30 – நோன்பு

அத்தியாயம்: 30 – நோன்பு.

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

பாடம் : 40

ரமளானில் விடுபட்ட நோன்பை எப்போது நிறைவேற்ற வேண்டும்?

வேறு நாட்களில் நோற்கலாம் என்று அல்லாஹ் கூறுவதால் விடுபட்ட நோன்புகளைப் பிரித்துப் பிரித்து நோற்பதில் தவறில்லை! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

விடுபட்ட ரமளான் நோன்புகளை நிறைவேற்றாமல் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது பொருந்தாது! என்று சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் அடுத்த ரமளான் வரும்வரை விடுபட்ட நோன்பை நோற்காதிருந்தால் இரண்டு நோன்புகளையும் அவர் நோற்பார்; அவர் உணவளிக்கத் தேவையில்லை! என்று இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நோன்பை விட்டவர் (அதற்குப் பரிகாரமாக) ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட நோன்புகளை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்றுதான் அல்லாஹ் கூறுகிறான்; உணவளிக்குமாறு கூறவில்லை.

1950 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அதை ஷஅபான் மாதத்தில் தவிரúவேறெப்போதும் என்னால் நிறைவேற்ற முடியாது.

நபி (ஸல்) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) பணிவிடை செய்ததே இதற்குக் காரணம் என்று யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 41

மாதவிடாய் ஏற்பட்டவள் தொழுகையையும் நோன்பையும் விட வேண்டும்.

மிகுதியான நபி வழிகளும் சரியான முடிவுகளும் மனித யூகங்களுக்கு மாற்றமாகவே அமைந்துள்ளன. முஸ்லிம்கள் நபி வழியைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. மாதவிடாய் ஏற்பட்டவள் நோன்பைக் களாச் செய்ய வேண்டும்; தொழுகையைக் களாச் செய்ய வேண்டியதில்லை என்பதும் அவற்றுள் ஒன்றாகும் என்று அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1951 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அது தான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்.

இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 42

களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால்…?

களாவான நோன்பை நிறைவேற்றாமல் இறந்தவருக்காக முப்பது நபர்கள் தலா ஒரு நோன்பு நோற்றால் (அவர் சார்பாக) அது நிறைவேறிவிடும் என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1952 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

களாவான நோன்புள்ள நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அவர் சார்பாக அவருடைய பொறுப்பாளர் நோன்பு நோற்பார்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1953 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் இறந்து விட்டார். அவர் சார்பாக அதை நான் நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது என்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் சகோதரி மரணித்து விட்டார்… என்று கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பில் ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, என் தாய் இறந்து விட்டார்… என்று கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், நேர்ச்சை நோன்பு என் தாயாருக்குக் கடமையாக இருந்த நிலையில் என் தாய் இறந்து விட்டார்… என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், என் தாய் மீது பதினைந்து நோன்புகள் கடமையாக இருந்த நிலையில் இறந்து விட்டார்… என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாக இந்த ஹதீஸ் துவங்குகிறது.

பாடம் : 43

நோன்பாளி எப்போது நோன்பை நிறைவு செய்வார்?

சூரியனின் வட்டம் மறைந்த உடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நோன்பை நிறைவு செய்தார்கள்.

1954 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் மறைந்து, இந்த (கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!

1955 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே! என்றார். நபி (ஸல்) அவர்கள், இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே! என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! என்று கூறினார்கள். அதற்கவர் பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக! என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்து விட்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்! என்றார்கள்.

பாடம் : 44

ஒருவர் தம்மால் இயன்ற தண்ணீர் மற்றும் அது போன்றவற்றால் நோன்பு துறப்பது.

1956 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம், இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! மாலைநேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!என்றார். நபி (ஸல்) அவர்கள், இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர், பகர் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே! என்றார். நபி (ஸல்) அவர்கள், இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர், நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்! என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டிக் கூறினார்கள்.

பாடம் : 45

விரைவாக நோன்பு துறத்தல்.

1957 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்.

இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

1958 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். அவர்கள் நோன்பு நோற்றார்கள். மாலை (முடியத் தொடங்கும்) நேரம் வந்ததும் ஒரு மனிதரிடம், இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! என்று கூறினார்கள். அதற்கவர், மாலை நேரம் (முழுமையாக) முடிவடையும் வரை காத்திருக்கலாமே!என்றார். நபி (ஸல்) அவர்கள், இறங்கி எனக்காக மாவு கரைப்பீராக! இரவு இங்கிருந்து முன்னோக்கி வருவதைக் கண்டால், நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்! என்றார்கள்.

பாடம் : 46

நோன்பு துறந்தபின் சூரியன் உதித்தால்…?

1959 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பு துறந்த பின்னர் சூரியன் தென்பட்டது.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம், அவர்கள் களா செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் களா செய்வது அவசியமில்லாமல் போகுமா? என்று கேட்டார்கள். (களா செய்வது அவசியமாகும்! என்பது இதன் பொருள்.)

அவர்கள் களா செய்தார்களா? இல்லையா என்பது எனக்குத் தெரியாது! என்று ஹிஷாம் (ரஹ்) கூறியதாக மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 47

சிறுவர்கள் நோன்பு நோற்றல்.

ரமளானில் போதையுடன் இருந்த ஒருவரிடம், உனக்குக் கேடு உண்டாகட்டும்! நமது சிறுவர்களெல்லாம் நோன்பு நோற்றிருக்கிறார்களே! என்று உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு அவரை அடித்தார்கள்.

1960 ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவாகள் முஹர்ரம் பத்தாம்நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்! என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும் போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

பாடம் : 48

தொடர்நோன்பு நோற்பதும், நோன்பை இரவுவரை முழுமைப்படுத்துங்கள்! என்று அல்லாஹ் கூறுவதால் இரவில் நோன்பு கிடையாது எனும் கூற்றும்.

நபி (ஸல்) அவர்கள் (தாம் தொடர்நோன்பு நோற்றாலும்) மக்கள் மீது இரக்கம் கொண்டும் (அவர்களின் உடல் வலிமை அழிந்து விடாமல்) அவர்களைக் காப்பதற்காகவும் அதைத் தடுத்திருக்கிறார்கள்.

(கடமையாக்கப்படாததைத் தம் மீது கடமைபோன்றாக்கிக் கொண்டு) வணக்க வழிபாடுகளில் மிதமிஞ்சி மூழ்குவது வெறுக்கப்படுகிறது.

1961 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்! என்று (மக்களிடம்) கூறிய போது, நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் (எல்லா விஷயங்களிலும்) உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்என்றோ கூறினார்கள்.

1962 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே?என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன் என்றார்கள்.

1963 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள்; உங்களில் யாரேனும் தொடர்நோன்பு நோற்க நாடினால் சஹ்ர் வரை அவ்வாறு செய்யட்டும் என்று கூறினார்கள். நபித்தோழர்கள்,அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே! என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு (ஆன்மீக ரீதியாக) உணவளிக்கவும் பருகத்தரவும் ஒருவன் இருக்கின்றான். இந்நிலையில் நான் இரவுப் பொழுதைக் கழிக்கிறேன்என்றார்கள்.

1964 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கள் மீது இரக்கப்பட்டுத் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். மக்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன். என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் வழங்குகிறான் என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் மக்கள் மீது இரக்கப்பட்டு என்ற வாசகம் இடம் பெறவில்லை.

பாடம் : 49

அதிகமாகத் தொடர்நோன்பிருப்பதற்குக் கண்டனம்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு (தொடர்நோன்பு நோற்பதைக்) கண்டித்திருப்பதாக அனஸ் (ரலி) அறிவித்துள்ளார்கள்.

