21 – வியாபாரங்கள்

அத்தியாயம்: 21 – வியாபாரங்கள்

பாடம் : 1

“முலாமசா’ மற்றும் “முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது.2

3030 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடுமுறை வியாபாரம் (“முலாமசா’), எறி முறை வியாபாரம் (“முனாபதா’) ஆகியவற் றைத் தடை செய்தார்கள்.3

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.4

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3031 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“முலாமசா’ மற்றும் “முனாபதா’ ஆகிய வியாபார முறைகள் இரண்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. “முலாமசா’ என்பது, (விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவரில்) ஒவ்வொருவரும் மற்றவரின் (விற்பனைக் கான) துணியை யோசிக்காமல் தொட்டு(விட் டாலே வியாபார ஒப்பந்தம் முடிந்துவிட்ட தாக ஆகி)விடுவதாகும். “முனாபதா’ என்பது, இருவரில் ஒவ்வொருவரும் மற்றவரை நோக்கித் தமது துணியை எறிய, அவர்களில் எவரும் மற்றவரின் துணியை(ப் பிரித்து)ப் பார்க்காமலேயே (வியாபாரத்தை முடித்து) விடுவதாகும்.

3032 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வியாபார முறைகள் இரண்டையும் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் எங்க ளுக்குத் தடை செய்தார்கள்.

வியாபாரத்தில் தொடுமுறை வியாபாரம் (முலாமசா), எறிமுறை வியாபாரம் (முனாபதா) ஆகிய இரண்டையும் தடை செய்தார்கள். தொடுமுறை வியாபாரம் (“முலாமசா’) என்பது, இரவிலோ பகலிலோ (துணி வாங்கும்) ஒருவர் (விற்கும்) மற்றொருவரின் துணியைத் தமது கரத்தால் தொடுவதாகும். விரித்துப் பார்க்காமலேயே தொட்டதோடு வியாபாரத்தை முடித்துக் கொள்வதாகும். எறிமுறை வியாபாரம் (முனாபதா) என்பது, ஒருவர் மற்றொருவரை நோக்கித் தமது துணியை எறிய, மற்றவர் இவரை நோக்கித் தமது துணியை எறிய (துணியைப் பிரித்துப்) பார்க்காமலும் பரஸ்பர திருப்தி இல்லாமலும் இருவருக்குமிடையிலான வியாபார (ஒப்பந்த)மாக அதுவே ஆகிவிடுவதாகும்.5

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 2

கல்லெறி வியாபாரம் (“பைஉல் ஹஸாத்’) மற்றும் மோசடி வியாபாரம் (“பைஉல் ஃகரர்’) ஆகியவை செல்லாது.6

3033 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்லெறி வியாபாரத்திற்கும் மோசடி வியாபாரத்திற்கும் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 3

சினை ஒட்டகத்தின் வயிற்றிலுள்ள (குட்டியை, அல்லது சினை ஒட்டகத்தின் வயிற்றிலுள்ள) குட்டி ஈனும் குட்டியை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.7

3034 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சினை ஒட்டகத்தின் வயிற்றிலுள்ள குட்டி ஈனும் குட்டியை விற்பதற்குத் தடை விதித் தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3035 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் கால மக்கள் ஹபலுல் ஹபலாவுக்காக – சினை ஒட்டகம் குட்டி ஈன்று, அந்தக் குட்டி சினையாகிப் பெற விருக்கும் குட்டிக்காக – ஒட்டகத்தின் இறைச்சிகளை விற்கவும் வாங்கவும் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய வியாபாரம் செய்யக் கூடாது என மக்களுக்குத் தடை விதித்தார்கள்.8

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 4

ஒருவர் தம் சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது இடையில் குறுக் கிட்டு வியாபாரம் செய்வதும், அவர் விலை பேசும் அதே பொருளைத் தாமும் விலை பேசுவதும், வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளன; கால்நடைகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியைக் கனக்கச் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.9

3036 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.10

3037 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம்; தம் (முஸ்லிம்) சகோதரர் பெண் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிட்டுப் பெண் பேச வேண்டாம். அந்தச் சகோதரர் இவருக்கு அனுமதியளித்தால் தவிர!11

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3038 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் தம் (முஸ்லிம்) சகோதரர் விலை பேசும்போது, அதே பொருளைத் தாமும் விலை பேச வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3039 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் விலை பேசும் அதே பொருளைத் தாமும் விலை பேசுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.12

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3040 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத் தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியி லேயே சந்தித்து சரக்குகளை) வாங்கலாகாது. ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிட வேண்டாம். கிராமத்திலிருந்து சரக்கு களைக் கொண்டுவருபவருக்காக உள்ளூர்வாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். ஒட்டகங்கள் மற்றும் ஆடுகளின் (பாலைக் கறக்காமல் அவற்றின்) மடியை கனக்கச் செய்ய வேண்டாம். அவ்வாறு ஒருவர் அவற்றை வாங்கிப் பால் கறந்து திருப்தியடைந்தால் தம்மிடமே வைத்துக் கொள்ளலாம். திருப்தியடையாவிட்டால் அவற்றை ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்துவிடலாம். இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அவருக்கு உரிமை உண்டு.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.13

3041 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(சரக்குகளை ஏற்றிக்கொண்டு) வாகனத் தில் வருபவர்களை எதிர்கொண்டு (வழியி லேயே சந்தித்து சரக்குகளை) வாங்குவதற்கும், கிராமத்திலிருந்து (சரக்குகளைக் கொண்டு) வருபவர்களுக்காக உள்ளூர்வாசிகள் விற்றுக் கொடுப்பதற்கும், ஒரு பெண் தன் சகக்கிழத்தியை மணவிலக்குச் செய்யுமாறு (தன் கணவரிடம்) கோருவதற்கும், வாங்கும் நோக்கமின்றி விலையை ஏற்றிவிடுவதற்கும், கால்நடைகளின் (பாலைக் கறக்காமல் கூடுதல் விலைக்கு விற்பதற்காக) மடி கனக்கச் செய் வதற்கும், தம் (முஸ்லிம்) சகோதரர் விலை பேசும் அதே பொருளை மற்றவர் விலை பேசுவதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், ஃகுன்தர் மற்றும் வஹ்ப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “(மேற்கண்டவற்றுக்கு) தடை விதிக்கப்பட்டது’ என இடம்பெற்றுள்ளது. அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ என்று காணப்படுகிறது.

