வணிகம்

கேள்வி: முஸ்லீம்கள் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்யலாமா? ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா என்பதையும் தெளிவுப்படுத்தவும். பதில் தெரிந்தவர்கள் உடனே பதியவும்.

பதில்: பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஷேர் மார்க்கெட் ஹலாலா? ஹராமா என்பதை ஆய்வு செய்வதற்கு முன் ஷேர் மார்க்கெட் என்றால் என்ன? அதனால் பொது மக்களுக்கு என்ன பயன் என்பதை அறிய வேண்டும்! அலசுவோம் வாருங்கள்! வியாபாரம் வியாபாரம் செய்யப்படும் முறையை 4 வகைப்படுத்தலாம் 1)      தனி நபர் நிறுவனம் 2)      கூட்டு நிறுவனம் 3)      வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனம் 4)      பொதுத்துறை நிறுவனம் தனி நபர் நிறுவனம் (PROPRIETORSHIP CONCERN) உங்களிடம் 5 இலட்ச ரூபாய் உள்ளது ஒரு நிறுவனத்தை நடத்த விரும்புகிறீர்கள் ஆனால் அந்த நிறுவனத்தின் இலாபம் நட்டம் உங்கள் ஒருவரை மட்டுமே சார்ந்தது காரணம் நீங்கள் நேரடியாக அந்த நிறுவனத்தின் முதலாளி ஆகிறீர்கள்.

நட்டம் ஏற்பட்டால் நீங்கள மட்டுமே நேரடியாக பொறுப்பு மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கு தெரியும்! கூட்டு நிறுவனம் (PARTNERSHIP CONCERN) உங்கள் தனி நபர் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்த 5 இலட்ச ரூபாய் குறைவாக உள்ளது ஆனால் இலாபம் அதிகமாகவும் நட்டம் குறைவாகவும் வரவேண்டும் என்ற எண்ணம் வருகிறது, உடனே உங்கள் நெருங்கிய சகோதரரையோ நண்பரையோ உங்கள் வியாபாரத்தில் கூட்டாளியாக்கிக் கொள்கிறீர்கள் இப்போது உங்கள் தனி நபர் நிறுவனம் கூட்டாண்மையாக மாறுகிறது அதே சமயம் உங்கள் கூட்டு நிறுவனம் திவாலானாலோ, கடன் சுமை அதிகரித்தாலோ கூட்டாளிகளாகிய நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட இழக்க நேரிடும்!

நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் கூட்டாளியுமே நேரடியாக பொறுப்பு! மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்கள் இருவருக்கும் தெரியும்! லிமிடெட் கம்பெனி வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம்) உங்கள் கூட்டு நிறுவனம் அதாவது பார்ட்னர் சிப் நிறுவனத்தில் நீங்கள் இருவரும் முதலீடு செய்த 10 இலட்சம் போதவில்லை முதலீடு 50 இலட்சமாக அதிகரிக்க வேண்டும் ஆனால் கடன் வாங்கி நட்டம் வந்துவிட்டால் இருவருமே திவாலாகி விடுவீர்கள் என்ற பயம் வருகிறது உடனே நீங்கள் உங்கள் நிறுவனத்தை லிமிடெட் கம்பெனியாக மாற்றுகிறீர்கள் இப்போது உங்கள் கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் கருதப்படுகிறது இப்படிப்பட்ட நிலையில் கம்பெனியின் கடனுக்கு நீங்கள் இருவரும் நேரடியாக பொறுப்பாகமாட்டீர்கள்! சரி! உங்களுக்குத் தேவையான 50 இலட்ச ரூபாயை முதலீடு செய்பவர்கள் யார்? நட்டம் யாரை சார்ந்தது என்பதை அறிய வேண்டுமா? அதற்கு கம்பெனியின் கீழ்கண்ட இரு பிரிவுகளை அறிவது ஒன்றே வழி! A) பிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்) பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் உள்ள பங்குதாரர்கள் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே இடம் பெறுவார்கள் காரணம் லாபம் வெளியே சென்றுவிடக் கூடாதே! அதே சமயம் இந்த பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் தனது பங்குகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய முடியாது! இந்த வியாபார முறையில் உறவினராகிய உங்கள் பங்குதாரர் தான் இட்ட முதலீட்டின் அளவு வரை மட்டுமே கம்பெனியின் கடன்களுக்குப் பொறுப்பாளியாவார். நட்டம் ஏற்பட்டால் நீங்களும் உங்கள் குடும்ப, நண்பர்களான பங்குதாரர்கள் மட்டுமே நேரடியாக பொறுப்பு! மேலும் நட்டத்திற்கான உண்மை காரணம் உங்களுக்கும், குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் நன்றாகவே தெரியும்!

