மரணத்திற்கு பின் மனிதன்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!மரணத்திற்குப் பின் மனிதன் மீண்டும் எழுப்பப்டுவது தொடர்பாக அல்-குர்ஆன் நெடுகிலும் பேசப்படுகிறது. 

அனைத்து கொள்கைகளும், மதங்களும் மரணத்தை ஏற்றுக்கொண்டாலும், மரணத்திற்குப் பின் உள்ள நிலை சம்பந்தமாக மாறுபட்ட பல கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மரணத்திற்குப்பின் மனிதனின் நிலை பற்றி தெளிவான ஒரு கொள்கையை உலகிற்கு முன்வைக்கிறது. அது தொடர்பாக எழக்கூடிய சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களையும் அளிக்கின்றது. மனிதன் இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை, அல் குர்ஆன் இறுதித்தீர்ப்பு நாள் என்று அறிமுகப்படுத்துகின்றது, அந் நாளில் படைப்பினங்களை எழுப்புவது இறைவனுக்கு இலகுவான காரியம் என்பதை தொடர்ந்து வரக்கூடிய அல் குர்ஆனிய வசனங்கள் உறுதி செய்கின்றன.

‘அல்லது ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் (நபியே! நீர் பார்க்கவில்லையா? அவர்) அதிலுள்ள முகடுகளின் மீது அவைவீழ்ந்து கிடக்க (க் கண்டு) இதனை எவ்வாறு இது இறந்தபின், அல்லாஹ் உயிர்ப்பிப்பான்? என்று கூறினார். ஆகவே அல்லாஹ், அவரை நூறு ஆண்டுகள் வரை மரணித்திருக்கச் செய்து, பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரிடம்) ‘நீர் எவ்வளவு காலம் இருந்தீர்?’ எனக் கேட்டான்; அதற்கவர் ‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சில பாகம் இருந்தேன்’ எனக்கூறினார். (அதற்கு அல்லாஹ்) ‘அன்று! நீர் நூறு வருடங்கள் (இந்நிலையில்) இருந்தீர் என்று கூறினான். ஆகவே உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும் நீர் நோக்குவீராக! அவை எவ்வித மாறுதலும் அடையவில்லை. இன்னும், உம்முடைய கழுதையின்பால் நோக்குவீராக! மனிதர்களுக்கு உம்மை ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்குவதற்காகவும் (மரணிக்கச் செய்து உம்மை உயிர்கொடுத்து எழுப்பினோம்) இன்னும், (அக்கழுதையின்) எலும்புகளின் பால், எவ்வாறு அவைகளைச் சேர்த்து பின்னர் அதன் மாமிசத்தை அணிவிக்கின்றோம்’ என்று நீர் நோக்குவீராக! பின்னர் அவருக்குத் தெளிவான போது அவர், ‘நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் என்று நான் அறிகிறேன்’ என்று கூறினார். (2: 259). இச் செய்தியினூடாக பல விடயங்கள் புலப்படுகின்றன. அவரின் தூக்கம் நூறு வருடத்தை எட்டியிருந்தும், அவரது உடல் முழுமையாக பாதுகாக்கப்பட்டிருந்தது.