1965 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொடர்நோன்பைத் தடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன் என்றார்கள். தொடர்நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்த போது ஒரு நாள் அவர்களைத் தொடர்நோன்பு நோற்கச் செய்தார்கள். அடுத்த நாளும் நோற்கச் செய்தார்கள்; பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன் என்று மக்கள் தொடர்நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப்போன்று கூறினார்கள்.

1966 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொடர்நோன்பு வைப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் நற்செயல்(-அமல்)களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று விடையளித்தார்கள்.

பாடம் : 50

சஹர் வரை தொடர்நோன்பு நோற்றல்.

1967 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தொடர்நோன்பு நோற்காதீர்கள். அப்படி உங்களில் யாரேனும் தொடர்நோன்பு நோற்பதாக இருந்தால் சஹர் வரை நோற்கட்டும் என்று கூறினார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர்நோன்பு நோற்கிறீர்களே!? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்கு உணவளிப்பவனும் புகட்டுபவனும் உள்ள நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன் என்றார்கள்.

பாடம் : 51

உபரியான நோன்பை விடுமாறு ஒருவர் மற்றவரை வற்புறுத்தல்; இவ்வாறு விட்டவர் அதைக் களாச் செய்ய வேண்டியதில்லை.

1968 அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது? என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள் அபுத்தர்தாவிடம், உண்பீராக! என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, நான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்றார். சல்மான், நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன் என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், உறங்குவீராக! என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக!என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், இப்போது எழுவீராக! என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர். பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன;அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக! என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சல்மான் உண்மையையே கூறினார்! என்றார்கள்.

பாடம் : 52

ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்பது.

1969 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 (இனி) நோன்பை விடவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்; (இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்! ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!

1970 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. ஷஅபானில் (சில வருடங்களில்) முழு மாதமும் நோன்பு நோற்பார்கள். உங்களால் இயன்ற அளவுக்கு நீங்கள் அமல்கள் (வணக்கங்களைச்) செய்யுங்கள் நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்! என்றும் கூறுவார்கள். குறைவாக இருந்தாலும் தொடர்ந்து தொழப்படும் தொழுகையே அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது! ஒரு தொழுகையை அவர்கள் தொழுதால் அதைத் தொடர்ந்து தொழுவார்கள்.

பாடம் : 53

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதும் நோன்பை விட்டதும்.

1971 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்க மாட்டார்கள். (ரமளான் அல்லாத மாதங்களில்) அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பை விட மாட்டார்கள்! என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பு நோற்பார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பு நோற்க மாட்டார்கள்! என்று மக்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டு விடுவார்கள்.

1972 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்க மாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் நோன்பை விட்டுவிடுவார்கள்; இந்த மாதம் நோன்பை அவர்கள் விட மாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள்! அவர்களை இரவில் தொழும் நிலையில் நீ காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்;அவர்களை (இரவில்) உறங்கும் நிலையில் நீ காணவிரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய்!

1973 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களை ஒரு மாதத்தில் நோன்பாளியாக நான் பார்க்க விரும்பினால் அவ்வாறே அவர்களை நான் பார்ப்பேன். அவர்கள் நோன்பை விட்ட நிலையில் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; இரவில் தொழக் கூடியவர்களாக அவர்களைப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்; அவர்களைத் தூங்குபவர்களாகப் பார்க்க விரும்பினால் அவ்வாறே நான் அவர்களைப் பார்ப்பேன்! நபி (ஸல்) அவர்களின் கையைவிட மிருதுவான எந்தப் பட்டையும் நான் தீண்டியதில்லை; நபி (ஸல்) அவர்களின் நறுமணத்தை விட நல்ல நறுமணத்தை நான் மோந்ததுமில்லை!

பாடம் : 54

நோன்பு நோற்றிருக்கும் போது விருந்தினர்க்குச் செய்ய வேண்டிய கடமை.

1874 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, உம்முடைய விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன!என்றார்கள். தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்பு எவ்வாறு இருந்தது? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வருடத்தில் பாதி நாட்கள்! என்றார்கள்.

பாடம் : 55

நோன்பு நோற்றிருக்கும் போது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமை.

1975 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே! என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். நபி (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்! என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்! என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்! என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது?என்று நான் கேட்டேன். வருடத்தில் பாதி நாட்கள்! என்றார்கள்.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே! என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்! என அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 56

ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது.

1976 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உயிருடனிருக்கும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்குவேன் என்று நான் கூறிய செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. (இது பற்றி அவர்கள் என்னிடம் கேட்ட போது) என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் அவ்வாறு கூறியது உண்மையே! என்றேன். நபி (ஸல்) அவாகள், இது உம்மால் முடியாது! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வையும்! ஏனெனில், ஒரு நற்செயலுக்கு அது போன்று பத்து மடங்கு நற்பலன் அளிக்கப்படும்! எனவே, இது காலமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமமாகும்! என்றார்கள். நான், என்னால் இதைவிட சிறப்பானதைச் செய்ய முடியும். என்று கூறினேன். அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் விட்டுவிடுவீராக! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்? என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், அப்படியானால் ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக!, இது தான் தாவூத் நபியின் நோன்பாகும்! நோன்புகளில் இதுவே சிறந்ததாகும்! என்றார்கள். நான் என்னால் இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும்? என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் இதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை! என்றார்கள்.

பாடம் : 57

நோன்பு நோற்றிருக்கும் போது குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமை.

இது பற்றிய நபி வழியை அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

1977 அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தொடர்ந்துநோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் தொழுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குத் செய்தி எட்டியது; அவர்கள் என்னை அழைத்து வரச் சொல்லியிருக்க வேண்டும்; அல்லது நானாக அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும்! (அவர்கள் என்னை அழைத்து வரச் சொன்னார்களா, நானாகச் சென்று அவர்களைச் சந்தித்தேனா என்பது எனக்கு நினைவில்லை!) நபி (ஸல்) அவர்கள் நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் தூங்காமல் தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! எனவே, நோன்பு வைப்பீராக! அதை விட்டுவிடவும் செய்வீராக! (இரவில்) எழுந்து நின்று வணங்குவீராக! தூங்கவும் செய்வீராக! ஏனெனில், உமது கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன;உமக்கும் உமது குடும்பத்தாருக்கும் நீர் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன! என்று கூறினார்கள். நான் இதற்கு எனக்கு சக்தி உள்ளது! என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் நீர் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! என்றார்கள். அது எவ்வாறு? என்று நான் கேட்டேன். தாவூத் நபி (அலை) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; ஒரு நாள் விட்டுவிடுவார்கள்! மேலும், (போர்க்களத்தில் எதிரிகளைச்) சந்திக்கும் போது பின்வாங்க மாட்டார்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! இந்த (வீரம் நிறைந்த) பண்புக்கு எனக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்? என்றேன்.

காலமெல்லாம் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் (இந்த சம்பவத்துக்கிடையே) எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறிய மாட்டேன்; என்றாலும் காலமெல்லாம் நோன்பு நோற்றவர் நோன்பு நோற்றவரல்லர்! என்று நபி (ஸல்) அவர்கள் இருமுறை கூறினார்கள். (என்பது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது!) என்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 58

ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றல்.

