சாமியார்கள்!

நாட்டின்  பல பாகங்களிலுருந்தும் போலிச் சாமியர்களைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன.  துறவறத்தைக் கடை பிடிப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்கள் தங்களிடம் வரும்  பெண்களையும் ஆசிரமங்களில் தங்கியிருக்கும் பெண்களையும் கற்பழிப்பது சர்வ சாதரணமாகி  விட்டது. சாமியார்களின் இழிச் செயல்களினால் பக்தி பகல் வேஷமாகி வருகிறது. அறிவில்  குறைந்த அடிமட்ட மனிதர்கள் தங்கள் அறியாமையாலும் சுய சிந்தனையற்ற போக்காலும் இந்தச்  சாமியார்களை இறைவனின் பக்தர்களாக அவதாரங்களாக நம்பி மோசம் போகிறார்கள்.

அரசியவாதிகளோ  அடிமட்ட மக்களின் வாக்குகளைக் கவர இந்தச் சாமியார்களின் கால்களில் நெடுஞ்சாண்டையாக  விழுகிறார்கள். இந்தச் சாமியார்களிடம் காணப்படும் இழி குணங்கள் இந்த  அரசியல்வாதிகளிடமும் உண்டு. இனம் இனத்தோடு சேரும் என்பது போல் அவர்களின் நிலை  இருக்கிறது. அது மட்டுமல்ல உலக ஆதாயத்தில் மட்டும் குறியாக இருக்கும் பண முதலைகளும்  இந்தச் சாமியார்களை மதிப்பது போல் நடித்து அவர்களைக் கொண்டு உலக ஆதாயங்களை அடைந்து  வருகிறார்கள்.

சாமியார்கள், அரசியல்வாதிகள், பண முதலைகள் இப்படி ஒரு பெருங்கூட்டமே இறைவனின்  பெயரால் பகல் வேஷம் போடுவதால் அதை நிதர்சனமாகப் பார்க்கும் ஓரளவு சிந்தனைத்திறன்  பெற்றவர்கள்-தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் மன விரக்தி  அடைகிறார்கள். அவர்களுக்கு மக்கள் நலனில் கொஞ்சத்திற்குக் கொஞ்சமாவது அக்கரை  இருக்கிறது. எனவே இறைவனின் பெயரால்தானே சாமியார்களும் அரசியல்வாதிகளும் பண  முதலைகளும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எனவே அந்த இறைவனே இல்லை என்று நிலை  நாட்டிவிட்டால் சுபிட்சம் தானாகவே வந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்டு  மக்களுக்கு அதைப் போதிக்க துணிந்து விட்டார்கள். ஆயினும் அவர்களும் குடி விபச்சாரம்  போன்ற் ஈனச் செயல்களின் கெடுதிகளை உணர்வதாக இல்லை. கோடி கோடியாக மக்களை  கொள்ளையடித்து சொத்துச் சேர்த்து வைப்பதிலுள்ள கெடுதிகளையும் புரிந்து கொள்ளவில்லை.

இத்தனை கெடுதிகளுக்கும் மூல காரணம் எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.  தங்களை அறிவாளிகள் என்று அலட்டிக் கொள்வோரும், தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்  பரிதாப நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்களும் ஒரு வகையில் அழிந்து போகும் அற்ப  உலகின் பணம், பதவி, சுகங்கள் இவற்றால் ஈர்க்கப்பட்டிருப்பதால், இல்லை மூழ்கி  இருப்பதால் அவர்களாலும் உண்மையை உணரமுடியவில்லை. அதனால்தான் அவர்களிடையே இவ்வுலகோடு  முடிந்துவிடும் நாஸ்திகம் தலை தூக்குகிறது.

மனிதர்களில் வெவ்வேறு மதத்தினருக்கு வெவ்வேறு கடவுள் என்பது மூட நம்பிக்கையாகும்.  எல்லா மனிதர்களுக்கும் எல்லா மதத்தினருக்கும் ஒரே இறைவன்தான். அந்த ஒரே இறைவனும் பல  மதங்களை மக்களுக்குக் கொடுக்கவில்லை. ஒரே ஒரு வாழ்க்கை நெறியைத்தான் கொடுத்துள்ளான்.  மனிதர்களே மதப்புரோகிதரர்களே சாமியார்களே தங்கள் சுய நலத்திற்காக வெவ்வேறு மதங்களைக்  கற்பனை செய்து மக்களுக்குப் போதித்து வருகிறார்கள். மதங்களில் காணப்படும் “துறவறம்”  ஒரே இறைவன் கொடுத்த நல்வழி முறையல்ல. மனிதர்கள் கற்பனை செய்து கொண்டதே; மூடத்தனமே.  இதோ ஒரே இறைவனின் இறுதி மறை கூறுகின்றது பாருங்கள்.

