இறைவனுக்கு இணை வைத்ததினால், இறுதித் தூதரின் பெற்றோருக்கும் நரகமே!

இந்த உலக மக்கள் நேர்வழி பெற்று மறுமையில் வெற்றியடைந்து சுவர்க்கச் சோலையில் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்பதற்காக இறைவனால் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த நபியின் பெற்றோர்களின் மறுமை நிலை என்ன என்பதைப் பற்றி நாம் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

ஏன் என்றால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த நபியவர்கள் முதன்மையாக இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாக லா இலாக இல்லல்லா முஹம்மதுன் ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபியவர்கள் இறைவனின் தூதராவார் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தார்கள்.

இந்தக் கொள்கையில் யார் உடன் படுகிறார்களோ அவா்கள் முஸ்லீம்கள் என்றும் யார் இதற்கு மாறு செய்கிறார்களோ அவா்கள் காபிர்கள் – மறுத்தவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.

இந்த வகையில் நபியின் காலத்திற்கு அதாவது நபியவர்கள் தங்களை இறைவனின் தூதர் என்று பிரச்சாரம் செய்வதற்கு முன்பாகவே நபியுடைய தாயும் தந்தையும் மரணித்துவிட்டார்கள். இந்த இருவரினுடையவும் மறுமை நிலை என்ன  என்பதைப் பற்றி ஆய்வதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.

நபியைப் பிள்ளையாய்ப் பெறுவதே சுவர்க்கம் செல்லப் போதுமானதா?

ஒருவர் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்றால் இஸ்லாம் காட்டிய அடிப்படையில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி அவனுக்கு யாரையும் இணையாக்காமல், அவனுடைய தூதரை ஏற்றுக் கொண்டு அவா் காட்டிய வழிப்பிரகாரம் வாழ வேண்டும் இதற்கு மாற்றமாக வாழ்ந்தால் அவா் நரகத்திற்குறியவராக ஆகிவிடுவார்.

இந்த வகையில் நபி இப்றாஹீம் அவா்களுடைய தந்தை ஆஸர் அவா்களைப் பற்றி இறைவன் சொல்லும் செய்தியைப் பார்த்தால் இதன் முழுத்தகவல் அழகாக புரிந்து விடும்.

சிலைகளை கடவுல்களாக நீர் கற்பனை செய்கிறீரா? உம்மையும், உமது சமூகத்தையும் தெளிவான வழிகேட்டில் இருப்பதாகவே நான் கருதுகிறேன் என்று இப்றாஹீம் தன் தந்தை ஆஸரிடம் கூறியதை நினைவுட்டுவீராக ! (திருக்குா்ஆன்6:74)

இப்றாஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவேஅவர் அல்லாஹ்வின் எதிரி என்று அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்றாஹீம் பணிவுள்ளவர் சகிப்புத் தன்மை உள்ளவர். (திருக்குா்ஆன்9:114)

மேற்கண்ட இரண்டு வசனங்களும் நபி இப்றாஹீம் அவா்களின் தந்தை ஆஸர் காபிராக நரகத்தில் நுழைந்தார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

நபியுடைய தந்தையாக இருந்தாலும் அவர் ஏக இறைவனுக்கு இணை வைக்காமல், அவனை மாத்திரம் வணங்கி அவனுடைய தூதருக்கு கட்டுப்பட்டு நடந்தால் மாத்திரமே அவருக்கு சுவர்க்கம் கிடைக்குமே தவிர, நபிமார்களைப் பெற்றெடுத்தார்கள் என்பதற்காக நபிமார்களின் பெற்றோருக்கு இறைவன் சுவர்க்கத்தை தரமாட்டான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நபியின் பெற்றோர் எந்த நபியைப் பின்பற்றினார்கள்?

