜியாரத்து செய்யக் கூடாது என்பதற்கே ஆதாரமாக உள்ளது. சிந்தித்துப் பார்ப்பவர்கள் இதை நன்றாக உணர முடியும்.

இரண்டாவது ஆதாரம்

“இறந்தவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். “மூமின்களாகிய கபுருவாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் நம்மில் முன் சென்றவர்களுக்கும் இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும்”. (என்ற பொருள் கொண்ட வார்த்தைகளை) ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : முஸ்லிம், நஸயீ

இது பெண்கள் ஜியாரத்தை ஆதரிப்பவர்களின் இரண்டாவது ஆதாரம். இதில் அவர்களின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை எவரும் உணரலாம். ஏனெனினல் “கபுரை ஜியாரத்து செய்யும் போது நான் என்ன ஓத வேண்டும்” என்று ஆயிஷா(ரழி) கேட்கவில்லை. மாறாக கபுராளிகளுக்காக (இறந்தவர்களுக்காக) நான் என்ன கூற வேண்டும் என்று தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த துஆவை வீட்டிலிருந்து கொண்டே இறந்தவர்களுக்காக நாம் ஒதலாம். கபுருக்கு சென்று ஜியாரத்து செய்வது பற்றி இதில் குறிப்பிடப்படவே இல்லை . மேலும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸ் நீண்ட ஹதீஸின் இறுதிப் பகுதியாகும். அதன் முன் பகுதிகளையும் நாம் கவனித்தால் பெண்கள் ஜியாரத்து கூடாது என்ற முடிவுக்கே வரமுடியும். அந்த முற்பகுதியைப் பார்ப்போம்:

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-

என் இல்லத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கி இருக்கும் போது தங்கள் மேலங்கியைக் களைந்து, செருப்பைக் கழற்றி, காலருக்கே வைத்து பூ, தங்கள் படுக்கையின் மீது ஒருக்களித்துப் படுத்தார்கள். அவர்கள் தீடிரென மேலங்கிளை அணிந்து கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கதவைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள். நானும் முக்காடிட்டுக் கொண்டு உடலை மறைத்துக் கொண்டு அவர்களின் அடிச்சுவட்டைத் தொடர்ந்தேன். “பகீஃ” என்ற கபரஸ்தானுக்கு வந்தார்கள். அவர்களுக்காக துஆச் செய்தார்கள்.

அவர்கள் திரும்பும் போது நானும் திரும்பினேன், அவர்கள் வேகமாக நடக்க நான் (அதைவிட ) வேகமாக வந்தேன். (எப்படியோ) அவர்களுக்கு முன்பே வீடு வந்து ஒருக்களித்துப் படுத்தேன். உடன் அவர்களும் வந்தனர். என்னைக் கண்ட அவர்கள் “ஆயிஷா! ஏன் உனக்கு மூச்சிரைக்கிறது?” என்று கேட்டார்கள்’. (அதாவது வேகமாக விரைந்து வந்ததால் ஆயிஷா(ரழி) மூச்சு இறைக்கப்படுத்திருந்தார்கள்)

நான், ஒன்றுமில்லை என்று கூறினேன். காரணத்தை நீ கூறாவிட்டால் அல்லாஹ் எனக்கு அறிவிப்பான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் நடந்ததைக் கூறினேன். உடனே எனக்கு வேதனை ஏற்படும் விதமாக என் நெஞ்சில் அறைந்தார்கள், பிறகு தான் கபரஸ்தானுக்குச் சென்ற காரணத்தைப் பின்வருமாறு கூறினார்கள். ஜிப்ரில்(அலை) அவர்கள் வந்து “பகீஃ” கபரஸ்தானில் அடங்கப்பட்டவர்களுக்காக அங்கே வந்து பாவமன்னிப்புக் கோரும் படி உன் இறைவன் கட்டளையிட்டான் என்று கூறினார்கள். (அதனால் அங்கே சென்று அவர்களுக்காக மன்னிப்புக் கோரினேன்)

“அவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்” என்று கேட்டேன்.

