28 – (இஹ்ராம் கட்டிய நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்

அத்தியாயம்: 28 – (இஹ்ராம் கட்டிய நிலையில் தவறுதலாக) வேட்டையாடியதற்குரிய பரிகாரம்.

பாடம் : 1

இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமுடைய நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! மேலும், உங்களில் யாரேனும் வேண்டுமென்றே வேட்டை(யாடி)ப் பிராணியைக் கொன்று விட்டால், அதற்குப் பரிகாரமாக அவர், தான் கொன்ற பிராணிக்குச் சமமான ஒரு பிராணியை கால்நடைகளிலிருந்து பலி கொடுக்க வேண்டும்; உங்களில் நீதிமான்கள் இருவர் அதனைத் தீர்மானிக்க வேண்டும்; அந்த பலிப்பிராணி கஅபாவில் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்; அல்லது (அச்செயலுக்கு) குற்றப் பரிகாரமாக ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்குச் சமமாக அவர் நோன்பு நோற்க வேண்டும்! (இவ்வாறு விதிக்கப்பட்டிருப்பது) தான் செய்த (தவறான) செயலின் விளைவை அவர் சுவைப்பதற்காகவே! முன்பு செய்தவற்றையெல்லாம் அல்லாஹ் மன்னித்துவிட்டான்; எனவே, யாரேனும் மீண்டும் அச்செயலைப் புரிந்தால் அல்லாஹ் அவரைப் பழி வாங்குவான். மேலும், அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனகாவும் பழிவாங்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்!

உங்களுக்கும் (இதர) பயணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் அணிந்திருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது; ஆனால், நீங்கள் எதுவரை இஹ்ராம் கட்டியிருக்கிறீர்களோ அது வரையிலும் தரையில் வேட்டையாடுவது உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் யாரிடம் (மறுமையில்) ஒன்று சேர்க்கப்படுவீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்துகொள்ளுங்கள்! எனும் (5:95, 96ஆகிய) இறைவசனங்கள்.

பாடம் : 2

இஹ்ராம் கட்டாதவர் வேட்டையாடி, இஹ்ராம் கட்டியவருக்கு வேட்டைப்பிராணியை அன்பளிப்பாக வழங்கினால் அவர் அதை உண்ணலாம்.

இஹ்ராம் கட்டியவர் ஒட்டகம், ஆடு, மாடு, கோழி, குதிரை ஆகியவற்றை அறுப்பதில் தவறு இல்லை! அது வேட்டையில் அடங்காது! என்று இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் கருதுகிறார்கள்.

1821 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஹுதைபியா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என் தோழர்கள் இஹ்ராம் கட்டினர்; நான் இஹ்ராம் கட்டவில்லை. எதிரிகள் நபி (ஸல்) அவர்கள் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. நபி (ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் கட்டியிருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு, அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்று அஞ்சினோம். நபி (ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூகிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, நபி (ஸல்) அவர்களை எங்கே விட்டுவந்தீர்? என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் சுக்யா’ எனும் இடத்திற்குச் சென்று மதியஓய்வு கொள்ள எண்ணியிருந்த வேளையில், தஉஹுன்’ எனும் இடத்தில் அவர்களை விட்டுவந்தேன்! என்றார். (நான் நபி ளஸல்ன அவர்களைச் சந்தித்து), அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்கள் மீது சலாம் (இறைச்சாந்தி) மற்றும் இறையருள் பொழிந்திடப் பிரார்த்திக்கின்றார்கள்! உங்களைப் பிரிந்துவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன்: அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது! என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் உண்ணுங்கள்! என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் கட்டயிருந்தார்கள்.

பாடம் : 3

இஹ்ராம் கட்டியவர்கள் வேட்டைப் பிராணியைக் கண்டு சிரிக்கும் போது இஹ்ராம் கட்டியவர் அதைப் புரிந்து கொண்டு வேட்டையாடுதல்.

