பித்அத்கள்

மரணித்தவரின் மறுமை நன்மைக்காக நாம் செய்யவேண்டிய அனைத்தையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும்.

இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா , ஏழாம்ஃபாத்திஹா , நாற்பதாம் ஃபாத்திஹா , கத்தம் , வருட ஃபாத்திஹாக்கள் , இறந்தவருக்காக ஹல்கா , திக்ருகள் , ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் தமிழக முஸ்லிம்களில் பலர் செய்து வருகின்றனர். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

மார்க்கம் என்ற பெயரில் நாம் எதைச் செய்வதாக இருந்தாலும் அதை “அல்லாஹ்” சொல்லியிருக்க வேண்டும். அல்லது “அல்லாஹ்வின் தூதர்” சொல்லியிருக்க வேண்டும்.

அல்லாஹ்வும் , அவனது தூதரும் கூறாமல் நம்மைப் போன்ற மனிதர்கள் தங்களின் சுயநலனுக்காகவோ , அல்லது அறியாமை காரணமாகவோ உருவாக்கியவை இஸ்லாமாக ஆகாது.

‘ நமது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் ‘ என்று நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 3243.

நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் ‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 2697 , முஸ்லிம் 3242

‘(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். புதிதாக உருவாக்கப்பட்டவை அனைத்தும் பித்அத் (எனும்அனாச்சாரம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும் ‘ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) நூல்: நஸயீ 1560.

அல்லாஹ்வும் , அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.

இரண்டு ரக்அத் தொழுகையில் மற்றொரு ரக்அத்தை அதிகமாக்குவது நன்மையின் தோற்றத்தில் இருந்தாலும் அதை நாம் சரி காணமாட்டோம். இந்த விஷயத்திலும் இது போன்ற தெளிவு நமக்கும் அவசியம்.

நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே மூன்று மகள்களையும் , ஒரு மகனையும் இழந்தார்கள். மனைவி கதீஜாவையும் இழந்தார்கள்.

இறந்தவர்களுக்காக மேற்கண்ட காரியங்களைச் செய்வது நன்மை என்றிருந்தால் தமது குடும்பத்தினருக்காக நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்திருப்பார்கள். ஆனால் இது போன்ற ஃபாத்திஹாக்களை அவர்கள் செய்ததில்லை.

அவர்களுக்குப் பின் பலநூறு ஆண்டுகளாக முஸ்லிம் சமுதாயம் இவற்றைச் செய்ததில்லை. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்வோம்.

ஒருவர் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினர் சோகத்திலும் , கவலையிலும் இருப்பார்கள். அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இறந்த அன்றோ , மறு நாளோ தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதாபிமானமில்லாமல் அக்குடும்பத்தினரின் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

இறந்தவரின் வீட்டுக்கு நாம் சென்றால் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்து எடுத்துச் சென்று நாம் தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் தமக்காக அவர்கள் உணவு சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள்.

ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் மரணித்த செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குஅறிவித்து விட்டு ‘ ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள் ‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) நூல்கள்:அபூதாவூத் 2725 , அஹ்மத் 1660 , திர்மிதி 919 , இப்னுமாஜா 1599

இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது என்று அறியலாம்.

நன்றி:அழகிய இஸ்லாம்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s