தொழுகையில் மார்க்க ரீதியாக வெறுக்கப்பட்டவை

1. தொழும் போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது: நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழும்போது தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பது பற்றிக் கேட்டேன்.  அதற்கு அவர்கள் இது ஷைத்தான் மனிதனிடமிருந்து (அவனது கவனத்தை) அபகரிக்கும்படியானதோர் அபகரிப்பாகும் என்றார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ,அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

தலையைத் திருப்பிக் கொண்டு பார்ப்பதானது, முறையாக இறை உணர்வோடு தொழும் ஒருவரின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியாகும். தொழுவோர் இதுவரையில் மிக  எச்சரிக்கையோடு நடந்து கொள்வார்களாக!

2. தொழும்போது கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பது:  நபி(ஸல்) அவர்கள், தொழும்போது இடுப்பில் கைவைத்துக் கொண்டிருப்பதைத் தடை செய்துள்ளார்கள்.  (அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம், திர்மிதீ,அபூதாவூத்)

3. தொழுகையின் போது வானத்தை நோக்கி முகத்தை உயர்த்துதல் தொழும்போது வானத்தின்பால் உயர்த்துவோர், அதிலிருந்து தம்மைத் தடுததுக் கொள்வார்களாக! இன்றேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டுப் போய்விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)

4. ஸுஜூது செய்யும்போது முழங்கையைத் தரையில் படுக்க வைத்துக் கொள்வது: ”ஸுஜூதை முறையாகச் செய்யுங்கள்! உங்கள் முழங்கைகளை நாய் விரிப்பது போல் தரையில் விரித்துக் கொள்ள வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி),அபூதாவூத்)

3. தொழும்போது கொட்டாவி விடுவது: ”உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவிவிட நேர்ந்தால் தம்மால் இயன்றளவு (அதை) அடக்கிக் கொள்வாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு ஸஃது(ரழி),அபூதாவூத்)

6. தூக்கம் மிகைத்த நிலையில் தொழுவது: ”உங்களில் ஒருவருக்குத் தூக்கம் (கடுமையாக) வருமாயின் அவர் தூக்கம் போகும் வரைத் தூங்கிக்கொள்வாராக! (ஏனெனில்) அவர் தாம் தூங்கும் நிலையில் தொழ முற்பட்டால் அவர் (தொழும்போது) பாவ மன்னிப்புத் தேட வேண்டிய கட்டத்தில் (ஒன்றிருக்க ஒன்றை ஓதி) தம்மைத் தாமே ஏசிக்கொள்ள நேரிடலாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா)

”உங்களில் ஒருவர் இரவில் விழித்துத் தொழும்போது, (தூக்கத்தின் மேலீட்டால்) குர்ஆன் ஒதுவதற்கு நாவு தடுமாறி, தாம் ஓதுவது தமக்குப் புரியாத நிலை ஏற்பட்டு விடுமாயின், உடனே அவர் படுத்துக் கொள்வாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், அஹ்மத்)

தொழுகை என்பது சுய உணர்வோடு நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு அமலாக இருப்பதால், தூக்கம் மிகைத்த நிலையும் சுய உணர்வை அகற்றி விடுகிறது. இந்த நிலையில் தொழுகையில் ஓத வேண்டியவைகளை முறையாக ஓதித் தொழ இயலாது. தூங்கி விழித்த பிறகு தொழ வேண்டியவற்றைத் தொழுது கொள்ள வேண்டும்.

பர்ளான தொழுகையைத் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட கடும் முயற்சி! நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் பிரயாணத்திலிருந்து ஓய்வு பெறுவதற்காக ஓர் இடத்தில் இறங்கினால், தமது வலப்புறமாகப் படுத்திருப்பார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகைக்கு சற்று முன்னர் இறங்கினால் தமது தலைக்குக் கையை முட்டுக் கொடுத்தவர்களாக, முழங்கையை நட்டி வைத்து (உஷார் நிலையில்)  படுத்திருப்பார்கள். (கதாதா(ரழி), முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்திலிருந்து திரும்பும் போது, இரவுப் பிரயாணம் செய்து வந்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு இலேசாகத் தூக்கம் வந்தது. அப்போது பிலால்(ரழி) அவர்களிடத்தில் இன்றிரவு நீர் விழித்திருந்து, சுப்ஹுத் தொழுகைக்காக எங்களுக்கு பாதுகாப்புப் பணி செய்வீராக! என்றார்கள்.