அவருடன் இருந்த உணவு எந்து மாறுதலுக்குள்ளாகாமல் இருந்தது, எனினும் அவர் பிரயாணம் செய்த கழுதை இறந்து அதனது உடல் மக்கிப்போய் இருந்தது. நீண்ட நாட்கள் அவன் துயில் கொண்டதற்கு இதுவே அவன் முன் ஆதாரமாக இருந்தது. அல்லாஹ் இவைகளைப் பாதுகாப்பதற்கு காற்றை உபயோகித்த விதம் மிக அற்புதமானது. இந் நிகழ்ச்சியின் மூலம் அல்லாஹ் தனக்கு மரணத்திற்குப் பின் எழுப்புவது மிக இலகுவான காரியம் என்பதை உலகிற்கு தெளிவு படுத்துகிறான். இன்னும் இப்றாஹீம் (அலை) தொடர்பான ஒரு செய்தியில் அவருக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை நீக்கும் விதமாக இச்செய்தி அமைந்துள்ளது.
‘இன்னும் இப்றாஹீம் என் இரட்சகனே! மரணித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய்? என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக எனக் கூறிய போது, அவன், நீர் நம்பவில்லையா? என்று கேட்டான். அ(தற்க)வர் ஏன் இல்லை! (நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.) என்னுடைய இதயம் அமைதியடைவதற்காக என அவர் கூறினார். (அதற்கு அல்லாஹ்) பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து, பின்னர் நீர் அவைகளைத் துண்டாக்கி அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்து விடுவீராக! பின்னர், அவைகளை நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் வேகமாய் வந்து சேரும்; மேலும் நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன் என்பதை நீர் அறிந்து கொள்வீராக! எனக் கூறினான்’ (2: 260). கைகளின் விரல் நுணிகளைக் கூட பழைய நிலையிலேயே படைப்பதற்கு நாம் சக்தியுள்ளவர்கள் என அல்லாஹ் கூறுகிறான்:

‘ஆம்! அவனுடைய விரல்களின் நுணிகளை (முன்பிருந்தது போல் இணைத்துச் சரிப்படுத்திச் செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோராக இருக்கிறோம்’ (75: 4). மனிதனின் உடல் அடக்கப்பட்டதன் பின்னால் அது மண்ணில் கலந்து மக்கிப்போய் விடுகிற ஒரு நிலையில் அவனை மறுபடி எவ்வாறு எழுப்புவது என்று மறுமை வாழ்வுக்கு எதிராக அன்று வாழ்ந்த இறை நிராகரிப்பாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது, மக்கிப்போன மனிதனின் உடலை மாத்திரம் அல்ல விரல்களின் நுணிகளையும் ஆரம்பத்திலிருந்தது போன்று நாம் படைக்க ஆற்றலுடையவர்கள் என்பதை மேற்கூறப்பட்ட வசனத்தை அருளி அல்லாஹ் உறுதிப்படுத்தினான்.மறுமை நாளில் ஒருவனின் அந்தரங்க நிலை பற்றித் தீர்ப்பளிக்கப்படும் என விபரிக்கின்ற குர்ஆன், மனிதனின் விரல் நுணிகளைப் பற்றி விஷேசமாகக் குறிப்பிடுவதன் மூலம் ஒரு விஞ்ஞான உண்மையையும் உலகுக்கு தெளிவுப் படுத்துகின்றது. இன்றைய உலகில் 600 கோடி மக்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் அனைவரினதும் கை ரேகைகள் வித்தியாசமானவை என்பது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான உண்மையாகும். எனினும் இவ்விஞ்ஞான உண்மையை அல் குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எந்த விஞ்ஞான முன்னேற்றமும் இல்லாத ஒரு காலத்தில் தெளிவு படுத்தியது என்றால் நிச்சயமாக இப்புனிதக் குர்ஆன் சாதாரண ஒரு மனிதனின் வார்த்தைகளாக இருக்க முடியாது மாறாக இவ்வுலகையும், இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் படைத்த, அனைத்தைப் பற்றியும் ஞானமுள்ள வல்ல அல்லாஹ்வின் கூற்றாக மாத்திரமே இது இருக்க முடியும். இவ்வளவு மாற்றங்களுடன் மனிதனைப் படைத்த இறைவனுக்கு மறு படியும் அவனை எழுப்புவது என்பது மிக இலகுவான காரியம்.அல்லாஹ் அல் குர்ஆனில் மற்றுமோர் இடத்தில் வாலிபர்களுடன் தொடர்புபட்ட ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறான். அதுவும் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.அநியாயக்கார ஒரு ஆட்சியாளனிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்த அவர்கள் அவனது அநியாயங்களில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக ஊரை விட்டுத் தூரமாக உள்ள ஒரு குகையினுள் தஞ்சம் புகுந்தனர்.

