26 – உம்ரா

அத்தியாயம்: 26 – உம்ரா

பாடம் : 1

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

உம்ராவின் அவசியமும் அதன் சிறப்பும்.

(வசதிவாய்ப்புடைய) அனைவர்மீதும் ஹஜ்ஜும் உம்ராவும் கடமையாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ் குர்ஆனில், அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் பூரணமாக நிறைவேற்றுங்கள்(2:196) என்று ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்தே கூறுகிறான் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

1773 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். பாவம்கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 2

ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ராச் செய்தல்.

1774 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இக்ரிமா பின் காலித் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார். அதற்கு குற்றமில்லை’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன் உம்ராச் செய்தார்கள்’ என்று இப்னு உமர்(ரலி) கூறியதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 3

நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள் எத்தனை?

1775 ,1776 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களும் மஸ்ஜிது(ந் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் மஸ்ஜிதில் ளுஹா தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களிடம் மக்களின் இந்தத் தொழுகையைப் பற்றிக் கேட்டோம். அதற்கவர்கள் இது பித்அத்!(மார்க்க அடிப்படையற்ற நவீன அனுஷ்டானம்) என்றார்கள்! (காரணம் இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் ளுஹா தொழுததைப் பார்த்ததில்லை.) பிறகு நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்? என உர்வா (ரஹ்) கேட்டார்கள். அதற்கு இப்னு உமர் (ரஹ்) அவர்கள் நான்கு; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள்! என்றார்கள்.

நாங்கள் அவர்களுடைய இக்கூற்றை மறுக்க விரும்பவில்லை.

இதற்கிடையே, அறையில் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பல்துலக்கும் சப்தத்தைக் கேட்டோம். அப்போது உர்வா (ரஹ்), அன்னையே! மூமின்களின் தாயே! அபூ அப்திர்ரஹ்மான் (இப்னு உமர்-ரலி) அவர்கள் கூறுவதைச் செவியேற்றீர்களா?’ எனக் கேட்டார். அவர் என்ன கூறுகிறார்? என ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டதும், நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்துள்ளார்கள்; அவற்றில் ஒன்று, ரஜப் மாதத்தில் நடந்தது; என்று கூறுகிறார்! என்றார். ஆயிஷா (ரலி) அவர்கள், அபூ அப்திர்ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்யும்போதெல்லாம் அவர்களுடன் அவரும் இருந்திருக்கின்றார்; (மறந்துவிட்டார் போலும்!) நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை! எனக் கூறினார்கள்.

1777 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் (நபி ளஸல்ன அவர்களின் உம்ரா பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்யவில்லை! என்றார்கள்.

1778 கத்தாதா (ரஹ்) கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்)அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள்? என கேட்டதற்கு அவர், நான்கு (உம்ராக்கள் செய்துள்ளார்கள்); அவை: ஹுதைபிய்யா எனுமிடத்தில் துல்கஅதா மாதத்தில், இணைவைப்போர் தடுத்த போது செய்யச் சென்றது; இணைவைப்போருடன் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தப்படி, அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்தது; அடுத்து ஜிஇர்ரானா’ என்ற இடத்திலிருந்து ஒரு போரின் — அது ஹுனைன் போர் என்று கருதுகிறேன் -போர்படைக் கலன்களை பங்கிட்ட போது செய்தது; (நபி (ஸல்) அவர்களுடைய ஹஜ்ஜில் அடங்கியிருந்த உம்ராவையும் சேர்த்து நான்கு உம்ராக்கள்!) பிறகு எத்தனை ஹஜ் செய்திருக்கிறார்கள்? என்று நான் கேட்டதற்கு, ஒரு ஹஜ்தான்! என்றார்கள்.

1779 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபியாவில் அவர்களைத்) தடுத்து விட்ட போது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள்; பிறகு, அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபியாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்தார்கள்; அடுத்து,ஹஜ்ஜுடன் ஒரு உம்ரா செய்தார்கள்.

