நபி வழியைப் பின்பற்றுவதின் அவசியமும் பித்அத் பற்றிய எச்சரிக்கையும்!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

புகழ் யாவும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவன் தான் நமக்கு மார்க்கமாக இஸ்லாத்தைத் தேர்வு செய்து, அதைப் பூரணப்படுத்தித் தந்து, தனது பேரருளையும் புரிந்தவன். அடுத்து அவனுக்கு முழுமையாக அடிபணிவதன் மூலம் வீண் விரயம், புதியன பின்பற்றல், கீழ்ப்படியாமை போன்றவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி மக்களுக்கு அழைப்புவிடுத்து, எச்சரிக்கை செய்த அவனுடைய அடிமையும் திருத்தூதருமாகிய ரசூல்(ஸல்) அவர்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. மேலும் அவர்களுடைய சந்ததியினர், தோழர்கள், அவர்களது அடிச்சுவட்டில் தீர்ப்பு நாள் வரை நடப்பவர்கள் ஆகிய
அனைவருக்கும் அவனது அருள் கிட்டுமாக.

இந்தியாவின் உத்திரப் பிரதேச தொழில் பேட்டையான கான்பூரிலிருந்து வாராந்தரம் வெளிவரும் “இதாரத்” பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரமான ஒரு கட்டுரை என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அக்கட்டுரை, சவூதி அரேபியாவின் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இணக்கமான தன்மையையும், பித்அத் (நூதன கிரியை)களுக்கு எதிரான போக்கையும் எதிர்த்தும் விமர்சித்தும் எழுதப்பட்டு இருந்தது. அதனை எழுதியவர் இங்கு பின்பற்றப்படும் ஸலஃபி (இஸ்லாமிய வழிசென்ற முன்னோர்கள்) கோட்பாடு நபி(ஸல்)அவர்களுடைய சுன்னாவுடன் இணக்கமானதல்ல என்று குற்றச்சாட்டியுள்ளார்.

அதை எழுதியவரின் இம்முயற்சி அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத்தவர் மத்தியில் பிளவைத் தோற்றுவிப்பதையும், பித்அத்கள், மூட நம்பிக்கைகள் போன்றவற்றை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாத்திற்குத் தீங்கு விளைவிப்பதுடன், சத்தியத்திற்கு முரணான பித்அத்களையும் வழிகேடுகளையும் பரப்பும் செயலானது மிகவும் வெறுப்புக்குரிய செயலும் ஆபத்தானதும் என்பதில் ஐயமில்லை.

குறித்த கட்டுரை, சவூதி அரேபியாவினதும், அதன் ஆட்சியினரதும் இஸ்லாமிய வழிமுறை பற்றி பேசும் தொனியில் நபி(ஸல்)அவர்களது பிறந்த தின விழா பற்றி சிற்சில கருத்துக்களை முன்வைத்துள்ளது. எனவே, அது தொடர்பாக மக்களுக்குத் தெளிவு தருவது அவசியம் என்பது என் கருத்து.

அல்லாஹ்வின் உதவியுடன் நான் கூறுவதாவது:
நபி(ஸல்) அவர்களுடைய அல்லது மற்றொருவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல. அது மார்க்கத்தின் பெயரால் கொண்டு வரப்பட்ட ஒரு பித்அத் (நூதன செயல்) என்பதால் நிறுத்தப்படுவது அவசியமாகும்.

நபி(ஸல்) அவர்கள் அதைக் கொண்டாடவில்லை. தனக்காகவோ தனக்கு முன் வாழ்ந்து சென்ற நபிமார்களுக்காகவோ, தனது மகள்கள், மனைவியர், மற்றைய உறவினர்களுக்காகவோ பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறவில்லை. அத்துடன் நேர்வழி நடந்த கலீஃபாக்கள், நபித் தோழர்கள், அவர்களைத் தொடர்ந்தவர்கள் எவருமே பிறந்த தினங்களைக் கொண்டாடவில்லை. முந்தய நூற்றாண்டுகளில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களும் இதைக் கொண்டாடவில்லை. அவர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற முன்மாதிரியை (சுன்னாவை) நன்கு அறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது அளவிலா அன்பு கொண்டவர்கள். அவர்களது ஷரீஅத்தை இக்காலத்தில் வந்தவர்களைவிட மிகச் சரியாகப் பின்பற்றியவர்கள். எனவே பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்றமானது எனக் கண்டிருந்தால் அதை அவர்கள் நிச்சயமாகச் செய்திருப்பார்கள்.

நாம் நபி(ஸல்) அவர்களது சுன்னாவை(வழிமுறையை)ப் பின்பற்றுவதன் மூலம் பித்அத் (நூதனக்கிரியை)களைத் தவிர்த்து கொள்ளும்படி உத்திரவிடப்பட்டுள்ளோம். இந்த உத்திரவு இஸ்லாம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது என்ற தன்மையிலிருந்தும் அல்லாஹ்வும் அவனது ரசூலும் தந்தவை போதுமானவை என்ற நிலைப்பாட்டிலிருந்தும் “அஹ்லுஸ் சுன்னத்துவல் ஜமாஅத்தவரின் அங்கீகாரம் பெற்றது” என்ற உறுதிப்பாட்டிலிருந்தும், “நபித்தோழர் சமூகத்தாலும்” அவர்கள் வழி வந்தவர்களாலும் மிகச் சரியாகப் பின்பற்றப்பட்டது என்ற
நெறிமுறையிலிருந்தும் பெறப்பட்டதாகும்.