1822 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஹுதைபியா (ஒப்பந்தம் நடந்த ஹிஜ்ரி 6ஆவது) ஆண்டில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அவர்களின் தோழர்கள் இஹ்ராம் கட்டியிருந்தனர். ஃகைகா’ எனும் இடத்தில் எதிரிகள் இருப்பதாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டது நாங்கள் அவர்களை எதிர்கொள்ளச் சென்றோம். (வழியில்) ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு என் தோழர்கள் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்கலாயினர். நான் அதைப்பார்த்து, அதன் மீது குதிரையை ஏவி,ஈட்டியால் அதைக் குத்திப் பிடித்தேன். நான் என் தோழர்களிடம் உதவி தேடிய போது, அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால்) எனக்கு உதவ மறுத்துவிட்டார்கள். பிறகு, அதை நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம். பிறகு நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று சேர்ந்துவிட்டேன். நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோம் என்று அஞ்சி, என் குதிரையை விரைவாகவும், மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் பனூகிஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரைச் சந்தித்தேன். நபி (ஸல்) அவர்களை எங்கே விட்டுவந்திருக்கிறீர்? என்று கேட்டேன். அவர்கள் சுக்யா’எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணியிருந்த வேளையில் தஉஹுன்’எனும் இடத்தில் அவர்களை விட்டுவந்தேன்! என்று அவர் கூறினார். நான் நபி (ஸல்) அவர்களை அடைந்து,அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு சலாம் கூறி அனுப்பினார்கள்; உங்களிடமிருந்து அவர்களை எதிரிகள் பிரித்துவிடுவார்களோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்; எனவே, அவர்களுக்காக எதிர்பார்த்திருங்கள்! என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் காட்டுக் கழுதையை வேட்டையாடினோம்; எங்களிடம் (அதில்) மீதமும் உள்ளது! என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த தம் தோழர்களிடம் உண்ணுங்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 4

இஹ்ராம் கட்டியவர் வேட்டையாடும் போது இஹ்ராம் கட்டாதவர் உதவக் கூடாது.

1823 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா’ எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் கட்டியவர்களும் இஹ்ராம் கட்டாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ பார்க்கலானார்கள். நான் கூர்ந்து பார்த்த போது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (என் குதிரையில் ஏறியதும்) எனது சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்ட போது) என் தோழர்கள் நாங்கள் இஹ்ராம் கட்டியிருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்! என்று .கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர், ஒரு பாறாங்கல்லின் பின்னாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதன் கால்களை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டு வந்தேன். சிலர் உண்ணுங்கள்! என்றனர். மற்ற சிலர் உண்ணாதீர்கள்! என்றனர். எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதை உண்ணுங்கள்! அது ஹலால்(-அனுமதிக்கப்பட்டது)தான்! என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 5

இஹ்ராம் கட்டாதவர் வேட்டையாடுவதற்காக இஹ்ராம் கட்டியவர் வேட்டைப் பிராணியை(க் காட்டிக் கொடுக்க) சைகை செய்யலாகாது.

1824 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி (ஸல்) அவர்கள் வேறு வழியாக அனுப்பிவைத்தார்கள். நாம் சந்திக்கும் வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பிய போது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டினர்; நான் மட்டும் இஹ்ராம் கட்டவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும் போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா? என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டுக் கொண்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் இஹ்ராம் கட்டியிருந்தோம்: அபூகத்தாதா இஹ்ராம் கட்டவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம்: அபூகத்தாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெண் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்: நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா? என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்: பிறகு,எஞ்சிய மாமிசத்தை எடுத்துவந்திருக்கிறோம்! என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா? என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் இல்லை! என்றனர். அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 6

இஹ்ராம் கட்டியவருக்கு காட்டுக்கழுதை உயிருடன் அன்பளிப்புச் செய்யப்பட்டால் அதை அவர் ஏற்கலாகாது.