1978 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள். இதைவிட அதிகமாக எனக்குச் சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். முடிவில், ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் விட்டுவிடுவீராக! என்று கூறினார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும் (ஒரு தடவை) குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்றார்கள். இதைவிட அதிகமாக(ஓத) எனக்கு சக்தி உள்ளது! என்று நான் கூறினேன். (நான் கேட்கக் கேட்க) குறைத்துக் கொண்டே வந்து முடிவில்,மூன்று நாட்களில் ஒருதடவை குர்ஆனை (முழுமையாக) ஓதுவீராக! என்று கூறினார்கள்.

பாடம் : 59

தாவூத் நபியின் நோன்பு.

1979 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வணங்குகிறீரோ?என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே செருகிவிடும்; (மேலும்) அதனால் உள்ளம் களைத்து (பலவீனமடைந்து) விடும்! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார்! (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்! என்றார்கள். அதற்கு நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்! என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,அப்படியானால் தாவூத் நபியின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும் போது பின்வாங்கவு மாட்டார்கள்! என்று கூறினார்கள்.

1980 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல்தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா? என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!) என்றேன்;அவர்கள் ஐந்த நாட்கள்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே…! என்றேன்; ஒன்பது நாட்கள்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே…! என்றேன்; பதினொரு நாட்கள்! என்றார்கள். பிறகு, தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை; அது வருடத்தின் பாதி நாட்களாகும்! எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக! என்றார்கள்.

பாடம் : 60

மாதந்தோறும் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நிலவு பிரகாசிக்கும் நாட்களில் (-அய்யாமுல் பீள்) நோன்பு நோற்றல்.

1981 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், ளுஹா நேரத்தில் இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், உறங்குவதற்கு முன் வித்ர் தொழுகையை தொழுது விடுமாறும் இந்த மூன்று விஷயங்களை என் உற்ற தோழர் நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்.

பாடம் : 61

ஒரு கூட்டத்தாரிடம் சென்று, அங்கு நோன்பை முறிக்காமல் இருத்தல்.

1982 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்! என்றார்கள். பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள், உம்முசுலைம் (ரலி) அவர்களுக்காகவும் அவர்களுடைய குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விருப்பமான ஒன்று உள்ளது! என்றார். நபி (ஸல்) அவர்கள், அது என்ன? என்று கேட்டார்கள். உங்கள் ஊழியர் அனஸ்தான்! என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டுவிடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு, எனக்காக நபி (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். இறைவா! இவருக்குப் பொருட் செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! இவருக்கு சுபிட்சம் (பரக்கத்) புரிவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.இன்று நான் அன்ஸாரிகளிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன்!

எனக்குப் பிறந்த நூற்றியிருபதுக்கும் அதிகமான பிள்ளைகள் இறந்து, ஹஜ்ஜாஜ் (பின் யூசுஃப்) பஸ்ராவுக்கு வந்த காலத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டனர் என்று என் மகள் உமைனா என்னிடம் கூறினார்.

பாடம் : 62

மாதக் கடைசியில் நோன்பு நோற்றல்.

1983 முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அவர்களிடமோ, அவர்கள் செவிமடுத்துக் கொண்டிருக்க மற்றொருவரிடமோ நபி (ஸல்) அவர்கள், இம்மாதத்தின் இறுதியில் நீர் நோன்பு நோற்கவில்லையா?என்று கேட்டார்கள். அம்மனிதர் இல்லை, அல்லாஹ்வின் தூதரே! என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் நோன்பை விட்டு விட்டால் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக! என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைக் கருத்தில் கொண்டே, இம்மாதம் என்று சொன்னதாக எனக்கு இதை அறிவித்தவர் (மஹ்தீ பின் மைமூன்) கூறியதாக நான் நினைக்கிறேன்! என்று அபுந்நுஃமான் கூறுகிறார்.

நபியவர்கள் ரமளானையே கருத்தில் கொண்டு இம்மாதம் என்று சொன்னதாக நான் நினைக்கிறேன்!என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸல்த் என்பார் கூறவில்லை.

ஷஅபானின் கடைசி என்று மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

பாடம் : 63

வெள்ளிக் கிழமை நோன்பு நோற்றல்.

வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்றால் அதை முறிப்பது அவசியமாகும்.

1984 முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதைத் தடை செய்தார்களா என்று கேட்டேன். ஜாபிர் (ரலி) அவர்கள், ஆம் என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்கக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாகக் கூறப்படுகிறது.

1985 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1986 ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருந்த போது என்னிடம் வந்தார்கள். நேற்று நோன்பு நோற்றாயா? என்று கேட்டார்கள். நான் இல்லை! என்றேன். நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கும் இல்லை! என்றேன். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் நோன்பை முறித்து விடு! என்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்! என்று ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 64

சில நாட்களை மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவற்றில் நோன்பு நோற்கலாமா?

1987 அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட சில நாட்களை வணக்கவழிபாட்டிற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள் இல்லை! அவர்களின் வணக்கவழிபாடு (-அமல்) நிரந்தரமானதாக இருக்கும்! நபி (ஸல்) அவர்களால் செய்ய முடிந்த (வணக்கத்)தை உங்களில் யார்தான் செய்ய முடியும்? என்று கூறினார்கள்.

பாடம் : 65

அரஃபா நாளில் நோன்பு நோற்றல்.

1988 உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரஃபா (துல்ஹஜ்-9ஆம்) தினத்தில் நோன்பு நோற்றிருக்கிறார்களா? என்று என்னிடம் சிலர் விவாதித்தனர். சிலர் அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள் என்று கூறினர். மற்றும் சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை என்றார்கள். அப்போது ஒட்டகத்தில் அமர்ந்திருத்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினேன்; அதை அவர்கள் குடித்தார்கள்.

1989 மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் குடித்தார்கள்.

பாடம் : 66

நோன்புப் பெரு நாள் (-ஈதுல் ஃபித்ர்) தினத்தில் நோன்பு நோற்றல்.

1990 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தனர். அவை: நோன்பை முடித்துப் பெரு நாள் கொண்டாடும் (ஈதுல் ஃபித்ர்) தினமும், குர்பானி இறைச்சியை நீங்கள் சாப்பிடும் (ஈதுல் அள்ஹா) தினமும் ஆகும்.

1991,1992 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெரு நாள், ஹஜ்ஜுப் பெரு நாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதையும், இரு புஜங்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக் கொள்வதையும், ஓர் ஆடையை சுற்றிக் கொண்டு முழங்கால்களைக் கட்டி அமர்வதையும்,சுப்ஹுக்குப் பிறகும், அஸ்ர் தொழுகைக்குப் பிறகும் தொழுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்!

பாடம் : 67

ஹஜ்ஜுப் பெரு நாள் (-ஈதுல் அள்ஹா) தினத்தில் நோன்பு நோற்றல்.

1993 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெரு நாள் தினத்திலும், ஹஜ்ஜுப் பெரு நாளன்றும் நோன்பு நோற்பதும் முலாமஸா,முனாபதா என்ற இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

1994 ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ஒருவர் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்! என்று கூறினார். அந்த மனிதர் (அவர்) திங்கட்கிழமையன்று -(நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருக்கிறார்!) என்று கூறியதாக நான் நினைக்கிறேன்- அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெரு நாளாக அமைந்து விட்டது! ஆகவே, இப்னு உமர் (ரலி) அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நபி (ஸல்) அவர்கள் இந்த தினத்தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்! என்று கூறினார்கள்.

1995 நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! நோன்புப் பெரு நாள், ஹஜ்ஜுப் பெரு நாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்துதுந் நபவீ) பள்ளி வாசல் ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணம் மேற்கொள்ளக் கூடாது!

