25 – ஹஜ்

அத்தியாயம்: 25 – ஹஜ்.

பாடம் : 121

குர்பானிப் பிராணிகளின் தோல்களை தர்மம் செய்ய வேண்டும்.

1717 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி ஒட்டகங்களை பலியிடுமாறும் அவற்றின் இறைச்சி, தோல்,சேணம் ஆகிய அனைத்தையும் பங்கிடுமாறும் உரிப்பதற்குக் கூலியாக, அவற்றில் எதையும் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்.

பாடம் : 122

குர்பானிப் பிராணியின் சேணங்கள் தர்மம் செய்யப்பட வேண்டும்.

1718 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

பாடம் : 123

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) நீர் நினைவு கூரும்:

நாம் இப்றாஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்துப் பின்வருமாறு கட்டளையிட்டோம்: நீர் எனக்கு எதனையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும் அதில் ருகூஉ, சுஜூது செய்(துதொழுது)வோருக்கும் அதைத் தூய்மை செய்து வைப்பீராக! மேலும்,ஹஜ் செய்ய வரும்படி மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவான இடங்களில் இருந்தெல்லாம் வரும் மெலிந்த ஒட்டகங்களில் பயணம் செய்தும் உம்மிடம் வரட்டும்! தங்களுக்குரிய பலன்களைக் காணட்டும். குறிப்பிட்ட நாட்களில், அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்லி குர்பானி கொடுக்கட்டும்! எனவே, அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்! பின்னர் அவர்கள் (தலைமுடி மழித்து, நகம் வெட்டி, குளித்து)த் தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) புராதன ஆலயத்தை தவாஃபும் செய்யட்டும்!’

இதுவே (ஹஜ்ஜின் வழிபாட்டு முறையாகும்)! மேலும் அல்லாஹ்வினால் புனிதப்படுத்தப் பட்டவற்றுக்கு யார் கண்ணியமளிக்கிறாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் சிறந்ததாகும்! (22:26-30)

பாடம் : 124

குர்பானிப் பிராணியில் உண்ணப்பட வேண்டியவையும் தர்மம் செய்யப்பட வேண்டியவையும்.

இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டையாடிய குற்றத்திற்குப் பரிகாரமாகவோ நேர்ச்சையாகவோ குர்பானி கொடுப்பவர்கள் அவற்றின் இறைச்சியைச் சாப்பிடலாகாது; மற்ற பிராணிகளைச் சாப்பிடலாம் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஜ்ஜுத் தமத்துஉவில் (கொடுக்கப்படும் குர்பானியை) உண்ணலாம்; பிறருக்கு உண்ணக் கொடுக்கலாம் என அதாஉ (ரஹ்) கூறுகிறார்கள்.

1719 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைச் சாப்பிடமாட்டோம். பிறகு நபி(ஸல்) அவர்கள், சாப்பிடுங்கள்; சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி எங்களுக்குச் சலுகை வழங்கியதும் நாங்கள் சாப்பிட்டு, சேமித்து வைக்கலானோம்.

மதீனா வரும்வரை (சாப்பிட்டோம்)’ என்று ஜாபிர் (ரலி) கூறினாரா என அதாஉ (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர் இல்லை’ என்றார் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1720 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜை மட்டும் எண்ணத்தில் கொண்டு துல்கஅதா மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் மக்காவை நெருங்கியதும், குர்பானிப்பிராணியைக் கொண்டுவராதவர் தவாஃப் செய்துவிட்டு இஹ்ராமிலிருந்து விடுபட நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். பிறகு துல்ஹஜ் 10ஆம் நாள் மாட்டிறைச்சி எங்களுக்கு வந்தது. இது என்ன?என நான் கேட்டேன். மக்கள், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரின் சார்பாகப் பலியிட்டார்கள்’என்றனர்.

பாடம் : 125

தலைமுடியை மழிப்பதற்கு முன் குர்பானி கொடுத்தல்.

1721 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்பானிகொடுப்பதற்கு முன் தலைமுடியை மழித்துவிடுதல் மற்றும் அதுபோன்றவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! குற்றமில்லைஎன்றனர்.

1722 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், நான் கல்லெறிவதற்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டேன்’ என்றார். அதற்கு அவர்கள் குற்றமில்லை! என்றார்கள். பிறகு அவர், நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்’ என்றதும் அவர்கள் குற்றமில்லை! என்றார்கள். மேலும் அவர் நான் கல்லெறிவதற்கு முன்பாகப் குர்பானிகொடுத்துவிட்டேன்’ என்றபோதும் அவர்கள் குற்றமில்லை என்றார்கள்.

1723 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்! என்று கேட்டதும். அவர்கள் குற்றமில்லை! என்று கூறினார்கள். பிறகு அவர், நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்! என்றபோதும் அவர்கள் குற்றமில்லை! என்றே கூறினார்கள்.

1724 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருக்கும் போது நான் அங்கு வந்தேன். அப் போது அவர்கள், ஹஜ் செய்ய நாடிவிட்டீரா? எனக் கேட்க, நான் ஆம்!’ என்றேன். எதற்காக இஹ்ராம் கட்டினீர்? என அவர்கள் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக! என்றúன். உடனே அவர்கள், நல்லகாரியம் செய்தீர்! போய் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் தவாஃப் செய்யும்! என்றார்கள். பிறகு நான் கைஸ் கோத்திரத்தாரின் பெண்களில் (திருமண முடிக்கத்தகாத) நெருங்கிய உறவினர் ஒருவரிடம் வந்தேன்; அவர் எனது தலையில் பேன் பார்த்தார். பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன். இந்த அடிப்படையிலேயே உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை நான் மக்களுக்குத் தீர்ப்புக் கூறிவந்தேன்! உமர் (ரலி) அவர்களிடம் இதுபற்றி நான் கூறியதும் அவர்கள், நாம் இறைவேதத்தை எடுத்துக் கொண்டால், அதுவோ (ஹஜ் மற்றும் உம்ராவை) முழுமையாக நிறைவேற்றுமாறு நமக்குக் கட்டளையிடுகின்றது; நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை எடுத்துக் கொண்டால், நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணி பலியிடப்படும் இடத்தை அடையாதவரை இஹ்ராமிலிருந்து விடுபட்டதில்லை என்று தெரிகின்றது! எனக் கூறினார்கள்.

பாடம் : 126

இஹ்ராமின் போது தலை முடியில் களிம்பு தடவிப் படிய வைப்பதும் தலையை மழித்துக் கொள்வதும்.

1725 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்துவிட்டு மக்கள் தங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள்; ஆனால், நீங்கள் உம்ரா செய்து பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே, என்ன காரணம்? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எனது முடியைக் களிம்பு தடவிப் படிய வைத்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் மாலையும் தொங்கவிட்டுவிட்டேன்; எனவே குர்பானி கொடுக்காதவரை நான் இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடாது!என்றார்கள்.

பாடம் : 127

இஹ்ராமிலிருந்து விடுபடும் போது முடியைக் குறைத்துக்கொள்வதும், மழித்துக்கொள்வதும்.

1726,1727 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது தலையை மழித்தார்கள். அவர்கள், இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனக் கூறியதும் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்…. என்றனர். நபி (ஸல்) அவர்கள் முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!) என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பின்படி தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!என்று ஒரு தடவையோ இரண்டு தடவையோ கூறியதாக உள்ளது.

இன்னுமொரு அறிவிப்பில் நான்காவது தடவையில், முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்….எனக் கூறியதாக உள்ளது.

1728 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எனப் பிரார்த்தித்தார்கள்; உடனே, தோழர்கள் முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக! என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என்று பிரார்த்தித்த போது தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்… என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது தடவையாகவும் அதைக் கூறிய போது முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக!) என்று கூறினார்கள்.

1729 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் ஒரு கூட்டத்தாரும் தலையை மழித்துக் கொண்டனர். மற்ற சிலர் முடியைக் குறைத்துக் கொண்டனர்.

1730 முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் முடியைக் கத்தரிக்கோலால் (கத்தரித்துக்) குறைத்துள்ளேன்.

பாடம் : 128

ஹஜ்ஜுத் தமத்துஉ’ செய்பவர்கள் உம்ராவுக்கப் பின் தலைமுடியைக் குறைத்துக்கொள்ளல்.

1731 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த போது, இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து,ஸஃபா-மர்வாவுக்கிடையே சஈ’ செய்தபின், இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்றும் பிறகு தலையை மழித்துக்கொள்ளவோ, முடியைக் குறைத்துக்கொள்ளவோ வேண்டுமென்றும் தம்முடைய தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

பாடம் : 129

துல்ஹஜ் பத்தாம் நாள் தவாஃபுஸ் ஸியாரத்’ செய்தல்.

நபி (ஸல்) அவர்கள் தவாஃபுஸ் ஸியாரத்தை இரவு வரை தாமதமாக்கினார்கள் என ஆயிஷா (ரலி),இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் மினாவில் தங்கும் நாட்களில் தவாபுஸ் ஸியாரத் செய்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.

1732 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரேயொரு தவாஃப் செய்துவிட்டு மதிய ஓய்வு மேற் கொண்டார்கள். பிறகு துல்ஹஜ் பத்தாம்நாள் மினாவுக்கு வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக (இப்னு உமர் ளரலின அவர்கள் கூறியதாக) மற்றோர் அறிவிப்பில் காணப்படுகின்றது.

1733 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்த போது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்தியஉறவு கொள்ள நாடினார்கள். நான்,அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அதற்கவர்கள், அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா? எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!’ என்றதும் அப்படியாயின் புறப்படுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 130

மறதியினாலோ அறியாமையினாலோ, மாலை நேரத்தில் கல்லெறிவதும் குர்பானிகொடுப்படுதற்கு முன்பு தலையை மழிப்பதும்.

1734 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் குர்பானிகொடுப்பது, தலையை மழிப்பது, கல்லெறிவது ஆகியவற்றை முற்படுத்தியோ பிற்படுத்தியோ நிறைவேற்றுவது சம்பந்தமாக வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள்,குற்றமில்லை! எனக் கூறினார்கள்.

1735 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது துல்ஹஜ் 10ஆம் நாள் பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு, குற்றமில்லை! என்றே பதில் கூறினார்கள். ஒருவர் நான் குர்பானிகொடுப்பதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்! என்று கூறிய போது, நபி(ஸல்) அவர்கள் குற்றமில்லை! (இப்போது) குர்பானிகொடுப்பீராக! என்று கூறினார்கள். பிறகு அவர் நான் மாலை நேரமான பின்பே கல்லெறிந்தேன்! என்றதும் நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! என்றார்கள்.

பாடம் : 131

ஜம்ராவில், வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டிருக்கும் போது (மக்களுக்குத்) தீர்ப்பளித்தல்.

1736 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது (தமது வாகனத்தின் மீது) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களை) கேட்கத் தொடங்கினர். ஒருவர், நான் பலியிடுவதற்கு முன்பாக, தெரியாமல் தலையை மழித்துவிட்டேன்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! (இப்போது குர்பானிப்பிராணியை) அறுப்பீராக! என்று கூறினார்கள். பிறகு மற்றொருவர் வந்து கல்லெறிவதற்கு முன்பு தெரியாமல் அறுத்து குர்பானிகொடுத்துவிட்டேன்! எனக் கூறியதும் அவர்கள் குற்றமில்லை! இப்போது கல்லெறிவீராக! என்று கூறினார்கள். அன்றைய தினம் (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் முன்னதாகச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முன்னதாகச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் கேட்கப்பட்ட அனைத்திற்கும் நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! (விடுபட்டதைச் இப்போது) செய்வீராக! என்றே கூறினார்கள்.

1737,1738 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது நான் வந்தேன். அப்போது ஒருவர் எழுந்து, நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! என்றார். மற்றொருவர் எழுந்து,நான் இதற்கு முன் இது என நினைத்தேன்! குர்பானிகொடுப்பதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்;கல்லெறிவதற்கு முன் குர்பானிகொடுத்துவிட்டேன்! என இது போன்றவற்றைக் கூறலானார். அவ்வனைத்திற்குமே நபி (ஸல்) அவர்கள் குற்றமில்லை! (விடுபட்டதைச் செய்யுங்கள்! என்றே கூறினார்கள். அன்றைய தினம் வினவப்பட்ட எல்லாவற்றிற்குமே அவர்கள் குற்றமில்லை! (விடுபட்டதைச்) செய்யுங்கள்! என்றே கூறினார்கள்.

