7 – தயம்மும்

அத்தியாயம்: 7 – தயம்மும்.

உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் (அங்கசுத்தி செய்து கொள்ள) தண்ணீரைப் பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங் களையும்உங்களுடைய கைகளையும் தடவி தயம்மும் செய்து கொள்ளுங்கள். (5:6)

பாடம் : 1

334 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (பனூமுஸ்த-க் போர்) பயணத்தில் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவிற்கருகிலுள்ள) பைதா அல்லது தாத்துல்ஜைஷ்எனுமிடத்தில் (வந்து கொண்டு) இருந்த போது எனது (கழுத்தில் கிடந்த என் சகோதரி அஸ்மாவின்) கழுத்தணி அவிழ்ந்து (காணமற் போய்) விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட்டுத்) தங்கினார்கள். அவர்களுடன் (பரிவாரத்திலிருந்த) மக்களும் (முகாமிட்டுத்) தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை;அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் சென்று (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்த (காரியத்)தை நீங்கள் பார்க்கவில்லையாஅல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்து விட்டார். இங்கும் தண்ணீர் இல்லைமக்களிடமும் தண்ணீர் இல்லை என்று (முறையிட்டுக்)கூறினர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்போது என் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து),அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தை தொடர முடியாமல்) தடுத்து விட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லைமக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள்.

அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடி மீது (தலைவைத்துப்படுத்து) இருந்தது தான் என்னை அசையவிடாமல் (அடி வாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போது தண்ணீர் இருக்கவில்லை. அப்போது தான் தயம்மும் உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(கழுத்தணி துளாவிச் சென்றவர்களில் ஒருவரான) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் (இது குறித்துக் குறிப்பிடுகையில்)அபூபக்ரின் குடும்பத்தினரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்) களில் இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள்.

(பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பிய போது அதற்குக் கீழேயிருந்து (காணாமற் போன) அந்தக் கழுத்தணி கிடைத்தது

335 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத் தூதர்கள்) எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்ட்டுள்ளது.

1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

2. தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்து விட்டால் (அவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில் தயம்மும் செய்து கொள்ளட்டும்.) தொழுது கொள்ளட்டும்.

3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது. எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

4. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன்.

5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூகத்திற்கு மட்டுமே தூதராக (நியமித்து) அனுப்பப் பட்டார்கள். ஆனால் நான்மனித இனம் முழுவதற்கும் இறைத்தூதராக (நியமித்து) அனுப்பப்பட்டுள்ளேன்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 2

(சுத்தம் செய்ய) தண்ணீரோ மண்ணோ கிடைக்கவில்லையானால் (என்ன செய்ய வேண்டும்?)

336 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து (கழுத்து) மாலையொன்றை இரவல் வாங்கினார்கள். அது (பனூமுஸ்த-க் போர் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. (இதையறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உசைத் பின் ஹுளைர் எனும்) ஒருவரை(த் தலைமையாகக் கொண்டு சிலரை அதைத் துளாவுவதற்காக) அனுப்பிவைத்தார்கள். கடைசியில் அந்த மாலையும் கிடைத்தது. ஆனால் (இதற்கிடையில் துளாவப்போன) அவர்களுக்கு தொழுகை நேரம் வந்து விட்டது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் (உளூ செய்யாமலேயே) தொழுது விட்டார்கள். (திரும்பி வந்ததும்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்து முறையிட்டனர். அப்போது தான் அல்லாஹ் தயம்மும் உடைய (4:43ஆவது) வசனத்தை அருளினான்.

ஆகவே (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள்அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் வெறுக்கும் ஒன்று உங்களுக்கு நேரும்போதெல்லாம் அதை உங்களுக்குச் சாதக மாகவே அல்லாஹ் ஆக்கியிருக்கின்றான். மேலும் அதில் முஸ்லிம்களுக்கு (சமுதாய) நலனை நல்கியே இருக்கின்றான் என்று சொன்னார்கள்.

