அடிமைப் பெண்கள்

திருமணம் செய்யாமல் அடிமைப் பெண்களுடன் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம் என்று திருக்குர்ஆனின் பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது. (பார்க்க திருக்குர்ஆன் 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 24:33, 24:58, 30:58, 33:50, 33:52, 33:55, 70:30) இது முஸ்லிமல்லாதவர்களுக்கும், சில முஸ்லிம்களுக்கும் பலவித ஐயங்களை ஏற்படுத்தக் கூடும். 

திருமணம் செய்யாமலேயே அடிமைப் பெண்களை அனுபவிக்கலாம் என்பது விபச்சாரத்திற்கு அனுமதி வழங்கியது போல் உள்ளது. விபச்சாரத்திற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அவர்கள் கருதலாம்.
மேலோட்டமாகப் பார்க்கும் போது வைப்பாட்டிகள் வைத்துக் கொள்வதற்கும், அடிமைப் பெண்களை அனுபவிப்பதற்கும் வித்தியாசம் எதுவும் தென்படாததால் அவர்களுக்கு இவ்வாறு ஐயம் ஏற்படுவது இயற்கையே! ஆயினும் இது பற்றிய உண்மை நிலையை விளங்கிக் கொண்டால் இந்தச் சட்டம் அறிவுப் பூர்வமானது என்பதை அவர்களும் ஒப்புக் கொள்வார்கள். எனவே இது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம். இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப் பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.
இவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்.

அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.
வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.
மேலும் சில கொடூர மனம் படைத்த மன்னர்கள் வெற்றி கொள்ளப்பட்ட நாட்டில் நுழைந்து போரில் சம்மந்தப்படாத அழகிய பெண்களையும் பிடித்து வந்து அடிமைகளாக்கிக் கொண்டதுமுண்டு. அடிமைகள் இப்படித் தான் உருவானார்கள்.
மொத்த உலகமும் இதை அங்கீகாரம் செய்திருந்த காலத்தில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யலானார்கள். இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே உலகெங்கும் ஆண் அடிமைகளிடம் வேலை வாங்குவதும், பெண் அடிமைகளை விருப்பம் போல் அனுபவிப்பதும் வழக்கத்தில் இருந்தது என்பதை இந்த விபரங்களிலிருந்து அறியலாம்.
உலகெங்கும் நடந்து வந்த அடிமை வியாபாரத்தை இஸ்லாம் ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்ததேயன்றி அடிமைகள் விடுதலை செய்யப்படுவதற்கான வழிகளைக் காட்டியதேயன்றி இஸ்லாமே அடிமைகளை உருவாக்கவில்லை. எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் இஸ்லாமும் அதை ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.
இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.
இனி மேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நஷ்டமடைவார்கள்.
அவர்கள் அனைவருக்கும் நஷ்ட ஈடு அளித்தால் அரசை நடத்த முடியாது. நஷ்ட ஈடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்த போது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது அநியாயமாகும்.
அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் நஷ்ட ஈடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத் தான் முடியும்.
ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப் பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும். அந்த எதிரிகள் மீண்டும் படை திரட்டி வரக்கூடிய அபாயமும் உண்டு.
உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.

‘நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்கு பெரிய இழப்பு ஏற்படாது; அவருக்குத் தான் இழப்பு ஏற்படும்’ என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.
அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை இஸ்லாம் செய்தது.

ஒருவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விட்டு அதை முறித்தாலோ அல்லது நோன்பை முறித்தாலோ இது போன்ற குற்றங்களுக்குப் பரிகாரமாக வசதியுள்ளவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று இஸ்லாம் ஆணையிட்டது.

(பார்க்க திருக்குர்ஆன் 2:177, 4:92, 5:89, 9:60, 58:3, 90:13)

ஒப்பந்த அடிப்படையில் அடிமைகள் விடுதலை யாவதற்கும் இஸ்லாம் ஏற்பாடு செய்தது. உன்னை நான் விடுதலை செய்கிறேன். நீ உழைத்து சிறிது சிறிதாக எனது கடனை அடைக்க வேண்டும் என்று எஜமானர்கள் அடிமைகளிடம் உடன்படிக்கை செய்து விடுக்க ஆர்வமூட்டினார்கள்.

(பார்க்க திருக்குர்ஆன் 24:33)

யாரேனும் அடிமையை விடுதலை செய்தால் அந்த அடிமை பிற்காலத்தில் சம்பாதிப்பவைகளுக்கு அவனது எஜமான் வாரிசாவார் என்று சட்டம் கொண்டு வந்து அடிமைகளை விடுவிக்க இஸ்லாம் தூண்டியது.