“முமீன்களாகிய கபுர்வாசிகள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் . நம்மில் முன் செல்பவர்களுக்கும், இனி வருபவர்களுக்கும் அல்லாஹ் மன்னிக்கட்டும் என்ற பொருள் கொண்ட வார்த்தையைச் சொல்!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸின் முற்பகுதியை (எதிர்த்தரப்பினர் அதைக் குறிப்பிட மாட்டார்கள்) க்கவனித்தால் பெண்கள் ஜியாரத் கூடாது என்று கருதத்தான் ஆதாரமுள்ளது. அன்னை ஆயிஷா(ரழி) நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் சென்று விட்டு, அவர்களுக்குத் தெரியாமலே விரைந்து வந்து ஒன்றும் நடவாதது போல் இருந்து விடப் பார்க்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கேட்ட போதும் “ஒன்றுமில்லை” என்றே பதில் கூறுகிறார்கள். இதிலிருந்தே பெண்கள் கப்ருகளுக்குச் செல்வதை நபி(ஸல்) அவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நன்கு தெரியவரும். நடந்ததைக் கூறியதும் நெஞ்சில் வேதனை ஏற்படும் அளவுக்கு அறைகிறார்கள் என்ற வாசகமும் கவனிக்கத்தக்கது.

இந்த ஹதீஸிலும் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்பதற்கு நேரடியான ஆதாரமும் இல்லை. சுற்றி வளைத்துக் கொண்டாவது அதற்கு ஆதாரம் உண்டா என்றால் அதுவுமில்லை. மாறாக கூடாது” என்று கருதத்தான் அதில் இடம் உண்டு.

மூன்றாவது ஆதாரம்

உபரியான ஆடைகள் இன்றி நபி(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த எனது வீட்டிற்கு போய்க் கொண்டிருந்தேன். (இங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பது) என கணவரும் என் தந்தையும் தான் என்று எனக்குள்ளே சொல்லிக் கொள்வேன், எப்போது உமர்(ரழி) அவர்கள் (நபி(ஸல்) அவர்கள் அருகே) அடக்கம் செய்யப்பட்டார்களோ என் ஆடைகளை வரிந்து கட்டிக் கொண்டு என் வீட்டில் நுழைவேன். உமர் அன்னியர் என்ற வெட்கத்தின் காரணத்தினால் (இவ்வாறு செய்வேன்)

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : அஹ்மத்

பெண்கள் ஜியாரத்தை ஆதரிப்போரின் மூன்றாவது ஆதாரம் இது. இந்த ஹதீஸில் ஆயிஷா(ரழி) எங்கேயும் ஜியாரத்திற்கு சென்றதாக குறிப்பிடப்படவே இல்லை. மாறாக அவர்கள் குடியிருந்த வீட்டிலேயே நபி(ஸல்) அவர்கள் வபாத்தானார்கள். அதிலேயே அடக்கமும் செய்யப்பட்டார்கள். அதன் பின்னரும் அன்னை ஆயிஷா(ரழி) அவ் வீட்டிலேயே வசித்தும் வந்தார்கள். அவர்கள் மரணிக்கும் வரை அந்த வீடு அவர்களுக்கே சொந்தமானதாகவும் இருந்தது.

அதனால் தான் அபூபக்கர் (ரழி) உமர்(ரழி) இருவருமே தங்களை நபி(ஸல்) அவர்களுக்கு அருகே அடக்கம் செய்ய ஆயிஷா(ரழி) அனுமதியைக் கோரினார்கள். ஆக இந்த ஹதீஸிலிருந்து ஆயிஷத(ரழி) தங்கள் சொந்த வீட்டிலேயே அன்னியராகிய உமர்(ரழி) அடக்கம் செய்யப்பட்டபின் தன் சொந்த தேவைகளுக்காக செல்லும் போதே வெட்க உணர்வுடன் தன்னை முழுமையாக மறைத்தவர்களாக சென்றுள்ளார்கள் என்றால் அன்னியர்களின் கபுருகளைத் தேடிச் சென்று தரிசிக்கும் பெண்களை என்னவென்பது?

