வட்டி என்ற சமுதாயக் கொடுமை!

உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமான இஸ்லாம் மனிதனின் அனைத்துத் தேவைகளையும் அறிந்த இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்.

நாம் வாழும் காலத்தில் நமக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் மாத்திரம் தான் இருக்கிறது.நமது அன்றாடப் பிரச்சினைகள்,குடும்பம் தொடர்பானவைகள், சமுதாயப் பிரச்சினைகள் என்று அனைத்தையும் அலசும் ஒரே கொள்கை இஸ்லாமிய கொள்கை மாத்திரம் தான் என்பதில் எல்லளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

அந்த அடிப்படையில் மனிதனை பல வழிகளிலும் கெடுத்து நரகில் தள்ளுவதற்கு துணை நிற்கும் செல்வம் பற்றிய தெளிவான ஒரு கண்ணோட்;டத்தையும் இஸ்லாம் நமக்குத் தருகிறது.

இஸ்லாம் சொல்லும் பொருளாதராக் கொள்கைகளில் நாம் சரியாகப் புரிய வேண்டிய மிக முக்கியமான விஷயம் தான் வட்டி தொடர்பான இஸ்லாமிய நிலைபாடு. நரகத்திற்கு நிரந்தர இடத்தை பெற்றுத் தரும் இந்த வட்டிக் கொடுமை பற்றிய அனைத்து விதமான விளக்கங்களையும் நாம் இந்தத் தொடரின் மூலம் சுறுக்கமான தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கிறோம்.

வட்டியின் விபரீதம் என்ன? வட்டியில் சின்ன வட்டி, பெரிய வட்டி என்று பிரிப்பதற்கு ஏதும் முகாந்திரம் உண்டா? சின்ன வட்டி ஹழாலானது என்று ஒரு சிலர் வாதாடுகிறார்களே அதைப்பற்றிய உண்மை நிலை என்ன? வங்கி வட்டியின் நிலைபாட்டை இஸ்லாம் தடை செய்கிறதா? போன்ற கேள்விகளுக்கான தெளிவான பதில்களை இந்தத் தொடரில் நம்மால் முடிந்தவரை தெளிவுபடுத்த நினைக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

இந்தத் தொடரில் முதலாவதாக வட்டி பற்றி திருக்குர்ஆன் கூறும் தகவல்களை முதலில் பார்த்து விட்டு வட்டியைப் பற்றிய சட்டங்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

வட்டியை உண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது(ஹராமாக்கப்பட்டுள்ளது).

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (130) وَاتَّقُوا النَّارَ الَّتِي أُعِدَّتْ لِلْكَافِرِينَ (3:131)

நம்பிக்கை கொண்டோரே ! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்.அல்லாஹ்வை அஞ்சுங்கள் ! இதனால் வெற்றி பெருவீர்கள். ஏக இறைவனை மறுப்போருக்காகத் தயாரிக்கப் பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்(3:130,131)

வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்.

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275)

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)

வட்டி அழிக்கப்பட்டு, தர்மம் வளர்க்கப்படுகிறது.

يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ (2:276)

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான் நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.(2:276)

வட்டியை விடுபவருக்கு அதற்கு முன் சென்றவைகள் ஹழாலானதாகும்.

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ(2:275)

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.வியாபாரம் வட்டியைப் போன்றதே என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம்.அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துவிட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது.அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது.மீண்டும் செய்வோர் நரகவாசிகள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.(2:275)

வர வேண்டிய வட்டியை விடுபவரே முஃமினாவார்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ (2:278)

நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.(2:278)

வட்டியை விடாதவருடன் இறைவன் போர் பிரகடனம் செய்கிறான்.

فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ (2:279)

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்.நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.(2:279)

நபி(ஸல்)அவர்களின் வருகைக்கு முன்பே வட்டி தடை செய்யப்பட்டிருந்தது.

فَبِظُلْمٍ مِنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَنْ سَبِيلِ اللَّهِ كَثِيرًا (160) وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا (4:160.161)

யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும், வட்டியை விட்டும் அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களை தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்குத் தடை செய்தோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்கு துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.(4:160,161)

வட்டி செல்வத்தை பெருக்காது, ஸக்காத் செல்வத்தைப் பெருக்கும்.

وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَ فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُو عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الْمُضْعِفُونَ (30:39)

மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஸக்காத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.(30:39)

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் வட்டியின் விபரீதங்கள் பற்றி குறிப்பிடப்படுபவைகள். வட்டியை இறைவன் தடை செய்ததாகக் குறிப்பிடும் வசனங்களை மாத்திரம் நாம் பார்த்தோம்.

வட்டியைப் பற்றி சரியாக தெளிவு படுத்தாமல் நபியவர்கள் மரணித்தார்களா?

அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூஜுஹைஃபா அவர்கள்) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிட்டார்கள்). (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள். வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!” என்று பதிலளித்தார்கள். (புகாரி – 2086,2238)

மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் வட்டி கொடுப்பதை தடை செய்தார்கள் என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன், உண்ணக் கொடுப்பவன், எழுதுபவன், சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்)சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் – 2995)

வட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.

பெரும்பாவங்களில் ஒன்று.

அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது,வட்டியைப் புசிப்பது, அநாதைகüன் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.( புகாரி – 6857)

ஏழு வகையான பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும்படி சொல்லும் நபியவர்கள் அந்த பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டியை உண்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.

வட்டியை உண்பது பெரும்பாவம் என்றால் பெரும்பாவம் செய்தவன் நரகம் செல்வான். ஆக வட்டியை உண்பவனுக்கு நேரடியாக நரகம் கிடைக்கும் என்பது மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தியாகும்.

 

வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவு படுத்தவில்லையா?

நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்டவர்களில் இரண்டாவது கலீஃபாவாக இருந்த உமர்(ரலி)அவர்கள் தமது ஜும்மா உரை ஒன்றில் நபியவர்கள் வட்டியைப் பற்றி தெளிவாக விளக்கம் தரவில்லை என்று சொன்னதாக ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்த படி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள்

மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருட்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக் கூடியதாகும்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு.

1.ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்

2.கலாலா என்றால் என்ன?

3.வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம்.(புகாரி – 5588)

சின்ன வட்டி கூடும், வட்டிப் பணத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்யலாம் போன்ற நரகத்திற்குறிய பத்வாக்களை கொடுக்கும் சிலரும், மத்ஹபு, பிக்கு கிதாபுகளை மார்க்கமாக்கியிருக்கும் சிலரும் வட்டியை ஹழாலாக்குவதற்கு இந்த செய்தியைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

நபியவர்கள் வட்டியைப் பற்றி சரியான ஒரு தெளிவை நமக்குத் தரவில்லை என்று உமர்(ரலி)அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள் ஆக நபியவர்கள் சரியாக தெளிவு படுத்தாத ஒன்றுக்கு நாம் சரியாக தீர்ப்பு சொல்ல முடியாது.என்று போலிக் காரணம் கூறி இவர்கள் தப்பித்துவிடப் பார்க்கிறார்கள்.

ஆனால் இவர்களின் இந்தத் தீர்ப்பு மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.

உமர்(ரலி)அவர்களை காப்பாற்றப் போய் மார்க்கத்தைப் பொய்யாக்கும் போக்கை இவர்கள் கையால்கிறார்கள்.

அதாவது வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவான ஒரு முடிவைத் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று உமர்(ரலி)அவர்கள் கூறியது அவர்களுக்கு வட்டியைப் பற்றி தெரியாத காரணத்தினால் தானே தவிர நபியவர்கள் மார்க்கத்தை தெளிவுபடுத்தாமல் விடவில்லை.

நபிவயவர்கள் வட்டியைப்பற்றி தெளிவு படுத்தாமல் சென்று விட்டார்கள் என்று யாராவது கூறினால் அவர் மார்க்கத்தை குறை கூறிய குற்றத்திற்கு ஆளாகிவிடுவார், குர்ஆனைப் பொய்ப்பிக்கிறார் என்று அர்த்தமாகிவிடும்.

அல்லாஹ் நபியவர்களைப் பார்த்து தனது திருமறைக் குர்ஆனில் மார்க்கம் பூரணப்படுத்தப் பட்டுவிட்டதாக குறிப்பிடுகிறான்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன்.(5:3)

மார்க்கம் முழுமைப் படுத்தப் பட்டுவிட்டது என்பதும் வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவுபடுத்தவில்லை என்பதும் இரண்டும் ஒன்றுக்கொன்று முரனானதாகும்.