பாடம் : 3

சொந்த ஊரில் தங்கியிருக்கும் போது தண்ணீர் கிடைக்காமலிருந்து தொழுகையின் நேரம் சென்றுவிடுமோ என்று அஞ்சினால் தயம்மும் செய்து கொள்ளலாம்.

இவ்வாறே அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நோயாளியிடம் தண்ணீர் இருந்தும் அதை அவருக்கு ஊற்றித்தர ஆள் கிடைக்காவிட்டால் அவர் தயம்மும் செய்து கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மதீனாவின் புறநகரிலிருந்த) ஜுருஃப் எனும் தம் நிலத்திலிருந்து (மதீனாவை நோக்கி) வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் (மதீனாவிற்கு அருகில் ஒருமைல் தொலைவிலிருந்த) மர்பதுந் நஅம் எனுமிடத்தை அடைந்த போது அஸ்ர் தொழுகையின் நேரம் வந்து விட்டது. உடனே (தண்ணீர் கிடைக்காததால் தயம்மும் செய்து) தொழுதார்கள். பிறகு மதீனாவிற்குள் வந்தார்கள். அப்போது சூரியன் உயர்ந்தே இருந்தது (மறையவில்லை). ஆயினும் அவர்கள் அந்த அஸ்ர் தொழுகையை திரும்பத் தொழவில்லை.

337 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான உமைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமையான அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களும்நானும் அபூஜுஹைம் பின் ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலுள்ள) பிஃரு ஜமல் எனும் பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து சலாம் சொன்னார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உடனடியாக பதில் சலாம் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் போய் (அதில் தமது கையை அடித்து) தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொண்ட பின்னர் அவருக்கு பதில்சலாம் சொன்னார்கள்.

பாடம் : 4

தயம்மும் செய்பவர் (மண்ணில் அடித்த பின்) இருகைகளிலும் (உள்ள புழுதியை) ஊதிவிட வேண்டுமா?

338 அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து நான் பெருந்துடக்குடைய வனாகிவிட்டேன். ஆனால் (குளிப்பதற்கு) எனக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. (இந் நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?) என்று கேட்டார்.

அப்போது (அங்கிருந்த) அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம்,நாம் ஒரு (போர்ப்) பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம்அதில் நானும் நீங்களும் இருந்தோம். அப்போது (பெருந்துடக்கு ஏற்பட்ட நமக்கு குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை ஆகவே) நீங்கள் தொழவில்லைநானோ (உளூவிற்குப் பதிலாக தயம்மும் செய்வது போன்று குளியலுக்குப் பதிலாக) மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது நபி (ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் தரையில் அடித்து அவற்றில் ஊதிவிட்டு அவ்விருகைகளால் தமது முகத்தையும் (மணிக்கட்டுகள் வரை) இரு கைகளையும் தடவிக் காண்பித்து இவ்வாறு செய்திருந் தால் அது உமக்குப் போதுமே எனக் கூறியது உங்களுக்கு நினைவில்லையாஎன்று கேட்டார்கள்.

பாடம் : 5

முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவுவது தான் தயம்மும்.

339 அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் இங்கே இடம் பெறுகிறது. மேலும் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் தம்மிரு கைகளால் தரையில் அடித்து அவ்விருகைகளையும் தம் வாயருகே கொண்டுசென்று (ஊதிவிட்டுப்) பின்னர் தமது முகத்தையும் (மணிக்கட்டுவரை) இருகைகளையும் தடவி(க் காட்டி)னார்கள் என்பதும் இந்த அறிவிப்பில் அதிகப்படியாக இடம் பெறுகிறது.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

340 அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன் அப்போது அம்மார் (பின் யாசிர்-ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் நாம் ஒரு படைப்பிரிவில் இருந்தோம். அப்போது நமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டது (எனத்தொடங்கி) மேற்கண்ட ஹதீஸிலுள்ளது போன்றே அறிவித்துள் ளார்கள். மேலும் (அவ்விருகைகளிலும் ஊதினார்கள் என்பதற்கு பதிலாக) தம்மிரு கைகளிலும் சற்று வேகமாக ஊதினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

இதை சயீத் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

341 அப்துர்ரஹ்மான் (பின் அப்ஸா-ரலி) அவர்கள் கூறியதாவது:

அம்மார் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம்மண்ணில் புரண்ட நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் முகமும் (மணிக்கட்டு வரை) இருகைகளும் உமக்கு (தயம்மும் செய்யப்) போதும் என்று சொன்னார்கள்.