இதையும் கூட நியாயப்படுத்த சிலர், நாங்கள் ஸாலிஹான அடியார்களின் கபுருகளை தேடித்தானே போகிறோம். இதிலென்ன தவறு?என்கிறார்கள். உமர்(ரலி) அவர்களை விட இவர்கள் தேடிச் செல்கின்றவர்கள் சிறந்தவர்கள் இல்லை. உமர்(ரழி) அவர்களை விட விஷயத்திலேயே அன்னை ஆயிஷா நடந்து காட்டியிருக்கும் விதம் பெண்கள் ஜியாரத்து கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.

ஆக இவர்களின் மூன்றாவது ஆதாரத்திலும் பெண்கள் ஜியாரத்து கூடாது என்பதற்கே ஆதாரம் உள்ளது.

நான்காவது ஆதாரம்

நீங்கள் கபுருகளை ஜியாரத்து செய்ய நான் ஏற்கனவே தடை விதித்திருக்கிறேன். இனி நீங்கள் கபுருகளை ஜியாரத் செய்யுங்கள். அறிவிப்பவர் : புரைதா(ரழி) நூல் : முஸ்லிம்

ஏற்கனவே அவர்கள் எடுத்து வைத்த வாதங்கள் அவர்களுக்கெதிராக மாறிவிடும் போது இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஜியாரத்து செய்ய ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான அனுமதி உண்டு என்று வாதிடுகின்றனர்.

பெண்களுக்கு ஜியாரத்து செய்வதை தடுக்கப்பட்டு தெளிவான பல ஹதீஸ்கள் வந்திருக்காவிட்டால் இவர்களின் இந்த வாதத்தில் நியாயமிருக்கும். ஆனால் தடை செய்து பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அவற்றை பின்னர் பார்ப்போம்.

இந்த ஹதீஸில் ஜியாரத்து செய்யுங்கள் என்று கூறிய அனுமதி பெண்களுக்கு கிடையாது என்பதை நமது ஆதாரங்களை எடுத்து வைக்கும் போது தெளிவாக்குவோம்.

ஐந்தாம் ஆதாரம்

பெண்களாகிய எங்களுக்கு ஜனாஸாவை பின் தொடர்ந்து தடுக்கப்பட்டிருந்தது. எங்கள் மீது கட்டாயமாகத் தடுக்கப்பட்டிருக்கவில்லை. அறிவிப்பவர் : உம்மு அதிய்யா(ரழி)

நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மது, இப்னுஜரீர், அபூயஃலா, தப்ரானி

இறுதி கட்டமாக இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்துக் கொண்டு அது கட்டாயமாகத் தடுக்கப்படவில்லை. அது பெரும் பாவமில்லை என்ற அளவிற்கு இறங்கி வருகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் பெண்களை தடுத்தார்கள் என்பது இந்த ஹதீஸில் உறுதியாகத் தெரிகிறது. அந்தத் தடை கடுமையானதாக இருக்கவில்லை என்று உம்மு அதிய்யா(ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் கடுமையாகவே பெண்கள் ஜியாரத்தை தடுத்திருக்கிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

உதாரணமாக “ஜியாரத்து செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் லஃனத்து செய்தார்கள் (சபித்தார்கள்)

இந்த ஹதீஸில் கடுமையாகவே நபி(ஸல்) அவர்கள் தடுத்தது தெளிவுபடுத்தப்படுகிறது. கடுமையாகத் தடுக்கப்படவில்லை என்பது உம்மு அதிய்யா(ரழி) அவர்களின் அபிப்பிராயம், ஆனால் நாம் எடுத்துக்காட்டிய ஹதீஸ் கடுமையாகத் தடை செய்ததை தெளிவாகச் சொல்கிறது. எனவே முரண்பாடு இல்லாத வகையில் , “நபி(ஸல்) அவர்க் தடுத்ததை உம்மு அதிய்யா(ரழி) சாதாரணத் தடை என்று புரிந்து கொண்டு விட்டார்கள்” என்று பொருள் கொள்வதே முறையானது.

மேலும் உம்மு அதிய்யா(ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கப்படும் ஹதீஸில், “நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது மதீனத்துப் பெண்களை அழைத்து வைத்துக் கொண்டு செய்த உபதேசத்தின் போது தான் மேற்கூறிய அந்தப் போதனையைச் செய்தார்கள்.