பாடம் : 132

மினாவில் தங்கும் நாட்களில் உரை நிகழ்த்துதல்.

1739,1740 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது மக்களே! இது எந்த நாள்? எனக் கேட்டார்கள். மக்கள் புனிதமிக்க தினம்’ என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் இது எந்த நகரம்? எனக் கேட்டதும் மக்கள் புனிதமிக்க நகரம்’ என்றனர். பிறகு அவர்கள் இது எந்த மாதம்? எனக் கேட்டதும் மக்கள் புனிதமிக்க மாதம்! என்றனர். பிறகு நபி (ஸல்) அவாகள், நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகின்றதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்! எனப் பல தடவை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்துவிட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?என்றும் கூறினார்கள்.

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(வ்விறை)வன் மீது சத்தியமாக! இது நபியவர்கள் தமது சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும்.

பின்னர் இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! எனது இறப்புக்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த நான் கேட்டேன் என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

1741 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்டார்கள். நாங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதருமே நன்கறிவர்! என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, இது (குர்பானிகொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா? என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்! என்றோம். பிறகு இது எந்த மாதம்? என அவர்கள் கேட்டதும் நாங்கள் அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்! என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு, இது துல்ஹஜ் மாதம் அல்லவா? என அவர்கள் கேட்க, நாங்கள் ஆம்! என்றோம். பிறகு இது எந்த நகரம்? எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் அல்லாஹ்வும் அவது தூதருமே நன்கறிவர்! என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு இது புனிதமிக்க நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள் ஆம்! என்றோம்.

பிறகு உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்! என்று கூறிவிட்டு, நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்துவிட்டேனா? எனக் கேட்டார்கள். மக்கள் ஆம்! என்றனர். பிறகு அவர்கள், இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்துகொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாவிட வேண்டாம்! எனக் கூறினார்கள்.

1742 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது, இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்! என்றனர். உடனே அவர்கள் இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்க மக்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்! என்றனர். உடனே அவர்கள் (இது) புனிதமிக்க நகரமாகும்! இது எந்த மாதம் என்பதை அறிவிர்களா? என்றதும் மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்! என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் (இது) புனிதமிக்க மாதமாகும்! எனக் கூறிவிட்டு, உங்களுடைய இந்த (புனித) மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போன்றே, அல்லாஹ் உங்கள் உயிர்களையும் உடைமைகளையும்,உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்! எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்குக்கிடையே நின்று கொண்டு, இது மாபெரும் ஹஜ்ஜின் தினமாகும்! எனக் கூறினார்கள்;மேலும், இறைவா! நீயே சாட்சி! என்றும் கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள். எனவே மக்களும் இது (நபி(ஸல்) அவர்கள் நம்மிடம்) விடைபெற்று (உலகை விட்டு)ச் செல்கின்ற ஹஜ்ஜாகும்! எனப் பேசிக் கொண்டனர்.

பாடம் : 133

தண்ணீர் வழங்குபவர்களும் மற்றவர்களும் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்கலாமா?

1743,1744,1745 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (ஹாஜிகளுக்கு) தண்ணீர் வழங்க வேண்டியிருப்பதால் மினாவில் தங்க வேண்டிய இரவுகளில் மக்காவில் தங்குவதற்கு அப்பாஸ் (ரலி), அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டர்கள். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

பாடம் : 134

கல்லெறிதல்.

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் முற்பகல் நேரத்தில் கல்லெறிந்தார்கள். மறு நாட்களில் சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1746 வபரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் நான் எப்போது கல்லெறிவது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் உமது தலைவர் எறியும் போது நீரும் எறியும்! என்றார்கள். நான் மீண்டும் அதே கேள்வி கேட்ட போது, நாங்கள் சூரியன் உச்சிசாயும் வரை காத்திருப்போம்; பிறகு கல்லெறிவோம்! என்றுக் கூறினார்கள்.

பாடம் : 135

பத்னுல்வாதி என்னுமிடத்திலிருந்து கல்லெறிதல்.

1747 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், பத்னுல்வாதி எனுமிடத்திலிருந்து கல்லெறிந்தார்கள். அப்போது நான், அப்துர் ரஹ்மானின் தந்தையே! மக்கள் மேற்பரப்பில் இருந்தல்லவா கல்லெறிகின்றனர்? எனக் கேட்டேன். அதற்கவர்கள், எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்கள் (கல் எறிந்த வண்ணம்) நின்றிருந்த இடம் இது தான் !எனக் கூறினார்கள்.

பாடம் : 136

(ஜம்ராக்களின் மீது கல்லெறியும் போது) ஏழு சிறுகற்களை எறிய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எறிந்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

1748 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்ததும், தமது இடப் பக்கத்தில் இறையில்லம் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்கும்படி நின்று கொண்டு, ஏழு சிறுகற்களை எறிந்தார்கள். பிறகு இவ்வாறுதான், அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்களும் எறிந்தார்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 137

ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் போது இறையில்லம் கஅபா, தமது இடப் பக்கமிருக்கும்படி நிற்பது.

1749 அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன்; அப்போது அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். அவர்கள் தமது இடது பக்கத்தில் கஅபாவும் வலப் பக்கத்தில் மினாவும் இருக்குமாறு நின்று கொண்டார்கள். பிறகு அவர்கள் இதுவே அல்பகரா அத்தியாயம் யாருக்கு அருளப்பட்டதோ அவர்கள் கல்லெறிந்த இடமாகும்! என்று கூறினார்கள்.

பாடம் : 138

ஒவ்வொரு கல்லையும் எறியும் போது தக்பீர் கூறவேண்டும்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக இப்னு உமர் (ரலி) அறிவித்துள்ளார்கள்.

1750 அஃமஷ் (ரஹ்) கூறியதாவது:

ஹஜ்ஜாஜ் சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீது ஏறி நின்று, (அல்பகரா அத்தியாயம் என்று கூறாமல்) பசுமாடு பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம் என்றும், (ஆலுஇம்ரான் அத்தியாயம் என்று கூறாமல்) இம்ரானின் சந்ததிகள் பற்றிக் கூறப்படுகின்ற அத்தியாயம் என்றும், (அந்நிஸா அத்தியாயம் என்று கூறாமல்) பெண்கள் பற்றிக் கூறப்படும் அத்தியாயம்’ என்றும் கூறியதை நான் செவியேற்றிருக்கிறேன். இதுபற்றி நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் கூறிய போது அவர்கள், இதுபற்றி அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (பின்வருமாறு) கூறியதாக குறிப்பிட்டார்கள்.

நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருக்கும் போது, இப்னுமஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் போது பத்னுல்வாதி எனும் இடத்தை அடைந்து, அதில் உள்ள மரத்திற்கு நேராக வந்ததும் அதன் குறுக்கே நின்று கொண்டு, ஏழுகற்களை (ஒவ்வொன்றாக) எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் மீதுதாணையாக! யாருக்கு அல்பகரா அத்தியாயம் அருளப்பட்டதோ அந்த நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில்தான் (கல்லெறிந்தபடி) நின்றார்கள்! என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 139

ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் வந்துவிடுவது.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக (அதாவது, நபி ளஸல் ன அவர்கள் கடைசி ஜம்ராவில் கல்லெறிந்த பின்பு அங்கு நிற்காமல் திரும்பிவிட்டதாக) இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 140

இரண்டு ஜம்ராக்களில் கல்லெறிந்த பின்பு கிப்லாவை முன்னோக்கி, சமதளமான தரையில் நிற்பது.

1751 சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆ செய்வார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய்,கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்க மாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்! எனக் கூறுவார்கள்.

பாடம் : 141

முதல் ஐம்ராவிலும் இரண்டாவது ஐம்ராவிலும் கைகளை உயர்த்துதல்.

1752 சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஐம்ராவில் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கிக் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆ செய்வார்கள். பின்பு இரண்டாவது ஜம்ராவில் அவ்வாறே கல்லெறிவார்கள். பிறகு இடப் பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய் கிப்லாவை முன்னோக்கி மிக நீண்ட நேரம் நின்று கொண்டு கைகளை உயர்த்தி துஆ செய்வார்கள். பின்பு பத்னுல் வாதி எனுமிடத்திலிருந்து, கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள். அங்கு நிற்க மாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, இவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கின்றேன்! எனக் கூறுவார்கள்.

பாடம் : 142

முதலிரண்டு ஐம்ராக்களிலும் பிரார்த்தித்தல்.

1753 ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும் போது ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு, சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறது இடப் பக்கமாக, பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதிக்கு வந்து, கிப்லாவை முன்னோக்கி நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறுகற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு அங்கிருந்து திரும்பிவிடுவார்கள். அங்கு நிற்க  மாட்டார்கள்.

சாலிம் (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இந்தச் செயலை, தம் தந்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவித்ததை நான் செவியுற்றுள்ளேன். இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்பவராக இருந்தார்கள்.

பாடம் : 143

கல்லெறிந்த பின் நறுமணம் பூசிக்கொள்வதும் தவாஃபுஸ் ஸியாரத்திற்கு முன்பு தலை மழித்துக்கொள்வதும்.

1754 காசிம் (ரஹ்) கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்ட நாடிய போதும், தவாஃபுஸ் ஸியாரத் செய்யும் முன்னர், (ஜம்ராக்களில் கல்லெறிந்துவிட்டு, தலை மழித்துக் கொண்டு) இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டிருந்த வேளையிலும், நான் அவர்களுக்கு எனது இவ்விரு கைகளால் நறுமணம் பூசியிருக்கின்றேன்! எனக் கூறித் தமது இரு கைகளையும் விரித்துக் காட்டினார்கள்.

பாடம் : 144

தவாஃபுல் வதா (விடைபெறும் தவாஃப்).

1755 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும்’ என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் வதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது).

1756 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளைத் தொழுதுவிட்டு முஹஸ்ஸப் எனும் (மக்காவுக்கும் மினாவுக்குமிடையேயுள்ள) ஓரிடத்தில் உறங்கினார்கள். பின்பு வாகனத்தில் ஏறி இறையில்லம் கஅபாவிற்குச் சென்று அதை தவாஃப் செய்தார்கள்.

பாடம் : 145

தவாஃபுஸ் ஸியாரத் செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால்…?

1757 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்துவிட்டாரா? எனக் கேட்டர்கள். அதற்கு தோழர்கள் அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்! என்று கூற, நபி (ஸல்) அவர்கள் அப்படியானால் பரவாயில்லை! (நாம் போகலாம்!) என்றார்கள்.

1758,1759 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ஒரு பெண் தவாஃப் செய்த பிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது? எனக் கேட்டனர். அதற்கவர்கள் அவள் (தவாஃபுல் வதா செய்யாமல்) போய்விட வேண்டியது தான் ! என்றார்கள். அப்போது அவர்கள், உமது சொல்லை எடுத்துக் கொண்டு, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களுடைய கூற்றை விட்டுவிட நாங்கள் தயாரில்லை! என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றால் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப் பாருங்கள்! என்றார்கள்.

அவர்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்களால் கேட்கப்பட்டவர்களில் உம்முசுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் கூறினார்கள்.

1760 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாதவிடாய் ஏற்பட்ட பெண் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டால் (மக்காவை விட்டுச்) சென்று விடுவதற்கு அவளுக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது.

1761தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண் மக்காவை விட்டுச் செல்லக்கூடாது! என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களே, நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு சலுகை வழங்கியுள்ளார்கள்! எனக் கூறினார்கள்.

1762 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தில் புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் தவாஃப் செய்தார்கள்; ஆனால் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் குர்பானிப்பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களுடைய மனைவிமார்கள், அவர்களுடைய தோழர்கள் அனைவரும் தவாஃப் செய்தார்கள். பிறகு அவர்களில் குர்பானிப்பிராணி கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டனர். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் ஹஜ்ஜின் எல்லா வழிபாடுகளையும் செய்தோம்.