பாடம் : 68

(துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய அய்யாமுத்) தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்றல்.

1996 யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் மினாவில் தங்கக்கூடிய (தஷ்ரீக் உடைய) நாட்களில் நோன்பு நோற்பார்கள்!என்று தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ஹிஷாமின் தந்தை உர்வா (ரஹ்) அவர்களும் அந்த நாட்களில் நோன்பு நோற்பார்கள்.

1997 & 1998 ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது:

குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை!

1999 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 தமத்துஉ எனும் முறையில் இஹ்ராம் கட்டியவரே அரஃபா நாள் வரை நோன்பு நோற்கலாம்! கர்பானிப் பிராணியும் கிடைக்கவில்லை. நோன்பும் நோற்கவில்லை என்றால் மினாவில் தங்கும் நாட்களில் நோன்பு நோற்கலாம்!

ஆயிஷா (ரலி) அவர்களும் இவ்வாறு கூறியதாக உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 69

ஆஷூரா (முஹர்ரம் 10ஆம்) நாளில் நோன்பு நோற்றல்.

2000 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2001 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பியவர் (ஆஷூரா தினத்தில்) நோன்பு நோற்றனர்; விரும்பாதவர் விட்டுவிட்டனர்.

2002 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி (ஸல்) அவர்களும் நோற்றனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டுவிட்டனர். விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்; விரும்பாதவர் விட்டுவிட்டனர்.

2003 ஹுமைத் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற வருடம் ஆஷூரா நாளில் சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீது நின்று கொண்டு, மதீனாவாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? நபி (ஸல்) அவர்கள், இது ஆஷூரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை என்று கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன். நான் நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர் விட்டுவிடட்டும் என்று கூறினார்கள்.

2004 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். இது என்ன நாள்? என்று கேட்டார்கள். யூதர்கள் இது நல்ல நாள். இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், உங்களைவிட மூசாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான் என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.

2005 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆஷூரா நாளை யூதர்கள் பெரு நாளாகக் கொண்டாடிவந்தனர். நபி (ஸல்) அவர்கள், அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்! என்றார்கள்.

2006 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஷூரா எனும் இந்த (முஹர்ரம் 10ஆம்) நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர,வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!

2007 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, இன்று ஆஷூரா நாளாகும்; ஆகவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்! என்று அறிவிக்கச் செய்தார்கள்!

November 2, 2009, 8:00 AM

30-நோன்பு

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அத்தியாயம் : 30

30-நோன்பு

பாடம் : 1

ரமளான் நோன்பு ஒரு கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது; இதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆகக் கூடும்! (2 : 183)

1891 தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்; அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஐந்துநேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர, (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; கூடுதலாக) நீயாக விரும்பித் தொழுவதைத் தவிர! என்று பதிலளித்தார்கள். அவர் அல்லாஹ் என்மீது கடமையாக்கிய நோன்பைப் பற்றி எனக்குக் கூறுங்கள்! என்றார். ரமளான் மாத நோன்பு! (அதைத் தவிர கடமையான நோன்பு வேறெதுவுமில்லை; கூடுதலாக) நீயாக விரும்பி நோற்பதைத் தவிர! என்று பதிலளித்தார்கள். அவர் அல்லாஹ் என் மீது கடமையாக்கிய ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்? என்றார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், சத்தியத்தின் வாயிலாக உங்களை கண்ணியப்படுத்திய இறைவன் மீதாணையாக! நான் கூடுதலாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என்மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்! என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் கூறுவது உண்மையானால் வெற்றி பெற்றுவிட்டார்! என்றோ இவர் கூறுவது உண்மையானால் இவர் சொர்க்கத்தில் நுழைவார்! என்றோ கூறினார்கள்.

1892 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்) நோன்பு நோற்றார்கள். அதை நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை (கடமையாகக் கருதி) நோற்பது விடப்பட்டது.

தம்முடைய வேறு நோன்பு (ஏதாவது) அந்நாளில் தற்செயலாக அமைந்தாலே தவிர, இப்னு உமர்(ரலி) அவர்கள் ஆஷூரா தினத்தில நோன்பு நோற்க மாட்டார்கள்! என்று நாஃபிஉ (ரஹ்) கூறுகிறார்கள்.

1893 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபி (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் (ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்! எனக் கூறினார்கள்.

பாடம் : 2

நோன்பின் சிறப்பு.

1894 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி! என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை,அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையைவிடச் சிறந்ததாகும்! (மேலும்) எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது;அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்! (என்று அல்லாஹ் கூறுகிறான்)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 3

நோன்பு குற்றங்களுக்குப் பரிகாரமாகும்.

1895 ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், ஃபித்னா (சோதனை/குழப்பம்) பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை யார் மனனம் செய்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் அதைச் செவியுற்றிருக்கிறேன்! ஒருவர் தம் குடும்பத்தார், தமது செல்வம், மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு ஆளாகும் போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்குப் பரிகாரமாக அமையும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்! என்றேன். அதற்கு உமர் (ரலி)ƒஅவர்கள், நான் (சோதனை எனும் பொருளில் அமைந்த) இந்த ஃபித்னாவைப் பற்றிக் கேட்கவில்லை; கடலலை போன்று தொடர்ந்து வரக்கூடிய (குழப்பம் என்னும் பொருளிலமைந்த) ஃபித்னாவைப் பற்றியே கேட்கிறேன்! என்றார்கள். அதற்கு நான் உமக்கும் அதற்கும் இடையே மூடப்பட்ட வாசல் இருக்கிறது! என்று கூறினேன். அது திறக்கப்படுமா,உடைக்கப்படுமா? என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் உடைக்கப்படும்! என்று பதிலளித்தேன். அப்படியானால் மறுமை நாள் வரை அது மூடப்படாது! என்று உமர் (ரலி) கூறினார்.

 அந்த வாசல் யார் என்று உமர் (ரலி) அறிந்திருந்தாரா என்று ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேளுங்கள்! என்று மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் நாங்கள் கூறினோம்! அவ்வாறே அவர் கேட்டார்! அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் ஆம்! நாளை (காலை) வருவதற்கு முன்பு இரவொன்று உள்ளது என்பதை அறிவதைப்போன்று அதை அவர் அறிந்திருந்தார்! என்று பதிலளித்தார்! என அறிவிப்பாளர் அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 4

(சொர்க்கத்தில் உள்ள) ரய்யான் எனும் வாசல் நோன்பாளிகளுக்குரியது.

1896 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில், அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! நோன்பாளிகள் எங்கே? என்று கேட்கப்படும்; உடனே, அவர்களஎழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்!

இதை சஹ்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1897 அபூஹுரைரா (ரலிலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிலிருந்து, அல்லாஹ்வின் அடியாரே! இது (பெரும்) நன்மையாகும்! (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்!) என்று அழைக்கப்படுவார். (தமது உலக வாழ்வின் போது) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின்வாசல் வழியாக அழைக்கப்படுவர்; அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்; தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலிலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இந்த வாசல்கள் அனைத்திலிலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே,எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன்! என்றார்கள்.

பாடம் : 5

ரமளான் என்று கூற வேண்டுமா? ஷஹ்ரு ரமளான் (ரமளான் மாதம்) என்று கூற வேண்டுமா?என்பதும், எப்படியும் கூறலாம்! என்ற அறிஞர்களின் கருத்தும்.

நபி (ஸல்) அவர்கள் யாரேனும் ரமளானில் நோன்பு நோற்றால் என்றும் ரமளானுக்கு முந்தி என்றும் (ரமளான் மாதம் என்று கூறாமல்) குறிப்பிட்டுள்ளனர்.