3042 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வாங்கும் நோக்கமின்றி (ஒரு பொருளை அதிக விலைக்குக் கேட்டு) விலையை ஏற்றிவிடுவதற்குத் தடை விதித்தார்கள்.14

பாடம் : 5

வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரியை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து அப்பொருட்களை) வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.15

3043 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

வியாபாரப் பொருட்கள் சந்தைக்கு வந்து சேருவதற்கு முன் வழியிலேயே வியாபாரி களைச் சந்தித்துச் சரக்குகளை வாங்குவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே “சந்தைக்கு வந்து சேர்வதற்கு முன்’ எனும் குறிப்பு காணப்படுகிறது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3044 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (சந்தைக்கு வரும்) வியாபாரிகளை எதிர்கொண்டு (வழியிலேயே சந்தித்து) சரக்குகளை வாங்குவதற்குத் தடை விதித்தார்கள்.16

3045 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டுவரும் வியாபாரிகளைச் சந்தித்து சரக்குகள் வாங்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

3046 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெளியூரிலிருந்து சரக்குகளைக் கொண்டு வரும் வியாபாரிகளைச் சந்தித்து, சரக்கு களை வாங்காதீர்கள். அவ்வாறு எவரேனும் அவர்களைச் சந்தித்து, சரக்குகளை விலைக்கு வாங்கிய பின் அந்தச் சரக்குகளின் உரிமை யாளர் சந்தைக்கு வந்தால், அவருக்கு (அந்த பேரத்திலிருந்து விலகிக்கொள்ள) உரிமை உண்டு.17

பாடம் : 6

கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுப்பது தடை செய்யப்பட் டுள்ளது.18

3047 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்க வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.19

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

3048 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(சந்தைக்கு வரும்) வணிகர்களை இடை மறித்து வாங்குவதற்கும், கிராமவாசிக்காக நகர வாசி விற்றுக்கொடுப்பதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்கக் கூடாது என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இடைத் தரகராக ஆகக் கூடாது (என்பதுதான் அதன் பொருள்)” என்று பதிலளித்தார்கள்.20

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

3049 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்க வேண்டாம். மக்களில் சிலருக்குச் சிலர் மூலம் அல்லாஹ் வாழ்வாதாரம் அளிக்கும் நிலையில் மக்களை விட்டுவிடுங்கள்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் யஹ்யா அத்தமீமீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “மக்களில் சிலருக்குச் சிலர் மூலம் வாழ்வாதாரம் வழங்கப்படும் நிலையில்” என இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3050 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக்கொடுக்கக் கூடாதென நாங்கள் தடை விதிக்கப்பெற்றிருந் தோம்; இவருக்கு அவர் சகோதரராய் இருந்தாலும் சரி; தந்தையாக இருந்தாலும் சரி.

3051 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கக் கூடாதென நாங்கள் தடை விதிக்கப்பெற்றோம்.21

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 7

மடி கனக்கச் செய்யப்பட்ட (ஒட்டகம், ஆடு ஆகிய)வற்றை விற்பனை செய்வது பற்றிய சட்டம்.

3052 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை விலைக்கு வாங்கியவர், அதை ஓட்டிச் சென்று பால் கற(ந்து பார்)க்கட்டும்! அதன் பால் (அளவு) திருப்தியளித்தால், அதை அவர் தம்மிடமே வைத்துக்கொள்ளட்டும்! திருப்தியளிக்காவிட் டால், ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் அதை (வாங்கியவரிடமே) திருப்பிக் கொடுத்துவிடட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22

3053 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவர் மூன்று நாட்கள் விருப்ப உரிமை பெறுவார். அவர் நாடினால், அதைத் தம்மிடமே வைத்துக்கொள்ளலாம்; நாடினால் அதைத் திருப்பிக் கொடுத்து விடலாம். ஆனால், ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3054 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவருக்கு மூன்று நாட்கள் விருப்ப உரிமை உண்டு. அதைத் திருப்பிக் கொடுப்ப தானால், ஒரு “ஸாஉ’ உணவுப் பொருளுடன் அதைத் திருப்பிக் கொடுக்கட்டும். (உணவு என்பது) கோதுமையாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. (பேரீச்சம் பழமாகக் கூட இருக்கலாம்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3055 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை வாங்கியவர் (பின்வரும்) இரண்டில் சிறந்த தைத் தேர்ந்தெடுக்க உரிமை பெறுவார். நாடி னால் அதைத் தம்மிடம் அவர் வைத்துக் கொள்ளலாம். நாடினால் அந்த ஆட்டை ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் திருப்பிக் கொடுத்துவிடலாம். கோதுமையைத்தான் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3056 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “ஆட்டை வாங்கியவருக்கு விருப்ப உரிமை உண்டு’ என இடம்பெற்றுள்ளது.

3057 ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் மடி கனக்கச் செய்யப்பட்ட ஒட்டகத்தையோ அல்லது ஆட்டையோ வாங்கிய பின் பால் கறந்து பார்க்கும்போது, (பின்வரும்) இரண்டில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க உரிமை பெறுவார். ஒன்று அதைத் தம்மிடம் வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் ஒரு “ஸாஉ’ பேரீச்சம் பழத்துடன் அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம்.

பாடம் : 8

விற்கப்பட்ட பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன் அதை (மற்றவருக்கு) விற்பனை செய்வது கூடாது.23

3058 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்.

இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

உணவுப் பொருளைப் போன்றே எல்லாப் பொருட்களையும் நான் கருதுகிறேன். (கைக்கு வந்து சேர்வதற்கு முன் எதையும் விற்கலாகாது.)24

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3059 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்.

இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

உணவுப் பொருளைப் போன்றே எல்லாப் பொருட்களையும் நான் கருதுகிறேன்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3060 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அதை அளந்து பார்ப்பதற்கு முன் விற்க வேண்டாம்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உணவுப் பொருள் இன்னும் வந்து சேராத நிலையில், அவர்கள் தங்கத்துக்குத் தங்கத்தை (ஏற்றத் தாழ்வாக) விற்கிறார்கள் என்பதை நீர் கவனிக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.25

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “வந்து சேராத நிலையில்’ எனும் குறிப்பு இல்லை.

3061 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.26

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3062 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் உணவுப் பொருட் களை விலைக்கு வாங்குவோம். அப்போது அவர்கள் எங்களிடம் ஆளனுப்பி, அதை (மற்றவருக்கு) விற்பதற்கு முன் வாங்கிய இடத்திலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு சென்றுவிடுமாறு எங்களுக்கு உத்தரவிடு வார்கள்.27

3063 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்வ தற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நாங்கள் வணிகர்களிடமிருந்து உணவுப் பொருட்களைக் குத்துமதிப்பாக விலைக்கு வாங்கி வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதை அங்கிருந்து வேறு இடத் திற்குக் கொண்டுசெல்வதற்கு முன் விற்க வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

3064 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அது தமது கைக்கு வந்து சேர்ந்து, அதைக் கைப்பற்றிக்கொள்வதற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்க வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3065 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அதைக் கைப்பற்றிக்கொள்வதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

3066 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் குத்துமதிப்பாக உணவுப் பொருட் களை வாங்கிக்கொண்டிருந்த மக்கள், அவற் றை(க் கைப்பற்றி) அங்கிருந்து வேறு இடத் திற்குக் கொண்டுசெல்லாமல் அங்கேயே விற்றதற்காக அடிக்கப்பட்டனர்.28

3067 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் குத்துமதிப்பாக உணவுப் பொருட் களை விலைக்கு வாங்கியபோது, அவற்றைத் தம் இருப்பிடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.29

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் என்னிடம் பின்வருமாறு தெரிவித்தார்கள்:

என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் குத்துமதிப்பாக உணவுப் பொருளை வாங்குவார்கள். பின்னர் அதை (அங்கேயே விற்றுவிடாமல்) தம் வீட்டாரிடம் எடுத்துச் சென்று விடுவார்கள்.