1780 ஹம்மாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்களையும் துல்கஅதா மாதத்திலேயே செய்தார்கள்; ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர! அவை, ஹுதைபியா (எனுமிடத்தில் அவர்கள் தடுக்கப்பட்ட போது) செய்யச் சென்ற உம்ராவும், அதற்கடுத்த ஆண்டின் உம்ராவும், ஹுனைன் போரில் கிடைத்த படைக்கலன்களைப் பங்கிட்ட இடமான ஜிஇர்ரானா’விலிருந்து செய்த உம்ராவும், ஹஜ்ஜுடன் செய்த உம்ராவும் ஆகும்.

1781 அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஸ்ரூக், அதாஉ, முஜாஹித் (ரஹ்) ஆகிய மூவரிடமும் (நபி ளஸல்ன அவர்கள் செய்த உம்ராவைப் பற்றி) நான் கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும், நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்னர் துல்கஅதாவில் உம்ரா செய்துள்ளார்கள்! என்று கூறினர்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்கு முன்பு துல்கஅதாவில் (வெவ்வேறு ஆண்டுகளில்) இரண்டு முறை உம்ரா செய்துள்ளார்கள்! என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

பாடம் : 4

ரமளானில் உம்ரா செய்தல்.

1782 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிப் பெண்களில் ஒருவரிடம் -இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; நான் அதை மறந்துவிட்டேன்! என அவரிடமிருந்து அறிவிக்கும் அதாஉ (ரஹ்) கூறுகிறார்- நீ ஏன் எங்களுடன் ஹஜ் செய்யவில்லை? எனக் கேட்டார்கள். அதற்கவர், எங்களிடம் இருந்த, தண்ணீர் கொண்டு வருவதற்கான ஓர் ஒட்டகத்தில் இன்னாரின் தந்தையும் அவருடைய மகனும் (எனது கணவரும் மகனும்) ஏறிச் சென்றுவிட்டனர்; மற்றொரு ஒட்டகத்தை விட்டுச்சென்றுள்ளனர்; அதன் மூலம் நாங்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கிறோம்!என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ரமளான் வந்துவிட்டால் அதில் நீ உம்ரா செய்வாயாக! ஏனெனில், ரமளானில் உம்ரா செய்வது ஹஜ்ஜாகும்! எனக் கூறினார்கள்; அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்.

பாடம் : 5

முஹஸ்ஸபில் தங்கும் இரவிலும் மற்ற நேரங்களிலும் உம்ரா செய்தல்.

1783 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (துல்கஅதாவைப் பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ்ஜின் பிறையை எதிர்நோக்கியவர்களாக, நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் யார் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட விரும்புகிறார்களோ அவர்கள் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்; யார் உம்ராச் செய்ய விரும்புகிறார்களோ அவர்கள் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். நான் மட்டும் குர்பானிப்பிராணியைக் கொண்டு வரவில்லையானால் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருப்பேன் எனக் கூறினார்கள். எனவே எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர். மற்ற சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினர்; நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்களுள் ஒருத்தியாவேன். அரஃபா நாள் நெருங்கியதும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். நபி (ஸல்) அவர்கள், உனது உம்ராவை விட்டுவிட்டு உனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு, வாரிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொள் என்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் முஹஸ்ஸபில் தங்குவதற்கான இரவு வந்த போது என்னுடன் அப்துர் ரஹ்மானை அனுப்பித் தன்யீம் என்ற இடத்திற்குப் போகச் சொன்னார்கள். நான் எனது விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக மற்றொரு உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொண்டேன்.

பாடம் : 6

உம்ராவுக்காக தன்யீமில் இஹ்ராம் அணிதல்.

1784 அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று தன்யீம் எனுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்.