1825 ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் அப்வா’ அல்லது வத்தான்’ எனும் இடத்தில் இருந்த போது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன்; அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். என் முகத்தில் ஏற்பட்ட கவலையைக் கண்டதும், நாம் இஹ்ராம் கட்டியருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்! என்று கூறினார்கள்.

பாடம் : 7

இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்கள்.

1826, 1827, 1828 & 1829 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்.

இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

1830 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மினாவிலுள்ள ஒரு குகையிலிருந்தோம். அப்போது வல்முர்ஸலாத் எனும் (77ஆவது) அத்தியாயம் அவர்களுக்கு அருளப்பெற்றது. அதை நான் நபி (ஸல்0 அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தேன்.அதை ஓதியதால் அவர்களின் வாய் ஈரமாக இருந்தது. அப்போது ஒரு பாம்பு எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபி (ஸல்) அவர்கள், அதைக் கொல்லுங்கள்!என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்த போது அது சென்றுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அதன் தீங்கிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டது போன்றே உங்கள் தீங்கிலிருந்து அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது! என்று கூறினார்கள்.

1831 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லி தீங்கிழைக்கக் கூடியது! என்று சொன்னார்கள். அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை.

பாடம் : 8

ஹரம்’ புனித எல்லைக்குள் இருக்கும் மரங்களை வெட்டக்கூடாது.

அதன் முட்களையும் வெட்டக்கூடாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

1832 சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :

(மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் ஸுபைர் ளரலின அவர்களுக்கு எதிராக),மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பிய போது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

தலைவரே! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உமக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன. என் உள்ளம் அதை மனனம் செய்திருக்கிறது: அவர்கள் அதைக் கூறும் போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, மக்காவை அல்லாஹ் புனிதப்படுத்தியிருக்கிறான். மனிதர்கள் அதற்கு புனிதத்தை வழங்கவில்லை.அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை; அல்லாஹ்வின்தூதர் போர் செய்ததனால் இதைப் பொதுஅனுமதி என்று யாரேனும் கருதினால், அல்லாஹ், தன் தூதருக்குத்தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை! என்று கூறிவிடுங்கள். எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மையைப் போன்று மீண்டு வந்துவிட்டது! (இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லிவிடுங்கள்! என்று கூறினார்கள்.

அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் இதற்கு அம்ர் உங்களுக்கு என்ன பதில் கூறினார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அபூஷுரைஹே! உம்மைவிட இதைப் பற்றி நான் நன்கு அறிந்தவன்! குற்றவாளிக்கும்,கொலை செய்துவிட்டு ஓடுபவனுக்கும், திருடிவிட்டு ஓடுபவனுக்கும் ஹரம்’ புனிதஎல்லை நிச்சயம் பாதுகாப்புத் தராது! என்று அம்ர் கூறினார் என பதிலளித்தார்கள்.

பாடம் : 9

ஹரம்’ புனித எல்லைக்குள் வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது.

1833 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போர் செய்வது) அனுமதிக்கப்படவில்லை; எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது; எனக்குக்கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது! எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது; இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது; இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது; யாரேனும் தவறவிட்ட பொருட்களை, அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக்கூடாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அடக்கக் குழிகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகின்ற இத்கிர்’ வாசனைப் புல்லைத் தவிரவா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இத்கிர் எனும் புல்லைத் தவிர! என்று கூறினார்கள்.

 வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது’ என்பதன் பொருள் உமக்குத் தெரியுமா? நிழலில் படுத்திருக்கும் அதை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தங்குவது தான் ! என்று அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அவர்கள் காலித் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்.

பாடம் : 10

மக்காவில் போர் புரியக் கூடாது.