நபி (ஸல்) அவர்கள் முஹஸ்ஸப் எனுமிடத்தில் தங்கியிருந்த – வீடு திரும்ப வேண்டிய- இரவில் நான், அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர, உங்களுடைய மற்ற எல்லாத் தோழர்களும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துவிட்டு (ஊர்) திரும்புகின்றனர்! என்றேன். அதற்கவர்கள், நாம் மக்காவுக்கு வந்த சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லைதானே! என்று கேட்டார்கள். நான் இல்லை! என்றேன். நபி (ஸல்) அவர்கள் நீ உன் சகோதரருடன் தன்யீம் என்ற இடத்திற்குப் போய்,உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்துகொள்! மேலும் இன்னின்ன இடங்களில் என்னைச் சந்தித்துக்கொள்!எனக் கூறினார்கள். நான் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் தன்யீம் சென்று உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தேன். அப்போது, ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள், காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! நீ எங்களை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்து விட்டாய்! தவாஃப் செய்துவிட்டாயல்லவா? எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம்! என்றதும், அப்படியாயின் பரவாயில்லை; புறப்படு! என்றார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவாசிகளுடன் மேலே ஏறும் போது அவர்களை நான் சந்தித்தேன்;அப்போது நான் கீழே இறங்கிக் கொண்டிருந்தேன். அல்லது, நான் மேலே ஏறிக் கொண்டிருந்தேன்;அவர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

பாடம் : 146

மக்காவிலிருந்து புறப்படும் நாளில் அப்தஹ்’ எனுமிடத்தில் அஸ்ர் தொழல்.

1763 அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) கூறியதாவது:

நான் அனஸ்(ரலி) அவர்களிடம்,நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் 8ஆம் நாள் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?’ என கேட்டேன். அதற்கு அவர்கள் மினாவில்! என்று பதிலளித்தார்கள். அடுத்து நான், (மக்காவிலிருந்து) புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்கே அஸ்ர் தொழுதார்கள்? என்று கேட்டதற்கு, அப்தஹில்! என்று கூறிவிட்டு, உன்னுடைய தலைவர்கள் செய்வது போன்று நீயும் செய்துகொள்! என்று கூறினார்கள்.

1764 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளை நிறைவேற்றியதும் முஹஸ்ஸப் எனுமிடத்தில் சற்று உறங்கிவிட்டு, பிறகு வாகனத்தில் ஏறி,இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.

பாடம் : 147

முஹஸ்ஸபில் தங்குதல்.

1765 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல;) பயணம் எளிதாவதற்காக நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே முஹஸ்ஸப் ஆகும்.

1766 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல; அது நபி (ஸல்) அவர்கள் தங்கிய ஓரிடம்; அவ்வளவுதான்!

பாடம் : 148

மக்காவிற்குள் நுழைவதற்கு முன் தூத்துவாவில் தங்குவதும், மக்காவைவிட்டுத் திரும்பும் போது துல்ஹுலைஃபாவிலுள்ள பத்ஹாவில் தங்குவதும்.

1767 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தூத்துவாவிலுள்ள இரண்டு கணவாய்களுக்கிடையே இரவில் தங்குவார்கள். பிறகு மக்காவின் மேற்பகுதியிலுள்ள கணவாய் வழியாக மக்காவிற்குள் நுழைவார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக்காகவோ மக்காவிற்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் வாசலருகேதான் ஒட்டகத்தைப் படுக்கவைப்பார்கள். பிறகு, மஸ்ஜிதில் நுழைந்து, ஹஜருல் அஸ்வதுக்கு வந்து, அங்கிருந்து தவாஃபை ஆரம்பிப்பார்கள். அந்த ஏழு சுற்றுக்களில் மூன்றில் ஓடியும் நான்கில் நடந்தும் தவாஃப் செய்வார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு, தமது கூடாரத்திற்குத் திரும்புவதற்கு முன்பாக ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடுவார்கள்.

மேலும், அவர்கள் ஹஜ்ஜையோ உம்ராவையோ முடித்துவிட்டு (மதீனாவுக்குத்) திரும்பும் போது, நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தை உட்கார வைத்துத் தங்கிய, துல்ஹுலைஃபாவிலுள்ள பத்ஹா என்னுமிடத்தில் வாகனத்தை உட்கார வைத்துத் தங்குவார்கள்.

1768 காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் முஹஸ்ஸப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நபி (ஸல்)அவர்கள், உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்! என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக எங்களிடம் கூறினார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், முஹஸ்ஸபில் லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுவது வழக்கம்! என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

 மஃக்ரிப் தொழுகைகயையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவார்கள்’ என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்று நான் நினைக்கின்றேன் எனவும் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இஷாவையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுதார்கள் (என நாஃபிஉ ளரஹ்ன,உபைதுல்லாஹ் ளரஹ்ன அவர்களிடம் கூறினார்கள்) என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

(இஷாவைத் தொழுத) பிறகு, இப்னு உமர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் (அங்கேயே) உறங்கி விடுவார்கள்; பிறகு, நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள் எனவும் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

பாடம் : 149

மக்காவிலிருந்து திரும்பும் போது தூத்துவாவில் தங்குதல்.

1769 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்கு) வரும் போது தூத்துவாவில் இரவு தங்குவார்கள். விடிந்ததும் (மக்காவுக்குள்) பிரவேசிப்பார்கள். (மக்காவிலிருந்து) திரும்பும் போதும் தூத்துவாவில் விடியும்வரை தங்குவார்கள். மேலும், இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள்’ என்றும் கூறுவார்கள்.

பாடம் : 150

ஹஜ்ஜுக் காலத்தில் வியாபாரம் செய்தலும் அறியாமைக்கால கடைத் தெருக்களில் வாங்குதலும்.

1770 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். இஸ்லாம் தோன்றியதும் மக்கள் அவ்வியாபாரத்தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது (ஹஜ்ஜின்போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது என்ற 2:198ஆவது வசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது.

பாடம் : 151

முஹஸ்ஸபிலிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல்.

1771 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் நான் உங்களை (புறப்படவிடாமல்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! என்று கூறிவிட்டு இவர் நஹ்ருடைய (10ஆம்) நாளில் தவாஃப் செய்துவிட்டாரா? எனக் கேட்டார்கள். அதற்கு ஆம்’ எனச் சொல்லப்பட்டதும் அப்படியாயின் புறப்படு! என்றார்கள்.

1772 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டோம். ஹஜ்ஜை மட்டுமே எண்ணத்தில் கொண்டு (மக்காவிற்கு) வந்ததும் நபி (ஸல்) அவர்கள் எங்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு கட்டளையிட்டார்கள். நாங்கள் ஊர் திரும்பும் (நஃபருடைய) நாளின் இரவில் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி)அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், காரியத்தைக் கெடுத்து விட்டாயே! என்று கூறிவிட்டு இவர் நம்மைத் தடுத்துவிட்டாரே’ என்றார்கள். பிறகு அவர்கள்,நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில், நீ தவாஃப் செய்தாயா? எனக் கேட்டதும் அவர் ஆம்’ என்றார். (அப்படியாயின்) நீ புறப்படு என்றார்கள்.

அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையேஎன்றேன். அதற்கவர்கள், தன்யீம் என்ற இடத்திற்குப்போய் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்என்றார்கள்.நான் என் சகோதரருடன் புறப்பட்டு (தன்யீமுக்கு)ச் சென்றேன். பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களை இரவின் கடைசி நேரத்தில் -போய்க் கொண்டிருக்கும் நிலையில்- சந்தித்தோம். அப்போதவர்கள் இன்னின்ன இடங்களில் நீ என்னைச் சந்திக்க வேண்டும் என்றார்கள்.

November 2, 2009, 12:17 AM

25-ஹஜ்2

25-ஹஜ்

பாடம் : 31

மாதவிடாய் ஏற்பட்டவளும் பிரசவப் போக்குள்ள பெண்ணும் இஹ்ராம் எப்படிக் கட்டுவது?

1556 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும் ஹஜ்ஜிற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றிருந்த போது உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். இன்னும் அவர் அவ்விரண்டையும் நிறைவேற்றாதவரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இதனால் கஅபாவைத் தவாஃபும், செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கன் உனது தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக்கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவை விட்டுவிடு! என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்த போது, (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். இது உனது விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (சஈ செய்து)விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பிய போது மீண்டும் ஒருமுறை கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.

ஹஜ் மற்றும் உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டியவர்கள் ஒருமுறை மட்டுமே தவாஃப் செய்தார்கள்.

பாடம் : 32

நபி (ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே நானும் இஹ்ராம் கட்டுகிறேன் என நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டுவது.

இது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

1557 அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து) அவர்கள் கட்டியிருந்த இஹ்ராமிலேயே நீடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என ஜாபிர் (ரலி) கூறினார்கள். மேலும் இது தொடர்பாக (இது உங்களுக்கு மட்டுமா அல்லது அனைவருக்கும் பொதுவானதா?’ என சுராக்கா ளரலின அவர்கள் கேட்க, எப்போதைக்கும் உரியதே! ளஅனைவருக்கும் பொதுவானதே!ன என நபி ளஸல்ன பதிலளித்த அந்த) செய்தியையும் கூறினார்கள்.

1558 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யமனிலிருந்து திரும்பிய அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினீர் (ஹஜ்ஜுடன் உம்ராவிற்கும் சேர்த்தா? உம்ராவிற்கு மட்டுமா)? என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள் நீங்கள் இஹ்ராம் கட்டியது போன்றே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்….’ என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னுடன் குர்பானிப் பிராணி இல்லையெனில் (உம்ராவை முடித்து) நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்என்றார்கள்.

இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் நீர் இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்தபின்) குர்பானி கொடும்! என்று கூறியதாகக் காணப்படுகிறது.

1559அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யமன் நாட்டின் ஒரு கூட்டத்தினரிடம் என்னை அனுப்பிவைத்தார்கள். நான் (திரும்பி)வந்த போது அவர்கள் (துல்ஹுலைஃபாவில்) பத்ஹா’ எனும் பள்ளத்தாக்கில் இருந்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம், நீங்கள் எதற்கு இஹ்ராம் கட்டினீர்கள்? (ஹஜ்- உம்ரா இரண்டிற்காகவுமா? உம்ராவிற்காக மட்டுமா?) என்று கேட்டார்கள். நான், நபி(ஸல்) அவர்களின் இஹ்ராமைப் போன்றே நான் இஹ்ராம் கட்டினேன் என்றேன். உம்மிடம் குர்பானிப் பிராணி ஏதேனும் உண்டா? என நபி (ஸல்) அவர்கள் கேட்க, நான், இல்லை என்றேன். அப்போது இறையில்லாம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரவும் ஸஃபா-மர்வா மலைக்குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஓடவும், அதன் பிறகு இஹ்ராமிலிருந்து விடுபடவும் என்னைப் பணித்தார்கள். அதன்படி நான் செய்தேன். அதற்குப் பிறகு நான் என் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் வந்தேன். அவள் எனக்கு தலைவாரிவிட்டாள்’ அல்லது எனது தலையை அவள் கழுவினாள்’.

உமர் (ரலி) அவர்கள் (பதவிக்கு) வந்த போது கூறினார்கள்:

நாம் இறைவனின் வேதத்தின்படி நடப்பதெனில், ஹஜ்ஜையும் உம்ராவையும் பூர்த்தி செய்யுங்கள்எனும் (2:196ஆவது) வசனத்தின்படி ஹஜ், உம்ரா இரண்டையும் முழுமையாக நிறைவேற்றுமாறு அது நமக்குக் கட்டளையிடுகின்றது. நாம் நபிவழியின்படி நடப்பதென்றாலும், அவர்கள் குர்பானிப் பிராணியை அறுக்கும்வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை (அது போன்றே செய்யவேண்டும்).

பாடம் : 33

ஹஜ்ஜுக்குரிய காலம் அறியப்பட்ட சில மாதங்களாகும். எனவே அவற்றில் எவரேனும் ஹஜ்ஜைத் தம் மீது கடமையாக்கிக் கொண்டால் ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, மற்றும் பாவங்களில் ஈடுபடல்,சச்சரவு செய்தல் ஆகியவை கூடாது எனும் (2:197ஆவது) இறைவசனம்.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே! தேய்ந்து வளரும்) பிறையைப் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள். நீர் கூறும்: அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும் ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் உள்ளன. (2:189)

ஷவ்வால், துல்கஅதா மற்றும் துல்ஹஜ்ஜில் முந்திய பத்து நாட்கள் ஆகியவை ஹஜ்ஜுடைய மாதங்களாகும் என இப்னு உமர் (ரலி)அவர்கள் கூறுகின்றார்கள்.