ஆனால்  அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது  விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை  உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப்  பேணவில்லை  அல்குர்ஆன் 57:27

இந்த  இறைவாக்கு தெளிவாக துறவறம் இறைவன் விதித்ததல்ல. மனிதன் தனது அற்ப அறிவால்  உண்டாக்கிக் கொண்ட மூடத்தனமே என்பது புரிகின்றது. துறவறம் எப்படி அறிவற்ற செயல்  என்பதை ஆராய்வோம்.

ஒருவன்  முக்தி பெற துறவறம்தான் வழி என்றால் மனிதர்கள் அனைவரூம் முக்தி பெறுவது சாத்தியாமா?  ஒரு துறவி சாமியாரின் தாயும் தந்தையும் முக்தி பெற விரும்பியிருந்தால் இந்த சாமியார்  இந்த உலகில் பிறந்திருக்க முடியுமா? அப்படியானால் ஒரு ஆணும் பெண்ணும் (பெற்றோர்)  இருவர் முக்தியை இழந்து ஒருவருக்கு முக்தி கிடைப்பதாக இருந்தால் இது நியாயமா? இது  இறைவன் கொடுத்த வழியாக இருக்க முடியுமா? துறவறம் மூலம் மனிதர்கள் அனைவரும் முக்தி –  இறைவனின் பொருத்தம் பெற முடியுமா? அப்படியே மனிதர்கள் அனைவரும் துறவறம் பூண்டு இறை  பொருத்தம் பெற முடிவு பண்ணி விட்டால் அதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்  அவர்களுக்குப் பின் இவ்வுலகம் இயங்குமா? இப்படிப்பட்ட வடிகட்டிய மூடத்தனமான  துறவறத்தை இறைவன் தன்னை அடையும் வழியாக மனித வர்க்கத்திற்குக் கொடுத்திருக்க  முடியுமா? சிந்தியுங்கள்.

பெண்ணைத் துறந்து முக்தியை நாடுகிறவர்கள் அத்துடன் ஊணையும் துறந்து விட்டால்  முக்தி- முடிவு உடனடியாக கிடைத்து விடுமே? ஏன் ஊணைத் துறப்பதில்லை? பெண்ணைத்  துறப்பதாக நடித்து புகழை அடைவது முடியாது போய்விடும் என்ற அச்சமா? புகழை விரும்பும்  இவர்களா துறவிகள்? சாமியார்கள்? அல்லது ஊணை துறப்பதால் சாவு சடுதியாக வந்து விடும்;  இது தற்கொலையாகும் என்ற நல்லெண்ணமா? அப்படியானால் ஊணைத் துறந்து தனி மனிதனொருவன்  சாவது பாவமென்றால் பெண்ணைத் துறப்பது மனித இனமே சாவதற்கு ஒப்பாகுமே? இது மாபெரும்  பாவமில்லையா? முக்தி அனைவரும் பெருவதாக இருந்தால் அனைவரும் துறந்துதானே ஆக வேண்டும்.  இதிலிருந்து “துறவறம்” படைத்த இறைவன் கொடுத்த நேர்வழி இல்லை என்பது விளங்கவில்லையா?

அது மட்டுமல்ல மதப் புரோகிதரர்களே  சாமியார்களே அவர்களே சுயமாக உண்டாக்கிக்  கொண்ட துறவறத்தை அவர்களே முழுமையாக பேணி நடக்கவில்லை என்ற உண்மையையும் அந்த இறைவனே  அறியத் தந்துள்ளான். முற்றிலும் துறந்தவனே முனிவன்  சாமியார். இந்த நிலை இந்தச்  சாமியார்களிடம் காணப்படுகின்றதா? சாமியார்கள் காட்டில் வாழ வேண்டியவர்கள்; நாட்டில்  வாழ்வது துறவறமல்ல. எவ்வித வசதி வாய்ப்பும் இல்லாத குடில்களில் இலை குழைகளைத் தின்று  வாழ்க்கையை ஓட்ட வேண்டியவர்கள். அப்படியே தப்பித் தவறி நாட்டிலே வாழ்ந்தாலும்  தங்களுக்கென்று எதையும் சேமித்து வைக்காமல் வெறும் ஆட்களாக இருந்து கடும் பசி  எடுக்கும்போது மட்டும் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து அரை வயிறு கால் வயிறு  சாப்பிட்டு விட்டு தியானத்தில் மூழ்க வேண்டியவர்கள். அடுத்த வேளை உணவுக்கு என்று  சேமித்து வைப்பவர்களும், கசக்கி கட்ட ஓருடைத் தவிர வேறுடை வைத்திருப்பவர்களும்  சாமியார்களல்ல.