திருக்குர்ஆன் கூறுவதைப் போல் மார்க்கம் முழுமைப்படுத்தப் பட்டிருந்தால் வட்டியைப் பற்றி கண்டிப்பாக நபியவர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள்.

உமர்(ரலி)அவர்கள் கூறுவதைப் போல் வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவு படுத்தவில்லை என்றிருந்தால் மார்க்கம் பூரனமாகவில்லை என்ற கருத்து வந்துவிடும்.

இந்த இரண்டு கருத்துக்களில் முதல் கருத்துத் தான் ஈமானைப் பாதுகாக்கக்கூடியதும் மார்க்கத்தை தெளிவு படுத்தக் கூடியதுமான கருத்தாக இருக்கிறது அதாவது மார்க்கம் பூரணமானதாகத் தான் இருக்கிறது.உமர்(ரலி)அவர்களுக்கு வட்டியைப் பற்றிய செய்திகள் தெறியாமல் இருந்திருக்கிறது.

உமர்(ரலி)அவர்களுக்கு வட்டியைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று சொல்வதற்கு மனதில் இடமில்லாமல், உமர்(ரலி)அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மார்க்கத்தை பொய்ப்பிக்கத் துணிகிறார்கள்.

அப்படியென்றால் உமர்(ரலி)அவர்கள் மார்க்கத்தை பொய்ப்பித்தார்களா? என்ற ஒரு கேள்வியை எதிர்த் தரப்பார் முன்வைக்கிறார்கள்.

உமர்(ரலி)அவர்கள் மார்க்கத்தை பொய்ப்பிக்கவில்லை, ஆனால் வட்டியைப் பற்றி செய்தி அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது அவருக்கு வட்டியைப் பற்றிய செய்திகள் தெரியாத காரணத்தினால் அவர் சொன்ன ஒரு கருத்துக்கு நாம் வக்காலத்து வாங்கி நாளை நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.

ஸஹாபாக்களைப் பொருத்தவரை அவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டார்கள் அல்லாஹ்வும் அவர்களை ஏற்றுக் கொண்டான். ஆதனால் உமர்(ரலி)பற்றிய தீர்ப்பு இறைவனுக்கே உரியது.நாம் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

ஆனால் நாம் மேற்கண்ட உமர் (ரலி)அவர்களின் கருத்தை எடுத்து செயல்பட முடியாது.செயல்படவும் கூடாது.

ஏன் என்றால் நபியவர்கள் மிகத் தெளிவாக வட்டியைப் பற்றி நமக்கு சொல்லித் தந்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார்கள்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள்பர்னீ எனும் (மஞ்சளான, வட்டவடிவமான) உயர்ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள்.அவர்களிடம்இது எங்கிருந்து கிடைத்தது? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.அதற்கு பிலால் (ரலி) அவர்கள், என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது நபி (ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாஉவைக் கொடுத்து அதில் ஒரு ஸாஉ வாங்கினேன்! என்றார்கள்.அப்போது நபி (ஸல்) அவர்கள், அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! இனி இவ்வாறு செய்யாதீர்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழத்தை மற்றொரு வியாபாரத்தின் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக!” என்றார்கள். (புகாரி –2312)

வட்டியென்றால் என்னவென்பதைப் புரிந்து கொள்வதற்கான மிக அழகான ஒரு சம்பவம் நபியவர்கள் இது வட்டியேதான் இது வட்டியேதான் என்று சொல்லிவிட்டு இனிமேல் இவ்வாறு செய்யாதீர் என்று குறிப்பிடுகிறார்கள். இதைவிட வட்டியைப் பற்றி தெளிவு வேண்டுமா என்ன?

வட்டியுடன் தொடர்பு ஏற்படும் சந்தர்ப்பங்கள்.

வட்டி பற்றிய விபரீதங்களைப் பார்த்து வருகிறோம். இந்தத் தொடரில் பொருளுக்குப் பொருளை மாற்றிக் கொள்ளும் வழிமுறை பற்றி ஆராய்வோம்.

