அல்லாஹ்வை நம்புவது எப்படி?

அவனுக்கு முடியாதது ஏதுவும் இல்லை.

முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் அல்லாஹ்வை நமது இறைவன் என்று நம்ப வேண்டும் என்பதை விளங்கி வைத்திருக்கிறோம், அவன் நம்மைப் படைத்தவன். உணவளிப்பவன் நன்மை தீமைகளைத் தீர்மானிப்பவன். இது போன்று மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட செயல்கள் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரன் அவன் தான் என்று நம்புகிறோம்.

ஆனால் இந்த நம்பிக்கை உண்மையான நம்பிக்கையாக இருக்கறதா? என்று பார்த்தால் நாம் எந்த அளவு அல்லாஹ்வை நம்ப வேண்டுமோ அந்த அளவுக்கு யாரும் அவனை நம்புவதில்லை. அப்படியே நம்பினாலும் அந்த நம்பிக்கையில்  குறை செய்கிறோம் என்பதுதான் உண்மை. எனவே நமது நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மார்க்க விசயங்களில் தொழுகை போன்ற வணக்கங்களில் அல்லாஹ் சொன்னபடி அவனுடைய தூதர் சொன்னபடி தொழுகிறோம். ஆனால் நமது வாழ்வில் பல விஷயங்களில் நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா என்றால் நடப்பதில்லை என்று ஆணித்தரமாக சொல்ல முடியும்.

திருமணம் இறுதிச் சடங்கு இதர சடங்கு, சம்பிரதாயங்கள், வீடு கூடிபோகுதல், வியாபாரம், தொழில் துறைகள் என்று வரும் போது இவ்வாறு நாம் நடந்து கொள்வதில்லை. மார்க்கக் கடமைகளில்  சரியாகச் செய்யும் நாம் உலகக் காரியங்களில் மார்க்க நெறியை அலட்சியம் செய்பவர்களாக இருக்கிறோம், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எவ்வாறு சொன்னார்களோ அதை செய்வதற்கு தெரிந்து கொண்டே பின்வாங்குகிறோம். அது மாத்திரமின்றி நமது அடிமனதில் மார்க்க விசயங்களை மட்டும் தான் அல்லாஹ் பார்க்கிறான். அது அற்பாற்பட்ட செயல்களை அவன் பார்ப்பதில்லை என்ற ஒரு தப்பான எண்ணம் நம்முடைய உள்ளத்தில் இருப்பதனால் தான் நாம் உறுதியான முறையில் அல்லாஹ்வை நம்புவதில்லை.

அல்லாஹ்வை உறுதியாக நம்புகிற விசயத்தில் இஸ்லாமியர்கள்  மத்தியில் இரு சாரார்கள் இருப்பதாக திருமறைக்குர்ஆனில் அல்லாஹ்வே நமக்கு சொல்கிறான்.

எங்கள் இறைவன் அல்லாஹ்வேஎன்று கூறிபின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கிஅஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்!எனக்கூறுவார்கள்.(அல்குர்ஆன் (41:31))

அல்லாஹ்வுடைய வானவர்களின் உதவி உறுதியான நம்பிக்கையில் இருப்போருக்கு கிடைக்கிறது. அல்லாஹ்வை வாயளவில் இறைவன் என்று நம்பி இருப்போருக்கு இப்படிப்பட்ட உதவிகள் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறவில்லை.

அல்லாஹ்வின் வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி நமக்கு உதவி செய்வார்கள் என அல்லாஹ் கூறுவதால் அந்த உறுதியான நம்பிக்கை நம்மிடம் இருக்கும் போது மனிதர்களின் உதவி எதற்கு? என்ற எண்ணம் தானாக நமக்கு வந்து விடும். நம்முடைய நல்ல, கெட்ட, எல்லாவற்றுக்கும் வானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். நாம் பிராத்தனை செய்யும் போது  அவர்கள் ஆமீன் சொன்னால் அல்லாஹ் நமது பிராத்தனைகளை  ஏற்றுக் கொள்வான் அதே போன்று அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசினால் அந்தப் பரிந்துரையையும் அல்லாஹ் எற்றுக்கொள்கிறான். இப்படி நாம் எண்ணி நமது   உள்ளத்தில் இந்த நம்பிக்கையை ஆழமாக பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் தான் நமது உள்ளத்தைப் புடம் போட்ட தங்கமாக மாற்றுவதற்கு திருமறைக்குர்ஆனில் பல்வேறு இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகளை அல்லாஹ் படிப்பினையாக சொல்லிக் காட்டுகிறான்.