(பார்க்க புகாரி 456, 1493, 2155, 2156, 2168, 2169, 2561, 2562, 2563, 2564, 2565, 2578, 2717, 2726, 2729, 2735, 5097, 5279, 5284, 5430, 6717, 6751, 6752, 6754, 6757, 6759) இத்தகைய சட்டங்கள் மூலம் தமது வாழ்நாளில் கணிசமான அளவுக்கு அடிமைகளின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். இதுபொதுவாக அடிமைகள் பற்றியது. அடிமைப் பெண்கள் விஷயத்தையும் அறிந்து கொள்வோம்.

அடிமைப் பெண்களாக விற்கப்படுவோர் எஜமான் வீட்டில் தான் தங்கும் நிலை. அவளது கணவன் வேறு நாட்டில் இருப்பான்; அல்லது இல்லாமலும் இருப்பான்.
இந்த நிலையில் கண்டவர்களும் அப்பெண்ணை தகாத முறையில் பார்ப்பதைத் தடுப்பதற்கு வேலி போட்டாக வேண்டும். அவளுக்கும் உடல் ரீதியான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
இதைக் கருத்தில் கொண்டு தான் அடிமைகளை விலைக்கு வாங்கிய எஜமான் (பல எஜமான் இருந்தால் அவர்களில் ஒரே ஒருவர் மட்டும்) குடும்பம் நடத்தலாம். இவ்வாறு குடும்பம் நடத்தும் போது அவள் குழந்தையைப் பெற்றால் அவளும், குழந்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுபடுவார்கள் என்று இஸ்லாம் சட்டம் போட்டது.

இதை அந்தச் சமயத்தில் அனுமதிக்காவிட்டால் அவளுக்காகப் பரிந்து பேச யாருமில்லாத நாட்டில் அவளது எஜமானையே முழுவதும் சார்ந்திருக்கும் போது அவளை அவன் அனுபவிப்பதைத் தடுக்க முடியாது போகும்.
அடிமை தானே! நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். அவளுக்கு கணவன் நிலையில் எஜமான் இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்படும் போது அவளுக்குப் பாதுகாப்பு ஏற்படும்.
அவளுடன் ஒரு எஜமானர் தான் குடும்பம் நடத்த வேண்டும் எனக் கூறுவதாலும், அவளுக்குப் பிறந்த குழந்தை சொந்த எஜமானின் குழந்தையாகவே கருதப்படும் என்பதாலும் இது விபச்சாரமாகாது.

ஒரு முதலாளியிடம் ஓர் இளம் பெண் வேலைக்குச் சேர்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வேலைக்காரியை அந்த முதலாளி விலை கொடுத்து வாங்கி விடவில்லை. அந்த முதலாளியை விட்டால் அவளுக்கு வேறு கதியே இல்லை என்ற நிலைமையும் இல்லை. அவளுக்காகப் பரிந்து பேசவும் அவளுக்கு நேரும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும் அவளுக்கென்று சிலர் உள்ளனர். இந்த வேலைக்காரப் பெண்ணுக்கு இவ்வளவு சுதந்திரமும், பாதுகாப்பும் இருந்தும் கூட எத்தனையோ வேலைக்காரப் பெண்கள் முதலாளியின் காமப் பசிக்கு இரையாகி விடுகின்றனர். விரும்பியும் விரும்பாமலும் இப்படி இறையாவோர் ஏராளம்!

சுதந்திரமும், உறவினர்களும் உள்ள வேலைக்காரிக்கே இந்தக் கதி என்றால் இந்த வேலைக்காரிக்கு இருப்பது போன்ற சுதந்திரமும், பாதுகாப்பும் இல்லாத அடிமைப் பெண்ணின் கதி என்ன என்பதை எளிதில் உணரலாம். இத்தகைய நிலையில் அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்கள் அனுபவிப்பதற்குத் தடை விதித்தால் அது அர்த்தமற்ற தடையாகவே அமையும்.
அடிமைப் பெண்கள் என்ற நிலை இருந்த காலத்தில் இந்த அனுமதியை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இன்று உலகமெங்கும் அடிமை முறை ஒழிக்கப்பட்டு விட்டதால் இப்போது இதை நடைமுறைப்படுத்த முடியாது.
இவ்வாறு தடை விதிக்காததற்கு இன்னொரு காரணமும் உண்டு.
இஸ்லாம் குற்றங்களைத் தடுப்பதற்காகக் கடுமையான தண்டனைகளை குற்றவாளிகளுக்கு வழங்குகின்றது. இந்தத் தண்டனைகளுக்கு அஞ்சி மக்கள் குற்றங்களிலிருந்து விலகிக் கொள்வார்கள். அடிமைப் பெண்களை அனுபவிக்கக் கூடாது என்று சட்டமியற்றி, அக்குற்றத்திற்குக் கடும் தண்டனை உண்டு என்று அறிவித்தால் கூட இதைத் தடுக்க முடியாது.

