இஸ்ராயீல்????
27/08/2012 பின்னூட்டமொன்றை இடுக
‘மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றிட இஸ்ராயீல்’ என்ற வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான்; அவர் தான் உயிர்களைக் கைப்பற்றுகின்ற வானவர்’ என்று பரவலாக நம்புகிறார்கள்.
ஆனால் இஸ்ராயீல்’ என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள்நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை.
ஒரே ஒரு வானவர் தான் அனைவருடைய உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆனை நாம் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு மனிதனின் உயிரைக் கைப்பற்றுவதற்கும் தனித் தனியான வானவர்கள் இருப்பதாக பின்வரும் வசனம் கூறுகிறது.
‘உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்’ என்றுகூறுவீராக!
திருக்குர்ஆன் 32:11.
அதிகமான மக்களைப் பற்றி பன்மையாகப் பேசும் போது ‘அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றுவார்கள்’ என்று பன்மையாகவே கூறப்படுகிறது.
நம்முடைய தூதர்கள் அவர்களின் உயிர்களைக் கைப்பற்றுவார்கள் என்று பின்வரும் வசனங்களிலும் பன்மையாகக் கூறப்படுவதைக் காணலாம்.
“அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 6:61.
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட,அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார் ? விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களைக் கைப்பற்ற நமது தூதர்கள் அவர்களிடம் வரும் போது ” அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே ?” என்று கேட்பார்கள். ” எங்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர் ” என அவர்கள் கூறுவார்கள். ” நாங்கள் (ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம் ” எனத் தமக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 7:37.
மேலும் உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் பலர் உள்ளனர் எனக் கூறும் திருக்குர்ஆன் வசனங்கள்:
அவர்களின் முகங்களிலும், பின் புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்?
திருக்குர்ஆன் 47:27.
அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிட மிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது ‘ எனக்கூறுபவன், அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன்’ என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார் ? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள் . ‘உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் , அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள் !’ (எனக்கூறுவார்கள்).
திருக்குர்ஆன் 6:93.
தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது , ‘நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை’ என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள் . அவ்வாறில்லை! நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன் .
திருக்குர்ஆன் 16:28.
நல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி , ‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள் !’ என்று கூறுவார்கள்.
திருக்குர்ஆன் 16:32.
தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டோரின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது, ”நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று கேட்பார்கள். ”நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்” என்று இவர்கள் கூறுவார்கள். ”அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?” என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.
திருக்குர்ஆன் 4:97.
( ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும் , முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது , ” சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்! ” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!
திருக்குர்ஆன் 8:50.
அனைவருடைய உயிரையும் கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் தான் இருக்கிறார்’ என்ற நம்பிக்கை தவறானது என்பதை மேலே கண்ட வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற உத்தரவு வருகிறதோ அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரை யிலிருந்தும் கிடைக்கின்ற முடிவாகும்.
ஒரு வானவர் உலகத்திலுள்ள அனைவருடைய உயிர்களையும் கைப் பற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக் கின்றார் என்று சொல்லப்படுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை.
எனவே இஸ்ராயீல் என்ற கற்பனை மலக்கை மறந்து உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் பலர் என்றும் ஒவ்வொரு உயிரைக் கைப்பற்ற, ஒவ்வொரு வானவரை அல்லாஹ் நியமித்துள்ளான் என்று கூறும் திருக்குர்ஆனின் வசனங்களை நம்புவோம்.
அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்ட போதுமானவன்.