18 – தலாக் (விகாகரத்து)

அத்தியாயம்: 18 – தலாக் (விகாகரத்து)

பாடம் : 1

மாதவிடாயிலிருக்கும் பெண்ணை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது; ஆயினும், (மாதவிடாய் காலத்தில்) கணவன் மணவிலக்குச் செய்தால் மணவிலக்கு நிகழவே செய்யும். எனினும், மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு அவன் கட்டளையிடப் படுவான்.

2918 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் என் மனைவியை (மாதவிடாய் காலத்தில்) மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், “உங்கள் புதல்வருக்குக் கட்ட ளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளை (தம்மிடமே) விட்டுவைக்கட்டும். பிறகு அவர் விரும்பினால், (இரண்டாவது மாதவிடாயிலி ருந்து தூய்மையான) பின்னர் தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் விரும்பினால் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட் டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் கால கட்டமே மனைவியரை மண விலக்குச் செய்ய அல்லாஹ் (2:228ஆவது வச னத்தில்) அனுமதித்துள்ள (“இத்தா’ எனும் காத் திருப்புக் காலத்தைக் கணக்கிட்டுக்கொள்வ தற்கு ஏற்ற) கால கட்டமாகும்” என்று சொன்னார்கள்.2

– நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் ஒரு தலாக் சொல்லிவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களுக்கு(ப் பின்வருமாறு) கட்டளையிட்டார்கள்:

அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத் துக்கொள்ள வேண்டும். பிறகு மனைவி மாத விடாயிலிருந்து தூய்மையாகும்வரை தம்மி டமே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தம்மிடம் இருக்கும் அவளுக்கு இரண்டாவது முறை மாதவிடாய் ஏற்பட்டு, அதன் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும்வரை காத்திருக்க வேண்டும். பின்னர் அவளைத் தலாக் சொல்ல விரும்பினால் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவள் (மாதவிடாய் காலத்தில் இல்லாமல்) தூய்மையானவளாய் இருக்கும்போது தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் இது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது “நீ உன் மனைவியை ஒரு முறை அல்லது இரு முறை தலாக் சொல்லிக்கொள்! (அப்போதுதான் அவளை நீ திரும்ப அழைத்துக்கொள்ளலாம்.) இவ்வாறு (நிகழ்ந்தபோது)தான், (திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள். நீ உன் மனைவியை மூன்று தலாக் சொல்லியிருந்தால், அவள் வேறொரு கணவனை மணக்காத வரை அவள் உனக்குத் தடை செய்யப்பட்டவளாக ஆகி விடுவாள். மேலும், உன் மனைவியை மணவிலக்குச் செய்யும்போது, அல்லாஹ் உனக்கிட்ட உத்தர விற்கு நீ மாறு செய்தவனாகவும் ஆகிவிடுவாய்” என்று ஒருவரிடம் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

2919 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் என் மனைவியை மணவிலக் குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாத விடாய் காலத்தில் இருந்தாள். ஆகவே, (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்), “உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மறுபடியும் அவளுக்கு மாதவிடாய் ஏற்படும்வரை அவளை(த் தம்மிடமே) விட்டு வைக்கட்டும். பிறகு அவள் மாதவிடாயிலி ருந்து தூய்மையடைந்ததும் அவளுடன் தாம் பத்திய உறவு கொள்வதற்கு முன் அவளை மணவிலக்குச் செய்யட்டும். அல்லது அவளைத் தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்) இந்தக் கால கட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள கால கட்டமாகும்” என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், “(மாதவிடாயின்போது சொன்ன) அந்த ஒரு தலாக் என்னவாகும்? (அது நிகழுமா, நிகழாதா?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதை ஒரு தலாக்காகக் கணித்துக்கொள்ள வேண்டும்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்ட வினாவைப் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.

2920 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் தலாக் சொல்லிவிட்டார்கள். ஆகவே, (அவர்களின் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் வின வினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு (பின்வருமாறு) கட்டளையிட்டார்கள்.

அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத் துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டாவது முறை மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும் வரை காத்திருக்க வேண்டும். பிறகு அவளு டன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் னால் (அவள் மாதவிடாய் காலத்தில் இல்லாமல் தூய்மையானவளாய் இருக்கும் போது) தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களி டம், மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை ஒருவர் தலாக் சொல்வதைப் பற்றி வினவப் பட்டால் பின்வருமாறு பதிலளிப்பார்கள்:

நீ ஒரு முறை, அல்லது இரு முறை அவளைத் தலாக் சொல்லியிருந்தால், உன் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டு, பிறகு இரண்டாவது முறை அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும்வரை நீ காத்திருக்க வேண்டும். பிறகு அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்னால் (அவள் மாதவிடாயுடன் இல்லாமல் தூய்மையுடன் இருக்கும்போது) தலாக் சொல்ல வேண்டும். இவ்வாறே எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால், நீ அவளை மூன்று தலாக் சொல்லியிருந்தால், நீ உன் மனைவியை மணவிலக்குச் செய்யும் விஷயத்தில் அல்லாஹ் பிறப்பித்த கட்டளைக்கு மாறு செய்துவிட்டாய். ஆனால், அவள் உன்னிடமிருந்து பிரிந்துவிட்டாள் (தலாக் நிகழ்ந்துவிட்டது).

2921 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். பிறகு (என் தந்தையிடம்,) “நீங்கள் உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவளை அவர் மணவிலக்குச் செய்த மாதவிடாய் நாட்களை விடுத்து, அதற்கடுத்த மாதவிடாய்வரை (காத்திருக்கட்டும்). பிறகு அவளை மணவிலக்குச் செய்ய வேண்டுமென அவருக்குத் தோன்றினால், அவள் அந்த மாத விடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவளு டன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் அவளைத் தலாக் சொல்லிக்கொள்ளட்டும்! இதுவே அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதைப் போன்று “இத்தா’வுக்குரிய தலாக் ஆகும்.

இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை (அவர் மாத விடாயிலிருந்தபோது) ஒரு தலாக் சொல்லி யிருந்தார்கள். அது தலாக்காகவே கருதப் பட்டது. பின்னர் அவரை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கேற்ப திரும்ப அழைத்துக்கொண்டார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “எனவே, நான் என் மனைவியை திரும்ப அழைத்துக்கொண்டேன். நான் அவளக்குச் சொன்ன தலாக்கைத் தலாக் காகவே கணித்தேன்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

2922 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப் போது நபி (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்), “உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பின்னர் அவள் மாதவிடாயிலிருந்து தூய்மை யடைந்திருக்கும்போது, அல்லது (“இத்தா’வைக் கணக்கிடுவதற்கு வசதியாக) அவள் கர்ப்பமுற்றி ருக்கும்போது அவளைத் தலாக் சொல்லிக்கொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2923 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்) “உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, பிறகு இரண்டாவது மாத விடாய் ஏற்பட்டுப் பிறகு அதிலிருந்தும் தூய் மையடையட்டும்! பின்னர் அவர் (விரும்பி னால்) தலாக் சொல்லிக்கொள்ளட்டும். அல்லது தம்மிடம் (மனைவியாக) வைத்துக்கொள்ளட் டும்!” என்று சொன்னார்கள்.

2924 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னால் சந்தேகிக்க முடியாத சிலர் என் னிடம் “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்தபோது மூன்று தலாக் சொல்லிவிட்டார்கள்; பின்னர் திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டார்கள்” என இருபது வருடங்களாக அறிவித்துவந்தனர். நான் அவர்களைச் சந்தேகிக்க முடியாமலும், (மூன்று தலாக் சொன்னவர் தம் மனைவியை எப்படித் திரும்ப அழைக்க முடியும் என்பதால்) அந்த ஹதீஸை(ப் பற்றிய உண்மையை) அறியாதவனாகவும் இருந்துவந்தேன்.

இந்நிலையில், அபூஃகல்லாப் யூனுஸ் பின் ஜுபைர் அல்பாஹிலீ (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் நம்பத் தகுந்தவராய் இருந்தார்கள். அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் என்னிடம் “நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது ஒரு தலாக் சொல்லிவிட்டேன். அப்போது அவளைத் திரும்ப அழைத்துக்கொள்ளுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது” என்று கூறினார்கள்.

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் “(மாதவிடாய் காலத்தில் செய்யப்பட்ட இந்த மணவிலக்கு,) மணவிலக்காகக் கருதப்பட்டதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(மண விலக்காகக் கருதப்படாமல்) வேறென்ன? ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும், அதை அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள்.3

– மேற்கண்ட ஹதீஸ் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் அவற்றில், “ஆகவே, உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டார்கள். அப்போது அவர்களிடம் (“உங்கள் புதல்வருக்குக் கட்ட ளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!’ என) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள் என இடம்பெற்றுள்ளது.

2925 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “ஆகவே உமர் (ரலி) அவர்கள் அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவி னார்கள். அப்போது, “உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு தாம்பத்திய உறவு நடைபெறாத தூய்மையான நிலையில் அவளை மணவிலக்குச் செய்யட்டும்!” என்றும், “இத்தாவை எதிர்கொள்வதற்கு ஏற்ற நாட்களில் அவளை அவர் மணவிலக்குச் செய்யட்டும்!” என்றும் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.

2926 யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனை வியை மணவிலக்குச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்துல்லாஹ் பின் உமரை (அதாவது என்னை) உங்களுக்குத் தெரியுமா? நான் மாதவிடாயிலிருந்த என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; பின்னர் அவள் தனது “இத்தா’வை எதிர்பார்த்திருக்க வேண்டும் (பிறகு விரும்பினால் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்!) என உத்தரவிடுங்கள்” என்று கூறினார்கள்.

தொடர்ந்து யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் மாதவிடாயிலிருந்த தம் மனைவி யைத் தலாக் சொல்லிவிட்டால், அதை மணவிலக்காக நீங்கள் கருதுவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(அதை மணவிலக்காகக் கருதாமல்) வேறென்ன? ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும், (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள்.

2927 யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள் ளட்டும்! அவள் (மாதவிடாயிலிருந்து) தூய்மை யடைந்ததும் விரும்பினால் அவர் மண விலக்குச் செய்துகொள்ளட்டும்! (என்று உத்தர விடுங்கள்)” என்று கூறினார்கள்.

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “(மாதவிடாய் காலத்தில் சொல் லப்பட்ட) அந்த மணவிலக்கை நீங்கள் மண விலக்காகக் கருதினீர்களா?” என்று கேட்டேன். அதற்கு “ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும், (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் மணவிலக்கைத் தடுக்க என்ன உள்ளது?” என்று கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2928 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், அவர்களால் மணவிலக்குச் செய்யப்பட்ட அவர்களுடைய மனைவியைப் பற்றிக் கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் கள், “நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். இது பற்றி (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்), “நீங்கள் உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள் ளட்டும்! அவள் (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் அவள் தூய்மையாக இருக்கும்போது அவளை மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்!” என்று கூறினார்கள். ஆகவே, நான் என் மனைவி யைத் திரும்ப அழைத்துக்கொண்டேன். பிறகு அவள் தூய்மையுடனிருந்தபோது அவளை நான் மணவிலக்குச் செய்தேன்” என்று கூறினார்கள்.