3068 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உணவுப் பொருளை விலைக்கு வாங்கிய ஒருவர், அதை அளந்து பார்ப்பதற்கு முன் (மற்றவருக்கு) விற்க வேண்டாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3069 சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள், மர்வான் பின் அல்ஹகமிடம், “வட்டி வியாபாரத்திற்கு நீங்கள் அனுமதியளித்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மர்வான், “நான் (அவ்வாறு) செய்யவில்லையே!” என்றார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “(அரசாங்கம் வழங்கும்) உணவு அட்டைகளை விற்பதற்கு நீங்கள் அனுமதியளித்துவிட்டீர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உணவுப் பொருள் கைக்கு வந்து சேர்வதற்கு முன் அதை (மற்றவரிடம்) விற்பதற்குத் தடை விதித்துள்ளார்களே!” என்று கூறினார்கள். பின்னர் மர்வான் மக்களுக்கு உரையாற்றுகையில், உணவு அட்டையை விற்பதற்குத் தடை விதித்தார்.

உடனே காவலர்கள் மக்களின் கரங்களிலிருந்து அந்த உணவு அட்டைகளைப் பறித்ததை நான் பார்த்தேன்.30

3070 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஓர் உணவுப் பொருளை நீ விலைக்கு வாங்கினால், அது உன் கைக்கு வந்து சேர்வ தற்கு முன் (மற்றவருக்கு) அதை விற்காதே” என்று கூறுவார்கள்.

பாடம் : 9

அளவு தெரிந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது.31

3071 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அளவு தெரிந்த பேரீச்சம் பழத்திற்குப் பகரமாக அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், ஹதீஸின் இறுதியில் “பேரீச்சம் பழத்திற்கு’ எனும் குறிப்பு இல்லை. (“அளவு தெரிந்த பொருளுக்கு’ என்று பொதுவாகவே இடம்பெற்றுள்ளது.)

பாடம் : 10

விற்பவரும் வாங்குபவரும் (வியாபார ஒப்பந்தம் நடக்கும்) இடத்திலிருந்து பிரிவதற்கு முன் வியாபாரத்தை முறித் துக்கொள்ளும் உரிமை அவ்விருவருக் கும் உண்டு.32

3072 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வியாபார ஒப்பந்தம் நடந்த இடத்தி லேயே ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து விட்டதென) முடிவு செய்யப்பட்ட வியா பாரத்தைத் தவிர மற்ற வியாபாரங்களில் விற்பவரும் வாங்குபவரும் பிரியாத வரை அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) உரிமை உண்டு.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதினோரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3073 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பேர் தமக்கிடையே வியாபாரம் செய்துகொள்ளும்போது, இருவரும் பிரியாமல் ஒரே இடத்தில் இருக்கும்வரை, அல்லது இருவரில் ஒருவர் மற்றவருக்கு (வியாபாரத்தை உடனே நடைமுறைப்படுத்த) உரிமை அளிக்கும்வரை (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) அவர்களில் ஒவ்வொரு வருக்கும் உரிமை உண்டு. அவ்வாறு இருவரில் ஒருவர் மற்றவருக்கு (வியா பாரத்தை உடனே நடைமுறைப்படுத்த) உரிமை அளித்து, அதன் பேரில் இருவரும் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டால், உடனே வியாபாரம் ஏற்பட்டுவிடும். அவ் வாறே, வியாபார ஒப்பந்தம் ஆன பிறகு, இருவரில் யாரும் வியாபார (ஒப்பந்த)த்தைக் கைவிடாமல் பிரிந்துவிட்டாலும் வியாபாரம் ஏற்பட்டுவிடும்.34

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3074 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு பேர் தமக்கிடையே வியாபாரம் செய்துகொள்ளும்போது, அவ்விருவரும் பிரியாமல் இருக்கும்வரை அவர்களில் ஒவ்வொருவருக்கும் (வியாபாரத்தை முறித்துக்கொள்ள) உரிமை உண்டு. அல்லது அவர்களின் வியாபாரம் (உடனே நடைமுறைப்படுத்தப்படும் என்ற) முடிவோடு இருக்கலாம். அத்தகைய முடிவோடு இருந்தால், உடனே வியாபாரம் ஏற்பட்டுவிடும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

அவற்றில் முஹம்மத் பின் யஹ்யா பின் அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக (பின் வரும் தகவல்) அதிகப்படியாக இடம்பெற் றுள்ளது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருவரிடம் விற்கவோ வாங்கவோ செய்யும்போது, அந்த வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் எண்ணம் இல்லாவிட்டால் எழுந்து சிறிது தூரம் நடந்து சென்றுவிட்டு, பிறகு அவரிடம் திரும்பிவருவார்கள்.

3075 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அங்கிருந்து) பிரிந்து செல்லாத வரை அவர்களிடையே வியாபாரம் ஏற்படாது; (வியாபார ஒப்பந்தம் நடந்த இடத்திலேயே ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துவிட்டதென) முடிவு செய்யப்பட்ட வியாபாரத்தைத் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 11

வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும்.

3076 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விற்பவரும் வாங்குபவரும் (அவ்விடத்திலிருந்து) பிரியாத வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் வளம் வழங்கப்படும்; இருவரும் பொய் பேசி, குறைகளை மறைத்திருந்தால் அவர்களது வியாபாரத்தில் உள்ள வளம் அகற்றப்படும்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ஆகிய நான்) கூறுகிறேன்:

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் பிறந்தார்கள்; நூற்று இருபது ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

பாடம் : 12

வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர்

3077 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் வியாபாரங்களின்போது ஏமாற்றப்படுவதாகத் தெரிவித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ யாரிடம் வியாபாரம் செய்தாலும் “ஏமாற்றுதல் கூடாது’ என்று கூறிவிடு” என்று சொன்னார் கள். எனவே, அவர் விற்கவோ வாங்கவோ செய்யும்போது “ஏமாற்றுதல் கூடாது’ என்று கூறிவந்தார்.36

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “எனவே, அவர் விற்கவோ வாங்கவோ செய்யும்போது “ஏமாற்றுதல் கூடாது’ என்று கூறிவந்தார்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

பாடம் : 13

பலன் உறுதிப்படுவதற்கு முன், மரத் திலுள்ள பழங்களை விற்பது கூடாது; (வாங்குபவர் உடனே) அவற்றைப் பறித்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டால் தவிர.37

3078 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளின் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.38

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3079 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் (உண்பதற்கேற்ப) சிவக்காத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; கதிர்கள் (முற்றி) வெண்ணிறமாகி, அவை பாழாகிவிடும் எனும் அச்சம் விலகாத வரை அவற்றை விற்பதற்கும் தடை விதித்தார்கள் விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3080 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மரத்திலுள்ள) கனிகள், பலன் உறுதிப்படும் நிலையை அடைந்து, அவை பாழாகும் நிலையைக் கடக்காத வரை அவற்றை விற்காதீர்கள்.