ஹஜ் செய்வதற்காக ஹஜ்ஜுடைய மாதங்களில் மட்டுமே இஹ்ராம் கட்டுவது தான்  நபி வழியாகும்என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

குராசான் அல்லது கர்மான் ஆகிய இடங்களிலிருந்து இஹ்ராம் கட்டுவதை உஸ்மான்(ரலி) அவர்கள் வெறுத்துள்ளார்கள்.

1560 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு ஹஜ் மாதத்தில், ஹஜ் நாட்களில், ஹஜ் காலத்தில் புறப்பட்டு ஸரிஃப் எனமிடத்தில் இறங்கினோம். நபி(ஸல்) அவர்கள் (தம் கூடாரத்திலிருந்து) புறப்பட்டு தம் தோழர்களிடம் வந்து, யாருடன் குர்பானிப் பிராணி இல்லையோ அவர் தம் இஹ்ராமை உம்ராவுக்காக ஆக்கிக் கொள்ள விரும்பினால் அவ்வாறே ஆக்கிக் கொள்ளட்டும்; யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் இவ்வாறு செய்ய வேண்டாம் என்றார்கள். தோழர்களில் சிலர் இதன்படி செய்தார்கள்; சிலர் இதன்படி செய்யவில்லை நபி(ஸல்) அவர்களுடனும் அவர்களோடிருந்த வசதிபடைத்த தோழர்களில் சிலருடனும் குர்பானிப் பிராணி இருந்ததால் அவர்களால் உம்ராவை மட்டும் செய்து இஹ்ராமிலிருந்து விடுபட முடியவில்லை. என்னிடம் வந்த நபி(ஸல்) அவர்கள் நான் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து, ஏன் அழுகிறாய்? எனக் கேட்டார்கள். நீங்கள் உங்கள் தோழர்களுக்குக் கூறியதைக் கேட்டேன்; நான் உம்ரா செய்ய முடியாமலாகி விட்டது என்றேன். உனக்கு என்னவாயிற்று? எனக் கேட்டார்கள். நான் தொழ முடியாத நிலையிலுள்ளேன் என்றேன். அதனால் கவலை கொள்ள வேண்டாம்; ஆதமின் பெண் மக்களில் நீயும் ஒருத்தி! எனவே இறைவன் அவர்களுக்கு விதியாக்கியதை உனக்கும் விதியாக்கியுள்ளான். நீ ஹஜ்செய் ! அல்லாஹ் உனக்கு உம்ரா செய்யும் வாய்ப்பையும் தரலாம் என்றார்கள். ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டு மினாவை வந்தடைந்த போது நான் தூய்மையானேன். பிறகு மினாவிலிருந்து சென்று தவாஃப் செய்தேன். நான் நபி(ஸல்) அவர்களோட வந்த கடைசிக் கூட்டத்தினரோடு புறப்பட்டடு முஹஸ்ஸப் எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்களுடனேயே தங்கினேன். அப்போது (எனது சகோதரர்) அப்துர் ரஹ்மானை நபி(ஸல்) அழைத்து,உமது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துச் சென்று உம்ராவிற்கு இஹ்ராம் அணிந்து இருவரும் உம்ரா செய்யுங்கள். முடிந்ததும் இதே இடத்திற்குத் திரும்பி வாருங்கள். நான் உங்கள் இருவரையும் எதிர் பார்க்கிறேன் என்றார்கள். உடனே நாங்கள் புறப்பட்டோம். தவாஃபை முடித்து ஸஹ்ருடைய நேரத்தில் வந்து சேர்ந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் (உம்ராவை) முடித்து விட்டீர்களா?’2 எனக் கேட்க ஆம்’ என்றேன். பிறகு நபி(ஸல்) தம் தோழர்கள் புறப்பட அனுமதித்தார்கள். மக்கள் அனைவரும் புறப்பட்டதும் மதீனாவை நோக்கி நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள்.

பாடம் : 34

ஹஜ்ஜுக்கு மட்டும் இஹ்ராம் கட்டுவது (இஃப்ராத்) ; ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து இஹ்ராம் கட்டுவது (கிரான்) ; உம்ராவிற்கு இஹ்ராம் கட்டி ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டுவது (தமத்துஉ);குர்பானிப்பிராணியைக் கொண்டுவராதவர் ஹஜ்ஜை (உம்ராவாக) மாற்றுதல்.

1561 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் செய்ய நாங்கள் காணவில்லை. மக்காவை வந்தடைந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தோம். அதன் பிறகு குர்பானிப் பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியரும் பிராணியைக் கொண்டு வராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். ஆனால் நான் மாதவிடாய் ஏற்பட்டு இருந்ததால் தவாஃப் செய்யவில்லை. (முஹஸ்ஸப் எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்த போது நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! மக்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்;ஆனால் நானே ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகின்றேன் என்றேன். நபி (ஸல்) அவர்கள், நாம் மக்காவை வந்தடைந்த போது நீ தவாஃப் செய்யவில்லையா? எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியானால் உனது சகோதரருடன் தன்யீம் எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு எனக் கூறினார்கள்.

ஸஃபிய்யா (ரலி) நபி(ஸல்) அவர்களிடம், நானும் உங்கள் அனைவரின் பயணத்தையும் தடுத்துவிட்டதாக உணர்கிறேன்’ என்று சொன்ன போது, நபி(ஸல்) காரியத்தைக் கெடுத்து விட்டாயே! பத்தாம் நாளில் நீ தவாஃப் செய்யவில்லையா? என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ஆம், செய்து விட்டேன்!’ என்றார். பரவாயில்லை! புறப்படு! என நபி(ஸல்) கூறினார்கள்.

அதன் பிறகு என்னை நபி(ஸல்) சந்தித்த போது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நான் இறங்கிக் கொண்டிருந்தேன் அல்லது அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்; நான் ஏறிக் கொண்டிருந்தேன்.

1562 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் விடைபெறும் ஹஜ்ஜின் போது நாங்களும் அவர்களுடன் சென்றிருந்தோம். சிலர் உம்ராவிற்கும் சிலர் ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்தும் சிலர் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள். ஹஜ்ஜுக்காகவோ அல்லது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்காகவும் சேர்த்தோ இஹ்ராம் கட்டியவர்கள் பிராணியைக் குர்பானி கொடுக்கும் (பத்தாம்) நாள் வரும்வரை இஹ்ராமிலிருந்து விடுபட வில்லை.

1563 மர்வான் பின் ஹகம் கூறியதாவது:

நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும், அலீ (ரலி) அவர்களுடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் கட்டி லப்பைக்க பி உம்ரத்தின் வ ஹஜ்ஜத்தின் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டுவிடமாட்டேன் எனக் கூறினார்கள்.

1564 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் என (அறியாமைக்கால) மக்கள் கருதினர். (துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபருக்கு மாற்றினார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து ஸஃபர் மாதமும் கடந்துவிட்டால் உம்ரா செய்ய நாடுபவருக்கு உம்ரா செய்வது கூடும் என்று கூறிவந்தனர். நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களாக மக்கா நகருக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள், மக்களின் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றும்படி கட்டடையிட்டார்கள். இது தோழர்களுக்கு மிகக் கடுமையாகத் தெரிந்தது. இதனால் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்? எனக் கேட்டனர். அதற்கு அனைத்து (விலக்கப்படாத) செயல்களும் அனுமதிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

1565 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (நான் குர்பானிப் பிராணி கொண்டு வராததால் உம்ராவை முடித்து) இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு அவர்கள் கட்டளையிட்டார்கள்.

1566 ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! உம்ரா செய்துவிட்டு மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். ஆனால் நீங்கள் உம்ரா செய்த பிறகும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே! என்ன காரணம்? என நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எனது முடியைக் களிம்பு தடவிப் படியச் செய்துவிட்டேன்; எனது குர்பானிப் பிராணியின் கழுத்தில் அடையாளம் தொங்க விட்டுவிட்டேன். எனவே குர்பானி கொடுக்கும் வரை நான் இஹ்ராமைக் களைவது கூடாதுஎன்றார்கள்.

1567 நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் தமத்துஉ (ஹஜ்ஜும் உம்ராவும் தனித்தனி இஹ்ராமுடன்) செய்தேன். என்னைச் சிலர் தடுத்தார்கள். எனவே இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் தமத்துஉ செய்யுமாறே கட்டளையிட்டார்கள். பிறகு ஒருநாள் ஒருவர் என் கனவில் தோன்றி, ஹஜ் ஏற்றுக் கொள்ளப்பட்டது; உம்ரா ஒப்புக் கொள்ளப்பட்டது’ எனக் கூறினார். நான் இதையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறிய போது (தமத்துஉவோ) நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும்’என்று கூறி, நீ என்னுடன் தங்கிக்கொள். எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உனக்குத் தருகிறேன்’எனக் கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்முடன் தங்கச் சொன்னதன் காரணம் என்ன? என்று நஸ்ர் பின் இம்ரானிடம் கேட்டேன். நான் கண்ட கனவே காரணம்’ என அவர் கூறினார் என்று ஷுஉபா கூறுகிறார்கள்.

1568 அபூஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஹஜ்ஜுடன் உம்ராவையும் (தமத்துஉ)- செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். துல்ஹஜ் பிறை எட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்னால் (அதாவது பிறை ஐந்தில்) மக்காவில் நுழைந்தோம். அப்போது மக்காவாசிகளில் சிலர் என்னிடம் வந்து இப்படித் தமத்துஉ- செய்தால் உமது ஹஜ் மக்காவாசிகளின் ஹஜ்ஜாக ஆகிவிடும்; (குறைந்த நன்மைகள்தான் கிடைக்கும்’) என்றனர். நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் சென்று இதைப் பற்றிக் கேட்டேன். அதாஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

 நபி (ஸல்) அவர்கள் தம்மோடு குர்பானிப் பிராணியான ஒட்டகத்துடன் ஹஜ்ஜுக்கு வந்த போது நான் நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவோ இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி நீங்கள் தவாஃபையும், ஸஃபா,மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ýக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள் என்றார்கள். அதற்குத் தோழர்கள் நாங்கள் ஹஜ்ஜின் பெயரில் இஹ்ராம் கட்டிக் கொண்டுவந்தோம். அதை எவ்வாறு தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக்கொள்வது?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் கட்டளையிட்டதை நீங்கள் செய்யுங்கள். நான் என்னுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டுவரவில்லையெனில் உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்று நிச்சயமாக நானும் செய்திருப்பேன்; குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தால் அதை -(குர்பானிப் பிராணியை)… அந்த இடத்தில் சேர்க்கும் வரை (-பலியிடும்வரை) இஹ்ராமைக் களைவது எனக்குக் கூடாது என்றார்கள். உடனே தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் கட்டளையின்படி செயலாற்றினார்கள்’ என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

1569 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் உஸ்ஃபான் உனுமிடத்தில் தமத்துஉவின் விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் செய்த செயலிலிருந்து எங்களை நீர் தடுக்க நாடுகிறீர் என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறி, ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினார்கள்.

பாடம் : 35

ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறுவதும் அதில் ஹஜ் என்று வாயால் கூறுவதும்.

1570 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்றோம். அப்போது லப்பைக்க, அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்’ எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா நகருக்கு வந்த போது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டடையிட்டார்கள்- நாங்கள் அவ்வாறே ஆக்கினோம்.

பாடம் : 36

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தல்.

1571 இம்ரான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தமத்துஉ செய்தோம். குர்ஆனின் மூலமே இச்சட்டம் இறங்கியது; எனினும் சிலர் தமத்துஉ கூடாது’ எனத் தம் சுய அறிவால் தாம் நாடியதை எல்லாம் கூறுகின்றனர்.

பாடம் : 37

(தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சலுகை எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் எனும் (2:196ஆவது) இறைவசனம்.