ஒரு சாமியாரை பார்த்த மாத்திரத்தில் அவர் போலிச் சாமியாரா அல்லது உண்மைச்  சாமியாரா என்பதை புரிந்து கொள்ள முடியும். ஒட்டிய வயிரோடு ஊதினால் விழுந்து விடும்  பலகீனமான உடலுடன் காணப்படுபவர்களே உண்மைச் சாமியார்கள். உருண்டு திரண்டு பளபளவென  தோற்றமளிப்பவர்கள் போலிச் சாமியார்களே. வெளியே மக்களை ஏமாற்ற குடில் போன்ற தோற்றம்;  உள்ளே அரண்மனையில் காணப்படும் வசதிகள்; இவர்கள் சாமியார்களா? வேளா வேளைக்கு அறுசுவை  உணவுண்டு தூங்க கொசுவலை கேட்பவர்கள் சாமியார்களா? A.C அறைகளில் வாசம் செய்பவர்கள்  சாமியார்களா? எடைக்கு எடை தங்கம் விரும்புபவர்கள் சாமியார்களா? மனிதர்கள்  இவற்றையெல்லாம் அனுபவிக்கக் கூடாது என்ற கருத்தில் இதை நாம் சொல்லவில்லை. மனிதர்கள்  வரையறைக்குட்பட்டு இவற்றை அனுபவிக்கலாம். ஆனால் முற்றும் துறந்த சாமியார்கள் எப்படி  அனுபவிக்க முடியும் என்று தான் கேட்கிறோம்.

அதுமட்டுமல்ல; துறப்பதற்கு எளிதான இவற்றையே இந்தச் சாமியார்கள் துறக்க முடியாமல்  திணரும்போது, பெண்ணின்பத்தை எப்படி துறப்பார்கள்? அதுவும் உண்டு கொழுத்துத்  தினவெடுக்கும் போது துறக்க முடியுமா? அவர்கள் உண்மைச் சாமியார்களாக திகழ முடியுமா?  உலகப் படைப்புகளை இறைவன் மனிதனுக்கு அழகலங்காரங்களாவும் இன்பம் அளிப்பவையாகவும்  படைத்துள்ளான். அவற்றை முறைப்படி அனுபவித்துக் கொள்ளவும் அனுமதி தந்துள்ளான். உலக  வாழ்க்கை பரிட்சை வாழ்க்கையாக இருப்பதால் உலக சுகங்களில் கவர்ச்சியையும்  உடலின்பத்தையும் இறைவன் வைத்துள்ளான். எனவே இயற்காகவே மனிதர்கள் அவற்றால்  ஈர்க்கப்படத்தான் செய்கிறார்கள். அவற்றை அளவோடும், முறையோடும் அனுபவிப்பவன் வெற்றி  முக்தி பெற முடியும். அவற்றை முற்றிலும் துறப்பதாகச் சொல்பவன் சொல்கிறவன் பாசாங்கு  செய்து மக்களை ஏமாற்றுகிறான். அதனால் அவனுக்கு இறைவனிடம் அழிவு ஏற்படுகின்றது.  அவற்றில் மித மிஞ்சி மூழ்கிறவன் அவற்றாலேயே அழிகிறான். இதுதான் எதார்த்த நிலை.

மனித  ஆசாபாசங்களை ஊணாசை, உடையாசை, பெண்ணாசை, மண், பொண்ணாசை, புகழாசை என்று பகுத்துக்  காட்டலாம். இவற்றில் ஊணாசை, உடையாசை இவற்றைத் துறந்து பசிக்குப் புசிப்பது, மானத்தை  மட்டும் மறைப்பது என்பதை எட்டிய பின்பே பெண்ணாசையைத் துறக்க முடியும். இந்த  மூன்றையும் துறந்தவனுக்கே மண் பொண்ணாசையத் துறக்க முடியும். இவை ஐந்தையும் துறந்தவனே  புகழாசையைத் துறக்க முடியும். முற்றிலும் துறந்தவர்கள் முனிவர்கள் – சாமியார்கள்  என்று சொகிறவர்களை உற்று நோக்குங்கள். உடை ஆசையைத் துறந்திருக்கலாம். சாமியாரைப்  போல் வேஷம் தரித்திருக்கலாம். அதுவும் மக்கள் முன்னால் மட்டுமே.

ஊணாசையத் துறந்திருக்கிறார்களா? மண்ணாசையைத் பொன்னாசையத் துறந்திருக்கிறார்களா?  ஊணாசை, மண், பொன்னாசையத் துறக்காதவர்கள் பெண்ணாசையைத் துறந்து விட்டதாகச் சொன்னால்  அது உண்மையாக இருக்க முடியுமா? முதிர்ந்த வயது இயலாமையின் காரணமாக துறந்திருந்தால்  அது தனி விஷயம்.