அப்போது பிலால்(ரழி) அவர்கள் (அதை ஏற்று சுப்ஹு வரையுள்ள இடை நேரத்தில் அல்லாஹ்வால் விதிக்கப்பட்டுள்ள ஓரளவு நேரம் வரை (நபிலான தொழுகை) தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது  நபி(ஸல்) அவர்களும், சஹாபாக்களும் (அயர்ந்து) தூங்கிக் கொண்டிருந்தார்கள். சுப்ஹு நேரம் நெருங்கியபோது பிலால்(ரழி) அவர்கள் சுப்ஹு நேரத்தை எதிர்பார்த்தவர்களாக, ஒட்டகத் தொட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். தொட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த பிலால்(ரழி) அவர்களை அவர்களின் கண்கள் மிகைத்துவிட்டன. (அதனால் அவர்களும் அயர்ந்து விட்டார்கள்) நபி(ஸல்) அவர்களும், பிலால்(ரழி) அவர்களும், மற்றும் சஹாபாக்களில் எவரும் தங்கள் மீது வெயில் அடிக்கும் வரை விழிக்கவில்லை. அவர்களில் முதன்மையாக விழித்தவர்கள் நபி(ஸல்) அவர்களேயாவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் திடுக்கிட்டெழுந்து ”பிலாலே!” என்றார்கள். உடனே பிலால்(ரழி) அவர்கள் (நபி அவர்களே!) ”உங்களை எது அயர்த்தியதோ அதுவே என்னையும் அயர்த்திவிட்டது” என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அனைவரையும் நோக்கி (இவ்விடத்தை விட்டு) அகன்று விடுங்கள்! என்றார்கள். அனைவரும் தமது பயணச் சாமான்களோடு அதைவிட்டு அகன்றுவிட்டனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒளு செய்துவிட்டு, பிலால் அவர்களிடம் ”இகாமத்” சொல்லும் படி கூறிவிட்டு, அவர்களுக்கு சுப்ஹைத் தொழ வைத்தார்கள். தொழுகையை முடித்தவுடன் ”ஒருவர் தொழுகையை மறந்துவிட்டால் அவர் அதை நினைத்தவுடன் தொழுது கொள்வாராக!” என்று கூறினார்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்

கூறியுள்ளான்! என்னை நினைப்பதற்காகத் தொழுவீராக! (20:14)

(அபூகதாதா(ரழி) அவர்கள் மூலம் நஸயீயில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் ”ஒருவர் தொழுகையை விட்டுத் தூங்கிவிட்டால் அவர் விழித்தவுடன் அதைத் தொழுது கொள்வாராக!” என்று உள்ளது. (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

7. சித்திரங்களையும், சிந்தனையை ஈர்ப்பவை அனைத்தையும் நோக்கித் தொழுவது:  ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் சித்திர வேலைப்பாட்டையுடைய ஆடை ஒன்றை அணிந்து தொழுதார்கள். அப்போது அவர்கள் அதன் சித்திர வேலைப்பாட்டை ஒருமுறை பார்த்து விட்டார்கள். தாம் தொழுது முடித்தவுடன் இந்த ஆடையை அப+ஜஹ்மு என்பவரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு அவரிடம் சித்திர வேலைப்பாடில்லாத ஆடை ஒன்றை எனக்கு வாங்கி வாருங்கள். ஏனெனில் இது என்னை எனது தொழுகையை விட்டு சற்று கவனத்தைத் திருப்பிவிட்டது என்றார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ)

மேற்காணும் ஹதீஸின் அடிப்படையில் தொழுபவரின் கவனத்தை அல்லாஹ்வின் சிந்தனையை விட்டுத் திருப்பக் கூடியவையான எந்தப் பொருளுக்கும் எதிரில் நின்று தொழுவது முறையல்ல. அவை தாம் அணிந்திருக்கும் ஆடையாயிருந்தாலும் சரி, அல்லது தாம் விரித்துத் தொழும் முஸல்லா-தொழுகை விரிப்பாயிருந்தாலும் சரி. இதே அடிப்படையில் தான் பள்ளிவாசலின் சுவர்களில் குர்ஆனின் வசனங்களை எழுதுவதும் தவறாகும்.

8. கண்ணை மூடிக்கொண்டு தொழுவதன் நிலை: ”உங்களில் ஒருவர் தொழுகையிலிருக்கும் போது, தமது கண்களை மூடிக்கொள்ள வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), தப்ரானீ)

இவ்வறிவிப்பு முறையானதல்ல. ஏனெனில் இதில் பல கோளாறுகள் காணப்படுகின்றன. அதனால் ஹதீஸ் கலாவல்லுனர்கள் இதை ”முன்கர்” நிராகரிக்கப்பட்டவையோடு சேர்த்துள்ளார்கள். பொதுவாக கண்கள் திறந்த நிலையில் தொழுவதே முறையாகும். காரணம் நபி(ஸல்) அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு தொழுதார்கள் என்பதற்கான ஒரு ஹதீஸும் இல்லை.