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “(உங்கள் மனைவி) மாதவிடாயிலிருந்தபோது நீங்கள் சொன்ன தலாக்கை மணவிலக்காகக் கருதினீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் (எனது கடமையை நிறைவேற்ற) இயலா மலும் அதை அறிந்துகொள்ளாமலும் இருந் தாலும்கூட, அதை நான் மணவிலக்காகக் கருதாமல் எப்படி இருக்க முடியும்?” என்று கேட்டார்கள்.

2929 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாயிலிருந்த என் மனை வியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரி வித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என் தந்தையிடம்), “உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு (மாத விடாயிலிருந்து) அவள் தூய்மையடைந்ததும் மணவிலக்குச் செய்யட்டும்!” என்று கூறினார் கள்.

அறிவிப்பாளர் அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “(மாதவிடாயின்போது சொல்லப்பட்ட அந்தத் தலாக்கை) மணவிலக்காக நீங்கள் கருதினீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(தலாக் காகக் கருதாமல்) வேறென்ன?” என்று கேட்டார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், (மாதவிடாயின்போது நீங்கள் சொன்ன தலாக்கை) மணவிலக்காகக் கருதுகிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (தலாக்காகக் கருதாமல்) வேறென்ன? எனக் கேட்டார்கள்” என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.

2930 தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“ஒருவர் தம் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “அப்துல்லாஹ் பின் உமர் (அதாவது நான்) யார் என்று உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்’ என்றேன். அதற்கு அவர்கள், “நான் என் மனைவியை, அவள் மாதவிடா யிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இச்செய்தியைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும் என்று கூறினார்கள்” என்றார்கள்.

இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த அளவு மட்டுமே நான் இந்த ஹதீஸை என் தந்தை தாவூஸ் (ரஹ்) அவர் களிடமிருந்து செவியுற்றேன்.) அவர்கள் இதை விடக் கூடுதலாக வேறொன்றும் கூறியதை நான் கேட்கவில்லை.

2931 அபுஸ் ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அஸ்ஸா’ என்பாரின் முன்னாள் அடிமை யாயிருந்த அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் தம் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மண விலக்குச் செய்துவிட்டார். இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார். -அப்போது (அங்கிருந்த) நான் அதைச் செவியுற்றுக்கொண்டிருந்தேன்.- அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர் கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அப்துல்லாஹ் பின் உமர், மாதவிடாயிலிருந்த தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார்” என்று கூறி, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவளைத் திரும்ப அழைத்துக்கொண்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், “மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்; அல்லது தம்மிடமே (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்!” என்றார்கள்.

மேலும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் “நபியே! பெண்களை நீங்கள் மணவிலக்குச் செய்தால், அவர்கள் “இத்தா’வைக் கடைப்பிடிப்பதற்கேற்ப அதன் ஆரம்பப் பகுதியில் மணவிலக்குச் செய்யுங்கள்’ (65:1) என்ற வசனத்தை (ஓர் ஓதல் முறைப்படி) ஓதிக் காட்டி னார்கள்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “உர்வா’ என்பாரின் முன்னாள் அடிமையாயிருந்த அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கேட்டார்கள். அப்போது நான் அதைச் செவி யுற்றுக்கொண்டிருந்தேன் என அபுஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது.

முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:

“உர்வா என்பாரின் முன்னாள் அடிமையா யிருந்த’ என்று அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர் கள் அறிவித்திருப்பது தவறாகும். அப்துர் ரஹ் மான் பின் அய்மன் (ரஹ்) அவர்கள், “அஸ்ஸா’ என்பாரின் முன்னாள் அடிமையே ஆவார்.4

பாடம் : 2

முத்தலாக்

2932 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. பின்னர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “நிதானமாகச் செயல்பட்டு (மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்று)வந்த ஒரு விஷயத்தில் மக்கள் (இப்போது) அவசரம் காட்டுகிறார்கள். எனவே, அதை (முத்தலாக்கை) அவர்களுக்கெதிராக (மீட்டுக்கொள்ள இயலாதவாறு) நாம் செயல்படுத்தினால் என்ன?” என்று கூறி, அவ்வாறே அதைச் செயல்படுத்தி னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2933 தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபுஸ்ஸஹ்பா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோரது காலத் திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியில் (முதல்) மூன்று வருடங்களிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே கருதப்பட்டுவந்ததை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “ஆம்’ என்றார்கள்.

இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

2934 தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபுஸ்ஸஹ்பா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “உங்களிடமுள்ள அரிய தகவல்களைக் கூறுங்கள்; முத்தலாக், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களது காலத்திலும் ஒரு தலாக்காக இருக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஆம்; அவ்வாறுதான் இருந்தது. பின்னர் உமர் (ரலி) அவர்களது காலத்தில் மக்கள் தலாக்கை மலிவாக்கி அவசரக் கோலத்தில் செய்ய ஆரம்பித்தபோது, உமர் (ரலி) அவர்கள் முத்தலாக்கை அவர்கள்மீது செல்லுபடியாக்கினார்கள்” என்று கூறினார்கள்.5

பாடம் : 3

ஒருவர் தம் மனைவியிடம் “நீ எனக்குத் தடை செய்யப்பட்டவள் (ஹராம்)’ என்று மணவிலக்குச் செய்யும் நோக்க மின்றி கூறினால், (அது மணவிலக்கு ஆகாது; எனினும், சத்திய முறிவுக்கான) பரிகாரம் செய்வது கடமையாகும்.6

2935 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“(ஒருவர் தம் மனைவியை நோக்கி “நீ எனக்குத் தடை செய்யப்பட்டவள்’ எனக் கூறித் தமக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றை) விலக்கிக்கொள் வதானது, பரிகாரம் செய்ய வேண்டிய சத்தியம் ஆகும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர் கள் கூறிவிட்டு, “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (33:21ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.7

2936 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “ஒருவர் தம் மனைவியை நோக்கி “நீ எனக்குத் தடை செய்யப்பட்டவள்’ எனக் கூறி(த் தமக்கு அனு மதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யப்பட்ட தாக ஆக்கி)னால், அது பரிகாரம் செய்ய வேண்டிய சத்தியமாகும்” என்று கூறிவிட்டு, “உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்றும் கூறினார்கள்.

2937 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர் களது அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் “நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் “தங்களிடமிருந்து கரு வேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்க வேண்டும்” எனக் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்.

அவ்வாறே எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, முன்பு பேசி வைத்திருந்தபடி கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அப்படியெல்லாம் இல்லை.) மாறாக, ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவு தான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ் வாறு செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். ஆகவே, “நபியே! உங்களுடைய துணைவிய ரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்க ளுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக்கொள்கிறீர்கள்?” என்று தொடங்கி “நீங்கள் இருவரும் இதற்காக அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்க ளுக்கே நன்று)” என முடியும் (66:1-4) வசனங்கள் அருளப்பெற்றன.

(இந்த 66:4ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) “நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும் ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது.

(66:3ஆவது வசனத்தில்) “நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்” என்று அல்லாஹ் கூறியிருப்பது, “இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக ஒருபோதும் அதை நான் அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதையே குறிக்கிறது.8

2938 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்பமானவையாக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் சென்று அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தபோது, ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.

உடனே நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! இ(தை நிறுத்துவ)தற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா (ரலி) அவர் களிடம் அதைப் பற்றிக் கூறி, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். “இல்லை’ என்று உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். உடனே “இது என்ன வாடை?’ என்று அவர்களிடம் கேளுங் கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்)வாடை வீசுவதைக் கடுமை யானதாகக் கருதுவார்கள்.) அப்போது அவர் கள், “எனக்கு ஹஃப்ஸா தேன் (கலந்த) பானம் புகட்டினார்’ என்று உங்களிடம் கூறுவார்கள். உடனே நீங்கள் “இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (அதன் பிசினை உட் கொண்டு)விட்டு வந்திருக்கலாம். (அதனால் தான் வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிட மும்) சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களிடம் சென்றபோது, (நான் சொன்ன படி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலுக்கு வந்தபோதே, உனக்குப் பயந்து நீ என்னிடம் சொன்னபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்ல முனைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நெருங்கியதும் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை’ என்று பதிலளித்தார்கள். “அப்படியானால் இது என்ன வாடை?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹஃப்ஸா எனக்குத் தேன் (கலந்த) பானம் புகட்டினார்” என்று சொன்னார்கள். நான், “அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (அதன் பிசினை உட்கொண்டு)விட்டு வந்திருக்கலாம். (அதனால்தான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)” என்று கூறினேன்.

(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, அவர்களிடம் நானும் அவ்வாறே கூறினேன். பிறகு அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்றபோது, அவரும் அவ்வாறே கூறினார். பின்னர் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றபோது, “அல்லாஹ்வின் தூதரே! தங்க ளுக்குச் சிறிதளவு தேன் தரட்டுமா?” என்று கேட்டார். அவர்கள் “அது எனக்குத் தேவையில்லை” என்றார்கள்.

(இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (அதை அருந்தவிடாமல்) நாம் தடுத்துவிட் டோமே!” என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், “சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது)” என்று சொல்வேன்.9

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

-இதே ஹதீஸ் மேலும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 4

ஒருவர் தம் மனைவிக்கு (தம்முடன் சேர்ந்து வாழவும் பிரிந்துவிடவும்) விருப்ப உரிமை அளிப்பதானது, அவரது எண்ணத்தைப் பொறுத்தே தவிர மணவிலக்கு ஆகாது.10

2939 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்து விடலாம் என) உரிமையளிக்குமாறு அல்லாஹ்வின் தூதருக்கு (இறைவனால்) கட்டளையிடப்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: “(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்” (என்று அதைச் சொல்லிவிட்டு,) “நீ உன் பெற்றோ ரிடம் அனுமதி கேட்காத வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள். என் பெற்றோர் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப் போவதில்லை என்பது நபியவர்களுக்குத் தெரிந்திருந்தது.

பிறகு அவர்கள் “நபியே! உங்கள் துணை வியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க் கையையும் அதன் அலங்காரத்தையும் விரும் பினால், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் விடு வித்துவிடுகிறேன். நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகையும் விரும்பினால், உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” (33:28,29) எனும் வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், “இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் எதற்காக அனுமதி கேட்க வேண்டும்? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரை யும் மறு உலகையுமே விரும்புகிறேன்” என்று சொன்னேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரும் என்னைப் போன்றே நடந்துகொண்டனர்.11

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2940 முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் “(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர் களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) உங்களுடன் இருக்கவைக்கலாம்” (33:51) எனும் இறைவசனம் அருளப்பெற்ற பின்னரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் (மற்றொரு மனைவி யிடம் செல்ல விரும்பினால் அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி) எங்களிடம் அனுமதி கேட்பார்கள்” என்று சொன்னார்கள்.

அதற்கு நான், “அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் அனுமதி கேட்கும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக் கொடுக்கும்படி) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களை விட்டுக் கொடுக்கமாட்டேன்’ என்று சொல்வேன்” என்றார்கள்.12

– மேற்கண்ட ஹதீஸ் முஆதா பின்த் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள் ளது.

