நான்கில் நான்காவதைத் தேர்வு செய்!

ஏகத்துவத்தைப் பற்றி மக்கள் மத்தியில் பிரச்சாரம் நம் சகோதரர்கள் பல பிரச்சினைகளை சமுதாயத்தில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இளைஞர்களாக இருப்பவர்கள் தங்கள் எதிர்கால வாழ்வு தொடர்பாக பல சிக்கள்களையும், பிரச்சினைகளையும், கேள்விக் கணைகளையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. பெண்களின் வாழ்வுரிமை காத்த இஸ்லாமிய மார்க்கத்தில் வரதற்சனை என்ற கொடுமையினால் இஸ்லாமிய சகோதரிகள் தங்கள் வாழ்வின் வாசலைக் கூட அண்மிக்க முடியாத ஒரு துற்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரியத்தினால் அல்ஹம்துலில்லாஹ் நமது இளைஞர்கள் படை வரதற்சனை என்ற வஞ்சகத்தனத்தை தவிர்த்து ஏகத்துவம் காட்டிய இனிய வழியில் இஸ்லாமிய போதனைகளின் படி வரதற்சனை இல்லாத் திருமணங்களை நடத்திக் காட்டி தங்கள் கொள்கையின் பிடிப்பை நடை முறையில் வாழ வைக்கிறார்கள்.

ஷைத்தானின் சிந்தனைக்கு அடி பணிந்து, கொள்கையில் கோமான் என்று வாயளவில் சொல்லிக் கொள்ளும் பலர் தமது திருமணம் என்று வரும் போது தாம் கொண்ட கொள்கையை காற்றில் பறக்கும் பட்டத்தைப் போல் பறக்கவிட்டு விட்டு, பெண் விட்டின் சீதனமாக வரதற்சனை என்ற கொடிய செயலை மனதில் சிறு குழப்பம் கூட இல்லாமல் சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

வரதற்சனை ஒரு வன் கொடுமை.

பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்.

பெண்ணின் கண்ணியம் காத்த இஸ்லாம்.

மணக் கொடை கொடுத்து திருமணம் புரிவோம்

இப்படியெல்லாம் மேடை போட்டுப் பேசியவர்கள், துண்டுப் பிரசுரம் வெளியிட்டவர்கள், பத்திரிக்கைகளில் எழுதியவர்கள் தமது திருமணத்தில் மாத்திரம் இவையனைத்தையும் மூட்டை கட்டி குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கமோ வெரும் வெற்று வார்த்தைக்குறிய மார்க்கமாக இல்லாமல் வாழ்வில் அனைத்துக் காரியங்களிலும் நடைமுறைக்கு ஏற்ற வழிகாட்டியாகத் திகழ்கிறது.

இந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதாக யாராவது சொன்னால் அவன் அதனை நடை முறைப்படுத்த வேண்டும், பேச்சில் தான் மார்க்கம் செயலில் இல்லை என்ற நிலை இருக்குமானால் அது இறைவனால் மிகவும் வெருக்கத்தக்கதாக கணிக்கப்படும்.

நம்பிக்கை கொண்டோரே ! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குறியது. (61:2,3)

ஆக ஏகத்துவக் கொள்கையை பேசுபவர்கள் வாய்ச் சொல்லில் வீரர்களாக இருக்கமாட்டார்கள் கண்டிப்பாக செயல் வீரர்களாகத் தான் இருப்பார்கள்.

நான்கில் நான்காவதைத் தேர்ந்தெடு.

திருமணம் செய்வதற்கு தயாராகும் இளைஞனைப் பார்த்து நபியவர்கள் நான்கு விஷயத்தை தெளிவுபடுத்திவிட்டு நான்கில் நான்காவதைத் தேர்வு செய் என்கிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:

1.அவளது செல்வத்திற்காக.

2.அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3.அவளது அழகிற்காக.

4.அவளது மார்க்க (நல்லொழுக்க)த் திற்காக. ஆகவே,மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!(புகாரி – 5090)

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவா்கள் ஆண்கள் பெண்களை எந்தெந்த நோக்கங்களுக்காக திருமணம் செய்கிறார்கள் என்பதைப் பட்டியல் போடுகிறார்கள். அதில் நான்காவதைத் தேர்வு செய்வதின் மூலம் வெற்றியடையும்படி வலியுறுத்துகிறார்கள்.

கரும்பு திண்ணக் கூலி கேட்கும் கயவர்கள்.

பெரும்பாலான ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் மிக முக்கிய விஷயம் பணம் தான். நான் உங்கள் மகளைத் திருமணம் செய்கிறேன் என்ன தருவீர்கள்? என்று மணமகன் கேட்ப்பான்.அல்லது உங்கள் மகளை எனது மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க நான் தயார் எனது மகனுக்க என்ன தருவீர்கள் என்று தந்தை அல்லது தாய் கேட்பாள்.