1785 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்லை. யமனிலிருந்து அலீ (ரலி) அவர்கள் குர்பானிப்பிராணியுடன் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே நானும் கட்டினேன்! என அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குர்பானிப்பிராணி கொண்டுவராதவர்களிடம், இதை (ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறும் தவாஃப் செய்து, தலைமுடியைக் குறைத்து, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள்.

(மக்கள் சிலர்) நம் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் (மனைவியுடன் தாம்பத்தியஉறவு கொண்ட பின் உடனடியாக) நாம் மினாவுக்குச் செல்வதா? என்று பேசிக் கொண் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அவர்கள் (ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் இப்போது அறிந்து கொண்டதை முன் கூட்டியே அறிந்திருந்தால் நான் குர்பானிப் பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன்; நான் குர்பானிப் பிராணி மட்டும் கொண்டு வந்திருக்கவில்லையாயின் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்! என கூறினார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார்கள்; மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை தவாஃப் செய்தார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிவிட்டுச் செல்ல, நீங்கள் (எல்லாரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்களா? என (ஏக்கத்துடன்) கூறியதும், நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை,ஆயிஷா (ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் கட்டுவதற்காக) தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த பின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஐம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருந்த போது அவர்களைச் சந்தித்த சுராக்கா பின் மாலிக் பின் ஜுஉஷும் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது) உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா? எனக் கேட்டார். அதற்கவர்கள், இல்லை! இது எப்போதைக்கும் உரியதே! என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 7

ஹஜ்ஜுக்குப் பின், குர்பானி கொடுக்காமல் உம்ரா செய்தல்.

1786 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதில் நோக்கியவர்களாக, நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் யார் உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ, அவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்; யார் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ அவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்! நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டியிருப்பேன்!என்றார்கள், சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்களுள் ஒருத்தியாக இருந்தேன். மக்காவில் நுழைவதற்கு முன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாயுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். நபி (ஸல்) அவர்களிடம் (இதுபற்றி) நான் முறையிட்ட போது, உனது உம்ராவை விட்டுவிட்டு, தலையை அவிழ்த்து, வாரிக்கொள்! மேலும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்! என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்த போது,என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை தன்யீம் வரை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர் ரஹ்மான் தமது ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றிக் கொண்டார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக, மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் அணிந்தேன்.

அல்லாஹ், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான் என்று அறிவிப்பாளர் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்காக, ஆயிஷா (ரலி) அவர்கள் குர்பானியோ, தர்மமோ, நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை!என்று மற்றோர் அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 8

உம்ரா செய்யும் போது ஏற்படும் சிரமத்திற்குத் தக்கவாறு நற்பலனுண்டு.

1787 அஸ்வத் (ரஹ்), காசிம் பின் முஹம்மத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவாகள் நபி (ஸல்) அவர்களிடம், மக்கள் எல்லாரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரண்டு வழிபாடுகளுடன் திரும்புகின்றனர்; நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு வழிபாட்டுடன் திரும்பிகிறேனே? என்று கேட்டார்கள். அவர்களிடம், நீ சற்றுக் காத்திருந்து, (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் தன்யீமுக்குச் சென்று (உம்ராவுக்காக) இஹ்ராம் அணிந்துகொள்! பிறகு எங்களை இன்ன இடத்தில் வந்து சந்தித்துக்கொள்! ஆனால், உம்ராவுக்கான நற்பலன் உனது சிரமத்திற்கோ, பொருட் செலவுக்கோ தக்கவாறுதான் கிடைக்கும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 9

(ஹஜ்ஜுக்குப் பிறகு) உம்ரா செய்பவர், உம்ராவுக்கான தவாஃபைச் செய்துவிட்டு (மக்காவிலிருந்து) வெளியேறிவிட்டால் அவர் கடைசி தவாஃப் செய்ய வேண்டியதில்லையா? (உம்ராவுக்கான தவாஃபே அதற்குப் பகரமாகிவிடுமா?)

