47 – கூட்டுச் சேருதல்

அத்தியாயம்: 47 – கூட்டுச் சேருதல்.

பாடம் : 1

உணவிலும் பயணச் செலவிலும் பிற பண்டங்களிலும் கூட்டுச் சேருதல்.

மற்றும் அளக்கப்படும் பொருள் களையும் நிறுக்கப்படும் பொருள் களையும் பங்கிடுவது எப்படி? (அளக்காமல் நிறுக்காமல்) குத்து மதிப்பாகப் பங்கிட வேண்டுமா? அல்லது சமமான ஒவ்வொரு பிடியாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமா? ஏனெனில், பிரயாணக் கட்டுச் சாதங்களைப் பிரயாணிகள் தமக்குள் பொதுவாக வைத்திருக்கும் போது, ஒருவர் அவற்றில் ஒன்றை எடுத்துச் சாப்பிட,மற்றொருவர் இன்னொன்றை (சற்று கூடுதலாகவோ சற்றுக் குறைவாகவோ) எடுத்துச் சாப்பிடுவதில் முஸ்லிம்கள் குற்றம் ஏதும் காணவில்லை. இவ்வாறே, தங்கம் வெள்ளியை நிறுக்காமல் (தங்கத்திற்குப் பகரமாக வெள்ளியை அல்லது வெள்ளிக்குப் பகரமாக தங்கத்தைக்) குத்துமதிப்பாகப் பங்கிடுவதும், கூட்டாக அமர்ந்து உண்ணும் பொழுது இரண்டு பேரீச்சம் பழங்களை ஒரு சேர (எடுத்து) உண்பதும் (கூட்டான பயண உணவாக இருக்கும் போது) அனுமதிக்கப்படும்.

2483 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள்.1அந்தப் படையினருக்கு அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக ஆக்கினார்கள். அவர்கள் (படையினர்) முந்நூறு பேர் இருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். நாங்கள் புறப்பட்டோம். பாதி வழியிலேயே எங்கள் கையிருப்பில் இருந்த (பயண) உணவு தீர்ந்து போய்விட்டது. அபூ உபைதா (ரலி) அவர்கள் அந்தப் படையின் (கைவசமிருந்த) கட்டுச் சாதங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டும் படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை அனைத்தும் ஒன்று திரட்டப்பட்டன. இரு பைகள் (நிறைய) பேரீச்சம் பழங்கள் சேர்ந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அவற்றை எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாகக் கொடுத்து வந்தார்கள். இறுதியில்,அவையும் தீர்ந்து போய் விட்டன. எங்களுக்கு (ஆளுக்கு) ஒவ்வொரு பேரீச்சம் பழம் தான் கிடைத்து வந்தது.

…இதை ஜாபிர் (ரலி) அவர்கள் சொன்ன போது, இதைக் கேட்டுக் கொண்டிருந்த அறிவிப்பாளர் வஹ்ப் பின் கைஸான் (ரஹ்) அவர்கள், ஒரு பேரீச்சம் பழம் எப்படிப் போதும்? என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், அதுவும் தீர்ந்து போன பின்பு தான் அதன் மதிப்பை நாங்கள் உணர்ந்தோம்என்று பதிலளித்தார்கள்…

பிறகு நாங்கள் கடல் வரை வந்து சேர்ந்து விட்டோம். அங்கு தற்செயலாக சிறிய மலை போன்ற (திமிங்கல வகை) மீன் ஒன்று கிடைத்தது. அதிலிருந்து (எங்களுடைய) அந்தப் படை பதினெட்டு நாட்கள் உண்டது. பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்பு களிலிருந்து இரு விலா எலும்புகளை பூமியில் நட்டு வைக்கும்படி உத்திர விட்டார்கள். அவ்வாறே, அவை இரண்டும் நடப்பட்டன. பிறகு, ஒட்டகத்தை அதன் கீழே ஓட்டிச் செல்லும்படி உத்திரவிட்டார்கள். அவ்வாறே ஓட்டிச் செல்லப்பட்டது. அது (அந்தத் திமிங்கலத்தின்) விலா எலும்பு களின் கீழே சென்றது. ஆனால்,அவற்றை அது தொடவில்லை.