எது நடக்க முடியாது என்று நாம் நம்புகிறோமோ அது அல்லாஹ்வால் நடத்த முடியும் என்று நம்புவது தான் உறுதியான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை நமது உள்ளங்களில் ஆழமாகப் பதிய வேண்டும். ஆனால்  இந்த நம்பிக்கைதான் முஸ்லிம்களாகிய நம்மிடம் இன்று குறைந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். திருமறைக்குர்ஆனில் வரலாறுகளைப் படித்து நமது ஈமான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் பல இறைத்தூதர்களின் வாழ்கை வரலாற்றைக் கூறுகிறான்.

மூஸா (அலை) அவர்களும், பிர்அவ்னுடைய படையும்.

மூஸா (அலை) அவர்கள், பிர்அனுக்கு பல வருடங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை போதனை செய்து கொண்டிருந்தார்கள். இனி முடியாது இங்கு  இருந்தால் பிர்அவ்ன் நம்மை அழித்து விடுவான் என்ற நிலை வந்த போதுதான் ஊரை விட்டு வேளியேறுகிறார்கள். இதனை அறிந்த பிர்அவ்னுடைய பட்டாளங்கள்  பிர்அவ்னிடம் சென்று மூஸாவும் அவரோடு இருப்போரும் தப்பிச் செல்கிறார்கள். என்ற செய்தியைச் சொல்கிறார்கள்.

பிர்அவ்னும் அவனுடைய பட்டாளமும் மூஸா (அலை) அவர்களையும் பனூஇஸ்ரவேலர்களையும் பூண்டோடு அழித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு  தன்னுடைய படையுடன் விரட்டிக் கொண்டு வருகிறார்கள். மூஸா (அலை) அவர்களும் பனூ இஸ்ரவேலர்களும் எப்படியாது இவனுடைய இந்த அநியாயத்தில் இருந்த தப்பிக் வேண்டும் என்று திக்குத் திசையில்லாமல் ஓடுகிறார்கள்  கடைசியில் அவர்கள் சங்கமித்த இடம் கடலாகும்.

பின்னால் பிர்அவ்னுடைய படையும் முன்னால் கடலும். இப்போது தான் அல்லாஹ் பற்றிய உறுதியான நம்பிக்கையும் சங்கமிக்கிறது.

அப்போது அவர்களை ஏற்றுக் கொண்ட  பனூ இஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களைப் பார்த்து நாம் மூழ்கடிக்கப்படுவோம் இன்று தப்ப முடியாத நாள், வசமாக மாட்டிக் கொண்டோம்  மூஸாவே! என்று சொன்னபோது அப்படி நடக்காது.  உங்களால் முடியாது என்று நினைக்கிறீர்களே இதுதான் உங்களின் ஈமான் இது தான் உங்களுக்கு எனக்கும் உள்ள வித்தியாசம். சகல வல்லமையும் பொருந்திய என்னுடைய இறைவனால் இது முடியும். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று கூறி மூஸா (அலை) அவர்கள் உறுதியான நம்பிக்கையை அப்போது வெளிப்படுத்தினார்கள். அப்போது அல்லாஹ் அவர்ளுக்கு வழிகாட்டினான். இது பற்றி திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக்கொண்டபோதுநாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின்சகாக்கள் கூறினர். அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்என்று அவர்கூறினார். உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராகஎன்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும்மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச்செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். இதில் சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லைஉமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் (26:62-68))

அல்லாஹ் எதற்கு இந்தச் சம்பவத்தை நமக்கு கூறிக் காட்டுகிறான்.

திக்கற்ற நிலையில் நாம் இருந்தாலும் சரி என்னுடைய இறைவனுக்கு முடியும் என்று நினைக்க வேண்டும். உளப்பூர்வமாக நம்ப வேண்டும் அதுதான் ஈமானிய உறுதியும் அல்லாஹ் பற்றிய அசைக்க முடியாத நம்பிக்கையுமாகும்.

இது முடியுமா? எப்படி சாத்தியப்படும்? என்று தப்பாக நினைத்து சில விசயங்களில் போடுபோக்குத் தனத்தை வெளிப்படுத்துகிறோம்.

அல்லாஹ்வின் வல்லமை பற்றி மூஸா (அலை) அவர்கள் எப்படி உறுதியாக நம்பினார்களோ அப்படி நம்ப வேண்டும். அவனால் முடியாதது எதுவுமே இல்லை அவன் நமக்கு உதவி செய்வதற்குத் தயாராக இருக்கிறான். எப்போது அவனிடம் நம்முடைய ஈமானிய உறுதியை வெளிப்படுத்துகிறோமோ அப்போது இது போன்ற அற்புத ஆற்றலுடைய அல்லாஹ்வின் உதவியைக் காணமுடியும்.

