27 – (ஹஜ் செய்யவிடாமல்) தடுக்கப்படுதல்

அத்தியாயம் : 27 – (ஹஜ் செய்யவிடாமல்) தடுக்கப்படுதல்.

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ் கூறுகிறான்:

நீங்கள் (ஹஜ், உம்ராவை நிறைவேற்றவிடாமல்) தடுக்கப்பட்டால் உங்களால் இயன்ற பலிப்பிராணியை பலியிடுங்கள்! பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடையும் வரை உங்கள் தலைகளை மழித்துக்கொள்ளாதீர்கள்! (2: 196)

கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கக்கூடிய அனைத்துமே தடைகளாகக் கருதப்படும் என்று அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 1

உம்ராவிற்குச் செல்பவர் தடுக்கப்பட்டால்…?

1806 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக மக்காவிற்குப் புறப்பட்டார்கள். நான் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட போது) செய்தது போன்று செய்வேன்! என்று கூறிவிட்டு உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியதே இதற்குக் காரணமாகும்.

1807,1808 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு ஸுபைர் (ரலி) அவர்களை (ஹஜ்ஜாஜின்) ராணுவம் முற்றுகையிட்டிருந்த நாட்களில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய புதல்வர்களான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ், சாலிம் பின் அப்தில்லாஹ் ஆகிய இருவரும், நீங்கள் இவ்வாண்டு ஹஜ்ஜு செய்யாதிருப்பது உங்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்காது; நீங்கள் கஅபாவிற்குச் செல்வதிலிருந்து தடுக்கப்படுவீர்கள் என்று நாங்கள் அஞ்சுகிறோம்! என்றனர். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்; குறைஷிக் காபிர்கள் கஅபாவுக்குச் செல்லவிடாமல் (நபி ளஸல்ன அவர்களைத்) தடுத்தனர். நபி (ஸல்) தமது குர்பானிப் பிராணியை அறுத்து(பலியிட்டு விட்டு)த் தமது தலைமுடியை மழித்தார்கள்; நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன். அல்லாஹ் நாடினால் நான் புறப்பட்டுச் செல்வேன்; கஅபாவிற்குச் செல்ல வழி விடப்பட்டால் தவாஃப் செய்வேன்! அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டுவிட்டால் நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்த போது அவர்கள் செய்ததுபோன்று நானும் செய்வேன்! என்றார்கள். பிறகு, துல்ஹுலைஃபா எனும் இடத்தில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள்., பிறகு, சிறிதுநேரம் நடந்துவிட்டு, ஹஜ், உம்ரா இரண்டும் ஒரே மாதிரியானவையே! நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என் மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன்! என்றார்கள். துல்ஹஜ் மாதத்தின் பத்தாம் நாள் வந்து, பலியிடும்வரை இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபடவில்லை. மக்காவில் நுழையும் தினத்தில் (ஹஜ், உம்ராவிற்காக) ஒரேயொரு தவாஃப் செய்யும்வரை இஹ்ராமிலிருந்து (முழுமையாக) விடுபட முடியாது! என்றும் கூறிவந்தார்கள்.

 நீங்கள் இங்கேயே தங்கிவிடலாமே!’ என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர் (மேற்கண்ட சம்பவத்தின்போது) கூறினார்! என்று மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

1809 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (கஅபாவிற்குச் செல்லவிடாமல்) தடுக்கப்பட்ட போது தம் தலையை மழித்துக் கொண்டு, தம் துணைவியருடன் தாம்பத்தியஉறவு கொண்டு, தமது பலிப் பிராணியையும் அறுத்து பலியிட்டார்கள்; மறுவருடம் உம்ரா செய்தார்கள்.

பாடம் : 2

ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்படுதல்.

1810 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறை உங்களுக்குப் போதாதா? உங்களில் ஒருவர் ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்பட்டால். அவர் (சாத்தியப்பட்டால்) கஅபாவை தவாஃப் செய்து, ஸஃபா-மர்வாவுக்கிடையே சஈ’ செய்து, இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்! மறுவருடம் ஹஜ் செய்து பலியிடட்டும்! பலிப்பிராணி கிடைக்காவிட்டால் நோன்பு நோற்கட்டும்!

பாடம் : 3

(ஹஜ் அல்லது உம்ரா செய்வதிலிருந்து) தடுக்கப்படும் போது, தலையை மழித்துக்கொள்வதற்கு முன் (பலிப் பிராணியை) அறுத்து பலியிடுதல்.