ஆக இன்றைய சாமியார்கள் மக்களை ஏமாற்றும் ஏமாற்று பேர்வழிகள் என்பதில் துளியேனும்  சந்தேகமேயில்லை. விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிருவர் முற்றிலும் துறந்த  முனிவர்களாக இருக்கலாம், அவர்களும் முக்தி பெற முடியாது. காரணம் எந்த இறைவனின்  பொருத்தத்தை நாடி இவர்களாகத் துறவறத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்களோ அந்த இறைவன்  துறவறத்தை அவர்களுக்கு விதிக்கவில்லை என்பதை இறைவனின் இறுதி வேதத்தில் பார்த்தோம்.  துறவறம் இறைவனால் விதிக்கப்படாத ஒன்று எனவும் அது அறிவுக்கே பொருந்தாத தத்துவம்.  இருவரை முக்தி இழக்கச் செய்து ஒருவர் முக்தி பெறுவதாகச் சொல்லும் போலித்தத்துவம்.

மேலும் இந்தச் சாமியார்கள் இறையருள் கொண்டு அற்புதங்கள் காட்டுவதாக மக்களை  மயக்குவதும் ஒரு ஏமாற்று வித்தைதான். கண்கட்டி வித்தைதான். மோசடிதான். உண்மையிலேயே  இறையருள் அவர்களுக்கிருந்தால் சந்தி சிரிக்கும் ஈனச் செயல்களில் ஈடுபட முடியுமா?  அந்தோ பரிதாபம்! இவற்றைவிட அதிசயங்களை “மேஜிக்” காட்டுகிறவர்கள் செய்து காட்டும்போது  அங்கு பக்தி பரவசம் காட்டாத பாமர மக்கள் இந்த போலிச் சாமியார்களிடம் மயங்குவதுதான்  வேதனைக்குறியது.

மனித அறிவைக்கொண்டு மனித முக்திக்கு வழி சொல்ல முடியாது. அந்த வழியை மனிதனைப்  படைத்த இறைவனே கற்றுத்தர வேண்டும். அந்த ஒரே இறைவன் காலத்திற்குக் காலம் தன்  புறத்திலிருந்து இறைத்தூதர்களை அனுப்பி மனித வாழ்க்கை நெறியை கற்றுத் தந்தான். ஆனால்  அந்த இறைத்தூதர்களுக்குப் பின்னால் அவர்களின் பெயரைச் சொல்லி இந்த மதப்  புரோகிதரர்கள்தான் தங்கள் சுய நலத்திற்காக இறை கொடுத்த வாழ்க்கை நெறியை பல்வேறு  மதங்களாகத் திரித்து விட்டார்கள்.

இறைவன்  உலகம் அழியும் வரை நிலைத்திருக்கும் பாதுகாக்கப்பட்ட இறுதி வேதத்தை  அல்குர்ஆனை உலக  மக்கள் அனைவருக்கும் பொது மறையாகத் தந்து அதன்படி செயல்பட கட்டளையிட்டுள்ளான். அவனது  இறுதித் தூதரும் அதன்படி வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் இங்கும் மதப்புரோகிதரர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். நாடெங்கும்,  உலகெங்கும் பரந்து விரிந்து இஸ்லாத்தின் பெயரால் காணப்படும் தர்கா, கொடிமரம்,  உண்டியல், சடங்குகள் அனைத்தும் இந்த மதப்புரோகிதரர்களால் கற்பனை செய்யப்பட்டவையே.  சூபிஸ துறவறமும் மாற்று மத புரோகிதரர்களைக் காப்பியடித்து முஸ்லிம் மதப்  புரோகிதரர்கள் உண்டாக்கியவையே. ஆசிரமங்களில், மடங்களில் காணப்படும்  காமக்களியாட்டங்கள், போதைக் கூத்துக்கள், ஆசிரமங்களைப் போல் தர்ஹாக்களும் சந்தி  சிரிக்கும் காலத்தை எதிர்பார்த்தே இருக்கின்றன.

இறைவனை அடையும் வழிகள் என்று சொல்லப்படும், படைத்த இறைவன் கொடுக்காத வழிகள்   தத்துவங்கள் அனைத்தும் மக்களை ஏமாற்றிப் பிழைக்க மதவாதிகள் உண்டாக்கும் மாய வலைகளே.  மக்களே அவர்களை விட்டும் உஷாராக வேண்டும். உண்மையை நாடும், வெற்றிக் காணத்  துடிக்கும் மனித நல விரும்பிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே இறைவனின் இறுதி மறையைப்  பற்றிப் பிடித்து, மனித இனத்தை “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற உன்னத நிலைக்கு  உயர்த்தப் பாடுபட முன்வர வேண்டுமென அன்புடன் வேண்டுகிறோம்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.