தொழுகையில் ஏற்படும் மறதி

 கடமையான தொழுகையின் முதல் தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) இருப்பில் அமராமல் மறதியால் எழுந்துவிட்டால்…? 1224 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது; நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுவித்தார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்த போது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தறுவாயில் சலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்த போது,அந்த இருப்பிலேயே சலாமுக்கு முன் தக்பீர் கூறி, இரண்டு சஜ்தாக்கள் செய்துவிட்டு சலாம் கொடுத்தார்கள்.

 

1225 அப்துல்லாஹ் இப்னுபுஹைனா(ரலி) கூறியதாவது: லுஹ்ர் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்து விட்டார்கள். தொழுகையை முடிக்கும் போது இரண்டு சஜ்தாச் செய்தார்கள். அதன் பின் சலாம் கொடுத்தார்கள்.

பாடம் : 2

(மறதியாக) ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டால்…  1226 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:  (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடத்தில் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் என்ன விஷயம்? எனக் கேட்டார்கள். நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்என ஒருவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு சஜ்தாச் செய்தார்கள்.

பாடம் : 3

(நான்கு ரக்அத் தொழுகையில்) இரண்டாவது அல்லது மூன்றாவது ரக்அத்தில் (மறதியாக) சலாம் கொடுத்துவிட்டால் வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீளமாகவோ இரண்டு சஜ்தாச் செய்வது.

1227 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்’ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், இவர் கூறுவது உண்மைதானா? எனக் கேட்ட போது அவர்களும் ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுவித்துவிட்டு இரண்டு சஜ்தாக்களும் செய்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சஅத் பின் இப்றாஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் மஃக்ரிப் தொழுவித்த போது இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டுப் பேசியும் விட்டார்கள். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார்கள். பின்னர் இரண்டு சஜ்தாச் செய்துவிட்டு இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள்’ எனக் கூறினார்கள்.

பாடம் : 4

சஜ்தா சஹ்வின் போது தஷஹ்ஹுத் ஓதாமல் இருத்தல்

அனஸ் (ரலி), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) ஆகியோர் (மறதிக்குரிய சஜ்தாச் செய்துவிட்டு) சலாம் கொடுத்தார்கள்; தஷஹ்ஹுத் ஓதவில்லை.

(அதில்) தஷஹ்ஹுத் ஓதவேண்டியதில்லை என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1228 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் தொழுகையை முடித்துக் கொண்ட போது துல்யதைன் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா?அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா? எனக் கேட்டார். துல்யதைன் கூறுவது உண்மைதானா? என நபி (ஸல்) அவர்கள் கேட்க, மக்களும் ஆம்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பிந்தைய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீண்டதாகவோ சஜ்தாச் செய்து,பின் (அதிலிருந்து) எழுந்தார்கள். (தஷஹ்ஹுத் ஓதவில்லை).

சலமா பின் அல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் (மறதிக்குரிய சிரவணக்கம்) சஜ்தா சஹ்வில் தஷஹ்ஹுத் உண்டா? எனக் கேட்டேன். அதற்கவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய அறிவிப்பில் தஷஹ்ஹுத் இல்லைதான் என்றார்கள்.

பாடம் : 5

 சஜ்தா சஹ்வின் போது தக்பீர் கூறுவது

 1229 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 மாலைத் தொழுகைகளில் ஒன்றைத் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே சலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேகமாக அது அஸ்ர் தொழுகை என்றே நினைக்கிறேன் என முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.) பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன் மேல் தம் கையை ஊன்றிக் கொண்டு நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) இருவரும் நபி (ஸல்) அவர்களிடத்தில் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்த போது பள்ளியிலிருந்து வேகமாக வெளியேறிய மக்கள், தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ எனப் பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் நீங்கள் மறந்துவிட்டீர்களா அல்லது தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் மறக்கவும் இல்லை; (தொழுகை) குறைக்கப்படவும் இல்லை என்றவுடன் இல்லை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என அவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துப் பின் சலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தமது வழக்கமான சஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ சஜ்தாச் செய்து, பின்புதம் தலையை உயர்த்தியவாறே தக்பீர் கூறினார்கள்.

1230 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்த போது சலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு சஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்த அந்த இரண்டு சஜ்தாக்களையும் செய்தனர்.

பாடம் : 6

தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா எனத் தெரியவில்லையென்றால் கடைசி இருப்பின் போது இரண்டு சஜ்தாக்கள் செய்வது.

