45 – கண்டெடுக்கப்பட்ட பொருள்

அத்தியாயம்: 45 – கண்டெடுக்கப்பட்ட பொருள்.

பாடம் : 1

கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமை யாளர் அடையாளம் (சரியாகக்) கூறினால் கண்டெடுத்தவர் அதை அவரிடம் தந்து விட வேண்டும்.

2426 உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பணப்பையைக் கண் டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடை யாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும், ஓராண்டுக் காலம் அதைப் பற்றி அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து (பெற்றுக்) கொள்பவர் எவரையும் நான் காண வில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், அதன் பையையும் அதன் எண்ணிக்கையையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதைப் பயன்படுத்திக் கொள் என்று கூறினார்கள். ஆகவே, நானே அதைப் பயன்படுத்திக் கொண்டேன்.

அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அதன் பிறகு, நான் மக்காவில் வைத்து (இதை எனக்கு அறிவித்த) சலமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், (நான் அறிவித்த ஹதீஸில்) நபி (ஸல்) அவர்கள், மூன்று ஆண்டுகள் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா, அல்லது ஓராண்டுக் காலம் வரை மட்டும் அறிவிப்புச் செய்ய வேண்டும்’ என்று கூறினார்களா என்று நான் அறிய மாட்டேன் (அதாவது எனக்கு நினை வில்லை) என்று கூறினார்கள்.

பாடம் : 2

தொலைந்த ஒட்டகம்.

2427 ஸைத் பின் கா-த் அல் ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராம வாசி வந்து, (பாதையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய். பிறகு, அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதைப் பற்றி (அடையாளம்) தெரிவிப் பவர் எவராவது உன்னிடம் வந்தால் (அவ ரிடம் ஒப்படைத்து விடு.) இல்லையென் றால் அதை உன் செலவுக்கு எடுத்துக் கொள் என்று கூறினார்கள். அந்த கிராமவாசி, அல்லாஹ்வின் தூதரே! வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து) விட்ட ஆட்டை என்ன செய்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது உனக்குரியது; அல்லது உன் சகோ தரருக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது1 என்று கூறினார்கள். அந்தக் கிராமவாசி, வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது? என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்களின் திருமுகம் (வெறுப்பால் மங்கலாகி) நிறம் மாறி விட்டது. பிறகு, உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதனுடன் தான் அதன் குளம்பும் அதன் தண்ணீர்ப் பையும் உள்ளதே! நீர் நிலைகளுக்கு அது செல்கின்றது; மரத்திலிருந்து தின் கின்றது என்று கூறினார்கள்.2

பாடம் : 3

வழி தவறிய ஆடு.

2428 ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் கண்டெடுக் கப்பட்ட பொருள் பற்றிக் கேட்கப் பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதன் பை(உறை)யையும் அதன் முடிச் சையும் அடையாளம் அறிந்து கொள். பிறகு,ஓராண்டுக் காலத்திற்கு(அதை) அறிவிப்புச் செய் என்று கூறினார்கள்.

பின்னர் அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) கூறியதாவது:

அதை அடையாளம் கூறிப் பெற்றுக் கொள்ள எவரும் முன்வராவிட்டால் அதைக் கண்டெடுத்தவர் அதைச் செலவு செய்து கொள்வார். மேலும், அது அவரிடத்தில் அடைக்கலப் பொருளாக இருக்கும்.

இந்தப் பிந்திய வாக்கியம் மட்டும். அல்லாஹ்வின் தூதருடைய சொல்லா, அல்லது அறிவிப்பாளர் யஸீத்

அவர்களின் சொல்லா என்று எனக்குத் தெரியவில்லை என்று அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறு கின்றார்கள்.3 பிறகு, நபி (ஸல்) அவர் களிடம் (கண்டெடுத்த பொருளைப் பற்றிக் கேட்டவர்), வழி தவறி வந்த ஆட்டைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதை நீ எடுத்துக் கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது;அல்லது ஓநாய்க் குரியது என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் யஸீத் (ரஹ்) அவர்கள், அதையும் கூட அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

பிறகு அந்த நபர், வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், அதை (அப்படியே) விட்டு விடுங்கள். ஏனெனில், அதனுடன் அதன் குளம்பு இருக்கின்றது;அதன் தண்ணீர்ப்பை (வயிறு) இருக்கின்றது; அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும் வரை அது நீர் நிலைகளுக்குச் செல்கின்றது; (அங்கே நீரருந்தித் தாகம் தணித்துக் கொள்கின்றது;)மரங்களிலிருந்து (இலைதழைகளைத்) தின்கின்றது என்று பதில் கூறினார்கள்.