9. தொழும்போது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் கொள்வது: ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஒருவர் தொழும்போது தமது கைவிரல்களைக் கோர்த்து வைத்திருப்பதைப் பார்த்து, உடனே அவர் விரல்களை அதிலிருந்து பிரித்து விட்டார்கள். (கஃபுபின் உஜ்ரா(ரழி), திர்மிதீ, இப்னுமாஜா)

உங்களில் ஒருவர் தாம் பள்ளியில் இருக்கும்போது, தமது விரல்களைக் கோர்த்து வைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இவ்வாறு செய்து கொள்வது ஷைத்தானின் செயலில் உள்ளதாகும். (அபூஸயீதில் குத்ரீ(ரழி), அஹ்மத்)

சாப்பிட அவசியமான நிலையிலும், மலஜலத்திற்கு அவசியம் செல்ல வேண்டிய கட்டத்திலும் தொழுவது. ”உணவு தயாராக இருக்கும்போது தொழுகை இல்லை. இவ்வாறே மலஜலத்திற்குச் செல்ல அவசியமான நேரத்திலும் தொழுகை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), முஸ்லிம்) இப்னு உமர்(ரழி) அவர்களுக்குச் சாப்பாடு வைக்கப்பட்டு விடும், (அதே நேரத்தில்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடும். (இந்நிலையில்) அவர்கள் இமாமுடைய கிராஅத்து ஓதலைக் கேட்டுக்  கொண்டிமிருப்பார்கள். ஆனால் அவர்கள் சாப்பிட்டு முடிக்காமல் தொழுகைக்கு வரமாட்டார்கள். (நாஃபிஉ(ரழி), புகாரீ)

10. பள்ளியில் தொழும்போது குறிப்பிட்டதோர் இடத்தில் தொழுவதையே பழக்கமாக்கிக் கொள்வது: ஒருவர் தொழுகையில் (ஸ{ஜூது செய்கையில்) காக்கை கொத்துவது போல் கொத்துவதையும், ஜவாய் மிருகங்கள் விரிப்பதுபோல் கையைத் தரையில் படுக்க வைத்துக் கொள்வதையும், ஒட்டகம் வழக்கப்படுத்திக் கொள்வது போல் பள்ளியில் (தொழுவதற்கென்று) ஓர் இடத்தைக் குறிப்பாக்கிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அப்துர் ரஹ்மான்பின் »ப்லு(ரழி), அஹ்மத்) (வழக்கமாக குறிப்பிட்டதோர் இடத்தில் இமாம் தொழுவதை இவ்வறிவிப்பு கட்டுப்படுத்தாது ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தொழ வைக்கும்போது குறிப்பிட்டதோர் இடத்தில் நின்றே தொழ வைத்துள்ளார்கள்.)

11. தொழும்போது எதிரில் எச்சில் துப்புவது: உங்களில் ஒருவர் தாம் தொழுகையில் இருக்கும்போது, தமதுகிப்லாவின் பக்கம்-எதிரில் எச்சில் துப்ப வேண்டாம். எனினும் அவர் தமது இடப்பக்கமோ அல்லது தமது காலடியிலோ (துப்பிக் கொள்வாராக) என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அவர்கள் தமது உடலில் போட்டிருக்கும் ஆடையின் ஒரு ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு மறுபகுதியை மறு பகுதியில் வைத்து மடித்துவிட்டு அல்லது அவர் இவ்வாறு செய்து கொள்வாராக! என்று கூறினார்கள். (அனஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஒருவர் தாம் தொழும்போது தமது இறைவனிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். ஆகையால் அவர் தமக்கு எதிரிலோ அல்லது தமது வலப்புறத்திலோ எச்சில் துப்பவேண்டாம். எனினும் அவர் தமது இடப்புறத்தில் தமது காலடியில் துப்பிக்கொள்வராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), முஸ்லிம்)

ஆகவே தொழும்போது எச்சில் துப்ப வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டால் எக்காரணத்தை முன்னிட்டும் தமக்கு எதிரில்கிப்லாவின் பக்கம் துப்பிவிடாது. தமது இடப்பக்கம் தமது காலடியில் துப்பிவிட்டு, அதன்மேல் மண்ணைத் தள்ளி மறைத்துவிட வேண்டும். இவை அனைத்தும் மண் தரையிலான பள்ளிகளுக்கே பொருந்தும், ஆனால் தளம் போடப்பட்டும், விரிப்புகள் விரிக்கப்பட்டு இருப்பின் மேற்காணும் ஹதீஸின் இறுதியில் காணப்படுவது போல் தமது ஆடையில் ஒரு ஓரத்திலோ அல்லது கைக்குட்டை போன்றவற்றிலோ உமிழ்ந்து மடித்து வைத்துக்கொள்வதே உசிதமாகும்.

