11 – கிரகணத் தொழுகை

அத்தியாயம்: 11 – கிரகணத் தொழுகை

பாடம் : 1

சூரிய கிரகணத் தொழுகை

1643 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (மக்களுடன்) தொழுதார்கள். அதில் நன்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவை நன்கு நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தி நன்கு நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முதல் நிலையைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு (மீண்டும்) ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவையும் நன்கு நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முதல் ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். பிறகு எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து, இதற்கு முந்தைய நிலையை விடக் குறைவாகவே இருந்தது. பிறகு ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவையும் நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவா கவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தி, நிலையில் நின்றார்கள். அந்த நிலையிலும் நீண்ட நேரம் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலை யைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு (மீண்டும்) ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉ வையும் நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉ வைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள்.

பின்னர் (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித் தார்கள். பிறகு மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளவையாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. கிரகணம் ஏற்படுவதை நீங்கள் கண்டால் “தக்பீர்’ (அல்லாஹு அக்பர்) கூறுங்கள்; அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்; தானதர்மம் செய்யுங்கள். முஹம்மதின் சமுதாயத்தாரே! தன் அடியார்களில் ஆணோ பெண்ணோ யார் விபசாரத்தில் ஈடுபட்டாலும் (அதைக் கண்டு) கடுமையாக ரோஷம் கொள்பவர் அல்லாஹ்வைவிட வேறெவருமிலர். முஹம்மதின் சமுதாயத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல் லாம் நீங்களும் அறிந்தால் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். நான் (சொல்ல வேண்டி யதைச்) சொல்லிவிட்டேன் அல்லவா?2

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும்” என இடம்பெற்றுள்ளது.

1644 மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இறைவாழ்த்துக்குப் பின்! சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்று களில் உள்ளவையாகும்’ என்று கூறியதாகவும், பிறகு இரு கைகளையும் உயர்த்தி “இறைவா, (சொல்ல வேண்டியதைச்) சொல்லிவிட்டேனா?” என்று கேட்டதாகவும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

1645 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் சூரிய கிரகணம் ஏற் பட்டது. உடனே அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று (தொழுகையில்) நின்று “தக்பீர்’ கூறி னார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நிலையில்) நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். பிறகு “தக்பீர்’ கூறி நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தி “சமி அல்லாஹு லிமன் ஹமிதஹ். ரப்பனா வ ல(க்) கல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ் வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறினார்கள். பிறகு நின்ற வண்ணம் நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார் கள். இ(ப்போது அவர்கள் ஓதிய)து முந்தைய ஓதலைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு “தக்பீர்’ கூறி, நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முந்தைய ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. பிறகு “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். ரப்பனா வ ல(க்)கல் ஹம்து’ எனக் கூறி (நிலையில் நின்று)விட்டு, பிறகு சஜ்தாச் செய்தார்கள். (அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “பின்னர் சஜ்தாச் செய்தார்கள்’ எனும் வாசகம் இடம்பெறவில்லை.)

பிறகு முந்தைய ரக்அத்தில் செய்ததைப் போன்றே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். அவர்கள் (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் பூர்த்தி செய்தார்கள். அவர்கள் தொழுகையை முடிப்பதற்கு முன் சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. பிறகு எழுந்து நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்து விட்டு, “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காக வும் எவரது பிறப்புக்காகவும் அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவதில்லை. ஆகவே, அவற்றை நீங்கள் கண்டால் தொழுகைக்கு விரையுங்கள்” என்றும், “உங்களைவிட்டு அவற்றை அல்லாஹ் அகற் றும்வரை தொழுங்கள்” என்றும் கூறினார்கள்.

மேலும் “நான் இந்த இடத்தில் (தொழுகை யில் நின்றிருந்தபோது) உங்களுக்கு வாக்களிக் கப்பட்டுள்ள அனைத்தையும் கண்டேன். (தொழுகையிலிருந்தபோது) நான் முன்னே செல்வதைப் போன்று நீங்கள் கண்டீர்களே, அப்போது சொர்க்கத்தின் பழக் குலை ஒன்றைப் பறிக்க நான் நாடினேன். பின்னர் நான் பின் வாங்குவதைக் கண்டீர்களே, அப்போது நான் நரகத்தைக் கண்டேன். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்து (உக்கிரமாக எரிந்து)கொண்டிருந்தது. மேலும், நரகத்தில் (அம்ர்) இப்னு லுஹை என்பாரைக் கண்டேன். அவர்தாம் முதன்முதலில் கடவுள் சிலைக்காக ஒட்டகத்தை (சாயிபா) நேர்ந்து விட்டவர் ஆவார்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.3

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில், அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பு “தொழுகைக்கு விரையுங்கள்” என்பதோடு முடிந்துவிடுகிறது; அதற்குப் பிறகுள்ள குறிப்புகள் அவரது அறிவிப்பில் இடம்பெறவில்லை.

