38 – நற்பண்புகள்

அத்தியாயம்: 38 – நற்பண்புகள்.

பாடம் : 1

“அபுல்காசிம்’ எனக் குறிப்புப் பெயர் சூட்டிக்கொள்வதற்கு விதிக்கப்பட்டி ருந்த தடையும், விரும்பத் தகுந்த பெயர்கள் பற்றிய விவரமும்.2

4319 அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(மதீனாவிலுள்ள) “அல்பகீஉ’ பொது மையவாடியில் ஒரு மனிதர் மற்றொருவரை “அபுல்காசிம்!’ என்று அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தார் கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! உங்களை எண்ணி நான் அழைக்கவில்லை. இன்ன மனிதரையே நான் அழைத்தேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள். ஆனால், (“அபுல்காசிம்’ எனும்) என் குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.3

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

4320 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகிய வையாகும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்பாத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) மற்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரஹ்) ஆகிய சகோதரர்களிடம் (ஹிஜ்ரீ) 144ஆம் ஆண்டில் செவியுற்றார்.

4321 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்க(ள் அன்சாரிக)ளில் ஒருவருக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அதற்கு அவர் “முஹம்மத்’ எனப் பெயர் சூட்டினார். அவருடைய குடும்பத்தார், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம்” என்று கூறினர்.

ஆகவே, அந்த மனிதர் தம் மகனை முதுகில் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ் வின் தூதரே! எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அவனுக்கு நான் “முஹம்மத்’ எனப் பெயரிட்டேன். என்னுடைய சமுதாயத்தார் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர் வைக்க உம்மை நாங்கள் விடமாட்டோம்’ என்று கூறினர்” என்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் (இயற்)பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். (ஆனால் “அபுல்காசிம் எனும்) எனது குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே பங்கீடு செய்பவன் (காசிம்) ஆவேன். உங்களிடையே நான் பங்கீடு செய்கிறேன்” என்று கூறினார்கள்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

4322 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்க(ள் அன்சாரிக)ளில் ஒரு மனித ருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அவர் “முஹம்மத்’ எனப் பெயர் சூட்டினார். அப்போது நாங்கள் “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதற்கு அனுமதி பெறாத வரை உம்மை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குறிப்புப் பெயரால் (“அபூமுஹம்மத்’ என) அழைக்க மாட்டோம்” என்று சொன்னோம்.

அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரைச் சூட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி பெறாத வரை என் சமுதாயத்தார் அக்குறிப்புப் பெயரால் என்னை அழைக்கமாட்டோம் என மறுத்துவிட்டனர்” என்று சொன்னார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.5

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வும் வந்துள்ளது.

அதில் “உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” எனும் குறிப்பு இல்லை.

4323 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்கின்ற “அபுல் காசிம்’ ஆவேன்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்’ என்ப தைக் குறிக்க “வலா தகன்னவ்’ என்பதற்குப் பகரமாக) “வலா தக்தனூ’ எனும் சொற் றொடர் இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே ஆக்கப்பட்டுள்ளேன்” என்று இடம்பெற்றுள்ளது.

4324 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு “முஹம்மத்’ என்று பெயர் சூட்ட அவர் விரும்பினார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகள் செய்தது நன்றே. என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4325 மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதிமூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) மற்றும் சுலைமான் பின் மிஹ்ரான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் (சற்று) கூடுதலான தகவல்களும் இடம்பெற் றுள்ளன. ஹுஸைன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உங்களிடையே பங்கிடுபவ னாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றும், சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ஏனெனில், உங்களிடையே நான் பங்கீடு செய்பவனாகவே உள்ளேன்” என்றும் இடம்பெற்றுள்ளது.

– ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்சாரிகளான) எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அவர் “காசிம்’ எனப் பெயர் சூட்டினார். நாங்கள், “உம்மை அபுல்காசிம் (காசிமின் தந்தை) எனும் குறிப்புப் பெயரால் அழைக் கவுமாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உம்மை மகிழ்விக்கவுமாட்டோம்” என்று கூறினோம்.

ஆகவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றித் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப் பெயரிட்டுக் கொள்வீராக” என்றார்கள்.6

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும், அவற்றில் “உம்மை நாங்கள் மகிழ்விக்கவுமாட்டோம்’ எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.