ஏனெனில் அடிமைப் பெண்கள் எஜமானர்களின் வீட்டிலேயே எப்போதும் இருப்பதால் அவர்களின் தனிமையைச் சந்தேகப்படவும் முடியாது. அப்படி நடந்து விட்டால் அதற்கு சாட்சிகளும் இருக்க மாட்டார்கள்.
நடப்பதையும் தடுக்க முடியாது. நடந்து விட்டால் நிரூபிக்கவும் முடியாது என்ற நிலையில் தான் உலகம் முழுவதும் நடைமுறையிலிருந்த வழக்கத்தை இஸ்லாம் தடுக்கவில்லை.
வேலைக்காரிகளின் கற்புக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை தானே உள்ளது. எனவே அவர்களையும் அனுபவிக்கலாமா? என்று சிலர் கேட்கலாம்.
வேலைக்காரிக்கும் அடிமைப் பெண்ணுக்குமிடையே பெரிய வித்தியாசங்கள் உள்ளன. ஒரு வேலைக்காரி, வேலைக்காரியாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. குறிப்பிட்ட ஒரு முதலாளியிடம் தான் வேலை செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமில்லை. முதலாளி ஒரு மாதிரி’யாக நடக்கக் கூடியவர் என்று உணர்ந்தால் அந்த வேலையை அவள் உதறி விட முடியும். சுருங்கச் சொன்னால் வேலைக்காரி அந்த நிலையை அவளே தேர்ந்தெடுக்கிறாள். அடிமைப் பெண்கள் விருப்பத்துடன் அவர்களாகவே அடிமையாவதில்லை.
ஆக வேலைக்காரி தன் கற்பைக் காத்துக் கொள்ள மனப்பூர்வமாக விரும்பினால், கற்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அடிமைப் பெண் அப்படியெல்லாம் தவிர்த்துக் கொள்ள முடியாது. எனவே வேலைக்காரியுடன் அடிமைகளை ஒப்பிடக் கூடாது.
உடலுறவுத் தேவை என்பது ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் பொதுவானது. பெண்களின் பால் ஆண்களுக்கு நாட்டமிருப்பது போலவே, ஆண்களின் பால் பெண்களுக்கும் நாட்டம் உண்டு. இரு சாராருடைய உணர்வுகளும் கவனிக்கப்பட வேண்டியவையே!
அடிமைப் பெண் என்பவள் கணவனை விட்டுப் பிரிக்கப்பட்டோ, அல்லது கன்னியாகவோ பிடித்து வரப்படுகிறாள். அவள் பிடித்து வரப்பட்ட நாட்டில் அவளுக்கு மணம் செய்து வைக்க யாருமே இல்லை. யாராவது முன் வந்தாலும் அவளது எஜமானன் அவளை விலை கொடுத்து வாங்கியிருப்பதால் அதற்கு உடன்பட மாட்டான். திருமணம் செய்து வைத்தால் அவளிடமிருந்து முழு அளவில் வேலை வாங்க முடியாது என்பதால் அவன் அதை நிராகரிக்கவே செய்வான்.
அவன் நிராகரிக்க மாட்டான் என்று வைத்துக் கொண்டாலும் இன்னொரு இடத்தில் முழு நேரமும் இருந்தாக வேண்டிய ஒருத்தியை மணக்க யாருமே முன் வரமாட்டார்கள்.
அவளது உடல் தேவை முழுமையாக மறுக்கப்படும் நிலை; இந்த நிலையில் அவள் என்ன செய்வாள்? கள்ளத் தனமாக கண்டவனையும் நாடுவாள். அல்லது தனது எஜமானனையே சபலப்படுத்தி வெற்றி காண்பாள்.
தன்னைத் தெரிந்தவர்கள் யாருமே இல்லாத இடத்தில் சர்வ சாதாரணமாக அவள் குற்றம் புரியத் துணிந்து விடுவாள். கண்டவனுடனும் கள்ள உறவு வைத்துக் கொள்வதைத் தடுக்கவும் அவளது உணர்வுகளுக்கு வடிகால் ஏற்படுத்தவும் அவளது எஜமானனுக்கு மட்டும் அதை அனுமதிப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. எப்படித் தடுத்தாலும் இது நடந்தே தீரும் விஷயமாக உள்ளதால் இஸ்லாம் அதை அனுமதிக்கின்றது. இது மூன்றாவது காரணம்.

இத்துடன் இந்நூல் நிறைவு பெறுகிறது.

இந்த முயற்சிக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது முஸ்லீமல்லாத சகோதரர்களும் பயணள்ளதாக இருந்தது எனறு எழுதி இருந்தனர்.

Advertisements

பற்றி தமிழ் தவ்ஹீத் (Tamil Thowheed)
தமிழ் தவ்ஹீத்.காம், இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இனையதளம். TamilThowheed.com is a pure Thowheed site for Tamil Islamic Community. Email: tamilthowheed@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.