நபி(ஸல்) அவர்கள்
மொழிந்தார்கள்:

“யாரேனும் ஒருவர் எம்முடைய விஷயமொன்றில் புதுமையைச்
சேர்க்கின்றாரோ, அது அந்த விஷயம் சார்ந்தது அல்ல, அது நிராகரிக்கப்பட வேண்டும்.”
(புகாரி, முஸ்லிம்)

“முஸ்லிம்” ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள மற்றுமோர்
அறிவிப்பின்படி,

“யாரேனும் ஒருவர் நமக்கு உடன்பாடு இல்லாத செயலொன்றை
செய்வாரெனில் அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக
வருகின்றது.

மற்றொரு நபிமொழி,

“நீங்கள் என்னுடைய
சுன்னாவை (வழிமுறையை)யும் நேர்வழி நடந்த கலீஃபாக்களின் சுன்னாவையும் அனுசரித்து
நடவுங்கள், அவற்றில் உறுதியாக நில்லுங்கள்”, என்று கூறுகின்றது.

மேலும்
“மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப் பட்டவற்றையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள்.
எல்லாப் புதியனவும் நூதனக் கிரியைகளே நூதனக்கிரியைகள் யாவும் வழிகேட்டின்பால்
இட்டுச் செல்பவைகளே” என ஒரு நபிமொழி அறிவிக்கப்படுகின்றது.

நபி(ஸல்) அவர்கள்
தமது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை குத்பா உரைகளிலும், “மிகச் சிறந்த பேச்சு அல்லாஹ்வின்
வேதத்தை(குர்ஆனை) உடையதே, மிக்க சிறந்த வழிகாட்டல் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்
உடையதே, மிகவும் மோசமானவை நூதனக் கிரியைகள், நூதனக்கிரியைகள் யாவும்
வழிகேட்டின்பால் இட்டுச் செல்பவைகளே” என்று மொழிவார்கள்.

எனவே இந்த
நபிமொழிகள் யாவும் நூதனக் கிரியைகளுக்கு எதிரான கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன்,
விழிப்புடன் இருக்கும்படியும் எம்மைப் பணிக்கின்றன. ஏனெனில் அவை எம்மை நேரிய
வழியிலிருந்து வழிகேட்டின்பால் இட்டுச் செல்லக் கூடியன என்பதனாலாகும். நபி(ஸல்)
அவர்கள் நூதனக் கிரியைகளின் பாரதூரத்தையும், பாதகமான விளைவுகளையும் விட்டு
மக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக பல நபி மொழிகளை
ஆதாரமாகக் காட்ட முடியும்.

அல்லாஹ் கூறுகின்றான்.

“மேலும் (நம்)
தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எதை
விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன்
59:7)

மேலும் கூறுகின்றான்,

“ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு
செய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை
நோவினைத் தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (அல்குர்ஆன்
24:63)

இன்னும் கூறுகின்றான்,

“அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின்
மீதும் ஆதரவுவைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப் போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின்
தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது”. (அல்குர்ஆன்
33:21)

மீண்டும் கூறுகின்றான்,

“இன்னும் முஹாஜிர்களிலும்,
அன்சார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களிலும், அவர்களை
(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது
அல்லாஹ் திருப்தியடைகின்றான். அவர்களும் அவனிடம் திருப்தி அடைகின்றார்கள்.
அன்றியும் அவர்களுக்காக சுவனபதிகளைச் தயார்படுத்தி இருக்கின்றான். அவற்றின் கீழே
ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே
மகத்தான வெற்றியாகும்“. (அல்குர்ஆன் 9:100)

மீண்டும்
கூறுகின்றான்.

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப்
பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப்
பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே
(இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”. (அல்குர்ஆன் 5:3)

இறுதியாக
எடுத்துக்காட்டப்பட்ட இறை வசனங்கள், அல்லாஹு தஆலா இந்த உம்மத்திற்கான மார்க்கத்தைப்
பூரணப்படுத்தி தனது அருளையும் பொழிந்து விட்டான் என்பதைத் தெள்ளத் தெளிவாகவே
அறிவிக்கின்றது.

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதை முழுமைப்படுத்தி, தனது
சொல், செயல், அங்கீகாரம் யாவையும் சட்டங்களாக்கி வைத்துவிட்டுத்தான் இவ்வுலகை
விட்டுப் பிரிந்து சென்றார்கள். அத்துடன் மக்களால் மார்க்கத்தினுள் நுழைந்து
பின்னர் மார்க்கமாகக் காட்டக்கூடிய எல்லா வகையான நூதனச் செயல்களும், அவற்றை
உட்புகுத்தியவர்கள் நல்ல நோக்கத்துடன் செய்திருந்தாலும், நிராகரிக்கப்பட
வேண்டியவைகளே என அழுத்தமாகக் கூறிச்சென்றார்கள்.

