பள்ளிவாசல்களில் கப்றுகள் கட்டலாமா?

ஒரு மனிதனை கப்ரில் அடக்கம் செய்த பின் அந்த கப்ரைஅடையாளம் காட்டு வதற்காக ”ஒரு சாண் அளவுக்கு” மட்டுமே உயர்த்துவதற்க இஸ்லாத்தில் அனுமதியுண்டு. அதற்கு மேல் கப்ரை உயர்த்தக் கூடாது. கப்ரை கட்டக்கூடாது. கப்ரின் மேல் எழுதுவதோ அல்லது பூசுவதோ கூடாது. உயர்த்தப்பட்ட கப்ருகளை உடை த்து தரைமட்டமாக்குமாறு நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். நூல் அபூதாவூத்)  

 எனவே பள்ளிவாசல் உட்பட எந்த இடத்திலும் (மையவாடியிலும்) கப்ரு கட்டக் கூடாது.

மரணித்துப் போன ஒரு மனிதனின் பெயரால் நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் அல்லது கப்று கட்டுதல் நாளடைவில் அதனையே வணங்கக் கூடிய நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கங்களை கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம் கேட்டு பிரார்த்திக்கக் கூடிய நிலை வந்துவிடும். அல்லாஹ்வை மறந்துவிட்டு கபுரடியில் மண்டியிடக் கூடிய நிலை உரு வாகிவிடும். இந்த நிலை நூஹ் நபியுடைய சமுதாயத்திற்கு ஏற்பட்டபோதுதான் அல்லாஹ் அதனை கண்டித்து பிரசாரம் செய்வதற்கு நூஹ் நபியை அனுப்பி வைத்தான்.

வத், சுவா, யஊஸ், யஹூக் ஆகிய நல்லோர்கள் மரணித்த போது அவர்களது கப்ருகளில் நிiவு சின்னங்களை நட்டுமாறும் அதிலே அவர்களது பெயர்களை பொறிக்குமாறும் ஷைத்தான் மக்களை தூண்டினான். நாளடைவில் கப்ரிலுள்ளவர்களை வணங்க தொடங்கினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்.புகாரி)

யூத கிறிஸ்தவ சமுதாயம் வழி தவறிப் போனதற்கு பிரதான காரணம் கப்ரு வணக்கம் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். இந்த உலகத்தில் மிகச் சிறந்த மனிதர்களாக அவ்லியாக் களாக மகான்களாக திகழ்ந்த நபிமார்கள் மற்றும் ஸாலிஹீன்களுக்கு கப்ரு கட்டி வழிபாடு நடத்தியதால் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளானார்கள். அந்த நல்லடியார்களின் கப்ருகளை வணங்குமிடங்களில் (மஸ்ஜிதுகளில்) கட்டிவைத்து வணங்கினார்கள். இதனை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. ஏற்றுக் கொள்ளவுமில்லை. மாறாக நபி (ஸல்) அவர்கள் மூலம் வன்மையாக கண்டித்தான்.

நபி (ஸல்) அவர்களின் மரணவேளை நெருங்கிய போது தமது போர்வையை தமது முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சித்தினரும் போது அதை முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் இருக்கும் போது தங்களது நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக (சுஜுது செய்யும் இடங்களாக) எடுத்துக்கொண்ட யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என கூறி அவர்களுடைய செயலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி

அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பு இருந்தவர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சாலிஹான நல்லடியார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நீங்களும் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அதைவிட்டும் உங்களை நான் தடை செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் கூற நான் செவியுற்றேன் என ஜுன்துப் (ரலி) அறிவிக் கிறார்கள். நூல்: முஸ்லிம்

இன்று நாட்டில் எத்தனை கப்ருகளை கட்டிவைத்துக் கொண்டு வழிபாடு நடாத்துகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் பள்ளி வாசலிலும் ஒரு மகானின் பெயரால் கப்ரை கட்டிவைத்து அதற்குப் பச்சை போர்வை போர்த்தி சந்தனம் பூசி பண்ணீர் தெளித்து ஊது பத்தி பற்றவைத்து சாம்பரானி புகை போட்டு விளக்கேற்றி எண்ணை ஊற்றி கொடி ஏற்றி வழிபாடு நடாத்துகிறார்கள். அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கையையும் பொறுப்படுத்தாமல் அல்லாஹ்வுடைய சாபம் (லஃனத்)தைப் பற்றியும் பயப்படாமல் ஈடுபாடு கொள்கிறார்கள்.