மக்காவில் இரத்தத்தைச் சிந்தக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

1834 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இனி (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்தல் கிடையாது என்றாலும் அறப்போர் செய்வதும் அதற்காக (வும் மற்ற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் இருக்கிறது! நீங்கள் போருக்காக அழைக்கப்பட்டால் புறப்படுங்கள்! வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ் இந்த ஊரைப் புனிதப்படுத்தியிருக்கிறான்; அவன் புனிதப்படுத்திய காரணத்தால் மறுமை நாள் வரை இவ்வூர் புனிமானதாகும்! எனக்கு முன்னர் எவருக்கும் இவ்வூரில் போர் செய்ய அனுமதிக்கப்படவில்லை: எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் (மட்டுமே) அனுமதிக்கப்பட்டது. அல்லாஹ் புனிதப்படுத்தியிருப்பதால், மறுமை நாள் வரை இவ்வூர் புனிதமானதாகும்!. இங்குள்ள முட்களை வெட்டக்கூடாது; வேட்டைப் பிராணியை விரட்டக்கூடாது; பிறர் தவறவிட்ட பொருட்களை அதை அறிவிப்பவர் தவிர மற்றவர் எடுக்கக்கூடாது; இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக்கூடாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது வீடுகளுக்கும் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறது! என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள், இத்கிரைத் தவிர! என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 11

இஹ்ராம் கட்டியவர் (மருத்துவ சிகிச்சைக்காக) குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்வது.

இப்னு உமர் (ரலி) அவர்கள், தம் புதல்வர் (வாகித் அவர்கள்) இஹ்ராம் கட்டியிருருந்த போது சிகிச்சைக்காகச் சூடு போட்டிருக்கிறார்கள்.

நறுமணம் இல்லாதவற்றை இஹ்ராம் கட்டியவர் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

1835 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த போது குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள்.

1836 இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில், லஹ்யுஜமல்’ எனுமிடத்தில் தம் தலையின் நடுப்பகுதியில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்!

பாடம் : 12

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்தல்.

1837 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள்.

பாடம் : 13

இஹ்ராம் அணிந்த ஆண்களும் பெண்களும் நறுமணப் பொருளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதாகும்.

இஹ்ராம் அணிந்த பெண் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியக் கூடாது! என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.,

1838 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியிருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்? என்று ஒரு மனிதர் எழுந்துகேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகைகளையும், (முக்காடுள்ள) நீள் அங்கிகளையும் (அல்லது தொப்பிகளையும்) அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக்கொள்ளட்டும்! குங்குமப்பூச் சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! அணியக்கூடாது; அவள் கையுறைகளையும் அணியக்கூடாது! என்று பதிலளித்தார்கள்.

1839 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

இஹ்ராம் ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவரை நீராட்டிக் கஃபனிடுங்கள்! அவரது தலையை மூடாதீர்கள்;அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்), தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 14

இஹ்ராம் கட்டியவர் குளிப்பது.

இஹ்ராம் கட்டியவர் குளியலறைக்குச் செல்லாம்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இஹ்ராம் கட்டியவர் (தலையைச்) சொறிந்துகொள்வதில் குற்றமில்லை! என்று இப்னு உமர் (ரலி) அவர்களும் (மேனியைச் சொறிந்துகொள்வதில் தவறில்லை!) என்று ஆயிஷா (ரலி) அவர்களும் கருதுகிறார்கள்.

1840 அப்துல்லாஹ் பின் ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :

அப்வா’ என்ற இடத்தில் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு கொண்டனர். இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவலாம்! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இஹ்ராம் கட்டியவர் தலையைக் கழுவக் கூடாது! என்று மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), என்னை அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். நான் சென்றபோது, அவர்கள் ஊன்றப்பட்ட இரண்டு மரக்கழிகளுக்கிடையே திரையால் மறைக்கப்பட்டுக் குளித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் கூறினேன். யார் அது? என்று கேட்டார்கள். நான்தான் அப்துல்லாஹ் பின் ஹுனைன்! நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம்கட்டியிருக்கும் போது எவ்வாறு தலையைக் கழுவுவார்கள்? என்று உங்களிடம் கேட்பதற்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அனுப்பினார்கள்! என்று நான் கூறினேன். அபூ அய்யூப் (ரலி) அவர்கள், தமது கையைத் திரையின் மீது வைத்து, அவர்களின் தலை தெரியுமளவிற்குத் திரையை (அசைத்து) இறக்கினார்கள். பிறகு,தண்ணீர் ஊற்றுகின்ற மனிதரிடம் தண்ணீர் ஊற்றுவீராக! என்றார்கள். அவர் தண்ணீர் ஊற்றினார். அபூஅய்யூப்(ரலி) அவர்கள், தம் தலையை இரு கைகளாலும் அசைத்துவிட்டு, முன்னும் பின்னுமாகக் கைகளைக் கொண்டு சென்றார்கள்; இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்! என்றும் கூறினார்கள்.