4326 அபுல்காசிம் (முஹம்மத் – ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளா தீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4327 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் உத்தரவுக்கிணங்க) “நஜ்ரான்’ எனும் ஊருக்கு (யமன்) சென்றபோது அ(ந்நாட்டுக் கிறித்த)வர்கள், “நீங்கள் (குர்ஆனில் அன்னை மர்யம் (அலை) அவர்களைப் பற்றி) “ஹாரூனின் சகோதரியே!’ என்று ஓதுகிறீர்கள். (ஆனால், ஹாரூன் மூசாவின் காலத்தில் வாழ்ந்தவர்.) மூசாவோ ஈசா (அலை) அவர்களுக்கு இவ்வளவு இவ்வளவு ஆண்டுகளுக்கு முந்தையவர் ஆயிற்றே! (அப்படி யிருக்க, மர்யம் ஹாரூனின் சகோதரியாக எப்படி இருக்க முடியும்?)” என்று கேட்டார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்கள் (இஸ்ரவேலர்கள்) தங்களுக்கு முந்தைய நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர் (அந்த வகையில் ஹாரூன் என்ற பெயரில் மர்யம் அவர்களுக்கு ஒரு சகோதரர் இருந்தார்)” என்றார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 2

அருவருப்பான பெயர்களையும், “நாஃபிஉ’ (பயனளிப்பவர்) மற்றும் அதைப் போன்ற (பொருள் உள்ள) பெயர்களையும் சூட்டிக்கொள்வது வெறுக்கத் தக்கதாகும்.7

4328 சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற் றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.8

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

4329 சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் அடிமைக்கு ரபாஹ் (இலாபம்) என்றோ, யசார் (சுலபம்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ, நாஃபிஉ (பயனளிப்பவன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம்” என்று சொன்னார்கள்.

4330 சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (துதிச்) சொற்கள் நான்கு ஆகும். 1. சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) 2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) 3. லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) 4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்).

இவற்றில் எதை நீர் முதலில் கூறினாலும் உம்மீது குற்றமில்லை” என்று கூறிவிட்டு, “உம்முடைய அடிமைக்கு யசார் (சுலபம்) என்றோ, ரபாஹ் (இலாபம்) என்றோ, நஜீஹ் (வெற்றி யாளன்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். ஏனெனில், (அந்தப் பெயர் சொல்லி) “அவன் அங்கு இருக்கி றானா’ என்று நீர் கேட்கும்போது, அவன் அங்கு இல்லாவிட்டால் “இல்லை’ என்று பதில் வரும். (அது திருப்தியளிப் பதற்குப் பகரமாக நற்குறியற்ற பதிலாக உங்கள் மனதுக்குப் படலாம்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் சமுரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இவை நான்கு பெயர்கள் மட்டுமே ஆகும். இவற்றைவிடக் கூடுதலாக வேறெதையும் என்னிடமிருந்து நீங்கள் அறிவிக்க வேண்டாம்.

– மேற்கண்ட ஹதீஸ் சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அடிமைகளுக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாகவே இடம்பெற்றுள் ளது. நான்கு (துதிச்) சொற்கள் பற்றிய குறிப்பு இல்லை.

4331 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யஅலா (உயர்வு), பரக்கத் (வளம்), அஃப்லஹ் (வெற்றி), யசார் (சுலபம்), நாஃபிஉ (பயனளிப்பவன்) போன்ற பெயர்களைச் சூட்ட வேண்டாம் எனத் தடை விதிக்க விரும் பினார்கள். பின்னர் அதைப் பற்றி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்துவிட்டார்கள்; அதைப் பற்றி எதுவும் கூறவில்லை.

பின்னர் அவற்றுக்குத் தடை விதிக்காத நிலையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். பிறகு (கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் அவற்றுக்குத் தடை விதிக்க விரும்பினார்கள். பின்னர் அவர்களும் (அவற்றுக்குத் தடை விதிக்காமல்) விட்டுவிட்டார்கள்.9

பாடம் : 3

அருவருப்பான பெயரை அழகான பெயராகவும் “பர்ரா’ எனும் பெயரை ஸைனப், ஜுவைரியா போன்ற பெயர்களாகவும் மாற்றியமைப்பது விரும்பத் தக்கதாகும்.