2484 சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்து போய்ப் பஞ்சத்திற் குள்ளானார்கள். ஆகவே,நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் ஒட்டகங்களை அறுக்க அனுமதி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (வழியில்) அவர்களை உமர் (ரலி) அவர்கள் சந்திக்க, மக்கள் அவர்களுக்கு (நடந்த விஷயத்தை)த் தெரிவித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்கள் ஒட்டகங் களை அறுத்து (உண்டு) விட்ட பிறகு நீங்கள் எப்படி உயிர் வாழ்வீர்கள்?என்று கேட்டார்கள்.2 பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களுடைய ஒட்டகத்தை அறுத்து (உண்டு) விட்ட பிறகு அவர்கள் எப்படி உயிர் வாழ் வார்கள்?என்று கேட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் தங்கள் பயண உணவில் எஞ்சியதைக் கொண்டு வரும்படி அவர் களிடையே அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டு, மக்கள் தங்கள் எஞ்சிய உணவைக் கொண்டு வந்து போடுவதற்காக ஒரு தோல் விரிப்பு விரித்து வைக்கப்பட்டது. மக்கள் அதில் தங்கள் எஞ்சிய உணவுகளை (குவியலாக) வைத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துஆ செய்து அதில் பரக்கத்தை அளிக்கும்படி அல்லாஹ் விடம் வேண்டினார்கள்.

பிறகு, தங்கள் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி மக்களை அழைத்தார்கள். மக்கள், தங்கள் இரு கைகளையும் குவித்து (உணவில் தங்கள் பங்கைப்) பெற்று(பாத்திரங்களை நிரப்பி)க் கொண்டார்கள்.

அனைவரும் உணவைப் பெற்றுக் கொண்டுவிட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன் என்று சொன்னார்கள்.

2485 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அஸர் தொழுகை தொழுது விட்டு, ஒட்டகத்தை அறுப்போம். அது பத்துப் பங்குகளாகப் பங்கு போடப்படும். சூரியன் மறைவதற்கு முன் நாங்கள் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம்.

2486 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஷ்அரீ குலத்தினர்3 போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.

இதை அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 2

இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர், தன் பொருட் களின் ஸகாத்துடன் மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து தானே செலுத்திவிடுவாராயின், அவர் தன் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிடம் பெற்றுக் கொள்வார்.

2487 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடமையாக்கிய (ஸகாத் என்னும்) ஸதகாவைப் பற்றி எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுதும் போது, இருவருக்குக் கூட்டாக உள்ள பொருட்களில் ஒருவர், தன் பொருட் களின் ஸகாத்துடன் மற்றவருடைய பொருட்களின் ஸகாத்தையும் சேர்த்து, தானே செலுத்திவிடுவாராயின், அவர் தன் கூட்டாளியின் பங்குக்குச் சமமான ஸகாத் தொகையைக் கணக்கிட்டு அதை அவரிட மிருந்து பெற்றுக் கொள்வார்4 என்று குறிப்பிட்டார்கள்.

பாடம் : 3

ஆடுகளைப் பங்கிடுதல்.

2488 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப், பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி) விட்டனர். நபி (ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்தவுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும் படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்தவை வெளியே கொட்டப்பட்டு) விட்டன. பிறகு, அவற்றை அவர்கள் பங்கிட்டார்கள். பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள். அப்போது ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப் படையச் செய்து விட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருந்தன. ஒரு மனிதர் (நபித் தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எறிந்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்தி விட்டான். பிறகு நபி (ஸல்) அவர்கள், காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பது போல் இந்தப் பிராணிகளிலும் கட்டுக் கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே செய்யுங்கள் (அம்பெறிந்து தடுத்து நிறுத்துங்கள்) என்று கூறினார்கள். நான், (ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்தி விட்டால், அதன் கூர்முனை சேத மடைந்து) நாளை எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் பகைவர்களை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகின்றோம். ஆகவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (இந்த ஒட்டகத்தை) அறுக்கலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட் டிருக்கும் பட்சத்தில்அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. அதைப் பற்றி (அது ஏன் கூடாது என்று) நான் உங்களுக்குச் சொல்கிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தி யோப்பியர்களின்) கத்திகளாகும்5 என்று கூறினார்கள்.

பாடம் : 4

மற்றவர்களிடம் அனுமதி கேட்காத

வரை ஒருவர் மட்டும் பேரீச்சங் கனி(போன்ற உணவுப் பண்டங்)களில் இரண்டைச் சேர்த்து உண்ணுதல் (கூடாது).