அல்லாஹ்வின் எதிரிகளான
யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் அல்லாஹ் அனுமதிக்காதவற்றைத் அவர்களது மதத்தினுள்
புகுத்தினார்கள். நூதனக் கிரியைகள் பல கற்பித்தார்கள். அத்தகைய வழிமுறையைப்
பின்பற்றி இஸ்லாத்தினுள் நூதனக் கிரியைகளைக் கற்பித்து அனுமதிக்கப் பட்டவைகளாக
ஆக்குவதை சங்கைமிக்க நபித் தோழர்களும் கண்டித்து, அவற்றிலிருந்து தம்மைப்
பாதுகாத்துக் கொள்ளும்படி எச்சரிக்கையும் விடுத்தார்கள்.

மேலும்,
இஸ்லாத்தினுள் நூதனக் கிரியைகள் சேர்ப்பதானது “இஸ்லாம் முழுமையாகவும் மிகச்
சரியாகவும் இல்லை” எனக் கருதுவதாக அமைய முடியும் அத்தகைய கருத்து மிகத் தீயது
மட்டுமல்ல, “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி
விட்டேன்” என்ற இறை வசனத்தற்கும் நூதனக் கிரியைகள் பற்றிய நபி(ஸல்) அவர்களது
எச்சரிக்கைகளுக்கும் நேர்முரணானது என்பதுமாகும். இவை நம்
கவனத்திற்குரியவை.

நபி(ஸல்) அவர்களுடைய மற்றும் மற்றவர்களுடைய பிறந்த
தினத்தை வருடாவருடம் கொண்டாடுவதானது “அல்லாஹ் மார்க்கத்தைப் பூரணப் படுத்தவில்லை”
“நபி(ஸல்) அவர்கள் தமது மார்க்கக் கடமைகளைத் தமது மக்களுக்கு ஒழுங்காகக் கற்றுக்
கொடுக்கவில்லை” போன்ற கருத்துக்களையும் கொடுக்கின்றன. அவற்றின் காரணமாகவே
பிற்காலத்தில் தோன்றியவர்கள் அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கத்தில் புகுத்தி அவை
தம்மை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைக்கும் என்று
கருதுகின்றார்கள்.

அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பூரணப் படுத்தி அளவற்ற
அருளையும் கொடுத்திருக்க நபி(ஸல்) அவர்கள் தமது தூதை பகிரங்கமாக முன்வைத்து இவை
சுவனத்தைப் பெற்றுத் தரும் நல்லன என்றும் இவை நரக நெருப்பைப் பெற்றுத்தரும் தீயன
என்றும் தமது உம்மத்தவருக்கு அறிவித்திருக்க மேற்கானும் விதத்தில் நினைப்பதும்
சந்தேகத்திற்கிடமின்றி ஆபத்தானது மட்டுமல்ல, அல்லாஹ்வையும் அவன் தூதரையும்
குறைகாண்பதற்குச் சமமான பெரும் பாவச் செயலாகும்.

அல்லாஹ்வின் தூதர்
மொழிந்ததாக ஓர் ஆதாரபூர்வமான நபிமொழியை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)
அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

“(வல்லமை பொருந்திய) அல்லாஹு தஆலா ஒரு நபியை
தமக்குத் தெரிந்த நல்வழியில் தமது மக்களை வழிநடத்திச் செல்லவும் தமக்குத் தெரிந்த
தீமைகளைவிட்டு எச்சரிக்கவும் உரிய உதவி வழங்காது (உலகுக்கு) அனுப்பவில்லை.”
(முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் மிகச் சிறப்பானவர்
என்பதும், தனது தூதை மிகச் சரியாகவும் முழுமையாகவும் நிறைவு செய்து, தமது
மக்களுக்கு அறிவுரை பகர்ந்த இறுதியானவர் என்பதும் யாவரும் மிக அறிந்த
விஷயம்.

அல்லாஹ் தனது அடியார்களுக்குரிய மார்க்கக் கடமைகளுள் ஒன்றாக, மீலாத்
விழா கொண்டாடுவதை அனுமதித்து இருக்க வேண்டும். இல்லையென்றால், நபி(ஸல்) அவர்கள்
தமது தோழர்களுக்கு அது பற்றி விளக்கி, அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அல்லது
அவர்கள் தமது வாழ்வில் அதனைக் கொண்டாடியிருக்க வேண்டும். அல்லது நபித் தோழர்கள்
அதனைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறு எதுவுமே இல்லாததால், மீலாத் விழா
மார்க்கத்திற்கு உடன்பாடான ஒரு விஷயம் அல்ல என்பதை நன்கு தெளிவாக விளங்கிக் கொள்ள
முடிகின்றது. அதோடு இங்கு தரப்பட்ட விளக்கங்களிலிருந்து இது (மீலாத் விழா)
சன்மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் தமது மக்களுக்கு எச்சரிக்கை
செய்ததுமான ஒரு பித்அத் என்பதும் தெளிவாகின்றது.

மேலே தரப்பட்ட ஆதாரங்களின்
அடிப்படையில் எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் மீலாத் கொண்டாடுவதை நிராகரித்துள்ளதுடன்,
அது பற்றி கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

இஸ்லாமிய ஷரிஅத்தின்படி
எந்தவொரு விஷயத்தை அனுமதிப்பதாயினும், அல்லது தடை செய்வதாயினும், அல்லது
மக்களிடையிலான பிணக்குகள் தொடர்பாக ஏதும் நடவடிக்கை எடுப்பதாயினும், அவை
அல்லாஹ்வின் வேதத்து(குர்ஆனு)க்கும், நபி(ஸல்) அவர்களது சுன்னாவுக்கும் இணக்கமாக
இருத்தல் வேண்டும். இது இஸ்லாத்தின் அடிப்படையான வழிமுறை.

