40 – அதிகாரம் வழங்கல் (வகாலா)

அத்தியாம்: 40 – அதிகாரம் வழங்கல் (வகாலா).

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

(ஒருவர் தனது கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குவது.)

பாடம் : 1

விநியோகம் செய்வதற்கும் மற்ற காரியங்களுக்கும் இரண்டு பங்காளிகளில் ஒருவர் மற்றவருக்கு அதிகாரம் வழங்குதல்.

நபி(ஸல்) அவர்கள் தமது குர்பானிப் பிராணிகளில் அலீ (ரலி) அவர்களையும் பங்கு சேர்த்துக் கொண்டு அதனை விநியோகிக்கும் பொறுப்பை அலீ (ரலி) அவர்களிடமே ஒப்படைத்தார்கள்.

2299 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறுக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் தோல்களையும் தர்மம் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

2300 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள்; (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக் குட்டி எஞ்சியது. அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, அதை நீர் (அறுத்து) குர்பானி கொடுப்பீராக! எனக் கூறினார்கள்.

பாடம் : 2

இஸ்லாமிய நாட்டிலோ இஸ்லாத்திற்கு எதிரான நாட்டிலோ முஸ்லிமல்லாத எதிரிக்கு ஒரு முஸ்லிம் வகாலா (-தன் சார்பாக செயல்படும் அதிகாரம்) கொடுத்தால் அது செல்லும்.

2301 அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவிலுள்ள என் உறவினர்களையும் சொத்துக்களையும் உமய்யா பின் கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும் என்றும் மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன் என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) அப்துர் ரஹ்மான் (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதிய போது, ரஹ்மானை நான் அறிய மாட்டேன்; அறியாமைக் காலத்து உமதுபெயரை எழுதும் என்று அவன் கூறினான். நான் அப்து அம்ரு என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி சென்றேன். அவனை பிலாலும் பார்த்து விட்டார். பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, இதோ உமையா பின் கலப்! இவன் தப்பித்து விட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார். (இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்.) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்து விடுவார்கள் என்று நான் அஞ்சிய போது, உமய்யாவின் மகனை முன்னிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர். பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தான். (அதனால் ஓட இயலவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், குப்புறப்படுப்பீராக! என்ற கூறினேன். அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன். அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தமது வாளால் வெட்டினார்.

அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், தமது பாதத்தின் மேல் பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்கு காட்டினார்! என்று அவருடைய மகன் கூறுகிறார்.

பாடம் : 3

நாணய மாற்று வியாபாரத்திலும் எடை போடுவதற்கும் பிறருக்கு அதிகாரம் வழங்குதல்.

நாணயம் மாற்றித் தருவதற்கு உமர் (ரலி) அவர்களும், இப்னு உமர் (ரலி) அவர்களும் (பிறருக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர்.

2302 & 2303 அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபர் பகுதியில் ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர்கள் ஜனீப்எனும் தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள், கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இதே தரத்தில்தான் இருக்குமா? என்றுகேட்டார்கள். அதற்கு அவர்,இரண்டு ஸாஉ சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ஸாஉவையும், மூன்று ஸாஉ சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ஸாஉகளையும் நாங்கள் வாங்குவோம்! எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யாதீர்! சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகள் மூலம் உயர்ந்த பேரீச்சம் பழங்களை வாங்குவீராக! என்றார்கள்.

நிறுத்தலளவையிலும் இது போன்றே நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பாடம் : 4

ஆடு மேய்ப்பவர் அல்லது ஆட்டைப் பராமரிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டவர், சாகும் தறுவாயிலுள்ள ஒரு ஆட்டைக் கண்டால் அதை அறுக்கலாம்; அழிந்து விடும் நிலையிலுள்ள ஒரு பொருளைக் கண்டால் அப்பொருளை அழிவிலிருந்து காக்கலாம்.