நமது காலத்தில் பணத்தைக் கொடுத்து பொருளை வாங்குவது போல் நபியவர்களின் காலத்தில் பொருளைக் கொடுத்து பொருளை வாங்கும் வழி முறை இருந்தது.அந்த வழிமுறையில் பொருளைக் கொடுத்து பொருளை வாங்கும் போது எந்த நடை முறையைக் கையாள வேண்டும் என்று நபியவர்கள் மிகத் தெளிவாக நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

நபியவர்களின் இந்த வழிகாட்டுதல் வட்டி பற்றிய எச்சரிக்கையை மேலும் அழகாக தெளிவுபடுத்துவதாக இருக்கிறது.

ஒரு நேரத்தில் ஒரே விதமான பொருளை மாற்றினாலும் சமனாகத்தான் மாற்ற வேண்டும்.

அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும் அதை ஒரு ஸாஉக்கு இரண்டு ஸாஉ என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம்.அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஒரு ஸாஉக்கு இரண்டு ஸாஉம் கூடாது இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது! என்று கூறினார்கள்.(புகாரி :2080)

மேற்கண்ட செய்தியிலே நபி(ஸல்)அவர்கள் மிக முக்கியமான ஒரு தகவலை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்கள்.ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் ஸஹாபாக்கள் பேரிச்சம் பழங்களை விற்பனை செய்து வந்தார்கள்.அதாவது ஒரு ஸாவு நல்ல பேரிச்சம் பழத்தை பெற்றுக் கொள்வதற்காக இரண்டு ஸாவு பேரிச்சம் பழத்தை ஸஹாபாக்கள் கொடுப்பார்கள்.

இந்தத் தகவல் நபியிடத்தில் வரும் போது நபியவர்கள் அதனைத் தடுக்கிறார்கள். ஒரு ஸாவுக்காக இரண்டு ஸாவு கொடுக்கவும் கூடாது.இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது என்று கூறுகிறார்கள்.

இந்தச் செய்தியில் நமக்குத் தெரியவருவது என்னவெனில், பொருளுக்குப் பொருளை மாற்றிக் கொள்ளும் போது எக்காரணம் கொண்டும் ஒன்றை விட ஒன்றை அதிகமாக எடுக்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது.

ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக எடுத்தாலோ கொடுத்தாலோ அது வட்டியாக மாறிவிடும்.

பொருளுக்குப் பொருள் மாற்றுவதுதான் ஹராமே ஒழிய பணத்தைக் கொடுத்து பொருள் வாங்குவதில் தவறு இல்லை.

தங்கத்திற்கு வெள்ளியை மாற்றிக்கொள்வது, உடனுக்குடன் மாற்றிக்கொண்டாலே தவிர, வட்டியாகும்! தீட்டிய கோதுமைக்குத் தீட்டிய கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும் உடனுக்குடன் மாற்றிக்கொண்டாலே தவிர! பேரீச்சம் பழத்திற்குப் பேரீச்சம் பழத்தை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும் உடனுக்குடன் மாற்றிக்கொண்டாலே தவிர! வாற்கோதுமைக்கு வாற்கோதுமையை மாற்றிக்கொள்வதும் வட்டியாகும் உடனுக்குடன் மாற்றிக்கொண்டாலே தவிர!

அறிவிப்பவர் : உமர் (ரலி) அவர்கள்,நூல் : புகாரி : 2134

ஒரே பொருளாக இருந்தால் அதே அளவுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.அதிகப்படுத்தினால் அது வட்டியாக மாறிவிடும்.உடனுக்குடன் மாற்றினாலும் வட்டிதான்.

இதே நேரம் வேறு, வேறு பொருளாக இருந்தால் உடனுக்குடன் மாற்றிக் கொள்ள வேண்டும். தவணை போடக் கூடாது. தவணை போட்டால் அது வட்டியாக மாறிவிடும்.

அதைத் தான் மேற்கண்ட செய்தியின் மூலம் நபியவர்கள் தெளிவு படுத்துகிறார்கள்.

மேலே உள்ள செய்தி நமக்கு இரண்டு விஷயங்களை தெளிவு படுத்துகிறது.