B) பப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்) 1000 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் தொழிற்சாலை வேண்டும் உலகம் முழுவதும் உங்கள் பொருட்கள் விற்பனையாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் உங்கள் குடும்ப, நண்பர்களான பங்குதாரர்களுக்கும் வருகிறது அதற்கு 1000 கோடி முதலீடு தேவை ஆனால் முதலீடு செய்ய யாரும் கிடையாது இப்படிப்பட்ட நிலையில் உங்கள் சொந்த குடும்ப, நண்பர்களுடன் உருவான உங்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனி உங்களுடைய ஒத்துழைப்புடன் அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றப்படும். இத்தகைய பப்ளிக் லிமிடெட் கம்பெனி பங்குச்சந்தையில் பங்குகளை விற்கமுடியும். அப்பாவி பொதுமக்கள் உங்கள் நிறும பங்குகளை வாங்குவார்கள்! வாங்கிய 1000 கோடி ரூபாயில் இலாபம் அதிகரித்தால் உங்கள் நிறுவனத்திற்கு பண்ணாட்டு அங்கீகாரம் கிடைக்கும் பேரும் புகழும் தேடி வரும் ஆனால் பெரும் நட்டம் எற்பட்டால்  உங்களிடம் முதலீடு செய்த பொதுமக்கள் தலை உருளும். ஷேர் மார்க்கெட்! ஷேர் என்பது பங்கு, மார்க்கெட் என்பது சந்தை

முழுவதுமாக கூறுவதாக இருந்தால் பங்குச் சந்தை என்று பொருள். இந்த ஷேர் மார்க்கெட்டில் யார் பங்குகளை வெளியிட முடியும்? யார் வாங்க முடியும் என்பதை பார்ப்போம் வாருங்கள்! பங்குகளை வெளியிடும் அதிகாரம் பப்ளிக் லிமிடெட் கம்பெனிக்கு மட்டுமே உரியது. இந்த பப்ளிக் லிமிடென் நிறுவனங்களைத் தவிர வேறு எந்த நிறுவனங்களும் பங்குகளை பொதுமக்கள் முன் வெளியிட முடியாது! சரி பங்குகள் என்றால் என்ன? பங்கு மற்றும் பங்குதாரர் என்றால் என்ன? கம்பனிகள் முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள். முகம் தெரியாத முதலீட்டாளர்களே பங்குதாரர்கள் அதாவது ஏமாற்ற தகுதி வாய்ந்தவர்கள்! இவர்கள் நீதிமன்றத்தை அணுகி னாலும் நீதி கிடைக்காது காரணம் தெரிந்தே கையொப்ப மிடுகிறார்கள் சவக்குழிக்குள் தங்கள் கால்களை நுழைக் கிறார்கள்! சுரண்டலுக்கு சுவையான வியாயபாரம் பங்கு வணிகம்

பங்குசந்தை மோசடி

தனி நிறுவனம் இலாப நட்டம் உங்களுக்கு மட்டுமே! பார்ட்னர் சிப் (கூட்டாண்மை நிறுவனம்) இலாப நட்டம் உங்களுக்கும் உங்கள் கூட்டாளிகளுக்கும்! பிரைவேட் லிமிடெட் கம்பெனி (தனியார் பங்கு நிறுவனம்) இலாப நட்டம் உங்களுடன் இருக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே! பப்ளிக் லிமிடெட் கம்பெனி (பொதுப் பங்கு நிறுவனம்) இலாபம் உங்களுக்கும் நட்டம் உங்களிடம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களுக்கு மட்டுமே!