2941 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்ப உரிமை அளித்தார்கள். அ(வ்வாறு அவர்கள் உரிமை அளித்த)தை நாங்கள் மணவிலக்காகக் கருதவில்லை.13

2942 மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் மனைவிக்கு விருப்ப உரிமை அளித்து, அவள் என்னையே தேர்ந்தெடுத் துக்கொண்டுவிட்டால், அவளுக்கு (ஆரம்பத் தில்) ஒன்றென்ன! நூறு அல்லது ஆயிர(ம் விவாகர)த்திற்கு நான் உரிமை அளித்திருந்தா லும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவிய ரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்ப உரிமை அளித்தார்கள். அதுவென்ன தலாக்காகவா ஆகிவிட்டது?” என்று கேட்டார்கள்.14

2943 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்ப உரிமை அளித்தார்கள். அ(வ்வாறு அவர்கள் உரிமை அளித்த)து மணவிலக்காக இருக்கவில்லை.

2944 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்தி லிருந்து விலகிக்கொள்ள) விருப்ப உரிமை அளித்தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை(ச் சார்ந்து வாழ் வதை)யே தேர்ந்தெடுத்தோம். இ(வ்வாறு உரிமை அளித்த)தை அவர்கள் தலாக் எனக் கருதவில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

2945 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (விரும்பி னால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) விருப்ப உரிமை அளித் தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை(ச் சார்ந்து வாழ்வ தை)யே தேர்ந்தெடுத்தோம். அ(வ்வாறு அவர்கள் உரிமை அளித்த)தை, (மணவிலக்கில்) எதுவாகவும் கருதவில்லை.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

2946 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது வீட்டுக்கு) வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார்கள். அப்போது மக்கள் பலர், தங்களில் எவருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடைக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டு வாசலி லேயே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அனுமதி கிடைத்ததும் அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார்கள். அவர் களுக்கும் அனுமதி கிடைத்தது. (அவர்களும் உள்ளே நுழைந்தார்கள்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றி தம் துணைவியர் இருக்க, பேச முடியாத அளவிற்குத் துக்கம் மேலிட்டவர்களாக மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “நபி (ஸல்) அவர்களைச் சிரிக்க வைக்க எதையேனும் நான் சொல்லப்போகிறேன்” என்று (மனதிற்குள்) சொல்லிக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி (ஹபீபா) பின்த் காரிஜா என்னிடத் தில் குடும்பச் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கேட்க, நான் அவரை நோக்கி எழுந்து அவரது கழுத்தில் அடித்துவிட்டேன் என்றால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். “இதோ நீங்கள் காண்கிறீர்களே இவர்களும் என்னி டம் செலவுத் தொகையை (உயர்த்தித் தருமாறு) கோரியே என்னைச் சுற்றிக் குழுமியுள்ளனர்” என்று கூறினார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம்முடைய புதல்வி) ஆயிஷா (ரலி) அவர்களை நோக்கி, அவர்களது கழுத் தில் அடிக்க எழுந்தார்கள். அடுத்து உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வி) ஹஃப்ஸாவை நோக்கி, அவர்களது கழுத்தில் அடிப்பதற்காக எழுந்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாததை நீங்கள் கேட்கிறீர் களா?” என்று அவர்களிருவருமே கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இல்லாத எதையும் ஒருபோதும் நாங்கள் கேட்கமாட்டோம்” என்று கூறினர்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு “நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கி, “உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” என்று முடியும் (33:28,29) இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.

இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார் கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத் திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “நான் கூறியதைத் தாங்கள் மற்றத் துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனா கவோ, எவரையும் வழிதவறச் செய்பவனா கவோ அனுப்பவில்லை. மாறாக, (இறை நெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள்.

பாடம் : 5

“ஈலா’ச் செய்வது, மனைவியரிடமிருந்து விலகியிருப்பது, அவர்களுக்கு விருப்ப உரிமை அளிப்பது மற்றும் “அவருக் கெதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவினால்’ (66:4) எனும் இறைவசனத் தொடர்.15

2947 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு மாத காலம் தம் துணைவியரிடம் நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்து) தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தபோது, நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கு மக்கள் (கவலையோடு) சிறு கற்களைத் தரையில் எறிந்து கொண்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார் கள்” என்று கூறிக்கொண்டிருந்தனர். – இது பர்தா பற்றிய சட்டம் அருளப்பெறுவதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சியாகும்.-16 “அன்று என்ன நடந்தது என்பதை நான் அறிந்தே தீருவேன்” என்று (எனக்குள்) நான் கூறிக்கொண்டேன்.

பிறகு நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல் வியே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உங்களது தகுதி உயர்ந்துவிட்டதா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சினை? (முதலில்) நீங்கள் உங்க ளது பெட்டகத்தை (வீட்டை)க் கவனியுங்கள் (உங்கள் புதல்வி ஹஃப்ஸாவிற்கு அறிவுரை கூறுங்கள்)” என்று கூறினார்கள். ஆகவே, நான் (என் புதல்வி) ஹஃப்ஸா பின்த் உமரிடம் சென்று, “ஹஃப்ஸா! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மன வேதனைப்படுத்தும் அளவிற்கு உனது தகுதி உயர்ந்துவிட்டதா? அல்லாஹ்வின் மீதாணையாக! (நீ இவ்வாறு செய்தால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நேசிக்கமாட்டார்கள் என்பதை நீ அறிந்தே உள்ளாய். நான் மட்டும் இல்லையென்றால், உன்னை அவர்கள் மணவிலக்குச் செய்திருப்பார்கள்” என்று கூறினேன்.

இதைக் கேட்டு ஹஃப்ஸா கடுமையாக அழுதார். நான் ஹஃப்ஸாவிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இப்போது) எங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, “மாடியி லுள்ள அவர்களது தனி அறையில் அவர்கள் இருக்கிறார்கள்” என்றார்கள்.

உடனே நான் அங்கு சென்றேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளர் ரபாஹ், அந்த மாடியறையின் வாசற்படியில், செதுக்கப்பட்ட மரக் கட்டையின் மீது கால்களைத் தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தார். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏறுவதற்கும் இறங்கு வதற்கும் பயன்படுத்திய பேரீச்ச மரக் கட்டையாகும்.

நான் (அவரைக்) கூப்பிட்டு, “ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேள்” என்றேன். அப்போது ரபாஹ் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த) அந்த அறையை உற்றுப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்ல வில்லை. பின்னர் (மீண்டும்) நான், “ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள்” என்றேன்.

ரபாஹ் அந்த அறையைப் பார்த்தார். பிறகு என்னையும் பார்த்தார். ஆனால், பதிலேதும் சொல்லவில்லை. பின்னர் நான் குரலை உயர்த்தி, “ரபாஹே! எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேள். நான் (என் மகள்) ஹஃப்ஸா வுக்(குப் பரிந்து பேசுவதற்)காக வந்துள்ளேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எண்ணிவிட்டார்கள் என நான் நினைக்கி றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் மகளின் கழுத்தை வெட்டுமாறு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டால் கூட நிச்சயமாக அவரது கழுத்தை வெட்டி விடுவேன்” என்று உரத்த குரலில் சொன் னேன்.

அப்போது ரபாஹ் என்னை ஏறிவரச் சொல்லி சைகை செய்தார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தவுடன் அவர்கள் தமது கீழாடையைச் சுருட்டி (ஒழுங்குபடுத்தி)னார்கள். அப்போது அவர்கள் உடலில் அந்த ஆடையைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அந்தப் பாய் அவர்களது விலாப் புறத்தில் அடையாளம் பதித்திருந்தது. அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தனி அறையை நோட்டமிட்டேன். அங்கு ஒரு “ஸாஉ’ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையும், அறையின் ஒரு மூலையில் அதே அளவு கருவேல இலையும் இருந்தன. நன்கு பதனிடப்படாத ஒரு தோல் அங்கு தொங்கவிடப்பட்டிருந்தது.

(இதைக் கண்ட) என் கண்கள் (என்னையும் அறியாமல்) கண்ணீர் சொரிந்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டார் கள். நான், “அல்லாஹ்வின் நபியே! என்னால் எவ்வாறு அழாமலிருக்க முடியும்? இந்தப் பாய் உங்களது விலாப் புறத்தில் அடையாளப்படுத்தியுள்ளதே. (இதோ) இதுதான் உங்களது தனி அறை. இதில் நான் காணுகின்ற (விலை மலிவான) சில பொருட்களைத் தவிர வேறெதையும் நான் காண வில்லை. அந்த (பாரசீகம் மற்றும் இத்தாலி அரசர்களான) குஸ்ருவும் சீசரும் கனி வர்க்கங்களிலும் நதிகளிலும் (உல்லாசமாக) இருக்கின்றனர். நீங்களோ அல்லாஹ்வின் தூதரும் அவனால் தேர்ந்தெடுக் கப்பட்டவரும் ஆவீர்கள். ஆனால், உங்களது தனி அறை இவ்வாறு இருக்கிறதே!” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கத்தாபின் புதல்வரே! நமக்கு மறுமையும் அ(ம் மன்ன)வர்களுக்கு இம்மையும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?” என்று கேட்டார்கள். நான் “ஆம் (திருப்திதான்)” என்றேன்.

அந்த அறைக்குள் நுழைந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தைக் கண்டிருந்தேன். ஆகவே, “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைப் பற்றித் தங்களுக்கு என்ன சஞ்சலம்? நீங்கள் அவர்களை மணவிலக்குச் செய்திருந்தாலும் (நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை. ஏனெனில்,) தங்களுடன் (தங்களுக்கு உதவி புரிவதற்கு) அல்லாஹ் இருக்கின்றான். அவனுடைய வானவர்களும் ஜிப்ரீலும் மீக்காயீலும் நானும் அபூபக்ரும் இதர இறைநம்பிக்கையாளர்களும் தங்களு டன் இருக்கின்றோம்” என்று சொன்னேன்.

நான் ஒரு சிறு விஷயத்தைக் கூறினாலும் -நான் அல்லாஹ்வைப் புகழுகிறேன்- நான் கூறிய சொல்லை அல்லாஹ் மெய்யாக்கி வைப்பான் எனும் நம்பிக்கை எனக்கு இருக் கவே செய்தது. அப்போது “உங்களை அவர் மணவிலக்குச் செய்துவிட்டால் உங்களுக்குப் பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவருடைய இறைவன் அவருக்கு வழங்க முடியும்” (66:5) என்ற விருப்ப உரிமை அளிக்கும் இந்த வசனமும், “அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால் அல்லாஹ் அவருடைய அதிபதி ஆவான். ஜிப்ரீலும் நம்பிக்கை கொண்டோரில் நல்லவர்களும் வானவர்களும் அதன் பின் (அவருக்கு) உதவுவார்கள்” (66:4) எனும் இறைவசனமும் அருளப்பெற்றன. அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வி ஆயிஷா (ரலி) அவர்களும் (என் புதல்வி) ஹஃப்ஸாவுமே நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரை மிகைத்தவர்களாக இருந்தனர்.