2304 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சல்உ எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தறுவாயில் இருப்பதை எங்கள் அடிமைப்பெண் பார்த்து விட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார். நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நான் கேட்காத வரை சாப்பிடாதீர்கள்! என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அதை சாப்பிடுமாறு கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் கேட்காத வரை என்பதற்கு பதிலாக நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி நான் ஆளனுப்பிக் கேட்காத வரை என்றுகூட கஅப் (ரலி) அவர்கள் சொல்லியிருக்கலாம்!என்று அறிவிப்பாளர் (ஐயப்பாட்டுடன்) கூறுகிறார்.

ஓர் அடிமைப்பெண் இவ்வாறு ஆட்டை அறுத்திருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது! என்று உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 5

கண்களுக்கு முன்னால் (ஊரில்) இருப்பவருக்கும், (ஊரில் இல்லாமல்) தொலைவில் இருப்பவருக்கும் அதிகாரம் வழங்குவது செல்லும்.

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வெளியூரிலிருந்து தம் கருவூலக் காப்பாளருக்கு தமது குடும்பத்திலுள்ள சிறுவர்கள், முதியவர்கள் சார்பாக நோன்புப் பெரு நாள் தர்மம் (ஸதக்கத்துல் ஃபித்ர்) கொடுக்குமாறு எழுதினார்கள்.

2305 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திருப்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்! என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது, அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தான் தோழர்கள் கண்டார்கள். அதை கொடுத்து விடுங்கள்! என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்து விட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத் தருவான் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.

பாடம் : 6

கடனை திருப்பிக் கொடுப்பதற்கு பிறருக்கு அதிகாரம் வழங்குதல்.

2306 அபூஹுரைரா (ரலி) கூறியதாவது :

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து தடித்த வார்த்தையைப் பயன்படுத்தினர். நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒர் கட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லைஎன்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், அதையே கொடுங்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.

பாடம் : 7

ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக அல்லது அதற்காகப் பரிந்துரை செய்பவராக வந்திருப்பவருக்கு அன்பளிப்புச்செய்தால் அது செல்லும்.

ஹவாஸின் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த (கனீமத்) பொருட்களைக் கேட்ட போது, எனக்குக் கிடைத்த பங்கு உங்களுக்கரியது! என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

2307 & 2308 மர்வான் பின் ஹகம், மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் கூறியதாவது:

ஹவாஸின் தூதுக் குழுவினர் முஸ்லிம்களாகி நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (போரில் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட) தங்கள் செல்வத்தையும் கைதிகளையும் திரும்பத் தருமாறு நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உண்மை பேசுவது எனக்குப் மிகவும் விருப்பமானது! கைதிகள் அல்லது செல்வங்கள் இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்! நான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்! எனக் கூறினார்கள். — நபி (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பியது முதல் பத்து நாட்களாக அவர்களை எதிர்பார்த்(துக் காத்)திருந்தார்கள் -இரண்டில் ஒன்றைத் தான் நபி (ஸல்) அவர்கள் தமக்குத் திருப்பித் தருவார்கள் என்பது அவர்களுக்குத் தெளிவான போது, நாங்கள் கைதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்! எனக் கூறினர். உடனே, நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று,அல்லாஹ்வை அவனது தகுதிகேற்பப் புகழ்ந்து, உங்களுடைய இந்தச் சகோதரர்கள் திருந்தி, நம்மிடம் வந்துள்ளனர். அவர்களுடைய கைதிகளை அவர்களிடமே ஒப்படைத்து விடுவதை நான் உசிதமாகக் கருதுகிறேன். உங்களில் (கைதிகளைப் பெற்றவர்களில்) யார் மனபூர்வமாக இதைச் செய்ய விரும்புகிறாரோ அவர் இதைச் செய்யட்டும்! தமது பங்கு(க்குரிய கைதிகள்) தம்மிடமே இருக்கவேண்டுமென விரும்புவர், அல்லாஹ் நமக்குக் கொடுக்கவிருக்கும் முதலாவது (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வத்திலிருந்து நாம் அவருக்குக் கொடுக்கும் வரை, அவ்வாறே செய்யட்டும்! (கைதிகளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்!) என்றார்கள். இதற்கு மக்கள்,அல்லாஹ்வின் தூதருக்காக, மனபூர்வமாக நாங்கள் (கைதிகளையே) அவர்களுக்குக் கொடுத்தவிடுகிறோம்! என்றனர். நபி (ஸல்) அவர்கள், உங்களில் இதற்குச் சம்மதிப்பவர் யார்,சம்மதிக்காதவர் யார் என்று நாம் அறிய மாட்டோம்! எனவே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! உங்களில் பொறுப்புள்ளவர்கள் இது பற்றி உங்களிடம் (தனியாகக்) கலந்து பேசிவிட்டு, நம்மிடத்தில் உங்கள் முடிவைக் கூறட்டும்! என்றார்கள். மக்கள் திரும்பிச் சென்றனர். அவர்களில் பொறுப்புள்ளவர்கள் அவர்களுடன் பேசினார்கள். பிறகு அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து, (கைதிகளைத் திருப்பி கொடுப்பதற்கு) தாங்கள் மனபூர்வமாக சம்மதிப்பதாகத் தெரிவித்தார்கள்.