கூட்டாளி, சொந்த நண்பன் போன்ற முகம் தெரிந்த நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் நட்டம் வந்தால் பொதுவாக அமர்ந்து பேசி இறுதியாக முடிவுக்கு வரலாம் ஆனால் முகம் தெரியாத நபர்களுடன் நடைபெற்ற வர்த்தகத்தில் யாரிடம் சென்று நீதி கேட்பீர்கள்? தூக்குக் கயிறுதான் இன்றைய பங்குதாரர்களின் இறுதி முடிவாக உள்ளது! அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்

கேள்வி

அலைக்கும் ஸலாம்….. வர்த்தகத்தை பற்றி தெளிவாக கூறுனீர்கள். உங்கள் முயற்ச்சிக்கு நான் அல்லாஹ்விடம் துஆ கேட்டுக்கொள்கிறேன். இந்த ஷேர் மார்க்கெட் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை எனக்கு தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்

பதில்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர்களே!

நீங்கள் ரூபாய் 10 இலட்சத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து ஒரு பங்கு நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பங்குதாரர் என்ற வகையில் உங்களால் என்ன பதில் தர இயலும் 1.   உங்கள் முதலீட்டை வைத்துக்கொண்டு ஹலாலான முறைப்படி அந்த நிறுவனம் பொருள் உற்பத்தி செய்து ஹலாலான முறையில் விற்பனை செய்கிறதா? 2.      இன்று எத்தனையோ குளிர்பாணங்கள் சந்தையில் உள்ளன அவற்றில் ஒருவகையான பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்படு வதாகவும் அதை குடித்தால் மக்களுக்கு உடல்நலக் கேடு ஏற்படுவதாகவும் எத்தனையோ ஆய்வறிக்கைகள் வெளியிடப் படுகின்றன இப்படிப்பட்ட நிலையில் அந்த நிறும பங்குதாரர் என்ற அடிப்படையில் நீங்களும் உடந்தைதானே? 3.      நீங்கள் 10 இலட்சத்திற்கு பங்குகளை வாங்கி 15 இலட்சத்திற்கு விற்கறீர்கள் அதே நேரம் 15 இலட்சத்திற்கு உங்கள் சகோதரர் பங்குகளை வாங்குகிறார் ஆனால் 10 இலட்சத்திற்கு பங்கு மதிப்பு குறைகிறது நட்டம் ஏற்படுகிறது! இது எந்தவகை வியாபாரம்? 4.      ஒரு நிறுமத்தில் நீங்கள் பங்குதாரர் என்று வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் ஆலோசனைகளை அவர்கள் ஏற்பார்களா? 5.      உங்கள் பங்கு நிறுமம் தொழில் நடத்த ஒருபக்கம் வங்கியில் வட்டிக்கு கடன் வாங்கியும் மற்றொரு பக்கம் உங்கள் பங்கு முதலீட்டை பெற்றும் தொழில் நடத்தும் இப்போது பங்குதாரர் என்ற முறையில் நீங்களும் வட்டி வாங்க உடந்தைதானே? 6.      எந்த ஒரு நிறுவனமும் குறைந்தது 10 துணை நிறுவனங் களையாவது வைத்திருக்கும் அவற்றில் மதுபாண தயாரிப்பு, மதுபான விற்பனை போன்ற துணை நிறுவனங்கள் இருக்கத்தான் செய்யும். இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்களை வளர நீங்கள் உதவி செய்வீர்களா? காசுக்கு காசு மற்றும் திர்ஹமுக்கு திர்ஹம் ஒரு தொழிலா? பங்குச் சந்தையில் 10 இலடசம் முதலீடு செய்து 15 இலட்சம் பெறுவதாக இருந்தால் அது காசுக்கு காசை விற்கும் தொழில் அல்லவா அப்படியானால் இதோ கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்

தாவூஸ்(ரஹ்) அறிவித்தார்.