2489 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் (தோழர்களுடன் உண்ணும் போது) தன் தோழர்கள் அனுமதிக்காத வரை, இரண்டு பேரீச்சம் பழங்களை ஒருசேர எடுத்து உண்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

2490 ஜபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மதீனாவில் இருந்த போது எங்களைப் பஞ்சம் பீடித்தது. இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை (உண்ணக்) கொடுத்து வந்தார்கள். இப்னு உமர்

(ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது, (இரண்டிரண் டாகச்) சேர்த்து உண்ணாதீர்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் ஒருவர் தன் சகோதரருக்கு அனுமதி தந்தாலே தவிர சேர்த்து உண்பதைத் தடை செய்தார்கள் என்று கூறுவார்கள்.

பாடம் : 5

கூட்டாளிகளிடையே பொருள்களுக்கு ஒத்த விலையை நிர்ணயித்தல்.

2491 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் ஓர் அடிமையில் தனக்குரிய பங்கை விடுதலை செய்து விடுகின்றாரோ அவர், தன்னிடம் அவ்வடிமையின் (சந்தை விலைக்கு) ஒத்த விலை (அளவிற்குப் பணம்) இருந்தால் (அதைக் கொடுத்து) அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்யட்டும். இல்லையெனில், எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கு மட்டுமே அவ்வடிமை சுதந்திரவான் ஆவான்.6

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்களின் மாணவர் நாஃபிஉ (ரஹ்) அவர்களி டமிருந்து இதை அறிவித்த அய்யூப் (ரஹ்) அவர்கள், இல்லையெனில் எந்த அளவுக்கு அவர் விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கு மட்டுமே அவ்வடிமை சுதந்திரவான் ஆவான் என்னும் வாசகம் நாஃபிஉ (ரஹ்) அவர்களுடைய சொல்லா அல்லது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸின் ஒரு பகுதியா என்று எனக்குத் தெரியாதுஎன்று கூறுகிறார்கள்.

2492 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அடிமையில் தனக்குள்ள பங்கை எவர் விடுதலை செய்து விடுகின்றாரோ அவர் (வசதியுடையவராயின்) தன் செல்வத்தைக் கொண்டு அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர் மீது கடமையாகும். அவரிடம் செல்வம் இல்லையென்றால் அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதி யளிக்கப்பட வேண்டும். அவன் மீது தாங்க முடியாத (உழைப்பைச் சுமத்திச்) சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது.

பாடம் : 6

ஒரு பொருளைப் பங்கிடுவதற்காக சீட்டுக் குலுக்கிப் போடலாமா?

2493 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை-ஒரு சமுதாயத் தைப் போன்ற தாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப் பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்ட போது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) நாம் (தண்ணீருக்காக) நமது பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம் என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர் களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டு விட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்)அவர்களுடைய கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.

இதை நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 7

அனாதைகள் மற்றும் வாரிசுதாரர்களின் பங்கு.

2494 உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அநாதை(ப் பெண்)களுடன் நீதமாக நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும் மூன்றாக, நான்கு நான்காக மண முடித்துக் கொள்ளுங்கள் (4:3) என்னும் இறை வசனத்தைக் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு விளக்க மளித்தார்கள்:

என் சகோதரி மகனே!7 இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் (வலீயின்) மடியில் (பொறுப்பில்) வளர்கின்ற – அவருடைய செல்வத்தில் கூட்டாக இருக்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவளுடைய செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளது காப்பாளர் அவளது மஹ்ர் விஷயத்தில் நீதியுடன் நடக்காமல் மற்றவர்கள் அவளுக்குக் கொடுப்பது போன்ற மஹ்ரை அவளுக்குக் கொடுக்காமல் – அவளை மணமுடித்துக் கொள்ள விரும்புகிறார் என்னும் நிலையிலிருப்பவள் ஆவாள். இவ்விதம் காப்பாளர்கள் தம் பொறுப்பிலிருக்கும் அநாதைப் பெண்களை அவர்களுக்கு நீதி செய்யாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மஹ்ரில் மிக உயர்ந்த மஹ்ர் எதுவோ அதை அவர்களுக்குக் கொடுக்காமல் அவர்களை மணமுடித்துக் கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக) தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களைத் தவிரவுள்ள மற்ற பெண்களில் அவர்களுக்கு விருப்பமான பெண்களை மண முடித்துக் கொள்ளும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. பிறகு, (இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பும்) மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம் தீர்ப்புக் கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், பெண்கள் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கும்படி உங்களிடம் கோருகின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவர்களுடைய விவகாரத்தில் அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், இவ்வேதத்தில் (முன்பிருந்தே) உங்களுக்கு எடுத் துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும் நினைவு படுத்துகின்றான். (அதாவது,) எந்த அநாதைப் பெண்களுக்கு, அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உரிமையை நீங்கள் கொடுப்ப தில்லையோ, மேலும்,எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவ தில்லையோ அந்த அநாதைப் பெண்கள் பற்றிய சட்டங்களையும் (உங்களுக்கு நினைவுபடுத்துகின்றான்) என்னும் (4:127) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

