6 – மஸ்ஜித் தொழுமிடங்கள்

அத்தியாயம்: 6 – மஸ்ஜித் தொழுமிடங்கள்

பாடம்: 1

பூமியில் முதலாவதாக எழுப்பப்பெற்ற இறை ஆலயம்2

903 அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்” என்று பதிலளித்தார்கள். நான் “பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள் “(ஜெரூசஸலத்திலுள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?” என்று கேட்டேன். அவர்கள் “நாற்பதாண்டுகள்’ (-மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பெற்று நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைககப்பெற்றது). (பின்னர்) உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைகிறதோ அங்கு நீங்கள் தொழுதுகொள் ளுங்கள்! ஏனெனில், அதுதான் இறைவனை வழிபடும் தலம் (மஸ்ஜித்) ஆகும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், அபூகாமில் அல்ஜஹ்தரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “பிறகு உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் (அங்கு) நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் இறைவனை வழிபடும் தலம் (மஸ்ஜித்) ஆகும்” என்று இடம்பெற்றுள்ளது.3

904 இப்ராஹீம் பின் யஸீத் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலை ஒட்டியுள்ள இடத்தில் என் தந்தை (யஸீத் அத்தைமீ) அவர்களிடம் குர்ஆனை ஓதிக் காட்டிக்கொண்டிருந்தேன். அப்போது நான் “சஜ்தா’ வசனத்தை ஓதியவுடன் என் தந்தை (அங்கேயே) சஜ்தாச் செய்தார்கள். நான், “தந்தையே! (நடை)பாதையில் சஜ்தா (சிரவணக்கம்) செய்கிறீர்களே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், பூமியில் முதன் முதலில் அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் குறித்துக் கேட்டேன். அவர்கள், “அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்” என்று பதிலளித்தார்கள். “பின்னர் எது?” என்று கேட்டேன். (ஜெரூஸலத்திலுள்ள) “அல்மஸ்ஜிதுல் அக்ஸா’ எனறார்கள். நான், “அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?” என்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்’ என்று கூறினார்கள். “பிறகு பூமி முழுவதுமே உங்களுக்குத் தொழுமிடம்தான். ஆகவே, உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் அங்கே நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்!” என்றும் சொன்னார்கள்.

905 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன:

1. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப்பெற்றுள்ளேன்.

2. போரில் கிடைக்கப்பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுதிக்கப்படவில்லை.

3. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தூய்மை யானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப் பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்து விட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார்.

4. (எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர் களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்புக் கலந்த) அச்சம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப்பெற்றுள்ளேன்.

5. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

906 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறுதி சமுதாயத்தாராகிய) நாம் மூன்று விஷயங்களில் (மற்ற) மக்கள் அனைவரைவிடவும் சிறப்பிக்கப்பட்டுள்ளோம்:

1. நம் (தொழுகை) வரிசைகள் வானவர்களின் (தொழுகை) வரிசைகளைப் போன்று (சீராக) ஆக்கப்பட்டுள்ளன.

2. நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. (தொழுகைக்காக “அங்கத் தூய்மை’ செய்ய) நமக்குத் தண்ணீர் கிடைக்காதபோது தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சிறப்பையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

907 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:

1. நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.5

2. (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.

3. போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.

4. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிட மாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

5. நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.

6. என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

908 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்களுடன் அனுப்பப்பெற்றுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் முன்னால் வைக்கப்பட்டன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தேடி) வெளியே எடுத்து (அனுபவித்து)க் கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள்.6

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

909 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எதிரிகளுக்கு (என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு நான் வெற்றியளிக்கப் பட்டுள்ளேன். நான் ஒருங்கிணைந்த (பொருள் களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள் ளேன். (ஒரு முறை) நான் உறங்கிக்கொண்டி ருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவு கோல்கள் கொண்டுவரப்பட்டு என் கைகளில் வைக்கப்பட்டன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

910 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமி ருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும் இவை. அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளுக்கு (என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு நான் வெற்றியளிக்கப்பட்டுள்ளேன். நான் ஒருங்கி ணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.

பாடம் : 2

மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல் கட்டப் பெற்ற விவரம்.

911 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிறந்தகத்தைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப் பாங்கான பகுதியில் இறங்கி, “பனூ அம்ர் பின் அவ்ஃப்’ என்றழைக்கப்பட்டுவந்த ஒரு குடும்பத்தாரிடையே பதிநான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாகத்) தம் வாட்களை (கழுத்தில்) தொங்கவிட்டபடி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, பனூநஜ்ஜார் கூட்டத்தார் புடைசூழ அவர்களைக் குழுமியிருந்த காட்சியை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கிவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நேரம் வந்தடையும் இடத்திலேயே தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள். (இது அவர்களது வழக்கமாக இருந்தது.) இந்நிலையில்தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்துவரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்த போது, “பனூநஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்தை எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அக்கூட்டத்தார், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று கூறி (அத்தோட்டத்தை அளித்த)னர்.

நான் (உங்களிடம்) கூறவிருப்பவைதாம் அத்தோட்டத்தில் இருந்தன: அதில் சில பேரீச்ச மரங்கள்,இணைவைப்பாளர்களின் சமாதிகள், இடிபாடுகள் ஆகியவைதாம் இருந்தன. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டும்போது அங்கிருந்த) பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. இணைவைப்பாளர் களின் சமாதிகளைத் தோண்டி (அப்புறப் படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றி)ச் சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன.

பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (நுழைவாயிலின்) இரு நிலைக் கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். அப்போது “ரஜ்ஸ்’ எனும் ஒருவித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (பாடியபடி பணியில் ஈடுபட்டு) இருந்தார்கள்.

“இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமையின் நன்மைகளுக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி செய்வாயாக!’ என்று அவர்கள் பாடினர்.7

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

912 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னால் ஆட்டுத்தொழுவங் களில் தொழுதிருக்கிறார்கள்.

இதை அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 3

கிப்லாத் திசை, பைத்துல் மக்திஸைவிட்டு கஅபாவிற்கு மாற்றப்படல்.

913 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் தொழுதேன்.9 “அல்பகரா’அத்தியாயத்திலுள்ள “நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின்போது) அதன் (-கஅபாவின்) பக்கமே திருப்புங்கள்” எனும் (2:144ஆவது) வசனம் அருளப்பெறும்வரை (இவ்வாறே நாங்கள் செய்தோம்). நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பின்னர்தான் இவ்வசனம் அருளப் பெற்றது. (நபி (ஸல்) அவர்களுடன் தொழுது முடித்த) மக்களில் ஒருவர் அன்சாரிகளில் சிலரைக் கடந்துசென்றார். அவர்கள் (பைத்துல் மக்திஸை நோக்கித்) தொழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் (தொழும் திசை மாற்றப்பட்டு விட்ட செய்தியை) அவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் (தொழுகையிலிருந்தவாறே) தம் முகங்களை இறையில்லம் (கஅபாவை) நோக்கித் திருப்பிக்கொண்டனர்.

914 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் “பதினாறு’ அல்லது “பதினேழு’மாதங்கள் தொழுதோம். பிறகு நாங்கள் கஅபா (எனும் தற்போதைய கிப்லா) நோக்கித் திருப்பப்பட்டோம்.

இதை அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

915 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹு தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (தொழுகையில், இதுவரை முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸைவிட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுங்கள்” என்று அறிவித்தார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.11

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

916 மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

917 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுதுகொண்டி ருந்தார்கள். அப்போது “(நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச்செய்கிறோம். ஆகவே,உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்கித் திருப்புங்கள்” எனும் (2:144ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அப்போது பனூசலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் (நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத்) தமது குலத்தாரைக் கடந்துசென்றார். அப்போது அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் முதல் ரக்அத்தைத் தொழுதுவிட்டு (இரண்டாவது ரக்அத்தின்) ருகூஉவில் இருந்தனர். உடனே அம்மனிதர், “அறிந்துகொள்ளுங்கள்: இந்தக் கிப்லா (தொழும் திசை) மாற்றப்பட்டுவிட்டது” என்று உரத்த குரலில் அறிவித்தார். உடனே அம்மக்கள் தொழுகையிலிருந்தவாறு அப்படியே (கஅபா எனும் தற்போதைய) இந்தக் கிப்லாவை நோக்கித் திரும்பிக்கொண்டனர்.

பாடம் : 4

மண்ணறைகள்மீது பள்ளிவாசல்கள் எழுப்புதல், அவற்றில் உருவப்படங்களை வரைதல், அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக்கொள்ளல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.12

918 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்” என்று சொன்னார்கள்.13

919ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்று (தம் இறுதிநாட்களில்) இருந்த போது அவர்களிடம் மக்கள் பேசிக்கொண்டி ருந்தனர். அப்போது உம்முசலமா (ரலி) அவர் களும் உம்முஹபீபா (ரலி) அவர்களும் (தாங்கள் கண்ட) கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர்.

தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

920 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் (சிலர்) தாங்கள் கண்ட “மாரியா’ எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர். மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

921 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயிலிருந்து எழாமல் (இறந்து)போய்விட்டார்களோ அந்த நோயின்போது, “அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இந்த அறிவிப்பு (மட்டும்) இல்லாவிட்டால் நபியவர்களின் அடக்கத் தலம் (அனைவருக்கும் தெரியும்படி) வெளிப்பபடையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், அவர்களது அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சப் பட்டது.14

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

922 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலி ருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

923 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர் களையும் தனது கருணையிலிருந்து அப்புறப் படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

924 ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக்கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே, “யூதர்கள்மீதும் கிறிஸ்தவர்கள்மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதை)க் குறித்து எச்சரித்தார்கள்.16

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

925 ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் “உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலி ருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள் வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டி ருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்” என்று கூறுவதை நான் கேட்டேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 5

பள்ளிவாசல் எழுப்புவதன் சிறப்பும் அது குறித்து வந்துள்ள ஆர்வமூட்டலும்.

926 உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ -புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் திருப்தியை நாடி (பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ…)’ என்று இடம்பெற்றுள்ளது- அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்’ என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அஹ்மத் பின் ஈசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அதைப் போன்ற ஒன்றைச் சொர்க்கத்தில் (அல்லாஹ் அவருக்காகக் கட்டுகிறான்)” என்று இடம்பெற்றுள்ளது.17

927 மஹ்மூத் பின் லபீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்டத் திட்டமிட்டபோது அதை மக்கள் வெறுத்தனர்; அதை முன்பிருந்த அமைப்பிலேயே விட்டு

விட வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத் தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகிறான்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளளது.

பாடம் : 6

(தொழுகையில்) ருகூஉவில் முழங்கால்கள் மீது கைகளை வைக்குமாறு வந்துள்ள வலியுறுத்தலும், உள்ளங்கைகளை இணைத்து இரு தொடைகளுக்கு இடையே வைக்கும் முறை மாற்றப்பட்டுவிட்டதும்.18

928 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) மற்றும் அல்கமா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்க அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். அப்போது அவர்கள், “(இமாம்களான) உங்க்ளுக்குப் பின்னால் (ஆட்சியாளர்களான) இவர்கள் (உரிய நேரத்தில்) தொழுகின்றனரா?”என்று கேட்டார்கள். நாங்கள் “இல்லை’ என்று சொன்னோம். (அப்போது தொழுகை நேரம் வந்தும் அவர்களிருவரும் தொழாமலிருந்த காரணத்தால்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நீங்கள் (இருவரும்) எழுந்து (என்னைப் பின்பற்றித்) தொழுங்கள்!” என்று கூறினார்கள்- அப்போது (பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட்டுவிட்டதால்) அவர்கள் பாங்கு சொல்லும்படியோ இகாமத் சொல்லும்படியோ எங்களிடம் கூறவில்லை- நாங்கள் (இருவரும்) அவர்களுக்குப் பின்னால் நிற்கப்போனோம். உடனே அவர்கள் எங்கள் கைகளைப் பிடித்து எங்களில் ஒருவரை தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கத்திலும் நிறுத்தினார்கள்.19

அவர்கள் ருகூஉச் செய்தபோது நாங்கள் எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைத்(துக்கொண்டு ருகூஉச் செய்)தோம். உடனே அவர்கள் எங்கள் கைகள்மீது அடித்துவிட்டு, தம்மிரு உள்ளங்கைகளையும் இணைத்துத் தம் தொடைகளின் நடுவே இடுக்கிக்கொண்டார்கள்.20

அவர்கள் தொழுது முடித்ததும், “விரைவில் உங்களுக்குத் தலைவர்களாக சிலர் வருவார்கள். அவர்கள் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தி, நெருக்கடியில் நிறைவேற்றுவார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதை நீங்கள் கண்டால் உரிய நேரத்தில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிடுங்கள். கூடுதலான (நஃபில்) தொழுகை என்ற முறையில் அவர்களுடனும் சேர்ந்து (மீண்டும்) தொழுதுகொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேர் இருந்தால் (ஒரே அணியில்) இணைந்து தொழுங்கள். அதைவிட அதிகம் பேர் இருந்தால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். உங்களில் ஒருவர் ருகூஉச் செய்யும்போது தம் முன்கைகளை தொடைமீது சாத்திக்கொண்டு குனிந்து நிற்கட்டும். அவர் தம் உள்ளங்கைகளை இணைத்து

இரு தொடைகளுக்கு இடையே வைத்துக் கொள்ளட்டும். ஏனெனில், (இவ்வாறு) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது ருகூஉவில்) தம் விரல்களைக் கோத்துக்கொண் டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது” என்று கூறிவிட்டு, அவ்வாறு தம் கைகளைக் கோத்துக் காட்டினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

929 மேற்கண்ட ஹதீஸ் மேலும் பல அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், இப்னு முஸ்ஹிர் (ரஹ்) மற்றும் ஜரீர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்துகொண்டிருந்தபோது அவர்களுடைய விரல்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது” என இடம்பெற்றுள்ளது.

930 அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள் இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் (எங்களிடம்), “உங்களுக்குப் பின்னால் உள்ள மக்கள் தொழுதுவிட்டனரா?” என்று கேட்டார்கள். நாங்கள் இருவரும், “ஆம்’ என்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்கள் இருவருக்குமிடையே (தொழுவதற்காக) நின்றார்கள். எங்களில் ஒருவரைத் தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கதிலும் நிறுத்தலானார்கள். பிறகு நாங்கள் ருகூஉச் செய்தபோது எங்கள் (உள்ளங்)கைகளை எங்களுடைய முழங்கால்கள்மீது நாங்கள் வைத்தோம். உடனே அவர்கள் எங்கள் கை களில் அடித்தார்கள். பிறகு தம்மிரு கைகளைக் கோத்துக்கொண்டு அவ்விரண்டையும் தம் தொடைகளுக்கிடையே இடுக்கிக்கொண்டார்கள். தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

931 முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தங்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அவர்களின் விலாப் புறத்தில் (நின்று) தொழுதேன். அப்போது நான் (ருகூஉவில்) என்னிரு கைகளையும் (கோத்து) என் இரு முழங்கால்களுக்கு நடுவே இடுக்கிக்கொள்ளலா னேன். உடனே என் தந்தை, “உன் உள்ளங் கைகளை முழங்கால்கள்மீது வை!” என்று சொன் னார்கள். நான் (அவ்வாறு செய்யாமல்) மீண்டும் அவ்வாறே (முன்பு போன்றே) செய்தேன். உடனே அவர்கள் என் கைகள்மீது அடித்துவிட்டு, “இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கைகளை முழங்கால்கள்மீது வைக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப் பட்டது” என்று கூறினார்கள்.21

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது” என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள குறிப்பு இடம்பெறவில்லை.

932 முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (தொழுகையில்) இவ்வாறு -கைகளைக் கோத்து என் தொடைகளுக்கிடையே வைத்துக் கொண்டு- ருகூஉச் செய்தபோது என் தந்தை, “நாங்கள் இவ்வாறுதான் செய்துகொண்டிருந்தோம். பின்னர் கைகளை முழங்கால்கள்மீது வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று சொன்னார்கள்.

933 முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அவர்களின் விலாப் புறத்தில் தொழுதேன். நான் ருகூஉச் செய்தபோது என் விரல்களைக் கோத்து அவ்விரண்டையும் என் முழங்கால் களுக்கிடையே வைத்துக்கொண்டேன். உடனே அவர்கள் என் கைகள்மீது அடித்தார்கள். தொழுது முடித்ததும், “நாங்கள் இவ்வாறுதான் செய்துகொண்டிருந்தோம். பின்னர் முழங்கால் களுக்கு மேல் கைகளைத் தூக்கிவைக்குமாறு உத்தரவிடப்பட்டடோம்” என்று கூறினார்கள்.

பாடம் : 7

(இரு சஜ்தாக்களுக்கு இடையேயான அமர்வில்) குதிகால்கள்மீது அமரலாம்.22

934 தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (இரு சஜ்தாக்களுக்கு நடுவே) பாதங்கள்மீது (அவற்றை நட்டுவைத்து) அமர்வது பற்றிக் கேட்டோம். அவர்கள், “அது நபிவழிதான்” என்று சொன்னார்கள். நாங்கள், “இவ்வாறு அமர்வது அந்த மனிதரின் அசட்டையான (பொடுபோக்கான) செயல் என்றே நாங்கள் கருதுகிறோம்” என்றோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இல்லை; அது உங்கள் நபியின் வழிமுறைதான்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 8

தொழும்போது பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (ஆரம்பக் காலத்தில்) அதற்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி மாற்றப்பட்டுவிட்டது.23

935 முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுக் கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள்மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் -என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர் களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்” என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?” என்றேன். அதற்கு அவர்கள் “சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்” என்றார்கள். நான் “எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?” என்றேன். அதற்கு நபியவர்கள் “இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது “அவர்களை’ அல்லது “உங்களை’ (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்” என்று கூறினார்கள். நான், “எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்”என்றேன். அதற்கு அவர்கள், “நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்” என்றார்கள்.24

அடுத்து என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்துவந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப் படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!” என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், “அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், “வானத்தில்’ என்று பதிலளித்தாள். அவர்கள், “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள். அவர்கள் (என்னிடம்), “அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

936 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கையில் நாங்கள் அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்வோம். உடனே அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்வார்கள்.

ஆனால், நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷியிடமிருந்து திரும்பிவந்த சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்லவில்லை. பின்னர் நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் தொழும்போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் சலாம் சொல்லி வந்தீர்களே?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “நிச்சயமாக தொழுகைக்கென தனிக் கவனம் தேவைப்படுகின்றது” என்று பதிலளித்தார்கள்.25

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

937 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர் (தொழுது கொண்டிருக்கும்போது) தம் அருகிலிருக்கும் தோழரிடம் (சொந்தத் தேவைகள் குறித்து) பேசிக் கொண்டிருப்பார். “மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வணங்குங்கள்” எனும் (2:238ஆவது) வசனத் தொடர் அருளப்பெறும்வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பெற்றவுடன் அமைதியாக இருக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப் பட்டது; பேசக் கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.26

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

938 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஓர் அலுவல் நிமித்தம் அனுப்பி னார்கள். பிறகு அவர்கள் (தமது வாகனத்தில் கூடுதலான தொழுகை) தொழுதவாறு சென்று கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் போய்ச்சேர்ந்தேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். உடனே அவர்கள் (பதிலுக்கு) என்னை நோக்கி சைகை செய்தார்கள் (பதில் சலாம் சொல்லவில்லை). அவர்கள் தொழுது முடித்ததும் என்னை அழைத்து, “சற்று முன்னர் எனக்கு நீங்கள் சலாம் சொன்னீர்கள். அப்போது நான் தொழுதுகொண்டிருந்தேன் (அதனால்தான் பதில் சலாம் சொல்லவில்லை)” என்று கூறினார்கள். அப்போது அவர்களுடைய முகம் கிழக்குத் திசையை முன்னோக்கி இருந்தது (கிப்லாவை முன்னோக்கியிருக்கவில்லை).27

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

939 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனுல் முஸ்தலிக் குலத்தாரை நோக்கிப் பயணம் செய்தபோது என்னை (ஓர் அலுவல் நிமித்தம் ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். நான் (அலுவலை முடித்துவிட்டு) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமது ஒட்டகத்தில் அமர்ந்தவாறு குர்ஆன் ஓதித் தமது தலையால் சைகை செய்து தொழுதுகொண்டிருந் தார்கள். அப்போது நான் அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். உடனே அவர்கள் தமது கரத்தால் இவ்வாறு சைகை செய்தார்கள் -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தமது கரத்தால் (இவ்வாறு என) சைகை செய்து காட்டி னார்கள்- பிறகு மீண்டும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். அப்போதும் அவர்கள் இவ்வாறு சைகை செய்தார்கள் -அறிவிப்பாளர் ஸுஹைர் (ரஹ்) அவர்கள் மீண்டும் (இவ்வாறு என) பூமியை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்து காட்டினார்கள்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும், “நான் உங்களை அனுப்பிவைத்த காரியம் என்ன ஆயிற்று?” என்று கேட்டுவிட்டு, “நான் தொழுதுகொண்டி ருந்ததால்தான் (நீங்கள் பேசியபோது) உங்களிடம் நான் பேசவில்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் ஸுஹைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அபுஸ்ஸுஹைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும்போது இறையில்லம் கஅபாவை முன்னோக்கி அமர்ந்திருந்தார்கள். அப்போது பனுல் முஸ்தலிக் குலத்தாரின் வசிப்பிடத்தை நோக்கி சைகை செய்து காட்டினார்கள்;அப்போது கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கியே தமது கரத்தால் சைகை செய்தார்கள்.