நபி (ஸல்) அவா்கள் தூதராக அனுப்பப் படுவதற்கு முன்பு மரணித்த நபியின் தாயும், தந்தையும் எந்த மார்க்கத்தைப் பின்பற்றினார்கள்? எந்த மார்க்கத்தையும் பின்பற்றவில்லை என்றால், அவர்களின் நிலை என்ன அவா்களுக்கு என்ன தீர்பு சொல்லப்படும் என்பது போன்ற விஷயங்கள் மக்கள் மத்தியில் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது.

நபியவர்களுக்கு முன் வாழ்ந்த நபி (ஸல்) அவா்களின் போதனைகள் கிடைக்கப்பெறாத நபியின் பெற்றோர்களின் சமுதாயத்திற்கென்று எந்த நபிமார்களும் அனுப்பப்படவில்லை. ஆனாலும் அவா்கள் வாழ்ந்த காலத்தில் இறைவனுக்கு இணை வைக்காமல் வாழ்ந் ஒரு கூட்டத்தினர் இருந்தார்கள் அவா்கள் தான் ஸாபியீன்கள்.

நம்பிக்கை கொண்டோர்,யூதர்கள்,கிறித்தவர்கள்,மற்றும்ஸாபியீன்களில்அல்லாஹ்வையும்,இறுதி நாளையும்நம்பி,நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.  (திருக்குர்ஆன் 2:62)

நம்பிக்கை கொண்டோர்,யூதர்கள்,ஸாபியீன்கள்,மற்றும் கிறித்தவர்களில் அல்லாஹ்வையும்,இறுதி நாளையும்நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.  (திருக்குர்ஆன் 5:69)

நம்பிக்கை கொண்டோரும்,யூதர்களும்,ஸாபியீன்களும்,கிறித்தவர்களும்,நெருப்பை வணங்குவோரும்,இணை கற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.   (திருக்குர்ஆன் 22:17)

மேற்கண்ட வசனங்கள் ஸாபியீன்கள் என்றொரு பிரிவினர் வாழ்ந்தனைநமக்குத் தெளிவுபடுத்துகிறது.

ஸாபியீன்கள் நல்லவர்களா? நரகவாதிகளா?

ஸாபியீன்கள் என்று சொல்லப்படக் கூடியவர்கள் நபியின் காலத்திற்கு முன்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆனால் நபியவர்கள் எந்தக் கொள்கையை சொன்னால்களோ அந்தக் கொள்கைக்கு ஒப்பானவர்களாகத் தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது நாம் புரிந்து கொள்ள முடியும்.

ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத காலத்தில் வாழ்ந்த போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது ஹதீஸ்களை நாம் ஆய்வு செய்யும் போதுதெரிய வரும் உண்மையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிறைக் கொள்கையைச் சொன்ன போது அவர்களை இறைத் தூதர் என்று நம்பாத நபிகள் நாயகத்தின் எதிரிகள்நபியவர்களுக்கு ஸாபிஇ என்றே பெயர் வைத்து அழைத்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒரு பயணத்தில் தண்ணீர் கிடைக்காத போது தமது தோழர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தண்ணீர்க் குடத்துடன் ஒரு பெண் செல்வதைக் கண்டு நபிகள் நாயகத்திடம் அவளை அழைத்தனர்.அதற்கு அந்தப் பெண் ஸாபியீ என்று சொல்லப்படும் அந்த மனிதரிடமா என்று கேட்டாள். அதற்கு நபித்தோழர்கள் ஆம் அவரிடம் தான் என்று கூறினார்கள். இது நீண்ட ஹதீஸின் ஒரு பகுதியாகும். (பார்க்க : புஹாரி 344)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்றைய மக்களால் ஸாபிஈ என்று தான் அறியப்பட்டிருந்தார்கள் என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் மறுக்கவில்லை என்ப்தையும் மேற்கண்ட ஹதீஸில்இருந்து நாம் அறியலாம்.