ஆகவே, நான், “அல்லாஹ்வின் தூதரே! (உங்கள் துணைவியரான) இவர்களை நீங்கள் மண விலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இல்லை’ என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) முஸ்லிம்கள் சிறு கற்களைத் தரையில் எறிந்துகொண்டு (ஆழ்ந்த கவலையுடன்) இருந்தனர்; “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்” என்று கூறிக்கொண்டுமிருந்தனர். நான் இங்கிருந்து இறங்கிச் சென்று, “தாங்கள் தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை என அவர்களிடம் தெரிவித்துவிடவா?” என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; நீங்கள் விரும்பினால் (அவ்வாறு செய்யுங்கள்)” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்திலிருந்து கோபம் விலகும் வரையிலும், பற்கள் தெரியுமளவிற்கு அவர்கள் சிரிக்கும்வரையிலும் அவர்களிடம் நான் பேசிக்கொண்டேயிருந்தேன். -அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே அழகான பற்கள் உடையவராக இருந்தார்கள்.- பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த மாடியறையிலிருந்து) இறங்கினார்கள். நானும் இறங்கினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்ச மரக் கட்டையைத் தமது கரத் தால் பற்றாமலேயே தரையில் நடப்பதைப் போன்று (சாதாரணமாக) நடந்தார்கள். (ஆனால்,) நான் அந்த மரக் கட்டையைப் பிடித்துக்கொண்டே இறங்கினேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த அறை யில் இருபத்தொன்பது நாட்கள் மட்டுமே தங்கி யுள்ளீர்கள் (ஆனால், ஒரு மாதம் மனைவி யரிடமிருந்து விலகியிருக்கப்போவதாக சத்தியம் செய்திருந்தீர்களே?)!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்” என்று சொன்னார்கள்.

பின்னர் நான் பள்ளிவாசலின் தலைவாயிலில் நின்றுகொண்டு உரத்த குரலில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்யவில்லை” என்று கூறினேன். அப்போது, “பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதை அவர்கள் (உடனே) பரப்பிவிடுகின்றனர். அதை இறைத்தூதரிடமும் தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டுசென்றிருந்தால் அதை ஆய்வு செய்வோர் அறிந்துகொண்டிருப்பர்” (4:83) எனும் இந்த வசனம் அருளப்பெற்றது. நானே அச்செய்தியை ஆய்வு செய்தவனாக இருந்தேன்.

ஆக, மனைவியருக்கு விருப்ப உரிமை அளிப்பது தொடர்பான (33:28ஆவது) வசனத்தை, வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் அருளினான்.

2948 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஓராண்டு காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் மீதிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காரணமாகக் கேட்பதற்குத் துணிவு வரவில்லை.

(ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களு டன் புறப்பட்டேன். அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள் தமது இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக “அராக்’ (மிஸ்வாக்) மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டு வரும்வரை நான் (அவர் களை எதிர்பார்த்தபடி) அவர்களுக்காக நின்று கொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல் லலானேன்.

அப்போது அவர்களிடம் நான், “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் (நபியவர்களைச் சஞ்சலப்படுத்தும் வகையில்) ஒருவருக்கொருவர் (கூடிப் பேசி) உதவி புரிந்த வர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஹஃப்ஸாவும் ஆயிஷா (ரலி) அவர்களும்தாம்” என்று பதிலளித்தார்கள்.17

உடனே நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஓராண்டு காலமாக இது குறித்து உங்களிடம் நான் கேட்க வேண்டுமென எண்ணியிருந்தேன். ஆனால், உங்கள்மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் துணிவு வரவில்லை” என்று சொன்னேன். அதற்கு “(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால், என்னிடம் அது குறித்துக் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அதை நான் அறிந்திருந்தால், உங்களுக்கு நான் தெரிவிக் கிறேன்” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்ப தாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தொகை, சொத்துரிமை ஆகிய)வற்றின் பங்குகளை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது).

இந்நிலையில் (ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி, “நீங்கள் இப்படி இப்படிச் செய்யலாமே!” என்று என்னிடம் (ஆலோசனை) கூறினார். அவரிடம் நான், “உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், “கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொல்கின்ற) உங்களைப் பார்த்து நான் வியப்படைகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமாக இருந்தார்கள்” என்று சொன்னார்.

உடனே நான் எழுந்து, எனது மேலங் கியை எடுத்துக்கொண்டு, அப்படியே அங்கி ருந்து புறப்பட்டு ஹஃப்ஸாவிடம் சென்றேன். “என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் முழுக் கக் கோபத்துடன் இருந்தார்களாமே (அது உண்மையா)?” என்று ஹஃப்சாவிடம் கேட் டேன். அதற்கு ஹஃப்ஸா, “அல்லாஹ்வின் மீதாணையாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரான) நாங்கள் அவர் களுடன் விவாதிப்பதுண்டு” என்றார். அதற்கு நான், “அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதரின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கிறேன் என்பதை அறிவாயாக! அருமை மகளே! தம்முடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை (ஆயிஷாவை)ப் பார்த்து நீயும் துணிந்துவிடாதே!” என்று (அறிவுரை) சொன்னேன்.

பிறகு நான் நேராக (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியான) உம்மு சலமாவிடம் (அவருக்கு அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் என் (தாய்வழி) உறவினரா வார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா என்னிடம், “கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகிறேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டுவந்த நீங்கள், இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்களே!” என்று கூறினார். உம்மு சலமா தம் பேச்சால் என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி (கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். ஆகவே, நான் அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன்.

அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாத போது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.

(அந்தக் கால கட்டத்தில் சிரியா நாட்டு) “ஃகஸ்ஸான்’ வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா)மீது படையெடுக்கத் திட்டமிட்டிருப்பதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைக் குறித்த அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது.

இந்நிலையில் (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் வந்து (என் வீட்டுக்) கதவைத் தட்டி னார். “திறங்கள்; திறங்கள்’ என்றார். (கதவைத் திறந்த) உடன் நான், “ஃகஸ்ஸானிய (மன்ன)ன் வந்துவிட்டானா?” என்று கேட்டேன். அதற்கு அவர், “அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து விலகிவிட்டார்கள்” என்றார்.

உடனே நான், “ஹஃப்ஸா, ஆயிஷா ஆகி யோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!” என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து)கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் தமக்குரிய மாடியறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாகவே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிறப் பணியாளர் ஒருவர் (ரபாஹ்), ஏணியின் முதற்படியில் இருந்தார். அவரிடம் நான், “இதோ உமர் (வந்துள்ளார் என அல்லாஹ்வின் தூதரிடம் கூறி அனுமதி கேள்)” என்றேன்.

எனக்கு அனுமதி கிடைத்தபோது (அந்த அறைக்குச் சென்று) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.

அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களது தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பெற்ற தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கு அருகில் கருவேல இலைகள் குவிக்கப்பட்டி ருந்தன. அவர்களது தலைமாட்டில் பதனிடப்படா தோல்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அப்போது அவர்களின் விலாப் புறத்தில் ஈச்சம் பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு நான் அழுது விட்டேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஏன் அழுகிறீர்கள்?” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மற்றும் இத்தாலி மன்னர்களான) குஸ்ருவும் சீசரும் இருக்கும் நிலையே வேறு! (தாராளமான உலகச் செல்வங்களுடன் உல்லாசமாக வாழ்கின்றனர்.) தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே?” என்றேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் திருப்திப்பட வில்லையா?” என்று கேட்டார்கள்.18

2949 மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “நான் உமர் (ரலி) அவர்களுடன் (ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டு மதீனா நோக்கி) வந்தேன். நாஙகள் “மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற் றுள்ளன. மேலும், அதில் “அவ்விரு பெண் களைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு “ஹஃப்ஸாவும் உம்மு சலமாவுமே அவ்விரு வரும்’ என உமர் (ரலி) அவர்கள் விடையளித் தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. மேலும் “நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க ளின் துணைவியரின்) அறைகளுக்குச் சென் றேன். ஒவ்வொரு வீட்டிலும் அழுகைச் சப்தம் கேட்டது என்று உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்” என்றும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை ஒரு மாத காலம்வரை நெருங்கமாட்டேன்” எனச் சத்தியம் (ஈலா) செய்திருந்தார்கள்; இருபத்தொன்பதாவது நாளானதும் (அந்த அறையிலிருந்து) இறங்கித் தம் துணைவியரிடம் சென்றார்கள்” என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

2950 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இரு துணைவியர் யார் என்பது பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நீண்ட நாட்களாக) எண்ணியிருந்தேன். இவ்வாறு ஓராண்டு காலத்தைக் கடத்தி விட்டேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. (இந்நிலையில் ஹஜ்ஜுக்காக) அவர் களுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. (திரும்பிவரும் வழியில்) நாங்கள் “மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது உமர் (ரலி) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். அப்போது “(அங்கத் தூய்மை செய்வதற்காக) நீர்குவளையை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்கள். அதை எடுத்துக்கொண்டு அவர் களிடம் நான் சென்றேன். அவர்கள் இயற் கைக் கடனை முடித்துத் திரும்பியதும் அவர் களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன். அப் போது நான் (கேட்க நினைத்திருந்த விஷயத் தை) நினைவுகூர்ந்தேன். உடனே நான், “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சஞ்சலப் படுத்தும் வகையில் கூடிப் பேசிச் செயல்பட்ட) அவ்விரு துணைவியர் யார்?” என்று கேட் டேன். நான் கேட்டு முடிப்பதற்குள், “ஆயி ஷாவும் ஹஃப்ஸாவும்தாம் (அவ்விருவரும்)” என விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

2951 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நீண்ட நாட்களாக நபி (ஸல்) அவர் களுடைய துணைவியரில் இருவரைப் பற்றி உமர் (ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். (ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான்) உயர்ந்தோன் அல்லாஹ் (குர்ஆனில்), “நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அதுவே நல்லது). உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன” (66:4) என்று கூறியிருந்தான்.

(ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். நானும் (அந்த ஆண்டு) அவர் களுடன் ஹஜ் செய்தேன். (ஹஜ்ஜை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) உமர் (ரலி) அவர்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக) ஒதுங்கினார்கள். அவர்களுடன் நானும் நீர்குவளையுடன் சென்றேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துவிட்டு என்னிடம் திரும்பிவந்தார்கள். நான் அவர்களின் கைகளில் (குவளையிலிருந்த) தண்ணீரை ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது நான் அவர்களிடம் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் இருவரைக் குறித்து, “நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரினால் (அதுவே நல்லது). உங்கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன’ (66:4) என்று அல்லாஹ் கூறியுள்ளானே, அந்த இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். ஹஃப்ஸாவும் ஆயிஷா (ரலி) அவர்களும்தாம் அந்த இருவர்” என்று விடையளித்தார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்மிடம் தம் புதல்வி தொடர்பான ஒரு வசனத்தைக் குறித்துக் கேட்டதை உமர் (ரலி) அவர்கள் விரும்பவில்லை. ஆகவேதான், “உங்களைக் கண்டு வியப்படைகிறேன்” என்றார்கள். ஆயி னும், அதற்குரிய பதிலை உமர் (ரலி) அவர்கள் மறைக்கவில்லை.)19

பிறகு உமர் (ரலி) அவர்கள் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:

குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் (மக்கா வில் இருந்தபோது) பெண்களை மிகைத்தவர் களாகவே இருந்துவந்தோம். (எங்களை எதிர்த்துப் பேசாத அளவிற்கு அவர்களை அடக்கிவைத்திருந்தோம்.) நாங்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது, அங்கு ஒரு சமுதாயத்தைக் கண்டோம். அங்கு ஆண்களைப் பெண்கள் மிகைக்கக்கூடியவர்களாக இருந்தனர். இதை எங்களுடைய பெண்களும் அப்பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினர்.

