அல்குர்ஆன் யாருக்குச் சொந்தம்?

முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் இன்று அல்குர்ஆன் தங்களுடைய வேத நூல் எனவே அது தங்களுக்குறியதே என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அதனால் அதனை முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் அதனை அவர்களுக்கு கொடுக்க மறுத்து விடுகின்றனர். அவர்கள் அசுத்தமானவர்கள்; எனவே அவர்கள் அதைத் தொடக்கூடாது என்று சட்டம் வகுத்துள்ளனர். எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆனைப் படித்து விளங்கி அதிலுள்ள உயர்ந்தகருத்துகளை அறியும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் குர்ஆனை தங்களுடைய  நூல் என்று சொந்தம் பாராட்டுவதால் அவர்களும் அதை நம்பி தங்களுக்கும்  குர்ஆனுக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக்  கொள்கின்றனர்.

    குர்ஆன் முஸ்லிம்களுக்குரிய வேதம் எனக்குறுகிய துவேஷ கண்ணுடன் பார்க்கின்றனர். அதே சமயம் முஸ்லிம்களாவது தினசரி ஓதி உணர முற்படுகிறார்களா? என்றால் அதுவும் இல்லை.  முஸ்லிம்களுடைய வீடுகளில் பெரும்பாலும் குர்ஆன் அழகிய பட்டு உரையால் போர்த்தப் பட்டு பரணியில் கைபடாத இடத்தில் பத்திரமாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அதை எடுத்துப்பார்த்தாலே  அதன் மேல் தூசுகள் படிந்திருக்கும். அது கீழே இறக்கப்பட்டு தூசி தட்டப்பட்டு கூலிக்கு ஆள் பிடித்து இறந்தவருக்காக ஓதப்படும். அந்த சமயத்தில் கூட வீட்டிலுள்ளோர்  அதை ஓத முற்படமாட்டார்கள்.

    உயிரோடுள்ளவர்கள் ஓதி உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டிய முஸ்லிம்கள், அந்த குர்ஆனை இறந்தவர்களுக்கு கத்தம் பாத்திஹா என்று ஆக்கி வைத்திருக்கிறார்கள். மிஞ்சி மிஞ்சிப்போனால் தகராறு, பிரச்னை ஏதும் வந்துவிட்டால் குர்ஆனை வைத்து சத்தியம் செய்வார்கள். இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதும், குர்ஆனை வைத்துச் சத்தியம் செய்வதும் அந்த குர்ஆனின் போதனைக்கே முரணான செயல்கள் என்பதையும் பெரும்பான்மை முஸ்லிம்கள் அறியமாட்டார்கள்.

    குர்ஆனை ஒளூ இல்லாமல் தொடக்கூடாது; அது பாவம் என்று இந்த முல்லாக்கள் சட்டம் வகுத்து வைத்திருப்பதை இந்த முஸ்லிம்கள் அப்படியே வேதவாக்காகக் கொண்டு குர்ஆனுக்கு அருகில் வருவதைக் கூட பயப்படுவார்கள். தொழுது வரக்கூடிய  ஒரு சில முஸ்லிம்கள்  தொழுது முடித்து வீட்டுக்குக் கிளம்பும் முன்னர் பள்ளியிலிருக்கும் குர்ஆனை  எடுத்து திறந்து தலையில் வைத்து பின்னர் முத்தம் கொஞ்சி அப்படியே மீண்டும் இருந்த இடத்தில் மூடி வைத்துவிடுவார்கள். அவர்கள் குர்ஆனுக்குச் செலுத்தும் அதிகபட்ச மரியாதை அவ்வளவுதான்.

    தப்லீகில் சென்று வரும் முஸ்லிம்களோ தினசரி ஒரு ஜுஸ்வு ஓத வேண்டும் என்ற  கட்டாயத்தில்  தவறாமல் பொருள் அறியாமல் கடகட என ஓதி அதன் பொருள் அறியாமல் ஓதி வருவார்கள். அவர்கள் அந்தக் குர்ஆனில் ஓதிவரும் எத்தனையோ வசனங்கள் அவர்கள் செய்து வரும் பல மார்க்க முரணான மத்ஹபு சார்ந்த செயல்களை வன்மையாகக் கண்டித்துக் கூறும். ஆனால் அவர்கள் பொருள் அறியாமல் ஓதி வருவதால்  குர்ஆனின் கண்டனங்கள் ஒன்றும் அவர்களின் உணர்வுகளைத் தூண்டாது. மவ்லவிகள் அப்படிப்பட்ட வசனங்களின் பொருள் உணர்ந்து ஓதினாலும்  அது தங்களூக்கு இடப்பட்ட கட்டளைகள் அல்ல. காபிர்களைப்  பார்த்து சொல்லப்பட்ட கண்டனங்கள் என்று அசட்டுத்தனமாக  இருந்து விடுகிறார்கள்.