இறைத்தூதர்களுக்கு  இப்படியான நிலை ஏற்பட்ட போதல்லாம் இன்றைய இஸ்லாமியர்கள் நடந்து கொள்வது போன்று அவர்கள் நடந்து கொள்ளவில்லை. எத்தனை இடர்களையும் கஷ்டங்கயையும் துன்பங்களையும் அவர்கள் சந்தித்த போதும் அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அவர்கள் இழக்கவில்லை அதே நிலையை நாம் அடைந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதற்கு  மற்றொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

குழந்தைப் பேறு இல்லாத ஸகரிய்யா (அலை) அவர்களின் நம்பிக்கை ஸகரிய்யா (அலை) அவர்கள் தம்முடைய தள்ளாத வயதிலும் குழந்தைப் பாக்கியத்தை அல்லாஹ்விடம் வேண்டினார்கள். இறுதி வரை  அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். அவர்களின் அபரிதமான இந்த முயற்சியை அல்லாஹ் எற்றுக் கொண்டு குழந்தைப் பாக்கியத்தை கொடுத்ததை இன்றைய முஸ்லிம் சமுதாயத்தவர்கள் மறந்து விடலாகாது.

பிள்ளைப் பேறு என்பதைப் பொறுத்தவரை இன்று உலகத்தில் அறியப்பட்ட நியதிகளில் ஒன்றுதான். ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லையென்றால் அதன் பிறகு அவர்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்காது. அவர்களின் ஹார்மோன்கள் அந்தத் தன்மையை இழந்து விடுகின்றன. இதுதான் உலக நியதி  ஆனால் அல்லாஹ் நாடினால் எந்த ஒன்றும் அவனுக்கு முடியாதது இல்லை என்பதற்கு ஸகரிய்யா (அலை) அவர்களின் வரலாறு நமக்கு மிகப் பெரிய படிப்பினையாகும்.

நாம் இன்று பிள்ளைப் பேறு அற்றவர்களைப்  பார்க்கிறோம்  ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இனி நமக்கு  குழந்தை பெறும் தன்மை இருக்கின்றதா? இது சாத்தியமா? என்று ஏங்கித் தவிப்பதைப் பார்க்கின்றோம். குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் சமுகத்தினால் ஒரு விதமான  சந்தேகப் பார்வையினால் நோக்கப்படுவதையும் பழிக்கப்படுவதையும் பார்க்கிறோம்.

இந்த வயதில் பிள்ளைப் பேறா? இது சாத்தியமா? இது உங்களுக்கு கொஞ்சம் அதிமாகத் தெரியவில்லையா? என்றல்லாம் இவர்கள் பழிக்கப்படுகிறார்கள்.

இந்த சமுதாயத்தில் முஸ்லிம்கள் என்று சொல்லக் கூடிய நாம் இப்படியானவர்களை ஏளனம் செய்கிறோம்  இதுதான் நாம் அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டு

அல்லாஹ்வை நம்பியுள்ளோம் அவன் எங்களுக்குப் போதுமானவன் அவனால் இதுவும் முடியும். எங்கள் இறைவன் நினைத்தால் இதையும் செய்து காட்டுவான் என்று நம்ப வேண்டும். இப்படி நம்புகிறவர்களுக்கு அல்லாஹ் போதுமானவன் என்று திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். (அல்குர்ஆன் (65:03))

திருமறையில் ஸகரிய்யா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக்கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப்பிரார்த்தித்தார். என்இறைவா! என்எலும்பு பலவீனமடைந்துவிட்டது. தலையும் நரையால்மின்னுகிறது. என்இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப்பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என்மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு உதவியாளனை நீ எனக்கு வழங்குவாயாக அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக! (என்றார்.) ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம்நற்செய்தி கூறுகிறோம்அவரது பெயர்யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை” (எனஇறைவன்கூறினான்) என்இறைவா! எனக்கு எப்படி புதல்வன் தோன்றுவான்? என்மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோ முதுமையின் இறுதியை அடைந்துவிட்டேன்என்றுஅவர்  கூறினார். ((அல்குர்ஆன் (19:1-8))

அல்லாஹ் ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு செய்த அருளைப் பற்றி மேற் கூறப்பட்ட வசனத்தில்  கூறுகிறான் அவருடைய வயதை இந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவர் வயது முதிந்தவராகி, தலையும் நரைத்து எழும்புகள் எல்லாம் பலமிழந்த நிலையிலும் அவர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.

என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. அல்லாஹ்விடம் கேட்பதில் அவர் துர்ப்பாக்கியசாலியாக இருக்கவில்லை. இந்த தள்ளாத வயதிலும் நான் என் இறைவன் தருவான் என்ற நம்பிக்கையை நான் இழக்கவில்லை. அதே நேரம் என் மனைவியும் மலடியாக இருக்கிறாள்  இறைவா உன்னால் முடியும் உன்னால் முடியாத ஒன்றை நான் கேட்கவில்லை என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக  இறுதிவரை போராடினார். இதனால் அவருக்கு நடந்தது என்ன?