எனது வீடு (மதீனாவின்) மேட்டுப் பகுதி கிராமங்களில் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரிடையே இருந்தது. (ஒரு நாள்) நான் என் மனைவிமீது கோபப்பட்டேன். அவர் என்னை எதிர்த்துப் பேசினார். அவர் என்னை எதிர்த்துப் பேசிய(து எனக்குப் பிடிக்கவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், “நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் ஏன் (என்னை) வெறுக்கிறீர்கள்? அல்லாஹ் வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர்கூட (நபிகளாரின் பேச்சுக்கு) மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபியவர்களிடம் பகலில் இருந்து இரவுவரை பேசுவ தில்லை” என்று கூறினார்.

உடனே நான் அங்கிருந்து புறப்பட்டு (என் புதல்வி) ஹஃப்ஸாவிடம் சென்று, “நீங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா “ஆம்’ என்று பதிலளித்தார். நான் “உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலில் இருந்து இரவுவரை கோபமாக இருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கும் ஹஃப்ஸா “ஆம்’ என்றார். நான், “அவர்களில் இப்படிச் செய்த வர் நஷ்டமடைந்துவிட்டார்; இழப்புக்குள்ளாகி விட்டார். உங்களில் ஒருவர்மீது இறைத்தூத ருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமடைந்துவிடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறா யின் அவர் அழிந்துபோய்விடுவார். (எனவே,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீ எதிர்த்துப் பேசாதே! அவர்களிடம் (அதிகமாக உன் தேவைகள்) எதையும் கேட்டுக்கொண்டி ராதே! உனக்கு (அவசியத் தேவையெனத்) தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னை விட அழகு மிக்கவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவரா கவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களி டம் நடந்துகொள்வதைப் பார்த்து) நீ ஏமாந்து போய் (அவரைப் போல நடந்துகொள்ளத் துணிந்து)விடாதே!” என்று நான் (என் மகளுக்கு அறிவுரை) கூறினேன்.

எனக்கு அன்சாரிகளில் அண்டை வீட்டார் ஒருவர் இருந்தார். நாங்கள் இருவரும் (மேட்டுப் பாங்கான எங்கள் கிராமத்திலிருந்து) முறை வைத்துக்கொண்டு (அங்கிருந்து) இறங்கிவந்து, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருப்போம். அவர் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பார். நான் ஒரு நாள் நபியவர்களுடன் இருப்பேன். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருக்கும் அன்றைய நாளின் வேத அறிவிப்புகள் (நபியவர்களின் சொல், செயல்) முதலானவற்றை என்னிடம் வந்து தெரிவிப்பார். அதைப் போன்றே நானும் செய்வேன்.

அந்தக் கால கட்டத்தில் நாங்கள் (சிரியா நாட்டில் வாழும்) “ஃகஸ்ஸான்’ குலத்தார் எங்கள் (மதீனா) மீது போர் தொடுப்பதற்காக (தங்கள்) குதிரைகளுக்கு லாடம் அடித்து(த் தயாராகி)க்கொண்டிருக்கின் றனர் என்று ஒரு செய்தியைப் பேசிக்கொண்டிருந்தோம். (இவ்வாறிருக்க ஒரு நாள்) என் நண்பர் (தமது முறை நாளில் எங்கள் பகுதியிலிருந்து) இறங்கி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு) இஷா நேரத்தில் என்னிடம் வந்தார்; என் வீட்டுக் கதவை (பலமாகத்) தட்டி, என்னை அழைத்தார். நான் வெளியே வந்தபோது “(இன்று) மிகப்பெரிய சம்பவமொன்று நடந்துவிட்டது” என்று கூறினார். நான், “என்ன அது? ஃகஸ்ஸானியர் (படையெடுத்து) வந்துவிட்டனரா?” என்று கேட்டேன். “இல்லை; அதைவிடப் பெரிய, அதைவிடக் கடுமையான சம்பவம் நடந்துவிட்டது; நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள்” என்று சொன்னார்.

உடனே நான் “(என் மகள்) ஹஃப்ஸா நஷ்டமடைந்து இழப்புக்குள்ளாகிவிட்டார். (கூடிய விரைவில்) இப்படி நடக்கத்தான்போகிறது என்று நான் எண்ணியிருந்தேன்” என்று கூறிவிட்டு, சுப்ஹுத் தொழுகை தொழுததும் எனது ஆடையை எடுத்து அணிந்துகொண்டு (அங்கிருந்து) இறங்கி என் மகள் ஹஃப்ஸாவிடம் சென்றேன்; அவர் அழுதுகொண்டிருந்தார். அவரிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை மணவிலக்குச் செய்து விட்டார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர் “எனக்குத் தெரியாது; அதோ அவர்கள் அந்த மாடி அறையில் தனியாக இருக்கிறார் கள்” என்று கூறினார். உடனே நான் (அங்கு இருந்த) நபியவர்களின் கறுப்பு நிறப் பணியா ளரிடம் (ரபாஹ்) சென்று, “உமருக்காக (நபி யவர்களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்றேன்.அவர் உள்ளே சென்றுவிட்டு என்னிடம் வந்து, “அவர்களிடம் உங்களைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார்.

உடனே நான் அங்கிருந்து புறப்பட்டு சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே சென்று அமர்ந்துவிட்டேன். அங்கு ஒரு கூட்டத்தார் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் சிலர் (கேள்விப்பட்ட செய்தியை எண்ணி) அழுதுகொண்டிருந்தனர். நான் சிறிது நேரம் அமர்ந்திருந் தேன். பிறகு துக்கம் தாளாமல் (மீண்டும்) அந்தப் பணியாளரிடம் நான் வந்து, “உமருக்காக (நபியவர் களின் அறைக்குள் வர) அனுமதி கேள்” என்று சொன்னேன். அவர் உள்ளே சென்றுவிட்டுப் பிறகு என்னிடம் வந்து “நான் நபியவர்களிடம் உங்களைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் மௌன மாக இருந்துவிட்டார்கள்” என்று கூறினார். எனவே, நான் திரும்பினேன். அப்போது அந்தப் பணியா ளர் என்னை அழைத்து, “உள்ளே செல்லுங்கள்! உங்களுக்கு நபியவர்கள் அனுமதியளித்துவிட்டார் கள்” என்று கூறினார். உடனே நான் (அந்த அறைக்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னேன். அங்கு அவர்கள் நெய்யப்பட்ட பாய் ஒன்றில் சாய்ந்து படுத்திருந் தார்கள். அவர்களது விலாப் பகுதியில் அந்தப் பாய் அடையாளம் பதித்திருந்தது.

பிறகு, “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரைத் தாங்கள் மணவிலக்குச் செய்துவிட்டீர் களா?” என்று கேட்டேன். நபியவர்கள் என்னை நோக்கி தமது தலையை உயர்த்தி “இல்லை (மண விலக்குச் செய்யவில்லை)” என்று கூறினார்கள். உடனே நான், “அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)” என்று சொன்னேன்.

பிறகு (அவர்களது கோபத்தைத் தணிக்கப் பின்வருமாறு கூறினேன்:) “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் குலத்தாராகிய நாங்கள் பெண்களை அடக்கிவைத்திருந்தோம். நாங்கள் மதீனாவுக்கு வந்த போது, ஆண்கள்மீது பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரை (அன்சாரிகளை)க் கண் டோம். எங்கள் பெண்களும் அப்பெண்களைப் பார்த்து (ஆண்களை எதிர்த்துப் பேசும் பழக்கத்தைக்) கற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். நான் ஒரு நாள் என் மனைவிமீது கோபம் கொண்டேன். அவர் அப்போது என்னை எதிர்த்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் எதிர்த்துப் பேசிய(தை நான் விரும்பவில்லை; அ)தை நான் வெறுத்தேன். அப்போது அவர், “நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை வெறுக்கிறீர் களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியரும்கூட நபியவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசத் தானே செய்கின்றனர். அவர்களில் ஒருவர் நபியவர்களுடன் கோபித்துக்கொண்டு அன்றைய தினத்தில் இரவுவரை பேசுவ தில்லை” என்று கூறினார். நான் “அவர்களில் இப்படிச் செய்தவர் நஷ்டமடைந்துவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். அவர்களில் ஒரு வர்மீது இறைத்தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அவர்மீது அல்லாஹ்வும் கோபமடைந்து விடுவான் எனும் அச்சம் அவருக்கில்லையா? அவ்வாறாயின் அவர் அழிந்துபோய்விடுவார் என்று சொன்னேன்” என்று கூறினேன். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.

பிறகு நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, “உன் அண்டை வீட்டுக்காரர் (ஆயிஷா) உன்னைவிட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதருக்குப் பிரியமான வராகவும் இருப்பதை வைத்து (அவர் நபியவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதைக் கண்டு) நீ ஏமாந்துவிடாதே!” என்று கூறியதைச் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன் னொரு முறை புன்னகைத்தார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! (தங்களுடன் அமர்ந்து தங்களது) வெறுமையைப் போக்கட்டுமா?” என்று கேட்டேன். அவர்கள் “ஆம்’ என்றார்கள். உடனே நான் அமர்ந்துகொண்டேன். பிறகு எனது தலையை உயர்த்தி அந்த அறையை நோட்டமிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! கண்ணைக் கவருகின்ற எந்தப் பொருளையும் நான் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர! அப் போது நான் “தங்கள் சமுதாயத்தாருக்கு (உலகச் செல்வங்களை)த் தாராளமாக வழங்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே! ஏனெனில், பாரசீகர்களுக்கும் இத்தாலியர் களுக்கும் -அவர்கள் (ஏக இறைவன்) அல்லாஹ்வை வழிபடாதவர்களாக இருந்தும்- உலகச் செல் வங்களை அல்லாஹ் தாராளமாக வழங்கியுள்ளானே?” என்று கூறினேன்.

உடனே (தலையணையில் சாய்ந்து அமர்ந்திருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, “உங்களுக்கு இன்னும் (இத்தகைய) சந்தேகம் உண்டா, கத்தாபின் புதல் வரே? அவர்கள், தமக்குரிய இன்பங்களை இவ்வுலக வாழ்விலேயே (மறுமைக்கு) முன்னதாகவே வழங்கப்பட்டுவிட்ட மக்கள் ஆவர்” என்று கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! (அவசரப்பட்டுக் கேட்டுவிட்ட) எனக்காக பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியர்மீது ஏற்பட்ட கடும் கோபத் தின் காரணமாக “(என் மனைவியரான) அவர் களிடம் ஒரு மாத காலத்திற்கு நான் செல்ல மாட்டேன்’ எனச் சத்தியம் செய்திருந்தார்கள். இறுதியில் (66:1ஆவது வசனத்தை இறக்கி) நபியவர்களை அல்லாஹ் கண்டித்தான்.20

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

2952 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

இருபத்தொன்பது இரவுகள் கழிந்த பின் னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக என்னிடமே வந்தார்கள். அப் போது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்களி டம் ஒரு மாத காலத்திற்கு வரப்போவதில்லை என்று நீங்கள் சத்தியம் (“ஈலா’) செய்திருந்தீர்களே! நீங்கள் இருபத்தொன்பதாவது நாளே வந்துவிட்டீர்களே! நாட்களை நான் எண்ணிக் கணக்கிட்டு வருகின்றேன்!” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “இந்த மாதம் இருபத்தொன்பது நாட்கள்தாம்” என்று பதில் கூறினார்கள்.