940 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (பனுல் முஸ்தலிக் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் என்னை ஓர் அலுவல் விஷயமாக அனுப்பினார்கள். நான் (அந்த அலுவலை முடித்துத்) திரும்பி வந்தபோது அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் இறையில்லம் கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கி அமர்ந்தவாறு (கூடுதலான தொழுகையைத்) தொழுதுகொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். ஆனால் அவர்கள் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. அவர்கள் தொழுது முடித்ததும் “நான் தொழுதுகொண்டிருந்ததால்தான் உங்களுக்கு பதில் சலாம் கூறவில்லை” என்றார்கள்.28

– மேற்கண்ட ஹதீஸின் கருத்திலமைந்த ஒரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 9

தொழுகைக்கு இடையில் ஷைத்தானைச் சபிக்கலாம்; அவனிடமிருந்து காக்குமாறு (இறைவனை) வேண்டலாம். தொழுகை யில் குறைந்த அளவிலான புறச் செயல் களைச் செய்யலாம்.

941 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பின்வருமாறு) கூறினார்கள்:

நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று எனது தொழுகையைக் கெடுக்க சதி செய்தது. அல்லாஹ் அதன் மீது எனக்குச் சக்தியை வழங்கினான். அதன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். காலையில் “எல்லாரும்’ அல்லது “நீங்கள் அனைவரும்’வந்து அதைக் காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நான் நினைத்தேன். பிறகு என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள், “இறைவா! என்னை மன்னித்துவிடுவாயாக! மேலும்,எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக” (38:35) என்று வேண்டியது என் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். பின்னர்) அல்லாஹ் அந்த ஜின்னை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.29

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நான் அதன் குரல்வளையைப் பிடித்துவிட்டேன்’எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நான் அதை பலமாகப் பிடித்துத் தள்ளிவிட்டேன்’ என்று இடம்பெற்றுள்ளது.

942 அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தொழும்போது “நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்றும், “அல்லாஹ்வின் சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்”என்றும் மூன்று முறை கூறியதை நாங்கள் செவியுற்றோம். மேலும், அவர்கள் தமது கரத்தை விரித்து எதையோ பிடிப்பதைப் போன்று சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தொழும்போது ஒன்றைக் கூறினீர்கள். இதற்கு முன் தாங்கள் அவ்வாறு கூறியதை நாங்கள் கேட்டதில்லையே? மேலும், நீங்கள் உங்கள் கரத்தை விரித்ததையும் நாங்கள் கண்டோமே (ஏன்)?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு அதை என் முகத்தில் வைக்க (என்னிடம்) வந்தான். உடனே நான் “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று மூன்று முறையும் “அல்லாஹ்வின் முழு சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்’ என மூன்று முறையும் கூறினேன். ஆனால், அவன் பின்வாங்கிச் செல்லவில்லை. பிறகு நான் அவனைப் பிடிக்க விரும்பினேன். அல்லாஹ் வின் மீதாணையாக! எம் சகோதரர் சுலைமான் (அலை) அவர்களின் வேண்டுதல் மட்டும் இல்லையாயின், காலையில் மதீனா நகரச் சிறுவர்கள் அவனுடன் விளையாடும் வகையில் (இந்தப் பள்ளிவாசலில்) அவன் கட்டிவைக்கப்பட்டிருப்பான்” என்று சொன்னார்கள்.

பாடம் : 10

குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழலாம்.

943 அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் -தம் புதல்வி ஸைனபுக்கும் அபுல்ஆஸ் பின் அர்ரபீஉ அவர்களுக்கும் பிறந்த- (தம் பேத்தி) உமாமாவை (தமது தோளில்) சுமந்துகொண்டு தொழுவார்கள். அவர்கள் (நிலையில்) நிற்கும்போது உமாமாவைச் சுமப்பார்கள்; சஜ்தாவுக்குச் செல்லும்போது உமாமாவை இறக்கிவிடுவார்கள்.30

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் மாலிக் (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அம்ர் பின் சுலைம் அஸ்ஸுரைக் (ரஹ்) அவர்களும், அம்ர் அவர்களிடமிருந்து ஆமிர் பின் அப்தில்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும் உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்’ என்றார்கள்.

944 அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், -தம் புதல்வி ஸைனபுக்கும் அபுல்ஆஸ் பின் அர்ரபீஉக்கும் பிறந்த- (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் தமது தோளில் சுமந்துகொண்டு மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்ததை நான் பார்த்தேன். அவர்கள் ருகூஉக்குச் செல்லும் போது உமாமாவை இறக்கிவிட்டார்கள். சஜ்தா விலிருந்து எழும்போது மீண்டும் உமாமாவைத் தமது தோளில் அமர்த்திக்கொண்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

945 அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேத்தி) உமாமா பின்த் ஸைனபைத் தமது கழுத்தின் மீது சுமந்தவாறு மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்கள் சஜ்தாவிற்குச் செல்லும் போது உமாமாவை இறக்கிவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர் களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்’ என ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால், “அத்தொழுகையை அவர்கள் மக்களுக்குத் தொழுவித்தார்கள்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.31

பாடம் : 11

தொழுகையில் ஓரிரு அடிகள் எடுத்து வை(த்து நட)க்கலாம்.

946 அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் சிலர் வந்து (நபி (ஸல்) அவர்களின்) மிம்பர் (சொற்பொழிவு மேடை) எந்த மரத்தால் செய்யப்பட்டது

என்பது தொடர்பாகச் சர்ச்சை செய்தனர். அப்போது சஹ்ல் (ரலி) அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த மரத்தால் செய்யப்பட்டது, அதைச் செய்தவர் யார் என்பதை நான் நன்கறிவேன். அதன் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் நாளில் அமர்ந்ததையே நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார்கள். நான், “அபூஅப்பாஸ் (சஹ்ல் பின் சஅத்) அவர்களே! அது பற்றி எங்களுக்கு (விவரமாக)ச் சொல்லுங்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் ஆளனுப்பி (அவரை வரவழைத்து), “தச்சு வேலை தெரிந்த உன் அடிமையைப் பார்த்து, எனக்காக மரச்சட்டங் களை (இணைத்து மிம்பர் ஒன்றை)ச் செய்யச் சொல்வாயாக! நான் அதன் மீது அமர்ந்து மக்களுக்கு உரையாற்ற வேண்டும்” என்று கூறி னார்கள். -அன்று அப்பெண்ணின் பெயரையும் சஹ்ல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.- அப்போதுதான் மூன்று படிகள் கொண்ட இந்த மிம்பரை அந்த அடிமை செய்தார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அது (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) இந்த

இடத்தில் வைக்கப்பட்டது. அது “அல்ஃகாபா’ வனத்திலிருந்த ஒரு வகை சவுக்கு மரத்தால் செய்யப்பட்டது.32அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மேடைமீது (தொழுவதற்காக) நின்று, தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்து மக்கள் தக்பீர் கூறினர். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்ததும் திரும்பாமல் அப்படியே பின்வாக்கில் இறங்கி அந்த மேடையின் கீழ்ப் பகுதி(க்கருகில் தரை)யில் சஜ்தாச் செய்தார்கள். பிறகு முன்போன்றே மீண்டும் (அந்த மேடையில் ஏறியும் இறங்கியும்) இறுதிவரை தொழுதார்கள். பின்னர் மக்களை முன்னோக்கி, “மக்களே! நீங்கள் என்னைப் பின்பற்றவும், எனது தொழுகையை நீங்கள் கற்றுக்கொள்ளவுமே இவ்வாறு நான் செய்தேன்” என்று கூறினார்கள்.33

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

947 அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (சிலர்) சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம் வந்து “நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) எந்த மரத்தால் செய்யப்பட்டது?’ என்று கேட்டனர்.

மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 12

தொழுகையில் இடுப்பில் கை வைப்பது வெறுக்கத் தக்கதாகும்.

948 அபூஹுரைரரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தமது இடுப்பில் கை வைத்தவாறு தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.34

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 13

தொழும்போது (சஜ்தாச் செய்வதற்காகத் தரையில் உள்ள) சிறு கற்களை அப்புறப் படுத்துவதும் மண்ணைச் சமப்படுத்து வதும் வெறுக்கத் தக்கதாகும்.

949 முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், சஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும் சிறு கற்களை அப்புறப்படுத்துவது பற்றிக் கூறுகையில், “அவ்வாறு செய்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால் ஒரு தடவை மட்டும் செய்துகொள்க” என்றார்கள்.

949 முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், தொழுகையில் (சஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும்) சிறு கற்களை அப்புறப்படுத்துவது பற்றி மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், “ஒரு தடவை மட்டும் (செய்துகொள்ளுங்கள்)” என்று பதிலளித்தார்கள்.

-இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

951 முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையில்) சஜ்தாச் செய்யும் இடத்திலிருந்த மண்ணைச் சமப்படுத்திய ஒரு மனிதர் தொடர்பாக, “நீர் இவ்வாறு செய்துதான் ஆக வேண்டுமென்றால் ஒரு தடவை மட்டும் செய்துகொள்வீராக!”என்று சொன் னார்கள்.35

பாடம் : 14

தொழும்போதோ மற்ற நேரங்களிலோ பள்ளிவாசலுக்குள் எச்சில் துப்பலாகாது.

952 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் (உமிழப்பட்டிருந்த) எச்சிலைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி(சுத்தப்படுத்தி)ய

பின் மக்களை நோக்கி, “உங்களில் ஒருவர் தொழும்போது தமது முகத்துக்கெதிரே (கிப்லாத் திசையில்) எச்சில் துப்ப வேண்டாம். ஏனெனில், அவர் தொழும்போது அல்லாஹ் அவருடைய முகத்துக்கெதிரே இருக்கிறான்” என்று கூறினார்கள்.36

953 மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்” என ஹதீஸ் தொடங்குகிறது. ஆனால், ளஹ்ஹாக் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்” எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. (“பள்ளிவாசலின்’ என்ற குறிப்பு இல்லை.)

954 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே ஒரு சிறு கல்(லை எடுத்து அதன்) மூலம் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு “ஒரு மனிதர் (தொழும்போது உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால்) தமது வலப் பக்கத்தில் அல்லது முன் பக்கத்தில் உமிழ வேண்டாம்” என்று தடை விதித்தார்கள். “மாறாக, தமது இடப் பக்கத்தில் அல்லது தம் பாதங்களுக்கு அடியில் அவர் உமிழ்ந்துகொள்ளட்டும்”என்றார்கள்.37

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோரிடமி ருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றிலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ,(காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்” எனும் வாசகமே இடம் பெற்றுள்ளது.38

– ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலுள்ள சுவரில் “எச்சிலை’ அல்லது “மூக்குச் சளியை’ அல்லது “காறல் சளியைக்’ கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி(சுத்தப் படுத்தி)னார்கள்.39

955 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாவில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே அவர்கள் மக்களை முன்னோக்கி, “உங்களில் ஒருவருக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவர் தம் இறைவனை முன்னோக்கி நின்று கொண்டு அவனுக்கு முன்னேயே காறி உமிழுகின்றார். உங்களில் ஒருவர் தமது முகத்திற்கெதிரே உமிழப்படுவதை விரும்புவாரா? உங்களில் ஒருவருக்கு உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்துகொள்ளட்டும். அது முடியாவிட்டால் அவர் இவ்வாறு செய்துகொள்ளட்டும்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான காசிம் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, தமது ஆடையி(ன் ஓர் ஓரத்தி)ல் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிக் காட்டினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், ஹுஷைம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையின் (ஓர் ஓரத்தில் உமிழ்ந்து) அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டதை இப்போதும்

நான் பார்ப்பதைப் போன்றுள்ளது’ என்று (அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

956 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழும்போது அவர் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ (அதாவது கிப்லாத் திசையிலோ) வலப் பக்கமோ உமிழ வேண்டாம். (வேண்டுமானால்) அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்து கொள்ளட்டும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

957 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அ(வ்வாறு உமிழ்ந்த)தை மண்ணுக்குள் புதைப்பதே அதற்குரிய பரிகாரமாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.41

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

958 ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம் பள்ளிவாசலுக்குள் உமிழ்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அ(வ்வாறு உமிழ்ந்த)தை மண்ணுக்குள் புதைப்பதே அதற்குரிய பரிகாரமாகும்.

959 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் நற்செயல்களும் தீய செயல்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. சாலையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதை, அவர்களின் நற் செயல்களி(ன் பட்டியலி)ல் கண்டேன். பள்ளி வாசலில் (உமிழ்ந்து) மண்ணுக்குள் புதைக்கப் படாமல் இருக்கும் சளியை, அவர்களின் தீய செயல்களில் கண்டேன்.

இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

960 அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் தொழும்போது அவர்கள் சளியை உமிழ்ந்ததை நான் பார்த்தேன். பின்னர் அதைத் தமது காலணியால் (தரையில்) தேய்த்தார்கள்.

961 அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது அவர்கள் சளியை உமிழ்ந்துவிட்டு அதைத் தமது இடது கால் காலணியால் தேய்த்து விட்டார்கள்.

பாடம் : 15

காலணி அணிந்துகொண்டே தொழலாம்.42

962 அபூமஸ்லமா சயீத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள் “ஆம்’ என்று பதிலளித்தார்கள்.43

– மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்லமா சயீத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 16

(கண்ணைக் கவரும்) வேலைப்பாடு மிக்க ஆடை அணிந்து தொழுவது வெறுக்கப் பட்டதாகும்.

963 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடித்ததும்,) இதன் வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்துவிட்டன. எனவே, இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் சேர்த்துவிட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள்.44

இந்த ஹதீஸ் முன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

964 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு நின்று தொழுதார்கள். அதன் வேலைப்பாட்டை உற்று நோக்கினார்கள். தொழுது முடித்ததும், “இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூஜஹ்ம் பின் ஹுதைஃபாவிடம் (இதைக்) கொண்டுசெல்லுங்கள். (அவரிடமி ருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டுவாருங்கள். ஏனெனில், சற்று முன்பு இது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பிவிட்டது” என்று சொன்னார்கள்.

965 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்று இருந்தது. அது தொழுகையில் அவர்களது கவனத்தை ஈர்த்துவந்தது. எனவே, அதை (தமக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து மற்றொரு சாதாரண ஆடையை வாங்கிக்கொண்டார்கள்.

பாடம் : 17

உடனே உண்ண விரும்பும் உணவு அங்கு காத்திருக்கத் தொழுவது வெறுக்கப் பட்டதாகும்; சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழுவதும் வெறுக்கப் பட்டதாகும்.

966 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேர உணவு முன்னே காத்திருக்கத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுமானால் நீங்கள் முதலில் உணவை உண்ணுங்கள்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவதற்கு முன்னால் (உங்கள் முன்) இரவு நேர உணவு வைக்கப்படுமானால் முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழுகையை நிறைவேற்றுங்கள்.) உங்களது இரவு உணவை விடுத்து (தொழுகைக்காக) நீங்கள் அவசரப்பட வேண்டாம்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.45

967 மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது.46

968 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு முன்னால் இரவு நேர உணவு வைக்கப்பட்டுவிட, தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். அதை உண்டு முடிக்கும்வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.47

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

969 இப்னு அபீஅத்தீக் (அப்துல்லாஹ் பின் முஹம்மத் அபீஅத்தீக் பின் அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான காசிம் பின் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானும் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். காசிம் (எதையும்) பிழையாகப் பேசுபவராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “உனக்கு என்ன நேர்ந்தது? நீ ஏன் இந்த என் சகோதரர் புதல்வரைப் போன்று (பிழையின்றி) பேசுவ தில்லை? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்துகொண்டேன். இவரை இவருடைய தாய் வளர்த்தார். உன்னை உன்னுடைய தாய் வளர்த்தார்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்கள்மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முன் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டபோது காசிம் எழுந்துவிட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், “எங்கே (போகிறாய்)?” என்று கேட்க, காசிம் “நான் தொழப்போகிறேன்” என்றார். ஆயிஷா (ரலி) அவர்கள், “உட்கார்!” என்றார்கள். காசிம் “நான் தொழப்போகிறேன்” என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) அவர்கள் “அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக் கூடாது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அவற்றில் காசிம் பின் முஹம்மதைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.

பாடம் : 18

(சமைக்கப்படாத) வெள்ளைப் பூண்டு, வெங்காயம், சீமைப் பூண்டு போன்ற துர்வாடையுள்ளவற்றைச் சாப்பிட்டவர் அதன் வாடை போவதற்கு முன் பள்ளிவாசலுக்குச் செல்லலாகாது. அவரைப் பள்ளிவாசலில் இருந்து வெளியேற்றலாம்.

970 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, “இந்தச் செடியிலிருந்து விளைகின்றதை -அதாவது வெள்ளைப் பூண்டை- சாப்பிட்டவர் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டாம்” என்று கூறினார்கள்.48

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ஒரு போரின்போது’ என்று காணப்படுகிறது. “கைபர் போரின்போது’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

971 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்தச் செடியிலிருந்து விளைவதை -அதாவது வெள்ளைப் பூண்டை- சாப்பிட்டவர் அதன் வாடை விலகாதவரை நம்முடைய பள்ளிவாசல்களை நெருங்க வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

972 அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்களிடம் வெள்ளைப் பூண்டு குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இந்தச் செடியிலிருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் நம்மை நெருங்கவோ நம்முடன் தொழவோ வேண்டாம்’ எனச் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.

973 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்கவோ, பூண்டின் (துர்)வாடையால் நமக்குத் தொல்லை தரவோ வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

974 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடை செய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், “துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளி வாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன” என்று கூறினார்கள்.

975 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் “நம்மிடமிருந்து’ அல்லது “நமது பள்ளிவாசலிலிருந்து’ விலகியிருக்கட்டும்; அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தம் இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். (அவற்றைப் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தம் தோழர்களில் ஒருவருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாமலிருந்ததைக் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாட வேண்டியதுள்ளது”என்று கூறினார்கள்.49

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

976 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “இந்தச் செடியிலிருந்து விளைகின்ற வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர் -மற்றோர் தடவை “வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட்டவர்’- நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகின்றனர்” என்று கூறினார்கள்.

977 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலில் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஆனால், வெங்காயம், சீமைப் பூண்டு ஆகிய வற்றைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.

978 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் வெற்றி கொள்ளப்பட்டு (அதன் கோட்டையைக்கூட) நாங்கள் கடந்திருக்க வில்லை. (அதற்குள் வழியிலுள்ள) அந்த வெள்ளைப் பூண்டு பயிரி(டப்பட்டிருந்த வயலி)ல் நபித்தோழர்களான நாங்கள் புகுந்தோம். அப்போது மக்கள் பசியுடன் இருந்தனர்.

எனவே, நாங்கள் வெள்ளைப் பூண்டை

நன்கு சாப்பிட்டோம். பிறகு நாங்கள் தொழும் இடத்துக்குச் சென்றபோது (எங்களிடமிருந்து வெள்ளைப் பூண்டின்) நெடி வீசுவதை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். அப்போது, “இந்த துர்வாடை வீசும் செடியிலி ருந்து எதையேனும் சாப்பிட்டவர் தொழுமிடத்தில் நம்மருகே நெருங்க வேண்டாம்” என்று கூறினார்கள். மக்கள் “வெள்ளைப் பூண்டு தடை செய்யப்பட்டுவிட்டது. வெள்ளைப் பூண்டு தடை செய்யப்பட்டுவிட்டது” என்று கூறினர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, “மக்களே! அல்லாஹ் எனக்கு அனுமதித்த ஒன்றைத் தடை செய்யும் உரிமை எனக்கு இல்லை. இருப்பினும், அந்தச் செடியின் துர்வாடையை நான் வெறுக்கிறேன்” என்று கூறினார்கள்.

979 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த ஒரு வயலைக் கடந்துசென்றார்கள். அப்போது மக்களில் சிலர் அதில் இறங்கி வெங்காயங்களை (பறித்து)ச் சாப்பிட்டனர். வேறு சிலர் சாப்பிடவில்லை. பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது வெங்காயம் சாப்பிடாதவர்களை (தம்மருகே) அழைத்தார்கள். மற்றவர்களை, அதன் வாடை விலகும்வரை (நெருங்கவிடாமல்) தள்ளி இருக்கச்செய்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

980 மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத்தன்று உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். மேலும், அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் (இன்று) ஒரு கோழி என்னை மூன்று முறை கொத்துவதைப் போன்று (கனவு) கண்டேன். இதற்கு என் ஆயுட் காலம் முடிந்துவிட்டது என்றே நான் (விளக்கம்) கண்டேன். மக்களில் சிலர் நான் (எனக்குப் பின்னால்) என் (ஆட்சிக்குப்) பிரதிநிதி (கலீஃபா) ஒருவரை அறிவிக்குமாறு கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் தனது மார்க்கத்தையோ, தன் (அடியார்களின்) ஆட்சித் தலைமையையோ, நபி (ஸல்) அவர்களை எதனுடன் அனுப்பிவைத்தானோ அதையோ பாழாக்கிவிடமாட்டான். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அத்தகைய இந்த ஆறுபேர் ஆட்சித் தலைமை குறித்துத் தம்மிடையே கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள்.50

சிலர் இந்த விஷயத்தில் என்னைக் குறை கூறிவருவது எனக்குத் தெரியும். நான் (சில நேரங்களில்) அவர்களை இஸ்லாத்திற்காக எனது இந்தக் கையால் அடித்திருக்கிறேன். அவர்கள் இவ்வாறு செய்(வதை மார்க்க அங்கீகாரமுடைய ஒரு செயலாக நினைத்)தால் அத்தகையோர்தாம் இறைவனின் விரோதிகளும் வழிகெட்ட இறைமறுப்பாளர்களும் ஆவர்.

நான் எனக்குப் பின்னால் “கலாலா’வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச் செல்லவில்லை. நான், இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்துகொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். “உமரே! அந்நிஸா அத்தியாயத்தின் கடைசியிலுள்ள (4:176ஆவது) வசனம் உமக்குப் போதுமானதாக இல்லையா?” என்று கேட்டார்கள்.51

நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்த “கலாலா’ தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன்.