அல்லாஹ்
கூறுகின்றான்.

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள்.
இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையான) அதிகாரம்
வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு
ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புபவர்களாக
இருப்பின் – அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான்
(உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.” (அல்குர்ஆன்
4:59)

மேலும் கூறுகிறான்.

“நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை
கொண்டிருக்கின்றீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கின்றது.” (அல்குர்ஆன்
42:10)

இந்த விஷயம் தொடர்பாக அல்லாஹ்வின் அருள்மறையை நோக்குவோமாயின் அது
நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்கும்படி கட்டளையிடுவதைக் காண்போம். அவர்கள்
எவற்றையிட்டு “ஆகும்” என கட்டளை பிறப்பித்தார்களோ அவற்றை ஏற்ற நடப்பதுடன், எவற்றை
“ஆகாது” என எச்சரித்துத் தடுத்தார்களோ அவற்றை விட்டு ஒதுங்கி இருக்கும்படி
அல்குர்ஆன் கட்டளை இடுகின்றது. அத்துடன், அல்லாஹ் மக்களுக்குரிய மார்க்கத்தை
(இஸ்லாத்தை)ப் பூரணப்படுத்தியுள்ளதாகவும் இறைமறை இயம்புகின்றது. எனவே நபி(ஸல்)
அவர்களின் போதனைகளுள் மீலாத் கொண்டாடுவது பற்றி கூறப்படாததால், அது சன்மார்க்கம்
சார்ந்த ஒரு செயல் என ஏற்க முடியாது. மார்க்கம் என்பது அல்லாஹ்வால் நமக்காகப்
பூரணப்படுத்தப்பட்டு நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும்படி
மொழியப்பட்டதாகும்.

அடுத்து, இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை
நோக்குவோமாயின், நபி(ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ அதை கொண்டாடியதற்கு ஆதாரம்
இல்லை. எனவே மீலாத் என்பது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சம் அல்ல எனத் தெளிவாகின்றது.
அது மக்களால் கொண்டுவரப்பட்ட நூதனக் கிரியையும், கண்மூடித்தனமான போலிச்
செயலுமாகும். உதாரணமாக யூதர்களும் கிறிஸ்தவர்களும் கொண்டாடும் திருநாட்களைக்
குறிப்பிடலாம்.

எனவே, நீதி, நேர்மை, சத்தியம் என்பவற்றுடன் அற்ப அளவு உறவும்
உணர்வும் கொண்ட யாராயினும், இதுவரை கூறிய உண்மைகளை மனதில் இருத்தி
நோக்குவார்களெனில் எவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் இஸ்லாத்தில் இடமில்லை
என்பதை அறிவர். உண்மையில் இது அல்லாஹ்வும் ரசூலும் எச்சரித்த நூதனக் கிரியைகளை
(பித்அத்தை) சார்ந்ததாகும்.

அறிவுடன் சந்திக்கும் ஒருவர், உலகளாவிய ரீதியில்
ஏராளமான மக்கள் இதனைக் கொண்டாடுகிறார்களே என ஏமாந்துவிடக் கூடாது. ஏனெனில்,
சத்தியம் ஷரீஅத்தின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதேயன்றி மக்களின் எண்ணிக்கையைக்
கொண்டதல்ல.

வல்லமை பொருந்திய அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி
இவ்வாறு கூறுகின்றான்.

“யூதர்கள் கிறிஸ்தவர்கள் தவிர வேறு யாரும்
சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின்
வீணாசையேயாகும், “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால், உங்களுடைய சான்றை
சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (அல்குர்ஆன்
2:111)

மீண்டும் கூறுகின்றான்.

“பூமியில் உள்ளோரில் பெரும்பாலோரை
நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு
வழிகெடுத்துவிடுவார்கள்.(ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள்
பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்
கிடக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:116)

பித்அத்கள் யாவும் அவற்றின் தன்மையைப்
பொறுத்து பல தீமைகளுக்கு வழிவகுக்கும். ஆண் பெண் கலத்தல், இசையுடன் கூடிய ஆடல்
பாடல்கள், மதுபானம் அருந்துதல், போதைப் பொருட்கள் உட்கொள்ளல் என்பன அவற்றுள் சில.
அத்துடன் நபி(ஸல்) அவர்கள் மீதும், இன்னுமுள்ள நல்லடியார்கள் மீதும் அளவு கடந்த
அன்பு பூண்டு, அவர்களிடம் பிரார்த்தனைப் புரிவதும், அவர்களது உதவிநாடி கெஞ்சுவதும்,
அவர்கள் மறைவானவற்றை அறிந்துள்ளனர், என்ற நம்பிக்கையுடன் நாட்டங்கள் நிறைவேற்ற
வேண்டுதல் புரிவதும் கூட நடைபெறும், இவை மிகப்பெரிய ஷிர்க் (இணைவைத்தல்) சார்ந்த
செயல்களே. இவற்றின் மூலம் அவர்கள் இறைநம்பிக்கை அற்றவர்களாக
மாறிவிடுவர்.

நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்று இவ்வாறு
காணப்படுகின்றது.