342 மேற்கண்ட ஹதீஸ் அப்படியே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக இடம் பெறுகிறது.

343 அம்மார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கையை தரையில் அடித்துத் தமது முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவி(க் காட்டி)னார்கள்.

பாடம் : 6

தண்ணீருக்குப் பகரமாக சுத்தமான மண் ஒரு முஸ்-முக்கு சுத்தம் செய்யப் போதுமானதாகும்.

ஒரு தடவை ஒருவர் தயம்மும் செய்து விட்டால் சிறுதுடக்கு (எனும் உளூவை முறிக்கும் காரியங்கள்) ஏற்படாதவரை அந்த தயம்மும் அவருக்குப் போதமானதாக அமையும் (ஒவ்வொரு தொழுகைக்கும் தனித் தனி தயம்மும் செய்யவேண்டியதில்லை) என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தயம்மும் செய்து கொண்டு (உளூ செய்திருக்கும் மக்களுக்கு) இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள்.

யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள், (எதையும் முளைக்கச் செய்யாத உப்புத்தன்மை கொண்ட) உவர் நிலத்தில் தொழுவதோஅந்நிலத்தில் தயம்மும் செய்வதோ குற்றமல்ல என்று கூறியுள் ளார்கள்.

344 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். இரவில் பயணத்தைத் தொடர்ந்த நாங்கள் இரவின் கடைசி நேரமான போது ஒரு தூக்கம் தூங்கினோம். பயணிக்கு அதைவிட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்தத் தூக்கத்திலிருந்து) எங்களை (காலை நேர) சூரிய வெப்பம்தான் விழித்தெழச் செய்தது. அப்போது முதன் முதலில் விழித்தெழுந்தவர் இன்னாராவார். அதற்கடுத்து இன்னார். அதற்கடுத்து இன்னார்.

-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூரஜாஉ (இம்ரான் பின் மில்ஹான் அல் உதாரிதீ-ரஹ்) அவர்கள் அம்மூவரின் பெயரையும் குறிப்பிட்டார்கள். ஆனால் அவரிடமிருந்து அறிவிப்பவரான அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அவர்களுடைய பெயர்களை மறந்து விட்டார்கள்.-

நான்காவதாக உறக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களா வார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகவே கண்விழிக்காத வரை அவர்களை உறக்த்திலிருந்து யாரும் எழுப்ப மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு என்ன நடக்கிறது (இறைச்செய்தி ஏதேனும் வருகிறதா?) என்று எங்களுக்குத் தெரியாது( அல்லவா?) (எனவேதான் அவர்களை யாரும் எழுப்ப மாட்டார்கள்).