பிறகு என்னிடம், “ஆயிஷா! உன்னிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதைப் பற்றி நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து) விடாதே!” என்று கூறிவிட்டு, “நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கி “உங்களிலுள்ள நல்லவர்களுக்காக அல்லாஹ் மகத்தான நன்மையை தயார் செய்துள்ளான்” என்று முடியும் (33:28,29) வசனங்களை எனக்கு அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! என் பெற்றோர் நிச்சயமாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து பிரிந்து விடுமாறு எனக்கு ஆலோசனை கூறமாட்டார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். எனவே, நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), “(உங்கள் உறவை முறித்துக்கொள்ளும்) இந்த விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்கப்போகிறேன்? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே விரும்புகிறேன்” என்று சொன்னேன். மேலும், நான் “உங்களையே தேர்ந்தெடுத்துக்கொண்டேன் என்ற தகவலை, உங்களுடைய மற்ற மனைவியரிடம் தெரிவித்துவிடாதீர்கள்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் என்னை எடுத்துரைப்பவனாகவே அனுப்பி யுள்ளான்; அவன் என்னைக் கடினப் போக்கு உள்ளவனாக அனுப்பவில்லை” என்று கூறி னார்கள். இவ்வாறு அய்யூப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(66:4ஆவது) வசனத்தின் மூலத்தில் உள்ள “ஃபகத் ஸஃகத் குலூபுகுமா” என்பதற்கு “உங் கள் இருவரின் உள்ளங்களும் நேரிய வழியிலி ருந்து பிறழ்ந்துவிட்டிக்கின்றன” என்று பொருளாகும்.

பாடம் : 6

மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் ணுக்கு (காத்திருப்புக் கால) ஜீவனாம் சம் கிடையாது.

2953 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் என்னை (மூன்றாவதாக) ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி, தொலி நீக்கப்படாத சிறிதளவு கோதுமையை எனக்கு அனுப்பிவைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி, “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது ஒரு உதவியாகத் தரப்பட்டதுதான்)” என்று கூறிவினார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், “அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை” என்று கூறிவிட்டு, உம்மு ஷரீக் என்ற பெண்ணின் இல்லத்தில் என்னை “இத்தா’ இருக்குமாறு பணித்தார்கள். பிறகு (யோசித்துவிட்டு), “அவர் (உம்மு ஷரீக்) என் தோழர்கள் (அடிக்கடி) சந்திக்கும் பெண்மணி ஆவார். நீ (உன் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) “இத்தா’ இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்ற மனிதர் ஆவார். நீ உன் (துப்பட்டா) துணியை கழற்றிக்கொள்ளலாம். நீ “இத்தா’வை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக!” என்று கூறினார் கள்.

அவ்வாறே நான் “இத்தா’வை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்துவிடு பவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்” என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்ப வில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ உசாமாவை மணந்துகொள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந் தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.

2954 ஃபத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் என் கணவர் (மூன்றாவதாக) என்னைத் தலாக் சொல்லிவிட்டார். (“இத்தா’க் காலத்தில்) அவர் எனக்குக் குறைந்த அளவே ஜீவனாம்சம் வழங்கினார். அதை நான் கண்டதும், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இதைப் பற்றி) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் தெரிவிப்பேன்; எனக்கு ஜீவனாம்சம் இருக்குமாயின், எனக்குத் தகுதியான (ஜீவனாம்சத்)தை நான் பெறுவேன். எனக்கு ஜீவனாம்சம் எதுவும் கிடையாதெனில் அவரிடமிருந்து நான் எதையும் பெற்றுக்கொள்ளமாட்டேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு ஜீவனாம்சமும் இல்லை; உறைவிடமும் இல்லை” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்கள் தலாக் சொல்லப்பட்டு “இத்தா’ இருந்தபோது என்ன நடந்தது என்று) கேட்டேன். அதற்கு அவர், “மக்ஸூமி குலத்தைச் சேர்ந்த வரான என் கணவர் என்னைத் தலாக் சொல்லிவிட்டார். எனக்கு (“இத்தா’க் கால) ஜீவனாம்சம் வழங்க மறுத்தார். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அதைப் பற்றி) அவர்களிடம் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு ஜீவனாம்சம் கிடையாது; நீ இடம் மாறி, (உன் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் அவர்களிடம் சென்று, அவரது இல்லத்தில் (இத்தா முடியும்வரை) இரு! ஏனெனில், அவர் கண் பார்வையற்ற மனிதர் ஆவார். அவர் அருகில் உனது (துப்பட்டா) துணியைக் கழற்றிக்கொள்ளலாம்” என்றார்கள்.

2955 அள்ளஹ்ஹாக் பின் கைஸ் (ரலி) அவர்களின் சகோதரி ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் கணவர்) அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அல்மக்ஸூமீ என்னை மூன்று (அதாவது மூன்றாவது முறையாக) தலாக் சொல்லிவிட்டார்; பின்னர் யமன் நாட் டுக்குச் சென்றுவிட்டார். அப்போது என் கண வரின் குடும்பத்தார் என்னிடம், “உனக்கு ஜீவனாம்சம் எதையும் நாங்கள் தர வேண்டிய தில்லை” என்று கூறினர். அப்போது (என் கண வருடைய தந்தையின் சகோதரர் புதல்வர்) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், சிலரு டன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) “அபூஹஃப்ஸ் தம் துணைவியை (ஃபாத்திமா பின்த் கைஸை) மூன்று (அதாவது மூன்றாவது முறையாக) தலாக் சொல்லிவிட்டார். (“இத்தா’விலி ருக்கும்) அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் உண்டா?” என்று கேட்டனர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்கு ஜீவனாம்சம் கிடையாது; ஆனால் “இத்தா’ உண்டு” என்றார்கள். மேலும், எனக்கு ஆளனுப்பி, “உன் விஷயத்தில் என் உத்தரவுக்கு முன் நீயாக முந்தி(க்கொண்டு முடிவெடுத்து)விடாதே” என்று கூறியனுப்பினார்கள். மேலும், என்னை (என் கணவரின் இல்லத்திலிருந்து) இடம் மாறி உம்மு ஷரீக் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்லு மாறு உத்தரவிட்டார்கள். பிறகு (அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் விதமாக) “உம்மு ஷரீக்கின் வீட்டிற்கு ஆரம்பக் காலத்து முஹாஜிர்கள் (விருந்தாளிகளாக) வருவார்கள். எனவே, நீ கண் பார்வையற்ற (உன் தந்தையின் சகோதரர் புதல்வரான) இப்னு உம்மி மக்தூம் அவர்களின் வீட்டிற்குச் செல்! ஏனெனில், நீ உன் துப்பட்டாவைக் கழற்றினாலும் அவர் உன்னைப் பார்க்க முடியாது” என்று கூறியனுப்பினார்கள். ஆகவே, நான் இப்னு உம்மி மக்தூமிடம் சென்றேன். எனது “இத்தா’க் காலம் முடிந்ததும் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள்.

2956 மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அபூசலமா பின் அப்திர் ரஹ் மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் “இந்த ஹதீஸை நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களது வாயிலிருந்து (நேரடியாக) செவி யுற்று எழுதிவைத்துக்கொண்டேன்’ என்று கூறினார்கள்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மேலும் “நான் பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒருவரிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை ஒட்டுமொத்த தலாக் சொல்லி விட்டார். அப்போது நான் என் கணவரின் குடும்பத்தாரிடம் ஆளனுப்பி எனது ஜீவனாம் சத்தைக் கோரினேன்” என்று ஹதீஸ் தொடரு கிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உனது (மறுமணம்) விஷயத்தில் நம்மைவிட்டு (நீயாக முடிவெடுத்து)விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

2957 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது:

நான் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல் முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அவர் என்னை (இரு தலாக் சொல்லி திரும்ப அழைத்துக்கொண்டு) இறுதி(யாக எஞ்சியிருந்த) மூன்றாவது தலாக் சொல்லிவிட்டார்.

அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, என் (கணவரின்) இல்லத்திலி ருந்து வெளியேறி (வேறு இடத்தில் “இத்தா’ இருந்து)கொள்வது தொடர்பாகத் தீர்ப்புக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கண் தெரியாதவரான இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்திற்கு இடமாறிக்கொள்ள உத்தரவிட்டார்கள்.

இந்த ஹதீஸை அறிவிப்பவரான அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(மூன்று) தலாக் சொல்லப்பட்டுவிட்ட ஒரு பெண், தனது இல்லத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான இந்த ஹதீஸை மர்வான் பின் அல்ஹகம் நம்ப மறுத்தார்.

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு (செய்யலாம் என்று) கூறிவந்ததை நிராகரித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், ஆயிஷா (ரலி) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு கூறிவந்ததை நிராகரித்தார் கள் என்கிற உர்வா (ரஹ்) அவர்களின் குறிப் பும் இடம்பெற்றுள்ளது.

2958 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல் முஃகீரா (ரலி) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்குச் சென்றி ருந்தார்கள். அப்போது அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் (ரலி) அவர்கள் தம் மனைவியின் தலாக்கில் எஞ்சியிருந்த ஒரு தலாக்கையும் சொல்லியனுப்பினார். தம் மனைவிக்கு ஜீவனாம்சத்தைக் கொடுக்க ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களையும் அய்யாஷ் பின் அபீரபீஆ (ரலி) அவர்களையும் பணித் தார். அவர்கள் இருவரும் அவருடைய மனைவியிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீ கர்ப்பமுற்றவளாக இருந்தால்தான் உனக்கு ஜீவனாம்சம் கிடைக்கும்” என்று கூறிவிட்ட னர்.

உடனே அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்கள் இருவரும் கூறியதைத் தெரிவித் தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உனக்கு ஜீவனாம்சம் இல்லை” என்று கூறினார்கள். அப்போது அவர் (தம் கணவரின் இல்லத்திலிருந்து) இடம் மாறிக்கொள்ள அனுமதி கோரினார். நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் எங்கே (தங்கு வேன்)?” என்று கேட்டார். அதற்கு, “இப்னு உம்மி மக்தூமின் வீட்டிற்குச் செல்” என்றார்கள். அவர் கண் பார்வையற்றவராக இருந்தார். (எனவே) அப்பெண் அவர் அருகில் உடைமாற்றினாலும் அவரால் பார்க்க முடியாத நிலையில் இருந்தார். (இப்னு உம்மி மக்தூமின் வீட்டில்) அப்பெண்ணின் “இத்தா’க் காலம் முடிந்ததும் அவரை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்துவைத்தார்கள்.