அல்லாஹ் அவருக்கு குழந்தைச் செல்வத்தைக் கொடுத்தது மாத்திரமின்றி அந்தக் குழந்தைக்கு யஹ்யா என்ற பெயரையும் சூட்டினான். இது தான் அல்லாஹ்வை நம்புவதற்குரிய அடையாளமும் ஆகும்.

நமது வாழ்வில் அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும்.

நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நாம் பெறவேண்டிய முக்கியமான படிப்பினை அவர்கள் எந்த ஒரு கட்டத்திலும் எப்படிப்பட்ட துன்பமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதும் அல்லாஹ்விடம் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் அறிவான். நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றைஅல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 54:04)

அவனால் முடியாதது எதுவுமில்லை. எந்தத் தேவையானாலும் அவனிடம் கேட்கலாம். அவன் நிச்சயமாகத் தருவான் என்ற நம்பிக்கை நபிமார்களுக்கு இருந்தது. நாம் பார்த்த நபிமார்களின் வரலாறுகளை வைத்துக் கொண்டு அல்லாஹ் பற்றிய நமது நிலைப்பாட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

நாம் அல்லாஹ்விடம் கேட்பதற்குக் கூட கஞ்சத்தனம் செய்கின்றோம். எதெல்லாம் நம்மால் முடியும் என்று தோன்றுகிறதோ அதுதான் அல்லாஹ்வால் முடியும், அது அல்லாதது எதையும் செய்யவோ அல்லது செயல்படுத்தவோ அல்லாஹ்வால் முடியாது என்று நினைக்கிறோம்.

நாம் அல்லாஹ்விடம் கேட்க வேண்டிய விதத்தில் கேட்கவில்லை என்பதற்கு நமது வாழ்வில் ஏற்படக்கூடிய பல்வேறு உதாரணங்களைப் பார்க்க முடியும்.

இருபத்தி ஐந்து வயதுடைய ஒருவர் திருமணம் முடித்து குழந்தைப் பேறு கிடைக்கவில்லையென்றால் அவர் முப்பது வயது அல்லது நாற்பது வயது வரை தனக்கு குழந்தை வேண்டும் என்று பிரார்த்திக்கிறார். நாற்பத்தி ஐந்து வயதை அல்லது அதைவிட அதிகமான வயதை எட்டியவுடன் இதற்குப் பிறகு நமக்கு இனி எப்படிக் குழந்தை பிறக்கப் போகின்றது என்று அவர் தீர்மானித்து விடுகிறார். அதன் பின்னர் அல்லாஹ்விடம் அவர் குழந்தையைக் கேட்டு பிரார்த்திப்பதை விட்டு விடுகிறார்.

இந்த செயலில் இருந்து அவனுடைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடியும். எனக்கு குழந்தைப் பேறு எப்படிக் கிடைக்கும் என்று நினைப்பதற்குப் பதிலாக என்னால் வேண்டுமானால் முடியாமல் இருக்கலாம். என்னைப் படைத்த அல்லாஹ்வால் முடியும், அவன் தான் சகல ஆற்றல்களுக்கும் சொந்தக்காரன் அவனால் முடியாத ஒன்று இந்த உலகில் உண்டா என்று நினைக்க வேண்டும்?

ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு தள்ளாத வயதில் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்த அல்லாஹ்வால் எனக்கும் குழந்தைப் பாக்கியத்தைத் தர முடியும். நிச்சயமாக அவன் எனக்கு குழந்தை பாக்கியத்தைத் தருவான் என்று உறுதியாக நம்ப வேண்டும். அதன் பிறகு அதில் முடியுமான அளவுக்கு முயற்சி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினை மட்டுமில்லை இது போன்ற எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அவனின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து அவனிடம் நமது முழுப் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும்.

அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன்.(அல்குர்ஆன்:65:03)

அவனிடம் உறுதியாகக் கேட்க வேண்டும். எந்த அளவுக்கென்றால் பெரிய குற்றச்சாட்டில் கைதியாகப் பிடிக்கப்பட்டு அடுத்த நாள் தூக்கு மேடை என்றிருந்தாலும் அல்லாஹ் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் சூழ்ச்சியாளனுக்கெல்லாம் சூழ்சியாளனாகிய அல்லாஹ் எதையாவது செய்து அந்த நேரத்தில் காப்பாற்றுவான்.