1646 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் அறிவிப்பாளர் ஒருவரை அனுப்பி “அஸ்ஸலாத்து ஜாமிஆ’ (தொழுகை நடைபெறுகிறது) என்று அறிவிக்கச் செய்தார்கள். மக்கள் கூடியதும் முன்னே சென்று “தக்பீர்’ கூறி, இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்(து தொழுவித்)தார்கள்.

1647 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு (குர்ஆன்) ஓதினார்கள். இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள்.

– இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் (கிரகணம் ஏற்பட்ட போது) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழு தார்கள் என்பதை அறிவித்துவந்தார்கள்” என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸில் உள்ளதைப் போன்று இடம்பெற்றுள்ளன.

1648 உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது நம்பிக்கைக்குரிய ஒருவர் – அதாவது ஆயிஷா (ரலி) அவர்கள்- கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது, அவர்கள் (தொழுகையில்) நீண்ட நேரம் (கால் கடுக்க) நின்றார்கள். நிலையில் நிற்பார்கள்; பிறகு ருகூஉச் செய்வார்கள்; மீண்டும் நிலையில் நிற்பார்கள்; பிறகு ருகூஉச் செய்வார்கள்; பிறகு நிலையில் நிற்பார்கள்; ருகூஉச் செய்வார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத் களில் மூன்று ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள். சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுகையை முடித்தார்கள். அவர்கள் ருகூஉச் செய்யும்போது “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு ருகூஉச் செய்தார்கள். (ருகூஉவிலிருந்து) தலையை உயர்த்தும்போது “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறி எழுந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். (தொழுகை முடிந்த) பிறகு “சூரியனும் சந்திரனும் எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் காண்பதில்லை. மாறாக, அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளவையாகும். அவற்றின் மூலம் அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்(தி நல்வழிப்படுத்)துகிறான். கிரகணத்தை நீங்கள் கண்டால் (இருள் விலகி) வெளிச்சம் வரும்வரை இறையை நினைவுகூருங்கள்” என்று கூறினார்கள்.

1649 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்கள் (கிரகணத் தொழுகை யில் ரக்அத்துக்கு மூன்று ருகூஉகள் வீதம்) ஆறு ருகூஉகளும் (ரக்அத்துக்கு இரண்டு சஜ்தாக்கள் வீதம்) நான்கு சஜ்தாக்களும் செய் தார்கள்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

பாடம் : 2

கிரகணத் தொழுகையின்போது மண் ணறை (கப்று) வேதனை பற்றி நினைவு கூர்வது.

1650 அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூதப் பெண் ஆயிஷா (ரலி) அவர் களிடம் யாசகம் கேட்டு வந்தாள். அப்போது அவள் ஆயிஷாவிடம் “மண்ணறை (கப்று) வேதனையிலிருந்து உம்மை இறைவன் காப்பாற்றுவானாக!’ என்று கூறினாள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆகவே, நான் (இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி) “அல்லாஹ்வின் தூதரே! மனிதர்கள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகிறார்களா?” எனக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(மண்ணறை வேதனையிலிருந்து) நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள்.