    குர்ஆன்  தமிழ் மொழி பெயர்ப்பைப் பார்த்து பொது மக்களில் யாரும் இந்த மவ்லவிகளிடம் வந்து இந்த வசனனங்களுக்குரிய விளக்கத்தைக் கேட்டால், இந்த மவ்லவிகள் சிறிதும் கூசாமல் இந்த வசனங்கள் முஸ்லிம்களூக்கு அல்ல; யூதர்களுக்கு அல்லது கிறிஸ்தவர்களூக்கு காபிர்களுக்கு என்று பதில் அளித்து விடுகிறார்கள். முஸ்லிம் பொதுமக்களும் மவ்லவிகளின் அசட்டுத் தனமான பதிலை அப்படியே வேதவாக்காகக் கொண்டு மீண்டும் அவர்கள் செய்து வரும்  அத்தவறுகளையே  செய்யத் துணிகின்றனர். எனவே குர்ஆன் அப்படிப்பட முஸ்லிம்களைச் சபித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிய மாட்டார்கள்.

    பொதுவாக அல்குர்ஆன் யாருக்குச் சொந்தம் என்று வரும்போது அது எங்களுக்கே சொந்தம் என்று நெஞ்சில் அடித்துப் பேசும் முஸ்லிம்கள், அதனுள்ளே உள்ள வசனங்கள் பற்றி வரும்போது இது யூதர்களுக்கு; இது கிறிஸ்தவர்களுக்கு; இது காபிர்களுக்கு என்று பெரும்பாலான வசனனங்களை முஸ்லிம் அல்லாதவர்களுக்காக ஆக்கிவிடுகிறார்கள். அதாவது அல்குர்ஆனின் பெரும்பகுதி முஸ்லிம்களுக்குரியதல்ல, முஸ்லிம் அல்லாத யூத, கிறிஸ்த்தவ, நிராகரிப்பாளர்களுக்குரியது என்று கூறி விடுகிறார்கள். அப்படியானால் அல்குர்ஆன் தங்களுக்குரியது என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடுவதில் எதுவும் பொருள் இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

    உண்மை என்ன தெரியுமா? அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அந்த மக்களை படைத்துப் போஷித்து வரும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதமாகும்.(அல்குர்ஆன் 6:90, 42:7, 81:27)  அந்த குர்ஆனின்  உபதேசங்களை ஏற்று அதன்படி வழி தவறாமல் நடப்பவர்கள், குர்ஆனின் நன்மாரயத்தைப் பெறுகிறார்கள். அந்த குர்ஆனின் உபதேசத்தை தங்களின் முதுகுக்குப் பின்னால்  தூக்கி எறிந்து விட்டு தங்களின் மூதாதையர்களின், முன்னோர்களின், இமாம்களின், பெரியார்களின், வலிமார்களின், மவ்லவிகளின், ஆலிம்களின் உபதேசங்கள் என்று கூறி மனிதக் கற்பனைகளை யாரெல்லாம் எடுத்துச் செயல்படுகிறார்களோ அவர்கள் அனைவரையும் குர்ஆன் சபிக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொள்வார்களாக.

    அவர்கள் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத குடும்பங்களில் பிற்ந்திருந்தாலும் சரி, முதலில் பிறப்பினால் நாங்கள் முஸ்லிம்கள்; அதனால் குர்ஆனுக்குச் சொந்தக்காரர்கள் என்ற வாதத்தை முஸ்லிம்கள் விட்டுவிட வேண்டும். பண்பில்லா, மனித நேயம் மறந்த மக்களால் மிகக் கேவலமாக இழிவாக மதிக்கப்படக்கூடிய ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலும், அவர் இந்த குர்ஆனின் போதனைகளை ஏற்று அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஒப்புக்கொண்டு அவனை மட்டுமே வணங்கி அவனிடம் மட்டுமே தனது தேவைகளைக் கேட்டு, படைக்கப்பட்ட மலக்குகள், அவுலியாக்கள், இமாம்கள், பெரியார்கள், முன்னோர்கள், மூதாதையர்கள் ஆகிய படைப்பினங்களை வணங்குவதை விட்டும், அவர்களிடம் தனது தேவைகள் குறித்து முறையிடுவதை விட்டும், தனது வேண்டுதல்களை வைப்பதை விட்டும் முற்றிலுமாக விலகிக்கொண்டாரோஅவரே அல்லாஹ் பொருந்திக் கொள்ளும்  உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்.