1231 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடிவிடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பிவருகிறான்; இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி, இதை இதையெல்லாம் நினைத்துப்பார் எனக் கூறி,அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடித்துவிடுகிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்கள் மூன்றா அல்லது நான்கா என்று தெரியா விட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு சஜ்தாச் செய்துகொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 7

கடமையான தொழுகையிலும் உபரியான தொழுகையிலும் சஜ்தா சஹ்வு செய்தல்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வித்ருத்தொழுத( போது மறதி ஏற்பட்டமைக்காக) பின்னர் இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.

1232 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத்தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு சஜ்தாச் செய்யட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 8

தொழுது கொண்டிருப்பவரிடம் யாரேனும் பேச்சுக் கொடுத்தால் அதைச் செவியேற்பதும் கையால் சைகை செய்வதும்.

1233 குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) ஆகியோர் என்னிடம் ஆயி.ஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுவீராக! அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி (ஸல்) அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத் தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!’ என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி), தாமும் உமர் (ரலி) அவர்களும், இவ்வாறு (அஸ்ருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் நீர் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் கேளும்! என்று கூறினார்கள். நானும் இம் மூவரிடம் திரும்பிவந்து ஆயிஷா (ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறிய போது) நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி, நீ அவர்களுக்கு அருகில் சென்று அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே?’ என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு! எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி (ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்த போது அப்பெண்மணி திரும்பி வந்து விட்டார். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், அபூ உமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹ்ருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை;அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும் என்றார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.

பாடம் : 9

தொழுகையில் சைகை செய்வது

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவித்ததாக, குறைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1234 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அம்ர் பின் அவ்ஃப் கோத்திரத்தார்களிடையே ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. எனவே நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் சிலருடன் அங்கு சென்று அக்கோத்திரத்தார்களிடையே சமாதானம் செய்வதில் ஈடுபட்டிருந்த போது தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டது. அப்போது பிலால் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அபூபக்ர் அவர்களே! நபி (ஸல்) அவர்கள் (தமது பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொழுகையின் நேரமும் நெருங்கி விட்டது. எனவே தாங்கள் மக்களுக்குத் தொழுவிக்கின்றீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நீர் விரும்பினால் செய்கிறேன் என்றவுடன் பிலால் (ரலி) இகாமத் கூற, அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னின்று மக்களுக்குத் தொழுவிக்கத் தக்பீர் (தஹ்ரீமா) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசைகளினூடே வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். (இதைக் கண்ட) மக்கள் கைதட்டலானார்கள். தொழும்போத திரும்பும் வழக்கமில்லாத அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்கள் கைத்தட்டலை அதிகரித்த போது திரும்பி (முதல் வரிசையில்) நபி (ஸல்) அவர்கள் நிற்பதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரைப் பார்த்துத் தொழுகையைத் தொடரும்படி சைகை செய்தார்கள். எனினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்து திரும்பாமல் பின் வாக்கில் நகர்ந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் முன் சென்று மக்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி மக்களே! தொழுகையில் (இதைப் போன்று) ஏதாவது நிகழ்ந்து விட்டால் நீங்கள் ஏன் கைதட்டுகிறீர்கள்? கைதட்டுதல் பெண்களுக்குரிய செயலாகும். எனவே யாருக்கேனும் தம் தொழுகையில் ஏதேனும் நிகழ்ந்து விட்டால் சுப்ஹானல்லாஹ்’ எனக் கூறட்டும். ஏனெனில் யார் சுப்ஹானல்லாஹ்வைக் கேட்கிறாரோ அவர் இந்தப் பக்கம் தம் கவனத்தைச் செலுத்துவார் எனக் கூறினார்கள். பிறகு (அபூபக்ர் (ரலி) அவர்களிடம்) அபூபக்ரே! நான் உம்மை நோக்கிச் சைகை செய்த போது நீங்கள் ஏன் தொடர்ந்து மக்களுக்குத் தொழுவிக்கவில்லை? எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் தொழுவிப்பது அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியற்ற செயலாகும் எனக் கூறினார்கள்.

1235 அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்ற போது மக்களோடு அவர் நின்று தொழுது கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அவரிடம் மக்களுக்கு என்னவாயிற்று? எனக் கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள் தம் தலையால் வானத்தின் பக்கம் சைகை செய்தார்கள். நான் (இறை) அத்தாட்சியா? எனக் கேட்டதற்கு ஆம்’ எனத் தம் தலையால் சைகை செய்தார்கள்.

1236 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உடல்நலிவுற்றிருந்த போது தம் வீட்டில் உட்கார்ந்தவாறு தொழுவித்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு தொழுதார்கள். எனவே நபியவர்கள் மக்களை நோக்கி உட்காருமாறு சைகை செய்தார்கள். தொழுகையை முடித்துவிட்டு இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்காகவே! எனவே அவர் ருகூஉச் செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் உயர்த்துங்கள் என்று கூறினார்கள்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.