பிறகு (ஒரு நாள்) காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வர் இப்ராஹீமின் இறப்புச் செய்தி கேட்டு) வாகனத்தில் ஏறிப் பயணமானார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டு விடவே, நான் சில பெண்களுடன் சேர்ந்து அறைகளின் பின்புற வழியாகப் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தை ரத்துச் செய்துவிட்டு) தமது வாகனத்திலிருந்து இறங்கி, தாம் வழக்கமாக நின்று தொழுவித்துவந்த இடத்திற்குச் சென்று நின்றார் கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் நின்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) நீண்ட நேரம் நிலை யில் நின்றுவிட்டுப் பிறகு ருகூஉச் செய்தார் கள். அந்த ருகூஉவில் நீண்ட நேரம் இருந் தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையை விடக் குறைவாகவே இருந்தது. பிறகு ருகூஉச் செய்தார்கள். அந்த ருகூஉவையும் நீண்ட நேரம் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறை வாகவே இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தியபோது, சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. பின்னர் (அவர்கள் ஆற்றிய உரையில்) “நீங்கள் கப்றுகளில் தஜ்ஜா லின் குழப்பத்தைப் போன்ற குழப்பத்துக்கு உள்ளாக் கப்படுவதை நான் கண்டேன்” என்று குறிப்பிட்டார்கள்.5

இதன் அறிவிப்பாளரான அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நரக நெருப்பின் வேதனை யிலிருந்தும் மண்ணறை (கப்று) வேதனை யிலிருந்தும் (இறைவனிடம் அதிகமாகப்) பாது காப்புக் கோரி வந்ததை நான் செவியுற்றேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 3

கிரகணத் தொழுகையின்போது நபி (ஸல்) அவர்களுக்குச் சொர்க்கமும் நரகமும் காட்டப்பட்ட நிகழ்ச்சி.

1651 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் கடுமையான வெப்பம் நிறைந்த ஒரு நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுடன் (கிரகணத் தொழுகை) தொழுதார்கள். அதில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். எந்த அளவிற்கென்றால் மக்கள் (நிற்க முடியா மல்) கீழே விழலாயினர். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு (மீண்டும்) நீண்ட நேரம் ருகூஉச் செய் தார்கள். பிறகு நிமிர்ந்து நீண்ட நேரம் நிலை யில் நின்றார்கள். பிறகு இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு (இரண்டாவது ரக்அத்திற் காக) எழுந்து முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே செய்தார்கள். அவர்கள் (இவ்விரு ரக்அத்களில்) நான்கு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள்.

பிறகு, “நீங்கள் நுழையவிருக்கின்ற (மறுமை வெளி, சொர்க்கம் மற்றும் நரகம் உட்பட) அனைத்தும் எனக்குக் காட்டப்பட்டன. எனக் குச் சொர்க்கம் காட்டப்பட்டபோது அதிலிருந்த பழக் குலையொன்றை நான் எட்டிப் பிடிக்கப் போனேன். ஆனால், எனது கைக்கு எட்ட வில்லை. எனக்கு (இத்தொழுகையின்போது) நரகமும் காட்டப்பட்டது. அதில் பனூ இஸ்ராயீல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பூனையின் காரணத்தால் வேதனை செய்யப்படுவதை நான் பார்த்தேன். அவள் தனது பூனைக் குத் தீனி போடாமல் கட்டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை. (இதன் காரணமாகவே அவள் நரகம் சென்றாள்.) மேலும், நரகத் தில் நான் அபூஸுமாமா அம்ர் பின் மாலிக் என்பவரையும் பார்த்தேன்.6 அவர் நரகத்தில் தனது குடலை இழுத்த வண்ணம் சென்றுகொண்டிருந்தார். மக்கள் “ஒரு மாமனிதர் (அல்லது தலைவரின்) மரணத்திற்காகவே சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுகிறது’ என்று கூறுகின்றனர். (ஆனால்) அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அவற்றை உங்களுக்கு இறைவன் காண்பிக்கிறான். அவற்றுக்குக் கிரகணம் ஏற்பட்டால் வெளிச்சம் வரும்வரை நீங்கள் (இறைவனைத்) தொழுங்கள்” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.

அதில் “ஹிம்யர் (யமன் நாட்டின் பழங்குடி) இனத்தைச் சேர்ந்த உயரமான கறுப்பு நிறப் பெண் ணொருத்தியை நான் நரகத்தில் கண்டேன்” எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. “பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த’ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