பாடம் : 15

இஹ்ராம் கட்டியவருக்கு செருப்பு கிடைக்காவிட்டால் காலுறைகளை அணியலாம்.

1841 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தும் போது, யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்! யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்! என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.

1842 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், சட்டை, தலைப்பாகை, கால்சட்டை, (முக்காடுள்ள) நீளங்கி (அல்லது தொப்பி), குங்குமச் சாயம் தோய்ந்த ஆடை, வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது! செருப்பு கிடைக்காதவர்கள் காலுறைகளை அணியலாம்; ஆயினும் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி (மேலிருந்து கரண்டைக்குக் கீழ் வரை) அவற்றை வெட்டிவிட வேண்டும்! என்று விடையளித்தார்கள்.

பாடம் : 16

வேட்டி கிடைக்காவிட்டால் கால் சட்டைகளை அணியலாம்.

1843 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்! யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்! என்றார்கள்.

பாடம் : 17

இஹ்ராம் கட்டியவர் ஆயுதம் தரிப்பது.

எதிரிகளைப் பற்றி அஞ்சினால் ஆயுதம் தரித்துக்கொள்ளலாம்; ஆனால் குற்றப் பரிகாரம் செய்ய வேண்டும்!என்று இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

குற்றப் பரிகரம் செய்ய வேண்டும்’ என்று இக்ரிமா (ரஹ்) அவர்களைத் தவிர வேறுயாரும் கூறவில்லை.

1844 பராஉ (ரலி) அவர்கள் கூறிதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்யப் புறப்பட்டார்கள். மக்காவிற்குள் நுழைய அவர்களை மக்காவாசிகள் அனுமதிக்கவில்லை. (அடுத்த ஆண்டில்) ஆயுதங்களை உறையில் போட்டுக் கொண்டு மக்காவினுள் நுழைவதாக அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்தார்கள்.

பாடம் : 18

இஹ்ராம் இல்லாமல் மக்காவிலும் ஹரம்-புனித எல்லையிலும் நுழைதல்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு நுழைந்திருக்கிறார்கள்.

ஹஜ், உம்ரா செய்ய நாடுபவருக்குத்தான் இஹ்ராம் கட்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்;விறகுவியாபாரிகள் மற்றும் அவர்களைப் போன்றவர்களுக்கு இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

1845 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபா’ எனும் இடத்தையும் நஜ்த்வாசிகளுக்கு கர்னுல் மனாஸில்’ எனும் இடத்தையும் யமன்வாசிகளுக்கு யலம்லம்’ எனும் இடத்தையும் இஹ்ராம் கட்டுவதற்குரிய எல்லையாக நிர்ணயித்தார்கள்; இவ்வெல்லைகள் அந்தப் பகுதியினருக்கும் அதன் வழியாக வேறு பகுதியிலிருந்து ஹஜ், உம்ராவை நாடி வருபவருக்கும் உரியனவாகும்! இந்த எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவர்கள் எந்த இடத்திலிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்தே இஹ்ராம் கட்டவேண்டும்;மக்காவாசிகள் மக்காவிலிருந்தே இஹ்ராம் கட்டவேண்டும்!

1846 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்! எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், அவனைக் கொன்றுவிடுங்கள்! என்று உத்தரவிட்டார்கள்.