இதன் அறிவிப்பாளரான இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பலன் உறுதிப் படும் நிலையை அடைதல் என்பது, (உண் பதற்கு ஏற்றவாறு) சிவப்பாகவோ மஞ்சளா கவோ அது மாறுவதைக் குறிக்கும்.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் “பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை’ என்பதுடன் ஹதீஸ் முடி வடைகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3081 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) கனிகளை விற்காதீர்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இப்னு உமர் (ரலி) அவர்களிடம் “பலன் உறுதிப்படுதல் என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதாகும்’ என விடையளித்தார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.39

3082 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மரத்திலுள்ள) பழங்கள், (கனிந்து) நல்ல நிலையை அடையாத வரை அவற்றை விற்க வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தடை விதித்தார்கள்’. அல்லது “எங்களுக்குத் தடை விதித்தார்கள்’.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

3083 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மரத்திலுள்ள) கனிகள், பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

3084 அபுல் பக்த்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், பேரீச்ச மர(த்திலுள்ள பழ)ங்களை விற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணப் படும் பக்குவத்தை அடையும் முன்பும் எடை போடப்படுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். நான், “(மரத்தி லுள்ளதை) எடை போடுதல் எப்படி?” என்று கேட்டேன். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் “(அதன் எடை இவ்வளவு இருக்கும் என) மதிப்பிடப்படுவதற்கு முன்பு’ என்று கூறினார்.40

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3085 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மரத்திலுள்ள கனிகளை, பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை விற்காதீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3086 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள், பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) பழங்களை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; உலர்ந்த பேரீச்சப் பழத்திற்குப் பதிலாக (உலராத) பச்சைப் பழத்தை விற்பதற்கும் தடை விதித்தார்கள்.41

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அராயா’ வியாபாரத்தில் அ(வ்வாறு விற்ப)தற்கு அனுமதியளித்தார்கள்.

இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறி விப்பில் “அராயா வியாபாரத்தில் (அவ்வாறு) விற்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்” என்று சில கூடுதலான சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.42

3087 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) கனிகளை விற்காதீர்கள். உலர்ந்த (கொய்யப்பட்ட) பழங்களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பழங்களை விற்காதீர்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளார்கள்.

இந்த ஹதீஸ் (மொத்தம்) ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 14

உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பேரீச்சம் பழங்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது; “அராயா’வில் தவிர!43

3088 சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா’ மற்றும் “முஹாகலா’ ஆகிய வியாபாரங் களைத் தடை செய்தார்கள்.

“முஸாபனா’ என்பது, பேரீச்ச மரத்திலுள்ள (உலராத) கனிகளை உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் கனிகளுக்குப் பதிலாக (பண்டமாற்று முறையில்) விற்பதாகும். “முஹாகலா’ என்பது, (அறுவடை செய்யப்பட்ட) கோதுமைக் கதிரிலுள்ள (தானியத்)தை விற்பதும் (அறுவடை செய்யப் பட்ட) கோதுமைக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதும் ஆகும்.44

சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை அவற்றை விற்காதீர்கள்; உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பழத்தை விற்காதீர் கள்” என்று சொன்னார்கள்.

மேலும், சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (தம் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாக ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வருமாறு அறிவித்தார்கள்:

அதன் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரத்திலுள்ள) உலராத கனிகளுக் குப் பதிலாக உலர்ந்த அல்லது செங்காயான பேரீச்சங் கனிகளை விற்பதற்கு “அராயா’வில் (மட்டும்) அனுமதியளித்தார்கள்; “அராயா’ அல்லாதவற்றில் அனுமதியளிக்கவில்லை.45

3089 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்து மதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு “அராயா’க்காரர்களுக்கு மட்டும் அனுமதியளித்தார்கள்.

3090 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அராயா’வில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு வீட்டுக்காரர்கள் (தோட்ட உரிமையாளர்கள்) எடுத்துக்கொள்ளவும், அவற்றைச் செங்காய்களாக அவர்கள் உட்கொள்ளவும் அனுமதித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3091 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும், அதில் “(“அராயா’வின் ஒருமையான) “அரிய்யா’ என்பது, (ஏழை) மக்களுக்காக ஒதுக்கப்படும் பேரீச்ச மரங்களாகும். அவற் றிலுள்ள கனிகளை அவர்கள் குத்துமதிப் பாகக் கணக்கிட்டு விற்றுக்கொள்வார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

3092 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரத்திலுள்ள) பேரீச்சங் கனிகளைக் குத்து மதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு “அராயா’ வியாபாரத்தில் அனுமதியளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அரிய்யா’ என்பது, ஒருவர் தம் வீட்டாரின் உணவுக்காக மரத்திலுள்ள செங்காய்களைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு, உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக வாங்குவ தாகும்.

3093 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அராயா’வில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு, அவற்றுக்குப் பதிலாக உலர்ந்த கனிகளை அளந்து விற்க அனுமதியளித்தார்கள்.

3094 மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “குத்துமதிப்பாகக் கணக்கிட்டு எடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்” என இடம்பெற் றுள்ளது.

3095 மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அராயா’ வியாபாரத்தில் (மட்டும் மரத்தி லுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

3096 சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரத்திலுள்ள) உலராத கனிகளை உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதற்குத் தடை விதித்தார்கள். மேலும், “அது வட்டியாகும்; அதுவே “முஸாபனா’ ஆகும்” என்றும் கூறினார்கள். ஆயினும், “அராயா’வில் மட்டும் அதற்கு அனுமதியளித்தார்கள். “அராயா’ என்பது, (ஏழைகளுக்கு வழங்கப்பட்ட) ஓரிரு பேரீச்ச மரங்களிலுள்ள உலராத கனிகளை வீட்டுக் காரர்கள் (தோட்ட உரிமையாளர்கள்) குத்து மதிப்பாகக் கணக்கிட்டு உலர்ந்த பழங்களுக் குப் பதிலாக எடுத்துக்கொண்டு, அந்தச் செங்காய்களை உண்பதாகும்.

இந்த ஹதீஸை புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் தமது தெருவில் வசித்த (பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த) சில நபித்தோழர்களிடமிருந்து அறிவித்தார்கள். சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் அவர்களில் ஒருவர் ஆவார்கள்.

3097 புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அராயா’வில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனி களைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள் என நபித்தோழர்கள் கூறினர்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3098 புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் தம் தெருவாசிகளான நபித்தோழர்கள் சிலரிட மிருந்து அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும், அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “வட்டி’ (“ரிபா’) என்பதற்குப் பதிலாக “பறித்தல்’ (“ஸப்ன்’) எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “வட்டி’ என்றே காணப்படுகிறது.

– மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் வாயிலாக மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3099 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) மற்றும் சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா’வைத் தடை செய்தார்கள். (அதாவது) மரத்திலுள்ள உலராத கனிகளை உலர்ந்த (பறிக்கப்பட்ட) கனிகளுக்குப் பதிலாக விற்பதைத் தடை செய்தார்கள்; “அராயா’க்காரர்களைத் தவிர. அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “அராயா’க்காரர் களுக்கு மட்டும் (இந்த வியாபாரம் செய்து கொள்ள) அனுமதியளித்தார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

3100 யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், “இப்னு அபீஅஹ்மத் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான அபூசுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) அவர்கள், பின்வரும் நபிமொழியை உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்’ என்று பதிலளித்தார்கள். (அந்த ஹதீஸாவது:) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“அராயா’ வணிகத்தில், (மரத்திலுள்ள) உலராத பேரீச்சங் கனிகளை உலர்ந்த பேரீச்சங் கனிக ளுக்குப் பதிலாக “ஐந்து வஸ்க்குகளுக்கும் குறைவாகவோ’ அல்லது “ஐந்து வஸ்க்குகளுக்காகவோ’ விற்பனை செய்துகொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.46

“ஐந்து வஸ்க்குகளுக்குக் குறைவாக, அல்லது ஐந்து வஸ்க்குகளுக்கு’ என அறிவிப்பாளர் தாவூத் பின் அல்ஹுஸைன் (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3101 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா’ வியாபாரத்திற்குத் தடை விதித் தார்கள். “முஸாபனா’ என்பது (மரத்திலுள்ள) உலராத பேரீச்சம் பழங்களை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், (கொடியிலுள்ள) திராட்சைக் கனி களை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக் கனிகளுக்குப் பகரமாக விற்பதும் ஆகும்.47

3102 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “முஸாபனா’ எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். (அதாவது:) (மரத்திலுள்ள) உலராத பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களை விற்பதையும், உலர்ந்த அளக்கப்பட்ட திராட்சைக் கனிக ளுக்குப் பதிலாக (கொடியிலுள்ள) உலராத திராட்சைக் கனிகளை விற்பதையும், அளக் கப்பட்ட தொலி நீக்கப்பட்ட கோதுமைக்குப் பதிலாக (அறுவடை செய்யப்படாத) பயிரிலுள்ள கோதுமையை விற்பதையும் தடை செய்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3103 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா’ எனும் வியாபாரத்திற்குத் தடை விதித் தார்கள். “முஸாபனா’ என்பது, (மரத்திலுள்ள) உலராத பேரீச்சம் பழங்களை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், (கொடியிலுள்ள) உலராத திராட்சைப் பழங்களை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பழங்களுக்குப் பதிலாக விற்பதும், மரத்திலுள்ள எந்தக் கனியையும் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதும் ஆகும்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3104 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா’ எனும் வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள். “முஸாபனா’ என்பது, மரத்தின் மேலுள்ள பேரீச்சங் கனிகளைக் குறிப்பிட்ட அளவைக் கொண்ட (பறிக்கப்பட்ட) பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். (அவ்வாறு) விற்கும்போது, (அளக்கப்பட்ட) இந்தப் பழங்கள், (மரத்திலுள்ள பழங்களை விட) அதிகமாக இருந்தால், அந்த அதிகம் எனக்குரியது. குறைவாக இருந்தால் அதற்கு நானே பொறுப்பாளி ஆவேன் என்று (விற்பவர்) கூறுவார்.

அல்லது “(மரத்திலுள்ள) இந்தப் பழங்கள், (அளக்கப்பட்ட கனிகளைவிட) அதிகமாக இருந்தால், அந்த அதிகம் எனக்குரியது. குறைந்துவிட்டால் அந்தக் குறைவுக்கு நானே பொறுப்பாளி ஆவேன்” என்று (வாங்குபவர்) கூறுவார்.48

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3105 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா’ எனும் வியாபாரத்திற்குத் தடை விதித் தார்கள். (அதாவது:) ஒருவரது தோட்டத்திலுள்ள பேரீச்ச மரங்களின் (உலராத) கனிகளை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதற்கும், கொடியிலுள்ள (உலராத) திராட்சைகளை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைகளுக்குப் பதிலாக விற்பதற்கும், கதிர்களிலுள்ள தானியங்களை அளக்கப்பட்ட உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதற்கும் தடை விதித்தார்கள்; இவை அனைத்துக்குமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.49

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 15

கனிகள் உள்ள பேரீச்ச மரத்தை விற்பது.50

3106 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால் (தற்போதுள்ள) அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கியவர் (தமக்கே சேர வேண்டுமென) முன்நிபந்தனையிட்டிருந்தால் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51

3107 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரம் வேரோடு விலைக்கு வாங்கப்பட்டால், (தற்போதுள்ள) அதன் கனிகள் மகரந்தச் சேர்க்கை செய்த(விற்ற)வருக்கே சேரும்; (தமக்கே சேர வேண்டுமென) வாங்கியவர் முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3108 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, அதை வேரோடு விற்றால் மகரந்தச் சேர்க்கை செய்த அவருக்கே (தற் போதுள்ள) அதன் கனிகள் சேரும்; விலைக்கு வாங்கியவர் (அதன் கனிகள் தமக்கே சேர வேண்டுமென) முன்நிபந்தனை விதித்திருந் தால் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.52

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3109 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை ஒருவர் விலைக்கு வாங்கினால், (தற்போதுள்ள) அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; விலைக்கு வாங்கியவர் (தமக்கே சேர வேண்டுமென) முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர. (செல்வம் வைத்திருக்கும்) ஓர் அடிமையை ஒருவர் விலைக்கு வாங்கினால், அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே சேரும்; (அச்செல்வம் தமக்கே சேர வேண்டுமென) வாங்கியவர் நிபந்தனை விதித்திருந்தால் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 16

முஹாகலா, முஸாபனா, முகாபரா ஆகிய வியாபாரங்களும், பலன் உறுதிப்படாத நிலையில் மரத்திலுள்ள கனிகளை விற்பதும், மரத்திலுள்ள கனிகளின் பல ஆண்டு விளைச்சலை விற்பதும் (முஆவமா) தடை செய்யப் பட்டுள்ளன.54

3110 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஹாகலா’, “முஸாபனா’ மற்றும் “முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும், பலன் உறுதிப்படாத நிலையில் மரத்திலுள்ள கனிகளை விற்பதை யும் தடை செய்தார்கள். பொற்காசு மற்றும் வெள்ளிக் காசுக்காக மட்டுமே (மரத்தி லுள்ள) உலராத பழங்களை விற்கலாம்; மற்றபடி “அராயா’வில் தவிர (மற்ற முறை களில்) அதற்கு அனுமதியில்லை (என்றும் உத்தரவிட்டார்கள்).55

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3111 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முகாபரா’, “முஹாகலா’, “முஸாபனா’ ஆகிய வியாபாரங்களையும், உண்ணும் பக்குவத்தை அடையாத (மரத்திலுள்ள) பழங்களை விற்பதையும் தடை செய்தார்கள். பொற்காசு மற்றும் வெள்ளிக் காசுக்காக மட்டுமே அந்தப் பழங்களை விற்கலாம்; மற்றபடி “அராயா’வில் தவிர (மற்ற முறைகளில்) அதற்கு அனுமதியில்லை (என்றும் உத்தரவிட்டார்கள்).

இதன் அறிவிப்பாளரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முகாபரா, முஸாபனா, முஹாகலா ஆகியவற்றுக்குப் பின்வருமாறு) எங்களிடம் விளக்கமளித் தார்கள்:

“முகாபரா’ என்பது, ஒருவர் தரிசு நிலத்தை மற்றொருவருக்குக் கொடுக்க, அவர் செலவு செய்து (மரம் நட்டு) அதன் கனிகளில் சிலவற்றை எடுத்துக்கொள்வதாகும்.

“முஸாபனா’ என்பது, மரத்திலுள்ள பேரீச்சம் செங்காயை, அளக்கப்பெற்ற உலர்ந்த பேரீச்சங் கனிகளுக்குப் பதிலாக விற்பதாகும்.

