பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

 பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

 ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர். 

உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.

வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.

கருவிலேயே இனம் கண்டு பெண் குழந்தைகளைக் கருவறுப்பது பெண் சிசுக் கொலை பெண் வீட்டுக்காரன் வீடு வீடாகப் பிச்சை எடுப்பது பெண்கள் விபச்சாரத்தில் இறங்குவது பிற மதத்தவருடன் ஓடிப் போவது போன்ற அனைத்து தீய விளைவுகளுக்கும் இந்தப் பெண் வீட்டு விருந்து காரணமாக அமைகின்றது. அதனால் இது ஒழித்து ஓய்த்துக் கட்டப்பட வேண்டிய மிகப் பெரிய சமூகக் கொடுமையாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூகப் புரட்சி

பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டிற்குக் கப்பம் கட்ட முடியாமல் வரதட்சணை வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்தவர்களை அல்லது தற்கொலை செய்யப் போகிறேன் என்று சொல்பவர்களைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெண் வீட்டில் விருந்து வைத்தே தீருவோம்; இல்லையேல் தற்கொலை செய்து கொள்வோம் என்று மிரட்டுபவர்களை இப்போது சமுதாயம் கண்டு கொண்டிருக்கின்றது.

ஒரு காலத்தில் பெண் வீட்டிலிருந்து வாரி வழித்து சுருட்டி சுரண்டிக் கொண்டிருந்த வரதட்சணை என்ற பெயரில் கொள்ளையடித்துக் கொண்டிருந்த இளைஞர் படை இன்று வேண்டாம் வரதட்சணை வேண்டாம் பெண் வீட்டு விருந்து என்று சொல்கின்ற இந்த சகாப்தத்தைப் புரட்சி என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மையில் ஓர் ஏகத்துவ இளைஞன் தான் பெண் பேசிய வீட்டில் பெண் வீட்டு விருந்து கூடாது என்று கூறியுள்ளார். அதற்குப் பெண்ணின் தந்தை விருந்து வைத்தே தீருவேன்; இல்லையேல் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பேன் என்று மிரட்டியுள்ளார்.

ஏகத்துவ இளைஞன் விருந்து வேண்டாம் என்று மறுப்பது ஒரு புரட்சி! அதே சமயம் பெண்ணின் தந்தை விருந்து வைக்கா விட்டால் செத்து விடுவேன் என்று சொல்வது ஒரு சமூகக் கொடுமையும் சாபக் கேடுமாகும். இந்த சமூகக் கொடுமையையும் சாபக் கேட்டையும் எதிர்த்துத் தான் தவ்ஹீத் ஜமாஅத் போர் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.

புறக்கணிப்பு

இன்று தவ்ஹீது வட்டத்தில் உள்ள ஒரு சிலர் நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி விட்டேன்; அவர்கள் கேட்கவில்லை என்று கூறி நழுவுகின்றனர். ஆனால் பெண் வீட்டு விருந்தில் போய் கலந்து கொள்கின்றனர். வேறு சிலர் அந்த விருந்தில் கலந்து கொள்வதில்லை. நாங்கள் என்ன அங்கு போய் சாப்பிடவா செய்தோம்? என்ற மழுப்பலைப் பதிலாக்குகின்றனர். இவ்விரு சாராரும் பெண் வீட்டுச் சாப்பாட்டை சாபக் கேட்டை சமூகச் சீர்கேட்டை வாழ வைக்கின்றனர்; வளர விடுகின்றனர். இதற்குரிய பாவங்களைச் சம்பாதிக்கின்றனர்.

இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஒரே வழி புறக்கணிப்பது தான். புறக்கணிப்பது என்றால் எதை? பெண் வீட்டு விருந்தை மட்டுமல்ல பெண்ணையும் சேர்த்தே புறக்கணிப்பது தான்.

ஒரு காலத்தில் வரதட்சணை தரவில்லை என்றால் உன் பெண் வேண்டாம் என்று சொல்வதற்குத் தெம்பும் திராணியும் கொண்டிருந்தார்கள். இன்று தவ்ஹீதுக்கு வந்த பின் பெண் வீட்டு விருந்து ஒரு பித்அத் அது ஒரு சமூகக் கொடுமை என்ற கண்ணோட்டத்தில் இந்த விருந்தை நிறுத்தவில்லை என்றால் உன் வீட்டுப் பெண்ணே வேண்டாம் என்று கூறுவதற்குத் தெம்பும் திராணியும் அற்றவர்களாகி விட்டனர்.