பாடம் : 19

ஒருவர் (இஹ்ராமுடைய சட்டங்களை) அறியாமல், சட்டை அணிந்திருக்கும் நிலையில் இஹ்ராம் கட்டுதல்.

(இஹ்ராம் கட்டிய) ஒருவர் அறியாமலோ மறதியாகவோ நறுமணம் பூசிக் கொண்டால் அல்லது தைக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டால் அதற்காக எந்தப் பரிகாரமும் செய்ய வேண்டியதில்லை! என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1847,1848 யஅலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். மஞ்சள் அல்லது அதைப் போன்ற கறைபடிந்த (கம்பளியால் ஆன) மேலங்கியை அவர் அணிந்திருந்தார். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைஅறிவிப்பு) இறங்கும் போது அவர்களைப் பார்க்க விரும்புகிறாயா? என்று உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் மீது வஹீ இறங்கி, பின்னர் அது அவர்களைவிட்டு நீங்கியது; (அதை நான் பார்த்தேன்). அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள், உமது ஹஜ்ஜில் செய்யக் கூடியதையே உம்ராவிலும் செய்வீராக! என்று கூறினார்கள்.

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்துவிட்டார். உடனே கடிபட்டவர் (கையை இமுத்த போது) கடித்தவரது முன் பற்களை உடைத்துவிட்டார். பல்லுடைக்கப்பட்டதற்கு எந்த நஷ்ட ஈடும் தரவேண்டியதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பாடம் : 20

இஹ்ராம் கட்டிய நிலையில் அரஃபாவில் இறந்தவரின் நிலை.

ஹஜ்ஜின் எஞ்சிய கிரியைகளை அவர் சார்பாக மற்றவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

1849 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபாவில் தங்கினார். அப்போது அவர் தன் வாகன ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்து அவரைக் கொன்றது. நபி (ஸல்) அவர்கள்,இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குக் கஃபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; இவரது தலையை மூடாதீர்கள்! ஏனெனில், இவர் தல்பியா கூறிக் கொண்டிருக்கும் நிலையில் மறுமை நாளில் இவரை அல்லாஹ் எழுப்புவான்! என்று கூறினார்கள்.

1850 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் அரஃபாவில் தங்கினார். அப்போ, அவர் தமது வாகன ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். ஒட்டகம் அவரது கழுத்தை முறித்து அவரைக் கொன்று விட்டது. நபி (ஸல்) அவர்கள்,இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்குக் கஃபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; தலையை மூடாதீர்கள்! ஏனெனில், மறுமைநாளில் அல்லாஹ், இவரை தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்புவான்! என்று கூறினார்கள்.

பாடம் : 21

இஹ்ராம் கட்டியிருப்பவர் இறந்துவிட்டால் நபிவழியின்படி அவருக்காகச் செய்ய வேண்டியவை.

1851 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் இஹ்ராம் கட்டிய நிலையில் தங்கியிருந்த போது அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துவிட, அவர் இறந்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள், இலந்தை இலை கலந்த தண்ணீரால் இவரை நீராட்டுங்கள்; இரு ஆடைகளில் இவருக்கு கஃபனிடுங்கள்! இவருக்கு நறுமணம் பயன்படுத்தாதீர்கள்; இவரது தலையை மூடாதீர்கள்! ஏனெனில், மறுமைநாளில் இவர் தல்பியா கூறிக் கொண்டிருக்கும் நிலையில் எழுப்பப்படுவார்! எனக் கூறினார்கள்.

பாடம் : 22

இறந்தவருக்காக ஹஜ் செய்தலும், அவரது நேர்த்திக்கடனை நிறைவேற்றலும், பெண்களுக்காக ஆண்கள் ஹஜ் செய்தலும்.

1852 இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன் என்றார்கள்.

பாடம் : 23

வாகனத்தில் அமர முடியாதவருக்காக மற்றவர் ஹஜ் செய்தல்.