1652 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய புதல்வர் இப்ராஹீம் (ரலி) அவர்கள் இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது மக்கள் “இப்ராஹீம் இறந்ததனால் தான் கிரகணம் ஏற்பட்டது’ என்று கூறினர். (இந்தச் செய்தி எட்டியதும்) நபி (ஸல்) அவர்கள் எழுந்து (இரண்டு ரக்அத்களில்) ஆறு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள். அவர்கள் முதலில் “தக்பீர்’ (தஹ்ரீம்) கூறினார்கள். பின்னர் நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதினார்கள். பிறகு ஏறக்குறைய நிலையில் நின்றிருந்த அளவிற்கு ருகூஉச் செய்தார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி முன்பு ஓதியதைவிடக் குறைவாக (குர்ஆனை) ஓதினார்கள். பிறகு ஏறக்குறைய முன்பு நிலையில் நின்றிருந்த அளவிற்கு ருகூஉச் செய்தார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி இரண் டாவது முறை (குர்ஆனை) ஓதினார்கள். அது முதலாவது முறை ஓதியதைவிடக் குறைவாக இருந்தது. பிறகு ஏறக்குறைய முன்பு நிலையில் நின்றிருந்த அளவிற்கு ருகூஉச் செய்தார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினார்கள். பிறகு (பூமியில்) சரிந்து இரண்டு சஜ்தாக்கள் செய்தார்கள்.

பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுந்து (முந்தைய ரக்அத்தில் செய்ததைப் போன்றே) மீண்டும் மூன்று ருகூஉகள் செய்தார்கள். அவர்கள் ஒரு ருகூஉச் செய்தால் அது அதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாகவே இருந்தது. அவர்களது ருகூஉ ஏறக்குறைய அவர்களது சஜ்தாவின் அளவிற்கே அமைந்திருந்தது. பிறகு அவர்கள் (தாம் நின்று தொழுவித்த இடத்திலிருந்து) பின்வாங்கி னார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த வரிசைகளும் அவர்களுடன் பின்வாங்கின. இறுதியில் நாங்கள் நின்ற இடத்திற்கே நபியவர்கள் வந்துவிட்டார்கள். (அறிவிப்பாளர் அபூபக்ர் கூறுகிறார்கள்: பெண்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.) பிறகு நபி (ஸல்) அவர்கள் முன்னோக்கி நகர அவர்களு டன் சேர்ந்து மக்களும் முன்னோக்கி நகர்ந்து, முன்பு நின்றிருந்த இடத்தில் நின்றனர். (கிரகணம் விலகி) சூரியன் தனது பழைய நிலைக்குத் திரும்பிய வேளையில் தொழுகையை முடித்தார்கள். பிறகு (உரையாற்றினார்கள். அதில் பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

மக்களே, சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். மக்களில் எவரது இறப்புக்காகவும் (அறிவிப்பாளர் அபூ பக்ர் கூறுகிறார்கள்: எந்த மனிதரின் இறப்புக் காகவும்) அவற்றுக்குக் கிரகணம் ஏற்படுவ தில்லை. இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் சூரிய வெளிச்சம் வரும்வரை நீங்கள் தொழுங்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள (சொர்க்கம் மற்றும் நரகம் உள்ளிட்ட) அனைத் தையும் நான் இத்தொழுகையில் இருந்தபோது கண்டேன். நரகம் என் (கண்) முன்னே கொண்டுவரப்பட்டது. அதன் தீச்சுவாலை என்னைத் தாக்கிவிடுமோ என நான் அஞ்சி னேன். அதன் காரணமாகவே நான் பின்வாங் கியதை நீங்கள் கண்டீர்கள். அ(ந்த நரகத்)தில் முனை வளைந்த கைத்தடி வைத்திருந்த ஒருவன் தனது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன். அவன் கைத்தடியின் முனையால் ஹஜ் பயணிகளிடம் திருடிவந்தான். திருட்டு அம்பலமாகிவிட்டால் “எனது கைத்தடியில் (எப்படியோ இந்தப் பொருள்) மாட்டிக்கொண்டது’ என்று கூறுவான். யாருக்கும் தெரியாவிட்டால் அதைக் கொண்டு சென்றுவிடுவான்.