(ஈஸாவின் எதிரிகள்) சூழ்ச்சி செய்தனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சிறப்பாகச் சூழ்ச்சி செய்பவன். (அல்குர்ஆன்:3:54)

பலர் நமக்கு முன் நோயாளியாக இருப்பதை நாம் அன்றாடம் பார்க்கின்றோம். அவர்களுக்கு ஏற்பட்ட நோய்களுக்கு அல்லாஹ்விடம் நோயைக் குணப்படுத்தும் படி கேட்கிறார்கள். சாதாரண தலைவலி காய்ச்சல் போன்ற நோய்கள் இருந்தால் அல்லாஹ்விடம் கேட்கிறார்கள். இதை விடவும் நோய் கடுமையாக அதிகரிக்கும் போது வைத்தியர்களை நாடிச் சென்று அவர்களிடம் அதற்குரிய சிகிச்சைகளைச் செய்தும் பலன் ஏற்படாமல் போய்விடும். இவர் பிழைப்பது நிச்சயமல்ல என்று மருத்துவர்கள் கூறி கைவிடும் போது இனி இவர் எப்படி குணமாவார்? குணப்படுத்தக்கூடிய மருத்துவரும் கையை விரித்து விட்டாரே என்று நம்பிக்கை இழந்து விடுகிறோம்..

அல்லாஹ்விடம் இத்தனை நாட்களாகச் செய்து வந்த பிரார்த்தனையையும் கைவிட்டு அதில் நம்பிக்கை இழந்து விடுகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில் மருத்துவருக்கு வேண்டுமானால் முடியாது போகலாம். என்னுடைய இறைவனால் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று உறுதியாக அல்லாஹ்விடம் நம்பிக்கை வைத்து பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு தான் ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் உறுதியான பிராத்தனை இருந்தது.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன்:26:80)

மரணிக்க இருக்கின்ற மனிதனையும் நோயிலிருந்து குணப்படுத்தி நல்வாழ்க்கைக்கு இட்டுச் செல்ல அல்லாஹ்வால் முடியும்.

பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் செல்வந்தர்களிடம் நம் தேவையைக் கேட்டால் அவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை யாரும் கேட்பதில்லை. அவர்கள் அந்த அளவுக்குத் தரமாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வைப் பற்றியும் நமது நிலை இப்படித்தான் இருக்கின்றது. பணக்காரன் எப்படி பெருந்தொகையை தரமாட்டானோ அதை போன்று தான் அல்லாஹ்வும் தரமாட்டான் என்று நினைக்கின்றோம்.

நமது பார்வையிலும் கணிப்பிலும் மனிதர்கள் தான் தர மாட்டார்கள். அல்லாஹ் நினைத்தால் அவன் நமக்கு உதவி செய்வது அவனுக்கு சாதாரணமானது என்று நம்புவதில்லை. நமக்கு முன்னால் இறைத்தூதர்கள் வரலாறு இதற்கு படிப்பினையாக இருக்கிறது.

அல்லாஹ்வை உண்மையாக நம்ப வேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று எப்படி உறுதியாக நம்புகின்றோமோ, அப்படி சந்தேகமில்லாமல், அல்லாஹ்வை நம்ப வேண்டும். கண் முன்னால் ஒன்றைப் பார்த்து எப்படி இது மனிதன், இது மிருகம் என்று எவ்வாறு உறுதியாகக் கூறுகின்றோமோ அப்படி நம்ப வேண்டும். நமது கண் முன்னால் நிற்கும் ஒருவரைப் பற்றி இவர் யார் என்று கேட்டால் சற்று பொறுங்கள் யோசித்து சொல்கிறேன் என்று யாரும் சொல்ல மாட்டோம். அப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும்.

இரண்டு கால்களும் இரண்டு கைகளும் உடல் உறுப்புக்களும் இருப்பதை எப்படி நம்புகின்றோமோ? அதில் சந்தேகம் வராதோ அதுபோன்று அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய தூதர்கள், மலக்குகள், வேதங்கள் போன்ற மறைவானவற்றையெல்லாம் நம்பவேண்டும். உறுதியான வேர்களைக் கொண்ட ஆலமரத்தின் விழுதுகள் எப்படி ஆழமாக வேர்களை நிலத்தில் வேரூன்றி இருக்கின்றதோ அப்படி அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையும் உறுதியாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நல்ல கொள்கைக்கு தூய்மையான ஒரு மரத்தை அல்லாஹ் எவ்வாறு உதாரணமாக ஆக்கியுள்ளான் என்பதை நீர் அறியவில்லையா? அம்மரத்தின் வேர் (ஆழப் பதிந்து) உறுதியாகவும், அதன் கிளை ஆகாயத்திலும் உள்ளது. (அல்குர்ஆன்:14:24)

மரத்தின் வேர்களைப் போன்று நமது கொள்கை ஆழமாக உள்ளதா? நூற்றுக்கு நூறு சதவீதம் நாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் மறுமையையும் வேதங்களையும் நம்புகிறோமா?.

இந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் நமது வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அவனுடைய வானவர்களின் உதவியும் நிச்சயமாகக் கிடைக்கும். வாழ்க்கையில் துன்பமோ துயரமோ ஏற்படாது.

இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு சிறிய நிகழ்ச்சி போதுமான ஆதாரமாகும்.

சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். “தங்களுக்குப் பிறகு யாரிடமும்அல்லது “தங்களைத் தவிர வேறு யாரிடமும்அது குறித்து நான் கேட்க வேண்டியதிருக்கலாகாதுஎன்று வினவினேன்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “”அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!என்று சொன்னார்கள்.    (நூல் முஸ்லிம்:62)

இதில் இருந்து நாம் விளங்க வேண்டியது அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் வாழ்க்கையில் நம்மிடம் இருக்கும் எந்தத் தீய பழக்களிலும் நீடித்து நிலைத்து நிற்க மாட்டோம். என்பதுதான் இதில் இருந்து நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

எதற்காக நோய் ஏற்படுகிறது?

மனிதர்களாகிய நாம் நமது அன்றாட வாழ்வில் பலவிதமான நோய்களைச் சந்திக்கி றோம். இவ்வுலகில் நோய்களுக்கு ஆளாகதவர்களைக் காணவே முடியாது. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட பெரிய நபிமார்களாக இருந்தாலும் அவருக்கு நோய் வந்தே தீரும். அவர்கள் சரியே. இப்படி நோய்களுக்கு ஆளாகும் போது அதை எப்படி நாம் எதிர்கொள்வது? எப்படிப்பட்ட ஆளாக இருக்கணும்? அந்த நேரத்தில் நமது நம்பிக்கைளை எவ்வாறு அமைத்துக் கொள்வது? நமது நடவடிக்கைகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கு இஸ்லாம் சொல்லக் கூடிய சில வழிமுறைகளை நாம் ஆராய்வோம்.

நோய் என்பது அல்லாஹ்வால் மனிதனைப் பண்படுத்துவதற்கு கொடுக்கப்படுகின்ற ஒரு எச்சரிக்கையாகும். நோய் மட்டும் மனிதனுக்கு ஏற்படவில்லையென்றால் மிக அதிகமான மனிதர்கள் கடவுள் மறுப்பாளர்களாகவே இருப்பார்கள். நோய் மனிதனைப் படுக்கையில் கிடத்தும் போது மனிதன் அந்த நேரத்தில் தான் தன்னை விடவும் மிஞ்சிய ஒரு சக்தியுள்ளது என்று நினைக்கிறான். அப்போதுதான் கடவுள் இருக்கிறான் அவனது நிவாரணம் எனக்குத் தேவை என்று உணர்கிறான். இதற்காகத்தான் அல்லாஹ் நோயை அவனுக்கு ஒரு கருணையாகவும் அருளாகவும் ஏற்படுத்தியிருக்கிறான்.

இவ்வுலகில் எத்தனையோ பகுத்தறிவாதம் பேசியவர்கள் கூட நோய்நொடிகளுக்கு ஆளாகும் போது நிவாரணங்களை நோக்கி ஓடும் காட்சியை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.

கடவுள் நம்பிக்கை என்பது மனிதனுக்கு நோய் வரும் போது மட்டும் தான் ஏற்படுகிறது. உலகம் தான் வாழ்க்கை என்று மூழ்கிப் போய் அல்லாஹ்வை மறக்கும் போது அல்லாஹ் அந்தச் சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஏதாவது ஒரு சோதனையைக் கொடுத்து அவனைத் திசை திருப்புகிறான்.

நீ பலவீனமானவன் உனக்கு மேல் உன்னைப் படைத்தவன் ஒருவன் இருக்கிறான். அவன் நினைத்தால் உன்னை ஒரு நொடிப்பொழுதில் மரணிக்கச் செய்து விடுவான். எனவே உன்னுடைய வாழ்க்கையை நல்லமுறையில் பயன் படுத்திக்கொள். என் இறைவன் விதித்த இந்த நோயை அவனே குணப்படுத்துவான் என்று நீ உன்னைப் படைத்த இறைவன் மீது நம்பிக்கை வை. அவன் நோயை ஏற்படுத்தியதல்லாம்  அவனை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் என்று சொல்லாமல் சொல்லி மனிதனை எச்சரிக்கிறான்.

இவ்வாறு நோய் ஏற்படும் போது நோயின் மூலம் ஏராளமான நன்மைகளை அடைந்து கொள்வதற்கு அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று அவன் கவனக்குறைவாக இருந்தால் இந்த நோயே அவனை ஒரு இறைமறுப்பாள னாகவும் இணைவைப்பாளனாகவும் கூட மாற்றிவிடும். அதையும் இன்றைய உலகில் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

நோய் ஏற்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள்.