மேலும், இவ்வேதத்தில் (முன் பிருந்தே) உங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகின்ற சட்டங்களையும்…என்று அல்லாஹ் கூறியிருப்பது, அநாதை(ப் பெண்)களுடன் நீதியுடன் நடக்க இயலாது என்று நீங்கள் அஞ்சினால்….. என்னும் (4:3) இறைவசனத்தைக் குறிப்பதாகும். மேலும், 4:127ம் இறைவசனத்தில்,மேலும் எவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பு வதில்லையோ என்று கூறியிருப்பது,உங்களில் ஒரு காப்பாளர் தன் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண் ஒருத்தியை அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும் போது அவளை விரும்பாமலிருப்பதைக் குறிப்பதாகும். (செல்வத்தில் குறைந்தவர்களாக இருக்கும் போது) அந்த(அநாதை)ப் பெண்களை மணமுடித்துக் கொள்ள அவர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்திற்கும் அழகுக்கும் ஆசைப் பட்டார்களோ அந்தப் பெண்களையும் நீதியான முறையிலே தவிர மணமுடித்துக் கொள்ளலாகாது என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.8

பாடம் : 8

நிலம் முத-யவற்றில் கூட்டு.

2495 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இருவருக்குச் சொந்தமான சொத்தில் தமது பங்கை ஒருவர் விற்கும் போது, தமது பங்காளிக்கே அவர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்னும்) ஷுஃப்ஆ சட்டத்தைப் பங்கிடப் படாமலிருக்கும் கூட்டுச் சொத்து ஒவ்வொன்றிலும் தான் நபி (ஸல்) அவர்கள் விதித்திருந்தார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு, பாதைகள் பிரிக்கப்பட்டு விட்டால் ஷுஃப்ஆ(வின் உரிமை பங்காளிக்குக்) கிடையாது.9

பாடம் : 9

பங்காளிகள், வீடுகள் முத-யவற்றைப் பங்கிட்டு விட்டால் அவர்கள் அவற்றைத் திரும்பப் பெறவும் முடியாது; ஷுஃப்ஆவின் உரிமையும் அவர்களுக்கில்லை.

2496 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பங்கிடப்படாத ஒவ்வொரு சொத்திலும் (அதிலுள்ள தமது பங்கை ஒருவர் விற்க முனைந்தால் அவரைத் தவிர உள்ள) பிற பங்காளிகளுக்கு ஷுஃப்ஆவின் உரிமையுண்டு என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். எல்லைகள் வகுக்கப்பட்டு, பாதைகள் பிரிக்கப்பட்டு விட்டால் ஷுஃப்ஆ(வின் உரிமை பங்காளிகளுக்குக்) கிடையாது.

பாடம் : 10

தங்கம், வெள்ளி மற்றும் நாணய மாற்றில் பயன்படுத்தப்படும் பொருள் களில் கூட்டு.

2497 & 2498 சுலைமான் பின் அபீ முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபுல் மின்ஹால் (ரஹ்) அவர் களுடன் உடனுக்குடன் செய்யும் நாணய மாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம். அதற்கு அவர்கள், நானும் எனது கூட்டாளியான ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபி (ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், உடனுக்குடன் மாற்றிக் கொண்டதை எடுத்துக் கொள்ளுங்கள்;ஆனால், தவணை முறையில் மாற்றிக் கொண்டிருப்பீர்களாயின் அதை ரத்துச் செய்து விடுங்கள் என்று பதிலளித்தார்கள் எனக் கூறினார்கள்.

பாடம் : 11

(இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தவரான) திம்மீயுடனும் (அபயம் அளிக்கப்பட்ட) இணைவைப்பவர் களுடனும் ஒரு முஸ்லிம் நிலக் குத்தகையில் கூட்டாளி யாகுதல்.

2499 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நிலங்களை யூதர்களுக்கு, அவற்றில் அவர்கள் உழைத்து விவசாயம் செய்ய வேண்டும் என்றும், அவற்றிலிருந்து கிடைக்கும் விளைச்ச-ல் பாதி அவர்களுக்குரியது (பாதி இஸ்லாமிய அரசுக்குரியது) என்றும் நிபந்தனையிட்டு (குத்தகைக்குக்) கொடுத்து விட்டார்கள்.