1788 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹஜ்ஜின் மாதங்களில், ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, ஹஜ்ஜுக்குரிய கட்டுப்பாடுகளுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு, சரிஃப்’ எனும் இடத்திற்கு வந்து தங்கினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், யார் குர்பானிப்பிராணி கொண்டு வராமல் ஹஜ்ஜை உம்ராவாகச் செய்ய விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்துகொள்ளட்டும்! யாரிடம் குர்பானிப்பிராணி உள்ளதோ அவர் அவ்வாறு செய்ய வேண்டாம்! எனக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களுடைய தோழர்களில் ஓரளவு வசதி படைத்தவர்களிடமும் குர்பானிப் பிராணிகள் இருந்தன. எனவே, அவர்கள் உம்ராவுக்கெனத் தனியாக (தவாஃப்) செய்யவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்த போது நான் அழுது கொண்டிருந்தேன். அவர்கள் ஏன் அழுகிறாய்? எனக் கேட்டார்கள். நீங்கள் உங்கள் தோழர்களிடம் கூறியதை நான் செவியுற்றேன்; ஆனால், நான் உம்ரா செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுவிட்டேன்! என்றேன். அதற்கவர்கள் என்ன காரணம்? எனக் கேட்டதும், நான் தொழக்கூடாத நிலைமைக்கு ஆளாகிவிட்டேன்! (எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது!) என்றேன். அவர்கள், உனக்கொன்றுமில்லை! நீ ஆதமின் பெண்மக்களில் ஒருத்தியே! அப்பெண்மக்களுக்கு விதிக்கப்பட்டது தான்  உனக்கும் விதிக்கப்பட்டுள்ளது! எனவே, நீ ஹஜ் செய்பவளாகவே இரு! அல்லாஹ் உனக்கு (உம்ரா செய்யவும்) வாய்ப்பளிக்கக் கூடும்!என்றார்கள்.

நாங்கள் ஹஜ்ஜை முடித்துவிட்டு மினாவிலிருந்து புறப்படும்வரை நான் அப்படியே (மாதவிடாயுடன்) இருந்தேன். பிறகு முஹஸ்ஸப் வந்து தங்கிய போது நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்துகொள்ளட்டும்! பிறகு நீங்களிருவரும் தவாஃபை முடித்துக்கொள்ளுங்கள்! உங்களுக்காக நான் இந்த இடத்தில் காத்திருப்பேன்! என்றார்கள். நாங்கள் தவாஃபை முடித்து நடுநிசியில் வந்த போது (தவாஃபை) முடித்துவிட்டீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ஆம்! என்றேன் நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் புறப்படுமாறு அறிவித்தார்கள். மக்களும், சுப்ஹுக்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்தவர்களும் புறப்படத் தயாரானதும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள்.

பாடம் : 10

ஹஜ்ஜுக்கான கிரியைகளே உம்ராவிலும் நிறைவேற்றப்படும்.

1789 யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருக்கும் போது வாசனை திரவியத்தின் அடையாளமோ அல்லது மஞ்சள் நிறமோ இருந்த சட்டை அணிந்திருந்த ஒருவர் அவர்களிடம் வந்து,உம்ராவில் நான் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?’ எனக் கேட்டார். அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவித்தான். எனவே நபி (ஸல்) அவர்கள் போர்வையால் மூடப்பட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன். உமர்(ரலி), நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அருளும் போது அவர்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாயா?’ எனக் கேட்டார். நான் ஆம்’ என்றேன். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள்) மூடப்பட்டிருந்த ஆடையின் ஒரு புறத்தை நீக்கியதும் நான் நபி (ஸல்) அவர்களை உற்று நோக்கினேன். அப்போது ஒட்டகத்தின் குறட்டை போன்ற சப்தம் அவர்களிடமிருந்து வந்ததாக நான் எண்ணுகின்றேன். பிறகு (வஹீயின்) அந்நிலை அவர்களை விட்டு நீங்கி விட்டபொழுது,அவர்கள், உம்ராவைப் பற்றிக் கேள்வி கேட்டவர் எங்கே? எனக் கேட்டுவிட்டு (அவரிடம்), உமது இச்சட்டையைக் கழற்றி வாசனைதிரவியத்தின் அடையாளத்தைக் கழுவிவிட்டு, மஞ்சள் நிறத்தையும் அகற்றிவிடும்! மேலும் நீர் ஹஜ்ஜில் செய்வதைப் போன்று உம்ராவிலும் செய்வீராக! எனக் கூறினார்கள்.