வேளாண்மையில் “முஹாகலா’ என்பது, “முஸாபனா’வைப் போன்றதாகும்; பயிரில் நிற்கும் தானியக் கதிர்களை, அளக்கப்பெற்ற தானியங்களுக்குப் பதிலாக விற்பதாகும்.

3112 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஹாகலா’, “முஸாபனா’, “முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும், கனிவதற்கு முன் மரத் (திலுள்ள பழ)த்தை (உலர்ந்த பழத்திற்குப் பதிலாக) விற்பதையும் தடை செய்தார்கள். “கனிதல்’ (“இஷ்காஹ்’) என்பது, பழம் சிவப்பாகவோ மஞ்சளாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும். “முஹாகலா’ என்பது, (அறுவடை செய்யப்படாத) பயிர் களை அளவு அறியப்பட்ட (அறுவடை செய்யப்பட்ட) உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதாகும்.

“முஸாபனா’ என்பது, பேரீச்ச மரத்(திலுள்ள பழத்)தை (பறிக்கப்பட்ட) குறிப்பிட்ட அளவிலான உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். “முகாபரா’ என்பது, விளைச்சலில் மூன்றில் ஒரு பாகத்தை அல்லது நான்கில் ஒரு பாகத்தை அல்லது அது போன்றதை (தனக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் ஒரு நிலத்தை)க் கொடுப்பதாகும்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸைத் பின் அபீ உனைஸா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், “இந்த ஹதீஸை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்ததை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் “ஆம்’ என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3113 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா’, “முஹாகலா’, “முகாபரா’ ஆகியவற்றையும் கனிவதற்கு முன் (மரத்திலுள்ள) கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சலீம் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், “கனிதல் (“இஷ்காஹ்’) என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உண்பதற்கு ஏற்றவாறு சிவப்பாக, மஞ்சளாக மாறுவது” என விடையளித்தார்கள்.

3114 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹாகலா’, “முஸாபனா’, “முஆவமா’, “முகாபரா’ ஆகியவற்றையும், “ஒரு பகுதி யைத் தவிர’ என்று கூறி விற்பதையும் தடை செய்தார்கள்.56 “அராயா’வில் மட்டும் (இவற்றுக்கு) அனுமதியளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் அபுஸ் ஸுபைர் (ரஹ்), சயீத் பின் மீனா ஆகிய இருவரில் ஒருவர் ” “முஆவமா’ என்பது, (மரத்திலுள்ள) பழங்களின் பல்லாண்டு விளைச்சலை விற்பதாகும்” என்று கூறினார்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “முஆவமா என்பது, (மரத்திலுள்ள) பழங்களின் இரண்டு போக விளைச்சலை விற்பதாகும்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

3115 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கும், பல்லாண்டு விளைச்சலை விற்பதற்கும் (முஆவமா), மரத்திலுள்ள கனிகள் (கனிந்து) நல்ல நிலையை அடைவதற்கு முன் விற்பதற்கும் தடை விதித்தார்கள்.

பாடம் : 17

நிலக் குத்தகை57

3116 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதவாது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்.58

3117 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும்; தாம் பயிரிட (விரும்ப)ôவிட்டால், அதை தம் (முஸ்லிம்) சகோதரருக்குப் பயிரிடக் கொடுத்து விடட்டும்!59

3118 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலரிடம், தமது தேவைக்குப் போக எஞ்சிய நிலங்கள் இருந்தன. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள், “யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர் அதைத் தாமே பயிரிடட்டும்; அல்லது அதைத் தம் (முஸ்லிம்) சகோதரர் எவருக் காவது (பிரதிபலன் எதிர்பாராமல் இலவச மாகப் பயிர் செய்யக்) கொடுத்துவிடட்டும்; இவ்வாறு செய்ய அவர் மறுத்தால் தமது நிலத்தை அப்படியே (பயிரிடாமல்) வைத்துக்கொள்ளட்டும்!

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60

3119 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தை வாடகைக்கு விடுவதை, அல்லது (நிலத்தைக் கொடுத்துப்) பிரதிபலன் பெறுவதைத் தடை செய்தார்கள்.61

3120 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் நிலம் உள்ளதோ அவர், அதில் தாமே பயிர் செய்யட்டும்! அவரால் பயிர் செய்ய இயலாவிட்டால், அதைத் தம் (முஸ்லிம்) சகோதரர் எவருக்காவது (பிரதி பலன் எதிர்பாராமல்) இலவசமாக(ப் பயிர் செய்ய)க் கொடுத்துவிடட்டும்! அதற்காக அவரிடம் கூலி எதையும் பெற வேண்டாம்.62

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

3121 ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சுலைமான் பின் மூசா (ரஹ்) அவர்கள் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களி டம் “நபி (ஸல்) அவர்கள், “யாரிடம் நிலம் உள்ளதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும்! அல்லது தம் சகோதரருக்குப் பயிரிடக் கொடுத்துவிடட்டும்; அதற்காக (குத்தகை) தொகை பெற வேண்டாம்’ என்று கூறினார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் உங்களுக்கு அறிவித்தார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் “ஆம்’ என்றார்கள்.

3122 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் “முகாபரா’ எனும் வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.63

3123 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமது தேவை போக எஞ்சிய நிலத்தை வைத்திருப்பவர், அதில் தாமே பயிரிடட்டும்; அல்லது தம் (முஸ்லிம்) சகோதரருக்குப் பயிரிடக் கொடுத்துவிடட்டும்! அதை விற்க வேண்டாம்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சலீம் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், ” “அதை விற்க வேண்டாம்’ என்பதன் பொருள் என்ன, குத்தகைக்கு விட வேண்டாம் என்பதா?” என்று கேட் டேன். அதற்கு அவர்கள் “ஆம்’ என்றார்கள்.

3124 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் “முகாபரா’ முறையில் விவசாயம் செய்துவந்தோம். அப்போது (குத்தகைதாரரிடம்) சூடடித்த பின் கதிர்களில் எஞ்சியுள்ள தானியத்தையும் (நீரோட்டம் நன்றாக உள்ள பகுதியின்) இன்ன விளைச்ச லையும் பெற்றுவந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யாரிடம் நிலம் உள்ளதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும். அல்லது தம் சகோத ரருக்கு (இலவசமாகப்) பயிரிடக் கொடுத்து விடட்டும். இல்லாவிட்டால் அதை அப்படியே வைத்திருக்கட்டும்!” என்று கூறினார்கள்.