1898 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளான் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன..

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1899 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1900 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிறை கண்டதும் நோன்பு வையுங்கள்; (மறு) பிறை கண்டதும் நோன்பை விடுங்கள்;உங்களுக்கு (வானில்) மேகம் தென்பட்டால் நாட்களை எண்ணிக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ரமளான் பிறை என்று உள்ளது.

பாடம் : 6

ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நல்ல எண்ணத்துடனும் நோன்பு நோற்றல்.

 நபி (ஸல்) அவர்கள், அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

1901 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் லைலத்துல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது. யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 7

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மாபெரும் வள்ளலாய்த் திகழ்வார்கள்.

1902 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) ரமளானின் ஒவ்வோர் இரவும் -ரமளான் முடியும்வரை- நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும் போது மழைக்காற்றைவிட அதிகமாக நபி (ஸல்) வாரி வழங்குவார்கள்.

பாடம் : 8

நோன்பு நோற்றுக் கொண்டு பொய்யையும் தீய செயல்களையும் விடாது இருத்தல்.

1903 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 9

ஏசப்படுபவர் நான் நோன்பாளி! என்று கூறலாமா?

1904 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக,நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே நற்பலன் அளிப்பேன்! என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான் நோன்பாளி! என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாடையைவிட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 10

விபசாரத்தை அஞ்சுபவர் நோன்பு நோற்க வேண்டும்.

1905 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யார் தாம்பத்தியத்திற்குச் சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும்;ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்;கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 11

நீங்கள் பிறையைப் பார்க்கும் போது நோன்பு வையுங்கள்; (மறு) பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.

யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்று அம்மார் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1906 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ரமளான் பிறையை நீங்கள் காணும்வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும் வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் (முப்பது நாட்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1907அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகும். எனவே பிறையைக் காணாமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் முப்பது நாட்களாக எண்ணிக் கையை முழுமைப்படுத்துங்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1908 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி ளஸல்ன அவர்கள் இரு கை விரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவு தான் என்று கூறினார்கள். மூன்றாம் தடவை பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள்.

1909அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1910 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள்; இருபத்தி ஒன்பது நாட்கள் முடிந்ததும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வர மாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் அமையும்!என்றார்கள்.

1911 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியருடன் (ஒரு மாதம்) சேர்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள்; அப்போது அவர்களின் கால் (நரம்பு) பிசகியிருந்தது. அவர்கள் ஒரு பரணில் இருபத்தொன்பது நாட்கள் தங்கினார்கள்; பின்னர் இறங்கி வந்தார்கள். அப்போது அவர்களிடம்,அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஒரு மாதம் என்று சத்தியம் செய்யவில்லையா? என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் அமையும்! என்றார்கள்.

பாடம் : 12

இரண்டு பெரு நாட்களின் மாதங்கள் (சேர்ந்தாற் போன்று) குறையாது.

(எண்ணிக்கையில் இருபத்தொன்பது நாட்களாகக்) குறைந்தாலும் (நன்மையில்) அது நிறைவானதாகும்!என்று இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

பெரு நாட்களின் இரு மாதங்களும் சேர்ந்தாற்போன்று இருபத்தொன்பது நாட்களாகக் குறையாது என்று முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1912 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

துல்ஹஜ், ரமளான் ஆகிய பெரு நாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்போன்று குறையாது.

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 13

நாம் எழுதத் தெரியாதவர்களாகவும் விண்கலையை அறியாதவர்களாகவும் உள்ளோம் என்ற நபி (ஸல்) அவர்கள் கூற்று.

1913 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாம் உம்மீ சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும். அதாவது சிலவேளை இருபத்தொன்பது நாட்களாகவும், சிலை வேளை முப்பது நாட்களாகவும் இருக்கும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 14

ரமளானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் நோன்பு நோற்கக்கூடாது.

1914 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு முதல் நாளும் உங்களில் எவரும் நோன்பு நோற்கக் கூடாது;அந்நாட்களில் வழக்கமாக நோற்கும் நோன்பு அமைந்தாலே தவிர! அவ்வாறு அமைந்தால் அந்நாளில் நோன்பு நோற்கலாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 15

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது! அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்! நீங்கள் இரகசியமாகத் தம்மைத்தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்! அவன் உங்கள் பிழைகளைப் பொறுத்து, உங்களை மன்னித்தான். எனவே, இனி (நோன்புக் கால இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி, அல்லாஹ் உங்களுக்கு விதித்ததைத் தேடிக் கொள்ளுங்கள்! (2: 187ஆவது) இறைவசனம்.

1915 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்ப காலத்தில்) நபித்தோழர்கள் நோன்பு நோற்று, நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்து,அதற்கு முன்பே உறங்கி விட்டிருந்தால் அன்றைய இரவிலும் (தொடர்ந்து) பகலிலும் மாலை வரை எதையும் உண்ண மாட்டார்கள். (ஒருமுறை) கைஸ் பின் ஸிர்மா அல்அன்சாரி (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்; நோன்பை நிறைவு செய்யும் நேரம் வந்ததும் தம் மனைவியிடம் வந்து,உன்னிடம் உணவு ஏதும் உள்ளதா? என்று கேட்டார்கள்; அவருடைய மனைவி, இல்லை! எனினும் நான் சென்று உமக்காக(உணவைத்) தேடி வருகிறேன்! என்றார். கைஸ் பின் ஸிர்மா (ரலி) அவர்கள் அன்றைய தினம் கூலி வேலை செய்து விட்டு வந்ததால் அவருக்கு உறக்கம் மேலிட்டுவிட்டது. அவருடைய மனைவி வந்து அவரைக் கண்ட போது, உமக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றார். நண்பகலானதும் கைஸ் (ரலி) அவர்கள் மூர்ச்சையுற்றார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்ட போது, நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற வசனமும் இன்னும் ஃபஜ்ர் (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்ற வசனமும் அருளப்பெற்றன. இதனால் நபித்தோழர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பாடம் : 16

இன்னும் ஃபஜ்ர் (அதிகாலை) நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்; பின்னர், இரவு வரும்வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் எனும் (2:187ஆவது) வசனத் தொடர்.

இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமி.ருந்து பராஉ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

1916 அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு தெளிவாகும்வரை என்ற (2:187) இறைவசனம் அருளப்பெற்றபோது, நான் ஒரு கருப்புக் கயிற்றையும் வெள்ளைக் கயிற்றையும் எடுத்து என் தலையணையில் வைத்துக் கொண்டேன்; இரவில் அதைப் பார்க்கலானேன்; எனக்கு எதுவும் தெளிவாகவில்லை! விடிந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதுபற்றிக் கூறினேன்; அதற்கு நபி (ஸல்) அவர்கள் (கருப்புக் கயிறு என்பதன் கருத்து:) இரவின் கருமையும் (வெள்ளைக் கயிறு என்பதன் கருத்து:) விடியலின் வெண்மையும்தான்! என்று பதிலளித்தார்கள்.

1917 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்;பருகுங்கள்! என்ற (2:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது, அவ்வசனத்தில் மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்) என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் மறு காலில் கருப்புக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள்; அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்) என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) அருளப்பெற்றது. இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் என்று அப்போது தான் மக்கள் விளங்கிக் கொண்டார்கள்.

