40 – சொல்லொழுக்கம்
அத்தியாயம்: 40 – சொல்லொழுக்கம்.
பாடம் : 1
காலத்தை ஏசுவதற்கு வந்துள்ள தடை.2
4519 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவும் பகலும் உள்ளன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
4520 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்; காலத்தை ஏசு கிறான். நானே காலம் (படைத்தவன்). நானே இரவு பகலை மாறி மாறி வரச்செய்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
4521 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என் னைப் புண்படுத்துகிறான்; “காலத்தின் கை சேதமே!’ என்று அவன் கூறுகிறான். ஆகவே, உங்களில் ஒருவர் “காலத்தின் கைசேதமே!’ என்று கூற வேண்டாம். ஏனெனில், நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி)விடுவேன். (பூமியைச் சுழல விடாமல் நிறுத்திவிடுவேன்.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4522 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் “காலத்தின் கைசேதமே!’ என்று கூற வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4523 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 2
திராட்சையை (“கண்ணியமானது’ எனும் பொருள் கொண்ட) “கர்ம்’ என்று பெயரிட்டழைப்பது விரும்பத் தக்கதன்று.5
4524 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் காலத்தை ஏச வேண் டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்). உங்களில் யாரும் திராட்சையை (“கண்ணியம்’ எனும் பொருள் கொண்ட) “அல்கர்ம்’ என்று பெயரிட்டு அழைக்க வேண்டாம். உண்மையில் கண்ணி யம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4525 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திராட்சையை “கர்ம்’ (கண்ணியமானது) என்று கூறாதீர்கள். ஏனெனில், கண்ணியத்திற்குரியது (எனும் பெயருக்குத் தகுதியானது) இறைநம்பிக்கையாளரின் இதயமே ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
4526 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திராட்சையை (“கண்ணியம்’ எனும் பொருள் கொண்ட) “அல்கர்ம்’ என்று பெயரிட்டழைக்காதீர்கள். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4527 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (திராட்சையை) “அல்கர்ம்’ (கண்ணியம்) என்று கூற வேண் டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெய ருக்குத் தகுதியானது) இறைநம்பிக்கையாளரின் இதயமே ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4528 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் திராட்சையை “அல்கர்ம்’ (கண்ணியமானது) என்று கூறாதீர்கள். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.
4529 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(திராட்சைக்கு) “அல்கர்ம்’ என்று கூறாதீர்கள். மாறாக “அல்ஹப்லா’ என்று சொல்லுங்கள்.
இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4530 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(திராட்சைக்கு) “அல்கர்ம்’ (கண்ணியமானது) என்று (பெயர்) கூறாதீர்கள். மாறாக, “அல்இனப்’ என்றோ “அல்ஹப்லா’ என்றோ கூறுங்கள்.
இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 3
(அடிமைக்கும் அடிமைப் பெண்ணுக் கும் முறையே) “அப்த்’, “அமத்’ ஆகிய சொற்களையும் (அடிமையின் உரிமை யாளருக்கு) “மவ்லா’, “சய்யித்’ ஆகிய சொற்களையும் ஆள்வது தொடர் பான சட்டம்.7
4531 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் (தம் அடிமையை அடிமையே, அடிமைப் பெண்ணே எனும் பொருள் கொண்ட) அப்தீ, அமத்தீ எனும் சொல்லால் அழைக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அடிமை (அப்து)களே; உங்களில் ஒவ்வொரு பெண்ணும் அல்லாஹ்வின் அடிமை (அமத்)களே. மாறாக, ஃகுலாமீ, ஜாரியத்தீ, ஃபத்தாய, ஃபத்தாத்தீ ஆகிய சொற்களால் அழைக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
4532 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் (தம் அடிமையை) “அப்தீ’ என்று கூற வேண்டாம். உங்களில் ஒவ் வொருவரும் அல்லாஹ்வின் அடிமை (அப்து) களே! மாறாக, “ஃபத்தாய’ (என் பணியாளரே) என்று அழைக்கட்டும். அடிமை தன் (உரிமை யாளரை) “ரப்பீ’ (என் அதிபதியே!) என்று சொல்ல வேண்டாம். மாறாக, “சய்யிதீ’ (என் தலைவரே!) என்று அழைக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூமுஆவியா (ரஹ்), அஃமஷ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “அடிமை தன் உரிமையாளரை “மவ்லாய’ (எசமானே!) என்று அழைக்க வேண்டாம்” என்று காணப்படுகிறது.8
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “ஏனெனில், அல்லாஹ்வே உங்கள் “மவ்லா’ (எசமான்) ஆவான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
4533 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் (ஓர் அடிமையிடம்) “உன் “ரப்பு’க்கு (அதிபதிக்கு) பருகத் தண்ணீர் கொடு. உன் “ரப்பு’க்கு உணவு கொடு. உன் “ரப்பு’க்கு அங்கத் தூய்மை (உளூ) செய்ய உதவு” என்று கூற வேண்டாம். உங்களில் யாரும் (தம் உரிமை யாளரை) “ரப்பீ’ என்று கூற வேண்டாம். மாறாக, “சய்யிதீ’, “மவ்லாய’ என்று கூறட்டும். உங்களில் யாரும் (என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூற) அப்தீ, அமத்தீ என்று கூற வேண் டாம். மாறாக, “ஃபத்தாய’ (என் பணியாள்) “ஃபத்தாத்தீ’ (என் பணிப்பெண்) என்று கூறட் டும்.9
பாடம் : 4
(மனக் குழப்பத்திலுள்ள) ஒரு மனிதர் (“என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) “கபுஸத் நஃப்சீ’ எனும் சொல்லை ஆள்வது வெறுக்கத் தக்கதாகும்.