1790 உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சிறு வயதுடையவனாக இருந்த போது நபி (ஸல்) அவர்களின் துணைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம், நிச்சயமாக, ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும்! எனவே, எவர் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்கின்றாரோ அவர் அவ்விரண்டையும் தவாஃப் செய்வதில் எந்தக் குற்றமுமில்லை!’ (2:158) என்று அல்லாஹ் கூறுகிறான்; எனவே அவ்விரண்டிற்குமிடையே சஈ’செய்யாமலிருப்பதிலும் குற்றமில்லை என்றே நான் கருதுகிறேன்! என்று கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் அவ்வாறில்லை; நீ கருதுவது போன்றிருந்தால் அவ்விரண்டையும் தவாஃப் செய்யாமலிருப்பதில் குற்றமில்லை!’ என்று அவ்வசனம் அமைந்திருக்க வேண்டும்; மேலும், இந்த வசனம் அன்ஸாரிகள் விஷயத்தில் அருளப் பட்டதாகும். (அறியாமைக் காலத்தில்) அவர்கள் குதைத்’என்ற இடத்தில், மனாத்’ என்ற விக்கிரகத்திற்காக இஹ்ராம் அணிந்துவந்தார்கள். அதனால் (இஸ்லாத்தை ஏற்றபின்) ஸஃபா-மர்வாவுக்கிடையே சஈ’ செய்வதைக் குற்றமாகவும் கருதி செய்தனர்;எனவே, அவர்கள் இஸ்லாத்திற்கு வந்ததும் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டனர்; அப்போது அல்லாஹ், நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் இறைவனின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும்;எனவே, ஹஜ்ஜோ உம்ராவோ செய்பவர் அவ்விரண்டிற்குமிடையே சஈ’ செய்வதால் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை!’ (2:158) என்ற வசனத்தை அருளினான் எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் ஸஃபா-மர்வாவுக்கிடையே சஈ’ செய்யாதவரின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமைப்படுத்தவில்லை! என்ற (ஆயிஷா ளரலின அவர்களின்) சொல் இடம் பெற்றுள்ளது.

பாடம் : 11

உம்ரா செய்பவர் இஹ்ராமிலிருந்து விடுபடுவது எப்போது?

(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் சஈ’) செய்துவிட்டு முடியைக் குறைத்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்! என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

1791 & 1792 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதவாது:

நபி (ஸல்) அவர்கள் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அவர்கள் மக்காவில் நுழைந்ததும் தவாஃப் செய்தார்கள். நாங்களும் அவர்களுடன் தவாஃப் செய்தோம். அவர்கள் ஸஃபா-மர்வாவுக்கு வந்ததும் நாங்களும் அவர்களுடன் அங்கு வந்தோம். மேலும் மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்குத் தடுப்பாக) நின்றோம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இஸ்மாயீல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

என் நண்பர் ஒருவர் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் உள்ளே சென்றார்களா? எனக் கேட்டதற்கு அவர்கள் இல்லை! என்றார்கள். பிறகு, அவர், நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி என்ன கூறினார்கள் என்பதை எங்களுக்கு அறிவியுங்களேன்! எனக் கேட்டதற்கு, அவர்கள் கதீஜாவுக்கு நற்செய்தி கூறுங்கள்; அவருக்கு சொர்க்கத்தில் முத்தாலான ஒரு மாளிகை உள்ளது! அதில் வீண் கூச்சலோ எந்த சிரமமோ இருக்காது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.