“நீங்கள் மார்க்கத்தில் வீண் செலவையிட்டு எச்சரிக்கையாய்
இருங்கள். உங்களுக்கு முன்னிருந்த மக்கள் இதனால் அழிந்து
போயுள்ளனர்.”

மீண்டும் அவர்கள் மொழிந்ததாகக்
காணப்படுவதாவது.

“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து
கொண்டதுபோல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை
மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று
கூறுங்கள்.” (புகாரி)

நம் சமூகத்தின் மிக முக்கியமானவர்கள் கூட இத்தகைய
விழாக்களில் மிகத் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயற்படுவதையும், இவற்றுக்குச் சார்பாக
கருத்து வெளியிடுவதையும் காண்கின்றோம். அத்தகையவருள் பலர் ஐவேளைத் தொழுகைளையோ
ஒழுங்காக நிறைவேற்றாதிருப்பது ஆச்சரியமும் வேதனையும் மிக்கதே. இது பற்றி அவர்கள்
வெட்கப்படுவதாகவோ, வேதனைப் படுவதாகவோ, பெரும் பாவமொன்றில் ஈடுபட்டுள்ளோமே என
உணர்வதாகவோ தெரிவதில்லை.

எத்தகைய சந்தேகமுமின்றி இத்தகையவர்களின் இச்செயல்
இவர்களது பலவீனமான விசுவாசத்தையும், தூரநோக்கில்லாத தன்மையையும்,
துருப்பிடித்துவிட்ட உள்ளங்களின் இறுக்கமான போக்கையுமே தெளிவு படுத்துகின்றது.
இவர்களது பாவச் செயல்களும், கீழ்ப்படியாமையுமே இந்நிலைக்குக் காரணம். அல்லாஹ்
நம்மையும் எல்லா முஸ்லிம்களையும் இந்நிலையிலிருந்து பாதுகாப்பானாக.

இங்கு
குறிப்பிடவேண்டிய மிகவும் அதிசயமும் ஆச்சரியமுமான மற்றொரு விஷயம் என்னவெனில்,
சிலர், மீலாத் விழாக்களின் போது நபி(ஸல்) அவர்களும் அங்கு பிரசன்னமாகி இருப்பார்கள்
என நம்புவதே. இதன் காரணமாக அவர்கள் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களை வரவேற்று
வாழ்த்துகின்றார்களாம். இது அப்பட்டமான பொய் மாத்திரமன்று. மிக மோசமான அறிவீனமும்
கூட. நபி(ஸல்) அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் கியாமத் தினத்திற்கு முன் அவர்களது
அடக்கத்தளத்திலிருந்து எழுந்து வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் மக்களை
சந்திக்கவோ, அவர்களது கூட்டங்களில் கலந்துகொள்ளவோ மாட்டார்கள். மாறாக, அவர்கள்
மீண்டும் எழுப்பப்படும் கியாமநாள் வரை தமது அடக்கத்தளத்திலேயே இருப்பார்கள்.
அதேவேளை அவர்களது தூய ஆன்மா உயர்ந்த, கண்ணியமான அந்தஸ்தில் அல்லாஹ்வுடன்
இருக்கும்.

அல்லாஹு தஆலா கூறுகின்றான்.

“பிறகு, நிச்சயமாக நீங்கள்
மரணிப்பவர்களாக இருக்கின்றீர்கள். பிறகு, கியாம நாளன்று நிச்சயமாக நீங்கள்
எழுப்பப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 23:15,16)

நபி(ஸல்) அவர்கள்
மொழிந்தார்கள்.

நான்தான் கியாம நாளன்று முதன்முதலாக எழும்புபவன், நானே
முதலாவதாக (மற்றவர்களுக்காக) பரிந்து பேசுபவன், என்னுடைய பரிந்து பேசுதலே முதலாவதாக
ஏற்கப்படும்.

குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக் காட்டப்பட்ட
மேற்காணும் மேற்கோள்கள் மரணித்த எவருமே கியாம நாளுக்கு முன் தமது அடக்கத்
தளங்களிலிருந்து எழுந்து வருவது இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி
நிரூபிக்கின்றன. அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் இது விஷயத்தில் ஒருமித்த கருத்தைக்
கொண்டுள்ளனர். ஒவ்வொரு முஸ்லிமும் இவை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
அவ்வாறின்றி, அல்லாஹ்விடமிருந்து எத்தகைய அதிகாரமும் பெறாத அறிவு குன்றிய மக்கள்
உருவாக்கியுள்ள பித்அத்கள், மூட நம்பிக்கைகள் என்பனவற்றை நம்பி, எளிதில் தவறான
வழியில் செல்பவர்களாக இருக்கக் கூடாது.

நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும்
ஸலாமும் மொழிவதானது, அல்லாஹ்வுடைய கூற்றுக்களுக்கு ஏற்ப, மிக ஏற்றமான சிறப்புமிக்க
செயற்களுள் அமைந்தனவாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்.

“இந்த நபியின் மீது
அல்லாஹ் அருள் புரிகின்றான், மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர்.
முஃமின்களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.”
(அல்குர்ஆன் 33:56)

நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.

“எவரொருவர் என்
மீது ஒருமுறை ஸலவாத்துச் சொல்கிறாரோ, அவர்மீது அல்லாஹ் பத்து முறை தனது அருளைச்
சொரிகின்றான்.”