பாடம் : 4

கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமை யாளர் ஒரு வருட காலத்திற்குப் பின்பும் கிடைக்கா விட்டால்,அது அதைக் கண்டெடுத்தவருக்கே உரியதாகும்.

2429 ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் ஒரு மனிதர் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் பார்த்து வைத்துக் கொள். பிறகு, ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. அதன் உரிமையாளர் வந்தால் கொடுத்து விடு. இல்லையென்றால் உன் விருப்பப்படி அதைப் பயன்படுத்திக் கொள் என்று சொன்னார்கள். அந்த மனிதர், வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக் குரியது; அல்லது ஓநாய்க்கு உரியது. என்று கூறினார்கள். அந்த மனிதர், வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் (வயிறும்) அதன் குளம்பும் உள்ளது. அதை அதன் எஜமான் சந்திக்கும் வரை அது நீர் நிலைக்குச் செல்கின்றது; (அங்கு தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்கின்றது;) மரத்திலிருந்து (அதன் இலைகளைத்) தின்கின்றது என்று கூறினார்கள்.

பாடம் : 5

ஒருவருக்கு கடலில் மரக்கட்டையோ ஒரு சாட்டையோ அல்லது அது போன்ற ஏதேனும் ஒரு பொருளோ கிடைத்தால்….

2430 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல்களில் ஒரு மனிதரை நினைவு கூர்ந்தார்கள். ….அந்த மனிதர் கடலில் தனது செல்வத்துடன் வாகனம் ஏதும் வருகின்றதா என்று கவனிப்பதற்காகப் புறப்பட்டார். அப்போது ஒரு மரத் துண்டை (கரையில் ஒதுங்கக்) கண்டார். அதைத் தன் குடும்பத்தினருக்கு விறகாகப் பயன்படட்டும் என்று எடுத்துக்

 கொண்டார். அதை அவர் பிளந்த போது தன் செல்வத்தையும் (அதை வைத்து அனுப்பியவரின்) கடிதத்தையும் (அதனுள்) கண்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹதீஸ் முழுவதையும் கூறினார்கள்.4

பாடம் : 6

பாதையில் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டால்…

2431 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்என்று கூறினார்கள்.5

2432 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகின்றேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கின்றேன். அதற்குள் அது சதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகின்றது; உடனே அதைப் போட்டு விடுகின்றேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 7

மக்காவாசிகளின் (தொலைந்து போன) பொருள் கண்டெடுக்கப்பட்டால் அதை எப்படி அறிவிப்புச் செய்வது?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் கீழே கேட்பாரின்றி விழுந்து கிடக்கும் பொருளை அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர வேறெவரும் கண்டெடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2433 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அதன் (மக்காவின்) மரங்களை வெட்டக் கூடாது. அதன் வேட்டைப் பிராணிகளை விரட்டியடிக்கக் கூடாது. அதில் கண்டெடுக்கப்படும் (கேட்பாரற்ற) பொருள் அதைப் பற்றி அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்பட்டதல்ல. அதன் புல் பூண்டுகளைக் கிள்ளவும் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இத்கிரைத் தவிரவா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்)

அவர்கள், இத்கிரைத் தவிரத் தான்

என்று பதிலளித்தார்கள்.6

2434 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கி யுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பக-ன் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்ப வருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக் கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில்,அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரத் தான் என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) கூறுகிறார்:) நான் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம்,

 அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்னும் அபூஷாஹ் (ரலி) அவர்களுடைய சொல் எதைக் குறிக்கின்றது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையைத் தான் (எழுதிக் கொடுக்கச் சொன்னார்) என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 8

ஒருவரது கால்நடையில் அவரது அனுமதியின்றி பால் கறப்பது கூடாது.