முதல் விஷயம் :பொருட்கள் வேறு வேறாக இருந்தால் உடனுக்குடன் மாற்றிக் கொள்ள முடியும். தவணை போடக் கூடாது தவணை போட்டால் அது வட்டியாக மாறிவிடும்.

இரண்டாவது விஷயம் :ஒரே பொருளாக இருந்தால் உடனுக்குடன் மாற்றினாலும் பொருளில் கூடுதல் குறைவு ஏற்படக் கூடாது.தவணை வைத்தாலும் கூடுதல் குறைவு ஏற்படக் கூடாது. ஏற்பட்டால் அது வட்டியாக மாறிவிடும் என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக்கொள்ளுங்கள்.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,(நூல் : புகாரி :2175)

ஒரே வகையான பொருட்களாக இருந்தால் சரிக்கு சரியாக இருக்க வேண்டும். வேறு வேறு பொருட்களாக இருந்தால் அவற்றை விரும்பிய படி விற்கலாம்.என்று இந்தச் செய்தி கூறுகிறது.

ஆனால் வேறு வேறு பொருளாக இருந்தால் அவை தவனை முறையில் இருக்கக் கூடாது. உடனுக்குடனாகத் தான் இருக்க வேண்டும்.என்று ஏற்கனவே சொல்லப்பட்ட செய்தியில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

தவணை என்றாலே வட்டி சேர்ந்து விடும்.

தவணை போட்டு நாம் எந்த ஒரு பொருளைக் கொடுத்தாலும் அதில் வட்டி சம்பந்தப்படுவதைப் பார்க்களாம். உதாரணம் ஒரு பொருளை நாம் உடனே பணம் கொடுத்து வாங்கினால் 1லட்சம் ரூபாய் என்றால் அதை 3மாதம் அல்லது 6மாதம் என்று தவணை போட்டு வாங்கும் போது 1 லட்சத்து ஐம்பதாயிரம் கொடுக்க வேண்டியேற்படுகிறது.

அப்படி தவணை முறைப்படி கொடுப்பதினால் நாம் எடுத்த பணத்தை விட அதிகமாக கொடுக்க நேரிட்டால் அது தெளிவான வட்டியாகும்.

கடனில் தவிர வேறெதிலும் வட்டி ஏற்படாது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(நூல் : புகாரி 2179)

கடனைப் பொருத்தவரை அது பெரும்பாலும் தவணை வைத்துக் கொடுக்கப்படுகிறது. தவணையாக நாம் கடன் கொடுத்தால், நாம் கொடுத்த தொகையை விட அதிகமாக எடுக்கக் கூடாது அப்படி எடுத்தால் அது வட்டியாகிவிடும்.

பெரும்பாலும் கடனில் வட்டி சேர்வது இப்படித்தான் இதைத் தான் நபியவர்கள் விளக்கமாகவும், மிக அழகாகவும் கடனில் தவிர வேறெதிலும் வட்டி ஏற்படாது என்று கூறுகிறார்கள்.

வட்டி பற்றி மார்க்கத்தில் மிகத் தெளிவாக விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.

வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவு படுத்தவில்லை என்று உமர்(ரலி)அவர்கள் தவறாக சொன்னதை ஆதாரமாக எடுத்து வைத்து நபியவர்கள் வட்டியைத் தெளிவு படுத்தவில்லை என்று சொல்பவர்கள் வட்டியைப்பற்றி மேற்கண்ட நபி மொழிகளில் நபியவர்கள் தெளிவாக விளக்கியிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இரண்டே இரண்டு விஷயங்கள் தான் வட்டி என்ற வட்டத்திற்குள் வருகிறது.

1.ஒரே பொருளாக இருந்தால் ஒரே நேரத்தில் மாற்றிக் கொண்டாலும் சரிக்கு சமனாக இருக்க வேண்டும்.கூடுதல் குறைவு இருக்கக் கூடாது.

2.வேறு வேறு பொருட்களாக இருந்தால் உடனுக்குடன் மாற்றிக் கொள்ள வேண்டும். தவணை போடக்கூடாது.

இந்த இரண்டு வகையில் தான் வட்டி வரும் இந்த இரண்டு வகையையும் நாம் மனதில் நிறுத்திக் கொண்டால் எந்நேரத்திலும் வட்டியை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.