உறக்கத்திலிருந்து உமர் (ரலி) அவர்கள் எழுந்து மக்களுக்கு ஏற்பட்டுவிட்ட (அதிகாலைத் தொழுகை தவறிப்போன துயர) நிலைமைப் பார்த்த போது (எல்லோரையும் எழுப்ப) அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று உரத்த குரலில் தக்பீர் சொன்னார்கள். – உமர் (ரலி) அவர்கள் நெஞ்சும் வாய்ந்த மனிதராய் இருந்தார்கள்.- எனவே தொடர்ந்து உரத்த குரலில் தக்பீர் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுடைய சப்தத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்களும் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்பராவாயில்லை அல்லது எந்தப் பாதிப்புமில்லை இங்கிருந்து புறப்படுங்கள்! என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சற்று தூரம் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கினார்கள். உளூ செய்வதற்காக தண்ணீர் கொண்டுவரச் சொ– உளூ செய்தார்கள். (சுப்ஹுத்) தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்பு விடுவிக்கப்பட்டபின் மக்களுக்கு (நேரம் தவறிவிட்ட அந்த தொழுகையை) நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பிய போது அங்கு ஒரு மனிதர் மக்களுடன் தொழாமல் அவர்களை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள்இன்னாரே! மக்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் தொழவில்லைஎன்று கேட்டார்கள். அவர்எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது (குளியலுக்குத்) தண்ணீர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள். அது போதும் உங்களுக்கு என்று சொன்னார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்த போது அவர்களிடம் மக்கள் தங்களுக்குத் தாகம் ஏற்படுவதாக முறையிட்டனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இன்னாரை அழைத்தார்கள் – அவருடைய பெயரை அறிவிப்பாளர் அபூரஜாஉ குறிப்பபிட்டார்கள் ஆனால் அடுத்த அறிவிப்பாளர் அவ்ஃப் அதை மறந்து விட்டார் – (அவருடன்) அலீ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் அழைத்துநீங்கள் இருவரும் சென்று தண்ணீர் கிடைக்குமா என்று தேடிப் பாருங்கள்! என்றார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்த போது தண்ணீருள்ள இரு பெரும் தோல் பைகளுக்கிடையே (கால்களை தொங்கவிட்ட படி) தமது ஒட்டகத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை (வழியில்) சந்தித்தார்கள். அப்பெண்ணிடம் அவர்கள் இருவரும்தண்ணீர் எங்கே (உள்ளது)என்று கேட் டார்கள். அதற்கு அப்பெண்நேற்று இதே நேரத்தில் இந்தத் தண்ணீர் எனக்குக் கிடைத்தது. (இந்தத் தண்ணீருக்காக ஒரு நாள் பயணம் மேற் கொண்டேன்.) எங்கள் ஆட்கள் தண்ணீரைத் தேடிச் சென்றதால் (என்னுடன் வராமல்) பின்தங்கிவிட்டனர் (எங்கள் ஆண்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள்.) என்று கூறினாள்.

அப்படியானால் நீ நட! என்று அவர்கள் இருவரும் அப்பெண்ணிடம் கூறினர். அதற்கு அப்பெண் எங்கே?என்று கேட்டாள். அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதரிடம் என்று கூறினர். மதம் மாறியவர் (ஸாபிஉ) என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலாஎன்று அப்பெண் கேட்டாள். நீ நினைக்கின்ற அந்த மனிதரிடத்தில்தான்நட என்று கூறிவிட்டு அப்பெண்ணை அவர்களிருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததை அவர்கள் நபியவர்களிடம் கூறினர்.