அன்று ஒரு தீமைக்காக நிமிர்ந்து நின்றவர்கள் இன்று ஒரு தீமையை ஒழிப்பதற்காக அதுவும் ஏகத்துவவாதிகளாக இருந்து கொண்டு திராணியற்றவர்களாக ஆகி விட்டனர். சத்தியவாதிகளாக இருக்கும் போது தான் இந்தத் தெம்பு தேவை. ஆனால் இப்போது தெம்பில்லாமல் ஒரு ஜடம் போல் காட்சியளிப்பது தான் வேதனையாகும்.

இப்படிப் பெண் வேண்டாம் என்று சொல்வது எந்த அடிப்படையில்?

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 5:2)

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 78)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண் வீட்டு விருந்து என்ற சமூகத் தீமையைத் தடுப்பது ஈமானில் உள்ளதாகும்.

அதிலும் குறிப்பாக திருமணம் முடிக்கும் ஆண்கள் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் முதல் தரத்திலேயே இந்தத் தீமையைத் தடுத்து விடலாம். அதாவது கையாலேயே தடுத்து விடலாம். கை என்பது மாப்பிள்ளையின் முழு அதிகாரத்தைக் குறிப்பிடுகின்றது. தன் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதற்காக மாப்பிள்ளையின் ஆட்காட்டி விரலின் அசைவுகள் அத்தனைக்கும் அசையும் நிலையில் பெண்ணின் தந்தை இருக்கின்றார். அதனால் இந்த வாய்ப்பைக் கூடப் பயன்படுத்த முன்வராத மாப்பிள்ளை கொள்கைவாதியல்ல! கடைந்தெடுத்த கோழை!

சப்பைக்கட்டும் சாக்குப்போக்குகளும்

பெண் வீட்டாரின் விருந்து வைக்கும் பிடிவாதம் அது சமூகத்தில் புரையோடிப் போன தீமை என்பதையே காட்டுகின்றது. சமூகத்தின் கோரப் பிடியாகவே காட்சியளிக்கின்றது. இதைத் தொடர்வதற்காகப் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனர்.

வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து விட்டனர்; அவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அக்கம்பக்கத்தவர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் சொந்த பந்தங்களுக்கும் அப்படியே சேர்த்து விருந்து வைக்கிறோம் என்று சால்ஜாப்பு கூறுகின்றனர்.

அக்கம்பக்கத்தவர் மீது தான் எத்தனை ஆதரவு? அண்டை வீட்டார் மீது தான் எத்தனை அரவணைப்பு? உண்மையில் மெய்சிலிர்க்க வைக்கின்றது; மேனி புல்லரிக்கின்றது.

மருத்துவம் பொறியியல் போன்ற தொழிற்கல்விகளுக்காக சொந்த பந்தங்களில் அக்கம் பக்கங்களில் ஒரு பத்தாயிரம் ரூபாய் உதவி கேட்டால் உதவி செய்ய முன்வராதவர்கள் எள்ளளவுக்கும் ஈயாதவர்கள் கல்யாணப் பந்தலிலே பல லட்சங்களைக் கொட்டி விருந்து என்ற பெயரில் பாழாக்குவார்கள். சொந்த பந்தங்கள் நோயில் மாட்டி விட்டால் கூட கடனில் சிக்கி விட்டால் கூட இவர்கள் உதவ முன்வர மாட்டார்கள். இத்தனைக்கும் இதுபோன்ற வகைகளுக்காக உதவி செய்வது மார்க்க அடிப்படையில் கடமையாகும். ஆனால் இதைச் செய்ய மாட்டார்கள். இந்த விருந்து வைப்பதற்காக மட்டும் சொந்தம் பந்தம் அக்கம் பக்கம் என்ற சால்ஜாப்புகள் சமாளிப்புகள்.