1572 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தமத்துஉ பற்றிக் கேட்கப்பட்டது. விடைபெறும் ஹஜ்ஜில் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் (ஹஜ்ஜுக்காக) இஹ்ராம் அணிந்தார்கள். நாங்களும் (அதற்காகவே) இஹ்ராம் அணிந்தோம். ஆனால் நாங்கள் மக்கா நகருக்கு வந்த போது, நபி(ஸல்) குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்தவர்களைத் தவிர, மற்ற அனைவரும் தங்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளுங்கள்! என்றார்கள். நாங்கள் கஅபாவைத் தவாஃப் செய்து ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடி, மனைவியருடன் தாம்பத்தியஉறவு கொண்டு (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்து கொண்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மோடு பிராணி கொண்டுவந்தவர்கள் பிராணி தனக்குரிய இடத்தில் சேரும்வரை -குர்பானி கொடுக்கும் வரை- இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது எனக் கட்டளையிட்டார்கள். எட்டாம் நாள் மாலையில் நபி (ஸல்) அவர்கள் எங்களை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்.நாங்கள் ஹஜ்ஜுக்கான மற்ற வழிபாடுகளை முடித்துவிட்டு தவாஃப் செய்தோம். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஓடினோம். எங்களது ஹஜ் நிறைவு பெற்றுவிட்டது. மேலும், எவரேனும் ஹஜ்ஜுடைய காலம் வரும் முன் உம்ரா செய்ய விரும்பினால் அவர் குர்பானிப் பிராணிகளில் தம்மால் இயன்றதை குர்பானி கொடுக்கட்டும். குர்பானிபிராணி கிடைக்கப் பெறாதவர்கள் ஹஜ்ஜுக் காலத்தில் மூன்று நாட்களும் (ஹஜ்ஜிலிருந்து தம் ஊர்களுக்கு) திரும்பியதும் ஏழு நாட்களும் நோன்பு நோற்கவேண்டும் (2:196)எனும் இறைவசனம் கூறுவது போன்று எங்கள் மீது குர்பானி கொடுப்பது கடமையாகிவிட்டது. குர்பானி (பலி) கொடுப்பதற்கு ஆடு போதுமானதாகும்.

எனவே மக்கள் ஹஜ், உம்ரா என்ற இரு கடமையையும் ஒரே வருடத்தில் நிறைவேற்றினர். (தமத்துஉ செய்ய அனுமதியளிக்கும்) இச்சட்டம் அல்லாஹ் தன் வேதத்தில் அருளியதும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறையும், மக்காவாசிகளல்லாத மற்ற மக்கள் அனைவருக்கும் நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததும் ஆகும். ஏனெனில் அல்லாஹ் இச்சலுகை எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவர்களுக்குத்தான் (2:196) என்று கூறுகிறான்.

மேலும் அல்லாஹ் ஹஜ்ஜுடைய மாதம் எனக் கூறுவது ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ் ஆகியனவாகும். இம்மாதங்களில் யார் தமத்துஉ செய்கின்றனரோ அவர்கள் மீது பலியிடுவதோ அல்லது நோன்போ கடமையாகும் என்றார்கள்.

பாடம் : 38

மக்காவில் நுழையும் போது குளிப்பது.

1573 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம்-புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்.

பாடம் : 39

இரவிலோ அல்லது பகலிலோ மக்காவில் நுழைவது.

நபி (ஸல்) அவர்கள் தூத்துவாவில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

1574 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தூத்துவா எனுமிடத்தில் இரவு தங்கிக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.

இப்னு உமர் (ரலி)அவர்களும் அவ்வாறே செய்தார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 40

மக்காவினுள் எவ்வழியே நுழைவது?

1575 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மேற்புறக் கணவாய் வழியாக நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.

பாடம் : 41

மக்காவிலிருந்து எவ்வழியே வெளியேறுவது?

1576 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பத்ஹா எனும் இடத்திலுள்ள கதா எனும் மேற்புறக் கணவாய் வழியாக மக்காவில் நுழைந்து கீழ்ப்புறக் கணவாய் வழியாக வெளியேறுவார்கள்.

1577ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்கு வந்தால் அதன் மேற்புத்தின் வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறத்தின் வழியாக வெளியேறுவார்கள்.

1578 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) அவர்கள் கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக மக்காவில் நுழைந்து மக்காவின் மேற்பகுதியிலுள்ள குதா’ (எனும் கணவாய்) வழியாக வெளியேறினார்கள்.

1579 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள கதாஉ’ (எனும் கணவாய் வழியாக) நுழைந்தார்கள்.

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

என் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் கதாஉ’, குதா’ இரண்டின் வழியாகவும் நுழைபவராக இருந்தார்கள். எனினும் அதிகமாக கதாஉ’ வழியாகவே நுழைவார்கள். ஏனெனில், அவ்விரண்டில் கதாஉ’ தான் அவர்களது வீட்டிற்கு அருகிலிருந்தது.

1580 உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது மக்காவின் மேற்பகுதியிலுள்ள கதாஉ’ எனுமிடத்தின் வழியே நுழைந்தார்கள்.

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

என் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் அதிகமாக கதாஉ’ (எனும் மேற்புறக் கணவாயின்) வழியாகவே நுழைபவராக இருந்தார்கள். ஏனெனில் அவ்விரண்டில் கதாஉ’ தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது.

1581 ஆயிஷா (ரலி) கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கதாஉ’ (எனும் கணவாய்) வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள்.

ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

என் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் கதாஉ’, குதா’ இரண்டின் வழியாகவும் (மக்காவினுள்) நுழைபவராக இருந்தார்கள். எனினும் அதிகமாக கதாஉ’ வழியாகவே நுழைவார்கள். ஏனெனில் அவ்விரண்டில் கதாஉ’ தான் அவர் வீட்டிற்கு அருகிலிருந்தது.

அபூ அப்தில்லாஹ் புகாரி ஆகிய நான் கூறுகிறேன்:

கதாஉ’, குதா’ என்பன இரண்டு இடங்களாகும்.

பாடம் : 42

மக்காவின் சிறப்பும் கஅபாவின் நிர்மாணமும்.

அல்லாஹ் கூறுகிறான்:

(கஅபா என்னும்) இந்த வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை -மகாமு இப்ராஹீமை’- தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்! (என்றும் நாம் சொன்னோம்). மேலும் என் வீட்டைச் சுற்றி வருபவர்கள்,தங்கியிருப்பவர்கள், ருகூஉ செய்பவர்கள், சஜ்தா செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும் என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்.

(இன்னும் நினைவு கூருங்கள்:) இப்ராஹீம் அல்லாஹ்வே! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்குவாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனி வர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக!’என்று கூறினார்; (ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகமனுபவிக்கச் செய்வேன்; பின்னர் அவரை நரக நெருப்பின் வேதனையின்பால் இழுத்துச் செல்வேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே என்று அல்லாஹ் கூறுகிறான்.

இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக, நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்.

எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படியும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உனக்கு முற்றிலும் கீழ்ப்படியும் ஒரு கூட்டத்தினரை உருவாக்குவாயாக! நாங்கள் உன்னை வழிபடும் முறைகளையும் அறிவித்தருள்வாயாக; எங்களை மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிகவும் மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனுமாய் இருக்கின்றாய்! (என்று பிரார்த்தித்தனர்) (2:125-128).

1582 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து எடுத்துச் சென்றார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களை நோக்கி (கல் சுமப்பதற்கு வசதியாக), உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் வைத்துக்கொள்! எனக் கூறினார்கள். (நபி ளஸல்ன அவர்களும் அவ்வாறே செய்தார்கள்) பிறகு (ஆடையின்றி உள்ளோம் என்றறிந்து) உடனே மயக்க முற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களின் கண்கள் வானத்தை நோக்கியிருந்தன. (அப்பாஸ் ளரலின அவர்களை நோக்கின எனது ஆடையை எனக்குக் கொடுங்கள்! என்றார்கள். (ஆடையை எடுத்துக் கொடுத்த உடனே) அதை இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள்.

1583 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ஆயிஷா! நிச்சயமாக உனது கூட்டத்தினர் கஅபாவைக் கட்டும் போது இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தைக் குறைத்துவிட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தின்படி நீங்கள் அதை மாற்றலாமல்லவா? எனக் கேட்டேன். உனது கூட்டத்தினர் இப்போது தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்; இல்லை எனில் அவ்வாறே நான் செய்திருப்பேன் என்றார்கள்.

ஆயிஷா (ரலி), நபி (ஸல்) அவர்களிடமிருந்து மேற்சொன்னவற்றைக் கேட்டிருந்தால் அது சரியே! ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதிக்கு எதிரே உள்ள இரு மூலைகளில் தொட்டு முத்தமிடாததற்குக் காரணம் இறை இல்லமான கஅபாவானது இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் முழுமையாக அமைக்கப்படாமல் (சிறிது விட்டு அமைக்கப்பட்டு) இருப்பதே ஆகும் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

1584 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, இது கஅபாவில் சேர்ந்ததா? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம்! என்றார்கள். பிறகு நான் எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை? எனக் கேட்டேன். அதற்கவர்கள் உனது சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால்தான்! என்று பதிலளித்தார்கள். நான் கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதற்குக் காரணம் என்ன? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்துவிடுவதற்காகவும்தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்’ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற் போலாக்கியிருப்பேன் என்று பதிலளித்தார்கள்.

1585 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருக்க வில்லை என்றால், கஅபாவை இடித்துவிட்டு, (முழுக்க முழுக்க) இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தின் மீதே நான் அதைக் கட்டியிருப்பேன். ஏனெனில், குறைஷிகள் அதை (அடித்தளத்தைவிட)ச் சுருக்கி (சற்று உள்ளடக்கி)க் கட்டிவிட்டனர். மேலும், அதற்கு ஒரு பின்புற வாசலையும் அமைத்திருப்பேன் என்று கூறினார்கள்.

1586 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா! உனது கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இல்லையென்றால் கஅபாவை இடிக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்; (இடிக்கப்பட்டதும்) வெளியேவிடப்பட்ட பகுதியையும் அதனுள் சேர்த்து(க் கட்டி) இருப்பேன்; உயர்ந்திருக்கும் தளத்தைத் தரையோடு தரையாக்கியிருப்பேன்; மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக இரு வாசல்களை அமைத்திருப்பேன்; இதன்மூலம் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில் (கஅபாவை) எழுப்பியவனாய் ஆகியிருப்பேன்! என்றார்கள்.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்களை கஅபாவை இடிக்கத் தூண்டியது இந்தச் செய்திதான். இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் அதை இடித்துக் கட்டியதையும் ஹிஜ்ர் (எனும் வளைந்த) பகுதியை அதில் சேர்த்ததையும் நான் பார்த்தேன்; மேலும் (இடிக்கும் போது) ஒட்டகத்தின் திமில்கள் போன்ற கற்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அடித்தளத்தில இருப்பதைக் கண்டேன் என யஸீத் பின் ரூமான் (ரஹ்) கூறுகிறார்கள்.

 இந்த இடம் எங்கே இருக்கிறது?’ என (யஸீதிடம்) நான் கேட்டேன். அதற்கவர்கள் இப்போதே அதை உனக்குக் காட்டுகிறேன்’ என்றார். அவருடன் ஹிஜர் எனும் வளைந்த பகுதிக்கு நான் சென்றேன். ஓரிடத்தைச் சுட்டிக் காட்டி இந்த இடம்தான்’ என்றார். நான் அதை அளந்து பார்த்த போது ஹிஜ்ர் எனும் பகுதியிலிருந்து சுமார் ஆறு முழங்கள் தள்ளி அடித்தளத்தைக் கண்டேன் என ஜரீர் கூறுகிறார்கள்.

பாடம் : 43

ஹரம்-புனித எல்லையின் சிறப்பு.

அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே கூறுக:) இந்த ஊரை எவன் கண்ணியப்படுத்தியுள்ளானோ அந்த இறைவனை வணங்குமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லாப் பொருட்களும் அவனுக்கே உரியன; அன்றியும் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவனாக இருக்கும்படியும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். (27:91)

நாம் அவர்களை அபயமளிக்கும் புனித பூமியில் (பாதுகாப்பாக) வசிக்கும்படி செய்யவில்லையா?அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனி வர்க்கமும் நம்மிடமிருந்து ஆகாரமாகக் கொண்டு வரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள் (28:57).