ஸாபிஈ என்ற வார்த்தை நல்ல மனிதர்களை அதாவது காபிர்களின் பார்வையில் சிலைகளை வணங்காதவர்களை குறிப்பதற்காகவே கையாளப்பட்டுள்ளது இது தீய கொள்கை உடையவர்களைக் குறிப்பதாக இருந்தால் நபித் தோழர்கள் அந்தப் பெண்ணிடம் குறிப்பிட்ட வார்த்தை பற்றிஆட்சேபணை செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாமல் அதை ஏற்றுக் கொல்கிறார்கள் எற்றால் கண்டிப்பாக ஸாபிஈ என்ற வார்த்தை இணை வைக்காதவர்களை குறிப்பதாகத் தான் இருந்திருக்கிறது என்பதை நாம் அறிய முடியும்.

அபூதர்(ரலி)அவர்கள் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்தும் கேள்விப்பட்டு மக்கா வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இரகசியமாகச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் மக்காவில் இருந்த சிலை வணங்கிகளிடம் சென்று வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் நம்புகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். உடனே மக்காவின் சிலை வணங்கிகள்இந்த ஸாபியீ யை அடியுங்கள் எனக் கூறி தாக்கினார்கள்.(புஹாரி 3522)

பல கடவுல் கொள்கையை மறுத்து தூய இஸ்லாமியக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மக்கத்துக் காபிர்கள் வைத்த பேர் ஸாபியீ என்பதாகும். அதனால் தான் அபூதர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிவித்த நேரம் இந்த ஸாபியீயை அடியுங்கள் என்று சொல்லித் தாக்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்படும் முன் கற்சிலைகளை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளைத் தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறைத் தூதர்கள் வழியாகத் தான் அறிய இயலும். இதைத் தவிர மற்ற விஷயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள்.

இன்றைக்கும் இறைத்தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலாம். அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்.

நபியின் பெற்றோர் ஸாபியீன்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவா்களின் தாயும், தந்தையும் ஸாபியீன்களாக இருந்தால் கண்டிப்பாக அவர்கள் நல்லவர்கள் பட்டியலி்ல் சேர்ந்துவிடுவார்கள் ஆனால் ஹதீஸ்களைப் பார்க்கும் போது நபியவர்களின் பெற்றோர் ஸாபியீன்களாகவும் இருக்கவில்லை என்பதும் காபிர்களா – ஏக இறைவனை மறுத்தவர்களாகத்தான் இருந்தார்கள் என்பதும் தெரியவருகிறது.

நபியின் பெற்றோர் நரகவாதிகளே !

நபி (ஸல்) அவா்களின் பெற்றோர் காபிர்கள் – இறை மறுப்பாளர்கள் என்று நாமாக நமது சொந்தக் கருத்தையோ, அல்லது கற்பனைக் கதையையோ குறிப்பிடவில்லை.

தனது தாய், தந்தையர் நரகவாதிகள் என்று நபியவர்களே தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்),அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில் என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோதுஅவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து,என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)என்று கூறினார்கள்.(முஸ்லிம் – 347)

மேற்கண்ட செய்தியில் தனது தந்தையின் நிலை பற்றி ஒருவர் நபியிடம் கேட்கிறார், அவருடைய தந்தை நரகத்தில் இருப்பதாக நபியவர்கள் சொன்னவுடன் அவர் திரும்பிச் செல்கிறார் அப்போது அவரை மீண்டும் அழைத்த நபியவர்கள் என் தந்தையும் (அப்துல்லாஹ்) உன் தந்தையும் நரகத்தில் இருக்கிறார்கள் என்று தனது தந்தையும் நரகத்தில் தான் இருக்கிறார் என்ற தகவலை குறிப்பிட்ட நபரிடத்தில் தெரிவித்து ஆறுதல் படுத்தி அனுப்புகிறார்கள்.

