தொழுகையில் செய்யும் பிற செயல்கள்

தொழுகைக்குள் கட்டுப்படாத, தொழுகைக்கு உதவக்கூடிய செயல்கள், தொழுகையுடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் கைகளைப் பயன்படுத்தலாம். ஒருவர் தொழும் போது தமது உடலில் எந்தப் பகுதியையும் பயன்படுத்தலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் தொழும் போது தமது தொப்பியைக் கழற்றியும் மாட்டியும் இருக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள் தொழும் போது தமது மேனியில் சொரிந்துகொள்ளும் நேரம் அல்லது தமது ஆடையைச் சரி செய்துகொள்ளும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தமது கையை இடக்கை மணிக்கட்டில் வைத்திருப்பார்கள். 

1198 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலவாட்டில் நான் படுத்துக் கொண்டேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவி (மைமூனா) அவர்களும் அந்தத் தலையணையின் நீளவாட்டில் படுத்துக் கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது அதற்குச் சற்றுப் பின்பு வரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தமது கையால் தமது முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை விலக்கி விட்டு ஆலுஇம்ரான் அத்தியாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். பிறகு தொங்கவிடப்பட்ட தோல்பாத்திரத்தை நோக்கிச் சென்று அதிலிருந்து அழகிய முறையில் அங்கசுத்தி (உளூ) செய்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போலவே செய்து, அவர்களின் (இடது) பக்கத்தில் நின்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வலது கரத்தை என் தலைமீது வைத்து எனது வலக்காதைப் பிடித்து (வலது புறத்திற்கு) திருப்பினார்கள். இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள் மேலும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரத்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னல் வித்ரு தொழுதுவிட்டுப் படுத்துக் கொண்டார்கள். தொழுகை அழைப்பாளர் (முஅத்தின்) வந்ததும் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (பள்ளிக்குப்) புறப்பட்டு சுப்ஹுத் தொழுதுவித்தார்கள்.

பாடம் : 2

தொழுகையில் பேசக்கூடாது

1199 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்ப காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களுக்கு நாங்கள் சலாம் கூறுவோம். அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் கூறுவார்கள். நாங்கள் (அபிசீனியாவின் மன்னர்) நஜாஷியிடமிருந்து திரும்பிய போது நபியவர்களுக்கு சலாம் கூறினோம். அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன என்று கூறினார்கள்.

1200 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில் தொழுகைகளில் பேணுதலாக இருங்கள் எனும் (2:238ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அதன்பின் பேசக் கூடாது என்று கட்டளையிடப்பட்டோம்.

பாடம் : 3

தொழுகையில் (இமாமுக்கு ஏற்படும் தவறுகளை உணர்த்த) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ்) என்று ஆண்கள் கூறலாம்.

1201 சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூஅம்ர் பின் அவ்ஃப் கூட்டத்தினரிடையே சமரசம் செய்துவைப்பதற்காக நபி (ஸல்) புறப்பட்டார்கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து நபி (ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார்கள். நீர் விரும்பினால் செய்கிறேன் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு இகாமத் கூறியதும் அபூபக்ர் (ரலி) முன்னே சென்று தொழுவிக்கலானார். சற்று நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு நடந்து வந்து முதல் வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டலானார்கள். அபூபக்ர் (ரலி) தொழுகையில் திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். மக்கள் கைதட்டல் மிகுந்த போது அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசையில் நிற்பதைக் கண்டார்கள். அங்கேயே நிற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் சைகை மூலம் தெரிவித்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து (திரும்பாமல்) பின்புறமாகவே நடந்து பின்னால் நின்று கொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுவித்தார்கள்.

பாடம் : 4

தொழும் போது அறியாத நிலையில் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு அல்லது அவரை நோக்கி சலாம் கூறுதல்.