மக்கள் அந்தப் பெண்ணை ஒட்டகத்திலிருந்து இறங்குமாறு கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச்சொல்லி அவ்விரு தோல்பைகளின் வாய்வழியாக தண்ணீரை பாத்திரத்தினுள் நிரப்பினார்கள். பிறகு அந்த தோல்பைகளின் மேல்வாய்களைக் கட்டிவிட்டுதண்ணீர் ஊற்றியெடுக்கும் கீழ் வாய்களைக் கட்டாமல் திறந்து விட்டார்கள். மக்களிடையே தண்ணீர் பருகுங்கள்பிறர் பருகுவதற்காக எடுத்துக் கொள்ளுங்கள்!என அறிவிக்கப்பட்டது. அவ்வாறே அவர்களும் தண்ணீர் பருகினர். சிலர் பருகினர். சிலர் பிறர் பருகுவதற்காக எடுத்துக் கொண்டனர். இதில் பெருந்துடக்கு ஏற்பட்ட அந்த மனிதருக்கே கடைசியாக ஒரு பாத்திரம் தண்ணீர் வழங்கி (இந்தத்தண்ணீரை எடுத்துச்) சென்றுஉங்கள் மீது ஊற்றிக்(குளித்துக்) கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தனது தண்ணீரை என்(னென்)ன செய்யப்படுகிறது என்று பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். அல்லாஹ்வின் மீதானையாக! மக்கள் தண்ணீர் எடுத்து முடிந்த போது அதில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்த போது இருந்ததைவிட கூடுதலான தண்ணீர் நிரம்பியிருப்பது போன்று எங்களுக்குத் தோன்றியது. (தோல்பையிலிருந்த தண்ணீர் குறையாமல் இருந்தது) அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) இந்தப் பெண்ணுக்காக (ஏதேனும் பொருட்களை) திரட்டுங்கள்! என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள்அந்தப் பெண்ணுக்காக மதீனாவின் செறிவுமிகு பேரீச்சங் கனிகள் (அஜ்வா)மாவுகுழைத்த மாவு உட்பட (தாரளமான) உணவுப் பண்டங்களை திரட்டி(க் கொண்டுவந்து)அதை ஒரு துணியி-ட்டனர். அந்தப் பெண்ணை அவளது ஒட்டகத்திலமர்த்தி அந்தத் துணியை அவளுக்கு முன்னால் வைத்தனர். பிறகு அப் பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள்தெரிந்து கொள்! உனது தண்ணீரிலிருந்து நாங்கள் சிறிதளவுகூட குறைக்கவில்லை; (நாங்கள் எடுத்த தண்ணீர் அல்லாஹ் எங்களுக்கு வழங்கியதாகும்.) அல்லாஹ்தான் எங்களுக்கு தண்ணீர் பருகச் செய்தான் என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண் தன் வீட்டாரிடம் நேரம் பிந்திப்போன போது அவர்கள்இன்னவளே! ஏன் இவ்வளவு நேரம் கழிந்துவருகிறாய்என்று கேட்டனர். அதற்கு அந்தப் பெண்ஓர் அதிசயம் (என்னை சீக்கிரமாக வரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது.) இரு ஆடவர்கள் என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படுகிறதே அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படி இப்படிச் செய்தார்என்று கூறிவிட்டுஅப் பெண் தனது கையின் நடுவிரலையும் ஆட் காட்டி விரலையும் வானை நோக்கி உயர்த்திக் காட்டிஅல்லாஹ்வின் மீதாணையாக! இந்த வானிற்கும் பூமிக்குமிடையேயுள்ளவர்களில் மிக வசீகரமான ஒரு மனிதராக அவர் இருந்தார் அல்லது உண்மையாக அவர் இறைவனின் தூதராவார் என்று கூறினாள்.

அதற்குப் பிறகு (ஒரு சமயம்) அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்த இணைவைப்பவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே போர் நடந்த போது அந்தப் பெண் சார்ந்திருந்த தொகுப்பு வீடுகளை முஸ்லிம்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆகவே ஒரு நாள் அப்பெண் தம் கூட்டத்தாரிடம்இந்த மக்கள் வேண்டுமென்றே (உங்களைத் தாக்காமல்) விட்டுவிடுகிறார்கள் என்பதே என் எண்ணம். இஸ்லாத்தில் (இணைய) உங்களுக்கு அபிப்ராயம் உண்டாஎன்று கேட்டாள். அவர்கள் அனைவரும் அவளு(டைய சொல்லு)க்கு இணங்கி இஸ்லாத்தில் இணைந்தனர்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ஸாபிஉ எனும் சொல்லின் வினைச் சொல்லான) ஸபஅஎன்பதற்கு ஒரு மதத்திலிருந்து வெளியேறி இன்னொரு மதத்திற்குச் சென்றார் (மதம் மாறினார்)என்று பொருள்.

அபுல் ஆ-யா (ரஃபீஉ பின் மிஹ்ரான்-ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸாபியீன் மற்றும் இன்னொரு பிரதியிலுள்ளபடி ஸாபிஊன் என்போர் ஸபூர் (தாவீதின் தோத்திரப்பாடல்கள்) வாசித்து வந்த வேதக்காரர்களில் ஒரு பிரிவினர் ஆவர்.

பாடம் : 7

தண்ணீரைப் பயன்படுத்தினால்தமக்கு நோயோ மரணமோ ஏற்பட்டுவிடுமென குளியல் கடமையானவர் அஞ்சினால் அல்லது தம்மிடமுள்ள தண்ணீரைச் செலவழித்து விட்டால் தாகத்தினால் சிரமப்படநேரிடும் என்று அவர் பயந்தால் தயம்மும் செய்து கொள்ளலாம்.