4332 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆஸியா’ (பாவி) எனும் பெயரை மாற்றி விட்டு, “நீ (பாவியல்ல), ஜமீலா (அழகி)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4333 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு “ஆஸியா’ (பொருள்: பாவி) எனப்படும் புதல்வியொருவர் இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜமீலா (பொருள்: அழகி) என (மாற்று)ப் பெயர் சூட்டினார்கள்.

4334 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான) ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜுவைரியா’ (இளையவள்) எனப் பெயர் மாற்றினார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பர்ரா’விடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டு விட்டார்கள்’ என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4335 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) “பர்ரா’ (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது “அவர் தம்மைத் தாமே பரிசுத் தப்படுத்திக்கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் (அழகிய தோற்றமுடைய நறுமணச் செடி) என்று பெயர் சூட்டினார்கள்.10

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4336 ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முதலில்) எனக்கு “பர்ரா’ (நல்லவள்) என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு ஸைனப் (அழகான தோற்றமுள்ள நறுமணச் செடி) எனப் பெயர் சூட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் வந்தார். அவருக்கும் பர்ரா (நல்லவர்) என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அவருக்கும் “ஸைனப்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4337 முஹம்மத் பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் புதல்விக்கு “பர்ரா’ (நல்லவள்) எனப் பெயர் சூட்டினேன். அப்போது ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தப் பெயரைச் சூட்ட வேண்டாமெனத் தடை செய்தார்கள். (முதலில்) எனக்கு “பர்ரா’ என்ற பெயரே சூட்டப் பெற்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களை நீங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று சொன்னார்கள். மக்கள், “அவருக்கு நாங்கள் என்ன பெயர் சூட்ட வேண்டும்?” என்று கேட்டார்கள். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவருக்கு “ஸைனப்’ எனப் பெயர் சூட்டுங்கள்” என்றார்கள்.

பாடம் : 4

“மன்னாதி மன்னன்’ (“மலிக்குல் அம்லாக்’ அல்லது “மலிக்குல் முலூக்’) எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும்.

4338 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் “மன்னாதி மன்னன்’ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) வேறு அரசனில்லை” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அம்ர் அல்அஷ்அஸீ (ரஹ்) அவர்கள், “(“மலிக்குல் அம்லாக்’ என்பதற்கு) “ஷாஹான் ஷாஹ்’ (மன்னாதி மன்னன்) என்று (பாரசீக மொழியில்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் (பொருள்) கூறினார்கள்” என்றார்கள். மற்றோர் அறிவிப் பாளரான அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மொழியியல் வல்லுநர்) அபூஅம்ர் இஸ்ஹாக் பின் மிரார் (ரஹ்) அவர்களிடம் (“மிகவும் கேவலமான’ என்பதைக் குறிக்க இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அக்னஉ’ எனும் சொல் குறித்துக் கேட்டேன். அதற்கு அபூஅம்ர் (ரஹ்) அவர்கள், இதற்கு “அவ்ளஉ’ (மிகவும் கீழ்த்தரமானது) என்று பெருள் என விடையளித்தார்கள்.11

4339 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ் களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் அல்லாஹ்வின் கோபத் துக்குரிய, அவனிடம் மிகவும் கேவலமான மனிதர் யாரெனில், (உலகில்) “மன்னாதி மன்னன்’ எனப் பெயரிடப்பட்ட மனிதர்தாம். அல்லாஹ்வைத் தவிர (சர்வ வல்லமை படைத்த) மன்னன் வேறு யாருமில்லை.

பாடம் : 5

குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடு வதும் அதற்காக நல்ல மனிதர் ஒருவரி டம் குழந்தைகளைக் கொண்டுசெல் வதும் விரும்பத் தக்கதாகும். அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவது செல்லும். அப்துல்லாஹ் எனும் பெயரையும் இப்ராஹீம் உள்ளிட்ட நபிமார்களின் பெயர்களையும் சூட்டுவது விரும்பத் தக்கதாகும்.

4340 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாய்வழிச் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீதல்ஹா அல்அன்சாரீ பிறந்தபோது அவரை(த் தூக்கிக்கொண்டு) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் நீளங்கி அணிந்து, தமது ஒட்டகத்திற்கு (சிகிச்சைக்காகத்) தார் பூசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் “உன்னிடம் பேரீச்சம் பழம் இருக்கிறதா?” என்று கேட்டார்கள்.

நான் “ஆம்’ என்று கூறி, அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் சிலவற்றை எடுத்துக் கொடுத் தேன். அவற்றை வாங்கி அவர்கள் தமது வாயிலிட்டு மென்று, பிறகு குழந்தையின் வாயைத் திறந்து, அதில் சிறிதளவை உமிழ்ந்தார்கள்.