‘உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பு அதை விற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்!” என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். ‘அது எவ்வாறு?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) ‘உணவுப் பொருள் அதை வாங்கியவரின் கைக்குப் போய்ச் சேராத (நிலையில் விற்கப்படுவ)தால் இது (உண்மையில்) காசுக்குக் காசை விற்பதாகும்” என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி  2138 Volume:2 Book:34)

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!” என்று கூறினார்கள்.  (ஸஹீஹுல் புகாரி  2080. Volume:2 Book:34)

வியாபாரத்தில் பெருந்தன்மை கடைபிடிக்க வேண்டும்! பங்குகளை வாங்குகிறீர்கள், விற்கிறீர்கள் இவற்றிற்கு இடையில் ஒருவருக்கு இலாபமும் மற்றொருவருக்கு ஏமாற்றமும்தான் மிஞ்சும் இப்படிப்பட்ட நிலையில் நிறுவனம் பெருந்தன்மையாக நடக்காமல் போனால் அந்த தொழிலில் அல்லாஹ்வின் அருள் கிடைக்காதே! அல்லாஹ்வின் அருள் கிடைக்காத வணிகம் நமக்கு எதற்கு? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் வழக்குரைக்கும் பொழுதும் பெருநதன்மையாக நடந்து கொள்ளும் மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி  2076. Volume:2 Book:34)

வியாபாரத்தில் உண்மையை கடைபிடிக்க வேண்டும்! பங்கு வணிகத்தில் உண்மை பேசி வியாபாரம் நடைபெற்றால் பரவாயில்லை மாறாக ஒவ்வொரு தொலைக்காட்சி விளம்பரத்திலும் அடுக்கடுக்கான பொய்தான் வருகிறது. உதாரணமாக

  • வெயில் காலங்களில் ஒருவகை பவுடர் விளம்பரம் செய்யப்படும் அதை தடவிக்கொண்டால் பனிக்கட்டியின் குளுமை கிடைக்கும் என்பார்கள் உண்மையில் அப்படி குளுமை கிடைக்கிறதா?
  • ஒரு பைக் விளம்பரம் வரும் அதில் 140கி.மி. வேகத்தில் கடற்கரையில் பறந்து டைவ் அடிப்பதை போன்று காட்டுவார்கள் அது போன்று கடற்கரையில் உங்களால் பறக்க முடியுமா?
  • பபுல்கம் (சிவிங்கம்) விளம்பரம் வரும் அதை சாப்பிட்டால் மாடுகளின் பற்கள் கூட பளிச்சிடும் என்பார்கள் அவ்வாறு நடக்குமா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக்குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் பரக்கத் (அருள் வளம்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!”  என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி  2079. Volume:2 Book:34)

நட்டம் வரும் என்பதை அறிந்தே ஏமாற கூடாது! பங்கு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தைத் தான் காண்பார்கள் ஏதோ ஒரு சிலர் இலாபம் காண்பார்கள். பங்கு வர்த்தகம் என்பது ஏமாற்று வேலை என்பதை தெரிந்தே அதில் நுழையலாமா? முஸ்லிம்கள் பொதுவாக ஏமாறவும் கூடாது, ஏமாற்றவும் கூடாது என்பதை அறிவுறுத்தும் நபிமொழி அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். ‘நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் ‘ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!” என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)” என்றார்கள். . (ஸஹீஹுல் புகாரி  2117 Volume:2 Book:34)