12. வெங்காயம், பூண்டு முதலிய தூவாடைப் பொருள்களைச் சாப்பிட்டுவிட்டு அதன் துர்வாடை தம்மில் இருக்கும்போது பள்ளியில் பிரவேசிப்பது: ”இத்தாவரப் பொருட்களான வெங்காயம், பூண்டு ஆகிய துர்வாடையுடையவற்றைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலின் பக்கம் நெருங்கக் கூடாது. ஏனெனில் நிச்சயமாக எவற்றால் மக்கள் இம்சை அடைகிறார்களோ, அவற்றால் மலக்குகளும் இம்சை அடைகின்றனர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜாபிர்(ரழி), முஸ்லிம்)

தமது தோள்-புஜத்தின் மீது ஆடை ஏதுமின்றி ஓர் ஆடை மட்டும் அணிந்து கொண்டு தொழுவதன் நிலை: ”உங்களில் எவரும் தமது தோள்-புஜத்தின் மீது ஆடையில்லாது ஓர் ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி),அபூதாவூத், நஸயீ, தாரமீ)

”ஓர் ஆடையில் (மட்டும்) தொழுபவர் அந்த ஆடையின் (மேல்) இரு ஓரங்களையும் மாற்றி (பிடறியில் கட்டி)க் கொள்வாராக?” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

”உங்களில் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழும் எவரும் அந்த ஆடையில் சிறிது பாகமேனும் (தமது) பிடறியில் இல்லாத நிலையில் (அந்த ஆடையின் மேல் இரு ஓரங்களையும் மாற்றி பிடறியில் முடிச்சுப் போட்டுக் கொள்ளாத நிலையில்) தொழ வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

நான் ஜாபிருபின் அப்தில்லாஹ்(ரழி) அவர்கள் ஒரே ஆடையாக தம்மைப் போர்த்திக் கொண்டு தொழுது கொண்டிருக்கும்போது அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களின் மேலதிகமான ஆடைகள் (ஒருபுறம்) வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தொழுது திரும்பியபோது அவர்களை நோக்கி அபூ அப்தில்லாஹ் அவர்களே! உங்கள் மேலதிகமான ஆடைகள் (இதோ) வைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் (இந்த நிலையில் ஒரே ஆடையில்) தொழுகிறீர்களே! என்று கேட்டேன், அதற்கு அவர்கள் உம்மைப் போன்ற விவேகமற்றவர்கள் என்னைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினேன் (அதனால் இவ்வாறு செய்தேன்) என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களை இவ்வாறு தொழ நான் பார்த்துள்ளேன் என்றார்கள். (முஹம்மதுபின் முன்கதிர்(ரஹ்), புகாரீ)

மேற்காணும் ஹதீஸ்களில் ஓர் ஆடையைக் கொண்டு மட்டும் தொழுபவர் அந்த ஆடை விசாலமாயிருந்தால் அந்த ஆடையின்மேல் இரு ஓரங்களையும் மாற்றி பிடறியில் முடிச்சுப் போட்டுக் கொண்டு தொழ வேண்டும. ஆடை போதிய அளவில்லாது சிறியதாகயிருந்தால், (ஆடை சிறியதாயிருந்தால் அதை உமது இடுப்பில் (மட்டும்) கட்டிக் கொள்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜாபிர்(ரழி), புகாரீ, அபூதாவூத் என்ற அறிவிப்பின்படி) அதை இடுப்பில் (மட்டும்) அணிந்து கொள்ள வேண்டும்.

மேல் அதிகமாக துண்டு போன்றவையிருந்தால் (உங்களில் எவரும் ”தமது தோள்-புஜத்தின்மீது ஆடையில்லாது ஓர் ஆடை மட்டும் அணிந்த நிலையில் தொழ வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூஹுரைரா(ரழி),அபூதாவூத், நஸயீ, தாரமீ என்ற அறிவிப்பின்படி) அவற்றால் புஜத்தை மறைத்துக்கொண்டு தொழ வேண்டும்.

இவ்வாறு இடுப்பில் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழும் ஒருவருக்கு தோள்-புஜங்கள் அவசியம் மறைக்க வேண்டிய பகுதியாக இல்லாமலிருந்தும் கூட அப்பாகத்தை மறைத்துத் தொழுவது நல்லது – சிறப்பு என்று வலியுறுத்திக் கூறிய நபி(ஸல்) அவர்கள், ”தொழுபவர் தமது தோள் – புஜங்களை மறைப்பது போன்று அவரது தலையையும் மறைத்துத் தொழுவது நல்லது” என்ற வகையில் ஒரு வார்த்தையேனும்  கூறியிருக்கலாமல்லவா? இவ்வாறு அதுபற்றி கூறாமலிருப்பது ஒன்றே ஆண்கள் தலை திறந்த நிலையில் தொழுவது தாராளமாக ஆகும், அதில் எவ்வித குறைபாடுமில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.