1811 மிஸ்வர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உம்ராவிலிருந்து தடுக்கப்பட்ட போது) தலையை மழித்துக்கொள்வதற்கு முன் (பலிப்பிராணியை) அறுத்து பலியிட்டார்கள்; அவ்வாறே செய்யும்படி தம் தோழர்களுக்கும் கட்டளையிட்டார்கள்.

1812 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் சாலிம், அப்துல்லாஹ் ஆகியோர் (குழப்பமான சூழ்நிலையில் ஹஜ்ஜுக்குச் செல்வது குறித்து) ஆட்சேபனை செய்த போது இப்னு உமர் (ரலி) அவர்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் உம்ரா செய்வதற்காகப் புறப்பட்டோம்; குறைஷிக் காபிர்கள் கஅபாவிற்குச் செல்லவிடாமல் தடுத்து விட்டார்கள்; ஆகவே, நபி (ஸல்) அவாகள் தமது ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து) விட்டுத் தம் தலையை மழித்துக் கொண்டார்கள்! (இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்!) என்று கூறினார்கள்.

பாடம் : 4

(கஅபாவிற்குச் செல்ல முடியாதபடி) ஹஜ்ஜிலிருந்து தடுக்கப்பட்டவர் மீண்டும் (ஹஜ்) செய்ய வேண்டியதில்லை.

யார் (தாம்பத்திய) இன்பத்தை நாடித் தமது ஹஜ்ஜை முறித்துக்கொள்கிறாரோ அவர் மீது தான் மீண்டும் (அதை) நிறைவேற்றும் கடமை உள்ளது! தக்க காரணமோ (நோய், எதிரிகளின் முற்றுகை போன்ற) வேறு ஏதுமோ ஒருவரைத் தடுத்திருந்தால் அவர் இஹ்ராமிலிருந்து விடுவார்; அவர் திரும்ப (ஹஜ்) செய்ய வேண்டியதில்லை. தடுக்கப்படும் போது அவரிடம் பலிப்பிராணி இருந்தால், அதை பலியிடும் இடத்திற்கு (மினாவுக்கு) அனுப்ப இயலாவிட்டால், தடுக்கப்பட்ட இடத்திலேயே அதை அறுத்து பலியிடுவார். அனுப்ப இயலுமானால் பலிப்பிராணி அதற்குரிய இடத்தை (மினாவை) அடையும்வரை அவர் இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடாது! என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

தடுக்கப்படுபவர் தமது பலிப் பிராணியை அறுத்து பலியிட்டுவிடுவார். எந்த இடத்திலிருந்தாலும் தலையை மழித்துக்கொள்வார்; (தடுக்கப்பட்ட ஹஜ்ஜை அல்லது உம்ராவை) அவர் திரும்ப நிறைவேற்ற வேண்டியதில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹுதைபிய்யாவில் உம்ராவிலிருந்து தடுக்கப்பட்ட போது அவர்கள் அறுத்து பலியிட்டார்கள்; தலை மழித்துக் கொண்டார்கள்; தவாஃப் செய்வதற்கு முன்பும் பலிப்பிராணி கஅபாவை அடைவதற்கு முன்பும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் எதையும் (களாவாக) திரும்பச் செய்யுமாறு எவருக்கும் கட்டளையிட்டதாகக் கூறப்பட வில்லை. மேலும் ஹுதைபியா எனும் இடம் ஹரம்-புனித எல்லைக்கு வெளியே உள்ளதாகும்’ என மாலிக் (ரஹ்) அவர்களும் மற்றும் சிலரும் குறிப்பிடுகிறார்கள்.

1813 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குழப்பமான காலத்தில் உம்ரா செய்வதற்காக இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் புறப்பட்ட போது, கஅபாவுக்குச் செல்லவிடாமல் நான் தடுக்கப்பட்டால் நபி (ஸல்) அவர்களுடன் சென்ற போது நாங்கள் செய்தது போன்று செய்துகொள்வோம்! என்றார்கள். ஹுதைபியா ஆண்டின் போது (ஹிஜ்ரி6ல்), நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டிய காரணத்தால் இ,ப்னு உமர் (ரலி) அவர்களும் உம்ராவிற்கு இஹ்ராம் கட்டினார்கள். பின்னர் சிந்தித்துப் பார்த்துவிட்டு, ஹஜ், உம்ரா இரண்டு ஒரே மாதிரியானவைதாம்! என்று கூறினார்கள். பின்னர் தம் தோழர்களை நோக்கி, இவ்விரண்டும் ஒரே மாதிரியானவையே! எனவே, உம்ராவுடன் ஹஜ்ஜையும் (நிறைவேற்றுவதை என்மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சியாக்குகிறேன்! என்றார்கள். பிறகு, இவ்விரண்டிற்கும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும்) சேர்த்து ஒரே தவாஃப் செய்தார்கள். அதுவே (இரண்டிற்கும்) போதுமானது எனக் கருதினார்கள்; (பலிப் பிராணியை) பலியிடவும் செய்தார்கள்.