1587 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுயதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, அல்லாஹ் இந்த ஊரைப் புனிதமான தாக்கியுள்ளான். இவ்வூரிலுள்ள முட்கள் பிடுங்கப்படக்கூடாது; இங்கே வேட்டையாடப்படும் பிராணிகளை விரட்டக் கூடாது; இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களை அதை (மக்களுக்கு)அறிவிப்பவரைத் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது! எனக் கூறினார்கள்.

பாடம் : 44

மக்காவின் வீடுகள் வாரிசுப் பொருளாவதும் அதை விற்பதும் வாங்குவதும் செல்லும்.

(மற்ற இடங்களைவிடக் குறிப்பாக) மஸ்ஜிதுல் ஹராமில் மக்கள் அனைவரும் சமமாகக் கருதப்படுவார்கள்.

ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக, எவர் நிராகரித்து, உள்ளூர்வாசிகளும் வெளியூர் வாசிகளும் (ஹரமில் தங்குவதற்குச்) சம உரிமையுடையவர்களாயிருக்கும் நிலையில், நாம் மனித சமுதாயத்திற்காக (புனிதத் தலமாக) ஆக்கியிருக்கின்ற மஸ்ஜிதுல் ஹராமிலிருந்தும் அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் (இறை நம்பிக்கையாளர்களைத்) தடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களையும், யார் அதில் (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனையும் நோவினை தரும் வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம் (22:25).

1588 உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் மக்காவில் எங்கு தங்குவீர்கள்?அங்குள்ள உங்கள் வீட்டிலா? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் (அபூதாலிபின் புதல்வர்) அகீல், தம் தங்கும் விடுதியின் அல்லது வீடுகள் எவற்றையாவது விட்டுச் சென்றுள்ளாரா, என்ன? எனக் கேட்டார்கள்.

அபூதாலிபின் சொத்துக்களுக்கு அகீலும், தாலிபும் வாரிசானார்கள். ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) ஆகிய இருவரும் முஸ்லிம்களாக இருந்ததால் (தம் தந்தையின் சொத்துக்கு அவர்களால்) வாரிசாக முடியவில்லை. (அபூதாலிப் இறந்த போது) அகீலும் தாலிபும் காஃபிர்களாக (நிராகரிப்பாளர்களாக) இருந்தனர். முஃமின், காஃபிருடைய சொத்திற்கு வாரிசாக  மாட்டான் என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 நிச்சயமாக, யார் இறை நம்பிக்கை கொண்டு, மார்க்கத்துக்காக நாடு துறந்து, தம் செல்வங்களையும்,உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ அவர்களும், யார் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ அவர்களும் ஒருவருக்கொருவர் உரிமையுடையவர்கள் ஆவார்கள்’ என்ற (8:72ஆவது) இறைவசனத்தை (மார்க்க அறிஞர்களான) முன்னோர்கள் (முஃமின்கள்தாம் முஃமின்களுக்கு வாரிசாவார்கள் என்கிற) தமது கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டிவந்தார்கள் என இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரி-ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

பாடம் : 45

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கிய இடம்.

1589 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதல் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வருகை தர விரும்பிய போது நாளை நாம் (போருக்காக) முகாமிடப் போகுமிடம் இறைவன் நாடினால், பனூகினானா’ குலத்தாரின் (முஹஸ்ஸப்) பள்ளத்தாக்கிலாகும். அது அவர்கள், நாங்கள் குஃப்ரில் (இறை மறுப்பில்) நிலைத்திருப்போம் என்று சபதம் செய்த இடமாகும் என்று சொன்னார்கள்.

1590 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் காலை மினாவில் இருக்கும் போது, நாம் நாளை பனூகினானா பள்ளத்தாக்கை அடைவோம். அது குறைஷிகள் குஃப்ரின் (இறை நிராகரிப்பின்) மீது நிலைத்திருப்போம்’ என்று சத்தியம் செய்த இடம் என்றார்கள்.

பனூஹாஷிம் குலத்தாருக்கும் பனுல்முத்தலிப் குலத்தாருக்கும் எதிராக நபி(ஸல்) அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்காதவரை இவர்களோடு திருமண ஒப்பந்தமோ வியாபாரக் கொடுக்கல் வாங்கலோ செய்ய மாட்டோம்’ என குறைஷியரும் கினானா குலத்தாரும் சத்தியம் செய்ததை இது குறிக்கின்றது என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பள்ளத்தாக்கு’ என்று குறிப்பிட்டது முஹஸ்ஸப் பள்ளத்தாக்கு ஆகும்.

பாடம் : 46

இப்ராஹீம் இவ்வாறு பிரார்த்தித்ததை (நபியே!) நீர் நினைவுகூரும்: என் இறைவா! இந்த ஊரை (மக்காவை) அபயபூமியாய் ஆக்குவாயாக! என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!

(என்) இறைவா! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன; எனவே எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சேர்ந்தவர் இல்லை; என்றாலும்) நிச்சயமாக நீ பெரிதும் மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்!

எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததியினரை புனிதமான உன் வீட்டின் (கஅபாவின்) அருகே,விவசாயமில்லாத (இப்) பள்ளத்தாக்கில் குடியமர்த்தியிருக்கின்றேன்; எங்கள் இறைவா!-தொழுகையை அவர்கள் நிலைநிறுத்துவற்காகவே (இவ்விதம் குடியமர்த்தியிருக்கின்றேன்)! எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள் பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக! எனும் (4.35-37ஆகிய) இறைவசனங்கள்.

பாடம் : 47

அல்லாஹ், புனிதமிக்க இல்லமாகிய கஅபாவை மனிதர்களுக்கு (மார்க்க, உலக விவகாரங்களில்) நிலைபாட்டைத் தரும் தலமாக்கியிருக்கிறான்; இன்னும் புனித மாதங்களையும், பலிப்பிராணிகளையும் (அபயம் பெற்றிட உதவக் கூடியவையாக) ஆக்கியிருக்கிறான்; அல்லாஹ் இவ்வாறு செய்தது, அவன் வானங்களிலும் பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதையும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிபவன் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வதற்காகவேயாம். எனும் (5:97ஆவது) இறைவசனம்.

1591 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1592 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்றுவந்தார்கள். அது தான்  கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக்கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும்! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1593 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும்; உம்ராவும் செய்யப்படும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஷுஅபாவின் அறிவிப்பு கூறுகிறது. மேலேயுள்ள முதல் அறிவிப்பே பெரும்பாலோரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 48

கஅபாவுக்குத் திரையிடல்.

1594 அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷைபாவுடன் கஅபாவிலுள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அப்போது ஷைபா இந்த இடத்தில் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்து இத்திரையில் பதிக்கபபட்டுள்ள தங்கம், வெள்ளி ஆகியவற்றைப் பங்கு வைத்துவிடலாம் எனத் தீர்மானித்துவிட்டேன்’ என்றார்கள். அப்போது நான் அவர்களிடம் தங்களுடைய தோழர்கள் (நபி ளஸல்ன, அபூபக்ர் ளரலினஆகிய) இருவரும் இவ்வாறு செய்யவில்லையே?’ எனக் கூறினேன். அதற்கு அந்த இருவரும்தாம் நான் பின்பற்றுவதற்கு ஏற்ற மனிதர்கள்’ என உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் என்றார்கள்.

பாடம் : 49

கஅபாவை இடிப்பது.

ஒரு படை கஅபாவின் மீது படையெடுக்கும்; அப்படையை பூமி விழுங்கிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

1595 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வெளிப் பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1596 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 50

ஹஜருல் அஸ்வத்.

1597 ஆபிஸ் பின் ரபீஆ கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் அருகில் வந்து அதை முத்தமிட்டுவிட்டு, நீ தீங்கோ,நன்மையோ அளிக்க முடியாத ஒரு கல்தான் என்பதை நான் நன்கறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்மை முத்தமிடுவதைக் காணவில்லையென்றால் உன்னை நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்’என்றார்கள்.

பாடம் : 51

கஅபாவின் வாசலை மூடுவதும் கஅபாவினுள் எந்த இடத்தில் நின்றும் தொழலாம் என்பதும்.

1598 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவினுள் சென்று கதவை மூடிக் கொண்டார்கள். அவர்கள் கதவைத் திறந்த போது நானே முதல் முதலில் உள்ளே நுழைந்தேன். பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் (கஅபாவினுள்) தொழுதார்களா? என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள் ஆம்! வலப் புறத்து இரு தூண்களுக்கு மத்தியில்’ எனப் பதிலளித்தார்கள்.

பாடம் : 52

கஅபாவினுள் தொழுவது.

1599 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் கஅபாவிற்குள் நுழையும் போது, நேராக நடந்து வாசலை முதுகுக்குப் பின்னாலாக்கி, எதிர் சுவருக்கு சுமார் மூன்று முழம் தள்ளி நின்று தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால் (ரலி) கூறினாரோ அந்த இடத்தில் தொழ விரும்பியே இவ்வாறு செய்தார்கள். கஅபாவிற்குள் எத்திசையிலும் தொழுவதில் தவறில்லை.

பாடம்: 53

கஅபாவினுள் செல்லாமலிருப்பது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் அதிகமாக ஹஜ் செய்துள்ளார்கள். ஆனால் (ஹஜ்ஜின் போது கஅபாவினுள்) நுழைய  மாட்டார்கள்.

1600 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்த போது தவாஃப் செய்துவிட்டு மகாமே இ,ப்ராஹீமுக்குப் பின்னால் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களை மக்களிடமிருந்து மறைத்தவாறு ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் சென்றார்களா? என ஒருவர் கேட்டதற்கு அவர் இல்லை! என பதிலளித்தார்.

பாடம் : 54

கஅபாவின் மூலைகளில் நின்று தக்பீர் கூறுதல்.

1601 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவû அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை),இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறிபார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

பாடம் : 55

(தவாஃபில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது எவ்வாறு துவங்கியது?

1602 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்த போது, யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்’ என்று இணைவைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல்யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தவாஃபின் மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

பாடம் : 56

மக்காவிற்கு வந்ததும் முதல் தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவதும் மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கி ஓடுவதும்.

1603 அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து, முதலாவது தவாஃபில் ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவார்கள். ஏழு சுற்றுக்களில் முதல் மூன்று சுற்றில் (தோள்களைக் குலுக்கி) வேகமாக ஓடுவார்கள்.

பாடம் : 57

ஹஜ்ஜிலும் உம்ராவிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓடுவது.

1604 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் போது முதல் மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள்; (மீதமுள்ள) நான்று சுற்றுக்களில் நடந்துசெல்வார்கள்.

1605 அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதவாது:

உமர் (ரலிலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை நோக்கி, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ கல்தான்;உன்னால் எந்த நன்மையோ தீமையோ செய்ய முடியாது என்பதை நானறிவேன்; நபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்க்கவில்லை என்றால் நிச்சயமாக நான் முத்தமிட்டிருக்க மாட்டேன்’ எனக் கூறிவிட்டு அதை முத்தமிட்டார்கள். பிறகு நாம் ஏன் இப்போது தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும்? நாம் அன்று செய்தது நமது பலத்தை இணைவைப்பாளர்களுக்குக் காட்டுவதற்காகத்தானே. ஆனால் இன்று அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிறகு ஏன் செய்ய வேண்டும்?’ எனக் கூறிவிட்டு, எனினும், இதை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அதை விட்டுவிட நாம் விரும்பவில்லை’ எனக் கூறினார்கள்.

1606 அப்துல்லாஹ் பின் உமர் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:

நெரிசலுள்ள நேரத்திலும் நெரிசலற்ற நேரத்திலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத்,ருக்னுல்யமானீ ஆகிய இரண்டு மூலைகளையும் முத்தமிட்டதைப் பார்த்தலிருந்து நானும் இவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதை விட்டதில்லை.

 இப்னு உமர் (ரலிலி) அவர்கள், அவ்விரு மூலைகளுக்கிடையே நடந்துசெல்வார்களா?’ என நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் கேட்ட போது, முத்தமிடுவதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காக நடந்து தான் செல்வார்கள்’ என பதிலளித்தார்கள் என்று உபைதுல்லாஹ் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 58

தலை வளைந்த கம்பின் மூலம் ஹஜருல் அஸ்வதைத் தொடுதல்.