    இஸ்லாமிய வாழ்க்கை நெறியும் அல்குர்ஆனும் பிறப்பின் அடிப்படையில் யாருக்குமே சொந்தம் இல்லை. யாரெல்லாம் இஸ்லாத்தின் ஏவல் விலகல் கட்டளைகளை எவ்வித சுய விளக்கமும் கொடுக்காமல் அப்படியே ஏற்று, அதன்படி வழுவாமல் நடந்து வருகிறார்களோ அவர்களே அந்த குர்ஆனுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை உரிய முறையில் செலுத்தியவர்கள் ஆவார்கள். அவர்கள் பிறப்பால் எக்குலத்தில் பிறந்தாலும், பிற மக்களால் மிக இழிவாக வெறுத்து ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலும் அவர்கள் மக்களில் மிக உயர்ந்தவர்களே.

    அதற்கு மாறாக பிறப்பால் மிக மிக உயர் குலத்தில் பிறந்தாலும், முஸ்லிம் தாய், தகப்பனுக்கே பிறந்திருந்தாலும் இஸ்லாத்தின் ஏவல் விலக்கல்களைப் புறக்கணித்து அல்லது அவற்றிற்கு சுய விளக்கம் கொடுத்து தங்களின் மனோ இச்சையின் படி நடக்கிறார்களோ அவர்களை நாளை மறுமையில் முஸ்லிம்களுடைய பதிவேட்டில் அல்லாஹ் சேர்க்க மாட்டான். உலக மக்கள் அனைவரின் இறைவனான அல்லாஹ்வின் இறுதி வேதமான அல்குர்ஆனை ஓதி உணர்ந்து அதன்படி செயல்படாதவர்களுக்காக நாளை மறுமையில் அந்த குர்ஆனும் பரிந்துரை செய்யாது.

    எனவே முஸ்லிம்கள் முஸ்லிம் தாய், தகப்பனுக்குப் பிறந்த ஒரே காரணத்தால் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதை விட்டும் விலகிக் கொள்வார்களாக. அது கொண்டு இறைவனின் இறுதி வேதமான அல்குர்ஆன் தங்களுக்கே சொந்தம் என்ற குருட்டு வாதத்தையும் விட்டொழிப்பார்களாக. அல்குர்ஆனை முஸ்லிம் அல்லாத  தாய், தகப்பனுக்குப் பிறந்தவர்கள் ஓதி உணர்வதை தடுக்காதிருப்பார்களாக. அவர்கள் அசுத்தமானவர்கள்;  அவர்களுக்குக் குர்ஆனை கொடுக்கமாட்டோம் என்று வீண்வாதம் செய்யாதிருப்பார்களாக.

    குர்ஆன் முஸ்லிம்களாகிய எங்களுக்கே சொந்தம்; எங்களது வேதம் என்ற முட்டாள் தனமாக சொந்தம் கொண்டாடுவதை விட்டும் விலகிக் கொள்வர்களாக. அது கொண்டு மற்றவர்கள் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம்; அவர்களுக்குரிய வேதப்புத்தகம்; நமக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற தவறான எண்ணத்தில் அதைப் புறக்கணிப்பவர்களாகவும், அறிவு குறைந்த முஸ்லிம்களை  கோபப்படுத்தி அதன் மூலம் அவர்கள் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்குடன் அல்குர்ஆனை எரிப்பவர்களாகவும் இருக்க முஸ்லிம்கள் துணை போகாதிருப்பார்களாக.

    கடலிலும், கரையிலும் ஏற்படும் குழப்பங்கள் அனைத்தும் தங்கள் கரங்களால் ஏற்ப்பட்டவையே என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை ஓதி உணர்ந்து தங்களின் கரங்களை அல்லாஹ்வுக்குப் பொருத்தமான வழியில் ஈடுபடுத்தவார்களாக. இதுவே உண்மை முஸ்லிம்களின் இலட்சணமாகும்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s