நபியின் தந்தை நரகத்தில் தான் இருக்கிறார் என்பதற்கு நேரடியான சான்றாக மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர்.அப்போது அவர்கள்,நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே,அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில்,அவை மரணத்தை நினைவூட்டும்!என்று கூறினார்கள். (முஸ்லிம் – 1777)

நபியவர்கள் மரணித்த தன் தாய்க்காக பாவ மன்னிப்புக் கோர இறைவனிடம் அனுமதி கேட்கிறார்கள், இறைவன் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்று மேற்கண்ட செய்தி சொல்கிறது. நபியின் தாய் முஸ்லிமாக இருந்திருந்தால் இறைவன் நபியின் தாய்க்காக பாவ மன்னிப்பு கேட்பதை ஆகுமாக்கியிருப்பான். அவர்கள் இணைவைத்து, குப்ரிய்யத்தில் இருந்ததினால் தான் அவா்களுக்காக பாவ மண்ணிப்புக் கேட்பதற்கு இறைவன் அனுமதி கொடுக்கவில்லை. என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

ஏன் என்றால் யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாறோ அவருக்காக நாம் பாவ மன்னிப்புக் கோர முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் தெளிவான நிலைபாடாகும்.

உங்களைவிட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதைவிட்டும் நாங்கள் விலகியவர்கள், உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டுவிட்டது. என்று தமது சமுதாயத்திடம் கூறிய விஷயத்தில் இப்றாஹீமிடமும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று இப்றாஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை)எங்கள் இறைவா ! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. (திருக்குா்ஆன் 60-4)

இப்றாஹீம் நபியவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் நாம் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்ட இறைவன், தனது தந்தைக்காக இப்றாஹீம் நபியவர்கள் பாவ மன்னிப்புத் தேடியதை மாத்திரம் தடை செய்கிறான். காரணம் இப்றாஹீம் நபியின் தந்தை தெளிவான குப்ரில் – இறை நிராகரிப்பில் இருந்தார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள்,நான் உங்களிடம்,எனக்கு மாறுசெய்ய வேண்டாம் என்று கூற வில்லையா?என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை,இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள்,இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ்இப்ராஹீம் அவர்களிடம்,நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் (ஹராமாக்கி விட்டேன்)என்று பதிலளிப்பான்.பிறகு இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பாருங்கள்என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது,அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும். (புகாரி – 3350)

மேலே உள்ள செய்தியில் இறை மறுப்பாளர்களுக்கு இறைவன் சுவர்க்கத்தை தடை செய்துவிட்டதாகவும் அதனால் தான் இப்றாஹீம் நபியின் தந்தைக்கும் நரகம் விதிக்கப் பட்டதாகவும் குறிப்பிடுகிறான்.

நீர் இணை கற்பித்தால் உனது நல்லறம் அழிந்துவிடும். நீர் இழப்பை அடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக ! நன்றி செலுத்துவோரில் ஆவீராக ! என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குா்ஆன் 39:65)

யாராக இருந்தாலும், அது நபிமார்களாகவே இருந்தாலும் இறைவனுக்கு இணை வைத்தால் அவா்களின் நன்மைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு அவா்கள் நரகத்தில் தான் நுழைவிக்கப்படுவார்கள் என்பதை மேற்கண்ட திருமறை வசனம் நமக்கு அறிவிக்கிறது.

நபி (ஸல்) அவா்களின் தந்தை அப்துல்லாஹ் அவா்களும், நபியவர்கள் தாயார் ஆமினா அவா்களும் இஸ்லாமிய அடிப்படையான ஏகத்துவத்திற்கு மாற்றமாக இறை நிராகரிப்பில் இருந்ததினால் இப்றாஹீம் நபியவர்களின் தந்தை ஆஸரைப் போல் நபியின் பெற்றோரும் நரகத்திற்குறியவர்கள் தாம் என்பது திருமறைக் குா்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இருந்து நமக்குத் தெரியவரும் தெளிவான நிலைபாடாகும்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.