எனவே பள்ளிவாசல்களாக இருந்தாலும் சரி வேறு எந்த இடங்களில் இருந்தாலும் சரி கப்ருகள் கட்டக்கூடாது. கட்டப்பட்ட கப்ருகளை உடைக்க வேண்டும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ்கள் மூலம் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படியாயின் நபி (ஸல்) அவர்களின் கப்று மட்டும் மஸ்ஜிதுந் நபவியில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன சிலர் கேட்டு பள்ளியில் கப்று கட்டவதை நியாயப்படுத்துகிறாரக்கள்.

இதற்கான பதிலை எமதுமஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் (ஸல்) அடக்கம் செய்யப்பட்டார்களா?என்ற கட்டுறையை பார்வையிடவும்.

“மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானது எனவே அல்லாஹ்வுடன் எவரையும் அழைக்காதீர்கள். (72:18) என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கே சுஜூத் செய்யவேண்டும். அவனிடமே சரணடைய வேண்டும். அல்லாஹ்வுக்குச் சொந்தமான வணக்கங்களில் வேறு எவரையும் கூட்டுச் சேர்க்கக்கூடாது.

“துஆ என்பது வணக்கமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி) அந்த வணக்கத்தை செய்யக்கூடிய எண்ணத்திலும் இடத்திலும் தொழக்கூடிய மஸ்ஜிதிலும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைக்கவோ பிரார்திக்வோ கூடாது. மரணித்தவர்களை அடக்கம் செய்யவோ கூடாது.

அல்லாஹ்வை வணங்குமிடத்தில் மரணித்தவர்களை ஏன் அடக்கம் செய்யவேண்டும்?மகான்கள் என்பவர்களின் கப்றுகள் மஸ்ஜிதில் அமைப்பதினால் அல்லாஹ்வுக்குப் போட்டியாக அவனது வணக்கத்திற்குப் போட்டியாக அந்த மகானை வைத்ததாக ஆகிவிடும். அல்லாஹ்வுக்குரிய அதே வணக்கம், கண்ணியம் தான் மகானுக்குக்கும் உள்ளது என்றாகிவிடும். இந்த பாவத்தை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பானாக! எனவே அல்லாஹ் வேறு, மகான் வேறு என் அடிப்படையில் மஸ்ஜிதையும் கப்றையும் வேறுப்படுத்த வேண்டும்.

தங்களது நபிமார்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக எடுத்துக் கொண்ட யூத கிறிஸ்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக என நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருக்கிறார்கள். (நூல் புகாரி) என்றிருக்கும்போது மகான்கள் அவ்லியாக்கள் என்பவர்களின் கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்கலாமா? அல்லது மஸ்ஜிதுகளுக்குள் அவர்களுடைய கப்ருகளை வைக்கலாமா? என்பதை சிந்தியுங்கள்.

பள்ளிவாசலுக்குள் அதன் எல்லைக்குள் யாருடைய கப்ரும் இருக்கக்கூடாது. கப்ருகள் உள்ள இடத்தில் தொழவும் கூடாது. இன்றும் சில பள்ளிவாசல்களில் கிப்லாவுக்கு பக்கத்திலும் கிப்லாவை நோக்கியும் கப்ருகள் இருப்பதை காண முடிகிறது. இதனையும் நபியவர்கள் கண்டித்தார்கள்.

கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள். கப்ருகளில் உட்காராதீர்கள். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமர்ஸத் (நூல்: முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்த இச்செயலைப் பற்றி முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கவனமில்லாமல் இருக்கிறார்கள். எனவே கப்ருகள் மஸ்ஜிதுகளாக்கப்பட்டுள்ள இடங்களில் தொழுகை நடத்துவதை இபாதத்தில் ஈடுபடுவதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் செய்ய மாட்டான்.

தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்க்கு மட்டுமே சொந்தமானது. தூய்மையான அந்த வணக்கத்தில் மாசு கற்பிக்கப்படக் கூடிய செயல்களை தூரப்படுத்தவேண்டும்.

மகான்களை அவ்லியாக்களை நாம் மதிக்கவேண்டும். மதிக்கிறோம் என்ற பெயரில் அல்லாஹ்வை வணங்கும் இடங்களில் (மஸ்ஜிதுகளில்) அவர்களுடைய கப்ருகளை கட்டிவைப்பதும் அதற்கு சுஜூதுகள் செய்வதும் ஹராமாகும்.