பின்னர் (தொடர்ந்து) கூறினார்கள்:

“இறைவா! நகரங்களின் ஆளுநர்களுக்கு உன்னையே சாட்சியாக்குகிறேன். நான் அவர்களை அந்த மக்களிடையே நேர்மையாக நடந்துகொள்வதற்காகவும் அவர்களுடைய மார்க்கத்தையும் அவர்களுடைய நபி (ஸல்) அவர்களது வழிமுறையையும் கற்றுத் தருவதற்காகவுமே அனுப்பிவைத்தேன். மேலும், அவர்களுக்குப் போரிடாமல் கிடைத்த (“ஃபய்உ’ எனும்) செல்வத்தை அவர்கள் தம்மிடையே (முறையோடு) பங்கிட வேண்டும்; அவர் களுடைய விவகாரங்களில் சிக்கல் எழும்போது அதை என் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் (என்றும் கூறி அனுப்பினேன்).

மக்களே! நீங்கள் இரு செடிகளிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள். அவ்விரண்டையும் நான் அருவருப்பானவை யாகக் கருதுகிறேன். இந்த வெங்காயமும் வெள்ளைப் பூண்டுமே (அவை இரண்டுமாகும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் இருக்கும்போது ஒருவரிடமிருந்து அவற்றின் துர்வாடை வருவதைக் கண்டால், அவரை “அல்பகீஉ’ பொது மையவாடிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருமாறு கூறுவார்கள். எனவே, யார் அதைச் சாப்பிட விரும்புகிறாரோ அவர் அதைச் சமைத்து அதன் வாடையை நீக்கிக்கொள்ளட்டும்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.52

பாடம் : 19

காணாமற்போன பொருட்களைப் பள்ளி வாசலுக்குள் தேடுவதற்கு வந்துள்ள தடையும் அவ்வாறு தேடிக்கொண்டி ருப்பவரின் குரலைக் கேட்பவர் கூற வேண்டியதும்.

981 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் “அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!” என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

982 புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

காணாமற்போன (தமது ஒட்டகத்)தைப் பற்றிப் பள்ளிவாசலுக்குள் விசாரித்த ஒரு

மனிதர், “(எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்” என்று கூறினார்கள்.

983 புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து “(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?” என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்” என்று சொன்னார்கள்.

– புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுத பின் ஒரு கிராமவாசி வந்து பள்ளி வாசலின் கதவு வழியே தமது தலையை நீட்டினார்.

மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

பாடம் : 20

தொழுகையில் மறதி ஏற்படுவதும் அதற்கு(ப் பரிகாரமாக) சஜ்தாச் செய்வதும்.53

984 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றால் அவரிடம் ஷைத்தான் வந்து, அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இந்நிலை ஏற்பட்டால் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் அவர் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.54

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

985 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கான அறிவிப்புச் செய்யப்பட் டால் அதன் ஒலி தனக்குக் கேட்காமலிருப்பதற் காக ஷைத்தான் வாயு வெளியேறியவனாகத் திரும்பி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்துவிட்டால் அவன் திரும்பிவருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் மீண்டும் ஓடிவிடுகிறான். இகாமத் சொல்லி முடியும்போது திரும்பிவந்து, (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி “இதை இதையெல்லாம் நினைத்துப்பார்’ என்று கூறுகிறான்; அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டுகிறான்; (அதன் விளைவாக) அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாதவராகிவிடுகிறார். உங்களில் ஒருவருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பது தெரியாவிட்டால் அவர் (தொழுகையின் இறுதியில்) அமர்வில் (மறதிக்குப் பரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.55

986 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும்போது ஷைத்தான் வாயு வெளியேறியவனாக ஓடுகிறான்.

தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றிருப்பதுடன் “மேலும், அவன் திரும்பிவந்து தொழுகையில் ஈடுபட்டுள்ள மனிதருக்குப் பல்வேறு எண்ணங்களையும் ஆசைகளையும் ஊட்டுகிறான். அவர் இதுவரை நினைத்துப்பார்த்திராத பல அலுவல்களை அவருக்கு அவன் நினைவுபடுத்துகிறான்” என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

987 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத்கள் கொண்ட) ஒரு தொழுகை யில் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து முடித்த பின் (முதலாம் அத்தஹிய்யாத் இருப்பில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, அவர்களோடு மக்களும் எழுந்துவிட்டனர். தொழுகை முடியும் தறுவாயில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பதை எதிர்பார்த்தி ருந்தபோது, அந்த அமர்விலேயே சலாம் கொடுப்பதற்கு முன் தக்பீர் கூறி (மறதிக்குப் பரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு சலாம் கொடுத்தார்கள்.56

988 பனூ அப்தில் முத்தலிப் குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் புஹைனா அல்அசதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் (முதல் அத்தஹிய்யாத் இருப்பில்) உட்கார வேண்டியதிருக்க (உட்காராமல் மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். பிறகு தொழுகையை முடிக்கும் தறுவாயில் (இறுதி) அமர்வில்

சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்தார்கள். ஒவ்வொரு சஜ்தாவின்போதும் தக்பீர் கூறினார்கள். மக்களும் அவர்களோடு இரு சஜ்தாக்கள் செய்தனர். (முதல்) இருப்பை மறந்ததற்குப் பகரமாகத்தான் இவ்வாறு செய்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

989 அப்துல்லாஹ் பின் புஹைனா அல்அஸ்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் இரண்டு ரக்அத்களை முடித்த பின் அமருவதை விரும்புவார்கள். ஆனால், (ஒரு நாள்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து தொடர்ந்து தொழுதார்கள். தொழுகை முடியும் தறுவாயில் சலாம் கொடுப்பதற்கு முன் (முதல் இருப்பில் அமராததற்குப் பரிகாரமாக இரு) சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள்.

990 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்குத் தாம் மூன்று ரக்அத்கள் தொழுதோமா அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா என்று தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் சந்தேகத்தைக் கைவிட்டு, உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில் (மீதியுள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுதுவிட்டு சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும். அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தால் (மறதிக்காகச் செய்த அவ்விரு சஜ்தாக்களால்) அவரது தொழுகையை அந்த (ஐந்து) ரக்அத்கள் இரட்டைப்படை ஆக்கி விடும். அவர் நான்கு ரக்அத்கள் பூர்த்தி செய்துவிட்டிருந்தால் அவ்விரு சஜ்தாக்களும் (தொழுகையில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக அமையும்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதிலும் “சலாம் கொடுப்பதற்கு முன் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்றே இடம் பெற்றுள்ளது.

991 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையை வழக்கத்திற்கு மாறாகக்) கூட்டியோ அல்லது குறைத்தோ தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தபோது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதும் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். மக்கள் “நீங்கள் இப்படி இப்படித் தொழுவித்தீர்கள் (அதனால்தான் கேட்கிறோம்)” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகை இருப்பில் அமர்வதைப் போன்று) தம் கால்களை மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். பின்னர் எங்களை நோக்கித் திரும்பி, “ஒரு விஷயம்! தொழுகையில் (எனக்கு) ஏதேனும் புதிய அறிவிப்பு வருமானால் கட்டாயம் அதை நான் உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். ஆயினும், நானும் மனிதன்தான்; (சில நேரங்களில்) நீங்கள் மறந்துவிடுவதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். அவ்வாறு நான் எதையேனும் மறந்துவிட்டால் எனக்கு (அதை) நினைவுபடுத்துங்கள். உங்களில் ஒருவர் தொழுகையில் (எதையேனும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ செய்துவிட்டதாகச்) சந்தேகித்தால் யோசித்து முடிவு செய்து,அதற்கேற்ப தொழுகையைப் பூர்த்தி செய்யட்டும். பிறகு இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று கூறினார்கள்.57

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

992 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், இப்னு பிஷ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவற்றில் சரியானதை முடிவு செய்ய அவர் நன்கு யோசிக்கட்டும்” என்றும், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “யோசித்து முடிவு செய்யட்டும்” என்றும் இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மன்ஸூர் (ரஹ்) அவர்களது அந்த அறிவிப்பில் “அவற்றில் சரியானதை முடிவு செய்ய அவர் நன்கு யோசிக்கட்டும்”என்று இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் மன்ஸூர் (ரஹ்) அவர்கள், “அவர் யோசித்து முடிவு செய்யட்டும்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

– மற்றோர் அறிவிப்பாளர்தொடரில் வரும் மன்ஸூர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அவற்றில் சரியானதற்கு மிக நெருக்கமானதை யோசித்து முடிவு செய்யட்டும்” என்று இடம் பெற்றுள்ளது.

– மற்றோர் அறிவிப்பில் “இதுதான் சரி எனக் கருதப்படுவதை யோசித்து முடிவு செய்யட்டும்” என்று இடம்பெற்றுள்ளது.

– மற்றோர் அறிவிப்பில் “சரியானதை யோசித்து முடிவு செய்யட்டும்” என்று இடம்பெற்றுள்ளது.

993 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்(துத் தொழுகையை முடித்)தபோது அவர்களிடம், “தொழுகையில் (ரக்அத்) அதிகமாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். மக்கள், “நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.58

994 அல்கமா (ரஹ்) அவர்களது மற்றோர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

– இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்கமா (ரஹ்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ர் தொழுகையில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்தபோது (அவர்களிடம்) மக்கள், “அபூஷிப்ல்! தாங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்து விட்டீர்கள்!”என்று கூறினர். அதற்கு அவர்கள், “இல்லை; அவ்வாறு நான் செய்யவில்லை” என்று கூறினார்கள். மக்கள் “ஆம்’ (அவ்வாறு தான் செய்தீர்கள்) என்று கூறினர். அப்போது சிறுவனாயிருந்த நான் கூட்டத்தின் ஓரத்தில் இருந்துகொண்டிருந்தேன். நானும், “ஆம், தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்து விட்டீர்கள்” என்று கூறினேன். அல்கமா (ரஹ்) அவர்கள் என்னைப் பார்த்து, “மாறு கண்ணா! (அஃவர்!), நீயுமா இவ்வாறு கூறுகிறாய்?” என்று கேட்டார்கள். நான் “ஆம்’ என்றேன். உடனே அவர்கள் அப்படியே திரும்பி இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் சலாம் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாகப் பின்வருமாறு கூறினார்கள்:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது மக்கள் தமக்கிடையே முணு முணுத்துக்கொண்டனர். அப்போது அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) அதிகமாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை’ என்றார்கள். “அவ்வாறாயின், தாங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்துவிட்டீர்களே?” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்படியே) திரும்பி, இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பிறகு சலாம் கொடுத்தார்கள். மேலும் “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன்” என்று கூறினார்கள்.

இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உங்களில் ஒருவர் (தமது தொழுகையில்) மறந்து விட்டால் அவர் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

995 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட்டோம். அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். மக்கள், “தாங்கள் ஐந்து ரக்அத் தொழுவித்தீர்கள்!” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் நினைப்பதைப் போன்று நானும் நினைக்கிறேன். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறக்கிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு மறதிக்கான இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.

996 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். அதில் அவர்கள் கூட்டியோ குறைத்தோ தொழவைத்துவிட்டார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (கூட்டினார்களா அல்லது குறைத்தார்களா என்பதில்) சந்தேகம் எனக்குத் தான்.-

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (ரக்அத்) ஏதேனும் அதிகமாக்கப் பட்டுவிட்டதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நீங்கள் மறப்பதைப் போன்று நானும் மறந்துவிடுகிறேன். ஆகவே, உங்களில் ஒருவர் (தொழுகையில்) மறந்துவிட்டால் அதே இருப்பில் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று கூறிவிட்டுப் பிறகு (கிப்லாவை நோக்கித்) திரும்பி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.

997 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து (மக்களிடம்) பேசிய பின் மறதிக்கான இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.59

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

998 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதோம். அப்போது அவர்கள் ஒன்று (ரக்அத்தைக்) கூட்டிவிட்டார்கள்; அல்லது குறைத்துவிட்டார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! இது (-கூட்டினார்களா அல்லது குறைத்தார்களா என்ற ஐயப்பாடு) எனது தரப்பிலிருந்து ஏற்பட்டதேயாகும்.-

உடனே நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் (மாற்றம்) ஏதேனும் வந்துவிட்டதா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் “இல்லை’ என்றார்கள். உடனே அவர்களிடம் அவர்கள் செய்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “ஒருவர் (தமது தொழுகையில்) கூட்டிவிட்டாலோ அல்லது குறைத்துவிட்டாலோ அவர் இரு சஜ்தாக்கள் செய்துகொள்ளட்டும்” என்று சொல்லிவிட்டுப் பிறகு (தாம் மறந்துவிட்டதற்காக) இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.

999 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மதியத் தொழுகைகளில் ஒன்றை -லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையைத்- தொழுவிக்கும்போது இரண்டு ரக்அத் முடிந்த உடனே சலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலிருந்த ஒரு பேரீச்சம் கட்டைக்கு வந்து அதன்மீது சாய்ந்து கொண்டார்கள். அப்போது ஏதோ கோபத்தில் இருந்தார்கள். மக்களிடையேயிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் பேச்சுக்கொடுக்க அஞ்சினர். மக்களில் தொழுதுவிட்டு விரைந்து செல் பவர்கள் “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது’ என்று புறப்பட்டுச் சென்றும்விட்டனர்.

இந்நிலையில் “துல்யதைன்’ (கிர்பாக் பின் அம்ர்-ரலி) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் வலப் பக்கமும் இடப் பக்கமும் (திரும்பிப்) பார்த்தார்கள். பிறகு “துல்யதைன் என்ன சொல்கிறார்?” என்று கேட்டார்கள். மக்கள் “(ஆம்) அவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் மேலும் இரு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி ஒரு சஜ்தாச் செய்துவிட்டு மற்றொரு தக்பீர் சொல்லி எழுந்(து அமர்ந்)தார்கள். பிறகு இன்னொரு தக்பீர் சொல்லி மற்றொரு சஜ்தாச் செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களது அறிவிப்பில் “(இறுதியில்) சலாம் கொடுத்தார்கள்” என்றும் இடம்பெற்றுள்ளது.

1000 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதிலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதியத் தொழுகைகளில் ஒன்றை எங்களுக்குத் தொழுவித்தார்கள்”என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.

1001 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகையைத் தொழுவித்தபோது இரண்டு ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்து விட்டார்கள். உடனே துல்யதைன் (கிர்பாக் பின் அம்ர்-ரலி) என்பார் எழுந்து, “தொழுகை(யின் ரக்அத் ஏதேனும்) குறைக்கப்பட்டுவிட்டதா, அல்லாஹ்வின் தூதரே! அல்லது தாங்கள்தாம் மறந்துவிட்டீர்களா?”என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவற்றில் எதுவுமே நடக்கவில்லை” என்று கூறினார்கள். துல்யதைன், “(இல்லை) இதில் ஏதோ ஒன்று நிகழவே செய்தது, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி “துல்யதைன் சொல்வது உண்மைதானா?” என்று கேட்டார்கள். அப்போது மக்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எஞ்சிய ரக்அத்களையும் தொழு(வித்)துவிட்டு அந்த இருப்பிலேயே சலாம் கொடுத்த பின் இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.

– அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டார்கள். அப்போது பனூசுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (-துல்யதைன்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத்) குறைக்கப்பட்டு விட்டதா, அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.

தொடர்ந்து முந்தைய ஹதீஸின் தொடர்ச்சி அப்படியே இடம்பெற்றுள்ளது.

1002 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் லுஹ்ர் தொழுகை தொழுதுகொண்டிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டார்கள். உடனே பனூசுலைம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (-துல்யதைன்) எழுந்தார்.

மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

1003 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையில் மூன்றாவது ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டுத் தமது இல்லத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். உடனே “கிர்பாக்’ எனப்படும் கைகள் நீளமான ஒரு மனிதர் (துல்யதைன்) எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே!’ என்றழைத்து அவர்கள் செய்ததை நினைவூட்டினார். அப்போது கோபத்தோடு தமது மேல்துண்டை தரையில் இழுத்தபடி வெளியேறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்துசேர்ந்தார்கள். பிறகு “இவர் சொல்வது உண்மைதானா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம்’ என்றனர். உடனே அவர்கள் இன்னொரு ரக்அத் தொழுவித்து சலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்காக) இரு சஜ்தாக்கள் செய்து விட்டுப் பிறகு (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1004 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை (தொழும்போது) மூன்று ரக்அத் முடிந்ததும் சலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு எழுந்து தமது அறைக்குள் சென்று விட்டார்கள். உடனே நீளமான கைககளை உடைய ஒரு மனிதர் (துல்யதைன்) எழுந்து “தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா, அல்லாஹ் வின் தூதரே?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்தோடு வெளியே வந்தார்கள். விடுபட்ட ரக்அத்தைத் தொழுவித்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். பிறகு (மறதிக்கான) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டு, (மீண்டும்) சலாம் கொடுத்தார்கள்.

பாடம் : 21

(குர்ஆன்) ஓதலுக்கான சஜ்தா60

1005 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; சஜ்தா வசனமுள்ள அத்தியாயத்தை (எங்களுக்கு) ஓதிக் காட்டும்போது அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். உடனே நாங்களும் சிரவணக்கம் செய்வோம். அப்போது (ஏற்படும் இட நெருக்கடியால்) எங்களில் சிலருக்கு நெற்றி வைக்கக்கூட இடம் கிடைக்காது.61

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1006 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி, சஜ்தா வசனத்தைக் கடந்து செல்கையில் எங்களுடன் சேர்ந்து சஜ்தாச் செய்வார்கள். அப்போது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருவருக்கு சஜ்தாச் செய்யக் கூட இடம் கிடைக்காது. தொழுகை அல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது.

1007 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “அந்நஜ்ம்’ எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதிய பின் சஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள் ஆகிய) அனைவரும் சஜ்தாச் செய்தனர். அங்கிருந்த ஒரு வயோதிகன் மட்டும் ஒரு கையளவு கூழாங்கற்களையோ அல்லது மண்ணையோ அள்ளித் தனது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்’ என்று (சஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு அ(க்கிழ)வன் இறைமறுப்பாளனாகவே (பத்ருப் போரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன்.62

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1008 அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், இமாமைப் பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) கிராஅத் – ஓதுவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “இமாமைப் பின்பற்றித் தொழுபவருக்கு ஓதல் (கிராஅத்) ஏதும் கிடையாது” என்று கூறினார்கள். மேலும், அவர்கள் கூறும்போது “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “வந்நஜ்மி இதா ஹவா…’ (எனத் தொடங்கும் 53ஆவது) அத்தியாத்தை ஓதிக் காட்டினேன். அதற்காக அவர்கள் சஜ்தாச் செய்யவில்லை”என்றும் கூறினார்கள்.63

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1009 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகை யில்) எங்களுக்கு “இதஸ்ஸமாஉன் ஷக்கத்’ எனும் (84ஆவது) அத்தியாயத்தை ஓதி அதில் (சஜ்தா வசனம் (21) வந்ததும்) சஜ்தாச் செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்துத் திரும்பிய பின் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியபோது சஜ்தாச் செய்தார்கள்’ எனத் தெரிவித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1010 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் “இதஸ்மாஉன் ஷக்கத்’ (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க’ (96) ஆகிய அத்தியாயங்களில் நபி (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1011 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இதஸ்ஸமாஉன் ஷக்கத்…’ (எனத் தொடங்கும் 84ஆவது அத்தியாயம்), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க…’ (எனத் தொடங்கும் 96ஆவது அத்தியாயம்) ஆகியவற்றை ஓதியபோது சஜ்தாச் செய்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1012 அபூராஃபிஉ நுஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதேன். அவர்கள் “இதஸ்ஸமாஉன் ஷக்கத்…’ (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (சஜ்தா வசனம் வந்த) உடன் அதில் சஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம், “இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதபோது தொழுகையிலேயே) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய)தற்காகச் சஜ்தாச் செய்திருக்கிறேன். அவர்களை நான் சந்திக்கும்வரை (அதாவது நான் இறக்கும்வரை) அ(தை ஓதிய)தற்காக நான் சஜ்தாச் செய்துகொண்டுதான் இருப்பேன்” என்று சொன்னார்கள்.64

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “அபுல்காசிம் (ஸல்) அவர் களுக்குப் பின்னால்’ எனும் வாசகம் இடம்பெற வில்லை.

1013 அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் “இதஸ்ஸமாஉன் ஷக்கத்…’ (எனத் தொடங்கும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். அப்போது நான் அவர்களிடம், “இ(தை ஓதிய)தற்காக சஜ்தாச் செய்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், என் உற்ற தோழர் இதை ஓதி சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். அவர்களை நான் சந்திக்கும்வரை (அதாவது நான் இறக்கும்வரை) அ(தை ஓதிய)தற்காக நான் சஜ்தாச் செய்து கொண்டுதான் இருப்பேன்”என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் “நபி (ஸல்) அவர்களையா (உற்ற தோழர் என) அறிவித்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ பின் அபீமைமூனா (ரஹ்) அவர்கள் “ஆம்’ என்றார்கள்.

பாடம் : 22

தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும் முறையும், அப்போது தொடைகள் மீது இரு கைகளை வைக்கும் முறையும்.

1014 அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும்போது தமது இடது பாதத்தை (வலது) தொடைக்கும் கணைக்காலுக்கும் இடையே (அவற்றுக்குக் கீழே) வைத்து, வலது பாதத்தை விரித்து(ப் படுக்க)வைப்பார்கள்.65 தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும், வலக் கையை வலது தொடையின் மீதும் வைத்துத் தமது (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள்.

1015 அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது (அத்தஹிய்யாத்) அமர்வில் பிரார்த்திக்க உட்கார்ந்தால் தமது வலக் கையை வலது தொடையின் மீதும், இடக் கையை இடது தொடையின் மீதும் வைத்துச் சுட்டு விரலால் சைகை செய்வார்கள். தமது பெரு விரலி(ன் நுனியி)னை நடு விரலின் (நுனி)மீது வைப்பார்கள். இடது உள்ளங்கையைத் தமது (இடக் கால்) மூட்டின் மீது வைத்து வளையமிட்டுப் பிடித்தி ருப்பார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1016 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள்மீது வைப்பார்கள். பெரு விரலை ஒட்டியுள்ள வலக் கை (சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது விரித்துவைத்திருப்பார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1017 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சிறு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.66

1018 அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (சிறிய வயதில்) தொழுகையில் சிறு கற்களால் விளையாடிக்கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் (அவ்வாறு செய்யலாகாது என) என்னைத் தடுத்தார்கள். “(தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் போன்று நீயும் செய்!”என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம்முடைய வலது முன் கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக் கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக்கொண்டு, பெரு விரலை ஒட்டியுள்ள (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள். இடது முன் கையை இடது தொடையில் வைப்பார்கள்”என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நான் இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் தொழுதுகொண்டிருந்தேன்” என்று (அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

பாடம் : 23

(தொழுது முடித்து) தொழுகையிலிருந்து வெளியேறுவதற்காக அதன் இறுதியில் சலாம் சொல்வதும் அதன் முறையும்.