மேலும், நரகத்தில் நான், பூனை வளர்த்த பெண்ணையும் கண்டேன். அவள் அதற்குத் தீனி போடாமல் கட்டிப்போட்டு வைத்திருந்தாள். அவள் அதை பூமியிலுள்ள புழுப்பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து)விடவுமில்லை. அது பசியாலேயே செத்துப்போய்விட்டது. பிறகு என் (கண்) முன்னே சொர்க்கம் கொண்டுவரப்பட்டது. நான் இந்த இடத்திற்கு மீண்டும் முன்னேறி வந்ததை நீங்கள் பார்த்தீர்களே அதற்குக் காரணம் அதுதான். நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் சொர்க்கத்தின் கனிகளைப் பறிக்க எனது கையை நீட்டினேன். பிறகு அவ்வாறு செய்யலாகாது என்று எனக்குத் தோன்றியது (ஆகவே, அதிலிருந்து பின்வாங்கிவிட்டேன்). உங்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள அனைத்தையும் இந்தத் தொழுகையில் இருந்தபோது நான் கண்டுகொண்டேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1653 ஃபாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர் தொழுதுகொண்டிருந்தார். நான் ஆயிஷாவிடம் “மக்களுக்கு என்னவாயிற்று? ஏன் (இந்த நேரத்தில்) தொழுதுகொண்டிருக்கிறார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா தமது தலையால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள். நான் “ஏதேனும் அடையாளமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா “ஆம்’ என (சைகையால்) விடையளித்தார். (நானும் தொழுகையில் நின்று கொண்டேன்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெகுநேரம் நிலையில் நின்றதால் எனக்குத் தலைச் சுற்றலே வந்துவிட்டது. எனக்குப் பக்கத் திலிருந்த தோல் பாத்திரத்திலிருந்து தண்ணீர் எடுத்து “எனது தலைமீது’ அல்லது “முகத்தின் மீது’ தெளித்தேன். சூரிய வெளிச்சம் வந்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து மக்க ளுக்கு உரையாற்றினார்கள். “இறைவாழ்த் துக்குப் பின்! நான் இந்த இடத்தில் (தொழுத வாறு) நின்றபோது சொர்க்கம் மற்றும் நரகம் உட்பட இதுவரை நான் பார்த்திராத அனைத் தையும் கண்டேன். நீங்கள் உங்கள் மண்ணறை களில் (கப்றுகளில்), மகாக் குழப்பவாதியான மஸீஹுத் தஜ்ஜாலின் “குழப்பத்தைப் போன்ற’ அல்லது “அதற்கு நிகரான’ குழப்பத்துக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டது.

– (“குழப்பத்தைப் போன்ற’ அல்லது “அதற்கு நிகரான’ என்பதில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை) –

(நீங்கள் மண்ணறையில் (கப்று) இருக்கும்போது) உங்களில் ஒருவரிடம் (என்னைக் காட்டி) “இம் மனிதரைப் பற்றி நீ என்ன அறிந்துள்ளாய்?” என வினவப்படும். அதற்கு “இறைநம்பிக்கையாளர்’ அல்லது “(இறுதித் தூதரின் மீது) உறுதிகொண்டிருந்தவர்’ -(இந்த இரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை.)- “இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டுவந்தார்கள். நாங்கள் அவர்களது அழைப்பை ஏற்றோம்; இணங்கினோம்” என்று மூன்று முறை கூறுவார். அப் போது அவரிடம், “உறங்குவீராக! நீர் அவரை நம்பிக்கை கொண்டிருந்தீர் என நாங்கள் அறிவோம். எனவே, நலமாக உறங்குவீராக” என்று கூறப்படும்.

ஆனால், “நயவஞ்சகன்’ அல்லது “சந்தேகத்துடன் இருந்தவன்’ “(அவரை) எனக்குத் தெரியாது. மக்கள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டு நானும் அதையே சொன்னேன்” என்று பதிலளிப்பான். (நயவஞ்சகன், சந்தேகத்துடன்இருந்தவன் ஆகிய இவ்விரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரியவில்லை.)7

1654 மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நான் ஆயிஷா (ரலி) அவர் களிடம் சென்றேன். அப்போது மக்கள் (தொழு கையில்) நின்றிருந்தார்கள். ஆயிஷாவும் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் “மக்களுக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டேன்” என அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

1655 முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“(சூரிய கிரகணத்தைக் குறிக்க) “கசஃபத் திஷ் ஷம்சு’ என்று கூறாதீர். மாறாக “ஃகசஃபத் திஷ் ஷம்சு’ என்று கூறுக” என உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.8