குழந்தை அதை நாவைச் சுழற்றி சுவைக்கலாயிற்று. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்சாரிகளுக்கு மிகவும் விருப்பமானது பேரீச்சம் பழங்கள் ஆகும்” என்று கூறி விட்டு, குழந்தைக்கு “அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

4341 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர் களின் இரண்டாவது கணவரான) அபூ தல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் (வெளியூருக்குப்) புறப்பட்டுச் சென்றிருந்தபோது, அக்குழந்தை இறந்து விட்டது. அபூதல்ஹா (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது “என் மகன் என்ன ஆனான்?” என்று கேட்டார்கள்.

(அவருடைய துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (துக்கத்தை வெளிக் காட்டாமல்) “அவன் முன்பைவிட நிம்மதி யாக இருக்கிறான்” என்று பதிலளித்துவிட்டு, கணவருக்கு முன்னால் இரவு உணவை வைத்தார்.

அபூதல்ஹா (ரலி) அவர்கள் இரவு உணவை அருந்தினார்கள். பிறகு (அன்றிரவு) மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். உறவு கொண்ட பின், உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (தம் கணவரிடம்), “குழந்தையை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்” என்று கூறினார்கள்.

(அப்போதுதான் அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குக் குழந்தை இறந்த விவரமே தெரிந்தது.) விடிந்ததும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்றிரவு தாம்பத்திய உறவில் ஈடுபட்டீர்களா?” என்று கேட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், “ஆம்’ என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அவர்கள் இருவருக்கும் வளம் (பரக்கத்) வழங்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.

பின்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஆண் மகவொன்றைப் பெற்றெடுத்தார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், “குழந்தையை எடுத்துக்கொண்டு (நேராக) நபி (ஸல்) அவர்களிடம் செல்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன்.

(அப்போது) என்னிடம் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு, “இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?” என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள், “ஆம், பேரீச்சம் பழங்கள் உள்ளன” என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவற்றை வாங்கி (தமது வாயால்) மென்று, பிறகு தமது வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவலானார்கள். குழந்தைக்கு “அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.12

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4342 அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந் தது. அக்குழந்தையை நான் நபி (ஸல்) அவர் களிடம் கொண்டுசென்றேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு “இப்ராஹீம்’ எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள்.13

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4343 உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) மற்றும் ஃபாத்திமா பின்த் அல்முன்திர் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆகியோர் கூறிய தாவது:

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் புலம்பெயர்ந்து (மதீனாவுக்குச்) சென்றபோது, அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர் களைக் கருவுற்றிருந்தார்கள். அவர்கள் “குபா’ வந்தடைந்தபோது, அங்கு அப்துல்லாஹ்வைப் பெற்றெடுத்தார்கள். குழந்தை பிறந்தவுடன் பேரீச்சம் பழத்தை மென்று, அதைக் குழந்தையின் வாயில் தடவுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் புறப்பட்டுச் சென்றார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து குழந்தையை வாங்கி, தமது மடியில் வைத்தார்கள். பிறகு பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் (இது தொடர்பாகப் பின்வருமாறு) கூறினார்கள்: பேரீச்சம் பழம் கிடைக்காமல் நாங்கள் சிறிது நேரம் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். பேரீச்சம் பழம் கிடைத்ததும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாயிலிட்டு மென்றார்கள். பிறகு குழந்தையின் வாயில் அதை உமிழ்ந்தார்கள். குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற முதல் பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ்நீராகத்தான் இருந்தது.

அஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தையைத் தடவிக்கொடுத்து, குழந்தைக் காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு அதற்கு “அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.

பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கு ஏழு அல்லது எட்டு வயதானபோது, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் (பிரார்த்தனை வேண்டி) உறுதிப் பிரமாணம் செய்தவற்காக அவர்களிடம் வந்தார். அவ்வாறு செல்லு மாறு (அப்துல்லாஹ்வின் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களே அப்துல்லாஹ்வுக்கு உத்தர விட்டிருந்தார்கள்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் தம்மை நோக்கி வருவதைக் கண்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்தார்கள். பிறகு உறுதிமொழி வாங்கினார்கள்.14

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4344 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் நான் (புலம்பெயர்ந்து) மதீனா சென்றேன். (வழியில்) “குபா’வில் நான் தங்கினேன். “குபா’விலேயே அவரை நான் பெற்றெடுத்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (குழந்தையைக் கொண்டு)சென்று அவர்களது மடியில் வைத்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதை மென்று, குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் உணவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது.