1793,1794 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் உம்ராவில் ஒருவர் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே தவாஃப் செய்யாமலேயே தமது மனைவியிடம் (தாம்பத்தியஉறவு கொள்ள) வரலாமா? என நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வந்ததும் இறையில்லம் கஅபாவை ஏழுமுறை தவாஃப் செய்துவிட்டு, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதபின் ஸஃபா-மர்வாவுக்கிடையே ஏழுமுறை சஈ’ செய்தார்கள்;எனவே, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது! எனக் கூறினார்கள்.

நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் ஸஃபா-மர்வாவுக்கிடையே சஈ’ செய்யாமல் ஒருவர் தம் மனைவியை நெருங்கக் கூடாது! எனக் கூறினார்கள்.

1795 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பத்ஹா எனுமிடத்தில் ஒட்டகத்தை இளைப்பாற வைத்துத் தங்கியிருந்த போது நான் அவர்களை நோக்கிச் சென்றேன். அப்போது அவர்கள், ஹஜ் செய்யநாடியுள்ளீரா? எனக் கேட்டார்கள். நான் ஆம்!’ என்றதும் எதற்காக இஹ்ராம் கட்டினீர்? என்று கேட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே இஹ்ராம் கட்டியுள்ளேன்! என்று கூறினேன். அதற்கவர்கள், நல்ல காரியம் செய்தீர்’ இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு,ஸஃபா-மர்வாவுக்கிடையே சஈ’ செய்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடும்! எனக் கூறினார்கள். நான் அவ்வாறே கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே சஈ’ செய்துவிட்டு, கைஸ் கோத்திரத்தைச் சேர்ந்த (திருமணமுடிக்கத்தகாத நெருங்கிய உறவினரான) ஒரு பெண்ணிடம் வந்தேன். அவர் எனது தலையில் பேன் பார்த்தார்.

பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன். இந்த அடிப்படையிலேயே நான் உமர் (ரலி) அவர்களது ஆட்சிக்காலம் வரை மக்களுக்குத் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தேன். உமர் (ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் வேதத்தைப் பார்த்தால் அது நம்மை (ஹஜ்ஜையும் உம்ராவையும்) பூரணமாகச் செய்யுமாறு கட்டளையிடுகிறது; நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பார்த்தாலும்,குர்பானிப்பிராணி அதற்குரிய இடத்தை அடையும் வரை இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபடவில்லை எனத் தெரிகிறது! என்று கூறினார்கள்.

1796 (அஸ்மா பின்த் அபீபக்ர் ளரலினஅவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமை) அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள், (மக்காவிலுள்ள) ஹஜூன் என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! (ஒரு முறை) நாங்கள் அவர்களுடன் இங்கு வந்திறங்கினோம்; அப்போது எங்களிடம் (பயண) மூட்டை முடிச்சுகள் அதிகம் இருக்கவில்லை; மேலும் எங்களிடம் (பயண) உணவுகளும் வாகனப் பிராணிகளும் குறைவாகவே இருந்தன; அப்போது நானும், என் சகோதரி ஆயிஷா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரும்,மற்றும் இன்னாரும் இன்னாரும் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தோம்; கஅபாவை தவாஃப் செய்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டோம். பிறகு மாலை நேரத்தில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தோம்! என அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 12

ஹஜ், உம்ரா மற்றும் அறப்போர் ஆகியவற்றை முடித்துவிட்டுத் திரும்பும் போது கூற வேண்டியது.