1656 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் (சூரிய கிரகணம் ஏற்பட்ட தினத்தில்) நபி (ஸல்) அவர்கள் பதற்றமடைந்தவர்களாக (தமது மேல்துண்டுக்குப் பதிலாகத் தமது வீட்டாரின்) முகத்திரைத் துணியை எடுத்து போட்டுக்கொண்டார்கள். பிறகு, அவர்களிடம் அவர் களது மேல்துண்டு கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. அவர்கள் (தொழுகையில்) நின்று மக்களுக்கு நீண்ட நேரம் தொழுவித்தார்கள். எந்த அளவிற்கென்றால், ஒரு மனிதர் அங்கு வந்தால், நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்தார்கள் என்பதைக்கூட அவரால் அறிந்துகொள்ள முடியாது; ருகூஉச் செய் தார்கள் என அவர் சொல்லவுமாட்டார். நீண்ட நேரம் நபியவர்கள் நின்றதே இதற்குக் காரணம்.

1657 மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “அவர்கள் நிற்பதும் பிறகு ருகூஉச் செய்வதுமாக நீண்ட நேரம் நின்றிருந்தார்கள்” என்றும், “நான் என்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணையும், என்னைவிட உடல் நலிவுற்ற மற்றோர் பெண்ணையும் பார்க்கலா னேன். (எனவே உட்கார்ந்துவிடலாமா என்ற எனது எண்ணத்தை நான் மாற்றிக்கொண் டேன்)” என்றும் அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

1658 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பதற்றமடைந்தவர்களாக (தமது மேல்துண்டை எடுப்பதற்கு பதில்) தவறாக (தம் வீட்டாரின்) முகத்திரையை எடுத்துச் சென்றுவிட்டார்கள். பின்னர் அவர்களது மேல்துண்டு அவர்களிடம் சேர்க்கப்பட்டது.

(நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகை தொழுவிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட போது) நான் என் தேவைகளை முடித்துக் கொண்டு வந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று (தொழுவித்துக்)கொண்டிருந்ததை நான் கண்டேன். அவர்களுடன் நானும் நின்றுகொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். எந்த அளவிற்கென்றால், உட்கார்ந்துவிடலாமா என நான் எண்ணினேன். பிறகு (எனக்கு அருகில்) பலவீனமான ஒரு பெண்ணைக் கண்டேன். இவரோ என்னைவிட பலவீனமானவர். (இவரே நின்று தொழும்போது) நானும் நின்றுதான் தொழுவேன்” எனக் கூறிக்கொண்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்தார்கள். அதையும் நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) தமது தலையை உயர்த்தி நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். ஒரு மனிதர் (தொழுகைக்கு இடையில்) வந்(து சேர்ந்) தால் நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்யவில்லை என எண்ணிவிடுவார் (அந்த அளவிற்கு நீண்ட நேரம் நின்றுகொண்டேயிருந்தார்கள்.)

1659 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். அவர்களுடன் மக்களும் தொழுதனர். அப்போது (குர்ஆனில்) ஏறக்குறைய “அல்பகரா’ (எனும் இரண்டாவது) அத்தியாயத்தை ஓதும் அளவிற்கு நிலையில் நின்றார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து முந்தைய நிலையைவிடக் குறைவாக இருந்தது. பிறகு (மீண்டும்) நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து முந்தைய ருகூஉவைவிடக் குறைவாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். பிறகு (இரண்டாவது ரக்அத்திற்காக) எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலை யான)து இதற்கு முந்தைய நிலையைவிடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉவான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாக இருந்தது. பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். இ(ந்த நிலையான)து இதற்கு முந்தைய நிலையை விடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். இ(ந்த ருகூஉ வான)து இதற்கு முந்தைய ருகூஉவைவிடக் குறைவாக இருந்தது. பிறகு சஜ்தாச் செய்தார்கள். (கிரகணம் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் (தொழுகையை முடித்துத்) திரும்பினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவோ எவரது பிறப்புக்காகவோ கிரகணம் ஏற்படுவ தில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் (தொழும்போது) இந்த இடத்தில் நின்றுகொண்டு எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியை) கைவிட்டதையும் கண்டோமே (அது ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நான் (தொழுதுகொண்டி ருக்கையில்) சொர்க்கத்தைக் கண்டேன். (அதிலிருந்து) பழக் குலையொன்றை எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால், இந்த உலகம் உள்ளவரை நீங்கள் அதைப் புசித்திருப்பீர்கள். மேலும், நான் நரகத்தையும் கண்டேன். இன்றைய தினத்தைப் போன்று மிக பயங்கரமான காட்சி எதையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்” என்று கூறினார்கள். மக்கள் “ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர்களின் நிராகரிப்பே காரணம்” என்றார்கள். அப்போது “இறை வனையா நிராகரிக்கிறார்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு “கணவர்களை நிராகரி(த்து நிந்தி)க் கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் அவர்களில் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை ஒன்றைக்) கண்டால் “உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டதே யில்லை’ என்று சொல்லிவிடுவாள்” என்று பதிலளித்தார்கள்.9