பிறகு (மீண்டும்) அந்தப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் தடவலானார்கள். பின்னர் குழந்தைக்காகப் பிரார்த்தித்தார்கள். அதற்காக அருள்வளம் (பரக்கத்) வேண்டினார்கள். (என் குழந்தை) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்குப்) பிறந்த முதல் குழந்தை ஆவார்.

– மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “நான் (என் புதல்வர்) அப்துல் லாஹ் பின் அஸ்ஸுபைரைக் கருவுற் றிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மதீனாவுக்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றேன்…” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற் கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

4345 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம், (பிறந்த) குழந்தைகள் கொண்டுவரப்படுவ துண்டு. அப்போது அவற்றுக்காக அவர்கள் அருள்வளம் (பரக்கத்) வேண்டிப் பிராத்திப் பார்கள். பேரீச்சம் பழத்தை மென்று, அதைக் குழந்தையின் வாயில் தடவிவிடுவார்கள்.

4346 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நாங்கள் (அஸ்மாவின் புதல்வர்) அப்துல் லாஹ் பின் அஸ்ஸுபைரை, அவரது வாயில் பேரீச்சம் பழத்தை மென்று தடவுவ தற்காக நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அப்போது பேரீச்சம் பழம் ஒன்றைத் தேடினோம். அது கிடைப்பதற்குள் பெரும் பாடாகிவிட்டது.

4347 சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்களின் புதல்வர் “முன்திர்’ என்பார் பிறந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள்.

அப்போது (குழந்தையின் தந்தை) அபூஉசைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். எதேச்சையாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நிகழ்ந்த (சம்பவம்) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. எனவே, அபூஉசைத் (ரலி) அவர்கள் தம் மகனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எடுத்துவருமாறு கூற, அவ்வாறே குழந்தையை அவர்களது மடியிலிருந்து எடுத்து, (வீட்டுக்குக்) கொடுத்தனுப்பி விட்டனர்.

சிறிது நேரத்தில் முந்தைய நிலைக்குத் திரும்பிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்தக் குழந்தை எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஉசைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! குழந்தையை (வீட்டுக்கு)க் கொடுத்தனுப்பி விட்டோம்” என்று கூறினார்கள். அப்போது “அக்குழந்தையின் பெயரென்ன?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, “இன்னது, அல்லாஹ்வின் தூதரே!’ என அபூஉசைத் கூறினார்கள்.

(அப்பெயரை விரும்பாததால்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை, (இனி) அவர் பெயர் “முன்திர்’ (எச்சரித்து நல்வழிப் படுத்துபவர்) ஆகும்” என்று கூறினார்கள். “முன்திர்’ என்று அக்குழந்தைக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே அன்றைக்குப் பெயர் சூட்டினார்கள்.15

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

4348 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணம் வாய்ந்தவர்களாய் இருந்தார்கள். எனக்கு (என் தாய் வழியில்) “அபூஉமைர்’ எனப்படும் ஒரு சகோதரர் இருந்தார். அவர் பால்குடி மறந்தவராக இருந்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தால் என் சகோதரரைப் பார்த்து, “அபூஉமைர்! பாடும் (உனது) சின்னக் குருவி என்ன செய்கிறது?” என்று கேட்பார்கள். என் சகோதரர் அந்தக் குருவியை வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்.16

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 6

ஒருவர் தம் மகனல்லாத வேறொரு வரைப் பார்த்து “அருமை மகனே!’ என்று கூறலாம். அன்பு பாராட்டுவதற் காக அவ்வாறு கூறுவது விரும்பத் தக்கதாகும்.

4349 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “என் அருமை மகனே!” என்று என்னை அழைத்தார்கள்.

4350 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (மகா பொய்யனான) தஜ்ஜாலைப் பற்றி நான் வினவியதைவிட அதிகமாக வேறெவரும் வினவியதில்லை. அவர்கள் என்னிடம் “மகனே! அவனைப் பற்றி உனக்கென்ன கவலை? அவன் உனக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டான்” என்று சொன்னார்கள்.