பின்னர் (மதீனாவின் அப்போதைய ஆட்சியராயிருந்த) மர்வான் அப்பெண்ணிடம் கபீஸா பின் துவைப் (ரஹ்) அவர்களை அனுப்பி அந்த ஹதீஸைக் குறித்துக் கேட்டார். அவர் மர்வானுக்கு அந்த ஹதீஸைத் தெரிவித்தார். அதற்கு மர்வான், “ஒரேயொரு பெண்ணிடமிருந்துதான் நாம் இந்த ஹதீஸைக் கேள்விப்படுகிறோம். மக்கள் எந்த நடைமுறையை வலுவாகக் கடைப்பிடித்துவருவதை நாம் காண்கிறோமோ அதையே நாம் (தொடர்ந்து) செயல்படுத்துவோம்” என்று கூறினார். “எனக்கும் உங்களுக்குமிடையே குர்ஆன் உள்ளது. (அதில்) அல்லாஹ், “அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்’ (65:1) என்று கூறியுள்ளான்” என மர்வான் கூறிய தகவல், ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்க ளுக்கு எட்டியபோது, “இது திரும்ப அழைத் துக்கொள்ளும் உரிமையுடைய கணவர்க ளுக்கு உரியதாகும். மூன்று தலாக்கிற்குப் பிறகு (திரும்ப அழைத்தல் போன்ற) என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது? அவள் கர்ப்பமுற்ற வளாக இல்லாவிடில் அவளுக்கு ஜீவனாம்சம் இல்லை என நீங்கள் எப்படிக் கூறுகிறீர்கள்? பிறகு (ஜீவனாம்சம் பெறாத) அந்தப் பெண்ணை எந்த அடிப்படையில் தடுத்து வைத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.21

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

2959 ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைக் குறித்துக் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், “என்னை என் கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (“இத்தா’க் கால) ஜீவனாம்சம் மற்றும் உறைவிடம் விஷயத்தில் அவர்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வழக்கு தொடுத்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உறைவிடமோ ஜீவனாம் சமோ வழங்கச் செய்யவில்லை. என்னை (என் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்தில் “இத்தா’ மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட தகவல் ஷஅபீ (ரஹ்) அவர் களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

2960 ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றோம். எங்களுக்கு அவர்கள் (மதீனா வின்) “ருதப் இப்னு தாப்’ (எனும் வகை) பேரீச்சம் பழத்தை விருந்தாகக் கொடுத்தார்கள். ஒரு வகை தானிய மாவுக் கஞ்சியை எங்களுக்கு அருந்தக் கொடுத்தார்கள். அவர்களிடம் நான் “மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் எங்கு “இத்தா’ இருப்பாள்?” என்று கேட் டேன். அதற்கு அவர்கள் “என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், என் குடும்பத் தாரிடமே நான் “இத்தா’ இருக்க எனக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறினார்கள்.

2961 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது:

மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண் குறித்து நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு உறைவிடமும் இல்லை; ஜீவனாம் சமும் இல்லை” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

2962 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது வேறு இடத்திற்கு இடம் மாறிச் செல்ல நான் விரும்பினேன். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அதற்காக அனுமதி கோரினேன்.) நபி (ஸல்) அவர்கள் “நீ இடம்பெயர்ந்து, உன் தந்தையின் சகோதரர் புதல்வர் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அங்கு “இத்தா’ இரு” என்று கூறி னார்கள்.

2963 அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களுடன் (கூஃபாவின்) பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸை ஷஅபீ (ரஹ்) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை; ஜீவனாம்சமும் இல்லை” என அறி வித்தார்கள் (என்பதுதான் அந்த ஹதீஸ்). (அங் கிருந்த) அஸ்வத் (ரஹ்) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர்மீது எறிந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: “உமக்குக் கேடுதான்! இது போன்ற செய்தி களை அறிவிக்கிறீரே? உமர் (ரலி) அவர்கள், “ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நம் நபியின் வழிமுறையையும் கைவிடமாட்டோம். ஃபாத்திமா பின்த் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா, அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்ட பெண் ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், “பகிரங்கமான வெட்கக்கேடான செயலை அப் பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்’ (65:1) என்று கூறியுள்ளான்” என்றார்கள்.

– மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2964 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் கணவர் மூலம்) உறைவிடமும் ஏற்படுத்தவில்லை; ஜீவனாம்சமும் ஏற்படுத்த வில்லை. என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ உன் “இத்தா’க் காலத்தை முழுமையாக் கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக” என்றார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் தெரிவித்தேன். என்னை முஆவியா (ரலி), அபூஜஹ்ம் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் பெண் கேட்டார் கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஆவியாவோ, ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. அபூஜஹ்மோ மனைவியரை அதிகமாக அடிக்கக்கூடியவர். மாறாக, உசாமா பின் ஸைதே (உனக்குப் பொருத்த மானவர்)” என்றார்கள். உடனே நான் “உசாமா; (பெரிய) உசாமா’ என கையால் சைகை செய்(து அதிருப்தி தெரிவித்)தேன். அப்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக் குக் கட்டுப்படுவதும் அவனுடைய தூதருக்குக் கட்டுப்படுவதும் உனக்கு நல்லது” என்றார்கள். பின்னர் உசாமாவையே நான் மணந்துகொண் டேன். நான் பெருமிதம் அடைந்தேன்.

2965 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது:

என் கணவர் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா அவர்கள், அய்யாஷ் பின் அபீரபீஆ மூலம் எனக்குத் தலாக் சொல்லி அனுப்பினார். அவருடன் ஐந்து “ஸாஉ’ பேரீச்சம் பழமும் ஐந்து “ஸாஉ’ தொலி நீக்கப் படாத கோதுமையும் கொடுத்தனுப்பினார். நான் அவரிடம், “எனக்கு இதைத் தவிர வேறெது வும் ஜீவனாம்சம் இல்லையா? நான் உங்கள் வீட்டில் “இத்தா’ இருக்கமாட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அய்யாஷ் அவர்கள், “இல்லை (வேறெதுவும் ஜீவனாம்சம் கிடையாது)” என்று சொல்லிவிட்டார். உடனே நான் எனது ஆடையை எடுத்து அணிந்துகொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் உனக்கு எத்தனை தலாக் சொன்னார்?” என்று கேட்டார்கள். நான் “மூன்று (தலாக்)” என்றேன். (அவ்வாறாயின்) அவர் சொன்னது உண்மையே. உனக்கு ஜீவனாம்சம் இல்லை. நீ உன் தந்தையின் சகோதரர் புதல்வர் இப்னு உம்மி மக்தூம் அவர் களது இல்லத்தில் “இத்தா’ இருந்துகொள். ஏனெனில், அவர் கண் பார்வையற்றவர். நீ உனது (துப்பட்டா) துணியை அவர் அருகில் கழற்றிவைக்கலாம். உன் “இத்தா’க் காலம் முடிந்ததும் எனக்குத் தெரிவி” என்று சொன்னார்கள். பின்னர் என்னைப் பலர் பெண் கேட்டார்கள். அவர்களில் முஆவியா (ரலி), அபூஜஹ்ம் (ரலி) ஆகியோரும் அடங்குவர். (நான் நபியவர்களிடம் அது குறித்து தெரிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், “முஆவியா வசதி குறைந்தவர்; ஏழை. அபூஜஹ்மிடம், பெண்களிடம் கடுமையாக நடந்துகொள்ளும் சுபாவம் உள்ளது. (அல்லது பெண்களை அடித்து விடுபவர் என்பதைப் போன்று.) மாறாக, நீ உசாமா பின் ஸைதைப் பிடித்துக்கொள்” என்றார்கள்.

2966 அபூபக்ர் பின் அபில்ஜஹ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று (அவர்களது நிகழ்ச்சி குறித்து) கேட்டோம். அவர், “நான் அபூஅம்ர் பின் ஹஃப்ஸ் பின் அல்முஃகீரா (ரலி) அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். அப்போது அவர் நஜ்ரான் போருக்குப் புறப் பட்டார்” என்று கூறினார் என ஹதீஸ் ஆரம்ப மாகிறது. தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

இறுதியில் “எனவே, நான் (அபூஸைத்) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னை மேன்மைப்படுத் தினான்; அபூஸைத் (ரலி) அவர்களின் மூலம் அல்லாஹ் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள் ளது.

2967 அபூபக்ர் பின் அபில்ஜஹ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர் களிடம் சென்றோம். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், “என் கணவர் என்னை முற்றாகத் தலாக் சொல்லி, அதை முடிவுக்குக் கொண்டுவந்தார்” என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

2968 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை என் கணவர் மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்கு (என் கணவர் மூலம் “இத்தா’க் காலத்தில்) உறைவிடத்தையோ ஜீவனாம்சத் தையோ ஏற்படுத்தவில்லை.

2969 உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யஹ்யா பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்களின் புதல்வியைத் திருமணம் செய்திருந்தார். பின்னர் அவரை (மூன்று) தலாக் சொல்லி, தம் வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். நான் அவர்களை (அவருடைய குடும்பத்தாரை) இது குறித்துக் கண்டித்தேன். அதற்கு அவர்கள், “ஃபாத்திமா பின்த் கைஸ் (“இத்தா’க் காலத்தில் தமது கணவரின் இல்லத்திலிருந்து) வெளியேறினாரே?” என்று கூறினார்கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இந்த ஹதீஸைக் கூறுவதால் ஃபாத்திமா பின்த் கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று சொன்னார்கள்.22

2970 ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர் கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மூன்று தலாக்(கும்) சொல்லிவிட்டார். நான் (என் கணவர் வீட்டில் “இத்தா’ மேற் கொண்டால்) அத்துமீறி யாரும் புகுந்துவிட லாம் என அஞ்சுகிறேன்” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கிருந்து இடம் மாறிக்கொள்ள) எனக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நான் இடமாறி (“இத்தா’ மேற்)கொண்டேன்.

2971 காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“இதைக் கூறுவதால் -அதாவது (மூன்று தலாக்(கும்) சொல்லப்பட்டுவிட்ட பெண்ணுக்கு) உறைவிடமும் இல்லை; ஜீவனாம்சமும் இல்லை என்று கூறிவருவதால்- ஃபாத்திமா பின்த் கைஸுக்கு எந்த நன்மையும் இல்லை” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.23

– உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகமு டைய புதல்வியான இன்ன பெண்ணைப் பார்த்தீர்களா? அவரை அவருடைய கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் இத்தா இருக்காமல்) அவர் வெளியேறி (மற் றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அவர் செய்தது தவறு” என்றார்கள். நான், “ஃபாத்திமா பின்த் கைஸ், (தான், மற்றோர் இடத்தில் “இத்தா’ இருந்தது பற்றிக்) கூறிவரு வதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இந்தச் செய்தியைக் கூறிவருவதில் ஃபாத்திமா வுக்கு எந்த நன்மையுமில்லை” என்று கூறினார்கள்.24

பாடம் : 7

முற்றாக மணவிலக்குச் செய்யப்பட்டுவிட்ட பெண்ணும் கணவன் இறந்துபோன பெண்ணும் “இத்தா’விலிருக்கும்போது தம் தேவைக்காக வெளியே செல்லலாம்.

2972 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய் யப்பட்டார். அவர் (“இத்தா’வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித் தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், “ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிக ளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள்.25

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 8

கணவன் இறந்துபோன பெண் உள்ளிட்டோர் (கர்ப்பமுற்றிருந்தால் அவர்களது) “இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும்.26

2973 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள், உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர் களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில் சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அல்அஸ்ல மிய்யா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுபைஆ மார்க்கத் தீர்ப்புக் கேட்டதைப் பற்றியும், அதற்கு அவர்கள் அளித்த பதில் பற்றியும் கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி சுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (கேட்ட றிந்து என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்:

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர் கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த சஅத் பின் கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். -சஅத் (ரலி) அவர் கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவராவார்.- “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது சஅத் (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்கள். அப்போது சுபைஆ கர்ப்பமுற்றிருந்தார். சஅத் (ரலி) அவர்கள் இறந்து நீண்ட நாட்கள் ஆகியிருக்கவில்லை; (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து சுபைஆ தூய்மையானபோது, பெண் கேட்க வருபவர்களுக் காகத் தன்னை அவர் அலங்கரித்துக்கொண்டார். அப்போது பனூ அப்தித்தார் குலத்தில் ஒருவரான அபுஸ் ஸனாபில் பின் பஅகக் (ரலி) அவர்கள் சுபைஆவிடம் வந்து, திருமணம் செய்யும் ஆசை யில் (பெண் கேட்க வருபவர்களுக்காக) உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப் பின் மேற் கொள்ள வேண்டிய “இத்தா’க் காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் செய்துகொள்ள முடியாது” என்று சொன்னார்கள்.