கடுமையான இல்லாமல் லேசாகத் தடுத்தது மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் நடந்தது.

ஆனால் “ஜியாரத் செய்யும் பெண்களை சபிக்கின்ற ஹதீஸை அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த புதிதில் அபூஹுரைரா(ரழி) முஸ்லிமாக ஆகவில்லை.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கும், கைபருக்கும் இடைப்பட்ட காலத்தில் தான் அபூஹுரைரா(ரழி) இஸ்லாத்தை தழுவுகிறார். (ஆதாரம் : அல்இஸாபா) (ஹுதைபிய்யா உடன்படிக்கை ஹிஜ்ரி ஆறாவது ஆண்டிலும், கைபர் போர் ஹிஜ்ரி ஏழாவது ஆண்டிலும் நடந்தன) ஹஜிரி ஆறுக்கும், ஏழுக்கும் இடையில் தான் அபூஹுரைரா(ரழி) இஸ்லாத்தை தழுவுகிறார்.

உம்மு அதிய்யா (ரழி) அவர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ் ஹிஜ்ரத் செய்த ஆரம்பத்தில் என்று அந்த ஹதீஸின் மற்ற அறிவிப்புகளில் காணப்படுகின்றது. அதாவது ஆரம்பத்தில் லேசாகத் தடுத்தார்கள். பின்னர் ஹஜிரி ஆறுக்குப்பின் அபூஹுரைரா(ரழி) இஸ்லாமாகும்போது, வன்மையாகத் தடுத்ததைக் காண்கிறார்கள். லஃனத் செய்ததைப் பார்க்கிறார்கள்.

இரண்டக்கும் முரண்பாடில்லாமல் ஆரம்பகாலத்தில் இலேசாகத் தடுக்கப்பட்டிருந்தது. பின்னர் பெண்கள் ஜியாரத்தின்போது நிதானம் தவறுவதைக் கண்டபோது, வன்மையாகத் தடுத்து விட்டனர்.

ஹதீஸ்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தி, சிலதை எடுத்துக் கொண்டு, சிலதை நிராகரிக்காமல், எல்லா ஹதீஸ்களையும் இணைத்து எதையும் மறுக்காமல் ஏற்பதே முறையானதாகும்.

உம்மு அதிய்யா(ரழி) அவர்களின் அந்த ஹதீஸை அப்படியே எடுத்துக் கொண்டாலும், ‘பெண்கள் ஜியாரத் கூடாது’ என்றே வருகின்றது. அல்லாஹ்வின் தூதர் இலேசாகத் தடுத்த காரியங்களை நாம் செய்ய வேண்டுமா? அதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள்.

ஆறாவது ஆதாரம்

பாத்திமா(ரழி) அவர்கள் தங்கள் சிறிய தந்தை ஹம்ஸா(ரழி) அவர்கள் கபுரை வாரந்தோறும் ஜியாரத்துச் செய்வார்கள்.

அறிவிப்பவர் : அலீஇப்னுல் ஹுஸைன் (ரழி) நூல் : பைஹகீ

இந்த ஹதீஸ் அறவே ஆதாரமற்றதாகும்.

ஏனெனில் பாத்திமா(ரழி) அவர்களைப் பார்த்திராத அவர்கள் காலத்தில் பிறந்திராத அலீ இப்னுல் ஹுஸைன்(ரழி) என்பவர் அறிவிக்கிறார். அதனால் இது “முன்கதிஃ” (தொடர்பற்ற ஹதீஸ்) என்று இமாம் பைகஹீ அவர்களே விமர்சிக்கிறார்கள்.

மேலும் பாத்திமா(ரலி) அவர்கள் ஜியாரத்துக்கு சென்றிருக்க மாட்டார்கள் என்ற கருத்துள்ள – பின்னால் நாம் எடுத்து வைக்கப் போகின்ற ஹதீஸுக்கும் இது முரணாக இருக்கின்றது. ஆக அவர்கள் எடுத்துவைத்த எல்லா ஆதாரங்களுக்கும் அவர்களின் கருத்துக்கே எதிராக அமைந்திருப்பதை சிந்தனையாளர்கள் உணரலாம்.