நான், “அவனுடன் நதியளவு நீரும் மலையளவு ரொட்டியும் இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்களே!” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவன் மூலம் அல்லாஹ் எதையெல்லாம் காட்ட விரும்புகிறானோ) அவற்றைவிட இது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதே” என்று சொன்னார்கள்.17

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே நபி (ஸல்) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களை “மகனே!’ என்று கூறியதாக இடம்பெற் றுள்ளது. வேறெந்த அறிவிப்பிலும் அவ்வாறு இல்லை.

பாடம் : 7

அனுமதி கோருதல்18

4351 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனாவில் அன்சாரிகளின் அவை யொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் பதற்றமடைந்த வர்களாக எங்களிடம் வந்தார்கள். நாங்கள் (அவரிடம்) “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் என்னைத் தம்மிடம் வரச் சொல்லி ஆளனுப்பியிருந் தார்கள்.

நான் அவர்களது வீட்டு வாசலுக்குச் சென்று (வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) மூன்று முறை முகமன் (சலாம்) கூறினேன். ஆனால், அவர்கள் எனக்குப் பதில் (சலாம்) சொல்லவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன்.

பிறகு அவர்கள் (என்னிடம்) “நீங்கள் என்னிடம் வராததற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் தங்களிடம் வந்து தங்கள் வீட்டு வாசலில் நின்று, மூன்று முறை முகமன் (சலாம்) கூறினேன். எனக்கு யாரும் பதில் சலாம் சொல்லவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்றேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் உங்களைத் தண்டிக்க வேண்டியதிருக்கும்” என்று கூறினார்கள். (இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றவர் உங்களில் யாரேனும் உள்ளாரா என்று கேட்டார்கள்.)

அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “மக்களில் மிகச் சிறியவரே இவருடன் (இப்போது சாட்சியம் சொல்ல) எழுவார்” என்று சொன்னார்கள். நான் (அபூசயீத்), “நான்தான் மக்களிலேயே மிகச் சிறியவன்” என்று சொன்னேன். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “இவரை அழைத்துச் செல்வீராக!” என்று கூறினார்கள்.19

– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், இப்னு அபீஉமர் (ரஹ்) அவர் களது அறிவிப்பில் “எனவே, நான் அபூ மூசா (ரலி) அவர்களுடன் எழுந்து, உமர் (ரலி) அவர்களிடம் சென்று சாட்சியமளித் தேன்” என்று அபூசயீத் (ரலி) கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

4352 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் கோபத்துடன் வந்து நின்று, “அல்லாஹ்வை முன்வைத்து நான் கேட்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறை அனுமதி கோரி) உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி! (வீட்டுக்குள் செல்லுங்கள்.) இல்லாவிட்டால் திரும்பிவிடுக” என்று கூறியதைக் கேட்டவர் உங்களில் யாரேனும் உள்ளாரா?” என்று கேட்டார்கள். உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “என்ன அது (என்ன நடந்தது)?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “நேற்று நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் மூன்று முறை அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிறகு இன்று அவர்களிடம் வந்து, அவர்களிடம் (அவர்களது வீட்டுக்குள்) சென்று, அவர்களிடம் நேற்று நான் வந்து (அனுமதி கேட்டு) மூன்று முறை சலாம் சொன்னேன். (பதில் வராததால்) பிறகு நான் திரும்பிவிட்டேன்” என்று கூறினேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “உமது குரலை நாம் செவியுற்றோம். அப்போது நாம் ஒரு (முக்கிய) அலுவலில் ஈடுபட்டிருந்தோம். அனுமதி வழங்கப்படும்வரை நீங்கள் அனுமதி கேட்டிருந்தால் நன்றாயிருந்திருக் குமே!” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவி யுற்றதைப் போன்றே அனுமதி கேட்டேன்” என்றேன்.

உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப) தற்கு உமக்குச் சாட்சியம் அளிப்பவர் ஒருவரை நீர் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் உமது முதுகிலும் வயிற்றி லும் நாம் தண்டிக்க வேண்டியதிருக்கும்” என்று கூறினார்கள் என்றார்கள்.

அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களில் வயதில் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) எழுவார்” என்று கூறிவிட்டு, “அபூசயீதே! எழுந்திரும்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் எழுந்து உமர் (ரலி) அவர்களிடம் சென்று, “இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்” என்று (சாட்சியம்) சொன்னேன்.