2435 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரின் கால்நடையிடம் அவரது அனுமதியின்றி எவரும் பால் கறக்க வேண்டாம். உங்களில் எவரும் அவரது சரக்கு அறைக்கு ஒருவர் வந்து, அவரது உணவுக் கருவூலத்தை உடைத்து, அவரது உணவை எடுத்துச் சென்று விடுவதை விரும்புவாரா? இவ்வாறே, அவர்களின் (கால்நடை உரிமையாளர்களின்) கால் நடைகளுடைய மடிகள் அவர்களுடைய உணவையே சேகரித்துப் பாதுகாத்து வைத்திருக்கின்றன. ஆகவே, எவரும் ஒருவரது கால்நடையிடம் அவரது அனுமதியின்றிப் பால் கறக்க வேண்டாம்.

இதை அப்துல்லாஹ் பின் உமர்

(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 9

கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளர் ஒரு வருடம் கழித்து வந்தால் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். ஏனெனில், அந்தப் பொருள் கண்டெடுத்தவரின் பொறுப்பிலிருந்த அடைக்கலப் பொருளாகும்.

2436 ஸைத் பின் கா-த் அல்ஜுஹனி (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதைப் பற்றி ஓராண்டுக் காலத்திற்கு அறிவிப்புச் செய்து கொண்டேயிரு. பிறகு, அதன் முடிச்சையும் பை(உறை)யையும் அடையாளம் தெரிந்து வைத்துக் கொள். பிறகு அதைச் செலவழித்துக் கொள். அதன் உரிமை யாளர் வந்து அடையாளம் (சரியாகக்) கூறிவிட்டால் அதை அவரிடம் திருப்பிச் செலுத்தி விடு என்று கூறினார்கள். அந்த மனிதர்,அல்லாஹ்வின் தூதரே! வழி தவறி வந்த ஆட்டை என்ன செய்வது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதை எடுத்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரருக்குரியது;அல்லது ஓநாய்க் குரியது என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், அல்லாஹ்வின் தூதரே! வழி தவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது? என்று கேட்டார். இதைச் செவியுற்றவுடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக் கென்றால் அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்து விட்டன; -அல்லது அவர்களின் முகம் சிவந்து விட்டது.- பிறகு, உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதன் எஜமான் அதைச் சந்திக்கும் வரை (தன்னைப் பசியிலிருந்தும் தாகத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள) அதனுடன் அதன் குளம்பும் தண்ணீர்ப் பையும் இருக்கின்றதே என்று கூறினார்கள்.

பாடம் : 10

உரிமையில்லாதவர் கையில் சிக்கி வீணாகி விடாமல் இருப்பதற்காக, ஒருவர் தாம் கண்டெடுத்த பொருளைத் தம்மிடமே வைத்துக் கொள்ளலாமா?

2437 சுவைத் பின் கஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சல்மான் பின் ரபீஆ அல்பாஹிலீ (ரலி) அவர்களுடனும் ஸைத் பின் ஸூஹான் (ரலி) அவர் களுடனும் ஒரு போரில் கலந்து கொண்ட போது சாட்டை ஒன்றைக் கண்டேன். (என் தோழர்கள்) இருவரும், அதைப் போட்டு விடு என்று கூறினார்கள். நான், இல்லை. இதன் உரிமையாளரைக் கண்டால் (இதைக் கொடுத்து விடுவேன்.) இல்லையென்றால் இதைப் பயன் படுத்திக் கொள்வேன்என்று கூறினேன். நான் போரிலிருந்து திரும்பிய போது ஹஜ் செய்தேன். அப்போது மதீனா வழியாக நான் சென்றேன். அப்போது உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நான், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நூறு தீனார்கள் இருந்த ஒரு பையைக் கண்டேன். அதை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய் என்று கூறினார்கள். ஒரு வருட காலம் அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். பிறகு மீண்டும் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய் என்று கூறினார்கள். அவ்வாறே நான் ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய்தேன். பிறகு திரும்பவும் அவர்களிடம் வந்தேன். அப்போதும் அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய் என்று கூறினார்கள். அவ்வாறே, நானும் ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்தேன். நான்காவது முறையாக, நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், அதன் (பையிலுள்ள பணத்தின்) எண்ணிக்கை யையும், முடிச்சையும், பையையும் அடையாளம் அறிந்து கொள். அதன் உரிமையாளர் வந்தால் அதை அவரிடம் கொடுத்து விடு. இல்லையென்றால் அதை நீ பயன்படுத்திக்கொள் என்று கூறினார்கள்.