இனி பெண்களுக்கு ஜியாரத்து கூடாது என்பதற்காக ஆதாரங்களைப் பார்ப்போம்.

ஆதாரம் -1

“நபி(ஸல்) அவர்கள் கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை ‘லஃனத்’ செய்தனர்.

இது நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி. இந்த நபிமொழியை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்), இமாம் திர்மிதீ, இமாம் இப்னுமாஜா ஆகிய மூவரும் மூன்று வழிகளில் அறிவிக்கின்றனர். அபுஹுரைரா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி) ஹஸ்ஸான்(ரழி) ஆகிய மூன்று சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கின்றர். இந்த மூன்று ஹதீஸ்களையும் மேற்கூறிய மூன்று இமாம்களும் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இமாம் நஸயீ, இமாம் இப்னு ஹிப்பான் இருவரும், இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாகவும், அபூஹுரைரா(ரழி) அவர்கள் மூலமாகவும் இந்த நபி மொழியை அறிவிக்கின்றனர்.

இமாம் அபூதாவுது அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) மூலமாக இதை அறிவிக்கின்றனர்.

இத்தனை வழிகளில் அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான் நாம் மேலே எடுத்துக் காட்டிய ஹதீஸ்.

இந்த ஹதீஸில் இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாமல் பெண்கள் ஜியாரத் லஃனத்துக்கு உரியது. அதுவும் அல்லாஹ்வின் திருத்தூதரின் லஃனத்துக்கு உரியது என்பது தெளிவாக்கப்படுகிறது.

ஜியாரத் பெண்களுக்கு கிடையாது என்று கூறுவோரின் முதல் ஆதாரம் இது.

ஆதாரம் – 2.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து (யாரையோ) நல்லடக்கம் செய்தோம். வேலை முடிந்து திரும்பும் போது ஒரு பெண்மணி எங்களை முன்னோக்கி வந்தார். அருகே நெருங்கிய போது (நபி(ஸல்) அவர்களின் அன்பு மகளார்) பாத்திமா(ரழி) அவர்கள் தான் வந்து கொண்டிருந்தார்கள். “வீட்டைவிட்டு எங்கே புறப்பட்டு விட்டாய்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர்.

“இந்த மைய்யித்தின் குடும்பத்தினர் மீது அனுதாபப்பட்டேன். (அதனால் அங்கே சென்று ஆறுதல் கூறி வருகிறேன்) என்று பாத்திமா(ரழி) அவர்கள் கூறினார்கள்.

“நீ அவர்களுடன் கப்ருஸ்தானுக்குச் சென்றாயா?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டனர்.

அதற்கு பாத்திமா(ரழி) அவர்கள் “அல்லாஹ் காப்பாற்றுவானாக! நீங்கள் இதுபற்றி எவ்வளவோ கூறியிருப்பதை நான் செவியேற்றிருக்கும் போது (நான் எப்படிக் கபுருஸ்தானுக்குப் போவேன்) என்று கூறினார்கள்.

நீ மட்டும் அவர்களுடன் கபுருக்குச் சென்றிருந்தால் உன் தந்தையின் பாட்டன் சுவனத்தைப் பார்க்கும் வரை சுவர்க்கத்தை நீயும் பார்க்க முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இது பெண்கள் ஜியாரத்தை மிக வன்மையாகக் கண்டிக்கும் மற்றொரு ஹதீஸாகும். இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதை இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்), இமாம் நஸயீ, இமாம் அபுதாவூது, இமாம் நஸயீ, இமாம் இப்னு ஹிப்பான், இமாம் ஹாகிம் ஆகியோர் தங்கள் நூல்களில் பதிவு செய்து வைத்துள்ளனர். இதன் ‘ஸனது’ ஆதாரப்பூர்வமானது.

இந்த ஹதீஸில் பாத்திமா(ரழி) அவர்கள் கூறுகின்ற ” அல்லாஹ் காப்பாற்றுவானாக” நீங்கள் இதுபற்றி எவ்வளவோ கூறி இருப்பதை நான் செவியுற்றிருக்கும் போது (எப்படி கபுருஸ்தானுக்குப் போவேன்) என்ற சொற்றொடர் மிகவும் கவனிக்க வேண்டிய சொல்லாகும். கப்ரு ஜியாரத் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் அடிக்கடி சொல்ல, அதை பாத்திமா(ரழி) அவர்கள் கேட்டுள்ளார்கள் என்பதை இந்த சொற்றொடர் நமக்கு விளக்குகிறது.