பாடம் : 8

ஒருவர் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தாமல், ஏதேனும் கொடுக்குமாறு இன்னொருவருக்கு அதிகாரம் வழங்கினால் மக்களின் வழக்கத்திற்கேற்ப அவர் கொடுக்கலாம்.

2309 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நான் மந்தமாக நடக்கும் ஓர் ஒட்டகத்தின் மேல் அமர்ந்திருந்தேன்; அந்த ஒட்டகம் அனைவருக்கும் கடைசியாக வந்தது. நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது, யாரவர்? என்று கேட்டார்கள். ஜாபிர் பின் அப்தில்லாஹ்!என்றேன். ஏன் பின் தங்கிவிட்டீர்! என்று கேட்டார்கள். நான் மந்தமான ஒட்டகத்தில் பயணம் செய்கிறேன்! என்று கூறினேன். உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். நான் ஆம்!என்றேன். அதை என்னிடம் கொடும்! என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். (அந்தக் கம்பால்) ஒட்டகத்தை (அடித்து) விரட்டினார்கள் அப்போதிருந்து எனது ஒட்டகம் அனைவரையும் முந்திச் செல்ல ஆரம்பித்தது. இதை எனக்கு விலைக்குத் தாரும்! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது! என்றேன். நபி (ஸல்) அவர்கள்,இதை எனக்கு விலைக்குத் தாரும்! நான்கு தங்கக் காசுகளுக்கு இதை நான் விலைக்கு வாங்கிவிட்டேன்! மதீனா வரை நீர் இதில் பயணம் செய்துவரலாம்! என்று கூறினார்கள். மதீனாவை நாங்கள் நெருங்கியதும் (நான் வீட்டை நோக்கிப் புறப்படலானேன்). எங்கே போகிறீர்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (கணவனை இழந்த) ஒரு கைம்பெண்ணை நான் மணந்திருக்கிறேன்!என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீர் ஒரு கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடன் விளையாடி(க் களித்தி)ட அவள் உம்முடன் விளையாடி(க் களித்தி)டலாமே!என்று கேட்டார்கள். அதற்கு நான், என் தந்தை; பெண் மக்களை விட்டுவிட்டு இறந்து விட்டார்; எனவே,குடும்ப அனுபவமுள்ள, (கணவனை இழந்த) கைம்பெண்ணை மணக்க நாடினேன்! என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது சரிதான்! என்றார்கள். நாங்கள் மதீனாவுக்கு சென்றதும் பிலால் (ரலி)அவர்களிடம் இவருக்குக் கொடுப்பீராக! கொஞ்சம் அதிகமாகவும் கொடுப்பீராக! என்று கூறினார்கள். பிலால் (ரலி) அவர்கள் எனக்கு நான்கு தங்க நாணயங்களையும் அதிகமாக ஒரு கீராத்தையும் கொடுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அதிகமாகத் தந்த(கீராத்தான)து என்னை விட்டு ஒரு போதும் பிரியாது! என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த ஒரு கீராத், ஜாபிர் (ரலி) அவர்களுடைய பணப்பையை விட்டுப் பிரிந்தேயில்லை! என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 9

ஒரு பெண் தனக்குத் திருமணம் செய்து வைக்கும் அதிகாரத்தை தலைவருக்கு வழங்குதல்.