4534 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் (“என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) “கபுஸத் நஃப்சீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, (“என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள் கொண்ட) “லகிசத் நஃப்சீ’ எனும் சொல்லையே கூறட்டும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “மாறாக’ எனும் சொல் இடம்பெறவில்லை.
– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
4535 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் (“என் மனம் அசுத்தமாகிவிட்டது’ எனும் பொருள் பொதிந்த) “கபுஸத் நஃப்சீ’ எனும் சொல்லைக் கூற வேண்டாம். (“என் மனம் கனத்துவிட்டது’ எனும் பொருள் கொண்ட) “லகிசத் நஃப்சீ’ எனும் சொல்லையே கூறட்டும்.
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 5
கஸ்தூரியை உபயோகப்படுத்துவதும், அது நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்ததாகும் என்பதும், நறுமணச் செடிகளையும் (மலர்களையும்) வாசனைத் திரவியங்களையும் (யாரேனும் அளித்தால் அதை) ஏற்க மறுப்பது வெறுக்கத் தக்கதாகும் என்பதும்.11
4536 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் குட்டையான பெண் ஒருத்தி இருந்தாள். அவள் உயரமான இரு பெண்களுடன் நடந்து செல்லக்கூடியவளாய் இருந்தாள். (அவளைப் பார்த்து மக்கள் பரிகசிப் பார்கள்.) ஆகவே, அவள் மரக்கட்டையாலான கால்களை(ப் பொருத்தி உயரமான அவ்விரு பெண்களுக்குச் சமமாக தன்னை) ஆக்கிக் கொண்டாள்.
மேலும், தங்கத்தாலான மோதிரம் ஒன்றை யும் அவள் அணிந்துகொண்டாள். அது (ஒரே யொரு உட்குழி கொண்டு) மூடப்பட்டதாக இருந்தது. (அந்தக் குழியைத் தவிர வேறு துவாரங்கள் எதுவும் அதில் இருக்கவில்லை.) பிறகு அவள் அக்குழிக்குள் கஸ்தூரியை இட்டு நிரப்பினாள். -கஸ்தூரி நறுமணப் பொருட் களில் மிகவும் சிறந்ததாகும்.- (இவ்வாறு செய்து கொண்ட) பின்னர் அவள் அவ்விரு பெண் களுக்கிடையே நடந்து சென்றாள். ஆகவே, அவளை மக்கள் (அடையாளம்) அறிந்து கொள்ளவில்லை. அப்போது அவள் (மோதிரத் திலிருந்து கஸ்தூரியை கமழச் செய்வதற்காக) தமது கையை இவ்வாறு அசைத்து சைகை செய்தாள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது, தமது கையை உதறி சைகை செய்து காட்டினார்கள்.
4537 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கூறினார்கள். அப்போது “அவள் தனது மோதிரத்தி(ன் நடுக்குழியி)ல் கஸ்தூரியை இட்டு நிரப்பியிருந்தாள். கஸ்தூரி, நறுமணப் பொருட்களிலேயே மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
4538 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவரிடம் வாசனைத் திரவியம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டால், அதை அவர் மறுக்க வேண்டாம். ஏனெனில், அது எடுத்துச் செல்வதற்கு எளிதானதும் சிறந்த நறுமணமும் ஆகும்.12
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
4539 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணப் புகையிட்டால், அகில் கட்டையால் நறுமணப் புகையிடுவார்கள். அதில் வேறெந்த நறுமணப் பொருளையும் சேர்க்கமாட்டார்கள். (சில வேளைகளில்) அகிலுடன் கற்பூரத்தையும் போடுவார்கள். பிறகு “இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நறுமணப் புகையிடுவார்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
27.05.2010. 11:23