வீடு, கடை, தோட்டம், வாகனம், கை செலவுக்குப் பணம், உடுப்பதற்கான புதிய ஆடைகள், பெண் வீட்டு விருந்து இப்படி நீளும் பட்டியல்.

இவைகளைக் கொடுத்தால் தான் ஒரு பெண் மணப் பெண்ணான குறிப்பிட்ட மணமகனுடன் வாழ்வில் இணைய முடியும்.

மொத்தத்தில் கரும்பைத் திண்பதற்காக கூலி கேட்கும் வெட்கம் கெட்ட மாப்பில்லைதான் நான் என்பதை இவர்கள் இதன் மூலம் தெளிவாக நிரூபனம் செய்கிறார்கள்.

சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைசெலவிடுகிறார்கள் என்பதாலும், ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (4-34)

பெண்களை நிர்வகிக்கும் பொருப்பு ஆண்களிடம் தான் வழங்கப்பட்டுள்ளது. இப்படியிருக்க நாம் நிர்வகிக்க வேண்டியவர்களிடம் நாமே கை நீட்டி பணத்தை வாங்குவதென்பது வெட்கமே இல்லாதவனின் பண்பாகும்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :நீங்கள் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில்,உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப் பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களுக்குத்) தரும் மஹ்ர்(விவாகக் கொடை)தான். (புஹாரி – 5151)

நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது என நபியவர்கள் பெண்களுக்கு ஆண்கள் கொடுக்கும் மஹர் தொகையைத் தான் குறிப்பிடுகிறார்கள். அப்படியிருக்க நாம் அவர்களிடம் பொருளையோ அல்லது பணத்தையோ வாங்குவதென்பது மார்க்கம் தடை செய்த, ஹராமான செயல்பாடாகும்.

ஆக கண்டிப்பாக எந்தக் காரணம் கொண்டும் செல்வத்தை முன்நிறுத்தியோ, மணமகள் தரப்பின் பொருளாதார வளர் நிலையை கருத்தில் கொண்டோ நாம் திருமணம் செய்யக் கூடாது என இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது.

குழப்பத்தை உண்டாக்கும் குடும்பப் பாரம்பரியம்.

இரண்டாவதாக நபியவர்கள் குறிப்பிடுவது குடும்பப் பாரம்பரியத்தைப் பற்றியதாகும். திருமணம் முடிக்கும் போது இரண்டாவதாக அநேகமானவர்கள் பார்க்கும் ஒரு விஷயம்தான் குடும்பப் பாரம்பரியம்.

பெரிய குடும்பமா? ஊரில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் இருக்கும் குடும்பமா? புகழ் அடைந்த குடும்பமா? அல்லது ஒரு பிரச்சினை என்று வந்தால் தலையைக் கொடுப்பவர்கள் அதில் இருக்கிறார்களா? இப்படியெல்லாம் குடும்பத்தைப் பற்றி பார்ப்பார்கள். ஆனால் இஸ்லாமோ இதற்கெல்லாம் சாவு மணி அடிக்கிறது.

திருமணம் என்பது பெண்ணைப் பொருத்து அமையும் செயலே தவிர பெண்ணின் குடும்பத்தை வைத்து பார்க்கும் விஷயமல்ல. பெண்ணிக் தாய் எப்படிப்பட்டவர்? பெண்ணின் தந்தை எப்படிப்பட்டவர்? அவளின் சகோதரர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும்படி இஸ்லாம் எந்த இடத்திலும் நமக்குக் கட்டளை இடவே இல்லை.

ஆனால் இன்று பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்துவிட்டாலே முதலில் ஆய்வுக்குற்படுத்தப்படுவது பெண்ணின் குடும்பமே ஒழிய பெண்ணைப் பற்றிய செய்திகள் அல்ல.

இதனைத் தான் நபியவர்கள் வண்மையாகக் கண்டிக்கிறார்கள் பெண் குடும்பப் பாரம்பரியத்திற்காக திருமணம் செய்யப்படுகிறாள் அப்படி நீ செய்யாதே என்று மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் தெளிவான தடையுத்தரவை விதிக்கிறார்கள்.

ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் (6 – 164)

பெற்றோரின் பாவத்திற்காக அல்லது சகோதரர்கள் செய்த தவறுக்காக அவர்களுக்கிருந்த நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டதற்காக குறிப்பிட்ட பெண்ணைப் புறக்கணிப்பது இஸ்லாம் ஏற்றுக் கொள்ளும் செயல் அல்ல.

குறிப்பிட்ட பெண் மார்க்க அளவில் கெட்டவள் அல்லது தகாத நடத்தையுடையவள் என்று அறியப்பட்டால் அவளை வெறுப்பதில் அல்லது புறக்கணிப்பதில் இஸ்லாம் தடை விதிக்க வில்லை ஆனால் மணமகளின் குடும்பத்தின் தீய செயலுக்காக அவளை நாம் புறக்கணிக்கக் கூடாது என்று இஸ்லாம் தெளிவாக விளக்கம் தருகிறது.