(தாத்துஸ் ஸலாஸில் போரின் போது) குளிரான ஓர் இரவில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. ஆகவே அவர்கள் (குளிக்காமல்) தயம்மும் செய்து கொண்டார்கள். (பிறகு இது பற்றி அவர்கள் தம் தோழர்களிடம் குறிப்பிடுகையில்) நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்- நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான் எனும் (4:29ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் (மதீனா திரும்பியதும்) இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

345 அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா (அப்துல்லாஹ் பின் கைஸ்

ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், (குளியல் கடமையான ஒருவருக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் தொழ வேண்டாமல்லவாஎன்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், (ஆம்தொழ வேண்டியதில்லை. ஆயினும்) இது விஷயத்தில் நான் சலுகையளித்தால் குளிரடித்தால் கூட (அதைக் காரணம் காட்டி) மக்கள் இப்படி – தயம்மும் – செய்து கொண்டு தொழ ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறினார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள்அப்படி யானால் அம்மார் (பின் யாசிர்-ரலி) அவர்கள்உமர் (பின் அல்கத்தாப்-ரலி) அவர்களிடம் சொன்ன (தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தல் போதுமானது என்பது பற்றிய) கூற்று எங்கேஎன்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்அம்மாரின் சொல்லைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் மனநிறைவுகொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன்என்றார்கள்.

346 ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூமூசா (ரலி) ஆகியோர் அருகில் நான் (அமர்ந்து கொண்டு) இருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம்அபூ அப்திர்ரஹ்மானே! பெருந்துடக்கு ஏற்பட்ட ஒருவருக்கு (குளியலுக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்யவேண்டும்என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்,தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழவேண்டிய தில்லை என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூமூசா (ரலி) அவர்கள்நபி (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம் (தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்திருந்தால்) உமக்குப் போதுமானதாக அமைந்திருக்கும் என்று சொன்னதாக அம்மார்

(ரலி) அவர்கள் கூறிய செய்தியை நீங்கள் என்ன செய்வீர்கள்என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்ளஅம்மார் (ரலி) அவர்கள் அச்செய்தியை தம்மிடம் கூறிய போதுன உமர் (ரலி) அவர்கள் அதைக் கேட்டு மனநிறைவு அடையவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதாஎன்று (திருப்பிக்)கேட்டார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள்அம்மாரின் சொல்லை விடுங்கள். (தண்ணீர் கிடைக்காவிடில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் இந்த (5:6)இறைவசத்தை என்ன செய்வீர்கள்என்று கேட்டார்கள். ஆயினும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு (தாம் வழங்கும் தீர்ப்புக்கேற்ப அந்த வசனத்திற்கு விளக்கம்) சொல்லத் தெரியாமலேயே, (பெருந்துடக்குடையவர் தண்ணீர் கிடைக்காத போது தயம்மும் செய்து கொள்ளலாம்எனும்) இவ்விஷயத்தில் மக்களுக்கு சலுகையளித்தால் யாருக்காவது தண்ணீர் குளிராகத் தெரிந்தால் கூட உளூசெய்வதை விட்டுவிட்டு தயம்மும் செய்யப் போய்விடுவார்கள் என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) கூறுகின்றார்கள்:

அப்படியானால் (மக்கள் குளிருக்காக தயம்மும் செய்து விடுவார்கள் எனும்) இந்தக் காரணத்தை முன்னிட்டுத் தான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அந்தச் சலுகையை வழங்க) வெறுத்தார்கள் என்கிறீர்களாஎன்று ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள்ஆம் (அதற்காகத் தான் வெறுத்தார்கள்) என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 8

தயம்மும் என்பது (இருகைகளால்) ஒருமுறை (மண்ணில்) அடிப்பது தான் .