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “பிறகு நீங்கள் பின்வாங்கிவந்ததை யும் கண்டோமே (ஏன்?)” என்று மக்கள் வினவியதாக இடம்பெற்றுள்ளது.

பாடம் : 4

கிரகணத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் (ஒரு ரக்அத்திற்கு நான்கு ருகூஉகள்; இரண்டு சஜ்தாக்கள் வீதம் மொத்தம்) எட்டு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்தார்கள் என்று கூறுவோரின் ஆதாரம்.

1660 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (ரக்அத்திற்கு நான்கு ருகூஉகள்; இரண்டு சஜ்தாக்கள் வீதம்) எட்டு ருகூஉகளும் நான்கு சஜ்தாக்களும் செய்(து இரு ரக்அத்கள் தொழு)தார்கள்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

1661 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையில் நின்று (குர்ஆனை) ஓதினார்கள். பிறகு ருகூஉச் செய்தார்கள். பிறகு (நிமிர்ந்து குர்ஆன்) ஓதிவிட்டுப் பிறகு ருகூஉச் செய்தார்கள். பிறகு (நிமிர்ந்து குர்ஆன்) ஓதிவிட்டுப் பிறகு ருகூஉச் செய்தார்கள். பிறகு (மீண்டும் நிமிர்ந்து குர்ஆன்) ஓதிவிட்டு ருகூஉச் செய்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அடுத்த ரக்அத்திலும் இவ்வாறே செய்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

பாடம் : 5

கிரகணத் தொழுகைக்காக “அஸ் ஸலாத்து ஜாமிஆ’ (தொழுகை நடக்கப் போகிறது) என்று அறிவிப்புச் செய் வதற்கான ஆதாரம்.

1662 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது “(இன்னஸ்) ஸலாத்த ஜாமிஆ’ (தொழுகை நடக்கப்போகிறது) என (மக்களுக்கு) அறிவிப் புச் செய்யப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூஉ கள் செய்தார்கள். பிறகு (அடுத்த ரக்அத்திற்கு) எழுந்து (மீண்டும்) ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூஉகள் செய்தார்கள். (அவர்கள் தொழு கையை முடிக்கும்போது கிரகணமும் விலகி) சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருந்தது. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதை விட நீண்ட ருகூஉவை ஒருபோதும் நான் செய்ததேயில்லை; நீண்ட சஜ்தாவையும் ஒரு போதும் நான் செய்ததேயில்லை.10

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1663 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். அல்லாஹ் தன் அடியார் களை அவற்றின் மூலம் அச்சுறுத்(தி நல்வழிப்படுத்)துகிறான். மனிதர்களில் எவரது இறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றிலிருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்டுள்ளது அகற்றப்படும்வரை தொழுது, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.

இதை அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

1664 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் கூறினார்கள்:

மனிதர்களில் எவரது இறப்புக்காகவும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படு வதில்லை. மாறாக, அவ்விரண்டும் அல்லாஹ் வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். ஆகவே, கிரகணத்தை நீங்கள் கண்டால் எழுந்து தொழுங்கள்.

இதை அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

1665 மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறி விப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் சுஃப்யான் (ரஹ்) மற்றும் வகீஉ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “(நபி (ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது மக்கள் “இப்ராஹீமின் இறப்புக்காகவே கிரகணம் ஏற்பட்டது’ என்று கூறினர்” என (அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