1797 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் போரிலிருந்தோ, ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ திரும்பும் போது மேடான இடங்களில் ஏறும்போதெல்லாம் மூன்று தக்பீர்கள் கூறுவார்கள். மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை! அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை! அவனுக்கே ஆட்சியும் புகழும்! அவன் அனைத்தின் மீதும் போராற்றலுடையோன்; நாங்கள், தவ்பா செய்தவர்களாகவும்,எங்கள் இரட்சகனை வணங்கியவர்களாகவும், சஜ்தா செய்தவர்களாகவும்; அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம்! அல்லாஹ் தனது வாக்குறுதியை உண்மைப்படுத்திவிட்டான்! தன் அடியாருக்கு (முஹம்மத் ளஸல்ன அவர்களுக்கு) உதவி செய்துவிட்டான்! அவன் ஒருவனே (எதிரிகளின்) படைகளைத் தோற்கடித்துவிட்டான்!! என்று கூறுவார்கள்.

பாடம் : 13

ஹஜ்ஜுக்காக (மக்காவிற்கு) வருபவர்களை வரவேற்பதும் ஒரு பிராணியின் மீது மூவர் பயணம் செய்வதும்.

1798 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த போது அப்துல் முத்தலிப் கோத்திரத்திலுள்ள சிறுவர்கள் அவர்களை வரவேற்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் ஒருவரையும் பின்னால் ஒருவரையும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டார்கள்.

பாடம் : 14

(பயணம் முடிந்து) காலை வேளையில் வீட்டிற்கு வருதல்.

1799 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் புறப்பட்டால் ஷஜரா எனுமிடத்தில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவார்கள். மக்காவிலிருந்து திரும்பும் போது பத்னுல்வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் வந்து தொழுவார்கள்; மேலும் அங்கேயே காலை வரை தங்குவார்கள்.

பாடம் : 15

(பயணம் முடிந்து) மாலை வேளையில் வீட்டிற்கு வருதல்.

1800 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டிற்கு இரவு நேரத்தில் வர மாட்டார்கள்; காலையிலோ அல்லது மாலையிலோதான் வருவார்கள்.

பாடம் : 16

மதீனாவை அடைந்ததும் இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்லக்கூடாது.

1801 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பயணத்திலிருந்து திரும்பும் போது) இரவு நேரத்தில் வீட்டிற்குச் செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

பாடம் : 17

மதீனாவை அடைந்ததும் ஒட்டகத்தை விரைவாகச் செலுத்துதல்.

1802 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி மதீனாவின் உயரமான பாதைகளைப் பார்க்கும் போது தமது ஒட்டகத்தை விரைந்து செலுத்துவார்கள்; வாகனத்தை அன்புடன் தட்டிக் கொடுப்பார்கள்.

மற்றோர் அறிவிப்பில் உயரமான பாதைகள் என்பதற்குப் பதிலாக சுவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பாடம் : 18

(முன்) வாசல்கள் வழியாக வீடுகளுக்குச் செல்லுங்கள்! எனும் (2: 189ஆவது) இறைவசனம்.

1803 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும் போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல  மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று; மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். ஆகவே வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்! எனும் (2:189ஆவது) இறைவசனம் அன்ஸாரிகளாகிய எங்கள் விஷயத்தில் அருளப்பெற்றது.

பாடம் : 19

பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும்.

1804 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரது உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்துவிடுகிறது. எனவே ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 20

பயணி, வீட்டுக்கு விரைந்து செல்ல வேண்டியிருந்தால் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

1805 உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமை அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்கா செல்லும் வழியில் நான் அவர்களுடன் (பயணம் செய்து கொண்டு) இருந்தேன். (அவருடைய மனைவி) ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் என்பார் கடும் வேதனையில் இருக்கும் செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. உடனே, பயணத்தை விரைவு படுத்தினார்கள். அடிவானத்தின் செம்மை மறைந்த பின் (வாகனத்திலிருந்து) இறங்கி மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் விரைந்து பயணம் செய்வதாக இருந்தால் மஃக்ரிபைத் தாமதப்படுத்தி இரு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்! என்றும் குறிப்பிட்டார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.