3125 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் “நீர் நிலையோரம் விளையும் பயிர்களில் மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் கொடுத்துவிடுகிறோம்’ எனும் நிபந்தனையின் பேரில் நிலத்தை (குத்தகைக்கு)ப் பெற்றுவந்தோம். இது தொடர்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, “யாரிடம் நிலம் உள்ளதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும். அவ்வாறு பயிர் செய்யாவிட்டால் தம் (முஸ்லிம்) சகோதரருக்கு (பிரதிபலன் எதிர் பாராமல் பயிர் செய்ய) இலவசமாகக் கொடுத்துவிடட்டும். அவ்வாறு இலவசமாகக் கொடுக்க (விரும்ப)ôவிட்டால் அதை (பயிரிடாமல் அப்படியே) வைத்திருக்கட்டும்!” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

3126 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் நிலம் உள்ளதோ அவர் (அதில் தாமே பயிர் செய்யட்டும்! அல்லது) அதை (சகோதரர் எவருக்காவது) அன்பளிப்பாக வழங்கட்டும். அல்லது இரவலாகக் கொடுக்கட்டும்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3127 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறி விப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் அதில், “தாமே பயிரிடட்டும்! அல்லது வேறு யாருக்கேனும் பயிரிடக் கொடுக்கட்டும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

3128 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்குத் தடை விதித்தார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“(நபி (ஸல்) அவர்களது காலத்திலும் மூன்று கலீஃபாக்களின் காலத்திலும்) நாங்கள் எங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். பின்னர் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைச் செவி யுற்றபோது அதை நாங்கள் விட்டுவிட் டோம்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

3129 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தரிசு நிலத்தை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு (மட்டும் பயிரிடுவதற்காக) விற்பதைத் தடை செய்தார்கள்.

3130 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், பல்லாண்டு விளைச்சலை (முன்கூட்டியே) விற்பதற்கு (“முஆவமா’ அல்லது “பைஉஸ் ஸினீன்’) தடை விதித்தார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “(மரத்தில் விளையும்) கனிகளைப் பல்லாண்டு களுக்கு விற்பதைத் தடை செய்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

3131 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் நிலம் உள்ளதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும்! அல்லது அதைத் தம் (முஸ்லிம்) சகோதரருக்கு (பிரதிபலன் கருதா மல்) இலவசமாக(ப் பயிர் செய்ய)க் கொடுத்து விடட்டும். இவ்வாறு செய்ய மனமில்லாவிட் டால், தமது நிலத்தை அப்படியே (பயிரிடா மல்) வைத்திருக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.64

3132 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா’வையும் “ஹுகூலை’யும் தடை செய்தார்கள்.

“முஸாபனா’ என்பது, (மரத்திலுள்ள) உலராத பேரீச்சங் கனிக்குப் பதிலாக (கொய்து அளக்கப்பட்ட) கனிகளை விற்பதாகும். “ஹுகூல்’ என்பது, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாகும்.

3133 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹாகலா’வையும் “முஸாபனா’வையும் தடை செய்தார்கள்.

3134 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா’வையும் “முஹாகலா’வையும் தடை செய் தார்கள். “முஸாபனா’ என்பது, பேரீச்ச மரத்தின் உச்சியிலுள்ள (உலராத) கனிகளுக்குப் பதிலாக, உலர்ந்த கனிகளை வாங்குவதாகும். “முஹாகலா’ என்பது, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாகும்.65

3135 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முஆவியா (ரலி) அவர்களது ஆட்சி யின்) முதலாண்டுவரை “முகாபரா’ முறையில் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நாங்கள் குற்றமாகக் கருதாமல் இருந்தோம். பின்னர் (முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில்) ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்துள்ளார்கள்” என்று கூறினார் கள்.66

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

3136 மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அதனால், நாங்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை விட்டுவிட்டோம்” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

3137 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், (குத்தகைக்கு விட்டு) நம் நிலங்களிலிருந்து பயனடைய விடாமல் நம்மைத் தடுத்துவிட்டார்கள்.

3138 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும் முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியில் ஆரம்பக் கட்டத்திலும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் விளைநிலங்களைக் குத்தகைக்கு விட்டு வந்தார்கள். முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் இறுதி நாட்களில் “நபி (ஸல்) அவர்கள் (நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை) தடை செய்தார்கள்’ என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்துவரும் செய்தி இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது.

உடனே அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் அது குறித்து வினவி னார்கள். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறினார்கள்.

இதையடுத்து, இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை கைவிட்டார்கள். பின்னர் அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்கப்பட்டால் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்துள் ளார்கள் என ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கருதுகிறார்கள்” என விடையளிப் பார்கள்.67

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் இஸ்மாயீல் இப்னு உலய்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “எனவே, அதன் பின்னர் இப்னு உமர் (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைக் கைவிட்டுவிட்டார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

3139 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகில்) “பலாத்’ எனும் இடத்திலி ருந்த ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளைநிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துள்ளார்கள்” என்று தெரிவித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “இப்னு உமர் (ரலி) அவர்கள் ராஃபிஉ (ரலி) அவர்களிடம் சென்றார்கள்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது.

3140 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் நிலத்தை (குத்தகை) வாடகைக்கு விட்டுவந்தார்கள். அப்போது ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாக அவர்களிடம் ஒரு ஹதீஸ் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் ராஃபிஉ (ரலி) அவர்களை நோக்கி நடந்தார் கள். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன். ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், தம் தந்தையின் சகோதரர்கள் சிலர், “நபி (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்த கைக்கு விடுவதைத் தடை செய்தார்கள்” என்று கூறியதாகத் தெரிவித்தார்கள். எனவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நிறுத்தி விட்டார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

3141 சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் நிலங்களைக் குத்த கைக்கு விட்டுவந்தார்கள். இந்நிலையில், ராஃபிஉ பின் கதீஜ் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவருகிறார்கள் எனும் செய்தி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது.

உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களைச் சந்தித்து, “இப்னு கதீஜ்! நிலக் குத்தகை விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாங்கள் என்ன அறிவித்துவருகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், “என் தந்தையின் இரு சகோதரர்கள் -அவர்கள் இருவரும் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்கள் ஆவர்- (தம்) குடும்பத்தாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள் எனக் கூறிவந்ததை நான் செவியுற்றேன்” என்றார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்” என்று கூறி னார்கள். (ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்ட) பின் நிலக் குத்தகை தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அது கூடாது என்று) புதிய சட்டம் ஏதேனும் பிறப்பித்து, அதை நாம் அறியாமல் இருந்துவிட்டோமோ என்று அஞ்சி, நிலத் தைக் குத்தகைக்கு விடுவதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நிறுத்திவிட் டார்கள்.68

பாடம் : 18

உணவுப் பொருளுக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது.69

3142 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகம் அல்லது குறிப்பிட்ட உணவுப் பொருட்களை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டு வந்தோம்.

இந்நிலையில் ஒரு நாள் என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர் எங்களிடம் வந்து, “நமக்குப் பயனளித்துக்கொண்டிருந்த ஒரு காரியத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குத் தடை விதித்துவிட்டார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவதே அதைவிட மிகவும் நமக்குப் பயனளிக்கக்கூடியதாகும். நிலத் தைக் குத்தகைக்கு விட்டு, (விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகத்தையோ, நான்கில் ஒரு பாகத்தையோ, குறிப்பிட்ட உணவுப் பொருளையோ பெற்றுக்கொள்ள தடை விதித்தார்கள். நிலத்தின் உரிமையாளர் அதில் தாமே பயிரிட வேண்டும்; அல்லது (யாருக்கேனும்) பயிரிடக் கொடுத்துவிட வேண்டும் எனக் கட்டளையிட்டார்கள்; நிலத்தைக் குத்தகைக்கு விடுவதையும் அது அல்லாத முறையில் பயனடைவதையும் வெறுத்தார்கள்” என்றார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறி விப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “(விளைச்சலில்) மூன்றில் ஒரு பாகம் அல்லது நான்கில் ஒரு பாகத்தை எங்களுக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டு வந்தோம்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

– மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராஃபிஉ (ரலி) அவர்கள் தெரிவித்ததாகவே இடம்பெற்றுள்ளது. ராஃபிஉ (ரலி) அவர்கள் தம் தந்தையின் சகோதரர்கள் சிலரிடமிருந்து அறிவித்ததாக இடம்பெறவில்லை.