பாடம் : 17

பிலால் பாங்கு சொல்வது நீங்கள் சஹர் செய்வதிலிருந்து (-வைகறைக்கு முன் உண்பதிலிருந்து) உங்களைத் தடுத்து விட வேண்டாம்! என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.

1918 & 1919 ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்கள், (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி (ஸல்) அவர்கள், இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில்,அவர்தாம் ஃபஜ்ர் (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்! என்று குறிப்பிட்டார்கள்.

அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது! என்று காசிம் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பாடம் : 18

சஹரை விரைவுபடுத்துதல்.

1920 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் குடும்பத்தாருடன் சஹர் செய்து விட்டு நபி (ஸல்) அவர்களுடன் (சுப்ஹுத்) தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்.

பாடம் : 19

சஹருக்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் இடையே எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும்?

1921 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகி விட்டார்கள்! என்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்; நான் பாங்குக்கும் சஹருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது? என்று கேட்டேன். அதற்கவர்கள் ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது! என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 20

சஹர் செய்வதில் அருள்வளம் (-பரக்கத்) இருக்கிறது; ஆனால், அது கட்டாயமில்லை.

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் தொடர்நோன்பு வைத்திருக்கிறார்கள்; (அப்படித் தொடர்நோன்பு நோற்ற காலங்களில்) சஹர் செய்தார்கள் என்று கூறப்படவில்லை.

1922 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நோன்பு திறக்காமல்) தொடர்நோன்பு நோற்றார்கள்; மக்களும் அவ்வாறு தொடர்நோன்பு நோற்றார்கள். இது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள்,மக்கள் தொடர்நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள். நபித்தோழர்கள், நீங்கள் (மட்டும்) தொடர்நோன்பு நோற்கிறீர்களே! என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், நான் உங்களைப் போன்றவன் அல்லன்; (இறைவன் தரப்பிலிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது!என்று பதிலளித்தார்கள்.

1923 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் சஹர் செய்யுங்கள்; நிச்சயமாக சஹர் செய்வதில் அருள்வளம் (-பரக்கத்) இருக்கிறது.

இதை அனல் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 21

நோன்பு நோற்பதாக பகலில் தீர்மானிப்பது.

அபூதர்தா (ரலி) அவர்கள் என்னிடம் உங்களிடம் உணவு ஏதும் இருக்கிறதா? என்று கேட்பார்கள்;இல்லை யென்று நாங்கள் சொன்னால், நான் இன்றைய தினம் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்!என்று கூறுவார்கள்! என (அவர்களின் துணைவி) உம்மு தர்தா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூதல்ஹா (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஹுதைஃபா (ரலி) ஆகியோரும் இவ்வாறு செய்துள்ளனர்.

1924 சலமா பின் அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தில் யார் சாப்பிட்டுவிட்டாரோ அவர் (நோன்பாக) முழுமைப்படுத்தட்டும்! யார் சாப்பிடவில்லையோ அவர் சாப்பிடாமலேயே (நோன்பாக) இருக்கட்டும்!என்று ஒருவரை அனுப்பி மக்களுக்கு அறிவிக்கச் செய்தார்கள்.

பாடம் : 22

நோன்பு நோற்றவர் (பெருந்துடக்கு ஏற்பட்டு) குளியல் கடமையானவராகக் காலை நேரத்தை அடைதல்.

1925,1926 அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாம்பத்தியஉறவில் ஈடுபட்டு, குளியல் கடமையானவர்களாக ஃபஜ்ர் (வைகறை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள்! என்று ஆயிஷா (ரலி),உம்மு சலமா (ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் கூறினார். மர்வான், என் தந்தையிடம், இதன் வாயிலாக (இதை எடுத்துரைத்து), அபூஹுரைராவை நீர் எச்சரிக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்! என்று கூறினார். இதை என் தந்தை விரும்பவில்லை. பின்னர் நாங்கள் துல்ஹுலைஃபா எனும் இடத்தில் ஒன்று சேர்வதாக முடிவு செய்யப்பட்டது; அங்கு அபூஹுரைரா(ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது; (நாங்கள் அங்கு சென்றபோது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கே இருந்தார்கள்;) என் தந்தை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், நான் உம்மிடம் ஒரு செய்தியைக் கூறவிருக்கிறேன்; மர்வான், இது தொடர்பாக (உம்மிடம் கூறும்படி) சத்தியம் செய்து என்னை வற்புறுத்தியிருக்காவிட்டால் இதை நான் உம்மிடம் கூறப் போவதில்லை! என்று கூறிவிட்டு, ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் அது (-ஃபஜ்ருக்கு முன்பே குளித்தாக வேண்டும் என்பது) போன்றுதான் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்; (நபியின் துணைவியரான) அவர்கள்தாம் இது பற்றி நன்கு அறிந்தவர்கள்! என்று பதிலளித்தார்கள்.

ஃபஜ்ர் நேரத்தில் குளியல் கடமையாக இருப்பவர் நோன்பை விட்டுவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் முந்திய (இந்த நபிமொழியின் தொடக்கத்தில் உள்ள) செய்தியே பலமான அறிவிப்பாளர்தொடருடன் உள்ளதாகும்.

பாடம் : 23

நோன்பாளி மனைவியை அணைத்துக் கொள்ளுதல்.

(நோன்பாளிக்கு) உடலுறவு மட்டுமே தடைசெய்யப்பட்டதாகும் (ஹராம்) என்று ஆயிஷா (ரலிƒஅவர்கள் கூறியுள்ளார்கள்.

1927(நபி ளஸல்ன அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு (தம் துணைவியரைக்) கட்டியணைப்பார்கள்;முத்தமிடுவார்கள். உங்களில் தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

ஒருவர் தம் மனைவியை இச்சையுடன் பார்த்து, அதனால் விந்து வெளிப்பட்டால் அவர்க நோன்பைத் தொடரலாம்! என்று ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பாடம் : 24

நோன்பாளி முத்தமிடல்.

1928 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு தம் துணைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!என்று சொல்லிவிட்டு (என் சிறியதாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் சிரித்தார்கள்.

1929 (நபி ளஸல்ன அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போர்வைக்குள் இருக்கும் போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது;நான் (போர்வையிலிருந்து) நழுவி, மாதவிடாய்க்குரிய ஆடைகளை அணிந்து கொண்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள்; நான் ஆம்! என்று கூறிவிட்டு, அவர்களுடன் போர்வைக்குள் நுழைந்து கொண்டேன். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (இருக்கும் தண்ணீரையள்ளிக்) குளிப்போம். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது என்னை முத்தமிடுவார்கள்.

பாடம் : 25

நோன்பாளி குளிப்பது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது ஓர் ஆடையை நனைத்துத் தம் மேல் போட்டுக் கொண்டார்கள்.

ஷஅபீ (ரஹ்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது குளியலறைக்குச் சென்றிருக்கிறார்கள்.

(நோன்பாளி) சமையல் பாத்திரத்தில் உள்ளதையோ, வேறெதையுமோ ருசி பார்ப்பதில் தவறில்லைஎன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்பாளி வாய் கொப்பளிப்பதும் (வெப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காக) தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் தவறில்லை என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் காலையில் எண்ணெய் தடவித் தலைவாரிக் கொள்ளட்டும்!என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

என்னிடம் கல்தொட்டி ஒன்று இருந்தது; நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் அதனுள் அமிழ்வேன் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது பல் துலக்கினார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகலின் ஆரம்ப நேரத்திலும் கடைசி நேரத்திலும் நோன்பாளி பல் துலக்கலாம்; எச்சிலை விழுங்கக் கூடாது என்ற இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

ஒருவர் தம் எச்சிலை விழுங்கினால் அவரது நோன்பு முறியும் என்று நான் கூற மாட்டேன்! என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஈரமான குச்சியால் பல் துலக்குவதில் தவறில்லை! என்ற இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறிய போது அதற்கு ருசி இருக்கிறதோ? என்று கேட்கப்பட்டது. அதற்கு இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் தண்ணீருக்குக் கூடத் தான் ருசி இருக்கிறது; அதன் மூலம் நீர் வாய்க் கொப்பளிக்கிறீரே? என்று கேட்டார்கள்.