பாடம் : 12

ஆடுகளைப் பங்கிடுவதும் அதில் நீதியுடன் நடந்து கொள்வதும்.

2500 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் சில ஆடுகளைத் தம் தோழர்களிடையே பங்கிடும்படி கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு விட்டேன்.) ஓர் ஆட்டுக் குட்டி எஞ்சியது. அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, அதை நீ குர்பானி கொடுத்து விடு என்று கூறினார்கள்.

பாடம் : 13

(வியாபாரத்திற்காக வாங்கும்) உணவு முத-ய பொருள்களில் கூட்டு.

ஒரு மனிதர் ஒரு பொருளை பேரம் பேசினார். அவருக்கு மற்றொருவர் (அதை வாங்கிக் கொள்ளும்படி) கண்ணால் சாடை காட்டினார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், கண் சாடை காட்டிய அந்த மனிதர் (பேரம் பேசியவரின்) வியாபாரக் கூட்டாளி என்று கருதினார்கள்.

2501&2502 அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் ஸைனப் பின்த்து ஹுமைத் (ரலி) அவர்கள் (நான் சிறுவனாயிருக்கும் போது) என்னை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, அல்லாஹ்வின் தூதரே! இவனிடம் (இஸ்லாத்தின் படி நடப்பதற் கான) உறுதிப் பிரமாணம் வாங்குங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,சிறுவனாயிற்றே! என்று கூறிவிட்டு, என் தலையைத் தடவிக் கொடுத்து எனக்காக (அருள்வளம் வேண்டி) துஆ செய்தார்கள்.

ஸுஹ்ரா பின் மஅபத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னை என் பாட்டனார் அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கடைவீதிக்குக் கொண்டு சென்று உணவுப் பொருளை வாங்கு வார்கள். (அப்போது அவர்களை இப்னு உமர் (ரலி) அவர்களும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களும் சந்திப்பார்கள். அப்போது அவ்விருவரும், எங்களையும் (உணவு வணிகத்தில்) கூட்டுச் சேர்த்துக் கொள் ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் உங்களுக்காக அருள்வளம் வேண்டி துஆ செய்துள்ளார்கள் என்று கூறுவார்கள். அவ்வாறே, என் பாட்டனாரும் அவர் களைக் கூட்டுச்சேர்த்துக் கொள்வார்கள். சில வேளைகளில், ஓர் ஒட்டகம் (நிறைய உணவுப் பொருட்கள்) அப்படியே (லாபமாக) அவருக்குக் கிடைக்கும். அதை (தம்) வீட்டிற்கு அனுப்பிவைப்பார்கள்.

பாடம் : 14

அடிமையில் பங்குதாரர் ஆகுதல்

2503 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை எவர் விடுதலை செய்கின்றாரோ அவரிடம் அவ்வடிமையை ஒத்த வேறோர் அடிமையின் விலை அளவுக்கான செல்வம் இருக்குமாயின், அவ் வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். அந்த அடிமையில் அவருடன் பங்குள்ளவர்களுக்கு அவர்களின் பங்குக்கான தொகை கொடுக்கப்பட்டுவிட வேண்டும்; விடுதலை செய்யப்பட்ட அடிமை சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2504 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகின்றாரோ அவரிடம் போதிய செல்வம் இருக்கு மாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனில், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடுவித்துக் கொள்வதற்காக) அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமையின் மீது (தாங்க முடியாத) சிரமத்தை சுமத்தக் கூடாது.10

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 15

தியாகப் பிராணியிலும் தியாக ஒட்டகத்திலும் கூட்டாகுதல். ஒருவர் தியாகப் பிராணியை பலி கொடுத்த பின்னர் அதில் மற்றொருவரைக் கூட்டாக்கிக் கொள்ளலாமா?

2505 & 2506 ஜாபிர் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் துல் ஹஜ்ஜின் நான்காவது (நாளின்) காலையில் ஹஜ்ஜுக்காக மட்டும் அவர்களு(டைய ஹஜ்ஜுடைய நிய்யத்து)டன் (உம்ரா) எதுவும் கலந்து விடாமல் இஹ்ராம் அணிந்தவர்களாக வந்தார்கள். நாங்கள் வந்து சேர்ந்த போது நாங்கள் இஹ்ராம் அணிந்ததை உம்ராவாக ஆக்கிக் கொள்ளும்படியும் எங்கள் மனைவிமார்களிடம் நாங்கள் உறவு கொள்ளலாம் என்றும் உத்தர விட்டார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். மக்களிடையே இந்த விஷயம் பரவி விட்டது. அதைப் பற்றி அவர்கள் வியப்புடன் பேசிக் கொள்ளலாயினர்.