347 ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம்பெருந்துடக் கேற்பட்டு (குளியல் கடமையாகி)விட்ட ஒரு மனிதருக்கு ஒரு மாத காலம் வரை தண்ணீர் கிடைக்காவிட்டாலும் தயம்மும் செய்யாமலும் தொழாமலும் இருந்து விட வேண்டியதுதானாஅப்படியானால் அல் மாயிதா அத்தியாத்தில் வரும் நீங்கள் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாவிடில் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் இந்த (5:6ஆவது) வசனத்தை என்ன செய்வீர்கள்என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்இது விஷயத்தில் (மக்களுக்குப் பொதுவாக) அனுமதி கொடுக்கப்பட்டுவிடுமானால் தண்ணீர் அவர்களுக்கு குளிராகத் தெரிந்தால்கூட (உளூ/குளியல் ஆகியவற்றை விட்டுவிட்டு) தயம்மும் செய்யப்போய்விடுவார்கள் என்றார்கள். (அறிவிப்பாளர் அஃமஷ் ளரஹ்ன கூறுகிறார்கள்: ஷகீக் (ரஹ்) அவர்களிடம்,ன இதற்காகத் தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுக்கின்றீர்களாஎன்று நான் கேட்டேன். அதற்கு ஷகீக் (ரஹ்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

உடனே அபூமூசா (ரலி) அவர்கள்கேட்டார்கள்: உமர் (ரலி) அவர்களிடம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் சொன்ன செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா? (அச்செய்தி வருமாறு:)

அம்மார் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னை ஒரு தேவைக்காக (படைப்பிரிவொன்றில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அப்போது எனக்கு பெருந்துடக்கேற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே (உளூவிற்குத் தயம்மும் செய்வது போன்று குளியலுக்காக) மண்ணில் புரளுவது போன்று புரண்டேன்.

(ஊர் திரும்பியதும்) இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது நபி (ஸல்) அவர்கள் தமது கையை பூமியில் ஒரு அடியடித்துபின்னர் அவற்றை உதறிவிட்டு தமது வலக் கரத்தால் இடது புறங்கையை அல்லது தமது இடக்கரத்தால் வலது புறங்கையைத் தடவினார்கள். பிறகு இருகைகளால் தமது முகத்தையும் தடவிவிட்டு இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமானதாயிருந்திருக்கும் என்று கூறினார்கள்.

(இந்நிகழ்ச்சியை கேட்டுவிட்டு) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்அம்மார் சொன்னதில் உமர் (ரலி) அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்பது உங்களுக்த் தெரியாதாஎன்று (அபூமூசா (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள்

ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் அதிகப்படியான தகவலும் இடம் பெறுகிறது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)அபூமூசா (ரலி) ஆகியோருடன் இருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர் களிடம் உமர் (ரலி) அவர்களிடம் அம்மான் பின் யாசிர் (ரலி) அவர்கள் என்னையும் உங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (படைப்பிரிவொன்றில்) அனுப்பி வைத்தார்கள். எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. அப்போது நான் மண்ணில் (கிடந்து) புரண்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாம் வந்து விஷயத்தைத் தெரிவித்த போது அவர்கள் தமது முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் ஒரேயொரு தடவை தடவிவிட்டுஇப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமானதாயி ருந்திருக்கும் என்று சொன்ன செய்தியை நீர் கேள்விப்படவில்லையா?என்றார்கள்.

பாடம் : 9

348 இம்ரான் பின் ஹுஸைன் அல்குஸாஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (கூட்டுத்) தொழுகையில் மக்களுடன் சேராமல் அவர்களைவிட்டுத் தனியே விலகி இருப்பதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இன்னாரே! மக்களுடன் சேர்ந்து நீர் ஏன் தொழவில்லைஎன்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர்அல்லாஹ்வின் தூதரே! எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது; (குளியலுக்குத்) தண்ணீர் இல்லை (எனவேதான் மக்களைவிட்டும் விலகியிருக்கிறேன்) என்று கொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்அந்த மண்ணை (தயம்மும் செய்ய)ப் பயன்படுத்தும். அது உமக்குப் போதுமாகும்என்றார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.