வேண்டுமென்றே விலை ஏற்றுவதற்காக தரகர்களை நியமிப்பது கூடாது பங்குதாரர்களுக்கும், பங்கு நிறுமத்திற்கும் இடையில் இருப்ப வர்கள் இடைத்தரகர்கள் ஆவார்கள். இவர்கள் தான் பங்குகளின் விலை உயர்வுக்கும் விலை குறைப்புக்கும் மூலகாரணமாகிறார்கள். இந்த இடைத்தரகர்களில் ஒருவன்தான் உலகம் அறிந்த ஹர்சத் மேத்தா அவன் செய்த ஊழல் உங்களுக்குத் தெரியாதா என்ன? இப்படிப்பட்ட விலை ஏற்றத்தையும் அதற்கான இடைத்தரகர்களையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே வேண்டாம் என்று தடுத்தது நம்முடைய மார்க்கம் இஸ்லாம். ஆதாரம் வேண்டுமா? கீழே உள்ளது படியுங்கள்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “கிராமத்திலிருந்து (விற்பனைக்காகச் சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்! வாங்கும் எண்ணமின்றி விலை எற்றி விடுவதற்காக அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, அதிக விலைக்குக் கேட்க வேண்டாம்! (விலை உயர்த்தி விற்பதற்காக, ஆளை ஏற்பாடு செய்து, அதிக விலைக்குக் கேட்கச் செய்வதும் கூடாது!) ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிட வேண்டாம்! ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக் கொண்டிருக்கும்போது, இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம்! ஒரு பெண், தன் சகோதரியை தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!” என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!” . (ஸஹீஹுல் புகாரி  2140 Volume:2 Book:34)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (ஸஹீஹுல் புகாரி  2059. Volume:2 Book:34)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படு பவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம்விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும். பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்” என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புகாரி  2051. Volume:2 Book:34)

முடிவுரை சகோதரர்களே நம்முடைய உடன் பிறந்த சகோதரனோ, நண்பனோ ஏழ்மையில் இருப்பான் அவனிடம் உழைத்து பொருள் திரட்டும் வியாபார உக்திகள் அதிகம் இருக்கும் ஆனால் முதலீடு இருக்காது இப்படிப்பட்ட நிலையில் தினக்கூலிக்கு கொத்தடிமையாக வாழந்து வருவான். இப்படிப்பட்ட ஏழைக்கு குறைந்தது 50,000 ரூபாய் கொடுத்து சுய தொழில் நடத்தி அதில் கிடைக்கும் லாப (அ) நட்டத்தில் சமபங்கு என்று கூறினால் உங்களுக்கும் ஒரு நன்மை செய்த திருப்தி கிடைக்கும் அத்துடன் ஏழ்மையில் வாழும் உங்கள் சகோதரனோ அல்லது நண்பனோ அல்லாஹ்வின் கிருபையால் உங்கள் உதவியால் சற்று வசதி பெறுவான் இப்படிப்பட்ட செயல் உங்களை சுவனத்திற்கு இட்டுச் செல்லும் அதை விட்டு விட்டு யாரோ? எப்படிப்பட்டவனோ என்று கூட தெரியாமல் அவனிடம் உங்கள் பணத்தை கொட்டி அவன் கொடுக்கும் அற்ப லாபத்தை பெற்று பங்கு விலை ஏறுமா? இறங்குமா? என்று பயந்து ஒடுங்கி வாழ்வதால் மறுமையில் இலாபம் கிடைக்குமா? சிந்தித்துப்பாருங்கள்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தாவூத் நபி தம் கையால் உழைத்தே தவிர உண்ண மாட்டார்கள்.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  (ஸஹீஹுல் புகாரி  2073. Volume:2 Book:34)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக! அல்ஹம்துலில்லாஹ்

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.