1202 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் போது ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு ஒருவர் மீது மற்றவர் சலாம் கூறி வந்தோம். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் அருள்வளமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழிகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்என்று கூறுங்கள்! இவ்வாறு நீங்கள் கூறினால் வானம், பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் சலாம் கூறியவர்களாவீர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

பாடம் : 5

பெண்கள் (தொழுகையில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட) கைதட்டுதல்

1203 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1204 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதுமாகும்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 6

தொழுபவர் ஏதேனும் பிரச்சனைகளுக்காகப் பின்புறமாகவோ முன்புறமாகவோ நகருதல்

இதுபற்றிய நபிவழியை சஹ்ல் (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

1205 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். (மரணத்தறுவாயிலிருந்த) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் உள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே புன்னகைத்தவாறு திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பாமல் பின்புறமாக விலகலானார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியினால் மக்களுக்குத் தொழுகையின் கவனம் மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுதுமுடியுங்கள்’என்று தமது கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டாக்ள். அன்றைய தினமே அவர்கள் இறந்துவிட்டார்கள்.

பாடம் : 7

தொழுது கொண்டிருக்கும் தம் பிள்ளையைத் தாய் அழைத்தால்…?

1206 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒரு பெண்மணி, ஆசிரமம் ஒன்றில் இருந்த தம் மகனை ஜுரைஜ்’ என்று அழைத்தார். ஜுரைஜ் இறைவா நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே’என்று (மனதிற்குள்) கூறினார். மீண்டும் அப்பெண் ஜுரைஜ்’ என்று அழைத்த போது இறைவா! நான் தொழுது கொண்டிருக்க என் தாய் என்னை அழைக்கிறாரே!’ என்று (மனத்திற்குள்) கூறினார். அப்போது அப்பெண் இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் இறக்கக்கூடாது’என்று துஆச் செய்தார். ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்துசெல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப் பட்ட போது ஜுரைஜுக்குத்தான்; அவர் தமது ஆசிரமத்திலிருந்து இறங்கிவந்து இவ்வாறு செய்து விட்டார் என்று அவள் கூறினாள். தனது குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே? என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு அவள் பெற்ற குழந்தையை நோக்கி சிறுவனே! உன் தந்தை யார்? எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை ஆடுமேய்க்கும் இன்னார் என விடையளித்தது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 8

தொழும் போது சிறு கற்களை அப்புறப்படுத்துதல்

1207முஐகீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஜ்தாச் செய்யும் போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு தடவை மட்டும் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 9

சஜ்தாவின் போது ஆடையைத் தரையில் விரித்தல்

1208 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கடுமையான வெப்பத்தில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கிறோம். எங்களில் ஒருவருக்குத் தம் முகத்தைத் தரையில் வைக்க இயலா விட்டால் தமது ஆடையை விரித்து அதில் சஜ்தாச் செய்வார்.

பாடம் : 10

தொழும் போது செய்ய அனுமதிக்கப்பட்ட புறச்செயல்கள்

1209 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் தொழும் போது நபி (ஸல்) அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் சஜ்தாச் செய்யும் போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை மடக்கிக்கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக்கொள்வேன்.

1210 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். (தொழுது முடித்ததும்) ஷைத்தான் எனக்குக் காட்சி தந்து என் தொழுகையை முறித்துவிட முயன்றான். அவனை அல்லாஹ் எனக்கு அடிபணியச் செய்தான். அவனை நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வைத்து காலையில் நீங்களெல்லாம் பார்க்க வேண்டுமென விரும்பினேன். எனக்குப் பின் யாருக்கும் வழங்காத ஆட்சியை எனக்கு வழங்கு (38:35) என்று சுலைமான் நபி கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தேன். (அதனால் அவனை விட்டு விட்டேன்) இழிந்த நிலையில் அவனை அல்லாஹ் ஓடச் செய்து விட்டான் என்று கூறினார்கள்.