1607 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜில் ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது தலை வளைந்த கம்பால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டார்கள்.

பாடம் : 59

ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகள் தவிர மற்ற இரு மூலைகளை தொடாதிருத்தல்.

1608 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கஅபாவில் எந்தப் பகுதியையும் யார் (முத்தமிடாமல்) தவிர்க்க முடியும்? முஆவியா(ரலி) அவர்கள் எல்லா மூலைகளையும் முத்தமிடுபவராக இருந்தார்கள் என்று அபூஷஅஸா கூறினார்கள். முஆவியா (ரலி) அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீயைத் தவிரவுள்ள) இந்த இரு மூலைகளை முத்தமிடக் கூடாது என்றார்கள். அதற்கு அபூஷஅஸஆ இந்த ஆலயத்தில் முத்தமிடத் தடுக்கப்பட்ட பகுதி ஏதுமில்லை என்றார்கள். இப்னுஸ் ஸுபைர் (ரலி) எல்லா மூலைகளையும் முத்தமிடுவார்கள்.

1609 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகளைத் தவிர இந்த ஆலயத்தில் எந்த இடத்தையும் நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.

பாடம் : 60

ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது.

1610 அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை உமர் (ரலி) அவர்கள் முத்தமிடுவதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால், நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்! என்று கூறினார்கள்.

1611 ஸுபைர் பின் அரபி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து ஹஜருல் அஸ்வத் (எனும் கருப்பு நிறக்) கல்லை முத்தமிடுவதைப் பற்றிக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்! எனக் கூறினார்கள். அப்போது நான், கூட்டம் அதிகமாக இருந்தாலும், நாம் அதனை நெருங்க முடியாது என்றாலும் முத்தமிட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்களா? எனக் கேட்டேன். அதற்கவர்கள்,கருதுகிறீர்களா, நினைக்கிறீர்களா என்பதையெல்லாம் (உனது ஊராகிய) யமனில் வைத்துக்கொள்! நான் நபி (ஸல்) அவர்கள்அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்! என (மீண்டும்) கூறினார்கள்.

November 2, 2009, 12:13 AM

25-ஹஜ்1

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அத்தியாயம் : 25

25-ஹஜ்

பாடம் : 1

ஹஜ்ஜுக் கடமையும் அதன் சிறப்பும்.

அல்லாஹ் கூறுகிறான்:

அங்கு சென்றுவர சக்தி பெற்றிருக்கும் மனிதர்கள், அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) — நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான் (3:97).

1513 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபள்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது கஸ்அம்’ எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்!’ என்றார்கள். இது விடைபெறும்’ ஹஜ்ஜின் போது நிகழ்ந்தது.

பாடம் : 2

தங்களுக்குரிய பலனை அடைவதற்காக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் ஒருவார்கள் எனும் (22:27, 28ஆகிய) இறைவசனங்கள்.

1514 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தம் வாகனத்தில் அமர்ந்தார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு வாகனம் சரியாக நின்றபோத இஹ்ராம் கட்டி தல்பியாக் கூறியதை நான் பார்த்தேன்.

1515 ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் (ரலி) கூறியதாவது:

துல்ஹுலைஃபாவில் வாகனம் சரியாக நிலைக்கு வந்த பிறகுதான் நபி (ஸல்) இஹ்ராம் கட்டினார்கள்.

இதைப் போன்று அனஸ் (ரலி, இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 3

ஒட்டகப் பல்லக்கில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் செல்லுதல்.

1516 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என் சகோதரர் அப்துர்ரஹ்மானை என்னுடன் அனுப்பி, தன்யீம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் கட்டி, உம்ராச் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். சிறிய ஒட்டகப் பல்லக்கில் என்னை ஏற்றினார்கள்.

ஹஜ்ஜுக்காக பல்லக்குகள் கட்டி வாகன ஒட்டகங்களைத் தயார்படுத்துங்கள். ஏனெனில் அது (ஹஜ்) இரண்டு ஜிஹாதுகளில் ஒன்றாகும் என்று உமர் (ரலி) கூறினார்கள்.

1517 ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் ஒட்டகத்தின் சேணத்தில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றார்கள். அவர்கள் கஞ்சராக இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகச் சேணத்தில் அமர்ந்து ஹஜ்ஜுக்குச் சென்றதாகவும் அதுவே அவர்களுடைய பொதி சுமக்கும் ஒட்டகமாகவும் இருந்ததாகவும் அனஸ் (ரலி) அவர்கள் (எங்களுக்கு) அறிவித்தார்கள்.

1518 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான்,அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனைவரும் உம்ரா செய்துவிட்டீர்கள்; நான் மட்டும் உம்ரா செய்யவில்லை எனக் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மானே! உமது சகோதரியை அழைத்துச் சென்று அவருடன் தன்யீமிலிருந்து உம்ரா செய்துவிட்டு வாரும் என்றார்கள். அப்துர்ரஹ்மான் என்னை ஒட்டகத்தின் சேண(த்துடன் இணைந்த) இருக்கையின் பின் பகுதியில் ஏற்றினார்; நான் உம்ரா செய்தேன்.

பாடம் : 4

பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்ஜின் சிறப்பு.

1519 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்களிடம் செயல்களில் சிறந்தது எது? எனக் கேட்கப்பட்டது. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்புவது என்றார்கள். அதற்குப் பிறகு எது (சிறந்தது)? எனக் கேட்கப்பட்ட போது, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர்புரிதல் என்றார்கள். அதற்குப்பிறகு எது (சிறந்தது) எனக் கேட்கப்பட்ட போது பாவச் செயல் எதுவும் கலவாத (ஒப்புக்கொள்ளப்பட்ட) ஹஜ் என்று பதிலளித்தார்கள்.

1520 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மகளிர்), அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்தான் என்றார்கள்.

1521 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தாம்பத்தியஉறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 5

ஹஜ் மற்றும் உம்ராவிற்குரிய நிர்ணயிக்கப்பட்ட இஹ்ராமின் எல்லைகள்.

1522 ஸைத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு வந்தேன். ஒரு கூடாரம்தான் அவரது வீடாக இருந்தது. நான் அவரிடம் உம்ராவுக்காக எந்த இடத்திலிருந்து இஹ்ராம் கட்டுவது கூடும்?எனக் கேட்டேன். அதற்கு, நஜ்த்வாசிகள் கர்ன் எனும் இடத்திலிருந்தும் மதீனா வாசிகள் துல்ஹுலைஃபாவிலிருந்தும் ஷாம் வாசிகள் ஜுஹ்ஃபாவிலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

பாடம் : 6

மேலும் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது, தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்எனும் (2:197ஆவது) இறைவசனம்.

1523 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யமன் வாசிகள் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருள்களைச் சேகரிக்காமல் ஹஜ்ஜுக்கு வருவார்கள்;மேலும் நாங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் கூறுவார்கள். மக்கா வந்தடைந்தால் மக்களிடம் யாசகம் கேட்பார்கள். இது குறித்தே அல்லாஹ் (ஹஜ்ஜுக்குத் தேவையான) பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் நன்மையானது தக்வா (எனும் பயபக்தியே) ஆகும் எனும் (2:197ஆவது) வசனத்தை அருளினான்.

பாடம் : 7

மக்காவாசிகள் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும்?

1524 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ்த்வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையும் யமன்வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருவபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உள்ளே இருப்பவர்கள், தாம் வசிக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

இதை தாவூஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 8

மதீனாவாசிகள் இஹ்ராம் கட்டும் எல்லையும், மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவுக்கு முன்னால் இஹ்ராம் கட்டக் கூடாது என்பதும்.

1525 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலிருந்தும், ஷாம்வாசிகள் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த்வாசிகள் கர்னிலிருந்தும் இஹ்ராம் கட்டுவார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

யமன்வாசிகள் யலம்லம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் ஒட்டகங்களுக்குகட்டுவார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்குசெய்தி கிடைத்தது எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 9

ஷாம்வாசிகள் இஹ்ராம் கட்டுமிடம்.

1526 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ்த்வாசிகளுக்கு கர்னுல்மனாஸிலையும் யமன்வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

பாடம் : 10

நஜ்த்வாசிகள் இஹ்ராம் கட்டுமிடம்.

1527,1528 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலிருந்தும் ஷாம்வாசிகள் மஹ்யஆ எனும் ஜுஹ்ஃபாவிலிருந்தும் நஜ்த்வாசிகள் கர்னிலிருந்தும் இஹ்ராம் கட்டுவார்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

யமன் வாசிகள் யலம்லம் எனுமிடத்திலிருந்து இஹ்ராம் கட்டுவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர்கள் கூறுகிறார்கள். ஆனால், நான் (நேரடியாக) நபி (ஸல்) கூறக் கேட்கவில்லை என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 11

இஹ்ராமின் எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் வசிப்போர் இஹ்ராம் கட்டுமிடம்.

1529 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன்வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

பாடம் : 12

யமன்வாசிகள் இஹ்ராம் கட்டுமிடம்.

1530 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் நஜ்த்வாசிகளுக்கு கர்னுல் மனாஸிலையைம் யமன்வாசிகளுக்கு யலம்லமையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும்; இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வாசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்.

பாடம் : 13

இராக்வாசிகளின் எல்லை தாத்து இர்க்’ ஆகும்.

1531 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கூஃபா, பஸ்ரா எனும்) இந்த இரு(இராக்-)நகரங்கள் வெற்றி கொள்ளப்பட்ட போது, அங்குள்ளோர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி(ஸல்) அவர்கள் நஜ்த்வாசிகளுக்குக் கர்ன் எனும் இடத்தை (இஹ்ராம் கட்டும் எல்லையாக) நிர்ணயித்துள்ளார்கள். நாங்கள் (மக்காவிற்கு) செல்லும் பாதை அதுவன்று, நாங்கள் கர்ன் வழியாகச் செல்வதானால் அது மிகவும் சிரமமாகும் என்றனர். அதற்கு உமர் (ரலி)அவர்கள் அந்த அளவு தொலைவுள்ள ஓரிடத்தை உங்களது பாதையிலே கூறுங்கள்’ என்றார்கள். பின்பு தாத்துல் இர்க்’ என எல்லை நிர்ணயித்தார்கள்.

பாடம் : 14

1532 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் கற்கள் நிறைந்த இடத்தில் தம் ஒட்டகத்தை அமர வைத்து,அங்கேயே (இரண்டு ரக்அத்கள்) தொழுதார்கள்.

இப்னு உமர் (ரலி), இது போன்றே செய்வார்கள் என நாஃபிஉ (ரஹ்) கூறினார்கள்.

பாடம் : 15

ஷஜரா எனும் பாதை வழியாக (ஹஜ்ஜுக்கு) நபி (ஸல்) அவர்கள் செல்லல்.

1533 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஷஜரா எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். திரும்பும் போது முஅர்ரஸ் எனும் இடத்தின் வழியாக (மதீனாவினுள்) நுழைவார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு செல்லும் போது ஷஜராவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவார்கள். அங்கிருந்து திரும்பும் போது பத்னுல்வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் தொழுதுவிட்டு விடியும் வரை அங்கேயே தங்குவார்கள்.

பாடம் : 16

அகீக் (எனும் பள்ளத்தாக்கு) அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கு என நபி (ஸல்) அவர்கள் கூறியது.

1534 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!எனக் கட்டளையிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற நான் கேட்டேன்.

1535 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்னுல்வாதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் முஅர்ரஸ் எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்கள் இருந்த போது கனவு கண்டார்கள்; (அக்கனவில்) நீங்கள் அபிவிருத்தி மிக்க அழகிய பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்கள் என்று (வானவரால்) கூறப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள் முஅர்ரஸ் எனுமிடத்தைத் தேர்வு செய்தது போன்று இப்னு உமர் (ரலி) அவர்களும் அங்கேயே தமது ஒட்டகத்தை உட்கார வைப்பார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களின் புதல்வர் சாலிமும் அவ்வாறே செய்வார்கள். முஅர்ரஸ் எனுமிடம் பத்னுல்வாதியிலுள்ள பள்ளிவாசலின் கீழ்ப் புறத்தில் உள்ள சாலைக்கும் மக்கள் தங்குமிடத்திற்கும் நடுவில் உள்ளது என்று மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 17

(இஹ்ராம் கட்டும்) ஆடையில் (முன்னர் பூசப்பட்ட) நறுமணமிருந்தால் மூன்று முறை கழுவுதல்.