அல்லாஹ்வுக்காக கட்டப்பட்ட “மஸ்ஜிதுல் ஹராம்” எனும் கஃபாவில் 360 சிலைகளை வைத்து அந்த மக்கள் வணக்கம் செலுத்தியபோது அதனை கண்டித்து நபி (ஸல்) அவர்கள் பிரசாரம் செய்தார்கள். 13 வருட காலம் மக்காவில் இந்த (தவ்ஹீத்) பிரசாரத்தை மேற்கொண்டபோது அவர்களால் கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுவதற்குரிய சக்தி இருக்கவில்லை. என்றாலும் பத்து வருடங்கள் கழித்து மக்கா வெற்றியின் போது அந்த சிலைகளை கஃபாவிலிருந்து அகற்றி சுத்தப்படுத்தி விட்டுத்தான் கஃபாவிற்குள் நுழைந்து தொழுதார்கள். இந்த சிலைகள் அந்த மக்கள் கண்ணியப்படுத்திய நல்லவர்களாவர்கள் மகான்கள் ஆவர்.

“நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஃபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழையமறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளை கையில் தாங்கியவாறு இப்றாஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். (இவ்விரு நபிமார்களுக்கும் சிலை கட்டியதற்காக) அல்லாஹ் இவர்களை அழிப்பானாக! இவ்விரு (நபிமார்களு)ம் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்”, என்று கூறிவிட்டு நபியவர்கள் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். அதன் ஓரங்ளில் நின்று தக்பீர் சொன்னார்கள். அதில் தொழவில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் புகாரி(1601)

தவ்ஹீதை போதிக்க வந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்காக புனித கஃபாவை (மஸ்ஜிதை) கட்டினார்கள். அந்த கஃபாவிற்குள் அவர்களது சமூகமே இப்றாஹீம் நபிக்கும் இஸ்மாயில் நபிக்கும் சிலைகளை கட்டி வணக்கம் செலுத்தி வந்தனர். இக்காரியத்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் அனுமதிக்கவில்லை. கட்டப்பட்ட சிலை கூட அப்புறப்படுத்தப்பட்டு கஃபா சுத்தப்படுத்தப்பட்டது என்றால் அவ்லியாக்கள் என கூறப்படுபவரகள் அடங்கப்பட்ட இடங்களை மஸ்திஜ்களாக எடுக்கமுடியுமா? பள்ளிவாசலுக்குள் கப்ருகள் கட்டமுடியுமா? அல்லது கப்ருகள் உள்ள மஸஜித்களில் தொழலாமா? என்பதை சிந்தியுங்கள்.

யூத நஸாராகள் நபிமார்களின் கப்றுகளை மஸஜித்களாக எடுத்து வணக்கம் புரிந்தது சாபத்திற்குரிய காரியங்கள் என நபியவர்கள் கண்டித்தார்களே தவிர சரி காணவில்லை. நபிமாரகளை விட மிகப் பெரிய மகான்கள் உண்டா? அவர்கள் பெயரால் உண்டான கப்று வணக்கம் சாபத்திற்குரியதென்றால் மற்றவர்களின் நிலையை கேட்கவும் வேண்டுமா?

இப்படி சொல்லும்போது கப்ரு வணக்கம் புரிபவர்கள் அதை ஆதரிப்பவர்கள் ஒரு ஆதாரத்தை காட்டுவார்கள். பள்ளிவாசலில் கப்ருகள் கட்டக் கூடாது என்றால் கப்ரு உள்ள பள்ளியில் தொழக் கூடாது என்றால் மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் நபி (ஸல்) அவர்களின் கப்ரு பள்ளிவாசலுக்குள் தானே இருக்கிறது. அந்த நிலையில் தான் மக்கள் தொழுகிறார்கள். இது கூடும் என்றால் அவ்லியாக்களின் கப்ருகள் உள்ள பள்ளியிலும் தொழலாம் தானே என்று கூறுகிறார்கள்.

இவர்கள் நபிமார்களை சாதாரண மக்களினது அந்தஸ்திற்கு இறக்கி இவர்கள் நம்பும் அவ்லியாக்களை உயர்வாக்கி இப்படி கேட்கிறார்கள்.