2310 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை உங்களுக்கு (மஹ்ரின்றி மணந்து கொள்ள) அன்பளிப்பாகத் தந்து விட்டேன்! என்றார். அங்கிருந்த ஒரு மனிதர் இவரை எனக்கு மணமுடித்துத் தாருங்கள்! என்று கேட்டார். உம்மிடமிருக்கும் குர்ஆன் பற்றிய ஞானத்தின் காரணமாக உமக்கு இவரை மணமுடித்துத் தந்தோம்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 10

ஒருவர் (ஒரு பொருளில்) மற்றவருக்கு அதிகாரம் அளிக்கும் போது, அதிகாரம் அளிக்கப்பட்டவர் (அந்தப் பொருளில் யாருக்காவது) சிறிது விட்டுக் கொடுத்து விட்டால், அதிகாரம் அளித்தவர் அதற்கு அனுமதி கொடுத்தால் (அங்கீகரித்தால்) அது செல்லும். மேலும், அதிகாரம் அளிக்கப்பட்டவர் குறிப்பிட்ட தவணைக்கு யாருக்காவது (அப்பொருளிலிருந்து) கடன் கொடுத்தால் அதுவும் செல்லும்.

2311 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறுகிறேன். அதற்கவன், நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்றார்கள். மீண்டும் வருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன். உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வர மாட்டேன்! என்றான். அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன். விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள். மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்த போது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்( (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வர மாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன்.

அதற்கவன், என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்! என்றான். அதற்கு நான், அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்த கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான்எனத் தெரிவித்தேன். -நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர்- அப்போது நபி (ஸல்) அவர்கள், அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத் தான் அவன் சொல்லியிருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 11

விற்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டவர், விற்கக் கூடாத முறையில் விற்றால் அந்த விற்பனை ரத்து செய்யப்படும்.

2312 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் பர்னீ எனும் (மஞ்சளான, வட்டவடிவமான) உயர்ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் இது எங்கிருந்து கிடைத்தது? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது; நபி (ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாஉவைக் கொடுத்து அதில் ஒரு ஸாஉ வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! இனி இவ்வாறு செய்யாதீர்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழத்தை மற்றொரு வியாபாரத்தின் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக! என்றார்கள்.

பாடம் : 12

வக்ஃபை நிர்வகிக்க அதிகாரம் வழங்குவதும், அதிகாரம் வழங்கப்பட்டவர் அதைச் செலவு செய்வதும்,தமது நண்பருக்கும் உண்ணக் கொடுத்து, தாமும் நியாயமான அளவில் உண்ணுவதும்.

2313 சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் (வக்ஃப்) செய்து விட்டுச் சென்ற தர்மத்தைப் பற்றி அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறும் போது, இதன் பொறுப்பாளர் தமக்காகச் சுருட்டிக் கொள்ளும் எண்ணமின்றி, தாம் சாப்பிடுவதும் தம் தோழருக்குச் சாப்பிடக் கொடுப்பதும் தவறில்லை! என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் (வக்ஃப்) செய்த தர்மத்திற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் பொறுப்பாளராக இருந்தார்கள். மக்காவில் அவர்கள் வழக்கமாக யாரிடம் தங்குவார்களோ அவர்களுக்கு அதிலிருந்து அன்பளிப்பு வழங்குவார்கள்.

பாடம் : 13

குற்றவியல் தண்டனைகளை நிறைவேற்றும் அதிகாரத்தை ஒருவரிடம் வழங்குதல்.

2314 & 2315 அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உனைஸ் (ரலி) அவர்களிடம், இன்னாரின் மனைவியிடம் நீ சென்று, அவர் விபசாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டால் கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்று! என்று கூறினார்கள்.

2315 உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நுஐமான் அல்லது அவருடைய மகன் மது அருந்திய நிலையில் நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட போது, வீட்டில் இருப்பவர்கள் (வெளியே வந்து) அவரை அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்! நாங்கள் செருப்புகளாலும் பேரீச்ச மட்டையாலும் அவரை அடித்தோம்!