பாடம் : 5

உங்களில் யாரேனும் நோயாளிகளாக இருந்தால் அல்லது அவரது தலையில் துன்பம்தரும் (பேன்,பொடுகு, அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால், இஹ்ராம் கட்டிய நிலையிலேயே அவர் தன் தலையை மழித்துக்கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக அவர் நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்க வேண்டும்! எனும் (2: 196ஆவது) இறைவசனம்.

(இம்மூன்றில் எதைச் செய்வதற்கும்) அவர்களுக்கு சலுகை உண்டு. நோன்பு நோற்பது என்றால் மூன்று நாட்கள் நோற்க வேண்டும்.

1814 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். நபி (ஸல்) அவர்கள் உமது தலையை மழித்துக் கொண்டு மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவு அளிப்பீராக! அல்லது ஓர் ஆட்டை பலியிடுவீராக! என்றார்கள்.

பாடம் : 6

அல்லது தர்மம் செய்ய வேண்டும் எனும் (2:196ஆவது) வசனத் தொடர்.

தர்மம்’ என்று இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பதைத்தான்.

1815 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபியாவில் என்னருகில் நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். என் தலையிலிருந்து பேன்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா? என்று கேட்டார்கள். நான் ஆம்! என்றேன். அதற்கு உம் தலையை மழித்துக் கொள்ளும்! என்றார்கள். என் விஷயமாகத்தான் (2:196ஆவது) இறைவசனம் அருளப்பெற்றதுது;அப்போது நபி (ஸல்) அவர்கள், மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது மூன்று ஸாஉ தானியத்தை ஆறு ஏழைகளுக்கு தர்மம் செய்வீராக! அல்லது உம்மால் முடிந்ததை பலியிடுவீராக!என்று கூறினார்கள்.

பாடம் : 7

(இஹ்ராம் கட்டிய நிலையில் ஏற்படும் குற்றங் குறைகளுக்குரிய) பரிகாரமாக ஒரு ஏழைக்கு வழங்கும் உணவின் அளவு அரை ஸாஉ ஆகும்.

1816 அப்துல்லாஹ் பின் மஅகல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன்; (ஹஜ்ஜில் ஏற்படும் குறைகளுக்குப்) பரிகாரம் பற்றி அவர்களிடம் கேட்டேன்; அதற்கு அவர்கள், என் விஷயமாகத்தான் (2:196ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது; என்றாலும், அது உங்கள் அனைவருக்கும் பொதுவானதே! பேன்கள் என் முகத்தில் உதிர்ந்து கொண்டிருக்க, நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டேன்; நபி (ஸல்) அவர்கள், உமக்கு இவ்வளவு அதிகமாக வேதனை ஏற்பட்டிருக்கும் என்று நான் நினைக்கவில்லை! உம்மிடம் ஒரு ஆடு இருக்கிறதா?’ என்று கேட்டார்கள்; நான் இல்லை!’ என்றேன்;நபி(ஸல்) அவாக்ள (தலையை மழித்துக் கொண்டு) மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! அல்லது ஒவ்வொரு ஏழைக்கும் அரை ஸாஉ வீதம் ஆறு ஏழைகளுக்கு உணவளிப்பீராக!’ என்று கூறினார்கள்என்றார்கள்.

பாடம் : 8

(2:196 ஆவது வசனத்தில்) நுஸுக் என்று கூறப்படுவது ஆட்டை பலியிடுவது தான் .

1817,1818 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண்டிருந்த போது என்னை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். உமது (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா? என்று கேட்டார்கள். நான் ஆம்!என்றேன். அப்போது ஹுதைபியாவிலிருந்து நபி(ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்போது இறைவன் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட வசனத்தை அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் மூன்று ஸாஉ தானியத்தை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்; அல்லது ஒரு ஆட்டை பலியிட வேண்டும்; அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்! என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.

பாடம் : 9

ஹஜ்ஜின் போது உடலுறவு கூடாது எனும் (2:197ஆவது) வசனத் தொடர்.

1819 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனைவியுடன் தாம்பத்தியஉறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல், யார் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 10

கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது எனும் (2: 197ஆவது) வசனத் தொடர்.

1820 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல் யார் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.