3143 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தையின் சகோதரர்) ழுஹைர் பின் ராஃபிஉ (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, “எங்களுக்கு உதவியாக இருந்த ஒன்றைச் செய்யக் கூடாது என அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள் என்று கூறினார். நான், “அது என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதே சரியானது” என்று கூறினேன்.

அதற்கு அவர் சென்னார்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய் கிறீர்கள்?” என்று கேட்டார்கள். “வாய்க் காலை ஒட்டிய பகுதியில் விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்; அல்லது பேரீச்சம் பழத்திலிருந்தோ கோது மையிலிருந்தோ குறிப்பிட்ட அளவை எங்க ளுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் அவற்றைக் குத்தகைக்கு விடுகின்றோம்” என்று நான் பதிலளித்தேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாதீர்கள். (ஒன்று) நீங்களே பயிர் செய்யுங்கள்; அல்லது பிறரிடம் (கைமாறு பெறாமல்) பயிரிடக் கொடுத்துவிடுங்கள்; அல்லது பயிரிடாமல் அப்படியே விட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.70

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தாக (மட்டுமே) இடம்பெற்றுள்ளது; அவர் தம் தந்தையின் சகோதரர் ழுஹைர் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

பாடம் : 19

பொன் மற்றும் வெள்ளி (நாயணங் களு)க்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது.71

3144 ஹன்ழலா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர் களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது பற்றிக் கேட்டேன். அவர்கள், “நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதில் குற்றமில்லை” என்றார்கள்.72

3145 ஹன்ழலா பின் கைஸ் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: குற்றமில்லை; நபி (ஸல்) அவர்களது காலத்தில் நீரோடை ஓரத்தில் விளைபவற்றை, அல்லது வாய்க்கால் முனையில் விளைபவற்றை, அல்லது விளைச்சலில் (குறிப்பிட்ட) சிலவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரிலேயே நிலத்தை வாடகைக்கு விட்டுவந்தனர். இதில் இவர் பாதிப்படைவார்; அவர் தப்பித்துக்கொள்வார். அல்லது இவர் தப்பித்துக்கொள்வார்; அவர் பாதிப்படைவார். இந்தக் குத்தகை முறையைத் தவிர வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.

ஆதலால்தான், அது கண்டிக்கப்பட்டது. அறியப்பட்ட ஒரு பொருள் பிணையாக்கப்படு மானால் அ(தற்காக நிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தில் குற்றமில்லை.

3146 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளிலேயே நாங்கள்தாம் வயல் கள் அதிகம் உடையவர்களாக இருந்தோம். நாங்கள் விளைநிலத்தில் இ(ந்தப் பகுதியில் விளைவ)து எங்களுக்குரியது; அ(ந்தப் பகுதியில் விளைவ)து அவர்களுக்குரியது என நிபந்தனையிட்டு நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில வேளைகளில் இந்தப் பகுதி விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. இவ்விதம் நிபந்தனை யிட்டு குத்தகைக்கு விட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் எங்களைத் தடுத்தார்கள்; வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத் தைக் குத்தகைக்கு விடுவதை அவர்கள் தடை செய்யவில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 20

விளைச்சலில் ஒரு பகுதிக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும் (முஸாரஆ) பணத்திற்குப் பதிலாக நிலத்தை வாடகைக்கு விடுவதும் (முஆஜரா).73

3147 அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (முஸாரஆ) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “என்னிடம் ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) தடை செய்தார்கள்’ எனத் தெரிவித்தார்கள்” என விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடை விதித்தார்கள்’ என்று (பிரதிப் பெயர்ச் சொல் லுடன்) இடம்பெற்றுள்ளது. மேலும், “நான் இப்னு மஅகில் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன்” என்றே (குறிப்புப் பெயருட னேயே) இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் எனும் (அவர்களது இயற்)பெயர் இடம்பெற வில்லை.

3148 அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் சென்று நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர் கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) தடை செய்தார்கள். பணத்திற்குப் பதிலாக நிலத்தை வாடகைக்கு விடுமாறு (முஆஜரா) உத்தரவிட்டார்கள். மேலும் “அதனால் குற்றமில்லை’ என்றும் கூறினார்கள்” என்றார்கள்.

பாடம் : 21

(பயிரிட்டுக்கொள்ள) நிலத்தை இரவலாக வழங்கல்.

3149 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்களிடம், “என்னை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர் களின் புதல்வரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர்களிடம் அவர்களுடைய தந்தை ராஃபிஉ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நிலக் குத்தகை கூடாது என) அறிவித்த ஹதீஸைப் பற்றிக் கேளுங்கள் (அல்லது நான் கேட்க வேண்டும்)” என்றேன். இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்.

மேலும், அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பொதுவாக) அ(வ்வாறு நிலத்தைக் குத்த கைக்கு விடுவ)தைத் தடை செய்தார்கள் என நான் அறிந்திருந்தால், அதை நான் செய்திருக்க மாட்டேன். இது இவ்வாறிருக்க, இதைப் பற்றி மக்களில் நன்கு அறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக்கொள்வதைவிட, தம் சகோதரருக்கு இரவலாக (பயன்படுத்திக் கொள்ளுமாறு அதை)க் கொடுத்துவிடுவது சிறந்ததாகும்’ என்று கூறினார்கள்” என்றார் கள்.74

3150 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள், விளைச்சலில் ஒரு பகுதியைத் தமக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் நிலத்தைக் குத்தகைக்கு (முகாபரா) விட்டுவந்தார்கள். நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! இந்த “முகாபரா’வை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் “முகாபரா’வைத் தடை செய்தார்கள் என மக்கள் எண்ணுகிறார்கள்” என்று சொன்னேன்.

இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அம்ரே! மக்களில் இதைப் பற்றி நன்கறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், “நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. உங்களில் ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெறுவதைவிட, தம் சகோதரருக்கு அதை இரவலாகத் தருவதே சிறந்ததாகும் என்றே கூறினார்கள்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3151 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு இன்னின்ன (குறிப்பிட்ட பணத்)தைப் பெறுவதைவிட, தம் சகோதர ருக்கு இரவலாகத் தருவதே சிறந்ததாகும்.

இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இதுவே “ஹக்ல்’ ஆகும்; அன்சாரிகளின் பேச்சு வழக்கில் இதையே “முஹாகலா’ என்பர்” என்றும் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

3152 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் (உபரியாக) நிலம் உள்ளதோ அவர் (கைமாறு கருதாமல்) தம் சகோதரருக்கு இரவலாக அதை(ப் பயிரிட)க் கொடுப்பதே சிறந்ததாகும்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

27.05.2010. 10:36

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.