பாடம் : 11

ஒருவர் தொழும் போது அவரது வாகனம் ஓடிவிட்டால்…

ஒருவரது ஆடையைத் திருடன் எடுத்துச் சென்றால் தொழுகையை விட்டு விட்டு திருடனை விரட்டிச் செல்லலாம் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1211 அஸ்ரக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஹ்வாஸ் எனுமிடத்தில் ஹருரிய்யாக் கூட்டத்தினருடன் போர் செய்து கொண்டிருந்தோம். அப்போது ஆற்றோரத்தில் ஒரு மனிதர் தமது வாகனத்தின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தொழுது கொண்டிருந்தார். வாகனம் அவரை இழுக்க அவரும் அதைத் தொடர்ந்தார். அவர் அபூபர்ஸா (ரலி) என்ற நபித்தோழராவார். அப்போது காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இறைவா! இந்தக் கிழவரைத் தண்டிப்பாயாக எனக் கூறினார். அந்தப் பெரியவர் தொழுது முடித்ததும் நீங்கள் கூறியதை நான் கேட்டுக் கொண்டுதானிருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் ஆறு அல்லது ஏழெட்டுப் போர்களில் பங்கெடுத்திருக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் மார்க்கத்தை இலகுவாக்கியிருப்பதையும் நான் பார்த்திருக்கின்றேன். என் வாகனத்தை அதன் மேயும் இடத்துக்கு ஓட விட்டுவிட்டு கவலையுடன் நான் செல்வதைவிட என் வாகனத்துடன் திரும்பிச் செல்வதே எனக்கு விருப்பமானது எனக் கூறினார்.

1212 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றொரு அத்தியாயத்தை ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூஉ செய்து முடித்தார்கள். சஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களை விட்டு விலக்கப்படும் வரை தொழுங்கள்! எனக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தையும் இந்த இடத்தில் நான் கண்டேன். நான் முன்னே செல்வது போல் நீங்கள் என்னைக் கண்ட போது சொர்க்கத்தின் ஒரு திராட்சைப் பழக்கொத்தைப் பிடிக்க முயன்றேன். நான் பின்னே செல்வதுபோல் என்னை நீங்கள் கண்ட போது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். நரகத்தில் அம்ர் பின் லுஹை என்பவனையும் கண்டேன். அவன்தான் சாயிபா எனும் (கால்நடைகளை சிலைகளுக்கு நேர்ச்சை செய்யும்) வழிபாட்டை உருவாக்கியவன் என்று கூறினார்கள்.

பாடம் : 12

தொழும் போது எச்சில் உமிழ்வதும் வாயால் ஊதுவதும் கூடும்

நபி (ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையில் சஜ்தாவில் ஊதியுள்ளனர் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1213 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் (சுவரில்) எச்சிலைக் கண்டார்கள். பள்ளியில் இருந்தவர்களைக் கடிந்து கொண்டதுடன் அல்லாஹ் உங்களுக்கு முன்னே இருக்கிறான். எனவே யாரேனும் தொழுது கொண்டிருந்தால் கண்டிப்பாக எச்சில் உமிழ வேண்டாம் எனக் கூறிவிட்டு இறங்கிவந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள்.

உங்களில் யாரேனும் உமிழ்ந்தால் தமது இடப்புறத்தில் உமிழட்டும் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

1214 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

ஒருவர் தொழும் போது தம் இறைவனுடன் உரையாடுகிறார். எனவே தமக்கு முன்னாலோ, வலப் புறமாகவோ எச்சில் துப்ப வேண்டாம். எனினும் இடப் புறமாக தமது இடப் பாதத்தின் அடியில் துப்பட்டும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 13

தொழுகையில் ஏற்படும் தவறுகளை ஆண்கள் (சட்டம்) தெரியாத நிலையில் கைதட்டி உணர்த்தினால் அவர்களின் தொழுகை பாழாகாது.

இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 14

தொழுது கொண்டிருப்பவரிடம் மற்றவர் முன்னே செல்! காத்திரு என்று கூறும் போது தொழுபவர் அவ்வாறு செய்வதில் தவறில்லை.

1215 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது சிறிதாக இருந்த தம் வேட்டிகளைக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். இதன் காரணமாகவே ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள் என்று பெண்களிடம் கூறப்பட்டது.

பாடம் : 15

தொழும் போது சலாமுக்குப் பதில் கூறக் கூடாது

1216 அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களுக்கு நான் சலாம் கூறுவேன். அவர்கள் பதில் சலாம் கூறுவார்கள். நாங்கள் (அபிசீனியாவிலிருந்து) திரும்பி வந்த போது அவர்களுக்கு சலாம் கூறினேன். எனக்கு பதிலளிக்கவில்லை. தொழுது முடித்ததும் நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன என்று கூறினார்கள்.