1536 யஅலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) வரும் போது எனக்குக் காட்டுங்கள்’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்த போது ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! நறுமணம் பூசிய நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம்கட்டியவர் பற்றி என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) வந்தது. உமர் (ரலி) அவர்கள் என்னை சைகை செய்து அழைத்தும் நான் சென்றேன். நபி (ஸல்) அவர்களுக்கு நிழல் தருவதற்காக ஒரு துணி கட்டப்பட்டிருந்தது. அத் துணிக்குள் நான் தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறது (சிறிது சிறிதாக) அந்த நிலை மாறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே? என்றார்கள். கேட்ட மனிதர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் உம் மீதுள்ள நறுமணத்தை மூன்று முறை கழுவுவீராக! தைக்கப்பட்ட உடைகளைக் களைவீராக! உமது ஹஜ்ஜில் செய்வது போன்றே உமது உம்ராவிலும் செய்வீராக! என்று கூறினார்கள்.

 ‘மும்முறை கழுவச் சொன்னது நன்கு சுத்தப்படுத்தவா?’ என்று (அறிவிப்பாளரான) அதாஉ (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர் ஆம்!’ என்றார் என இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பாடம் : 18

இஹ்ராம் கட்டும் போது நறுமணம் பூசுவதும் இஹ்ராம்கட்ட நாடும் போது அணிய வேண்டிய ஆடையும், தலைக்கு எண்ணெய் தடவுவதும் தலைவாருவதும்.

இஹ்ராம் கட்டுபவர் நறுமணத்தை முகரலாம்; கண்ணாடி பார்க்கலாம்; உட்கொள்ளும் எண்ணெய்,நெய் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்தலாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

மோதிரம் அணியலாம், பையுள்ள இடுப்புவாரை அணியலாம் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், இஹ்ராம் கட்டிய நிலையில் தமது வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.

ஒட்டகப் பல்லக்கில் பயணிப்பவர் அரைக்கால் சட்டை அணிவதில் குற்றமில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

1537 , 1538 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (இஹ்ராம் அணிந்த நிலையில், நறுமண எண்ணெய் பூசாமல் நறுமணமற்ற) ஆலிவ் எண்ணெய்யை பூசியதாக இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம் நான் கூறிய போது, அவர் என்ன சொல்வது? (இது நபிளஸல்னஅவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக இருக்கிறதே?)’ என்றார். (மேலும் தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் போது அவர்களின் தலையின் வகிட்டில் பார்த்த நறுமண எண்ணெய்யின் மினுமினுப்பு நான் இன்று பார்ப்பதுபோன்று உள்ளது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியிருக்கிறார்களே’ என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

1539 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஹ்ராம் கட்டும் நேரத்தில், நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்காக நான் நறுமணம் பூசினேன். இதுபோன்று இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு முன்னால் நறுமணம் பூசுவேன்.

பாடம் : 19

(தலைமுடி காற்றில் பறக்காமலிருக்கக்) களிம்பைத் தடவிக் கொண்டு இஹ்ராம் கட்டுவது.

1540 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியில் களிம்பு தடவியிருந்த நிலையில் தல்பியாக் கூறியதைச் செவியுற்றேன்.

பாடம் : 20

துல்ஹுலைஃபாவின் பள்ளியில் இஹ்ராம் கட்டுவது.

1541 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவின் பள்ளியைத் தவிர வேறெங்கும் இஹ்ராம் கட்டியதில்லை.

பாடம் : 21

இஹ்ராம் கட்டியவர் அணியக் கூடாத ஆடைகள்.

1542 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எதையெதை அணியலாம்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் சட்டை, தலைப்பாகை,முழுக்கால் சட்டை, (முக்காடுள்ள) முழுநீள அங்கி (அல்லது தொப்பி), காலுறை ஆகியவற்றை அணியக் கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம். குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்! என்றார்கள்.

பாடம் : 22

ஹஜ்ஜின் போது பயணம்செய்வதும் தம் வாகனத்தில் பிறரை ஏற்றிச் செல்வதும்.

1543 , 1544 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களோடு வாகனத்தின் பின் அமர்ந்து அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா வரை சென்றார்கள். பிறகு ஃபள்ல் (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து மினாவரை சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும் வரை தல்பியாவை நிறுத்தவில்லை’ என இவ்விருவருமே கூறினார்கள்.

பாடம் : 23

இஹ்ராம் கட்டிய நிலையில் வேட்டி, மேல்துண்டு போன்றவற்றை அணிதல்.

ஆயிஷா (ரலி) அவர்கள் இஹ்ராமோடு இருந்த போது மஞ்சள் நிற ஆடையணிந்து கொண்டார்கள். பெண்கள் தங்கள் வாய்களை (துணியால்) மூடவோ, முக்தை முழுவதும் மூடவோ கூடாது; குங்குமப் பூச்சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணியக் கூடாது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். நகைகள், கருப்பு மற்றும் ரோஜா நிற ஆடை, காலுறை ஆகியவற்றை பெண்கள் அணிவதில் தவறில்லை என்றும் சொன்னார்கள்.

குசும்பச் செடியின் சிவப்புச் சாயத்தை நான் வாசனைப் பொருளாக கருதவில்லை என ஜாபிர் (ரலி) அவர்கன் கூறினார்கள்.

(இஹ்ராமுடைய) ஆடையை மாறற அணிவதில் தவறில்லை என இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

1545 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எண்ணெய் தடவித் தலைசீவி வேட்டியும் துண்டும் அணிந்து தம் தோழர்களோடு மதீனாவிலிருந்து (விடைபெறும் ஹஜ்ஜுக்குப்) புறப்பட்டார்கள் – உடல் மீது ஒட்டிக்கொள்ளும் அளவு குங்குமப்பூ தோய்க்கப்பட்ட ஆடையைத் தடை செய்தார்களேயன்றி வேட்டி, துண்டு அணிவதைத் தடுக்கவில்லை- துல்ஹுலைஃபாவிற்குக் காலை நேரத்தில் வந்தடைந்தார்கள். பிறகு தம் வாகனத்தில் ஏறியமர்ந்து பைதா எனும் (குன்றுப்) பகுதியின் சமதளத்தை அடைந்ததும் அவர்களும் அவர்களின் தோழர்களும் இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் அடையாளமாகச் சிலவற்றைத் தொங்கவிட்டார்கள். இந்நிகழ்ச்சி துல்கஅதாவில் ஐந்து நாட்கள் மீதமிருக்கும் போது நடந்தது.

துல்ஹஜ் ஐந்தாம் நாள் மக்கா சென்றடைந்த போது கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஓடினார்கள். (உம்ராவை முடித்தாலும்) அவர்கள் குர்பானியின் ஒட்டகத்தைத் தம்மோடு கொண்டு வந்ததனால், (தலை முடி களைந்து) இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. பிறகு ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிய நிலையில் மக்காவில் மேற்பகுதி ஹஜூன் எனும் மலையில் இறங்கினார்கள். மக்கா வந்ததும் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பிய பின்னரே மீண்டும் கஅபாவிற்கு வந்தார்கள். இதற்கு இடையில் கஅபாவை நெருங்கவில்லை. தம் தோழர்களுக்குக் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரவும் ஸஃபா, மர்வாவில் ஓடவும், பிறகு தலைமுடியைக் குறைக்கவும் இஹ்ராமிலிருந்து விடுபடவும் கட்டளையிட்டார்கள். இது தம்மோடு குர்பானிக்கான ஒட்டகங்களைக் கொண்டு வராதவர்களுக்குச் சொல்லப்பட்டதாகும். இவர்களில் துணைவியோடு வந்தவர்கள் தாம்பத்திய உறவுகொள்வது, நறுமணங்கள், (வண்ண) ஆடைகள் அணிவது அனுமதிக்கப்பட்டதாகும்.

பாடம் : 24

விடியும்வரை துல்ஹுலைஃபாவில் தங்குவது

 இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

1546 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்குச் செல்லும் போது) மதீனாவில் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரத்அத்கள் தொழுதுவிட்டு அங்கேயே விடியும் வரை தங்கினார்கள். பிறகு வாகனத்தில் அமர்ந்து வாகனம் நிலைக்கு வந்த போது இஹ்ராம் கட்டினார்கள்.

1547 அனஸ் பின் மாலிக்(ரலி) கூறியதாவது:

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். பிறகு துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். அவர்கள் அங்கேயே விடியும் வரை தங்கினார்கள் என எண்ணுகிறேன்.

பாடம் : 25

தல்பியாவை சப்தமாகக் கூறுவது.

1548 அனஸ் (ரலி) கூறியதாவது

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் தெழழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதார்கள். அனைவரும் ஹஜ், உம்ராவிற்கான தல்பியாவை சப்தமாகக் கூறியதை நான் கேட்டேன்.

பாடம் : 26

தல்பியா கூறுதல்.

1549 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லாஷரீக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க,வல்முல்க்க லாஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும்,ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை).

இதுவே நபி (ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.

1550 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தல்பியா எவ்வாறு இருந்தது என்பதை நான் நன்கறிவேன்.

 இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! புகழும், அருட்கொடையும், உனக்கே உரியன.

இதுவே நபி (ஸல்) அவர்களின் தல்பியாவாகும்.

பாடம் : 27

இஹ்ராம் கட்டுவதற்கு முன்னால் வாகனத்தின் மீதமர்ந்த நிலையிலே அல்ஹம்து லில்லாஹ்,சுப்ஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர் கூறுவது.

1551 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதார்கள். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்த போது அல்ஹம்து லில்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, அல்லாஹ் தூயவன், அல்லாஹ் மிகப்பெரியவன்) எனக் கூறினார்கள். பிறகு ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் கட்டி, தல்பியா கூறினார்கள். மக்களும் ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்குமே தல்பியா கூறினர். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அண்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் கடடினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளன்று இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள்.

பாடம் : 28

வாகனம் நிலைக்கு வரும் போது தல்பியா கூறுதல்.

1552 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வாகனம் நிலைக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள் தல்பியா கூறினார்கள்.

பாடம் : 29

கிப்லாவை முன்னோக்கித் தல்பியா கூறுவது.

1553 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் சுப்ஹுத் தொழுதவுடன் புறப்படும்படி கட்டளையிடுவார்கள். வாகனக் கூட்டம் புறப்பட்டதும் அன்னாரும் புறப்படுவார்கள். வாகனம் நிலைக்கு வரும் போது கிப்லாவை முன்னோக்கி நின்றுகொள்வார்கள். பின்னர் தல்பியா கூறத் தொடங்குவார்கள். ஹரம்-புனிதஎல்லை வரும் வரை தல்பியா கூறிக் கொண்டேயிருப்பார்கள். பிறது தூத்துவா எனுமிடத்தை அடையும் போது தல்பியாவை நிறுத்தி அங்கேயே விடியும் வரை தங்குவார். சுப்ஹுத் தொழுதுவிட்டு அங்கேயே குளிப்பார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் கூறுவார்கள்.

1554 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (ஹஜ் மற்றும் உம்ராவிற்காக) மக்கா செல்ல நாடினால் நறுமணமில்லாத எண்ணெய் தேய்ப்பார்கள். பிறகு துல்ஹுலைஃபா பள்ளிவாசலுக்கு மீண்டும் (காலையில்) புறப்படுவார்கள். தமது வாகனம் நிலைக்கு வந்துவிட்டால் இஹ்ராம் (ஆடையை) அணிவார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ய நான் கண்டேன் எனக் கூறுவார்கள்.

பாடம் : 30

இஹ்ராம் கட்டியவர் பள்ளத்தாக்கில் இறங்கும் போது தல்பியா கூறுதல்.

1555 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அங்கிருந்தவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் கூறும் போது, அவனுடைய இரு கண்களுக்கு மத்தியில் காஃபிர் (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறினார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள், நான் இதை நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்கவில்லை; எனினும் மூசா (அலை) அவர்கள் தல்பியா கூறியவாறு பள்ளத்தாக்கில் இறங்குவதை நான் காண்பது போன்று உள்ளது’ என நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.