……அறிவிப்பாளர் அதா பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு ஜாபிர் (ரலி) அவர்கள்,எங்கள் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்க, (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாங்கள் மினாவுக்குச் செல்வதா? என்று (வியப்புடன்) கேட்டார்கள். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கையால் சைகை செய்து இவ்வாறு கேட்டார்கள்….

இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே, நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில், மக்கள் சிலர் இப்படி இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று எனக்குச் செய்தி எட்டியது. இறைவன் மீதாணையாக! நான் அவர்களை விட அதிக நற்செயல் புரிபவனும் அதிகமாக அல்லாஹ்வுக்கு அஞ்சுபவனும் ஆவேன். என் விவகாரத்தில் (ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்ததில்) நான் பிற்பாடு (இறை அறிவிப்பின் வாயிலாக) அறிந்து கொண்ட(ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என்கிற சட்டத்)தை முன்கூட்டியே நான் அறிந்திருப்பேனாயின் என்னுடன் பலிப் பிராணியைக் கொண்டு வந்திருக்க மாட்டேன். என்னுடன் பலிப் பிராணி இல்லாமல் இருந்திருந்தால் நானும் (உம்ரா மட்டும் செய்து) இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விட்டிருப்பேன். என்று கூறினார்கள். இதைக் கேட்ட சுராக்கா பின் மாலிக் பின் ஜுஃஷும் (ரலி) அவர்கள் எழுந்து,அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சலுகை எங்களுக்கு மட்டும் தானா? இல்லை, என்றைக்கு மாகவா?என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (உங்களுக்கு மட்டும் என்று) இல்லை; மாறாக, என்றைக்கு மாகத் தான் என்று கூறினார்கள். அப்போது அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள் (யமன் நாட்டிலிருந்து திரும்பி) வந்தார்கள்.

அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஜாபிர் (ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரில் ஒருவர் (அதாவது ஜாபிர் (ரலி) அவர்கள்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்துள்ளார் களோ அதே ஹஜ்ஜுக்காகத் தான் நானும் இஹ்ராம் அணிகிறேன் என்று அலீ

(ரலி) அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். மற்றொருவர், (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்),அல்லாஹ்வின் தூதருடைய ஹஜ்ஜைப் போன்றதற்கே (ஹஜ்ஜு கிரானுக்கே) நானும் இஹ்ராம் அணிகிறேன் என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார். நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களை அவர் களுடைய இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி கட்டளையிட்டார்கள். தம் தியாக பிராணியில் அவர்களையும் கூட் டாளியாக்கிக் கொண்டார்கள்.11

பாடம் : 16

பங்கிடும் போது ஒரே ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்குதல்.

2507 ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் திஹாமாவிலுள்ள துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது நாங்கள் (கனீமத்தாக) ஆடுகளை அல்லது ஒட்டகங்களைப் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு (உணவு சமைப்பதற்காகப்) பாத்திரங்களைக் கொதிக்க வைத்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்தப் பாத்திரங் களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட்டார்கள். அவை அவ்வாறே தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டன. பிறகு, ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்கினார்கள். பிறகு, அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டோடியது. மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. (அதை விரட்டிச் சென்று பிடிக்கப் போதுமான குதிரைகள் இல்லை. ஆகவே,)ஒருவர் அம்பெய்து அதை ஓட விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கட்டுக்கடங்காத காட்டு மிருகங்களைப் போன்று இந்தக் கால்நடைகளிலும் கட்டுக்கடங்காதவை சில உண்டு. ஆகவே, இவற்றில் எது உங்களை மீறிச் செல்லுகின்றதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! (இப்போது பிராணிகளை அறுக்க எங்கள் வாட்களைப் பயன்படுத்தி விட்டால்), எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) பகைவர்களைச் சந்திக்க வேண்டியிருக்குமேஎன்று நாங்கள் அஞ்சுகின்றோம். (கூரான) மூங்கில்களால் நாங்கள் (அவற்றை) அறுக்கலாமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சீக்கிரம்! இரத்தத்தை ஓடச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்படும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. அதைப் பற்றி (அது ஏன் கூடாது என்று) உங்களுக்கு நான் சொல்கிறேன்: பல்லோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்) கத்திகளாகும் என்று பதிலளித்தார்கள்.12

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.