இது எல்லா நேரத்திலும், குறிப்பாக ஒவ்வொரு தொழுகையின்
பின்னர் மொழிவது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழுகையின் இறுதி
கட்டத்தில் இதை மொழிவது கட்டாயம்(தஷஹ்ஹீத்) என இஸ்லாமிய அறிஞர்கள் பலரால்
கூறப்பட்டுள்ளது. ஹதீஸ்களின்படி “அதான்” அழைப்பு விடுக்கப்பட்டவுடனும், நபி(ஸல்)
அவர்களுடைய பெயரைக் கேட்டவுடனும், வெள்ளிக்கிழமைப் பகலிலும் இரவின் ஆரம்பத்திலும்
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது மிக மிக அவசியம் என
வேண்டப்பட்டுள்ளது.

இதுதான் இந்த விஷயம் தொடர்பாக நான் வலியுறுத்திக்
கூறவிரும்புவதாகும். எவர்கள் அல்லாஹ்வின் அருளொளி கிடைக்கப் பெறுகின்றார்களோ
அவர்கள் அனைவரும் இவ்விளக்கங்களால் திருப்தியுறுவார்கள் என்று
எதிர்பார்க்கின்றேன்.

இனி, நபி(ஸல்) அவர்கள் மீது ஆழ்ந்த விசுவாசமும்,
அளவிலா பற்றும் கொண்ட பக்திமிகுந்த முஸ்லிம்களுள் சிலர் இத்தகைய நூதனமா(பித்அத்தா)ன
கொண்டாட்டங்களை சரிகாணுவது வேதனையாயுள்ளது. அத்தகைய மக்களிடம் கேட்கின்றேன்,
“எமக்குக் கூறுங்கள். நீங்கள் அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த, நபி(ஸல்)
அவர்களது அடிச்சுவட்டில் செல்ல விரும்புகின்ற ஒருவராயின் தயவுசெய்து கூறுங்கள்,
நபி(ஸல்) அவர்கள் மீலாத் கொண்டாடினார்களா? அவர்களது தோழர்களோ அடுத்து வந்தவர்களோ
கொண்டாடினாhகளா?” இல்லையே! உண்மையில், இச்செயல் இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள்,
கிறிஸ்தவர்களிடமிருந்து பெறப்பட்டதே. அதனை நம்மவர்கள் கண்மூடித்தனமாகப்
பின்பற்றுகின்றனர்.

இத்தகைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நபி(ஸல்) அவர்கள்
மீது அன்பு பாராட்டும் வழிமுறை சார்ந்தது அல்ல. அவர்கள் மீது அன்பு பாராட்டுபவர்கள்
அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்களது போதனைகளை நம்பி நடக்க வேண்டும்.
அவர்கள் தடுத்தவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும். அவர்கள் காட்டித்தந்த முறைப்படி
அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு வர வேண்டும். இதுதான் நமக்குரிய நடைமுறை. அத்துடன்
ஒவ்வொரு வேளையிலும், குறிப்பாகத் தொழுகை வேளைகளில் நபிகளார் பெயர் வரும்போது
ஸலவாத்தும் ஸலாமும் மொழிவதன் மூலம் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பை அழகாக
வெளிப்படுத்த முடியும்.

அந்தக் கட்டுரையாளர் குறிப்பிடுவது போல்
வஹ்ஹாபிய்யத்தைச் சேர்ந்தவர்கள் இத்தகைய நூதனக் கிரியை (பித்அத்)களை நிராகரிப்பது
புதிய விஷயமே அல்ல. அவர்கள் குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்களது சுன்னாவிலும், ஆழ்ந்த
நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள். நபி(ஸல்) அவர்களது அடிச்சுவட்டிலும், அவர்களைத்
தொடர்ந்து நல்வழி நடந்த நல்லவர்கள் அடிச்சுவட்டிலும் நடக்க ஆர்வம் கொண்டவர்கள்.
குர்ஆனிலும் நபி(ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது போலவும்,
நபித்தோழாகளால் முழுமனதுடன் ஏற்கப்பட்டது போலவும், அல்லாஹ்வின் பேரறிவு, பண்புகள்,
பேராற்றல் பற்றி நன்கு கற்றுணர்ந்து, மார்க்கக் கட்டளை பிறப்பிக்கும் தகுதிபெற்ற
முன்னோர்கள், இமாம்கள், ஆகியோரது கூற்றுக்களை நம்பி நடைமுறைபடுத்தவும் ஆர்வம்
கொண்டவர்கள். மார்க்க விவகாரங்களில் எத்தகைய திருத்தமும், உருவகம் உதாரணம் என்பன
மூலம் சிதைத்தலும், மறுத்தலும் செய்யப்படாமல் அறிவிக்கப்படுபவைகளை வஹ்ஹாபிய்யத்தைச்
சேர்ந்தவர்கள் நம்புகின்றவர்கள், ஆழ்ந்த அறிவும், நம்பிக்கையும், இறையுணர்வும்
கொண்ட முன்னோர்களும் அவர்களது வழிநடந்தவர்களும் காட்டிய வழியில் உறுதியாக நிலைத்து
நிற்பவர்கள். மார்க்கத்தின் அடித்தளம் “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடத் தகுந்த
வேறு இறைவன் இல்லை, முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய திருத்தூதர்” என்ற நம்பிக்கையின்
மீது அமைந்துள்ளது என்பதை முழுமனதுடன் நம்புபவர்கள். அவர்களைப் பொறுத்தமட்டில்
இதுதான் நம்பிக்கையின் ஆணிவேராகும். முஸ்லிம்களின் ஏகோபித்த கருத்துப்படி இந்த
அம்சங்கள் பற்றிய ஆழ்ந்த அறிவும், அங்கீகாரமும் – அவற்றை அடியொட்டிய செயலும் மிக
அவசியம் என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.