பாடம் : 11

கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்து விட்டு ஆட்சி யாளரிடம் அதை ஒப்படைக்காமல் இருத்தல்.

2438 ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமவாசி ஒருவர் நபி (ஸல்)

அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஒரு வருட காலத்திற்கு அறிவிப்புச் செய். அதன் பை(உறை) யையும் முடிச்சையும் (அடையாளம்) தெரிவிக்கக் கூடியவர் எவரேனும் வந்தால் (அதை அவரிடம் ஒப்படைத்து விடு.) இல்லை யென்றால் அதைச் செலவழித்துக் கொள் என்று கூறினார்கள். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வழி தவறி வந்த ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டார். இதைக் கேட்டு நபியவர்களின் முகம் நிறம் மாறிவிட்டது. உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன் அதன் தண்ணீர்ப் பையும் அதன் குளம்பும் உள்ளது. அது நீர் நிலைக்குச் செல்கின்றது; (அங்கே தாகம் தணித்துக் கொள்கின்றது.) மரத்திலிருந்து (இலை தழைகளைத்) தின்கின்றது. அதை அதன் எஜமான் அடைந்து கொள்ளும் வரை அதை விட்டு விடுஎன்று கூறினார்கள். அவர் நபி (ஸல்) அவர் களிடம் வழி தவறி வந்த ஆட்டைப் பற்றிக் கேட்டார். அதற்கு, அது உனக் குரியது; அல்லது உன் சகோதரருக் குரியது; அல்லது ஓநாய்க்குரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.7

பாடம் : 12

2439 அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நடந்து சென்று கொண்டி ருந்தேன். என் முன்னே ஆடு மேய்ப்பவன் ஒருவனைக் கண்டேன். அவன் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். அவனிடம் நான், நீ யாருடைய பணியாள்? என்று கேட்டேன். அவன், குறைஷிகளில் இன்ன மனிதருடைய பணியாள் என்று சொல்லி அவரது பெயரைக் கூறினான். நான் அந்த மனிதரை அடையாளம் புரிந்து கொண்டேன். அவனிடம் நான், உன் ஆடுகளிடம் பால் இருக்கிறதா? என்று கேட்டேன். அவன், ஆம், இருக்கிறது என்று பதிலளித்தான். நான் (பால் கறந்து கொடுக்கும்படி) அவனுக்கு உத்தரவிட்டேன். அவன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்துத் தொடைகளுக் கிடையே அழுத்திக் கொண்டான். (பால் கறக்கத் தயாரானான்.) பிறகு நான், ஆட்டின் மடியை (அதில் படிந்திருக்கும்) புழுதி போக உதறும்படி கட்டளை யிட்டேன். பிறகு, அவனது இரு கைகளையும் (தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக) உதறும்படிக் கட்டளையிட்டேன். …இப்படி உதறும்படி என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் ஒரு கையை மற்றொரு கை மீது அடித்துக் காட்டினார்கள்… (அவ்வாறே, அவனும் கைகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டான்.) பிறகு சிறிதளவு (ஒரு சொம்பு) பால் கறந்தான். நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் பாலை ஊற்றி அதன் வாயை ஒரு துண்டுத் துணியால் மூடினேன். பிறகு அதன் (பால் பாத்திரத்தின்) அடிப்பகுதி குளிர்ந்து போகும் வரை அதன் மீது தண்ணீர் ஊற்றினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! அருந்துங்கள் என்று கூறினேன். நான் திருப்தியடையும் வரை (அதை) அவர்கள் அருந்தினார்கள்.8

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.