அன்பை முறிக்கும் அழகு பார்க்கும் படலம்.

பெண் பார்க்கும் படலத்தில் மூன்றாவது இடம் வகிப்பது அழகு. பெண் அழகாக இருக்க வேண்டும், தோழ் சிகப்பாக இருக்க வேண்டும், மிக மிக அழகானவள் என்று மற்றவர்கள் மெச்ச வேண்டும், என்றெல்லாம் மண மகன், மண மகளைப் பற்றிய தன்னுடைய எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்துகிறான்.

கருப்புப் பெண்களாக இருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று பார்ப்பது. ஓரளவுக்கு அழகானவர்களாக இருந்தால் கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முற்படுவது இருந்தாலும் என்றொரு வார்த்தையை வெளிப்படுத்துவது. என்னதான் இல்லாவிட்டாலும் பரவாயில்லை பெண் அழகாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை பகிரங்கமாக வைப்பது போன்றவை இன்று நமது சமுதாய ஆண்களிடம் சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது.

அழகுக்காக திருமண பந்தத்தில் நுழைந்த எத்தனையோ பேர் மனைவியின் அழகு குறைந்தவுடன் அன்பையும் குறைத்துவிடுவதை அல்லது இழந்து விடுவதைப் பார்க்கிறோம்.

தான் இவளுடைய அழகுக்காகத் தான் திருமணம் முடித்தேன் ஆனால் இப்படி அசிங்கமாக இருக்கிறாளே என்று கணவன் எண்ணத் தலைப்படுதல்.

அதன் மூலம் தான் அவள் மீது கொண்ட பாசத்தை வேறொரு அழகானவளிடம் காட்ட முற்படுவது போன்ற பல நிகழ்ச்சிகள் நமது அன்றாட வாழ்க்கையில் நடை பெற்றுக் கொண்டிருப்பதை நாம் கண் கூடாகக் கண்டு கொண்டிருக்கிறோம்.

ஆதலால் இளைஞர்களே நமது திருமணம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அழகை முன் நிருத்தியதாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவான நிலையில் நாம் இருக்க வேண்டும்.

நபியவர்கள் எதை பார்க்க வேண்டாம் என்றார்களோ அது நமக்குத் தேவையில்லை என்ற நிலைபாட்டில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

நமக்குத் தேவையானது,நான்காவது தேர்வே !

நபியவர்கள் குறிப்பிட்டவைகளில் நான்காவதாக ஆண்கள் பெண்களிடம்அவளது மார்க்க (நல்லொழுக்க)த்தைப் பார்ப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

இப்படிச் சொன்ன நபியவர்கள் கடைசியாக மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று கூறினார்கள்.

மார்க்கம் தெரியாத பெரிய குடும்பப் பாரம் பரியம் மிக்க மிக அழகான செல்வச் செழிப்பானவளை திருமணம் செய்து வாழ்வில் சளிப்படைவதைவிட மார்க்கம் தெரிந்த ஒரு ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்தாவது வெற்றியடைந்து கொள்ள முனைய வேண்டும்.

மார்க்கம் தெரியாதவள் எவ்வளவு பெரிய பணக்காரியாக இருந்தாலும், குடும்பப் பாரம் பரியம் மிக்கவளாக இருந்தாலும், அழகில் தேவதையாக இருந்தாலும் மார்க்கத் தெளிவில்லாவிட்டால் வாழ்வில் வசந்தத்தை எதிர்பார்க்க முடியாது.

பணம் கோடி கோடியாக இருக்கிறது நிம்மதிதான் இல்லை என்று புலம்புபவர்களைப் பார்க்கிறோம்.

பெரிய குடும்பம், நல்ல செல்வாக்கு இருக்கிறது, ஆனால் வாழ்வில் சந்தோஷமில்லை என்று ஓழமிடுபவர்களை சந்திக்கத்தான் செய்கிறோம்.

ஆதலினால்……………………..  அன்பின் சகோதரர்களே !

நண்பர்களே !

இளைஞர்களே !

நபியவர்கள் சொன்ன நான்காவதை மாத்திரம் நமது குறிக்கோளாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதுவல்லாத எதை நமது குறிக்கோளாக எடுத்தாலும் நாம் வழி தவறிவிடுவோம் என்பது தெளிவு. அதனால் தான் நபியவர்கள் (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று கடிணமான முறையில் சொல்கிறார்கள்.

அன்பின் சகோதரர்களே !

நான்கில் நான்காவதைத் தேர்ந்தெடுத்து நாளை மறுமையில் வெற்றி பெருவோமாக!

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.