1019 அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஒருவர் (தொழுகையை முடிக்கும்போது வலம் இடமாக)

இரு முறை சலாம் கூறுவார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த (வழி)முறையை அவர் எவ்வாறு அறிந்துகொண்டார்!” என்று (வியப்போடு) கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வதுள்ளது. அவற்றில், ஹகம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்வார்கள்” என்று (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

1020 அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஓர் ஆட்சியாளர்’ அல்லது “ஒரு மனிதர்’ (தொழுகையை முடிக்கும்போது வலம் இடமாக) இரு முறை சலாம் கூறுவார். (இதைக் கண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த (வழி)முறையை அவர் எவ்வாறு அறிந்து கொண்டார்!” என்று (வியந்து) கூறினார்கள்.

1021 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையை முடிக்கும்போது) வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் (முகத்தைத் திருப்பி இரு முறை) சலாம் கூறுவார்கள். (அவ்வாறு திரும்பும்போது) அவர்களுடைய கன்னத்தின் வெண்மையை நான் காண்பேன்.

பாடம் : 24

தொழுகைக்குப் பின் (“அல்லாஹு அக்பர்’ என) திக்ர் செய்தல்.

1022 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை, (மக்கள் “அல்லாஹ்ý அக்பர்’ என்று) தக்பீர் கூறுவதைவைத்து நாங்கள் அறிந்துகொள்வோம்.67

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை எனக்கு அபூமஅபத் (ரஹ்) அவர்கள்தாம் அறிவித்தார்கள். பிறகு (இதை நான் அபூமஅபத் அவர்களிடம் எடுத்துரைத்த போது) அவர்களே அதை (அவ்வாறு தாம் அறிவிக்கவில்லை என) மறுத்துவிட்டார்கள்.

1023 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை, (மக்கள் கூறும்) தக்பீரின் மூலமே நாங்கள் அறிந்துவந்தோம்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் அபூமஅபத் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தபோது “இதை நான் உமக்கு அறிவிக்கவில்லை”என்று கூறினார்கள். ஆனால், அவர்கள்தாம் முன்னர் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.

1024 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் கடமையான (ஃபர்ள்) தொழுகையை முடிக்கும்போது சப்தமாக திக்ருச் செய்யும் நடைமுறை நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அவ்வாறு (மக்கள் உரத்த குரலில் திக்ருச்) செய்வதைக் கேட்டால் மக்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 25

(தொழுகையில்) கப்றுடைய வேதனை யிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவது விரும்பத் தக்கதாகும்.

1025 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் யூதப்பெண் ஒருவர் “உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் சவக் குழிகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்படுவீர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும் “யூதர்கள்தாம் (சவக் குழிகளில்) வேதனை செய்யப்படுவார்கள்” என்றார்கள்.

சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “நீ அறிவாயா: சவக் குழிகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவக் குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1026 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குப் பின் சவக் குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1027 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக்கொண்டிருந்தபோது) “சவக் குழிகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்” என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவதற்கு என் மனம் இடம் தரவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! மதீனா யூத மூதாட்டியரில் இருவர் என்னிடம் வந்து “சவக் குழிகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்’ என்று கூறினர்” என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் சொன்னது உண்மையே. (சவக் குழி களிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகின்றனர். அந்த வேதனை(யால் அவர்களிடும் ஓலம்)தனை மிருகங்கள் செவியேற்கின்றன” என்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையிலும் சவக் குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.68

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1028 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குப் பிறகு தாம் தொழுத எந்தத் தொழுகையிலும் சவக் குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை” என்று இடம்பெற்றுள்ளது.69

பாடம் : 26

தொழுகையில் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை.

1029 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றிருக்கிறேன்.70

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1030 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும்போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்

விடம் பாதுகாப்புக் கோருங்கள். (அவை:) அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம, வ மின் அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.

(பொருள்: இறைவா, உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், சவக் குழியின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலி ருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1031 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்றி, வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’ (இறைவா! உன்னிடம் நான் சவக் குழியின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலி ருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று பிரார்த்திப்பார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன்படுவதிலிருந்து (இவ்வளவு) அதிகமாகப் பாதுகாப்புக் கோரக் காரணம் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.71

1032 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (தமது தொழுகையில்) கடைசி அத்தஹிய்யாத் ஓதியதும் நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (அவை:) நரகத்தின் வேதனை, சவக் குழியின் வேதனை, வாழ்வு மற்றும் இறப்பின் சோதனை, (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்கு ஆகியனவாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “உங்களில் ஒருவர் அத்தஹிய்யாத் ஓதியதும்…’ எனும் வாசகமே இடம்பெற்றுள்ளது. “கடைசி அத்தஹிய்யாத்’ எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

1033 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்றி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ ஷர்ரில் மஸீஹித் தஜ்ஜால்’ (இறைவா! உன்னிடம் நான் சவக் குழியின் வேதனையிலிருந்தும், (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலி ருந்தும், (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று பிரார்த்தித்தார்கள்.72

1034 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். சவக் குழியின் வேதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1035 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சவக் குழியின் வேதனையிலிருந்தும் நரகத்தின் வேதனையிலி ருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.

1036 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கீழ்க்காணும் பிரார்த்தனையைக் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று கற்றுத்தருவார்கள். “நீங்கள் “அல்லா ஹும்ம இன்னா நஊது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம, வ அஊது பி(க்)க மின் அதாபில் கப்றி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வ அஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்’ (இறைவா, உன்னிடம் நாங்கள் நரகத்தின் வேதனையிலி ருந்து பாதுகாப்புக் கோருகின்றோம். சவக் குழியின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகின்றேன். (பெருங் குழப்பவாதி) மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்) என்று பிரார்த்தியுங் கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.

முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகின்றேன்:

தாவூஸ் (ரஹ்) அவர்கள் தம் புதல்வரிடம், “உனது தொழுகையில் நீ இவ்வாறு பிரார்த்தித்தாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவருடைய புதல்வர் “இல்லை’ என்றார். அதற்கு தாவூஸ் (ரஹ்) அவர்கள் “தொழுகையை மீண்டும் தொழுவாயாக!’ என்று கூறினார்கள் என எனக்குச் செய்தி எட்டியது. ஏனெனில், இதை தாவூஸ் (ரஹ்) அவர்கள் மூன்று அல்லது நான்கு அறிவிப்பாளர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 27

தொழுகைக்குப் பின் திக்ர் செய்வது விரும்பத் தக்கதாகும் என்பதும் அதன் முறை பற்றிய விவரமும்.

1037 ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மூன்று முறை இறைவனிடம் பாவமன்னிப்பு (இஸ்திஃக்பார்) கோரிவிட்டு, “அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம், வ மின்கஸ் ஸலாம். தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்’ (இறைவா, நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும் மேன்மையும் உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று கூறுவார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், “எவ்வாறு பாவமன்னிப்புக் கோர வேண்டும்?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்தஃக் ஃபிருல்லாஹ்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்; நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறுவீராக!” என்றார்கள்.

1038 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சலாம் கொடுத்து முடித்ததும் “அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம், வ மின்கஸ் ஸலாம். தபாரக்த தல்

ஜலாலி வல் இக்ராம் (இறைவா, நீ சாந்தியளிப்ப வன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. வலிமையும் மேன்மையும் உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று கூறும் அளவுக்குத்தான் அமர்ந்திருப்பார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “யா தல் ஜலாலி வல் இக்ராம்’ (வலிமையும் மேன்மையும் உடையவனே! நீ சுபிட்சமிக்கவன்) என்று (“யா’ எனும் இடைச் சொல் கூடுதலாக) இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதிலும் “யா தல் ஜலாலி வல் இக்ராம்’ (வலிமையும் மேன்மையும் உடையவனே!) எனும் வாசகமே இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும், அவற்றில் “யா தல் ஜலாலி வல் இக்ராம்’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

1039 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள், முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன் (பின்வருமாறு) கூறுவார்கள்:

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த வலா முஉத்திய லிமா மனஉத்த. வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர

வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா, நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது.)73

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், வர்ராத் (ரஹ்) அவர்கள் “முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் இதை எழுதுமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கேற்ப முஆவியா (ரலி) அவர்களுக்கு இதை நான் எழுதினேன் என்று கூறினார்கள்” என இடம் பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் பின்வருமாறு காணப்படுகிறது: முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதை வர்ராத் (ரஹ்) அவர்களே எழுதினார்கள்.) அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தவுடன் மேற்கண்டபடி கூறுவார்கள். ஆனால், “வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ (அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) எனும் வாசகம் இடம்பெறவில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத் (ரஹ்) அவர்கள் “முஆவியா (ரலி) அவர்கள்,முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்கு (விளக்கம் கேட்டுக்) கடிதம் எழுதினார்கள்’ என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

1040 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள், முஃகீரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த வ லா முஉத்திய லிமா மனஉத்த. வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்’ என்று கூறுவதை நான் செவியேற்றுள்ளேன்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர

வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது.

எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா, நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது.)

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1041 அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சலாம் கொடுத்தவுடன் “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். லா இலாஹ இல்லல்லாஹு, வ லா நஅபுது இல்லா இய்யாஹு லஹுந் நிஅமத்து வ லஹுல் ஃபள்லு. வ லஹுஸ் ஸனாஉல் ஹசனு. லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்’ (அல்லாஹவைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ (எவராலும்) இயலாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வழிபடமாட்டோம். அருட்கொடைகள் அவனுக்கே உரியன. மாட்சிமை அவனுக்கே உரியது. அழகிய கீர்த்தியும் அவனுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. வழிபாட்டை முற்றிலும் அவனுக்கே உரித்தாக்குகிறோம் (அவனது திருப்திக்காகவே அனைத்து அறங்களையும் செய்கிறோம்); இறைமறுப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே) என்று கூறுவார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இந்த திக்ருகளை ஓதிவந்தார்கள்” என்றும் கூறினார்கள்.

1042 ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் (மேற்கண்டவாறு) திக்ர் செய்வார்கள்’ என்று அறிவித்துவிட்டு, பிறகு இறுதியாக “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இந்த திக்ருகளைக் கூறுவார்கள்” என்று கூறினார்கள் என்றும் தெரிவித்தார்கள்.

– அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் இந்தச் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று உரையாற்றும்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தொழுகை’ அலலது “தொழுகைகளுக்கு’ப் பின் சலாம் கொடுத்தவுடன் மேற்கண்டவாறு கூறுவார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.

1043 மேற்கண்ட ஹதீஸ் அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதன் இறுதியிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறித்து இப்னுஸ் ஸுபைர்

(ரலி) அவர்கள் அவ்வாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது.

1044 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏழை முஹாஜிர்கள் (சிலர்) வந்து, “செல்வச் சீமான்கள் (மறுமையின்) உயர் பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அது எவ்வாறு?” என்று கேட்டார்கள். அவர்கள், “(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆனால், அவர்கள் தானதர்மங்கள் செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) தானதர்மங்கள் செய்(ய முடி)வதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கின்றனர். நாங்கள் (அவ்வாறு) அடிமைகளை விடுதலை செய்(ய இயல்)வதில்லை” என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா! (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்தி விட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது; உங்களைப் போன்று அவர்களும் செயல்படுத்தினால் தவிர” என்று கூறினார்கள். முஹாஜிர்கள், “ஆம் (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அது யாதெனில்) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் “சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், “அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும் (மூன்றையும் சேர்த்து) முப்பத்து மூன்று முறை கூறுங்கள்” என்றார்கள்.74

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு அந்த ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து “செல்வச் சீமான்களான எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்துவருவதைக் கேள்விப்பட்டு அவ்வாறே அவர்களும் செய்துவருகின்றனர்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது அல்லாஹ்வின் அருட்கொடை. அவன் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறான்” என்று சொன்னார்கள்.

குதைபா (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர் களின் அறிவிப்பில் சுமய்யு (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:

நான் இந்த ஹதீஸை என் குடும்பத்தாரில் ஒருவரிடம் அறிவித்தேன். அவர் “நீர் கூறுவது தவறு. அபூசாலிஹ் (ரஹ்) அவர்கள் “முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் கூறுவீராக!’ என்றே கூறினார்கள்” என்றார். உடனே நான் அபூசாலிஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இது பற்றித் தெரிவித்தேன். உடனே அவர்கள் எனது கையைப் பிடித்தவாறு “அல்லாஹு அக்பர் வ சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி, அல்லாஹுஅக்பர் வ சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி என்று அனைத்தும் சேர்த்து முப்பத்து மூன்று முறை எட்டும் அளவுக்குக் கூறுவீராக!” என்றார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு அஜ்லான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் ரஜாஉ பின் ஹய்வா (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் அபூசாலிஹ் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததைப் போன்றே எனக்கு அறிவித்தார்கள்.

1045 மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும், இந்த அறிவிப்பில் அபூசாலிஹ் (ரலி) அவர்கள் கூறிய “பிறகு ஏழை முஹாஜிர்கள் திரும்பிவந்தனர்…” எனும் வாசகம் இடைச்சேர்ப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், சுஹைல் (ரஹ்) அவர்கள் “(சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகிய ஒவ்வொன்றையும்) பதினோரு முறை பதினோரு முறை கூறுங்கள். ஆக மொத்தம் இவை யாவும் சேர்ந்து முப்பத்து மூன்று முறையாகும்” என்று அறிவித்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

1046 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்குப் பின் ஓதப்படும் சில துதிச் சொற்கள் உள்ளன. அவற்றைக் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதி வருபவர் நட்டமடையமாட்டார். (அவை:) முப்பத்துமூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும் முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும் முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர் என்றும் கூறுவதாகும்.

இதைக் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1047 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்குப் பின் ஓதப்படும் சில துதிச் சொற்கள் உள்ளன. அவற்றை ஓதிவருபவர் நட்டமடையமாட்டார். (அவை:) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும் முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும் முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர் என்றும் கூறுவதாகும்.

இதைக் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1048 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவது முறையாக “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு,லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே!

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 28

(தொழுகையில்) ஆரம்பத் தக்பீருக்கும் குர்ஆன் ஓதுவதற்கும் இடையே ஓதப் படும் பிரார்த்தனை.

1049 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஆரம்ப) தக்பீர் கூறி, குர்ஆன் வசனங்களை (கிராஅத்) ஓதுவதற்கு முன் சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும்

என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும்போது என்ன கூறுவீர் கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் “அல்லாஹும்ம பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மின் கத்தாயாய கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ். அல்லாஹும்மஃக்ஸில்னீ மின் கத்தாயாய பிஸ்ஸல்ஜி வல்மாயி வல்பரத்’ என்று கூறுவேன்”என்று பதிலளித்தார்கள்.

(பொருள்: இறைவா, கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! பனிக்கட்டியாலும் தண்ணீராலும் ஆலங்கட்டியாலும் என்னிலிருந்து என் தவறுகளைக் கழுவுவாயாக!)75

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1050 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது ரக்அத்திலிருந்து (மூன்றாவது ரக்அத்திற்கு) எழும்போது “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்று (உடனே) கிராஅத்தைத் தொடங்கி விடுவார்கள்; (சிறிது நேரம்) மௌனமாக இருக்கமாட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1051 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, “அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி’ (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் “உங்களில் இவ் வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதி யாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), “உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை” என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் “நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே “இதை எடுத்துச் செல்பவர் யார்’ எனும் விஷயத்தில் போட்டியிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1052 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் “அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா’ (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், “நான்தான் அல்லாஹ்வின் தூதரே!’ என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை.76

பாடம் : 29

கண்ணியமாகவும் நிதானமாகவும் தொழு கைக்குச் செல்வது விரும்பத் தக்கதாகும்; தொழுகைக்காக ஓடிச் செல்லலாகாது.77

1053 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச்செல்லாதீர்கள்; நடந்தே செல்லுங்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1054 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச்செல்லாதீர்கள்; நிதானத்தைக் கடைப்பிடித்தவாறு (மெதுவாகச்) செல்லுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் தொழுகையை நாடிச் செல்லும் போது அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1055 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இதுவும் ஒன்றாகும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக அழைப்பு (இகாமத்) விடுக்கப் பட்டால் நீங்கள் நடந்தே செல்லுங்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் (இமாமுடன்) தொழுங்கள்;தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள்.

1056 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகையை நோக்கி உங்களில் ஒருவர்

ஓடிச் செல்ல வேண்டாம். மாறாக, அவர் நிதானத்தையும் கண்ணியத்தையும் மேற் கொண்டு, நடந்தே செல்லட்டும். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுது கொள்ளுங்கள்; விடுபட்டதைப் பின்னர் (எழுந்து) நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1057 அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது (சிலர் வேகமாக வரும்) காலடி ஓசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். பின்னர் (தொழுது முடித்ததும்), “உங்களுக்கு என்ன நேர்ந்தது? (ஏன் சலசலப்பு எழுந்தது?)” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம்” என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுது கொள்ளுங்கள். தவறிப்போனதை (தொழுகை முடிந்ததும் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.78

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 30

(கூட்டுத்) தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்?

1058 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் என்னை நீங்கள் பார்க்காதவரை எழுந்திருக்க வேண்டாம்.79

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

அவற்றில், முஹம்மத் பின் ஹாத்திம்

(ரஹ்) அவர்களது அறிவிப்பில் “இகாமத் சொல்லப்பட்டுவிட்டால்’ அல்லது “(தொழுகைக் காக) அழைப்பு விடுக்கப்பட்டால்’ என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் பல அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நான் புறப்பட்டு வருவதை நீங்கள் பார்க்காதவரை’ என்ற வாசகம் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

1059 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. உடனே நாங்கள் எழுந்து நின்றோம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருவதற்கு முன்பே தொழுகை வரிசைகளை சீராக்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து தாம் தொழும் இடத்தில் போய் நின்றார்கள். முதல் தக்பீர் (தக்பீர் தஹ்ரீம்) சொல்வதற்கு முன் (தாம் பெருந்துடக்குடன் இருப்பது) அவர்களுக்கு நினைவுக்கு வரவே எங்களிடம், “உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்’என்று கூறிவிட்டுத் (தமது இல்லத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் வரும்வரை நாங்கள் அவர்களை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்தோம். பிறகு அவர்கள் குளித்துவிட்டுத் தமது தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட எங்களிடம் வந்தார்கள். தக்பீர் சொல்லி எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.80

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1060 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது; மக்கள் தம் தொழுகை வரிசைகளில் நின்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து தமது (தொழும்) இடத்தில் நின்றார்கள். (பிறகு தாம் பெருந்துடக்குடன் இருப்பது அவர்களுக்கு நினைவுக்கு வரவே) “அப்படியே இருங்கள்’ என்று மக்களை நோக்கிச் சைகை செய்தார்கள். பிறகு (தமது இல்லத்திற்குச் சென்று) குளித்து விட்டுத் தமது தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட புறப்பட்டு வந்து மக்களுக்குத் தொழுவித்தார்கள்.

1061 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இடத்தில் வந்து நிற்பதற்கு முன்பே தொழுகைக் காக இகாமத் சொல்லப்பட்டுவிடும்; மக்கள் தொழுகை வரிசையில் இடம் பிடித்தும் இருப்பார்கள்.

1062 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்கள் சூரியன் உச்சி சாயும் போது (லுஹ்ர் தொழுகைக்காக) அறிவிப்புச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வராதவரை இகாமத் சொல்லமாட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுவருவதைக் காணும்போதே தொழுகைக்காக இகாமத் சொல்வார்கள்.81

பாடம் : 31

தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்துகொண்டவர் அந்தத் தொழுகையையே அடைந்துகொண்டவராவார்.

1063 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்துகொண்டவர் அந்தத் தொழுகையையே அடைந்துகொண்டவராவார்.82

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1064 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தொழுகையில் ஒரு ரக்அத்தை இமாமுடன் அடைந்துகொண்டாரோ அவர் அந்தத் தொழுகையையே (ஜமாஅத்துடன்) அடைந்துகொண்டவராவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், எதிலும் “இமாமுடன்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை. உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர் அந்தத் தொழுகை முழுவதையும் அடைந்துகொண்ட வராவார்” என்று இடம்பெற்றுள்ளது.

