32 – லைலத்துல் கத்ரின் சிறப்பு

அத்தியாயம்: 32 – லைலத்துல் கத்ரின் சிறப்பு.

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

பாடம் : 1

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு

அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக, நாம் அதை (-குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும் (-ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும்! (97:1:5)

குர்ஆனில் ஒன்றைப் பற்றி மா அத்ராக்க (உமக்கு எது அறிவித்தது?) என்று கூறப்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விட்டான் என்று பொருள்; வ மாயுத்ரீக்க (எது உமக்கு அறிவிக்கும்?) என்று கூறப்பட்டால் அதை அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கவில்லை என்று பொருள்!என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

2014 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். யார் லைலத்துல் கத்ர்-கண்ணியமிக்க இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்றுவணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 2

லைலத்துல் கத்ர் இரவை (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் தேடுதல்.

2015 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித் தோழர்கள் சிலர் கண்ட கனவில், (ரமளானின்) கடைசி ஏழு (இரவு)களில் ஒன்றில் லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கடைசி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதனைத் தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு(இரவு)களில் தேடிக் கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.

2016 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்ட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களிமண்ணில் சஜ்தா செய்வது போன்று (கனவு) கண்டேன்! ஆகவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்! என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக்கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால் பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரிச்ச மட்டையினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி (ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் சஜ்தா செய்யும் நிலையில் நான் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை நான் பார்த்தேன்.

பாடம் : 3

கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரை தேடுதல்.

இது பற்றிய ஹதீஸை உபாதா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

2017 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2018 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். பின்னர், நான் இந்தப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் அந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது: பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே, (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாட்களிலுள்ள) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) சஜ்தா செய்வதுபோன்று (கனவு) கண்டேன்!எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும் நபி (ஸல்) அவர்கள், தமது முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, சுப்ஹு தொழுது விட்டுத் திரும்புவதையும் நான் கண்டேன்.

2019 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(லைலத்துல் கத்ரைத்) தேடுங்கள்!

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2020 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்! என்று கூறுவார்கள்.

2021 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2022 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது ; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!

இதை இப்னு அப்பாஸ்( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பாடம் : 4

மக்கள் சச்சரவிட்டுக் கொண்டிருந்ததால் லைலத்துல் கத்ர் பற்றிய விளக்கம் நீக்கப்படுதல்.

2023 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லீம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்: எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்!. எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும்,இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்! எனக் கூறினார்கள்.

பாடம் : 5

ரமளானின் கடைசிப் பத்தில் புரிய வேண்டிய வணக்கவழிபாடு.

2024 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.