“சுவர்க்கத்துக்குச் செல்வதையே தடுத்து விடக் கூடிய காரியம்” என்பதையும் இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தெளிவு படுத்துகின்றனர்.

ஆதாரம் -3

நபி(ஸல்) அவர்கள் ஒருமுறை வெளியே வரும்போது சில பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். “ஏன் இங்கே அமர்ந்துள்ளீர்கள்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “ஒரு ஜனாஸாவைப் எதிர்நோக்கி நாங்கள் காத்திருக்கிறோம்” என்று அந்தப் பெண்கள் கூறினார்கள்.

நீங்கள் (ஜனாஸாவைக்) குளிப்பாட்டப் போகிறீர்களா? அல்லது சுமந்து செல்லப் போகிறீர்களா? அல்லது கப்ரில் ஜனாஸாவை அடக்கம் செய்யப் போகிறீர்களா? என்று மூன்று கேள்விகளை நபி(ஸல்) அவர்கள் கேட்ட போது, “இல்லை” என்று அந்தப் பெண்கள் கூறினார்கள். (இதெல்லாம் செய்ய அனுமதி இல்லாத போது, நீங்கள் ஜனாஸாவைப் பின்பற்றிச் சென்றால்) பாவத்தைச் சுமந்தவர்களாகவும், எந்தக் கூலியும் பெறாதவர்களாகவும் திரும்பிச் செல்லுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸை இப்னுமாஜா, பைகஹீ, இருவரும் அலி(ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கின்றனர். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய தீனார் இப்னு உமர் என்பவர் பற்றி ‘அஸ்தீ’ அவர்கள் ‘விடப்படத்தக்கவர்’ என்று கூறி இருந்தாலும், பல ஹதீஸ் கலை வல்லுனர்கள் அவர் நம்பகமானவர் என்றே குறிப்பிடுகின்றனர். இமாம் வகீஃ, இப்னு ஹிப்பான் போன்றவர்கள் இவரை நம்பகமானவர் என்று கூறுகின்றனர். மேலும் ஏற்கனவே கூறப்பட்டுள்ள இரண்டு ஹதீஸ்களின் கருத்தை உறுதி செய்யக்கூடியதாக இந்த ஹதீஸ் அமைந்துள்ளது.

மேற்கூறிய ஹதீஸ்கள் மூலம் பெண்கள் கபுருகளை ஜியாரத்து செய்வது கூடாது என்பது தெளிவாகிறது. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே அந்தத் தடை உணர்த்தப்படுகின்றது.

இன்று கபுரு ஜியாரத்து என்ற பெயரால் நடைபெறும் அனாச்சாரங்கள் இணைவைத்தல்கள், ஒழுக்கச் சீர்கேடுகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது இதற்கு மூலகாரணமாகப் பெண்களே இருக்கிறார்கள். அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் பெண்களின் இயல்பைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஜியாரத்துச் செய்ய அனுமதி மறுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் பெண்கள் ஜியாரத்து செய்யலாம் என்று கருத்துத் தெரிவித்த மிகச் சில அறிஞர்கள் கூட இன்றைய சூழ்நிலையில் கூடாது என்றே குறிப்பிட்டுள்ளனர். அவர்களின் காலத்திலேயே கூடாது என்றால் அதை விடவும் மோசமான இன்றைய காலத்தில் அது எப்படி அனுமதிக்கப்படும்?

மொத்தத்தில் நபி(ஸல்) அவர்களின் சாபத்திற்கும் நரகம் செல்வதற்கும் காரணமாக இருக்கின்ற பெண்கள் ஜியாரத்து கட்டாயம் தடுக்கப்பட வேண்டிய – தவிாக்கப்பட வேண்டியது தான் என்பதில் சந்தேகம் இல்லை.

-P. ஜைனுல் ஆபிதீன்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.