நோன்பாளி கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இடுவது தவறில்லை என்று அனஸ் (ரலி), ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள்.

1930 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளியல் கடமையானவர்களாக ஃபஜ்ர் நேரத்தை அடைவார்கள்; குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள்.

1931,1932 அபூபக்ர் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதவாது:

நானும் என் தந்தையும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம்; ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்தியஉறவில் ஈடுபட்டு, குளியல் கடமையானவர்களாகக் காலை நேரத்தை அடைவார்கள்; பின்னர் நோன்பைத் தொடர்வார்கள் என்று கூறினார்கள். பிறகு, உம்மு சலமா (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்களும் அவ்வாறே கூறினார்கள்.

பாடம் : 26

நோன்பாளி மறதியாக உண்டால், பருகினால்…?

ஒருவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தும் போது அவரையும் மீறி தொண்டைக்குள் தண்ணீர் சென்றால் அதில் தவறில்லை என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவரின் தொண்டைக்குள் ஈ நுழைந்து விட்டால் அதனால் எந்தத் தவறுமில்லை என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

மறதியாக மனைவியுடன் தாம்பத்தியஉறவு கொண்டால் அதில் எந்தத் தவறுமில்லை என்ற ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), முஜாஹித் (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

1933 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும்;ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 27

நோன்பாளி ஈரமான மற்றும் காய்ந்த பொருட்களால் பல் துலக்குதல்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத தடவைகள் நான் பார்த்திருக்கிறேன் என்று ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது சமுதாயத்திற்கு நான் சிரமம் தந்தவனாக ஆகிவிடுவேன் என்ற அச்சம் (எனக்கு) இல்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குமாறும் நான் அவர்களுக்கு உத்தர விட்டிருப்பேன்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஜாபிர் (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் வழியாகவும் இதைப் போன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் நோன்பாளிக்கு என்று தனிச்சட்டம் எதுவும் கூறப்படவில்லை.

பல் துலக்குதல் வாயைத் தூய்மைப்படுத்துவதும் இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருவதுமாகும்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

பல் துலக்கும் போது எச்சிலை விழுங்கலாம் என்று கத்தாதா (ரஹ்) அதாஉ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

1934 உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் அங்கசுத்தி (-உளூ) செய்யும் போது தம் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிப் பின்னர் வாய்க் கொப்பளித்து, மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தித் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பிறகு இடக் கையை மூட்டு வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தலையை ஈரக்கையால் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பிறகு வலக் காலை மூன்று முறையும் இடக் காலை மூன்று முறையும் கழுவினார்கள். நான் உளூச் செய்தது போன்று நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ததை நான் பார்த்திருக்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

யார் எனது உளூவைப் போன்று உளூச் செய்து வேறு எந்த எண்ணத்திற்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டார்கள்.

பாடம் : 28

ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தட்டும்! என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.

இந்தக் கூற்றில் நோன்பாளி, நோன்பு நோற்காதவர் என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் வித்தியாசப்படுத்திக் கூறவில்லை.

நோன்பாளி, தொண்டைக்குள் செல்லாத வகையில் மூக்கிற்குள் மருந்துச் சொட்டுகளை விட்டுக் கொள்வதில் தவறில்லை என்றும் அவர் அஞ்சனமும் (-சுர்மா) இட்டுக் கொள்ளலாம் என்றும் ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் வாய் கொப்பளித்து, வாயிலுள்ள தண்ணீரைத் துப்பிவிட்டால் அதனால் (நோன்பிற்கு) எந்த பாதிப்பும் இல்லை; அவர் எச்சிலையும் வாயில் எஞ்சிய தண்ணீரையும் விழுங்காமல் இருக்க வேண்டும்; பிசின் (போன்ற பண்டங்)களை மெல்லக் கூடாது! அதனுடைய எச்சில் கலந்த சாற்றை விழுங்கவிட்டால் நோன்பு முறியும் என்று நான் கூற மாட்டேன்; எனினும், அ(வ்வாறு விழுங்குவ)து தடுக்கப்பட வேண்டும்! மூக்கிற்குள் தண்ணீர் செலுத்தி மூக்கைச் சிந்தும் போது, தன்னையும் மீறி தண்ணீர் தொண்டைக்குள் நுழைந்து விட்டால் அதில் தவறில்லை என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 29

ரமளானில் (பகலில்) தாம்பத்தியஉறவு கொள்ளுதல்.

ஒருவர் ரமளானில் ஒரு நோன்பை, நோயோ தக்க காரணமோ இன்றி விட்டுவிட்டால் அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் கூறியுள்ளார்கள்.

அதற்குப் பகரமாக, அவர் வேறு ஒரு நாளில் நோன்பு நோற்க வேண்டும்! என்று ஹம்மாத், கத்தாதா,இப்ராஹீம் அந்நகஈ, இப்னு ஜுபைர், ஷஅபீ, சயீத் பின் முஸய்யப் (ரஹ் அலைஹிம்) ஆகியோர் கூறுகின்றனர்.

1935 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் எரிந்து போய்விட்டேன்! என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் உமக்கு என்ன நேர்ந்தது? என்றார்கள். அவர், ரமளானில் (நோன்பு நோற்றுக் கொண்டு) நான் என் மனைவியுடன் தாம்பத்தியஉறவு கொண்டுவிட்டேன்! என்றார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அரக் என்று கூறப்படும் ஓர் அளவை (நிறைய பேரீச்சம் பழம்) கொண்டு வரப்பட்டது. எரிந்து போனவர் எங்கே? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். (அந்தப் பேரீச்சம் பழத்தை அந்த மனிதரிடம் கொடுத்து,) இதை தர்மம் செய்வீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 30

ரமளானில் பகலில் தாம்பத்தியஉறவு கொண்டுவிட்டு, அதற்குப் பரிகாரம் செய்வதற்கு ஏதுமில்லாத நிலையில் ஒருவருக்கு தர்மம் செய்யப்பட்டால் அதையே அவர் பரிகாரமாக வழங்கலாம்.

1936 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து,அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபி (ஸல்) அவர்கள், உமக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு நோற்றுக் கொண்டு என் மனைவியுடன் தாம்பத்தியஉறவு கொண்டுவிட்டேன்! என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை! என்றார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், இல்லை! என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை! என்றார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள்.

நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! என்னைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? மதீனாவின் (பாறைகள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தாரைவிடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள்; பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.

பாடம் : 31

ரமளானில் தாம்பத்தியஉறவு கொண்டவர் அதற்குரிய பரிகாரத்தை ஏழைகளாக உள்ள தம் குடும்பத்தாருக்கே வழங்கிவிடலாமா?