1853,1854 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கஸ்அம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் விடைபெறும் ஹஜ்ஜின் போது வந்து,அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுடைய ஹஜ் எனும் கடமை என் தந்தைக்கு விதியாகிவிட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

பாடம் : 24

ஆணுக்காகப் பெண் ஹஜ் செய்தல்.

1855 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்திற்குப் பின்னால் ஃபள்ல் (ரலி) அவர்கள் அமர்ந்திருத்தார்கள். அப்போது கஸ்அம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்தார். ஃபள்ல் (ரலி) அவர்கள் அப்பெண்ணைப் பார்க்கலானார்கள். அப்பெண்ணும் அவர்களைப் பார்த்தார். நபி (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களுடைய முகத்தை வேறு பக்கமாகத் திருப்பினார்கள். அப்போது அப்பெண்மணி, அல்லாஹ் விதித்த கடமை என் தந்தைக்கு ஏற்பட்டுவிட்டது; அவர் வாகனத்தில் அமர முடியாத முதிர்ந்த வயதுடையவராக இருக்கிறார்; அவருக்காக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம்! என்றார்கள். இது விடைபெறும் ஹஜ்ஜின் போது நடந்ததாகும்.

பாடம் : 25

சிறுவர்கள் ஹஜ் செய்தல்.

1856 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து (பயணச்) சுமைகளுடன் என்னை இரவிலேயே அனுப்பினார்கள்.

1857 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒருபெட்டைக் கழுதையின் மேல் ஏறி (ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டேன்.-அப்போது நான் பருவவயதை நெருங்கிக் கொண்டிருந்தேன்.- நபி (ஸல்) அவர்கள் மினாவில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். முதல் வரிசைக்கு முன்னால் வாகனத்தை ஒட்டிச் சென்று இறங்கினேன். அது மேயத் துவங்கியது. நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மக்களுடன் வரிசையில் சேர்ந்து கொண்டேன்.

இது விடைபெறும் ஹஜ்ஜின் போது மினாவில் நடந்ததாகும் என மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

1858 ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஏழுவயதுச் சிறுவனாக இருந்த போது நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்!

1859 ஜுஅய்த் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய (ஹஜ்ஜின்போது, அவர்களின்) பயணச் சுமைகளுடன் ஹஜ்ஜுக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்! என்று உமர் பின் அப்தில் அஸீல் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

பாடம் : 26

பெண்கள் ஹஜ் செய்தல்.

1860 அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள், தாம் செய்த கடைசி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களின் மனைவியருக்கு (ஹஜ் செய்ய) அனுமதி வழங்கினார்கள். அவர்களுடன் என்னையும் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களையும் அனுப்பிவைத்தார்கள்.

1861 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! (பெண்களாகிய) நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா? என்று நான் கேட்டேன்; அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பெண்களுக்கு) சிறந்த, அழகிய அறப்போர் (ஜிஹாத்) பாவச்செயல் எதுவும் கலவாத (இறைவன் ஏற்றுக் கொள்ள கூடிய விதத்தில் நிறைவேற்றப்படுகின்ற) ஹஜ் ஆகும்! என்றார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை!

1862 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான்  ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன இராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றார்கள்.

1863 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பிய போது உம்முஸினான் அல்அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை? என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும் என்றார்கள்.

1864 அபூசயீத் (ரலி) கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) கணவனோ மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினரோ இல்லாமல் இரண்டு நாட்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும்,சுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், எனது பள்ளிவாசல்(மஸ்ஜிதந் நபவீ), மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக்கூடாது!

அபூசயீத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரெண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கஸஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 27

கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தல்.

1865 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முதியவர் தமது இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், இவருக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். (கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்! என்று மக்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக்கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது! என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள்.

1866 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் சகோதரி கஅபா வரை நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அவர், இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரும்படி எனக்கு உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர் (சிறிது தூரம்) நடந்துவிட்டு வாகனத்தில் ஏறிக்கொள்ளட்டும் என்றார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.