கலிமாவின் கருத்தாவது வல்லமை
பொருந்திய அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும். வழிபட வேண்டும் என்பதை உணர்த்தி
நிற்கின்றது. அவனுக்கு வேறு எவரையும் துணை கற்பிக்கக் கூடாது. அவனையன்றி வேறு
எவரையும் வணங்கி, வழிபடுவதை மறுக்க வேண்டும் என்பனவற்றையும் குறிப்பிடுகின்றது.
எனவே, ஜின்களும் மனித வர்க்கமும் ஏன் படைக்கப்பட்டது. நபிமார்கள் ஏன்
அனுப்பப்பட்டார்கள். வேதக் கிரந்தங்கள் ஏன் அருளப்பட்டன என்பன நன்கு
தெரியவருகின்றது.

மேலும், “இபாதத்” என்பது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதும்,
அவன் மீது அன்பு செலுத்துவதும் மட்டும் அல்ல. அதன் முறையான கருத்து என்னவெனில்
அவனுக்கு மட்டும் முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, வணங்கி, வழிபட்டு, வாழ்தல்
என்பதாகும். அல்லாஹு தஆலாவால் அருளப்பட்டு நபிமார்களால் பரப்பப்பட்ட ஒரே மார்க்கம்
இஸ்லாம் மட்டுமே. இறந்த காலத்திலும் இன்னும் இதுவன்றி இன்னுமொரு மார்க்கம்
இறைவனிடம் ஏற்கப்படவோ, அங்கீகாரம் பெறவோமாட்டாது. எனவே இதன்படி வாழ்தலே இவ்வுலக
மக்கள் அனைவருடைய கடமையாகும்.

ஒருவர் அல்லாஹ்வுக்கு அடிபணிவதுடன், அதேவிதமான
அடிபணிவை மற்றொருவருக்கும் செலுத்துவாராயின் அவர் ஒரு முஷ்ரிக் (இறைவனுக்கு
இணைவைப்பவர்) ஆவார். அதே போன்று எவரொருவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதுடன்
மற்றொருவரிடமும் பிரார்த்தனை புரிகின்றாரோ அவரும் அதே தரத்தை உடையவராவார்.
எவரொருவர் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அடிபணிந்து நடக்கவில்லையோ அவர்
அல்லாஹ்வுக்காக தனது கடமைகளில் தவறு செய்கின்ற தற்பெருமை
பிடித்தவராவர்.

அல்லாஹ் கூறுகின்றான்.

“மெய்யாக நாம் ஒவ்வொரு
சமூகத்தாரிடமும் “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். ஷைத்தான்களை விட்டும் நீங்கள்
விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பிவைத்தோம்.”
(அல்குர்ஆன் 16:36)

முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று
முழுமையாக சான்று பகரும் வகையிலேயே வஹ்ஹாபியத்தின் அடித்தளம் சார்ந்த நம்பிக்கை
கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அதே நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்து
பித்அத்களையும், மூட நம்பிக்கைகளையும், ஷரீஅத்திற்கு மாறானவற்றையும், ஒதுக்கித்
தள்ளவும் விழைகின்றது. இவற்றையே தாமும் நம்பி நடந்ததுடன், மற்றவரையும், நம்பி
நடக்கும்படி ஷெய்க் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) அவர்கள் அறிவுரை
பகர்ந்தார்கள். இது தொடர்பாக யாரேனும் அவரைப் பற்றி முரண் வழியில்
பேசுகின்றாரேனில், அவர் பொய் பேசுகிறார் என்பது மட்டுமல்ல, எத்தகைய ஆதாரமுமில்லாத
ஓர் அம்சத்தைப் பேசி பாவத்தைச் சுமக்கின்றார் என்று தான் கூற வேண்டும்.
இட்டுக்கட்டப்படும் எல்லா விதமான பொய்களுக்கும் அல்லாஹ் எத்தகைய தண்டனைகளை
கொடுப்பதாகக் கூறியுள்ளானோ, அவற்றை இவ்வாறு பொய் பேசுபவர்கள் பெறுவர் என்பதில்
ஐயமில்லை.