1217 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னை தமது அலுவல் நிமித்தம் (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பிவந்து நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி (ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் சலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் சலாம் கூறினேன். எனக்கு பதில் சலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது) அவர்கள் கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தார்கள்.

பாடம் : 16

தொழும் போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் கைகளை உயர்த்துதல்

1218 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குபாவில் குடியிருந்த பனூஅம்ர் பின் அவ்ஃப் கூட்டத்தாரிடையே தகராறு இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அவர்களிடையே சமரசம் செய்தற்காக நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வரத் தாமதமானது. தொழுகை நேரம் நெருங்கியது. அப்போது பிலால் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி)அவர்களிடம் வந்து அபூபக்ரே! நபி (ஸல்) வருவதற்குத் தாமதமாகின்றது; தொழுகை நேரம் நெருங்கிவிட்டது. எனவே மக்களுக்கு நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா? என்று கேட்டார்கள். நீர் விரும்பினால் நடத்துகிறேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.பிலால் (ரலி) தொழுகைக்க இகாமத் சொன்னதும் அபூபக்ர் (ரலி0 அவர்கள் முன்னே சென்றார்கள். மக்களுக்கு (தொழுகை நடத்த) தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். உடனே மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களக்கு உணர்த்தும் முகமாக) கைதட்டலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். ஆயினும் மக்கள் அதிகமாக கைதட்டியதால் திரும்பிப் பார்த்தார்கள். (வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். தொழுகையைத் தொடருமாறு நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது கையை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, (திரும்பாமல்) அப்படியே பின்னால் நகர்ந்து வரிசையில் நின்று கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுதுமுடித்ததும் மக்களை நோக்கி மக்களே! தொழுகையில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் ஏன் கைகளைத் தட்டுகிறீர்கள்? கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும். எனவே, தொழும் போது ஒருவருக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர் சுப்ஹானல்லாஹ்’ (-அல்லாஹ் தூயவன்) எனக் கூறட்டும் என்றார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அபூபக்ரே! நான் உமக்கு சைகை செய்த பிறகும் மக்களுக்குத் தொழுகை நடத்த மறுத்ததேன் எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தொழுகை நடத்தும் தகுதியில்லை எனக் கூறினார்கள்.

பாடம் : 17

தொழும் போது இடுப்பில் கையை வைத்தல்

1219 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழும் போது இடுப்பில் கை வைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) இவ்வாறு கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1220 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இடுப்பில் கை வைத்துக் கொண்டு தொழுவது தடுக்கப்பட்டுள்ளது.

பாடம் : 18

தொழும் போது எதைப் பற்றியாவது சிந்தித்தல்

நான் தொழுது கொண்டிருக்கும்போதே படைகளை (போருக்கு) தயார்படுத்து(வதற்கான வழிமுறைகளைச் சிந்திக்)கிறேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1221 உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன் என விளக்கினார்கள்.

1222 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்று விட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுது கொண்டிருக்கும் மனிதரிடம் நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப் பார் என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராகி விடுவார்.

 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 இவ்வாறு மறதி ஏற்பட்டால் அமர்ந்த நிலையில் இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அபூசலமா கூறுகிறார்கள்.

 1223 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா அதிகம் (ஹதீஸ்களை) அறிவிப்பதாக மக்கள் (குறை) கூறுகின்றனர். நான் ஒரு மனிதரைச் சந்தித்து நேற்றிரவு இஷாவில் நபி (ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள்?’என்று கேட்டேன். அவர் தெரியாது’ என்றார். நீர் அத்தொழுகையில் கலந்துகொள்ளவில்லையா?என்று கேட்டேன். அவர் கலந்து கொண்டேன் என்றார். அவரிடம் நான் அதை நான் அறிவேன். இன்னின்ன அத்தியாயங்களைத்தான் நபி (ஸல்) ஓதினார்கள் என்றேன்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.