1937 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (என்னைப் போன்ற) பாமரர் ஒருவர் ரமளானில் தம் மனைவியுடன் தாம்பத்தியஉறவில் ஈடுபட்டுவிட்டார் (அதற்குரிய பரிகாரம் என்ன?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஓர் அடிமையை உம்மால் விடுதலை செய்ய இயலுமா? என்று கேட்டார்கள். அவர், இல்லை (இயலாது) என்றார். நபி (ஸல்) அவர்கள், இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக உம்மால் நோன்பு நோற்க இயலுமா? என்று கேட்டார்கள். அவர், இல்லை (இயலாது)என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பதற்குரிய பொருள் உம்மிடம் இருக்கிறதா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் இல்லை என்றார். அப்போது அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக்எனும் அளவை கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), இதை உமது சார்பாக வழங்குவீராக! என்று கூறினார்கள். அதற்கவர், எங்களைவிட ஏழைக்கா? மதீனாவின் இருமலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுடையோர் வேறு யாரும் இல்லை! என்று கூறினார். அப்படியானால் உம் குடும்பத்தாருக்கே இதை உண்ணக் கொடுத்து விடுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 32

நோன்பாளி (மருத்துவ சிகிச்சைக்காக) குருதி உறிஞ்சி எடுத்துக் கொள்வது, மற்றும் வாந்தி எடுப்பது.

ஒருவர் வாந்தி எடுத்தால் அவரது நோன்பு முறியாது; ஏனெனில் அவர் (உணவை) வெளியேற்றிருக்கிறாரே தவிர உள்ளே செலுத்தவில்லை! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவரது நோன்பு முறிந்து விடும்! என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கூற்றே சரியானதாகும்.

(உணவுப்பொருள், பானம் அல்லது நீர் போன்று ஏதும்) உள்ளே நுழைவதால்தான் நோன்பு முறியும்;வெளியேறுவதால் முறியாது! என இப்னு அப்பாஸ் (ரலி), இக்ரிமா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் நோன்பு வைத்துக் கொண்டு குருதிஉறிஞ்சி எடுத்துக் கொள்பவராக இருந்தார்கள். பின்னர் அதை விட்டுவிட்டு இரவில் குருதிஉறிஞ்சி எடுக்கலானார்கள்.

அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதிஉறிஞ்சி எடுத்துக் கொள்வார்கள்.

உம்மு சலமா (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), சஅத் (ரலி) ஆகியோர் நோன்பு நோற்றிருக்கும் போது குருதிஉறிஞ்சி எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் முன்னிலையில் குருதிஉறிஞ்சி எடுப்போம். (அவர்களால்) நாங்கள் தடுக்கப்படவில்லை என்று உம்முஅல்கமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

குருதிஉறிஞ்சி எடுத்தவரும் எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அநேகர் வழியாக, ஹஸன்அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸன் அல்பஸ்ரீ அவர்களிடம், நபி (ஸல்) அவாகள் வழியாகவா நீங்கள் கூறுகிறீர்கள்? என்று கேட்ட போது, ஆம் என்று கூறிவிட்டு, அல்லாஹ்வே மிக அறிந்தவன் என்று பின்னர் கூறினார்கள்.

1938 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவாகள் இஹ்ராம் கட்டிய நிலையில் குருதிஉறிஞ்சி எடுத்துள்ளார்கள்; நோன்பு நோற்று இருக்கும் போதும் குருதிஉறிஞ்சி எடுத்துள்ளார்கள்.

1939 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது குருதிஉறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள்.

1940 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நோன்பாளி குருதிஉறிஞ்சி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா? என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே! என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எனும் வாக்கியம் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.

பாடம் : 33

பயணத்தில் நோன்பு நோற்பதும் நோன்பை விடுவதும்.

1941 இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், (வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக! என்று கூறினார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதரே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே) சூரியன்! என்றார். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக! என்றார்கள். அப்போதும் அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,)சூரியன்! என்றார். நபி (ஸல்) அவர்கள், இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக! என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள் பிறகு, இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள்.

1942 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹம்ஸா பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் காலமெல்லாம் நோன்பு நோற்கிறேன் என்று கூறினார்.

1943 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹம்ஸா பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா? என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு என்றார்கள்.

பாடம் : 34

ரமளானில் சில நாட்கள் நோன்பு நோற்றுவிட்டுப் பின்னர் பயணம் செய்தால்…?

1944 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள்; கதீத் எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டார்கள்; மக்களும் நோன்பை விட்டனர்!

 கதீத் என்பது உஸ்ஃபான், குதைத் ஆகிய இடங்களுக்கிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்! என்று அபூஅப்தில்லாஹ் (-புகாரீ) கூறுகிறேன்.

பாடம் : 35

1945 அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடைய பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம்., கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தம் கையைத் தம் தலையில் வைத்துக் கொண்டனர். அப்பயணத்தில் நபி (ஸல்) அவர்களையும் இப்னு ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு எவரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.

பாடம் : 36

வெப்பம் கடுமையாகி, நிழலில் தங்கவைக்கப்பட்ட ஒருவரிடம், பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது! என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று.

1946 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்த போது, ஒரு மனிதர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள்(அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்தைக் கண்டார்கள். இவருக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். இவர் நோன்பு நோற்றிருக்கிறார்! என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!என்று கூறினார்கள்.

பாடம் : 37

பயணத்தில் நோன்பு நோற்பதையும் நோன்பை விடுவதையும் நபித்தோழர்கள் குறை கூறியதில்லை.

1947 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் -நோற்காதவரை நோற்றவரும் குறை கூற மாட்டார்கள்.

பாடம் : 38

மக்கள் காணும் வகையில் பயணத்தில் நோன்பை முறித்தல்.

1948 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். உஸ்ஃபான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கைகளின் நீளத்திற்கு அதை உயர்த்திக் காட்டி நோன்பை முறித்தார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்கவில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது.

நபி (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள்; (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பை விட்டுவிட விரும்புபவர் விட்டு விடவும் செய்யலாம்!

பாடம் : 39

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (ஒரு நோன்பிற்கு பதிலாக) ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்! என்ற (2:184ஆவது) இறைவசனத்தை, ரமளான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழியின் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமானது அல்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது! ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்க வேண்டும்! எனினும், எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்! அல்லாஹ் உங்களுக்கு இலகுவை விரும்புகிறானே தவிர, உங்களுக்குச் சிரமத்தை(த்தர) அவன் விரும்பவில்லை! (விடுபட்டுப்போன நோன்பு நாட்களின்) எண்ணிக்கையைப் பூர்த்தி செய்யவும் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி, நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இப்படிக் கட்டளையிடுகிறான்!) என்ற (2:185ஆவது) இறைவசனம் மாற்றிவிட்டது! என இப்னு உமர் (ரலி), சலமா பின் அக்வஉ(ரலி) ஆகியோர் கூறுகின்றனர்.

ரமளான் நோன்பு பற்றிய வசனம் அருளப்பெற்றதும் அது நபித்தோழர்களுக்குச் சிரமமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவளிப்பவர் நோன்பிருக்க சக்தியிருந்தும் நோன்பை விட்டு விடுபவராக இருந்தார். தொடக்கத்தில் இவ்வாறு அவர்களுக்குச் சலுகை வழங்கப்பட்டது. நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்ததாகும்! என்ற (2:184ஆவது) வசனம் இச்சலுகையை மாற்றி விட்டது. நோன்பு நோற்குமாறு இவ்வசனத்தின் மூலம் அவர்கள் கட்டளையிடப்பட்டனர்! என்று பல நபித்தோழர்கள் கூறியதாக இப்னு அபீ லைலா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1949 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ரமளான் (நோன்பை விட்டதற்குப்) பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்! என்ற (2:184ஆவது) வசனத்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் ஓதிவிட்டு, இந்த வசனம் கூறும் சட்டம் மாற்றப்பட்டு விட்டது! என்று கூறினார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.