4353 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா (ரலி) அவர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் (வீட்டு) வாசலுக்குச் சென்று (உள்ளே நுழைய) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் “ஒன்று’ என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் இரண்டாவது முறை அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் “இரண்டு’ என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் மூன்றாவது முறை அனுமதி கேட்ட போது, உமர் (ரலி) அவர்கள் “மூன்று’ என்றார்கள்.

பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களைப் பின்தொடர்ந்து வந்து தம்மிடம் திரும்பிவரச் செய்து, “இவ்வாறு நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டிருந்தால் அதற்கு ஆதாரம் கொண்டுவாருங்கள். இல்லாவிட்டால் உம்மை (மற்றவர்களுக்கு) ஒரு பாடமாக ஆக்கி விடுவேன்” என்று கூறினார்கள்.

அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அனுமதி கோருதல் மூன்று முறையாகும்’ என்று கூறியதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதைக் கேட்டு மக்கள் சிரிக்கலாயினர். உடனே நான், “உங்களு டைய முஸ்லிம் சகோதரர் பீதிக்குள்ளாக்கப் பட்ட நிலையில் உங்களிடம் வந்துள்ளார். (அவரைக் கண்டு) நீங்கள் சிரிக்கிறீர்களே?” என்று கூறிவிட்டு, (அபூமூசா (ரலி) அவர் களிடம்) “நீங்கள் வாருங்கள். இந்தத் தண்ட னையில் உங்களுக்கு நான் பங்காளியா வேன்” என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர் களிடம் சென்றேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், “இதோ அபூசயீத் (சாட்சி)” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

4354 உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா (ரலி) அவர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் (சென்று அவர்களது இல்லத்திற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டார்கள். (ஆனால், அவர் களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை. அப்போது) உமர் (ரலி) அவர்கள் ஏதோ அலுவலில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார்கள் போலும். எனவே, அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பிவிட்டார்கள்.

(அலுவலை முடித்த) பிறகு உமர் (ரலி) அவர்கள், “அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்களின் (அபூமூசா) குரலை நீங்கள் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்றார்கள். பிறகு அபூமூசா (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவ்வாறு நீங்கள் செய்ததற்கு என்ன காரணம் (ஏன் மூன்று முறை அனுமதி கோரி விட்டுத் திரும்பிச் சென்றுவிட்டீர்கள்)?” என்று கேட்டார்கள்.

அபூமூசா (ரலி) அவர்கள், “இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இதற்குரிய சான்றை நிலைநிறுத்த வேண்டும். அல்லது நான் (இன்னின்னவாறு) நடவடிக்கை எடுப்பேன்” என்றார்கள்.

எனவே, அபூமூசா (ரலி) அவர்கள் அன்சாரிகளின் அவையொன்றை நோக்கிப் புறப்பட்டார் கள். அன்சாரிகள், “எங்களில் சிறியவர் ஒருவரே இதற்காக உமக்குச் சாட்சியமளிப்பார்” என்று கூறினர். ஆகவே, அபூசயீத் (ரலி) அவர்கள் எழுந்து (உமர் (ரலி) அவர்களிடம் சென்று), “இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந் தோம்” என்று கூற, உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த விவரம் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! (நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிய நாளில்) கடைவீதிகளில் நான் வணிகத் தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது (போலும்)” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

4355 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் வந்து, “அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அப்துல்லாஹ் பின் கைஸ் வந்துள்ளேன்” என்று கூறி (அனுமதி கோரி)னேன். அவர்கள் எனக்கு அனுமதி வழங்கவில்லை. பிறகு (மீண்டும்) நான், “அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அபூமூசா (வந்துள்ளேன்). அஸ்ஸலாமு அலைக்கும். இதோ! அஷ்அரீ (வந்துள்ளேன்)” என்று (இன்னும் இரண்டு முறை) அனுமதி கோரினேன். (அனுமதி கிடைக்காததால்) பிறகு நான் திரும்பி வந்துவிட்டேன்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று கூறினார்கள். நான் (மீண்டும்) வந்தபோது, “அபூமூசா! ஏன் திரும்பிச் சென்றீர்? நாம் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்தோம்” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அனுமதி கோருதல் மூன்று முறையாகும். (மூன்று முறைக்குள்) உமக்கு அனுமதி வழங்கப்பட்டால் சரி. இல்லாவிட்டால் நீர் திரும்பிவிடுக’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றேன்.