தங்களது களைப்பைப் போக்கிக் கொள்ள தூக்கத்தில் வீழ்ந்த அவர்கள் நீண்ட காலம் தூங்கினர். “அவர்கள் (அதில் எவ்வளவு காலம் இருந்தனர் என்பதைத்) தங்களுக்கிடையே கேட்டு (அறிந்து)க் கொள்ளும் பொருட்டு (நித்திரை செய்யும்) அவர்களை இவ்வாறே நாம் எழுப்பினோம். அவர்களிலிருந்து கேட்பவர் ஒருவர், நீங்கள் எவ்வளவு நேரம் நித்திரையில் இருந்தீர்கள்? என்று கேட்டார். (அதற்கு) அவர்களில் சிலர், ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது தங்கி இருந்திருப்போம் என்று கூறினார்கள்; (மற்றும் சிலர்) நீங்கள் (நித்திரையில்) தங்கி இருந்த (காலத்)தை உங்கள் இரட்சகன் தான் நன்கு அறிந்தவன்; ஆகவே உங்களில் ஒருவரை உங்களின் இந்த வெள்ளி நாணயத்தைக் கொண்டு, பட்டணத்திற்கு அனுப்பிவையுங்கள்; அவர் (அங்கு சென்று,) எது மிகச்சுத்தமான உணவு என்பதை(த் தேடி)ப்பார்த்து அதிலிருந்து உணவை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; இன்னும் அவர் (ஊர் மக்களிடம்) இனிதாக நடந்து கொள்ளவும; உங்களைப் பற்றி (மனிதர்களில்) எவருக்கும் நிச்சயமாக அவர் அறிவித்துவிடவும் வேண்டாம் என்று கூறினார்கள்’ (15: 19). இந் நிகழ்ச்சியினூடாகவும் அல்லாஹ்வின் ஆற்றல் விளக்கப்பட்டுள்ளது. பூமியில் ஒருவர் நீண்ட காலம் தூங்கும் போது அவரது உடலை மண் சாப்பிடுவதுதான் இயல்பு. ஆனால் இங்கு இவர்கள் பல நூறு வருடங்கள் தூங்கியும் அவர்களது உடல் அவ்வாறே பாதுகாக்கப்படுகிறது இது அல்லாஹ்வுடைய ஆற்றலை தெளிவு படுத்துகிறது.மனிதன் மரணித்ததன் பின் மறுபடி எழுப்பப்படுவதற்கு அல்லாஹ் அல் குர்ஆன் மூலம் தெளிவுபடுத்தும் அழகான உதாரணமாவது, காய்ந்து, வரண்டு இறந்து போன ஒரு பூமி, இந்தப் பூமி மறுபடி செழித்து வளருமா? என்று நினைக்கின்ற அளவுக்கு ஒரு மோசமான நிலையை அடைந்து விட்டதன் பின்னர் மழையைப் பொழிவிக்கச் செய்து அதை உயிர்ப்பிப்பதற்கு சமமானதாகும் என கூறுகிறான்.

மக்கிப் போன மனித உடலை, இறந்து போன பூமியை உயிர்பிப்பதைப் போன்று உயிர்ப்பிப்பதாகக் கூறுகிறான். ‘மனிதர்களே! (இறந்த பின் உங்களுக்கு உயிர்கொடுத்து) எழுப்புவதைப் பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், (அது பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக உங்களை (ஆரம்பமாக) மண்ணிலிருந்தும், பின்னர் (உங்களை) ஒரு துளி இந்திரியத்திலிருந்தும், பின்னர் இரத்தக்கட்டியிலிருந்தும், பின்னர் (நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்பட்ட, (அல்லது நிறைவாக உருவம் கொடுக்கப்பட்டு) படைக்கப்படாத தசைக்கட்டியிலிருந்தும் நாம் படைத்தோம்: (என்ற நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவே (இவ்வாறு விளக்குகிறோம்.) மேலும், நாம் நாடியவைகளைக் கர்ப்பப்பைகளில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் (நிலைப்படுத்தி) தங்கிவிடும்படி செய்கிறோம்: பின்னர் உங்களை குழந்தையாக நாம் வெளிப்படுத்துகிறோம்: பின்பு உங்கள் வாலிபத்தை நீங்கள் அடைவதற்காக (தக்க வளர்ச்சியைத் தருகிறோம்) இன்னும் உங்களில் (சிலர் பருவ வயதை அடையுமுன்பே) இறந்துவிடுகிறவரும் இருக்கின்றனர்: (அல்லது ஜீவித்திருந்து) யாவையும் அறிந்த பின்னர், ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரையில் (உயிர் வாழ) விட்டுவைக்கபடுபவரும் உங்களில் இருக்கின்றனர்: மேலும், பூமியை வரண்டதாகப் பார்க்கிறீர்: அப்பொழுது, அதன் மீது நாம் மழையை இறக்கிவைப்போமானால், அது பசுமையாகி, இன்னும் வளர்ந்து, அழகான ஒவ்வொருவகையிலிருந்தும் (உயர்ந்த புற்பூண்டுகளை) முளைப்பிக்கின்றது’ (17: 5). மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கேள்வி எழுப்புகிறான்.