1065 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர், சுப்ஹுத் தொழுகையை (முழுமையாக) அடைந்துகொண்டவராவார். சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்டவர் அஸ்ர் தொழுகையை (முழுமையாக) அடைந்து கொண்டவராவார்.83

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1066 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு “சஜ்தா’வை, அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகை யில் ஒரு “சஜ்தா’வை அடைந்துகொண்டவர் அந்தத் தொழுகையை (முழுமையாக) அடைந்து கொண்டவராவார்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

இதில் இடம்பெற்றுள்ள “சஜ்தா’ என்பதற்கு “ரக்அத்’ என்று பொருள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1067 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகை யில் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்டவர், (அந்தத் தொழுகையையே) அடைந்துகொண்டு விட்டார். சூரியன் உதிப்பதற்கு முன் ஃபஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர், (அந்தத் தொழுகையையே) அடைந்துகொண்டுவிட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 32

ஐவேளைத் தொழுகை நேரங்கள்

1068 இப்னு ஷிஹாப் முஹமமத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(வலீத் பின் அப்தில் மலிக் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (ஒரு நாள்) அஸ்ர் தொழுகையைச் சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், “(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (தொழுகை கடமையான “மிஅராஜ்’ இரவுக்கு மறுநாள்) இறங்கி,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இமாமாக (நின்று) தொழுவித்தார்கள். (அப்போது அஸ்ர் தொழுகையை இதற்கு முந்தியே தொழுதார்கள்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், உர்வா!” என்று சொன்னார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் கூறினர்கள்:

பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(வானவர்) ஜிப்ரீல் (ஒரு நாள்) இறங்கிவந்து, எனக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அவர்களுடன் நான் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர் களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன்” என்று சொல்லி, ஐந்து (நேரத்) தொழுகைகளைத் தம் விரல்களால் எண்ணிக் காட்டினார்கள்.84

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1069 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப் படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் வந்த உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:

(கூஃபா நகரின் ஆளுநராயிருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஒரு நாள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது அங்கு வந்த அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள், “ஏன் இவ்வாறு (தாமதப்படுத்தினீர்கள்), முஃகீரா? (தொழுகை கடமையாக்கப்பட்ட மிஅராஜ் இரவுக்கு மறுநாள்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கித் தொழு(வித்)தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். மீண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். (ஐவேளைத் தொழுகையை முடித்த) பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் “இவ்வாறே நான் (உங்களுக்குச் செய்து காட்டுமாறு) பணிக்கப்பட்டேன்’என்று கூறியதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்கவில்லையா, என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு உர்வா (ரஹ்) அவர்களிடம் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், “நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதை (நன்கு) கவனியுங்கள், உர்வா! ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுகை நேரத்தைக் காட்டினார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “(ஆம்) இவ்வாறுதான் பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்” என்றார்கள்.

1070 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.85

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்து கொண்டும் நிழல் இன்னும் (கிழக்குப் புறச் சுவரில்) விழாமலும் உள்ள நிலையில் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுவார்கள்.

அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நிழல் இன்னும் (கிழக்குப் புறச் சுவரில்) தெரியாத நிலையில்’என்று இடம் பெற்றுள்ளது.

1071 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்துகொண்டிருக்க, அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்; அப்போது எனது அறையில் நிழல் படிந்திருக்காது.

1072 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.86

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1073 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஃபஜ்ர் (அதிகாலைத் தொழுகை) தொழ விரும்பினால், அதன் நேரம் சூரியனின்

மேற்பகுதி வெளிப்படும்வரை உள்ளது. பின்னர் நீங்கள் லுஹ்ர் (மதியத் தொழுகை) தொழ விரும்பினால், அதன் நேரம் (நண் பகலிலிருந்து) அஸ்ர் (மாலைத் தொழுகையின்) நேரம் வரும்வரை உள்ளது. பின்னர் நீங்கள் அஸ்ர் தொழ விரும்பினால், அதன் நேரம் சூரியன் பொன்னிறமாகும்வரை உள்ளது. பின்னர் நீங்கள் மஃக்ரிப் (அஸ்தமன நேரத் தொழுகை) தொழ விரும்பினால், அதன் நேரம் (அஸ்தமனத்திலி ருந்து) செம்மேகம் மறையும்வரை உள்ளது. பின்னர் நீங்கள் இஷா (இரவு நேரத் தொழுகை), தொழ விரும்பினால் அதன் நேரம் (செம்மேகம் மறைந்ததிலிருந்து) நள்ளிரவுவரை உள்ளது.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1074 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹ்ர் தொழுகையின் நேரம் அஸ்ர் நேரம் வரும்வரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாவதற்கு முன்பு

வரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் பரவி மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது. ஃபஜ்ர் தொழுகையின் நேரம் சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது.

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும், இரண்டு தடவை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

1075 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹ்ர் தொழுகையின் நேரம், சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு(ச் சமமாக) ஆகி, அஸ்ர் நேரத்திற்கு முன்புவரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம்

செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை

உள்ளது. சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது. சூரியன் உதித்துவிட்டால் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் அது உதயமாகிறது.87

இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1076 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகை நேரங்கள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், “ஃபஜ்ர் தொழுகையின் நேரம் சூரியனின் மேற்புற விளிம்பு வெளிப்படு வதற்கு முன்புவரை உள்ளது. லுஹ்ர் தொழுகை யின் நேரம் சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தது முதல் அஸ்ர் நேரம் வருவதற்கு முன்புவரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் விளிம்பு மறைவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம், சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது” என்று விடையளித்தார்கள்.

1077 அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள், “உடல் சுகத்(தைத் தேடுவ)தினால் கல்வியை அடைய முடியாது”என்று கூறினார்கள்.88

1078 புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தொழுகையின் நேரம் குறித்துக் கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “நம்முடன் இவ்விரு நாட்கள் தொழுங்கள்!” என்று கூறினார்கள். (அன்றைய தினம்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது, பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு(ம் பிறகு இகாமத்தும்) சொல்லுமாறு உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். அப்போது சூரியன் ஒளிமிக்கதாகவும் தெளிவாக வும் (வானில்) தெரிந்தது. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃக்ரிப் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் மறையும்போது மஃக்ரிப் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.

பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் செம்மேகம் மறையும்போது இஷாத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (ஃபஜ்ர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் வைகறை புலரும்போது ஃபஜ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.

இரண்டாம் நாள் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் வெப்பம் தணிந்த பின் லுஹ்ர் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் வெப்பம் தணிந்த பின், நன்கு வெப்பம் குறைந்திருந்த வேளையில் இகாமத் சொன்னார்கள். பின்னர் சூரியன் உயர்ந்திருக்கவே அஸ்ர் தொழுதார்கள். முந்திய நாளைவிடச் சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுதார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி சென்ற பின் இஷாத் தொழுதார்கள். நன்கு வெளிச்சம் வந்த பின் (சூரிய உதயத்துக்கு முன்) ஃபஜ்ர் தொழுதார்கள். பிறகு “தொழுகை நேரம் குறித்து என்னிடம் வினவியவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “நான் (இதோ இருக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் (இரு தினங்களாகக்) கண்ட நேரங்களுக்கு இடைப்பட்ட நேரம்தான் உங்கள் (ஐவேளைத்) தொழுகையின் நேரமாகும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1079 புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் குறித்து வினவினார். (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “நம்முடன் தொழுகையில் கலந்துகொள்வீராக!” என்று கூறினார்கள். இதையடுத்து நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் (இருட்டு இருக்கும்போதே சுப்ஹுத் தொழுகைக் காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் இருட்டு இருக்கும்போதே (சுப்ஹுத் தொழுகைக்காக) பாங்கு சொன் னார்கள். வைகறை உதயமாகும் போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுதார்கள். பிறகு சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது லுஹ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பின்னர் சூரியன் உயர்ந்தி ருக்கும்போதே அஸ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் சொல்லுமாறு) பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு சூரியன் மறைந்தபோது மஃக்ரிப் தொழுகைக் காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட் டார்கள். பிறகு செம்மேகம் மறைந்ததும் இஷாத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள்.

மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம் (சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு வெளிச்சம் வந்த பின் சுப்ஹுத் தொழுதார்கள். பிறகு லுஹ்ர் தொழுகைக்கு (வெப்பம் தணிந்த பின் பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு வெப்பம் தணிந்த பின் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் அஸ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு சூரியன் ஒளிமிக்கதாகவும் தெளிவாகவும் இருந்தபோது பொன்னிறம் ஏற்படுவதற்கு முன்பே அஸ்ர் தொழுதார்கள். பிறகு அவர்களிடம் செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு இரவின் “ஒரு பகுதி’ அல்லது “மூன்றில் ஒரு பகுதி’ -(அறிவிப்பாளர் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.)- கடந்த பின் இஷாத் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். அதிகாலையில், “கேள்வி கேட்டவர் எங்கே?நீங்கள் கண்ட (இவ்விரு தினங்களின் தொழுகை நேரங்களின்) இடைப்பட்ட நேரமே (ஐவேளைத்) தொழுகையின் நேரமாகும்” என்று கூறினார்கள்.

1080 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகையின் நேரங்கள் குறித்து வினவினார். அப்போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் (வாய்மொழியாக) பதிலேதும் கூறவில்லை. (பின்வருமாறு செய்துகாட்டினார்கள்:) வைகறை புலர்ந்ததும் ஃபஜ்ர் தொழுகைக்காக இகாமத் (கூறச்) சொன்னார்கள். அப்போது (இருள் இருந்த காரணத்தால்) மக்களில் சிலர் சிலரை அறிந்துகொள்ள இயலவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (லுஹ்ர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் லுஹ்ர் தொழுகைக்காக பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் “நண்பகலாகிவிட்டது’ என்று கூறினார். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எல்லாரையும்விட அறிந்தவர்களாக இருந்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ர் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் உயர்ந்திருக்கவே அஸ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃக்ரிப் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் மறைந்தபோது மஃக்ரிப் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் செம்மேகம் மறைந்தபோது இஷாத் தொழுகைக்கு இகாமத் சொன்னார்கள்.

மறுநாள் ஃபஜ்ர் தொழுகையைப் பிற்படுத் தித் தொழுதார்கள். எந்த அளவிற்கென்றால் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் “சூரியன் உதயமாகிவிட்டது’ அல்லது “சூரியன் உதிக்கப்போகிறது’ என்று கூறினார். பிறகு லுஹ்ர் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். அது முந்திய நாள் அஸ்ர் தொழுத நேரத்திற்கு நெருக்கமாக இருந்தது. பிறகு அஸ்ர் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். எந்த அளவிற்கென்றால் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் “சூரியன் சிவந்துவிட்டது’ என்று கூறினார்.

பிறகு மஃக்ரிப் தொழுகையைச் செம்மேகம் மறையும்வரை பிற்படுத்தினார்கள். பிறகு இஷாத் தொழுகையை இரவின் முந்திய மூன்றிலொரு பகுதி நேரமாகும்வரை பிற்படுத்தினார்கள். விடிந்ததும் வினாத் தொடுத்த அந்த மனிதரை அழைத்து “இவ்விரு (நாட்களின் தொழுகை) நேரங்களுக்கும் இடைப்பட்ட நேரமே (ஐவேளைத் தொழுகைகளின்) நேரமாகும்” என்று கூறினார்கள்.

1081 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் (மஃக்ரிப் தொழுகையின் நேரம் தொடர்பாக) “மறுநாள் செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுதார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

பாடம் : 33

கூட்டுத் தொழுகைக்குச் செல்லும் வழியில் வெப்பத் தாக்குதலுக்கு ஆளாவோர், கடுமையான வெயில் காலத்தில் வெப்பம் தணியும்வரை லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்துவது விரும்பத் தக்கதாகும்.

1082 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் கடுமையாகும்போது அது தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1083 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் நிறைந்த நாளில் அது தணியும் வரை (லுஹ்ர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் பதினைந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அம்ர் பின் சவ்வாத் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பில் “வெப்பம் தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது” என்று இடம்பெற்றுள்ளது.

1084 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த(க் கோடை) வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது. எனவே, வெப்பம் தணியும்வரை தொழுகை யைத் தாமதப்படுத்துங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1085 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது

1086 அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை அழைப்பாளர் லுஹ்ர் தொழுகைக்கு அழைப்புவிடுக்க முற்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும், வெப்பம் தணியட்டும்’ அல்லது “பொறுங்கள், பொறுங்கள்’ என்று கூறிவிட்டு, “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சு காரண மாகவே உண்டாகிறது. வெப்பம் கடுமையாகும் போது அது தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள்!” என்று சொன்னார்கள்.

(எனவே, நாங்கள் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்) எந்த அளவிற்கென்றால் குன்றுகள்மீது நிழல் விழுந்திருப்பதை நாங்கள் கண்டோம்.89

1087 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகம் தனது இறைவனிடம், “என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே?” என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.90

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1088 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வெப்பம் ஏற்படும்போது வெப்பம் தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது” என்று கூறிவிட்டு, “நரகம் தனது இறைவனிடம் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு) முறையிட்டது. அதற்கு இறைவன் ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதித்தான்”என்றும் குறிப்பிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1089 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகம், “என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறது. எனவே, மூச்சுவிட எனக்கு அனுமதியளிப்பாயாக!” என்று வேண்டியது. அவ்வாறே இறைவன் அதற்கு ஒரு மூச்சு

குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதியளித்தான். நீங்கள் அனுபவிக்கும் இலேசான குளிரும் கடுங்குளிரும் நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது. நீங்கள் காணும் இலேசான வெப்பமும் கடுமையான வெப்பமும் நரக நெருப்பின் மூச்சு காரணமாகவே ஏற்படுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 34

கடும் வெப்பம் இல்லாதபோது லுஹ்ர் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவது விரும்பத் தக்கதாகும்.

1090 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (வெப்பமில்லாத நாட்களில்) சூரியன் உச்சி சாயும்போதே (நண்பகல் நேரத்தில்) லுஹ்ர் தொழுதுவிடுவார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1091 கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுடுமணல்(மீது நின்று தொழுவதிலுள்ள சிரமம்) குறித்து முறையிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் முறையீட்டை ஏற்கவில்லை.91

1092 கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று சுடுமணல்(மீது நின்று தொழுவதிலுள்ள சிரமம்) குறித்து முறையிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் முறையீட்டை ஏற்கவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடம் “லுஹ்ர் தொழுகை தொடர்பாகவா (மக்கள் முறையிட் டார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் “ஆம்’ என்றார்கள். நான், “லுஹ்ர் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவது தொடர்பாகவா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்’ என்றார்கள்.

1093 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கடுமையான வெப்ப நேரத்தில் தொழுவோம். அப்போது எங்களில் ஒருவர் பூமியில் தமது நெற்றியை வைக்க இயலா விட்டால் அவர் தமது ஆடையை விரித்து அதன்மீது சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்.

பாடம் : 35

அஸ்ர் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவது விரும்பத் தக்கதாகும்.

1094 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸ்ர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அங்கு சென்று சேரும்போதும்’ எனும் வாசகம் இடம்பெறவில்லை.92

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1095 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஸ்ர் தொழுவோம். பிறகு எங்களில் (மேட்டுப் பகுதிகளில் ஒன்றான) “குபா’வுக்குச் செல்பவர் அங்கு சென்றடைவார். அப்போதும் சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும்.93

1096 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அஸ்ர் தொழுகை தொழுவோம். பிறகு (எங்களில்) ஒரு மனிதர் பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடம் புறப்பட்டுச் செல்வார். அப்போது அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்பதைக் காண்பார்.94

1097 அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் பஸ்ரா நகரில் தமது இல்லத்திலிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் லுஹ்ர் தொழுதுவிட்டுச் சென்றேன். -அன்னாரின் இல்லம் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருந்தது- நாங்கள் அவர்களிடம் சென்றபோது “நீங்கள் அஸ்ர் தொழுதுவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “(இல்லை) நாங்கள் இப்போதுதான் லுஹ்ர் தொழுதுவிட்டு வருகிறோம்” என்று அவர்களிடம் சொன்னோம். அனஸ் (ரலி) அவர்கள், “அவ்வாறாயின் நீங்கள் அஸ்ர் தொழுங்கள்” என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து (அஸ்ர்) தொழுதோம். நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி) அவர்கள், “இதுதான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி அல்லது மறைந்து) வரும்போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவுகூருவான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்றார்கள்.95

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1098 அபூஉமாமா பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுடன் (அவர்கள் மதீனாவில் இடைக்கால ஆட்சியராக இருந்தபோது) லுஹ்ர் தொழுகையை (அதன் இறுதி நேரத்தில்) தொழுதோம். பிறகு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் புறப்பட்டுச் சென்றோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்பதைக் கண்டோம். அப்போது நான் (மரியாதை நிமித்தம்) “என் தந்தையின் சகோதரரே!’ (என்றழைத்து) நீங்கள் தொழுதீர்களே இது என்ன தொழுகை?” என்று கேட்டேன். அவர்கள், “(இது) அஸ்ர் தொழுகை. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இவ்வாறே (ஆரம்ப நேரத்தில்) தொழுபவர்களாக இருந்தோம்” என்று பதிலளித்தார்கள்.96

1099 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) எங்களுக்கு அஸ்ர் தொழுகையைத் தொழவைத்து முடித்தார்கள். அப்போது அவர் களிடம் பனூசலிமா குலத்தைச் சேர்ந்த ஓரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குரிய (இறைச்சி) ஒட்டகத்தை அறுக்க விரும்புகிறோம். அ(ந்த விருந்)தில் தாங்களும் கலந்துகொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சரி’ என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நாங்களும் அவர்களுடன் நடந்தோம். அந்த ஒட்டகம் இன்னும் அறுக்கப் படாமலிருப்பதைக் கண்டோம். பின்னர் அது அறுக்கப்பட்டு சிறுசிறு துண்டுகளாக்கப்பட்டது. பிறகு அதில் சிறிது சமைக்கப்பட்டது. பின்னர் நாங்கள் அதைச் சூரியன் மறைவதற்குள் உண்டோம் (இவ்வளவு வேலைகளும் அஸ்ருக்கும் மஃக்ரிபுக்குமிடையே நடந்து முடிந்தது; அந்த அளவிற்கு அஸ்ரை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுதோம்).

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1100 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுகை தொழுவோம். பிறகு ஒட்டகம் அறுக்கப்படும். அது பத்துக் கூறுகளாகப் பங்கிடப்படும். பிறகு அது சமைக்கப்படும். நாங்கள் சூரியன் மறைவதற்கு முன் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம்.97

1101 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் அவற்றில் “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்

அஸ்ர் தொழுகைக்குப் பிறகு ஒட்டகத்தை அறுப்போம்’ என்று இடம்பெற்றுள்ளது. “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுவோம்’ எனும் வாசகம் இடம் பெறவில்லை.

பாடம் : 36

அஸ்ர் தொழுகையைத் தவறவிடுவது தொடர்பாக வந்துள்ள கண்டனம்.

1102 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடு கிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தை யும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.98

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1103 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஸ்ர் தொழுகை யாருக்குத் தவறிவிடு கிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தை யும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1104 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (எதிரிகளான) அவர்களுடைய வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக! அவர்கள் சூரியன் மறையும்வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நம்மைத் தடுத்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள்” என்று கூறினார்கள்.99

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 37

அஸ்ர் தொழுகையே நடுத் தொழுகை ஆகும் என்று கூறுவோரின் சான்று.100

1105 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அவர்களுடைய “புதை குழிகளை’ அல்லது “அவர்களுடைய வீடுகளை’ அல்லது “அவர்களுடைய வயிறுகளை’அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

வீடுகள் அல்லது வயிறுகள் என்பதில்

(எந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பாக) அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “அவர்களுடைய வீடுகளையும் வயிறுகளையும்’ என்று (ஐயப்பாடின்றி) இடம்பெற்றுள்ளது.

1106 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது அகழின் நுழைவாயில்களில் ஒன்றில் அமர்ந்தவாறு, “(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலி ருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். “அவர்களுடைய புதை குழிகளையும் வீடுகளையும்’ அல்லது “அவர்களுடைய புதை குழிகளையும் வயிறுகளையும்’ அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1107 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது “(எதிரிகளான) அவர்கள் நடுத் தொழுகையான அஸ்ர் தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அவர்களுடைய வீடு களையும் புதைகுழிகளையும் நெருப்பால் அல்லாஹ் நிரப்புவானாக!” என்று கூறினார்கள். பிறகு அத்தொழுகையை இரு இரவுத் தொழுகைகளான மஃக்ரிபுக்கும் இஷாவுக்கும் இடையே தொழுதார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

1108 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூரியன் “செந்நிறமாகும் நேரம்வரை’ அல்லது “பொன்னிறமாகும் நேரம்வரை’ அஸ்ர் தொழுகையைத் தொழவிடாமல் தடுத்து விட்டார்கள்.101 அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நடுத் தொழுகையான அஸ்ர் தொழுகையிலிருந்து அவர்கள் நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அல்லாஹ் அவர்களுடைய வயிறுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக!” என்று கூறினார்கள்.

1109 ஆயிஷா (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த அபூயூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் பிரதியொன்றைத் தமக்காகப் படியெடுத்துத் தருமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்” எனும் இந்த (2:238ஆவது) வசனத்தை நீ எட்டும்போது என்னிடம் தெரிவிப்பாயாக! என்றும் கூறினார்கள். அவ்வாறே நான் (அதைப் படியெடுத்துக்கொண்டிருந்தபோது) அந்த வசனம் வந்ததும் அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள் “”அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் (அதாவது) அஸ்ர் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்” என்று எழுதுமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்” என்றும் கூறினார்கள்.

1110 ஷகீக் பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள், “(ஆரம்பக் காலத்தில்) இந்த (2:238ஆவது) வசனம் “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) அஸ்ர் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்’ என்றே அருளப்பெற்றது. அல்லாஹ் நாடிய(காலம்)வரை அவ்வாறே நாங்கள் ஓதியும்வந்தோம். பின்னர் அல்லாஹ் அந்த வசனத்தைப் பின்வருமாறு மாற்றி அருளினான் என்று கூறினார்கள்: அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகை யையும் பேணி(த் தொழுது)வாருங்கள்.

(இந்த ஹதீஸை என்னிடம் பராஉ (ரலி) அவர்கள் அறிவித்துக்கொண்டிருந்தபோது) எனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு மனிதர் பராஉ (ரலி) அவர்களிடம், “அப்படியானால் நடுத் தொழுகை என்பது அஸ்ர் தொழுகையையே குறிக்கிறது” என்று சொன்னார். அதற்கு பராஉ (ரலி) அவர்கள், “அவ்வசனம் (முதலில்) எவ்வாறு அருளப்பெற்றது. பின்னர் அல்லாஹ் அதை எவ்வாறு மாற்றினான் என்பதை நான் உமக்கு தெரிவித்துவிட்டேன். அல்லாஹ்வே அறிந்தவன்” என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சில காலம் அந்த வசனத்தை ஓதி வந்தோம்” என்று பராஉ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

1111 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகை தொழ முடியாமல் போய்விட்டது” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதை (இதுவரை) தொழவில்லை” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிலுள்ள) புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். நாங்களும் அங்கத் தூய்மை செய்தோம். (அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பிறகு மஃக்ரிப் தொழுதார்கள்.102

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 38

சுப்ஹு மற்றும் அஸ்ர் தொழுகைகளின் சிறப்பும் அவ்விரு தொழுகைகளைப் பேணி(த் தொழுது)வருவதும்.