இந்த சமாளிப்புகளில் ஒன்று தான் வெளியூர்க்காரர்கள் பெயரைச் சொல்லி இப்படி ஒரு விருந்தளிப்பதாகும். இந்த விருந்து எதை முன்னிட்டு? திருமணத்தை முன்னிட்டுத் தான். திருமணம் இல்லாமல் இப்படி ஒரு விருந்தை வைக்க முன்வருவார்களா? நிச்சயமாக முன்வர மாட்டார்கள்.

அன்பளிப்பின் அடிப்படை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அஸ்த் எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக் கொண்டு நபியவர்கடம் திரும்பி வந்து அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பப்பாக வழங்கப்பட்டது என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி)

நூல்: புகாரி 6636

இந்த ஹதீஸில் அன்பளிப்பு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். இந்த அன்பளிப்பின் அடிப்படையே ஜகாத் தான். ஜகாத் வசூலுக்குச் செல்லவில்லையானால் இவருக்கு இந்த அன்பளிப்பு கிடைத்திருக்காது. சென்றது ஜகாத் வசூலுக்கு என்பதால் வந்த அன்பளிப்பு ஜகாத்திற்காக என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்கின்றார்கள்.

இது போன்று பெண் வீட்டில் நடத்தப்படும் விருந்து அந்த வீட்டில் நடைபெறும் திருமணத்தை ஒட்டித் தான். இந்த விருந்துக்கு வெளியூர்காரர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு நடத்துகின்றனர். வெளியூர்காரர்கள் வந்தால் அவர்களுக்கு உணவளிப்பது எப்போதும் உள்ள ஒன்று!

திருமணத்திற்காக வெளியூர்காரர்களை அழைப்பது என்பதே மார்க்கத்தில் இல்லை. அப்படி அழைத்து வந்தால் அந்த விருந்து அவர்களுடன் மட்டும் தான் நிற்க வேண்டுமே தவிர அதைச் சாக்கிட்டு உள்ளூரில் ஒரு பெரிய பட்டியலாக நீளக் கூடாது.

பொதுவாகத் திருமணம் பேசி முடிக்கும் போது பெரும்பாலும் வெளியூர்களில் பெண் அல்லது மாப்பிள்ளை பேசி முடிப்பதில்லை. உள்ளூரிலேயே மாப்பிள்ளை பெண் பார்த்து திருமணம் முடித்துக் கொள்கின்றனர். ஆனால் இன்று அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் கொள்கையுள்ள பெண் வேண்டும் என்பதற்காக வெளியூரில் பெண் பேசி முடிக்கின்றனர்.

இதுபோன்ற கட்டங்களில் சம்பந்த வழிகள் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு வரும் போது விருந்தாளிகள் என்ற அடிப்படையில் பெண் வீட்டார் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் தவறில்லை. ஆனாலும் அதைக் காரணம் காட்டி பெண் வீட்டார் தங்களது சொந்த பந்தங்களுக்கும் தெருவாசிகளுக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இப்படியே பெண் வீட்டு விருந்து என்ற சமூக நிர்ப்பந்தம் உருவாகி லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகின்றது. இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது.

எனவே இதைக் கவனத்தில் கொண்டு ஆண்கள் வெளியூருக்குச் சென்று மணம் முடிக்கும் நிலை ஏற்பட்டால் அங்கு ஏற்படும் திருமணச் செலவுகள்இவிருந்துச் செலவுகளை மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாப்பிள்ளை வீட்டார் தங்களுக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் வீட்டு விருந்தை நிறுத்த வேண்டும். பெண் வீட்டாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஒரு சில இடங்களில் பெண்ணின் உறவினர்களே நிர்ப்பந்தித்து ஒரு விருந்து வைத்தால் என்ன? என்று பெண் வீட்டாரிடம் கேட்கின்றனர். இது தான் அவர்களைக் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி விருந்து வைக்கத் தூண்டுகிறது. அப்படிச் செய்தால் அந்தப் பாவத்தில் இவ்வாறு தூண்டி விட்ட உறவினர்களுக்கும் பங்குண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு பாவத்திற்குத் துணை போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 ஷம்சுல்லுஹா (ரஹ்மானி)

நன்றி

RASMINMISC.TK

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.