பாடம் : 14

குர்பானி ஒட்டகங்களைப் பராமரிக்கும் அதிகாரத்தை ஒருவருக்கு வழங்குதல்.

2317 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குர்பானி (பலி) கொடுப்பதற்காக அனுப்பி வைத்த ஒட்டகங்களுக்கு அடையாளமாகக் கழுத்தில் கட்டப்படும் மாலைகளை என் கைகளால் நான் பின்னினே நபி(ஸல்) அவர்கள், தம் கைகளால் அவற்றை (ஒட்டகங்களின் கழுத்தில்) தொங்கவிட்டார்கள். பிறகு அவற்றை என் தந்தையுடன் (பலியிடுவதற்காக) அனுப்பினார்கள். (நபி ளஸல்னஅவர்கள் மதீனாவில் இருந்து கொண்டு அவற்றை அனுப்பியதால்) அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதித்த எதுவும் அந்தப் பிராணிகள் அறுக்கப்படும்வரை (இஹ்ராம் கட்டியவர் மீது விலக்கப்படுவது போன்று) அவர்கள் மீது விலக்கப்படவில்லை.

(ஒருவர் இஹ்ராம் கட்டாமல் சொந்த ஊரிலிருந்த குர்பானிப் பிராணியை அனுப்பினால் இஹ்ராம் கட்டியவருக்குரிய சட்டங்கள் அவருக்குக் கிடையாது என்பது இதன் கருத்து.)

பாடம் : 15

பொறுப்புக் கொடுக்கப்பட்டவரிடம், பொறுப்புக் கொடுத்தவர், அல்லாஹ் உனக்குக் காட்டியபடி நடந்து கொள் என்று சொல்லும் போது பொறுப்பேற்றவர், நீர் கூறியதை நான் செவியேற்றேன்! எனக் கூறுவது.

2318 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதல்ஹா (ரலி) அவர்கள் மதீனாவில் முஸ்லிம்களில் மிகப்பெரும் செல்வந்தாராக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த பீருஹா எனும் தோட்டம் அபூதல்ஹா (ரலி)அவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. அவரது சொத்துக்களில் அவருக்கு மிக விருப்பமானதாக அது இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள சுவையான தண்ணீரை அருந்தும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். உங்களுக்குப் பிரியமானவற்றிலிரந்து (இறைவழியில்) செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடைய முடியாது!எனும் (3:92ஆவது) இறைவசனம் அருளப்பட்டவுடன் அபூதல்ஹா (ரலி)அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதரே, உங்களுக்குப் பிரியமானவற்றிலிருந்து செலவிடாதவரை நீங்கள் நன்மையை அடைய முடியாது! என்று அல்லாஹ் கூறுகிறான். என் சொத்துக்களில் எனக்கு மிகவும் விருப்பமானது பீருஹா எனும் இந்தத் தோட்டமேயாகும்! இனிமேல்,இது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும்! இதன் நன்மையை அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன்! அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பும் விதத்தில் இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அழிந்து) போய்விடும் செல்வம்தானே! (அழிந்து) போய்விடும் செல்வம்தானே! (நற்கூலி பெற்றுத் தரும் தர்ம காரியத்தில் தான் அது போகட்டுமே!) நீர் கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்; அதை உமது நெருங்கிய உறவினர்களுக்கு நீர் (தானமாக) வழங்குவதையே நான் விரும்புகிறேன்! எனக் கூறினார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன்! எனக் கூறிவிட்டுத் தமது உறவினர்களுக்கும் தமது தந்தையின் சகோதரருடைய மக்களுக்கும் அந்தத் தோட்டத்தைப் பங்கு போட்டுக் கொடுத்து விட்டார்கள்.

பாடம் : 16

நம்பிக்கைக்குரியவரிடம் கருவூலம் முதலியவற்றின் பொறுப்புக்களை வழங்குதல்.

2319 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்திற்காக, முழுமையாகவும் குறைவின்றியும் மனபூர்வமான முறையில் செலவிடக்கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 செலவிடக்கூடிய என்பதற்குப் பதிலாக கொடுக்கக்கூடிய என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கலாம் என்று இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.