1112 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களிடையே இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் அடுத்தடுத்து (சுழற்சி முறையில்) வருகின்றனர். அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் ஒன்றுசேர்கின்றனர். பிறகு உங்களிடையே இரவில் தங்கியவர்கள் (வானத்திற்கு) ஏறிச் செல்கின்றனர். அப்போது இறைவன் அ(வ்வான) வர்களிடம், “(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவந்தீர்கள்?” என்று -மக்களைப் பற்றி நன்கறிந்த நிலையிலேயே- கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், “அவர்கள் (உன்னைத்) தொழுதுகொண்டிருந்த நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.103

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “வானவர்கள் உங்களிடையே அடுத்தடுத்து வருகின்றனர்’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

1113 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (முழு நிலவுள்ள ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலாவைக் கூர்ந்து பார்த்தவாறு, “நீங்கள் இந்த நிலாவை நெரிசல் இல்லாமல் காண்பதைப் போன்றே உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும் சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் -அதாவது அஸ்ரிலும் ஃபஜ்ரிலும்- (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால் (அவ்வாறே செய்யுங்கள்; இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரான கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், “சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்” எனும் (20:130ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.104

1114 மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “நபி (ஸல்) அவர்கள், “நினைவில் கொள்க: நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவீர்கள். அப்போது நீங்கள் அவனை இந்த நிலவைக் காண்பதைப் போன்று காண்பீர்கள்’ என்று கூறினார்கள். பிறகு மேற்கண்ட (20:130ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. ஜரீர் (ரலி) அவர்கள் அந்த வசனத்தை ஓதிக் காட்டியதாகக் குறிப்பில்லை.

1115 அபூபக்ர் பின் உமாரா பின் ருஐபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைந்த பின்னரும் தொழுதவர் -அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுதவர்- எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்” என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், “இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் “ஆம்’ என்றார்கள். அந்த மனிதர் “நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கிறேன். அதை என்னிரு காதுகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக்கொண்டது” என்று கூறினார்.

இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1116 அபூபக்ர் பின் உமாரா பின் ருஐபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைந்த பின்னரும் (ஃபஜ்ர் மற்றும் அஸ்ர்) தொழுபவர் நரக நெருப்பில் நுழையமாட்டார்’ என்று கூறினார்கள்” என்றார்கள். அப்போது உமாரா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த பஸ்ரா வாசிகளில் ஒருவர், “இதை நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் “ஆம், நபி (ஸல்) அவ்வாறு கூறினார்கள் என நான் உறுதி அளிக்கிறேன்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த பஸ்ராவாசி “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியேற்ற அதே இடத்தில் நானும் செவியேற்றேன் என நானும் உறுதி அளிக்கிறேன்” என்றார்.

1117 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகலின் இரு முனைகளிலுள்ள (ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) இரு குளிர் நேரத் தொழுகை களைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைவார்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், அறிவிப்பாளர் அபூபக்ர் (ரஹ்) அவர்களது பெயருடன் “இப்னு அபீமூசா’ என்பதும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.

பாடம் : 39

மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரம் சூரியன் மறையும்போது ஆகும்.

1118 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் திரையில் (-அடிவானில்) மறையும்போது மஃக்ரிப் தொழுவார்கள்.105

1119 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் திரும்பிச் செல்லும்போது (அவர் அம்பெய்தால்) அம்பு விழும் இடத்தை அவரால் பார்க்க முடியும் (அந்த அளவு வெளிச்சம் இருக்கும்போதே மஃக்ரிப் தொழுவோம்).106

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதிலும் “நாங்கள் மஃக்ரிப் தொழுவோம்…’ எனும் வாசகமே இடம்பெற்றுள்ளது.

பாடம் : 40

இஷாத் தொழுகையின் நேரமும் அதை(ச் சற்று)த் தாமதப்படுத்துவதும்.

1120 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருள் படரும்வரை தாமதப்படுத்தினார்கள்.- இஷா நேரம்தான் “அல்அ(த்)தமா’ (இருட்டு நேரம்) என (மக்களால்) அழைக்கப்பட்டு வந்தது.- உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் “பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறிய பிறகே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, அப்போது பள்ளிவாசலில் இருந்தவர் களை நோக்கி, “(தற்போது) இந்த பூமியில் வசிப்பவர்களில் உங்களைத் தவிர வேறு யாரும் இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கவில்லை”என்று கூறினார்கள்.107 இது, மக்களிடையே இஸ்லாம் (அதிகமாகப்) பரவுவதற்கு முன் நடைபெற்றதாகும்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சப்தமிட்டு அழைத்தபோது “தொழுவிக்க வருமாறு அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்துகின்ற உரிமை உங்களுக்கு இல்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று எனக்கு அறிவிக்கப்பட்டது என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ள தகவல் இடம்பெறவில்லை.

1121 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருள் படரும்வரைத் தாமதப்படுத்தினார்கள். எந்த அளவிற்கென்றால் இரவின் கணிசமான பகுதி கடந்துவிட்டது; பள்ளிவாசலில் இருந்தவர்கள் உறங்கியும் விட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து தொழுவித்துவிட்டு, “இதுதான் இஷாத் தொழுகைக்கான (சிறந்த) நேரமாகும். என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்பதில்லையாயின்” என (சிறு மாற்றத்துடன்) இடம்பெற்றுள்ளது.

1122 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் இரவில் நாங்கள் இஷாத் தொழுகைக்காக அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிந்த பின்னரோ, அதற்குப் பிறகோதான் அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அவர்களது குடும்பத்தில் ஏதேனும் அலுவல் இருந்ததா, அல்லது வேறு காரணமா என்று எங்களுங்குத் தெரியவில்லை. அவர்கள் புறப்பட்டுவந்ததும், “நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள். உங்களைத் தவிர வேறு எந்த மார்க்கத்தைச் சேர்ந்தோரும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. எனது சமுதாயத்துக்குச் சுமை எற்பட்டுவிடும் என்றில்லாவிடில் இந்த நேரத்தில்தான் (இத்தொழுகையை) அவர்களுக்கு நான் தொழுவித்திருப்பேன்” என்று கூறினார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளரிடம் (இகாமத் கூறும்படி) உத்தரவிட, அவர் (இஷாத்) தொழுகைக்காக இகாமத் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1123 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அலுவல் காரணமாக இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். நாங்கள் பள்ளிவாசலிலேயே உறங்குவதும் விழிப்பதும் பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “இந்த இரவில் உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறெவரும் இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை” என்று கூறினார்கள்.108

1124 ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்களிடம் மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மோதிரம் தொடர்பாக வினா எழுப்பினார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் “பாதி இரவுவரை’ அல்லது “பாதி இரவு கழியும்வரை’ தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து “மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால்,நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருக் கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)” என்று சொன்னார்கள். (அப்போது அவர்களது விரலில் மோதிரத்தைப் பார்த்தேன்.) இப்போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.

இவ்வாறு கூறிய அனஸ் (ரலி) அவர்கள் தமது இடக் கை சுண்டு விரலை உயர்த்திக் காட்டினார்கள்.

1125 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஓர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (இஷாத் தொழுகைக்காக எதிர்)பார்த்து பாதி இரவு நெருங்கும்வரைக் காத்திருந்தோம். பிறகு அவர்கள் வந்து எங்களுக்கு (இஷாத்) தொழுவித்தார்கள். பிறகு எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களுடைய கரத்தில் வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள்’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

1126 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என்னுடன் (யமன் நாட்டிலிருந்து) கப்பலில் வந்த என் நண்பர்களும் (மதீனா அருகிலுள்ள) “புத்ஹான்’ எனும் விசாலமான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தார்கள். எங்களில் சிலர் முறைவைத்து ஒவ்வோர் இரவும் இஷாத் தொழுகை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். (எனது முறை வந்தபோது) நானும் என் நண்பர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற வேளையில் அவர்கள் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் பாதி இரவு வரை இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தி னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் அங்கிருந்த மக்களை நோக்கி, “அப்படியே இருங்கள். உங்களுக்கு ஒன்றை நான் அறிவிக்கப்போகி றேன். நற்செய்தி பெறுங்கள். “இந்த நேரத்தில் மக்களில் உங்களைத் தவிர வேறு யாரும் தொழுதுகொண்டிருக்கவில்லை’ அல்லது “இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறெவரும் தொழவில்லை’. (-இவ்விரு வாக்கியங்களில் எதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் அறியவில்லை.-) இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமி ருந்து செவியேற்ற இந்தச் செய்தியைக் கேட்டுப் பெருமகிழ்ச்சியடைந்தவர்களாக நாங்கள் திரும்பினோம்.109

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1127 அப்துல் மலிக் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், “நான் மக்களுக்கு, அவர்கள் “அல்அ(த்)தமா’ என்று குறிப்பிடுகின்ற இஷாத் தொழுகையை எந்த நேரத்தில் தலைமை தாங்கித் தொழுவிப்பதை, அல்லது நான் தனியாகத் தொழுவதை நீங்கள் விரும்புவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருட்டும்வரைத் தாமதப்படுத்தினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து, “தொழுகை’ என்று (சப்தமிட்டுக்) கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருக்க, தலையின் ஒரு பகுதியில் தமது கையை வைத்தபடி (தலையிலிருந்த தண்ணீரைத் துடைத்தவாறு) புறப்பட்டுவந்ததை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது அவர்கள் “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்றில்லாதி ருப்பின் அவர்களை இந்த நேரத்திலேயே இத்தொழுகையைத் தொழுமாறு உத்தரவிட்டிருப்பேன்” என்று சொன்னார்கள்.110

அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் “நபி (ஸல்) அவர்கள் தமது தலையில் எவ்வாறு கையை வைத்திருந்தார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததைப் போன்று கூறுங்கள்” என விளக்கம் கேட்டேன். அப்போது அதாஉ (ரஹ்) அவர்கள், தம் கை விரல்களைச் சற்று இடைவெளிவிட்டு விரித்து, விரல் நுனிகளை உச்சந்தலையில் வைத்து தலையில் அதை தடவிக்கொண்டே சென்றார்கள். இறுதியில் அவர்களது பெரு விரல் முகத்தை ஒட்டியுள்ள காதோரம், நொற்றிப்பொட்டு, தாடியின் ஓரம் ஆகியவற்றில் பட்டது. இவ்வாறு அவர்கள் தாமதியாமலும் அவசரப்படாமலும் (மிதமாகச்) செய்தார்கள்.

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் அன்றைய இரவில் எவ்வளவு நேரம் தொழுகையைத் தாமதப்படுத்தியதாக உங்களிடம் கூறப்பட்டது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “எனக்குத் தெரியாது’ என விடையளித்தார்கள்.

மேலும் அவர்கள், “நான் தலைமை தாங்கித் தொழுவித்தாலும் தனியாகத் தொழுதாலும்

நபி (ஸல்) அவர்கள் அன்றிரவு இஷாத் தொழுகையைத் தொழுததைப் போன்று தாமதித்துத் தொழவே விரும்புகிறேன். நீங்கள் தனியாகத் தொழும்போதோ அல்லது மக்களுக்குத் தலைமைத் தாங்கிக் கூட்டுத் தொழுகை நடத்தும்போதோ இவ்வாறு செய்வது உங்களுக்குச் சிரமமாகத் தோன்றினால் இதற்கு இடைப்பட்ட மத்திய நேரத்தில் அதைத் தொழுதுகொள்ளுங்கள். அவசரப்படவும் வேண்டாம்; தாமதிக்கவும் வேண்டாம்” என்று சொன்னார்கள்.

1128 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்துபவராக இருந்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1129 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் தொழுவதைப் போன்றே அனைத்துத் தொழுகைகளையும் தொழுவார்கள். ஆனால், இஷாத் தொழுகையை நீங்கள் தொழுவதைவிடச் சற்று தாமதப்படுத்தியும் சுருக்கமாகவும் தொழுவார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1130 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களைக் கிராமப்புற அரபுகள் மிகைத்துவிட வேண்டாம். நிச்சயமாக அதற்கு “இஷா’ என்றே பெயர். ஆனால், கிராமவாசிகள் நன்கு இருட்டிய பிறகே ஒட்டகங்களிலிருந்து பால் கறப்பதால் (இஷா எனும் பெயரை மாற்றி) “அ(த்)தமா’ (இருட்டுத் தொழுகை) என்று அழைக்கின்றனர்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1131 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கிராமப்புற அரபுகள் உங்கள் இஷாத் தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களை மிகைத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் வேதத்தில் அதற்கு இஷா என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. கிராமப்புற அரபியர் நன்கு இருட்டிய பிறகு ஒட்டகங்களிலிருந்து பால் கறப்பதால் அதனை “அ(த்)தமா’ (இருட்டுத் தொழுகை) என்று அழைக்கின்றனர்.111

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 41

சுப்ஹுத் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவது விரும்பத் தக்கதாகும்; அந்த ஆரம்ப நேரமே “தஃக்லீஸ்’ (இருட்டு) ஆகும்; சுப்ஹுத் தொழுகையில் எந்த அளவு (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டும்?

1132 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் நபி (ஸல்) அவர்களுடன் சுப்ஹுத் தொழுதுவிட்டு தம் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு திரும்பிச்செல்வார்கள். (அப்போதிருந்த இருட்டினால்) அவர்களை யாரும் அறிந்து கொள்ளமாட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1133 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தம் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வார்கள். பிறகு தம் இல்லங்களுக்குத் திரும்பிச்செல்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருட்டிலேயே ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவி(த்து முடி)ப்பதால் அப்பெண்கள் (யார் யாரென) அறிந்துகொள்ளப் படமாட்டார்கள்.

1134 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவிப்பார்கள். அப்போது பெண்கள் தங்கள் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு (தொழுது விட்டு) திரும்பிச்செல்வார்கள் (அப்போதிருந்த) இருட்டின் காரணத்தால் அவர்கள் (யார் யாரென) அறியப்படமாட்டார்கள்.112

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1135 முஹம்மத் பின் அம்ர் பின் அல்ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மதீனாவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ற்கு வந்தபோது, (தொழுகை களைத் தாமதப்படுத்தலானார். அப்போது,) நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் குறித்துக்) கேட்டோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் லுஹ்ர் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும்போதே அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள். இஷாவைச் சில நேரங்களில் முந்தியும் வேறு சில நேரங்களில் பிந்தியும் (சூழ்நிலைக்குத் தக்கவாறு) தொழுவார்கள். மக்கள் (முன்னேரத்திலேயே) கூடியிருப்பதைக் கண்டால் ஆரம்ப நேரத்திலேயே தொழுதுவிடுவார்கள்: மக்கள் தாமதமாக வருவதைக் கண்டால் தாமதப்படுத்துவார்கள். “மக்கள்’ அல்லது “நபி (ஸல்) அவர்கள்’ இருட்டிலேயே (-அதிகாலை முன்னேரத்திலேயே) சுப்ஹுத் தொழுவார்கள்.113

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1136 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “ஹஜ்ஜாஜ் தொழுகைகளைத் தாமதப்படுத்திவந்தார். ஆகவே, நாங்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் குறித்துக்) கேட்டோம்’ என ஹதீஸ் தொடங்குகிறது.

1137 ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் “என் தந்தை சலாமா (ரஹ்) அவர்கள் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி வினவியதை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.

நான் சய்யார் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் அதை (நேரடியாக)ச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் கூறுவதைத் தற்போது நான் செவியேற்பதைப் போன்றே செவியேற் றேன். என் தந்தை சலாமா (ரஹ்) அவர்கள் அபூபர்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை குறித்து வினவினார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை (-அதாவது இஷாவை)ச் சிறிது நேரம் (-அதாவது பாதி இரவுவரை) தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பியதில்லை” என்று கூறினார்கள்.

பிறகு (மற்றொரு முறை) நான் சய்யார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது அவர்களிடம் வினவினேன். அப்போது அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் (நடு வானிலிருந்து மேற்கு நோக்கிச்) சாயும்போது லுஹ்ர் தொழுவார்கள். பிறகு அஸ்ர் தொழுவார்கள். ஒருவர் (அஸ்ர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சம் குன்றாமல்) இருந்துகொண்டிருக்கும். மஃக்ரிப் (தொழுகையின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்: ஆனால், அவர்கள்) கூறியதை நான் அறியவில்லை (மறந்துவிட்டேன்)” என்று கூறினார்கள்.

பிறகு (இன்னொரு முறை) அவர்களைச் சந்தித்து வினவியபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவி(த்து முடி)ப்பார்கள். அப்போது (எங்களில்) ஒருவர் (தொழுதுவிட்டுத்) திரும்புவார். அவர் தமக்கு அறிமுகமான பக்கத்திலிருப்பவரைப் பார்த்து (இன்னார் என) அறிந்துகொள்வார் (அந்த அளவிற்கு வெளிச்சம் வந்திருக்கும்). சுப்ஹுத் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்” என்று கூறினார்கள்.114

1138 அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைப் பாதி இரவுவரைச் சற்றே தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் அதற்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் விரும்பமாட்டார்கள்.

இதை சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் மற்றொரு முறை சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது “(“பாதி இரவுவரை’) அல்லது “இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை’ (தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை)” என்று கூறினார்கள்.

1139 அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றிலொரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பார்கள். ஃபஜ்ர் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள். தொழுது முடித்துத் திரும்பிச்செல்லும்போது எங்களில் ஒருவர் மற்றவரின் முகத்தை அறிந்து கொள்வார்.

பாடம் : 42

தொழுகையை அதன் உகந்த நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துவது வெறுக்கப்பட்ட தாகும்; “இமாம்’ அவ்வாறு தாமதப்படுத்தினால் பின்பற்றும் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

1340 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “தொழுகையை அதன் உரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்துபவர்கள்,அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள். நான் “(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துகொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின்

ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அதன் உரிய நேரத்தைவிட்டு’ எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

1141 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அபூதர், எனக்குப் பின்னால் சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் தொழுகையை (உரிய நேரத்தில் தொழாமல் அதை)ச் சாகடிப்பார்கள். அப்போது நீங்கள் தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள்! அவ்வாறு உரிய நேரத்தில் (நீங்கள் தொழுத பின் அவர்களுடனும் சேர்ந்து) நீங்கள் தொழுதால் அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும். இல்லையேல், நீங்கள் உங்களது தொழுகையைப் பேணியவர் ஆகிவிட்டீர்” என்று கூறினார்கள்.

1142 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

என் உற்ற தோழர் (நபி-ஸல்) அவர்கள் என்னிடம் “(உங்கள் தலைவருடைய சொல்லை) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே’ என்றும்,தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். “பின்னர் மக்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் அவர்களை நீங்கள் அடைந்தால், (முன்பே) உங்களது தொழுகையை நீங்கள் காப்பாற்றிக்கொண்டவராவீரர்கள்;அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மறுபடியும் தொழுதால்) அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்” என்றும் கூறினார்கள்.

1143 அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடையில் அடித்து, “தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தும் மக்களிடையே நீங்கள் தங்க நேரிட்டால் உங்களது நிலை எப்படி இருக்கும்?” என்று கேட்டார்கள். “(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் எனத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள்?” என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு உங்களது தேவைக்காகச் செல்லுங்கள்! நீங்கள் பள்ளிவாசலில் இருக்கும்போதே தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!” என்று கூறினார்கள்.

1144 அபுல்ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பஸ்ராவில் ஆட்சியராக இருந்த) இப்னு ஸியாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார். அப்போது என்னிடம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் வந்தார்கள். நான் அவர்களுக்காக ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டேன். அதில் அவர்கள் அமர்ந்தார்கள். நான் அவர்களிடம் இப்னு ஸியாதின் செயல் குறித்துச் சொன்னேன். அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் தமது உதட்டைக் கடித்துக்கொண்டே என் தொடையில் அடித்துவிட்டு, “நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் (என் தந்தையின் சகோதரர்) அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் உமது தொடையில் நான் அடித்ததைப் போன்றே எனது தொடையில் அடித்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் உமது தொடையில் அடித்ததைப் போன்றே என் தொடைமீது அடித்துவிட்டு, “தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள்! பின்னர் மக்களுடன் தொழுகின்ற வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் அப்போதும் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். “நான் (ஏற்கெனவே) தொழுதுவிட்டேன். இனி தொழமாட்டேன்’ என்று சொல்தீர்கள்!” என்றார்கள்.

1145 அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தையின் சகோதரர்) அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்), “தொழுகையை உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே நீங்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் “உமது நிலை எப்படி இருக்கும்?’ அல்லது (பன்மையில்) “உங்களுடைய நிலை எப்படி இருக்கும்?’ ”என்று கேட்டுவிட்டுப் பிறகு, “அப்போது தொழுகையை உரிய நேரத்தில் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். பிறகு (கூட்டுத்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் மக்களுடன் (சேர்ந்து) தொழுது கொள்ளுங்கள். அது கூடுதல் நன்மையாகும்” என்று சொன்னார்கள்.

1146 அபுல் ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்களிடம், “நாங்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று சில ஆட்சித் தலைவர்களைப் பின்பற்றித் தொழுகிறோம்; அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்தித் தொழுகின்றனர்” என்று கூறினேன். உடனே அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் எனது தொடையில் வலிக்கும் அளவிற்கு ஓர் அடி அடித்தார்கள். பிறகு, “நான் இது தொடர்பாக (என் தந்தையின் சகோதரர்) அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் என் தொடையில் அடித்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: நான் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள்! பின்னர் மக்களுடன் நீங்கள் தொழும் தொழுகையைக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள் .

மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர்

(ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களின் தொடையில் அடித்தார்கள் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது” என்றும் கூறினார்கள்.

பாடம் : 43

கூட்டுத் தொழுகையின் (ஜமாஅத்) சிறப்பும், கூட்டுத் தொழுகைக்குச் செல்லாமலிருப்பது தொடர்பாக வந்துள்ள கண்டனமும்.

1147 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்.

1148 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனியாகத் தொழும் தொழுகையை விடக் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழும் தொழுகை, இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்றுசேர்கிறார்கள்.

இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால், “(நபியே!) அதிகாலையில் ஓதுவதை (-தொழுவதை)க் கடைப்பிடிப்பீராக! (ஏனெனில்,) அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப் படக்கூடியதாகும்’ எனும் (17:78ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.115

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆனால், அவற்றில் “இருபத்தைந்து பங்கு’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

1149 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டுத் தொழுகையானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளுக்கு நிகரானதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1150 உமர் பின் அதாஉ பின் அபில்குவார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு நாள்) நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்தி ருந்தேன். அப்போது ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன் அபூஅப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அழைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: “இமாமுடன் சேர்ந்து தொழுவதானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளை விடச் சிறந்தததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1151 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116

1152 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு கூடுதல் நன்மையுடையதாகும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் தம் தந்தை நுமைர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில் “இருபதுக்கும் மேற்பட்ட (மடங்கு நன்மையுடையதாகும்)” என்றும், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “இருபத்தேழு மடங்கு (அதிக நன்மையுடையதாகும்)” என்றும் இடம்பெற்றுள்ளது.

– நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஜமாஅத்துடன் தொழுவது தனியாகத் தொழுவதைவிட) இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு கூடுதல் சிறப்புடையதாகும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1153 அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் சிலரைச் சில தொழுகைகளில் காணாமல் தேடினார்கள். அப்போது அவர்கள் “நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்துவிட்டு, விறகுக் கட்டைகளைக் கொண்டுவரச் சொல்லி, (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று அவர்களை வீட்டோடு தீயிட்டுக் கொளுத்திவிட வேண்டும் என்று எண்ணியதுண்டு. அவர்களில் ஒருவர் சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்பு கிடைக்கும் எனத் தெரிந்தால்கூட அவர் அதில் -அதாவது இஷாத் தொழுகையில்- கட்டாயம் கலந்துகொள்வார்” என்று (இடித்துக்) கூறினார்கள்.117

1154 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக் குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1155 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உதவியாளர்களிடம் விறகுக் கட்டைகளைச் சேகரித்து வருமாறு உத்தரவிட்டுப் பின்னர் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு கூறிவிட்டுப் பிறகு (கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத) வீட்டாரை அவர்களுடைய வீடுகளுடன் சேர்த்து எரித்துவிட வேண்டும் என நான் எண்ணியதுண்டு.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1156 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, “நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு” என்று கூறினார்கள்.

பாடம் : 44

தொழுகை அறிவிப்பைக் கேட்பவர் பள்ளி வாசலுக்குச் செல்வது கட்டாயமாகும்.

1157 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை” என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித் தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, “தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்’ (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் “அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!” (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.118

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 45

கூட்டுத் தொழுகை நேரிய வழிகளில் ஒன்றாகும்.

1158 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகர் என (வெளிப்படையாக) அறியப்பட்டவரையும் நோயாளியையும் தவிர வேறெவரும் (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்த தில்லை. நோயாளிகூட இரு மனிதர்களுக்கி டையே (தொங்கியவாறு) நடந்துவந்து தொழுகையில் சேர்ந்துவிடுவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நேரிய வழி களைக் கற்பித்தார்கள். தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் பள்ளிவாசலில் தொழுவது அத்தகைய நேர்வழிகளில் ஒன்றாகும்.

1159 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணி(த் தொழுது)வரட்டும். ஏனெனில்,அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுதுகொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுதுவருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள்.

யார் “அங்கத் தூய்மை’ (உளூ) செய்து அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்;அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு.

பாடம் : 46

தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்த பிறகு பள்ளிவாசலைவிட்டு வெளியேறலாகாது.

1160 அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்தார். உடனே (அங்கிருந்த) ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்து எழுந்து சென்றார். அந்த மனிதர் பள்ளிவாசலைவிட்டு வெளியேறும்வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, “கவனியுங்கள்: இவர், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்” என்று கூறினார்கள்.

1161 அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்ட பின் பள்ளிவாசலை விட்டு வெளியேறிக்கொண்டி ருந்த ஒரு மனிதரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள், “கவனியுங்கள்: இந்த மனிதர், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறுசெய்து விட்டார்” என்று கூறினார்கள்.

பாடம் : 47

இஷாவையும் சுப்ஹையும் ஜமாஅத்துடன் தொழுவதன் சிறப்பு.

1162 அப்துர் ரஹ்மான் பின் அபீஅம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர் களிடம் சென்று நானும் அமர்ந்தேன். அப்போது அவர்கள், “என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவுவரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கிய வரைப் போன்றவர் ஆவார்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1163 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹுத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றின் விஷயத்தில் (நீங்கள் வரம்பு மீறி நடந்து, அது குறித்து) அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்து, அதை உங்களிடம் கண்டுகொண்டதால் உங்களை நரக நெருப்பில் குப்புறத் தள்ளும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிட வேண்டாம்.

இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1164 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுப்ஹுத் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரணை செய்(யும் நிலையை நீங்கள் ஏற்படுத்)திட வேண்டாம். ஏனெனில், அவன் தன் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து ஒருவரிடம் விசாரிக்கத் தொடங்கினால், அதைக் கண்டுபிடித்தே தீருவான். பின்னர் (வரம்பு மீறி நடந்துகொண்ட) அவனை நரக நெருப்பில் அல்லாஹ் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்.

இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் பின் சுஃப்யான் அல்கஸ்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நரக நெருப்பில் குப்புறத் தள்ளி விடுவான்’ எனும் வாசகம் இடம்பெறவில்லை.

பாடம் : 48

தகுந்த காரணமிருப்பின் கூட்டுத் தொழுகை (ஜமாஅத்து)க்குச் செல்லாமல் இருக்க அனுமதியுண்டு.

1165 பத்ருப் போரில் கலந்துகொண்ட அன்சாரி நபித்தோழர்களில் ஒருவரான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நான் என் (பனூசாலிம்) சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கின்றேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் (என் சமூகத்தாரான) அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளநீர் வழிந்தோடும். இந்நிலையில் அவர்களுடைய பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு என்னால் தொழவைக்க இயலவில்லை. ஆகவே,அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வந்து (எனது வீட்டில்) ஓரிடத்தில் தொழுகை நடத்த வேண்டுமென்றும், (தாங்கள் நின்று தொழும்) அந்த இடத்தை நான் (என்) தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறேன்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நான் (அவ்வாறே) செய்வேன்” என்று சொன்னார்கள்.

தொடர்ந்து இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களும் நண்பகல் நேரத்தில் என்னிடம் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் நுழைய) அனுமதி கேட்டார்கள். நான் அனுமதியளித்தேன். உள்ளே வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே உட்காரவில்லை. பிறகு என்னிடம் “(இத்பான்!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் வீட்டின் ஒரு மூலையைக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்று “தக்பீர் (தஹ்ரீம்)’ சொன்னார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னே (அணிவகுத்து) நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுது, சலாம் கொடுத்தார்கள். நாங்கள் அவர்களுக்காகச் சமைத்திருந்த “கஸீர்’ எனும் (கஞ்சி) உணவி(னை விருந்தளிப்பத)ற்காக அவர்களை நாங்கள் இருக்கவைத்தோம்.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட) அந்தப் பகுதி மக்கள் எங்களைச் சுற்றிக் குழுமிவிட்டனர். கணிசமான பேர் (சிறுகச் சிறுக) வந்து (என்) வீட்டில் திரண்டுவிட்டனர். அவர்களில் ஒருவர், “மாலிக் பின் துக்ஷுன் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவர்களில் மற்றொருவர், “அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர் (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க அவர் வரவில்லை)” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரைப் பற்றி அவ்வாறு சொல்லாதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினார்கள். அ(வ்வாறு நயவஞ்சகர் என விமரிசித்த)வர், “(அல்லாஹ்வின் தூதரே!) அவர் (-மாலிக் பின் துக்ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் அவர்கள்மீது அபிமானம் கொண்டிருப்பதையுமே நாங்கள் காண்கிறோம்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் திருப்தியை நாடி “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னவரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி)விட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பனூசாலிம் குலத்தைச் சேர்ந்தவரும் அவர்களில் முக்கியப் பிரமுகருமான ஹுஸைன் பின் முஹம்மத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களிடம் மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவர்கள் அதை “உண்மைதான்’ என உறுதிப்படுத்தி னார்கள்.119

1166 மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “(அம்மக்களில்) ஒருவர் “மாலிக் பின் “துக்ஷுன்’ அல்லது “துகைஷின்’ எங்கே?” என்று கேட்டார்’ என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அறிவிப்பாளர் மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகவும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:

நான் இந்த ஹதீஸைச் சிலரிடம் அறிவித்த போது அவர்களிடையே அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள், “நீங்கள் சொன்னதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்று நான் எண்ணுகிறேன்” என்றார்கள். உடனே நான் “இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் திரும்பச் சென்றால் அவர்களிடம் இது குறித்து (மீண்டும்) கேட்பேன்’ என்று சத்தியம் செய்தேன். அவ்வாறே நான் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றேன். இத்பான் (ரலி) அவர்கள் பார்வையை இழந்த முதியவராக இருந்தார்கள்; தம் சமூகத்தாருக்கு இமாமாக (தொழுகை நடத்துபவராக) இருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்து இந்த ஹதீஸ் தொடர்பாகக் கேட்டேன். அப்போது அவர்கள் முன்பு அறிவித்ததைப் போன்றே எனக்கு அறிவித்தார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே கடமைகளும் இன்ன பிற விதிகளும் அருளப்பெற்றன. இவை அருளப்பெற்றதோடு இந்த விஷயம் முற்றுப்பெற்றுவிட்டது. எனவே, ஏமாந்துவிடாமலிருக்க முடிந்தவர் ஏமாந்துவிடாதிருக்கட்டும்.120

1167 மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நான் சிறுவனாக இருந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த (கிணறு ஒன்றிலிருந்து) வாளியில் (தண்ணீர் எடுத்துத் தமது வாயில் ஊற்றி என் முகத்தில்) ஒரு முறை (செல்லமாக) உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன்.121

என்னிடம் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நான் “அல்லாஹ்வின் தூதரே! என் பார்வை கெட்டுவிட்டது…” என்று தொடங்கி, “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தயாரித்திருந்த கோதுமை மாவுக் கஞ்சி(யை அவர்கள் பருக வேண்டும் என்ற ஆசை)க்காக அவர்களை இருக்கவைத்தோம்” என்று ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பின்புள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.

பாடம் : 49

கூடுதலான தொழுகைகளையும் (நஃபில்) ஜமாஅத்தாகத் தொழலாம்; சுத்தமான பாய், தொழுகை விரிப்பு, துணி போன்ற வற்றின் மீது தொழலாம்.

1168 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் (தாய் வழிப்) பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுக்காக உணவு தயாரித்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு, “எழுங்கள், உங்களுக்காக நான் (நஃபில் தொழுகை) தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். நான் எங்கள் பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரிக்கப்பட்டிருந்ததால் கறுப்பாகிவிட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீர் தெளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) அதில் நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் (-ளுமைர் பின் சஅத்) அவர்களுக்குப் பின்னால் அணியில் நின்றோம். அந்த மூதாட்டி (-உம்மு சுலைம்) எங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.122

1169 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது சில வேளைகளில் தொழுகை(யின் நேரம்) வந்துவிடும். உடனே, தாம் அமரும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு பணிப்பாôர்கள். அவ்வாறே அது பெருக்கி(த் துடைத்து)ச் சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே நிற்க, நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள். (அன்று) மக்களுடைய விரிப்பு பேரீச்ச மட்டையால் செய்யப்பட்டதாகவே இருந்தது.123

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1170 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். அப்போது (வீட்டில்) நான், என் தாயார் மற்றும் என் சிறிய தாயார் உம்முஹராம் (ரலி) ஆகியோர் மட்டுமே இருந்தோம். நபி (ஸல்) அவர்கள், “எழுங்கள்! உங்களுக்காக நான் (நஃபில்) தொழுவிக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு எங்களுக்கு (தலைமை தாங்கித்) தொழுவித்தார்கள். (அது கடமையான தொழுகையின் நேரமல்ல.)

-இதன் அறிவிப்பாளரான ஸாபித் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், “நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு (அருகில்) எந்தப் பக்கத்தில் நிறுத்தினார்கள்?” என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரஹ்) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்” என்று பதிலளித்தார்கள்.-

பின்னர், நபி (ஸல்) அவர்கள் எங்கள் குடும்பத்தாருக்காக எல்லா விதமான இம்மை மறுமை நன்மை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போது என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! (அனஸ்,) உங்களுடைய சிறு சேவகர். அவருக் காக நீங்கள் பிரார்த்தியுங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள் “எனக்கு எல்லா விதமான நன்மையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எனக்காகச் செய்த பிரார்த்தனையின் இறுதியில், “இறைவா! அனஸுக்குச் செல்வத்தையும் குழந்தை களையும் அதிகமாக்குவாயாக! அதில் அவருக்கு வளம் பாலிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

1171 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் என் தாயாருக்கும், அல்லது என் சிறிய தாயாருக்கும் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது என்னைத் தமக்கு வலப் பக்கத்திலும் பெண்ணை எங்களுக்குப் பின்னாலும் நிறுத்தினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1172 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு அருகில் நான் (உறங்கிக்கொண்டு) இருப்பேன். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போது சில நேரங்களில் அவர்களது ஆடை என்மீது படும். நபி (ஸல்) அவர்கள் (சிறியதொரு) தொழுகை விரிப்பில் தொழுவார்கள்.124

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1173 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் பாய் ஒன்றில் சஜ்தாச் செய்து தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 50

கூட்டாகத் தொழுவது மற்றும் தொழுகையை எதிர்பார்த்திருப்பது ஆகியவற்றின் சிறப்பு.

1174 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத்தெருவில் தொழுவதைவிடவும் அவர் ஜமாஅத்துடன் தொழுவது இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகவும் செய்து, தொழ வேண்டும் என்ற ஆர்வத்தில், தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு தகுதி அவருக்கு உயர்த்தப்படுகிறது; ஒரு தவறு அவருக்காக மன்னிக்கப்படுகிறது. அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்துவிட்டால், தொழுகையை எதிர்பார்த்து அவர் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள். “இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக! இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவரது பாவமன்னிப்பை ஏற்பாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர். அவர் சிறு துடக்கின் மூலம் தொல்லை தராதவரை (இது நீடிக்கும்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.125

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1175 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள்.”இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவருக்குச் சிறு துடக்கு ஏற்படாமல் இருந்தால். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துத் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்.

1176 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடியார் தொழுகையை எதிர்பார்த்துத் தொழுமிடத்தில் வீற்றிருக்கும்வரை அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறார். அப்போது வானவர்கள், “இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திக்கின்றனர். அவர் திரும்பிச் செல்லும்வரை அல்லது அவருக்குச் சிறு துடக்கு ஏற்படும்வரை (இது நீடிக்கும்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் “சிறு துடக்கு எது?” என்று கேட்டேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் “சப்தமின்றியோ அல்லது சப்தத்துடனோ காற்று பிரிவதாகும்” என்று பதிலளித்தார்கள்.

1177 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துத் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டதுடன், அவர் தம் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவிடாமல் தொழுகை அவரைத் தடுத்து வைத்திருக்குமானால், அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.126

1178 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்து வீற்றிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப் பவராகவே கருதப்படுகிறார்; அவருக்குச் சிறு துடக்கு ஏற்படாமல் இருந்தால். அப்போது அவருக்காக வானவர்கள், “இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 51

பள்ளிவாசல்களுக்கு அதிகக் காலடிகள் எடுத்துவைத்து (வெகு தொலைவிலி ருந்து) செல்வதன் சிறப்பு.

1179 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), (தொழுகைக்காக) வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் தொழக் காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கிவிடுபவரைவிட அதிக நன்மை அடைபவராவார்.127

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழக் காத்திருக்கிறாரோ’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

1180 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இருந்தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அவரைவிட வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் வேறு எவரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவர் எந்தவொரு தொழுகையையும் தவறவிடமாட்டார். எனவே அவரிடம், “நீங்கள் ஒரு கழுதை வாங்கிக்கொண்டால் நன்றாயிருக்குமே! அதன் மீது பயணம் செய்து காரிருளிலும் கடும் வெப்பத்திலும் (தொழுகைக்கு) வரலாமே?” என்று “கேட்கப்பட்டது’ அல்லது “(அவ்வாறு) நான் கேட்டேன்’. அதற்கு அவர், “எனது இல்லம் பள்ளிவாசலுக்கு அருகிலேயே அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. (ஏனெனில்,) நான் பள்ளிவாசலுக்கு நடந்துவருவதும் (பள்ளி வாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது

– உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனா விலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக் காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம். இதையடுத்து அவரிடம் நான், “இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷ ஜந்துக்களிலி ருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளலாமே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அறிவீர்: அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை”என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டு” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1181 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்கள் குடியிருப்புகள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குத் தொலைவில் அமைந்திருந்தன. ஆகவே, நாங்கள் எங்கள் வீடுகளை விற்றுவிட்டுப் பள்ளி வாசலுக்கு அருகில் குடியேற விரும்பினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், “உங்களது ஒவ்வொரு காலடிக்கும் உங்களுக்கு ஒரு தகுதி உண்டு” என்று கூறினார்கள்.

1182 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?”என்று கேட்டார்கள். அதற்கு பனூசலிமா குலத்தார் “ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்”என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்” என்று (இரு முறை) கூறினார்கள்.

1183 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூசலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினர். அப்போது (பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த) மனைகள் காலியாக இருந்தன. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், “பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும். உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்” என்று கூறினார்கள். பனூசலிமா குலத்தார், “நாங்கள் அவ்வாறு குடியேறியிருந்தால் எங்களுக்கு அது மகிழச்சியளித்திருக்காது” என்று கூறினர்.

பாடம் : 52

தொழுகைக்காக நடந்துசெல்வதால் தவறுகள் மன்னிக்கப்படுகின்றன; தகுதிகள் உயர்த் தப்படுகின்றன.

1184 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்திவிடுகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1185 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவருடைய (வீட்டு) வாசலில் ஓர் ஆறு (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை நீராடுகிறார். இந்நிலையில் அவரது உடலில் அழுக்கேதும் இருக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அவரது உடலில் அழுக்கேதும் இராது” என்று பதிலளித்த னர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது தான் ஐவேளைத் தொழுகைகளின் நிலையாகும். அ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் தவறுகளை அழிக்கிறான்” என்று கூறினார்கள்.128

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.

1186 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐவேளைத் தொழுகையின் நிலையானது, உங்கள் வீட்டு வாசலில் ஓடும் ஆழமான நதிக்கு ஒத்திருக்கிறது. அதில் அவர் நாள்தோறும் ஐந்து முறை குளித்துவருகிறார்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “(அவ்வாறு ஐந்து முறை குளித்தால்) அவரது உடலில் அழுக்கெதையும் அது விட்டுவைக்குமா?” என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதாக) இடம்பெற்றுள்ளது.

1187 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.129

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 53

சுப்ஹுத் தொழுகைக்குப் பின் (சூரிய உதயம்வரை) தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பதன் சிறப்பும் பள்ளிவாசல் களின் சிறப்பும்.

1188 சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1189 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதுவிட்டு தொழுத இடத்திலேயே சூரியன் நன்கு உதயமாகும்வரை அமர்ந்திருப்பார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நன்கு’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

1190 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.130

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 54

தொழவைப்பதற்கு (இமாமத்) அதிகத் தகுதியுடைய வர் யார்?

1191 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர் களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

– மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.

1192 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சம அளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அவருடைய அனுமதியின்றி அமர வேண்டாம்.

இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

அபூசயீத் அல்அஷஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர்’ என்பதற்கு பதிலாக “அவர்களில் வயதில் மூத்தவர்’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1193 அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரும் அதை முதலில் ஓதக் கற்றுக்கொண்டவரும் மக்களுக் குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். அவர்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர் களாய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்தவர்களாய் இருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். ஒருவரது வீட்டிலோ அல்லது ஒருவருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்திலோ (அவருடைய அனுமதியின்றி) நீங்கள் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒருவருடைய வீட்டில் “அவர் உங்களுக்கு அனுமதியளித்தால் தவிர’ அல்லது “அவரது அனுமதியின்றி’அவரது விரிப்பின் மீது நீங்கள் அமராதீர்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1194 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பனூலைஸ் தூதுக் குழுவில்) ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருணை உள்ளம் கொண்டவராகவும் இளகிய மனம் படைத்தவராகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்று அவர்களிடையே தங்கியிருந்து அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுங்கள். (கடமைகளை நிறைவேற்றும்படி) அவர்களைப் பணியுங்கள். தொழுகை (நேரம்) வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகை அறிவிப்புச் செய்யட்டும்; பிறகு உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்றார்கள்.131

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மாலிக் பின் அல் ஹுவைரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நான் (என் குலத்தார்) சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள் ஒத்த வயதுடைய இளைஞர்களாய் இருந்தோம்” என்று மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.

1195 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் நண்பர் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நாங்கள் (அவர் களிடம் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு) அவர்களிடமிருந்து திரும்பிச்செல்ல விரும்பிய போது எங்களிடம் அவர்கள் “தொழுகை

(நேரம்) வந்துவிட்டால் தொழுகை அறிவிப்புச் செய்யுங்கள். பிறகு இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் காலித் அல்ஹத்தாஉ (ரஹ்) அவர்கள் “இருவரும் சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தனர்’ என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 55

முஸ்லிம்களுக்கு ஏதேனும் சோதனை (பேரழிவு) ஏற்பட்டால் எல்லாத் தொழுகைகளிலும் “குனூத்’ (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவது விரும்பத் தக்கதாகும்.

1196 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் (குர்ஆன்) ஓதிய பின் தக்பீர் சொல்(லி ருகூஉ செய்)வார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) “ரப்பனா வ லக்கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறுவார்கள். பிறகு நின்றவாறு (பின்வரும் “குனூத்’தை) ஓதுவார்கள்:

இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா

பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவா யாக! இறைவா, (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக! இறைவா! லிஹ்யான், ரிஅல், தக்வான், உஸய்யா ஆகிய குலத்தாரை நீ உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! உஸய்யா குலத்தார் (பெயருக்கேற்ப) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்.