உமர் (ரலி) அவர்கள் “இ(வ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சி கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இப்படி இப்படிச் செய்து விடுவேன்” என்று கூறினார்கள். ஆகவே, நான் (அன்சாரிகளின் அவைக்குச்) சென்றேன்.

உமர் (ரலி) அவர்கள், “அவருக்குச் சாட்சி கிடைத்தால் மாலையில் அவரைச் சொற் பொழிவு மேடைக்கு அருகில் நீங்கள் காண் பீர்கள். சாட்சி கிடைக்காவிட்டால் அவரை நீங்கள் காணமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

மாலை நேரமானபோது என்னைக் கண்ட மக்கள், “அபூமூசா! நீர் என்ன சொல் கிறீர்? சாட்சி கிடைத்துவிட்டாரா?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் “ஆம், உபை பின் கஅப் (ரலி) அவர்களே (சாட்சி)” என்றேன். உமர் (ரலி) அவர்கள் “அவர் நேர்மையானவர்தாம்” என்று கூறி விட்டு, “அபுத்துஃபைல்! இவர் என்ன சொல்கிறார்?” என்று கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறி யதை நான் கேட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). இதைக் குறித்து ஒன்றைக் கேள்விப்பட்டேன். அதை உறுதி செய்துகொள்ளவே விரும்பினேன்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், உமர் (ரலி) அவர்கள், “அபுல்முன்திர்! நீங்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “ஆம், கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு நீரே ஒரு வேதனையாக ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அதில் உமர் (ரலி) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்’ என்று கூறியதும் அதற்குப் பின் உள்ளவையும் இடம்பெறவில்லை.

பாடம் : 8

“யார் அது?’ என்று கேட்கப்படும்போது (பெயரைச் சொல்லாமல்) “நான்’ என்று அனுமதி கேட்பவர் பதிலளிப்பது வெறுக்கத் தக்கதாகும்.

4356 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (அவர்களை) அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். நான் “நான்தான்” என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள் “நான்… நான் (என்றால்…?)” என்று கூறியபடி வெளியே வந்தார்கள்.20

4357 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் நபி (ஸல்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டேன். அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “நான்தான்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள் “நான்… நான் (என்றால்…?)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வும் வந்துள்ளது.

அவற்றில் “அவ்வாறு கூறியதை அவர்கள் வெறுத்ததைப் போன்றிருந்தது” என இடம் பெற்றுள்ளது.

பாடம் : 9

பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும்.

4358 சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அறையினுள் எட்டிப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஈர்வலி (பேன் சீப்பு) ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைக் கோதிக்கொண்டிருந்தார்கள்.

அவரைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்” என்று கூறி விட்டு, “(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட் டதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப் பவர்கள்மீது விழக்கூடும் என்ற) காரணத் தால்தான்” என்று சொன்னார்கள்.21

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4359 சஹ்ல் பின் சஅத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் கதவில் ஒரு துவாரத்தின் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் அறையினுள் எட்டிப் பார்த்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் ஈர்வலி (பேன் சீப்பு) ஒன்றிருந்தது. அதன் மூலம் அவர்கள் தமது தலையைச் சீவிக்கொண்டிருந்தார்கள்.

அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்த ஈர்வலியால் உன் கண்ணைக் குத்தியிருப் பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று அல்லாஹ் சட்டமாக்கியிருப் பதே, பார்வை (எல்லை மீறி வீட்டிலிருப்பவர்கள்மீது விழக்கூடும் என்ற) காரணத்தால்தான்” என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

4360 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் “கூர்முனையுடன்’ அல்லது “கூர்முனை களுடன்’ அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவரது கண்ணில்) குத்தப் போனதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.22

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

4361 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு குடும்பத்தாரின் அனுமதியின்றி அவர்களது வீட்டினுள் யாரேனும் எட்டிப் பார்த்தால், அவரது கண்ணைப் பறிக்கவும் அவர்களுக்கு அனுமதி உண்டு.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4362 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்தபோது, அவர்மீது நீ சிறு கல்லைச் சுண்டியெறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன்மீது எந்தக் குற்றமுமில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.23

பாடம் : 10

எதேச்சையாகப் பார்வை விழுவது.24

4363 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதேச்சையாக (அந்நியப் பெண்மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள்ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

27.05.2010. 11:16

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s