1666 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் யுக முடிவு நாள் வந்துவிட்டதோ என அஞ்சி(யதைப் போன்று) பதற்றமடைந்தவர்களாக எழுந்து பள்ளி வாசலுக்குச் சென்றார்கள். அங்கு நின்று தொழுதார்கள். நிலை, குனிதல், சிரவணக்கம் ஆகியவற்றை நீண்ட நேரம் செய்(து தொழு)தார்கள். அவர்கள் ஒருபோதும் இவ்வாறு எந்தத் தொழுகையிலும் செய்வதை நான் கண்டதில்லை. பிறகு, “அல்லாஹ் அனுப்பிவைக்கும் இந்த அடையாளங்கள் எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் ஏற்படுபவை அல்ல. எனினும், அல்லாஹ் தன் அடியார்களை இவற்றின் மூலம் எச்சரிக்கவே செய்கிறான். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கண்டால் அவனை நினைவு கூர்வதிலும் அவனிடம் பிரார்த்திப்பதிலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவதிலும் விரைந்து ஈடுபடுங்கள்” என்று கூறினார்கள்.12

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

“(சூரிய கிரகணம் ஏற்பட்டது’ என்பதைக் குறிக்க இந்த ஹதீஸின் மூலத்தில் ஆளப் பட்டுள்ள “ஃகசஃபத்திஷ் ஷம்சு’ எனும் சொல்) முஹம்மத் பின் அல்அலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “கசஃபத்திஷ் ஷம்சு’ என்று ஆளப்பட்டுள்ளது. (“தன் அடியார்களை எச்ச ரிக்கவே செய்கிறான்’ என்பதன் மூலச் சொல் “யுகவ்விஃபு பிஹா இபாதஹு’ என்பதற்கு மாறாக) “யுகவ்விஃபு இபாதஹு’ என்று இடம்பெற்றுள்ளது.

1667 அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிருடனிருந்த காலத்தில் (ஒரு நாள்) நான் என் அம்புகளை எறிந்துகொண்டிருந்தேன். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நான் அம்புகளை விட்டெறிந்துவிட்டு “இன்று சூரிய கிரகணம் தொடர்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்படப் போவதை நான் காண்பேன்’ எனக் கூறிக் கொண்டவனாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அப்போது அவர்கள் தம் கைகளை உயர்த்தியபடி பிரார்த் திப்பதிலும் “தக்பீர்’ சொல்(லி இறைவனைப் பெருமைப்படுத்து)வதிலும் அல்லாஹ்வைப் புகழ்வதிலும் “லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என ஏகத்துவ உறுதி மொழி) கூறுவதிலும் ஈடுபட்டிருந்தார்கள். கிரகணம் விலகி சூரிய வெளிச்சம் வந்துவிட்டிருக்க இரு அத்தியாயங்கள் ஓதி இரண்டு ரக்அத்கள் தொழு(து முடித்)தார்கள்.

1668 நபித்தோழர் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் (ஒரு நாள்) நான் மதீனாவில் அம்புகளை எய்வதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவற்றை நான் எறிந்துவிட்டு “அல்லாஹ்வின் மீதாணையாக, சூரிய கிரகணம் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்படப்போவதை நான் காண்பேன்’ எனக் கூறிக்கொண்டு, அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தம் கைகளை உயர்த்தி நின்றபடி தொழுதுகொண்டிருந்தார்கள். இறைவனைத் துதிப்பதிலும் அவனைப் புகழ்வதிலும் ஏகத்துவ உறுதிமொழி கூறுவதிலும் அவனைப் பெருமைப்படுத்துவதிலும் பிரார்த்திப்பதிலும் கிரகணம் விலகும்வரை ஈடுபடலானார்கள். கிரகணம் விலகவும், அவர்கள் இரு அத்தியாயங்கள் ஓதி இரு ரக்அத்கள் தொழுது முடிக்கவும் சரியாக இருந்தது.

1669 மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நான் என் அம்புகளை எய்வதில் ஈடுபட்டிருந்தேன்” என்று ஹதீஸ் தொடங்குகிறது.

1670 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்புக் காகவோ பிறப்புக்காகவோ கிரகணம் காண்ப தில்லை. உண்மையில் அவை இரண்டும் இறைவனின் சான்றுகளில் உள்ளவை ஆகும். ஆகவே, கிரகணங்களை நீங்கள் கண்டால் (இறைவனைத்) தொழுங்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.13

1671 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில், அல்லாஹ்வின் தூதருடைய புதல்வர் இப்ராஹீம் (ரலி) இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. அவற்றை நீங்கள் கண்டால் கிரகணம் விலகும்வரை அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; தொழுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.14

17.04.2010. 23:12

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.