மருத்துவம் செய்ய வேண்டும் அல்லாஹ்வை முழுமையாக நம்பியிருப்போர். நோய் நோடிகள் ஏற்படும் போது அந்த நோய்க்குரிய காரணங்களைக் கண்டு தகுந்த மருத்துவம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்குக் கட்டளையிடுகிறது. அதற்கு மாற்றமாக ஆன்மிகம் என்ற பெயரில் அல்லாஹ் இருக்கிறான். அவன் நோயைக்குணப்படுத்துவான் என்று அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டிவிட்டு, நோய்க்கு வைத்தியம் செய்யாமல் இருப்பதை இஸ்லாம் வன்மையாக எதிர்க்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.(புகாரி (5678))

மற்றொரு ஹதீஸில்

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.(முஸ்லிம் (4432))

நோயை ஏற்படுத்திய அல்லாஹ் அதற்குரிய நிவாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளான். அந்த மருந்தை முறையாகப் பயன்படுத்தினால் நோய் நீங்கிவிடும். மனிதனுக்குப் பசி ஏற்படும் போது பசியைப் போக்குவதற்கு அல்லாஹ் வழங்கிய உணவை உண்டு பசியைப் போக்குகிறோம். பசியைப் போக்குவதற்கு அல்லாஹ் மனிதனுக்கு எந்த  அளவுகோலை கற்றுக் தந்துள்ளானோ அதே அளவு கோலையே நோய்க்கும் கற்றுத் தந்துள்ளான். இயன்ற அளவுக்கு மருத்துவம் செய்யவேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் நமக்கு வழிகாட்டுகிறது.

இந்த உலகில் வாழும் அனைத்து மதத்தவர்களும் இனத்தவர்களும் நோய்க்கு மருத்துவம் செய்கிறார்கள். இதனை யாருக்கும் நாம் சொல்லிக் கொடுத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் ஆன்மிகத்தின் பெயரால் மருத்துவம் பார்க்கக் கூடாது என்ற தவறான கொள்கையில் உள்ள சிலர் மரணத்தைத் தழுவுகின்றனர்.

இன்னும் சிலர் தவறான சடங்கு சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை வைத்து அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கின்றனர். வைத்தியம் செய்து குணமாகவில்லையென்றால் அந்தச் சந்தர்ப்பத்தில் வைத்தியத்தின் மீதே நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.

நோயாளியின் உள்ளம் பல விதமான சந்தேகத்தில் சுழன்று கொண்டிருக்கும். இந்த நேரத்தில் இது நோய் அல்ல; இது நோய்க்கு அப்பாற்பட்ட ஒன்று; அதற்கு வேறு விதமான சிகிச்சைகள் இருக்கின்றது அதைச் செய்வதன் மூலம் தான் இதனைக் குணப்படுத்த முடியும் என்று கூறும் மூடர்களின் சொல்லைக் கேட்டு பில்லி, சூனியம், கண்ணேறு தான் காரணம் என நம்பி மருத்துவத்தைக் கைவிடுகிறான். தர்காக்களுக்குச் சென்று அங்கு பல நாட்கள் தவம் இருக்கிறான். தாயத்து தகடு பால் கிதாபு சடங்கு சம்பிரதாயங்கள் செய்கிறான். தட்டுக்களில் எழுதி அதைக் கரைத்துக் குடிக்கிறான். இதனால் அவனுக்கு நோய் அதிகமாவதுடன் இஸ்லாத்திற்கு மாற்றமான அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கக்கூடிய நிரந்தர நரகத்திற்குரிய பாவமான காரியங்களைச் செய்தவனாகவும் ஆகி விடுகிறான்.

இது போன்ற சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் மீது அளவற் நம்பிக்கை கொண்டு இயன்ற அளவுக்கு மருத்துவம் செய்ய வேண்டும். அதன் பிறகு இறைவா எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை நீயே குணப்படுத்துபவன், உன்னிடமே நான் ஆதரவு வைத்துள்ளேன், நான் இதில் பொறுமையைக் கைக்கொள்கிறேன், உன்னுடைய விதியை நான் பொருந்திக் கொண்டேன் என்று பொறுமையைக் மேற்கொண்டால்  அதற்குரிய நன்மையை அடைந்து கொள்ள முடியும்.

இதற்கு மாற்றமாக மருத்துவத்தைத் தாண்டி மார்க்கம் காட்டித்தராத வழிமுறைகளைக் கையாளுகின்ற போது ஈமானைப் பறிகொடுக்கும் நிலைக்கு அவன் தள்ளப்படுகிறான்.

இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. ஒவ்வொருவரும் தமக்கு ஏற்படும் நோய் குணமாவதற்கு அவர்களாக ஒரு கால வரையரையை தீர்மானித்து வைத்திருப்பதுதான் அது. அந்தக் கால அளவுக்குள் குணம் ஏற்படாவிட்டால் இதற்கு மருத்துவம் செய்வதனால் பயன் கிடைக்காது; ஏதாவது வேறு வழிகளில் நோய் குணமடைவதற்கு முயற்சி செய்து பார்ப்போம் என்றெண்ணி மாந்திரீகம், தயத்து, தகடு போன்றவைகளில் எழுதி கைகளிலும் உடலின் மற்ற பாகங்களிலும் கட்டிக் கொள்வது அதைக் கரைத்துக் குடிப்பது, போன்ற செயல்களில் இறங்கி விடுகின்றனர்.