ஷெய்க் அவர்கள் “ஏகத்துவப் பிரகடனம், லா இலாஹஇல்லல்லாஹ்” என்ற
தலைப்பில் எழுதிய ஆய்வு நூல்கள் பலவற்றில் தமது கருத்துக்களை அழகுற
எடுத்தியம்பியுள்ளார்கள். அவற்றின் மூலம், வல்லமைப் பொருந்திய அல்லாஹ்வைத் தவிர
வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை” என நம்பி, அதற்கு பொருத்தமாக வணங்கி வழிபட்டு
வருவதானது சிறிய பெரிய அனைத்து ஷிர்க்களிலிருந்தும் பாதுகாப்பைத் தரும் என
விளக்கிக் கூறியுள்ளார்கள். யாரேனும் ஒருவர் அவரது இந்த நூல்களைப் படித்திருந்தால்
அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்து போதனை செய்த அவரது முறையைத் தெரிந்திருந்தால்,
அவரது மாணவர்கள், சீடர்களின் தன்மையை அறிந்திருந்தால், அவர் போதனை செய்தவைகளும்,
அவற்றிற்கான முறைகளும் ஸாலிஹான முன்னோர்கள், கண்ணியமிக்க இமாம்கள் ஆகியோர் போதித்து
காட்டித்தந்த முறைகளுக்கு மாறாக இல்லை என்பதை மிக எளிதில் அறிந்து கொள்வர்.
உண்மையில் அந்த சங்கை மிக்க முன்னோர்கள் “அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கவேண்டும்.
பித்அத்களை, மூட நம்பிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்” என்ற ரீதியில் காலமெல்லாம்
ஆற்றிவந்த அழகான பணிகளையே இவரும் ஆற்றி வந்தார். நிலைநிறுத்தினார் என்பது வரலாறு
எடுத்துக்கூறும் பேருண்மை.

இதுதான் சவூதி அரசின் அடித்தளமாக இருக்கின்றது.
சவூதி அரேபிய இஸ்லாமிய அறிஞர்களும் இக்கருத்துக்களையே கொண்டுள்ளனர். இஸ்லாத்திற்கு
முரணான மூட நம்பிக்கைகள், பித்அத்கள் ஆகியவற்றிற்கும், நபி(ஸல்) அவர்கள்
முழுமையாகத் தடை செய்த வீண் விரயங்களுக்கும் எதிரான கடுமையான போக்கை சவூதி அரசு
கடைப்பிடிக்கின்றது. சவூதி அரேபியாவைச் சேர்ந்த எல்லா முஸ்லிம்களும், இஸ்லாமிய
அறிஞர்களும், ஆட்சியாளரும் உலக முஸ்லிம்கள் அனைவரையும் மதித்து அன்பு
பாராட்டுகின்றனர். அந்த வகையில் அவர்கள் எந்த நாட்டை, பிரிவை, அமைப்பைச்
சேர்ந்தவர்கள் என எவரையும் நோக்குவது இல்லை. அல்லாஹ்வும் நபி(ஸல்) அவர்களும்
அங்கீகரிக்காத பித்அத்கள் சார்ந்த எல்லா விதமான கொண்டாட்டங்களையும், மக்கள் ஒன்று
கூடலையும் அவர்கள் நிராகரிக்கின்றனர். அவற்றை அவ்வாறு நிராகரிக்கக் காரணம்,
“மார்க்கத்தில் சேர்க்கப்படும் எல்லாப் புதியவைகளும் பித்அத்களே, அவற்றைப்
பின்பற்றுவது ஆகாது” என முஸ்லிம்கள் கட்டளையிடப் பட்டுள்ளனர் என்பதனாலேயே இஸ்லாம்
மிகச் சரியானது பூரணத்துவமானது.

அல்லாஹ்வும் அவனது ரசூலும் கட்டளைப்
பிறப்பித்து, நபித் தோழர்களாலும், அவர்கள் வழிவந்தவர்கள். அவர்களைப்
பின்பற்றியவர்கள் ஆகியோராலும் பெறப்பட்டு, அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தினரால்
ஏற்கப்பட்ட எதிலும் எத்தகைய கூட்டலும் செய்வதற்கு அவசியமே இல்லை. மீலாத் விழாக்
கொண்டாடுவது பித்அத் என்பதாலும், வீண் செலவு, ஷிர்க் என்பவற்றைக் கொண்டுவருவது
என்பதாலும் அதைத் தடுக்க வேண்டும் எனக் கோருவது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த
இஸ்லாமிய வழிமுறைகளுக்கு முரணானது அல்ல. மாறாக, “மார்க்க விஷயத்தில் வீண்
செலவையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுக்கு முன்னிருந்தோர் மார்க்க
விஷயங்களில் வீண் செலவு செய்ததால் அழிந்து போனார்கள்” என்ற ஹதீஸின் படி நபி(ஸல்)
அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகும்.

நபி(ஸல்) அவர்கள் மீண்டும்
மொழிந்தார்கள்.

“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டதுபோல்
நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நாம் ஓர் அடிமை மாத்திரமே.
எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” எனக் கூறுங்கள்.”
(புகாரி)

இவைதான் அச்சஞ்சிகையில் பிரசுரமான குறிப்பிட்ட கட்டுரை தொடர்பாக
நான் கூற விரும்புபவை.

அல்லாஹ் எம்மையும் எல்லா முஸ்லிம்களையும் அவனுடைய
மார்க்கத்தை விளங்கவும், அதிலே நிலைத்து நின்று உறுதியோடு நடக்கவும்
அருள்புரிவானாக. அவன் தயாளமும் கருணையும் மிக்கவன்.

அல்லாஹ் அவனது அருளையும்
கருணையையும் நமது உயிரிலும் மேலான நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களது சந்ததியினர்,
தோழர்கள் மீதும் பொழிவானாக

மூல ஆசிரியர் :
மதிப்பிற்குரிய ஷேக் அப்துல் அஜீஸ் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்)
தமிழில் : மௌலவி
எஸ்.எம்.மன்சூர்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.