‘மனிதன் மீது காலத்திலிருந்து ஒரு நேரம் திட்டமாக வந்துவிட்டது: (அதில் இன்னதென்று) கூறப்படும் ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை’ (76: 1). மனிதன் என்ற பெயர் சொல்லப்படுவதற்குக் கூட முடியாத ஒரு நிலையில் மனிதன் இருக்கவில்லையா? என அவன் வினா எழுப்புகிறான். இவ் அனைத்தும் அவனது ஆற்றலை படம் பிடித்துக் காட்டுகின்றன. இவை அனைத்தும் மனிதனை இறுதி நாளில் எழுப்புவது எனக்கு இலகுவான காரியம் என்பதை உணர்த்துகின்றன.மனிதன் இவ்வுலகில் படைக்கப்பட்டதற்குரிய முக்கிய நோக்கத்தை அல்லாஹ் அல் குர்ஆனில் தெளிவு படுத்துகிறான்:
நான் மனிதர்களையும் ஜின்கiயும் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை’ (51:56). இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதற்காகவே மனிதனைப் படைத்தான். மற்றோர் இடத்தில் குறிப்பிடும் போது:

‘அவன் எத்தகையவனென்றால்: உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் படைத்திருக்கின்றான்: அவனே (யாவற்றையும்) மிதை;தவன்: மிக்க மன்னிக்கின்றவன’ (67: 2). மனிதனின் இவ்வுலக வாழ்க்கை தான் அவனுக்கு சுவர்க்கமா? நரகமா? என்பதைத் தீர்மானிக்கும். எனவே மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இல்லை என்று கூறுவது இவ்வுலக வாழ்க்கைக்கு எந்த நோக்கமும், அடிப்படையுமில்லை என்றாகிவிடும். இது முட்டாள்த் தனமான ஒரு வாதமாகும். ஏனெனில் மனிதன் செய்யக்கூடிய அற்பக்காரியங்களுக்கும் நோக்கமென்றொன்றிருக்கும் போது, இவ்விசாலமான வானம், பூமி, வேறு வேறு பிரமாண்டமான படைப்புகள், இவற்றின் இயக்கம், உயர்ந்த படைப்பாக மனிதன் படைக்கப்பட்டு அவனது வாழ்;க்கை இவ்வுலகத்தோடு முடிவுறுகிறது என்றால், இப்பிரமாண்டமான படைப்புகள் படைக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மனிதனுக்கு ஒரு வாழ்க்கை வழங்கப்பட்டதன் நோக்கமென்ன? நம்மைப் படைத்தவன் கேட்கிறான்:

‘உங்களை நாம் வீணுக்காகப் படைத்தோம் என்றும், நீங்கள் நம் பக்கம் மீட்டப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா’? (23: 115). இன்னுமோர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:

‘வானங்களையும், பூமியையும், அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவைகளையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை. நிச்சயமாக அவ் விரண்டையும் உண்மையைக்கொண்டே தவிர- நாம் படைக்கவில்லை: எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிய மாட்டார்கள். நிச்சயமாக (நியாயத்) தீர்ப்பு நாள் அவர்கள் அனைவருக்கும் (குறிப்பிடப்பட்ட) தவணையாகும்’ (44: 38-40).
‘வானத்தையும், பூமியையும், இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் வீணாக நாம் படைக்கவில்லை: இது நிராகரித்தார்களே அத்தகையோரின் எண்ணமேயாகும்: ஆகவே நிராகரித்துவிட்டார்களே அத்தகையவர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் (உண்டு). அல்லது விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்கிறார்களே அத்தகையோரை, பூமியில் குழப்பம் செய்கிறவர்களைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது பயபக்தியுடையவர்களை (குற்றம் புரியும்) பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா’? (38: 27,28). ‘தீமைகளைச் சம்பாதித்துக் கொண்டார்களே அத்தகையோர்- விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோரைப் போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும், அவர்கள் மரணித்துவிடுவதும் சமமே; அவர்கள் (இதற்கு மாறாகத்) தீர்ப்புச் செய்து கொண்டது மிகக்கெட்டதாகி விட்டது.

வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான்; இன்னும், ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்); அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்’ (45: 21, 22). மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையின் உண்மை நிலையைத் தெளிவுபடுத்துகின்றது.மனித உள்ளத்தில் இவ்வுலக வாழ்க்கை மாத்திரம் தான் வாழ்க்கை இதற்க்குப் பிறகு ஒரு வாழ்க்கை இல்லை, நான் விசாரிக்கப்படவும் மாட்டேன் என்ற ஒரு எண்ணம் ஆழமாகப் பதிந்து விடுமானால் மனித சமுதாயத்தில் ஏற்படும் ஆபத்தான நிலை இன்னதென்று சொல்ல முடியாது. மேற்கத்திய உலகில் இந்நம்பிக்கை ஆழமாகப் பதிந்து விட்டதனால் ஏற்பட்டிருக்கும் சமூகச் சீரழிவுகளை கண்கூடாகக் காண்கிறோம்.எப்படிக் கடுமையான சட்டங்களைப் போட்டாலும் சமூகத்தில் குற்றங்கள் அதிகரிக்கின்றனவே தவிர குறைவதில்லை, இதன் மூலம் தெரியவரும் உண்மையாதெனில் சட்டங்கள் போடுவதன் மூலம் மாத்திரம் சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது. இதற்கு தற்கால சமூக அமைப்பும் சான்றாக உள்ளது. இஸ்லாம் முன்வைக்கும் நெறி முறைகளின் மூலம், மறுமை சார்ந்த நம்பிக்கை மூலம் எந்த ஒரு சக்திக்கும் உருவாக்க முடியாத உயரிய ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.

வரலாற்றில் இப்படியான உயரிய சமுதாயங்கள் உருவாகின. இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்ட அச்சமுதாயத்தில் அனைத்துத் தீமைகளும் தலை விரித்தாடின. அத் தீமைகளில் இருந்து சமூகத்தை விடுவிப்பதற்காக அவர் முன்வைத்த கொள்கை அல்லாஹ் ஒருவனை மாத்திரம் ஏக இறைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும், மரணத்திற்குப் பிறகு உள்ள நிரந்த வாழ்க்கையின் பக்கம் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்;. குறுகிய காலத்திற்குள் உலக வரலாற்றில் என்றும் இல்லாதவாறு முழு உலகத்திற்கும் முன்மாதிரியான ஒரு சமுதாயம் உருவானது. இதற்குரிய முக்கிய காரணம் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றிய நம்பிக்கையை அவ்வுள்ளங்களில் ஆழமாக பதித்ததாகும். இஸ்லாம் முன் வைக்கும் ஒவ்வொரு கருத்திலும் முழு மனித சமுதாயத்தினுடைய நலனும் தங்கியுள்ளது.அல்லாஹ் தனது திருமறையில்:

‘எவன் கடுகளவு நன்மை செய்கிறானோ அவன் அதற்குரிய கூலியைக் கண்டு கொள்வான், எவன் கடுகளவு தீமை செய்வானோ அவன் அதற்குரிய கூலியைக் கண்டு கொள்வான்’ (99: 7,8). நாம் படைக்கப்பட்டதன் நோக்கத்தை இறை வேதத்திலிருந்தும், இறுதி நபியின் வழிகாட்டளிலிருந்தும் அறிய முற்படுவோமாக!

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.