பிறகு “அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை” எனும் (3:128ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டார்கள் என நமக்குச் செய்தி எட்டியது.132

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “(நபி) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர் களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!” என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.

1197 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப் பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறியதும் பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:

இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டு களைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!

தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன். உடனே நான் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்” என்றேன். அப்போது, “(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்கப்பட்டது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷா தொழுதுகொண்டிருந்தபோது “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தாச் செய்வதற்கு முன்பாக, “இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபிஆவைக் காப்பாற்றுவா யாக…!” என்று தொடங்கி, “(நபி) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்ச ஆண்டுகளைப் போன்று” என்பது வரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.

1198 அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குக் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகியத் தொழுகைகளில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு சார்பாகவும் (கொடுஞ் செயல்புரிந்த) இறைமறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.133

1199 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பிஃரு மஊனா’ (எனுமிடத்தில் பிராசாரத்திற்காச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்கு எதிராக -அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா, ரிஅல், தக்வான் மற்றும் லிஹ்யான் ஆகிய குலத்தாருக்கு எதிராக -முப்பது (நாட்கள்) வைகறை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தித் தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்ட வர்கள் விஷயத்தில் அல்லாஹ் ஒரு வசனத்தை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் அந்த வசனம் (அல்லாஹ்வின் ஆணைப்படி) நீக்கப்பட்டுவிட்டது:

“நாங்கள் எங்கள் இறைவனிடம் வந்து சேர்ந்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான்; நாங்கள் அவனைக்

குறித்து திருப்தியடைந்தோம்’ என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனம்.134

1200 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர் களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், ருகூஉவிற் குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம்) ஓதினார்கள்” என்று பதிலளித்தார்கள்.135

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1201 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூஉவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும், “உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டார்கள்” என்றும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1202 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் ஃபஜ்ர் தொழுகையில் ருகூஉக்குப் பின்னால் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் பனூ உஸய்யா குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

1203 ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், “குனூத் (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ருகூஉக்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது ஓதப்பட்டது)?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் “ருகூஉக்கு முன்புதான்” என்று பதிலளித்தர்கள். நான் “ருகூஉக்குப் பின்னர்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள் என்று சிலர் கூறுகின்றனரே?” என்று கேட்டேன் அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் (ருகூஉவிற்குப் பிறகு) குனூத் ஓதினார்கள். அதில் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட தம் தோழர்களை (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொன்ற மக்களுக்கெதி ராகப் பிரார்த்தித்தார்கள்” என்று சொன்னார்கள்.136

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1204 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பிஃரு மஊனா’ நாளில் கொல்லப்பட்ட குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட எழுபது பேருக்காக மன வேதனைப்பட்டதைப் போன்று தாம் அனுப்பிவைத்த வேறு எந்தப் படைப் பிரிவினருக்காகவும் (அவர்கள் உயிர் நீத்தபோது) மன வேதனைப்பட்டதில்லை. அவர் களைக் கொன்றவர்களுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் சற்று கூடுதல் குறைவுடன் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

1205 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யா ஆகிய குலத்தாரைச் சபித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

1206 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒரு மாதம் அரபுக் குலத்தினர் பலருக்கெதிராகப் பிரார்த்தித்து குனூத் (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். பின்னர் அ(வ்வாறு பிரார்த்திப்ப)தை விட்டுவிட்டார்கள்.137

1207 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1208 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகை யிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.

1209 குஃபாஃப் பின் ஈமா அல் ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையில் “இறைவா! பனூ லிஹ்யான், ரிஅல், தக்வான் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யா ஆகிய குலத்தாரை உன் கருணையிலி ருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். “ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக;அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் பாதுகாப்பானாக!” என்றும் பிரார்த்தித்தார்கள்.

1210 குஃபாஃப் பின் ஈமா அல் ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பிறகு “ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் பாதுகாப்பானாக! உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர். இறைவா! பனூ லிஹ்யான் குலத்தாரை நீ உன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துவாயாக! ரிஅல் மற்றும் தக்வான் குலத்தாரையும் நீ உன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு சஜ்தாவிற்குச் சென்றார்கள். (கொடுஞ் செயல் புரியும்) இறைமறுப்பாளர்களைச் சபிக்கும் நடைமுறை இதை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்டது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “இறைமறுப்பாளர்களைச் சபிக்கும் நடைமுறை இதை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்டது” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

பாடம் : 56

தவறிப்போன தொழுகையை நிறைவேற்று வதும், அதை உடனடியாக நிறைவேற்று வது விரும்பத் தக்கது என்பதும்.

1211 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பியபோது

இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் “இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!” என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம் (ஃபஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை (கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள் “பிலால்!’ என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக்கொண்ட அதே (உறக்கம்)தான் என்னையும் தழுவிக்கொண்டது”என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) “உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்”என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், “தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், “என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!’ (20:14) என்று கூறுகின்றான்” என்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(மேற்கண்ட 20:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “லி திக்ரீ’ எனும் சொற்றொடரை) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் “லித்திக்ரா’ (நினைவுகூருவதற்காக) என்று ஓதுவார்கள்.

1212 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு நாள்) இரவில் நபி (ஸல்) அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும்வரை நாங்கள் (யாரும்) விழிக்க வில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் (எழுந்து), “ஒவ்வொருவரும் தமது வாகனத்தின் தலையைப் பிடித்து(க்கொண்டு இந்த இடத்தை விட்டு நகர்ந்து) செல்லட்டும். ஏனெனில், இந்த இடத்தில் நம்மிடம் ஷைத்தான் வந்துவிட்டான்” என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள், பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட, வைகறைத் தொழுகை (ஃபஜ்ர்) தொழுவித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1213 அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரிலிருந்து திரும்பும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது “இன்று மாலையும் இரவும் நீங்கள் பயணம் செய்து இன்ஷா அல்லாஹ் -அல்லாஹ் நாடினால்- நாளை (காலை) நீங்கள் நீர் நிலையைச் சென்றடைவீர்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் யாரும் யாரையும் திரும்பிப் பார்க்காமல் (விரைவாகப்) பயணம் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுநிசி நேரம்வரைப் பயணம் செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இலேசாக உறக்கம் வரவே, அவர்கள் தமது வாகனத்திலிருந்து சாய்ந்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அதையடுத்து அவர்கள் தமது வாகனத்தில் நேராக அமர்ந்துகொண்டார்கள். பிறகு தொடர்ந்து பயணம் செய்து இரவின் பெரும்பகுதி கடந்தபோது (மீண்டும்) உறங்கித் தமது வாகனத்திலிருந்து சாய்ந்தார்கள். அப்போதும் நான் அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அதையடுத்து அவர்கள் தமது வாகனத்தில் நேராக அமர்ந்துகொண்டார்கள். பிறகு இன்னும் (சிறிது தூரம்) பயணம் செய்து இரவின் இறுதிப் பகுதியானபோது முன்னர் இரு முறை சாய்ந்ததைவிட மிகப் பலமாகச் சாய்ந்து கீழே விழப்போனார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களை (மீண்டும்) தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி, “யார் அது?” என்று கேட்டார்கள். “அபூகத்தாதா’ என்றேன். “நீங்கள் எப்போதிருந்து என்னருகில் பயணம் செய்துவருகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் “இரவிலிருந்து இவ்வாறு உங்கள் அருகிலேயே பயணம் செய்துவருகிறேன்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரை நீங்கள் காத்த காரணத்தால் அல்லாஹ்வும் உங்களைக் காப்பானாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

பிறகு “நாம் மக்களைவிட்டு மறைந்து (வெகு தொலைவிற்கு வந்து)விட்டோம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” எனக் கேட்டார்கள். பின்னர் “மக்களில் யாரேனும் தென்படுகிறார்களா (என்று பாருங்கள்!)?” என்றார்கள். நான், “இதோ ஒரு பயணி” என்றேன். பிறகு “இதோ மற்றொரு பயணி” என்றேன். இறுதியில் நாங்கள் ஏழு பயணிகள் ஒன்றுசேர்ந்துவிட்டோம்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பயண வழியிலிருந்து விலகி (ஓரிடத்திற்குச் சென்று உறங்குவதற்காகத்) தமது தலையை (ஓரிடத்தில்) சாய்த்தார்கள். பிறகு, “நீங்கள் எமது தொழுகையைக் காக்க வேண்டும் (நான் உறங்கிவிட்டால் என்னை உறக்கத்திலி ருந்து எழுப்ப வேண்டும்)” என்றார்கள். (ஆனால், நாங்கள் அனைவரும் உறங்கிவிட்டோம்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். அப்போது சூரிய ஒளி அவர்களது முதுகில் பட்டது. உடனே நாங்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) “(இங்கிருந்து உடனே உங்கள் வாகனங்களில்) ஏறிப் புறப்படுங்கள்” என்றார்கள். உடனே நாங்கள் வாகனங்களில் ஏறிப் புறப்பட்டோம். சூரியன் நன்கு உதயமான பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு தண்ணீர் குவளையைக் கொண்டுவரச் சொன்னார்கள். அந்தக் குவளை என்னிடத்தில்தான் இருந்தது. அதில் சிறிதளவு தண்ணீரும் இருந்தது. பிறகு அதிலிருந்த தண்ணீரால் சிக்கனமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதில் சிறிதளவு தண்ணீர் எஞ்சியது. என்னிடம், “நமக்காக உமது தண்ணீர் குவளையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். விரைவில் இதில் ஒரு (அதிசய) சம்பவம் நிகழவிருக்கிறது” என்றார்கள்.

அடுத்து பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதார்கள். பின்னர் அதிகாலைத் தொழுகையைத் தொழுதார்கள். (இதையெல்லாம்) ஒவ்வொரு நாளும் செய்வதைப் போன்றே அவர்கள் செய்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நாங்களும் வாகனத்தில் ஏறி அவர்களுடன் சென்றோம். அப்போது எங்களில் சிலர் சிலரிடம் “நமது தொழுகை விஷயத்தில் நாம் செய்துவிட்ட குறைபாட்டிற்குப் பரிகாரம் என்ன?” என்று இரகசியமாகப் பேசிக்கொண்டோம். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அறிவீர்: என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதல்லவா?” என்று கேட்டுவிட்டு, “அறிவீர்: உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டு விடுவதில்லை; குறைபாடெல்லாம் ஒரு தொழுகையை மறு தொழுகை நேரம் வரும்வரை தொழாமல் இருப்பதுதான். இவ்வாறு செய்துவிட்டவர் அது பற்றிய உணர்வு வந்தவுடன் தொழுதுகொள்ளட்டும். மறு நாளாகிவிட்டால் அந்த நாளின் தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளட்டும்”என்றார்கள்.

பிறகு “மக்கள் என்ன செய்துகொண்டி ருப்பார்கள் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?” என்று (தம்முடன் இருந்த தோழர்களிடம்) கேட்டுவிட்டு, “மக்கள் தங்களுடைய நபியைக் காணாமல் தேடிக்கொண்டிருப்பார்கள்; அபூபக்ரும் உமரும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களைப் பின்னால் விட்டுவிட்டுச் சென்றுவிடமாட்டார்கள்’ என்று கூறுவார்கள். ஆனால், மற்றவர்களோ, ‘(இல்லை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு முன்பே சென்றுவிட்டார்கள்’ என்று கூறுவார்கள். மக்கள் அபூபக்ர் மற்றும் உமர் ஆகிய இருவருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் அவர்கள் நேர்வழியடைவார்கள்” என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் மக்களிடம் நண்பகல் நேரத்தில் சென்றடைந்தோம். அப்போது (வெப்பத்தால்) பொருட்களெல்லாம் சூடேறி விட்டிருந்தன. மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அழிந்தோம்; எங்களுக்கு (கடுமையான) தாகம் ஏற்பட்டுள்ளது”என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களுக்கு எந்த அழிவும் இல்லை” என் றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “எனது சிறிய பாத்திரத்தை எடுத்து வாருங்கள்!” என்று கூறி அந்த நீர்குவளையைக் கேட்டார்கள். பின்னர் (அதிலிருந்து சிறிது தண்ணீரை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊற்ற,அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். மக்கள் அந்தக் குவளையில் தண்ணீரைக் கண்டதுதான் தாமதம், (அதைப் பெறுவதற்காக முண்டியடித்து) அதன் மீது விழுந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இங்கிதம் பேணுங்கள். உங்கள் அனைவரின் தாகமும் தீரும்” என்றார்கள். அவவாறே மக்கள் நடந்துகொண்டனர்.

இவ்விதம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்ற அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். இறுதியில் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் மிஞ்சவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றியபடி என்னிடம் “நீங்கள் பருகுங்கள்!” என்றார்கள். நான்”தாங்கள் பருகாதவரை நான் பருகமாட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களுக்குத் தண்ணீர் புகட்டுபவரே அவர்களில் இறுதியாகப் பருக வேண்டும்” என்றார்கள். ஆகவே, நான் பருகினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பருகினார்கள். பிறகு மக்கள் தாகம் தணிந்து மகிழ்ச்சியடைந்தவர்களாக அந்த நீரை நோக்கி வந்தனர்.

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் இந்த ஹதீஸை ஜுமுஆப் பள்ளிவாசலில் அறிவித்துக்கொண்டிருந்தேன். அப்போது (அங்கிருந்த) இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், “இளைஞரே! நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். ஏனெனில்,அன்றிரவு பயணம் செய்த குழுவினரில் நானும் ஒருவனாவேன்” என்றார்கள். நான், “அப்படியானால், நீங்கள்தாம் இந்த ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்” என்றேன். அதற்கு இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் “நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார்கள். நான், “அன்சாரிகளில் (மதீனாவாசிகளில்) ஒருவன்” என்றேன். அதற்கு அவர்கள், “அப்படியானால் நீங்களே அறிவியுங்கள். (அன்சாரிகளாகிய) நீங்கள்தாம் உங்களது ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்” என்றார்கள். ஆகவே, நான் மக்களிடம் (இந்த ஹதீஸை) அறிவித்தேன். அப்போது இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், “அன்றிரவு (பயணத்தில்) நானும் கலந்துகொண்டேன். ஆனால், நீங்கள் இதை மனனமிட்டதைப் போன்று வேறெவரும் மனனமிட்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை” என்றார்கள்.

1214 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் நானும் அவர்களுடன் இருந்தேன். அன்று நாங்கள் இரவு முழுவதும் பயணம் செய்தோம். அதிகாலை நேரம் நெருங்கியபோது நாங்கள் (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தோம். அப்போது எங்களையும் அறியாமல் கண்ணயர்ந்து, சூரியன் உதயமாகும்வரை உறங்கிவிட்டோம். எங்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள்தாம் முதலில் விழித்தார்கள். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகவே கண் விழிக்காதவரை அவர்களை நாங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பமாட்டோம். பிறகு உமர் (ரலி) அவர்கள் எழுந்து நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று உரத்த குரலில் தக்பீர் கூறலானார்கள். (உமர் (ரலி) அவர்களின் தக்பீரைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விழித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தியபோது சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள் உடனே “இங்கிருந்து புறப்படுங்கள்” என்று கூறினார்கள். பிறகு எங்களுடன் பயணம் புறப்பட்டார்கள். சூரியன் நன்கு பிரகாசித்த பிறகு ஓரிடத்தில் இறங்கி எங்களுக்கு வைகறைத் தொழுகை (ஃபஜ்ர்) தொழுவித்தார்கள்.

அப்போது ஒருவர் எங்களுடன் தொழாமல் மக்களைவிட்டு விலகியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் அந்த மனிதரிடம் “இன்னாரே! நீங்கள் எங்களுடன் தொழாமலிருக்கக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள், அதற்கு அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது (குளிப்பதற்கு தண்ணீர் இல்லை)” என்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மண்ணில் “தயம்மும்’ செய்துகொள்ளுமாறு) உத்தரவிட, அவ்வாறே அவர் மண்ணில் “தயம்மும்’செய்துகொண்டு தொழுதார். பிறகு என்னைத் தம் முன்னிருந்த ஒரு பயணக் குழுவினருடன் சேர்ந்து தண்ணீர் தேடிவருமாறு வேகப்படுத்தினார்கள். அப்போது எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டிருந்தது. அவ்வாறே நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெண் தண்ணீர் நிரம்பிய இரு தோல் பைகளுக்கிடையே தன் கால்களைத் தொங்க விட்டபடி (ஒட்டகத்தில் வந்துகொண்டு) இருந்தாள்.

நாங்கள் அப்பெண்ணிடம், “தண்ணீர் எங்கே (கிடைக்கும்)?” என்று கேட்டோம், அதற்கு அப் பெண், “அது வெகு தொலைவில் உள்ளது. (இங்கு எங்கும்) உங்களுக்குத் தண்ணீர் கிடையாது” என்றாள். நாங்கள் “உன் குடும்பத்தா(ர் தங்கியி) ருக்கும் (இந்த இடத்திற்கும்) தண்ணீரு(ள்ள இடத்து)க்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது?” என்று கேட்டோம். அதற்கு அப்பெண், “ஒரு பகல் ஓர் இரவு பயண தூரம்” என்று பதிலளித்தாள்.

நாங்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட!” என்றோம். அதற்கு அவள், “அல்லாஹ்வின் தூதரா (யார் அவர்)?” என்று கேட்டாள். நாங்கள் என்ன சொல்லியும் அந்தப் பெண்ணை எங்களால் (தண்ணீர் தர) இசைய வைக்க முடியவில்லை. இறுதியில் அவளை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துக்கொண்டு வந்தோம். அப்பெண்ணை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் கொண்டு நிறுத்திய போது அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். அவள் எங்களிடம் சொன்னதைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் சொன்னாள். மேலும், அவள் (தண்ணீர் சுமக்கும் தனது ஒட்டகத்திலிருந்தபடி) தான் அநாதைக் குழந்தைகளின் தாய் என்று கூறினாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது ஒட்டகத்தை (மண்டியிடச் செய்யுமாறு) கூற, அவ்வாறே அது மண்டியிட்டுப் படுக்கவைக்கப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாய் கொப்புளித்து அந்தத் தண்ணீர் பைகளின் மேவாயினூடே உமிழ்ந்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தைக் கிளப்பிவிட (அது எங்கள் அருகில் வந்தது.) நாங்கள் தண்ணீர் அருந்தினோம். அப்போது நாங்கள் நாற்பது பேரும் தாகத்துடன் இருந்தோம். தாகம் தீர நீரருந்தினோம். மேலும், எங்களிடமிருந்த தோல் பாத்திரங்கள், கோப்பைகள் ஆகியவற்றில் தண்ணீரை நிரப்பிக்கொண்டோம். (குளியல் கடமையாகிருந்த) எங்கள் தோழரைக் குளிக்கவைத்தோம். ஆனால், நாங்கள் எங்கள் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் புகட்ட வில்லை. (ஆயினும்) அவ்விரு தண்ணீர் பைகளும் ஊதி வெடித்துவிடுமளவுக்கு நீர் நிரம்பியிருந்தது.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களிடமுள்ள (உணவுப் பண்டத்)தைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் அந்தப் பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் திரட்டினோம். பின்னர் அவற்றை ஒரு பையில் வைத்துக் கட்டி, அவளிடம் “நீ சென்று உன் குடும்பத்தாருக்கு இதை ஊட்டுவாயாக! உனது தண்ணீரில் சிறிதும் நாங்கள் குறைத்துவிடவில்லை என்பதை அறிந்துகொள்வாயாக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்பெண் தன் குடும்பத்தாரிடம் சென்று, “நான் மனிதர்களில் மிக வசீகரமான ஒருவரைச் சந்தித்தேன். அல்லது அவர் கூறியதைப் போன்று அவர் ஓர் இறைத்தூதர்தாம். அவரிடம் இப்படி இப்படி (அற்புதம்) நிகழ்ந்தது” என்று கூறினாள். இதையொட்டி அந்தப் பெண்ணால் அவளைச் சுற்றிலும் வாழ்ந்த வீட்டார் களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினான். அவளும் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.138

– இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு (நாள்) இரவில் பயணித்தோம். இரவின் இறுதிப் பகுதியில் அதிகாலைக்கு முன்பாக ஓரிடத்தில் ஒரு தூக்கம் தூங்கினோம். ஒரு பயணிக்கு அதைவிட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து) எங்களைச் சூரிய வெப்பம் தான் விழிக்கச் செய்தது.

தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே சிறிது கூடுதல் குறைவு வார்த்தை களுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த ஹதீஸில் பின்வருமாறும் இடம்பெற்றுள்ளது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் விழித்து மக்களின் நிலையைக் கண்டபோது உரத்த குரலில் தக்பீர் சொன்னார்கள் -உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலுடையவராயும் நெஞ்சுரம் வாய்ந்தவராயும் இருந்தார்கள்- அவ்வாறு உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் தக்பீர் சொல்வதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண் விழித்தார்கள். விழித் தெழுந்தவுடன் அவர்களிடம் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட(உறக்கத்)தைப் பற்றி முறையிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பிரச்சினை இல்லை; இங்கிருந்து புறப்படுங்கள்” என்றார்கள்.

1215 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தால் இரவின் இறுதிப் பகுதியில் ஓய்வெடுப்பார்கள். அப்போது தமது வலப் பக்கத்தில் சாய்ந்து படுப்பார்கள். அதிகாலைக்குச் சற்று முன்பாக ஓய்வெடுத்தால் தமது காலை நட்டு வைத்து தம் உள்ளங்கைகள்மீது தலையை வை(த்து மல்லாந்து படுத்திரு)ப்பார்கள்.

1216 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதை அவர் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கத்தாதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக” எனும் (20:14ஆவது) வசனமும் இடம்பெற்றுள்ளது.139

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை” எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

1217 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்து விட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1218 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழாமல் உறங்கிவிட்டால், அல்லது கவனமில்லாமல் இருந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில், “என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக” என (20:14ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறுகின்றான்.140

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.