இவ்வாறு செய்வதை விடுத்து ஹோமியோபதியோ அலோபதியோ, யூனானியோ சித்த மருத்துவமோ அல்லது வேறு வகையான மருத்துவமோ செய்து கொள்ள வேண்டும்.

எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் மார்க்கத்துக்கு முரண் இல்லாத வகையில் மருத்துவம் செய்வதற்கு நமது மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இதற்கு மாற்றமாக மாந்தீரீக வேலைகளில் ஈடுபடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? என்று ஆராய்ந்து பார்த்தால் இதற்கு முழுமையாக அனுமதி இல்லையன்றாலும் அல்லாஹ் அனுமதித்த குறிப்பிட்ட அளவுக்கு இதில் ஈடுபட அனுமதியுள்ளது. இந்த அனுமதியைத் திருமறைக்குர்ஆனில் அல்லாஹ் தெளிவாக சொல்லிக் காட்டுகிறான்.

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். அநீதி இழைத்தோருக்கு இழப்பையே அதிகப்படுத்தும்.(அல்குர்ஆன் 17:82)

இந்த வசனத்தில் முஃமின்களுக்கு நோய் நிவாரணமும் இந்தக் குர்ஆனில் இறக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். குர்ஆனில் நோய்நிவாரணம் உண்டு என்பது இதில் இருந்து தெரிகிறது. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு நோயைக் குணப்படுத்தும் ஆற்றலும் வலிமையுமுள்ளது. என்பதை இந்த வசனம் நமக்கு சொல்லிக் காட்டுகிறது.

இந்த வசனத்தில் கூறப்பட்ட நிவாரணம் என்ற சொல்லுக்கு இரண்டு விதமான விளக்கங்களை அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் கூறும் போது ஆத்மிகமான நோயைத்தான் இது குறிக்கிறது. அதற்கு மாற்றமாக மருத்துவ ரீதியான நோயைக் குணப்படுத்தாது என்கின்றனர்.

ஆனால் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் அவர்களின் வாதங்களுக்கும் விளக்கத்திற்கும் எதிரானதாக உள்ளது.

நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்த போது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அச்சயமம் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து, கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா? என்று கேட்டனர். அப்போது, நபித் தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது! என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்…. என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர்.கட்டுகளிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப்பங்கு வையுங்கள்! என்று ஒருவர் கேட்டபோது, நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள்.அப்போது நபி (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக்கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி) ஆதாரம் : புகாரி 2276

நபி (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று அந்த நபித்தோழரிடம் கேட்டார்கள். இதில் இருந்து அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவதன் மூலம் குறிப்பிட்ட சில நோய்கள் நீங்கும் என்று விளங்குகிறது.

இந்த நபிமொழியின் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். அதன் காரணமாக நோயும் நீங்கியுமுள்ளது. என்று அறிய முடிகிறது. அது ஷைத்தானின் வேலையால் நீங்கவில்லை மாறாக அந்த அத்தியாயத்திற்கு இப்படியான ஒரு சக்தியுன்டு என்று நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். இதைத் தவறு என்று சொல்லவில்லை ஏன் இப்படி செய்தாய் என்றும் கேட்கவில்லை. நோய் நோடிகளுக்கு ஆளாகும் போது இந்த மாதிரி ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது. அதில் மருத்துவம் இருக்கிறதா? என்றால் இருக்கிறது. என்று கூற முடியும். ஆனால் மொத்தக் குர்ஆனையும் இதனால் ஓதிப்பார்க்கக் கூடாது. ஏனென்றால் குர்ஆனில் சில பகுதி என்றுதான் அல்லாஹ் கூறுகிறான். சில என்பதை எது என்பதை அல்லாஹ் நமக்கு விளக்கித் தரவில்லை ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கித் தந்துள்ளார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் இன்னின்ன அத்தியாயங்கள் நோய் நிவாரணமாக அமையும் என்று கற்றுத் தந்துள்ளார்கள் அதில் ஒன்றுதான் சூரத்துல் பாத்திஹா. நோய் ஏற்பட்டுவிட்டால் ஒருவர் மருத்துவத்தையும் செய்து கொண்டு அல்ஹம்து அத்தியாயத்தையும் ஓதினால் அவரின் நோய்க்கு நிவாரணத்தை அது விரைவுபடுத்தும் என்பதை நம்பலாம்.

குறிப்பு :

(அல்லாஹ்வை நம்புவது எப்படி என்ற தலைப்பில் சகோதரர் பி.ஜெ அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமே இந்த ஆக்கம். உரையை எழுத்து வடிவமாக்கியிருக்கிறார் சகோதரர் மனாஸ் அவர்கள்.)

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.