சுபைஆ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலை நேரத்தில் எனது உடையை உடுத்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, “நீ பிரசவித்துவிட்டபோதே (மணம் செய்துகொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய்” என்று தீர்ப்பு வழங்கிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்” என உத்தரவிட்டார்கள்.27

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(கணவன் இறந்த) ஒரு பெண் பிரசவித்தவு டன் -பிரசவ இரத்தப்போக்கு இருக்கும் போதே- (மறு)மணம் செய்துகொள்வதில் தவறி ருப்பதாக நான் கருதவில்லை; ஆயினும், அவள் தூய்மையடையும்வரை அவளுடைய (புதிய) கணவன் அவளை (தாம்பத்திய உறவுக்காக) நெருங்கக் கூடாது.

2974 சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர் கள் கூறியதாவது:

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர் களிடம் ஒன்றுகூடினர். கணவன் இறந்துவிட்ட பெண் ஒரு சில இரவுகளில் பிரசவித்துவிடு வது பற்றி(யும், அவ்வாறு பிரசவித்துவிட்டால் அவளது “இத்தா’ அத்துடன் முடிந்துவிடுமா, இல்லையா என்பது பற்றியும்) அவர்களிருவரும் பேசிக்கொண்டனர்.

அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இரு தவணைகளில் பிந்தியதே அவளது இத்தாவா கும்” என்றார்கள்.28 அபூசலமா (ரஹ்) அவர்கள், “(பிரசவித்தவுடன்) அவள் (மறுமணம் செய்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாள்” என்று கூறினார்கள்.

இது குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அபூஹுரைரா (ரலி) அவர்கள், “(இந்த விஷயத்தில்) நான் என் சகோதரர் மகன் (அபூசலமா) உடன் (ஒத்து) இருக்கிறேன்” என்று சொன் னார்கள். அப்போது அவர்கள் அது குறித்துக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பணியாளர் குறைப் (ரஹ்) அவர்களை (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தனர். அவர் (சென்றுவிட்டுத்) திரும்பிவந்து உம்மு சலமா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் எனத் தெரிவித்தார்:

சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள், தம் கணவர் (சஅத் பின் கவ்லா) இறந்த சில இரவுகளில் குழந்தை பெற்றெடுத்தார். அவர் அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, அவரை (மறு)மணம் செய்துகொள்ளுமாறு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.29

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர் களது அறிவிப்பில், உடனே அவர்கள் (மூவரும்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள் என (பொதுவாக) இடம் பெற்றுள்ளது. குறைபின் பெயரைக் குறிப்பிட வில்லை.

பாடம் : 9

கணவன் இறந்து “இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது கட்டா யமாகும்; மற்ற நேரங்களில் மூன்று நாட்கள் தவிர துக்கம் கடைப்பிடிப்பது தடை செய்யப்பட்டதாகும்.30

2975 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அதுஅவருடைய தந்தை அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் (சிரியா நாட்டில்) இறந்த நேரம். (மூன்றாவது நாளில்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிறமுள்ள கலவையான நறுமணப் பொருளை, அல்லது வேறொன் றைக் கொண்டுவருமாறு கூறி, அதை (அங்கி ருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரு கன்னங்களிலும் தடவிக்கொண் டார்கள். பிறகு “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் சொற்பொழிவு மேடையின் மீதிருந்தபடி “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம் பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்க ளுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனு மதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர’ என்று கூறக் கேட்டுள்ளேன். (ஆதலால்தான் இப்போது நறு மணம் பூசினேன்)” என்றார்கள்.

– பின்னர் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது அவரு டைய சகோதரர் இறந்த நேரம். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண்டார்கள்.

பின்னர், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர’ என்று கூறக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

– என் தாயார் உம்மு சலமா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறக் கேட்டுள்ளேன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “அல்லாஹ்வின் தூதரே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (இத்தாவிலிருக்கும்) என் மகளின் கண்ணில் வலி ஏற்பட்டுவிட்டது. அவளுக்கு நாங்கள் அஞ்சனம் (சுர்மா) தீட்டிவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேண்டாம்’ என்று -இரண்டு அல்லது மூன்று முறை- கூறினார்கள். ஒவ்வொரு முறையும் “வேண்டாம்’ என்றே கூறினார்கள். பிறகு, “(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) “இத்தா’க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்தாம். (ஆனால்,) அறியாமைக் காலத்தில் உங்களில் (கணவனை இழந்த) ஒரு பெண் (ஒரு வருடம் இத்தா இருப்பாள்.) ஆண்டின் முடிவில் (“இத்தா’ நிறைவுற்றதன் அடையாளமாக) ஒட்டகச் சாணத்தை எறிவாள். (அந்த நிலை இப்போது இல்லையே)” என்றார்கள்.

– ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம், “ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள் என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

(அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு, தன் ஆடை களிலேயே மிகவும் மோசமானதை அணிந்துகொள்வாள். ஒரு வருடம் கழியும்வரை எந்த நறுமணத்தையும் வேறு எதையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று (அவளிடம்) கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்குத் திரண்ட தனது உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அந்த முடை நாற்றத்தால்) சாகாமல் பிழைத்தல் அரிது. பிறகு அவள் (அந்தக் குடிசை யிலிருந்து) வெளியே வருவாள். அப்போது (அவளிடம்) ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கெதிரே) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே “இத்தா’ முடிந்ததற்கு அடையாள மாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்ற பொருட்களையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.31

மேற்கண்ட மூன்று ஹதீஸ்களையும் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களே அறிவித்தார்கள்.

2976 ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது

உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்து (இரண்டு நாட்கள் கழிந்து)விட்டபோது, அவர்கள் மஞ்சள் நிறமுடைய ஒரு வகை நறுமணப் பொருளைக் கொண்டுவருமாறு கூறி, அதைத் தமது முன்கையில் தடவிக்கொண்டார்கள். பிறகு “நான் இவ்வாறு செய்வதற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும் (இறந்துபோன ஒருவருக்காக) மூன்று நாட்க ளுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனு மதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!’ என்று கூறக் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸை, ஸைனப் பின்த் அபீ சலமா (ரலி) அவர்கள் தம் தாயார் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தும், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அல்லது வேறொரு துணைவி யாரிடமிருந்தும் அறிவித்துள்ளார்கள்.

2977 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். (“இத்தா’ வில் இருந்த அவளது கண்ணில் வலி ஏற்பட் டதால்) அவளது கண் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு அல் லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அறியா மைக் காலத்தில் கணவன் இறந்த பின்) மனைவி அவளுடைய ஆடைகளிலேயே மிக மோசமானதை அணிந்துகொண்டு, அற்ப மான ஒரு குடிலுக்குள் ஒரு வருடம் தங்கியி ருப்பாள். பின்னர் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய்மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். பின்னர் அக்குடிலைவிட்டும் வெளியேறுவாள். (இஸ்லாம் வந்த பின் இழிவு நிலையுடன்கூடிய ஒரு வருட “இத்தா’ என்பது மாறி) நான்கு மாதம் பத்து நாட்கள் (மட்டும் கண்ணி யத்துடன் தங்கும் நிலை) ஏற்படவில்லையா?” என்று கேட்டார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

2978 உம்மு சலமா (ரலி) மற்றும் உம்மு ஹபீபா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் புதல்வியின் கணவர் இறந்து விட்டார். (அவள் தற்போது “இத்தா’ இருக்கும் நிலையில்) அவளது கண்ணில் வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவளுக்கு நான் அஞ்சனம் தீட்டிவிட விரும்புகிறேன்” என்று தெரிவித் தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அறியாமைக் காலத்தில் கணவன் இறந்த பின்) மனைவி ஓராண்டு நிறைவடை யும்போது ஒட்டகச் சாணத்தை விட்டெறிவாள். (ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடித்து “இத்தா’ இருந்துவந்தாள். இந்த அவலம் நீங்கி,) “இத்தா’ நான்கு மாதம் பத்து நாட்கள் மட்டுமே (என் றாகிவிட்டதே)” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

2979 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தம் தந்தை அபூசுஃப்யான் (ரலி) அவர்க ளின் இறப்புச் செய்தி வந்தபோது, உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மூன்றாவது நாளில் மஞ்சள் நிற (நறுமண)ப் பொருளைக் கொண்டு வரச் சொல்லி, அதைத் தம் முன்கைகளிலும் கன்னங்களிலும் தடவிக்கொண்டார்கள். மேலும், “இந்த நறுமணப் பொருளின் தேவை யற்றவளாகவே நான் இருந்தேன். (ஆயினும்) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் (இறந்துபோன ஒருவருக்காக) மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர’ என்று சொல்லக் கேட்டேன் (எனவே தான், இப்போது நறுமணம் தடவிக்கொண்டேன்)” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2780 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட’ அல்லது “அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நம்பிக்கை கொண்ட’ எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக (நான்கு மாதம் பத்து நாட்கள்) தவிர!

இதை ஹஃப்ஸா (ரலி) அவர்கள், அல்லது ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லது அவ்விருவரும் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப் பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

2981 மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர் களின் துணைவியார் ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அவள் தன் கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைப் பிடிப்பாள்” என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

2982 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட் களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதி யில்லை; தன் கணவனுக்காக (நான்கு மாதம் பத்து நாட்கள்) தவிர!

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

2983 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:

எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அந்நாட்களில்) அவள் சாயமிடப்பட்ட ஆடையை அணியமாட்டாள்; நெய்வதற்கு முன் நூலில் சாயமேற்றப்பட்டு, பின்பு நெய்யப்பட்ட ஆடையைத் தவிர! மேலும், அவள் அஞ்சனம் தீட்டிக்கொள்ளமாட்டாள்; நறுமணம் பூசிக்கொள்ளமாட்டாள்; ஆனால் (மாத விடாயிலிருந்து) அவள் தூய்மையடைந்த பின்னர் தவிர! அப்போது “குஸ்த்’ மற்றும் “அழ்ஃபார்’ ஆகிய ஜாதிக் கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்வாள்.

இதை உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.32

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பா ளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “அவள் தூய்மையடையும் சமயத் தில் தவிர!” என இடம்பெற்றுள்ளது.

2984 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட் களுக்கு மேல் (பெண்களாகிய) நாங்கள் துக்கம் கடைப்பிடிக்கலாகாது எனத் தடை விதிக்கப் பட்டிருந்தோம்; ஆனால், கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அதாவது “இத்தா’வில் இருக்கும்போது) நாங்கள் அஞ்சனம் தீட்டிக்கொள்ளக் கூடாது; நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது; சாயமிடப்பட்ட ஆடையை அணியக் கூடாது (என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது); (பெண்களாகிய) எங்களில் ஒருவர் மாதவிடாயிலிருந்து குளித்துத் தூய்மையடையும்போது “குஸ்த்’ மற்றும் “அழ்ஃபார்’ ஆகிய ஜாதிக் கோஷ்டக் கட்டையால் நறுமணப் புகையிட்டுக்கொள்ள அனுமதிக் கப்பட்டது.33

27.05.2010. 10:26

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.