கப்ருகள் கட்டக்கூடாது கப்ரு கட்டப் பட்டதில் தொழக்கூடாது. பள்ளிவாசலுக்குள் கப்ரு இருக்கக் கூடாது என்று ஹதீஸ்கள் மூலம் ஆதாரங்களை முன்வைத்த பிறகும் கூட அவர்கள் இப்படி வாதம் புரிகிறார்கள். இவர்கள் செய்கின்ற தவறான காரியங்களை நியாயப்படுத்த முனைகிறார்களே தவிர சத்தியத்தை பின்பற்ற முனையவில்லை என்பது தெளிவாகிறது.

நபி (ஸல்) அவர்கள் கப்ரு கட்டுவதை வன்மையாக கண்டித்திருக்கும் போது கப்ருகளை மஸ்ஜிதுகளாக ஆக்கியது லஃனத்திற்குரிய காரியம் என்று எச்சரித்திருக்கும்போது அதற்கு மாற்றமாக எனது கப்ரை பள்ளிவாசலுக்குள் வையுங்கள். பள்ளிவாசலும் என்பது கப்ரும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த நிலையில் மக்கள் வந்து தொழ வேண்டும் என்று கூறுவார்களா?

“யாஅல்லாஹ்! எனது கப்ரை விழா கொண்டாடக் கூடிய இடமாக ஆக்காதே! யாஅல்லாஹ் எனது கப்ரை வணங்கப்படக் கூடியதாக ஆக்காதே! என்று தான் நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபியவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கும் எச்சரிக்கைக்கும் ஏற்றார்போல் தான் ஸஹாபாக்கள் நடந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்த போது அவர்களுடைய ஜனாஸாவை மஸ்ஜிதுந் நபவிக்குள் சஹாபாக்கள் அடக்கம் செய்யவில்லை. அவர்களுடைய வீட்டுக்குள்ளேதான் அடக்கம் செயதார்கள் என்பதை முதலில் புரிய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மரணித்தபோது அவர்களை எங்கே அடக்கம் செய்வது என்று ஸஹாபாக்கள் கருத்து வேறுபாடு கொண்டபோது “நபிமார்கள் மரணித்த இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்ற ஹதீஸை அபூபக்கர் (ரலி) நினைவு படுத்தினார்கள். உடனே ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் மரணித்த இடமான ஆயிஷா (ரலி) அவர்களுடைய வீட்டுக்குள்ளேயே குழிதோன்றி நல்லடக்கம் செய்தார்கள்.

நபியவர்களின் வீடு மஸ்ஜிதுந் நபவிக்கு பக்கத்திலேயே இருந்தது. மஸ்ஜிதுந் நபவியும் நபியவர்களின் வீடும் ஒரே சுவராக இருந்தது. வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தால் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துவிடும். ஸஹாபாக்கள் ஒரு போதும் பள்ளிக்குள் நபியவர்களை அடக்கம் செய்யவில்லை.

அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் மரணித்தபோது நபி (ஸல்) அவர்களது கப்ருக்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இம்மூவரும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் அந்த இடம் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த வீடாகும். அந்த வீடு மஸ்ஜிதின் எல்லைக்குள் வந்தபோதும் கூட அதனை வேறுபடுத்தி வேலி போட்டு சுவர் கட்டி மறைத்து வைத்தார்கள். இன்றும் கூடஅந்த வீட்டை வேறு படுத்திதான் வைத்துள்ளார்கள் என்பதை மதீனாவுக்குச் சென்றவர்கள் அறிந்திருப்பார்கள்.

உமர் (ரலி) அவர்கள் மரணத்தருவாயிலில் இருந்தபோது- தான் மரணித்தால் நபியவர்களின் கப்ருக்கு பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விரும்பி அதற்காக ஆயிஷா (ரலி) அவர்களின் அனுமதியை கேட்டு வருமாறு தனது மகன் இப்னு உமர்(ரலி) யை ஆயிஷா (ரலி)யிடம் அனுப்பி வைத்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த இடத்தை தனக்கென்று வைத்ததாகவும் அமீருல் முஃமினின் உமர்(ரலி) அவர்களுக்காக அந்த இடத்தை விட்டு தருவதாகவும் கூறினாரகள். (நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) வீட்டில் அடக்கம் செய்யப்பட்டதனாலேயே உமர் (ரலி) அனுமதி வேண்டினாரகள். பள்ளி வாசலாக இருந்தால் ஏன் அனுமதி கோரவேண்டும்.?

அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) அலி (ரலி) ஆகியோர்களது ஆட்சிக் காலங்களில் மஸ்ஜிதுந் நபவி வேறாகவும் நபியவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வீடு வேறாகவும்தான் இருந்தது. அதாவது நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது எப்படி இருந்ததோ அப்படித்தான் இருந்தது. கால ஓட்டத்தில் மஸ்ஜிதை விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய நிலை வந்த போது ஆட்சித் தலைவர் மர்வானுடைய காலத்தில் நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த அந்த வீடும் அதனை அண்டியப் பகுதிகளும் சேர்த்து மஸ்ஜிதுக்குள் வந்தது.

பள்ளி விஸ்தரிப்பின் போது இந்த வேலையை செய்யவேண்டிய அவசியம் இருந்ததாக அன்று கருதப்பட்டது.

கப்று வணக்கத்தை ஊக்கு விக்க நபியவர்களினதோ சஹாபாக்களினதோ கப்றுகளை பள்ளிவாசலுக்குள் கொண்டு வரவில்லை.

நபி (ஸல்) அவர்களுடைய கப்ரு அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரது கப்ருகள் உள்ள அந்த வீடு மஸ்ஜிதுக்குள் வந்துள்ளது என்பதை காட்டி மஸ்ஜிதுக்குள் கப்ருகள் இருக்கக் கூடாது அந்த கப்ருகளை தோன்றி ஜனாஸாக்களை வெளியில் எடுத்து வேறு இடத்தில் அடக்கம் செய்யவேண்டும் என கூற முடியாது. கூடாது. அப்படி செய்ய வேண்டும் என்று எந்த முஸ்லிமும் சொல்லவும் மாட்டான். முனையவும் மாட்டான்.

ஒரு வாதத்திற்காக அபூபக்கர்(ரலி) உமர் (ரலி) ஆகியோர்களது கப்ருகளை தோன்றி ஜனாஸாக்களை வேறு இடத்தில் அடக்கம் செய்தாலும் நபி (ஸல்)அவர்களது கப்ரை தோன்றி வேறு இடத்தில் அடக்கம் பண்ண முடியாது. “நபிமார்கள் மரணித்த இடத்தில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்ற ஹதீஸுக்கு ஏற்ப நபியவர்களின் கப்ரை அகற்ற நினைப்பது பெரும்பாவமாகும்.

மஸ்ஜிதுன் நபவியின் இந்த உண்மையான வரலாற்றை அறியாமல் கப்ருவணக்கம் புரிபவர்கள் தங்களது அபிமானத்திற்குரியவர்களின் கப்ருகளை பள்ளியினுள் கட்டி வைப்பதற்கும் அந்த இடங்களில் தொழுவதற்கும் பூஜிப்பதற்கும் நபி (ஸல்) அவர்களது கப்ரை ஆதாரம் காட்டி பேசுவதும் நபி (ஸல்) அவர்களுக்குச் சமமாக அந்த மகான்களை கணிப்பதும் மாபெரும் தவறாகும்.

இது எல்லாவற்றையும் விட நபியவர்களினதும் சஹாபாக்களினதும் கப்ருகளுடன் இன்றுள்ள கப்றுகளை ஒப்பிட்டு பேசுவதற்கு ஈமானுள்ள ஒரு மனிதன் முனைவானா? யாருடைய கப்றை எவருடைய கப்ருடன் ஒப்பிடுவது என்ற விவஸ்தை இல்லையா?

இப்றாஹீம் நபிக்கு கஃபாவில் சிலை கட்டபட்டது தானே, ஏன் அவ்லியாவுக்கு பள்ளியில் சிலை வைக்கக்கூடாது என்று இனிவரும் காலங்களில் இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த நிலையில் தான் இவர்களுடைய போக்கு போய்கொண்டிருக்கிறது.

எனவே மேலேயுள்ள ஹதீஸ்களின் பிரகாரம் கப்ருகள் கட்டக் கூடாது கப்ருகள் உள்ள இடங்களை மஸ்ஜிதுகளாக எடுக்கவும் கூடாது தொழவும் கூடாது என்பதை புரிந்து கொள்வோமாக!

மௌலவி இம்தியாஸ் ஸலஃபி

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.