23 – ஜனாஸாவின் சட்டங்கள்

அத்தியாயம்: 23 – ஜனாஸாவின் சட்டங்கள்.

பாடம் : 1

கடைசிக் கட்டத்தில் லா இலாஹ இல்லல்லாஹ்’ கூறுபவரின் நிலை.

சொர்க்கத்தின் திறவுகோல் லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனக் கூறுவது)தானே! என வஹ்ப் பின் முனப்பிஹ் (ரஹ்) என்பாரிடம் வினவப்பட்டது. அதற்கவர், ஆம், ஆயினும் திறவு கோலுக்குப் பற்கள் இருக்க வேண்டுமல்லவா? எனவே உன்னிடம் பற்களுள்ள திறவுகோல் இருந்தால்தான் அதன் மூலம் உனக்காக அ(ந்தச் சொர்க்கமான)து திறக்கப்படும்; இல்லையேல் அது உனக்குத் திறக்கப்படாது எனக் கூறினார்கள்.

1237 அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எனது இரட்சகனிட மிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா? எனக் கேட்டேன். அவர் விபசாரத்திலோ திருட்டிலோ — ஈடுபட்டிருந்தாலும்தான் என்று பதிலளித்தார்கள்.

1238 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது:

யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்படியாயின்) யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார் என நான் கூறுகிறேன்.

பாடம் : 2

ஜனாஸாவைப் பின்தொடர்தல் பற்றிய கட்டளை

1239 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (ச்செய்யும்படி) கட்டளையிட்டு, ஏழு விஷ/யங்களை தடை செய்தார்கள். ஜனாசாவை பின் தொடரும் படியும், நோயாளியை நலம் விசாரிக்கும் படியும். விருந்துக்கு அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும் படியும், அநீதி இழைக்கப்பட்ட வருக்கு உதவும்படியும், சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவும் படியும், சலாமுக்கு பதில் கூறும்படியும், தும்மியவ(ர் அல்ஹம்து லில்லாஹ்-எல்லாப் புகழும் இறைவனுக்கே! எனக் கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ்-இறைவன் உங்களுக்கு கருணை புரிவானாக! என) மறுமொழி கூறும்படியும் கட்டளையிட்டார்கள். வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும்,ஆண்கள் தங்க மோதிரம் அணிவதிலிருந்தும் (கலப்படமில்லாத) பட்டு, அலங்காரப் பட்டு, கஸ் எனும் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, தடித்த பட்டு ஆகியவற்றை அணிவதிலிருந்தும் எங்களை தடைசெய்தார்கள்.

1240 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: சலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை நலம்விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 3

ஜனாஸா கஃபன் செய்யப்பட்டபின் அவ்விடத்திற்குச் செல்லல்.

1241 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்ட என் தந்தை) அபூபக்ர் (ரலி) சுன்ஹ் என்னுமிடத்திலுள்ள தமது வீட்டிலிருந்து குதிரையில் மஸ்ஜிது(ந் நபவீ)க்கு வந்திறங்கி, யாரிடமும் பேசாமல் நேரடியாக என் அறைக்குள் நுழைந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களை – கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில்- கண்டார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது முகத்திலுள்ள துணியை அகற்றிவிட்டு,அவர்களின்மேல் விழுந்து முத்தமிட்டுவிட்டு, அழுதார்கள். பின்பு, அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம். அல்லாஹ் உங்களுக்கு இரண்டு மரணங்களை ஏற்படுத்தவில்லை. உங்கள் மீது விதிக்கப்பட்ட அந்த மரணத்தை நீங்கள் அடைந்துவிட்டீர்கள்’ என்று கூறினார்கள்.

1242 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியில் வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் உமரை உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார்கள். உமர் (ரலி) மீண்டும் மறுக்கவே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார்கள். உடனே மக்கள் உமர் (ரலி) பக்கமிருந்து அபூபக்ர் (ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உங்களில் யார் முஹம்மத் (ஸல்) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்து விட்டார்கள். யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே  மாட்டான். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்று விட்டார்கள்; அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பிவிடுவீர்களா?அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பிவிடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.(3:144) என்றார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போலவும் அபூபக்ர் (ரலி) அவர்கள் மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்து கொண்டதைப் போலவும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தனர்.

1243 நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் எவர் வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்த போது உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம். பிறகு அவர் நோயுற்று மரணமடைந்தார். அவரது உடல் நீராட்டப்பட்டு அவரது ஆடையிலேயே கஃபனிப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். நான் (உஸ்மானை நோக்கி), ஸாயிபின் தந்தையே! உம் மீது இறையருள் உண்டாகட்டும்! அல்லாஹ் உம்மைக் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சியம் கூறுகிறேன் எனக் கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரை அல்லாஹ் கண்ணியப் படுத்தியுள்ளான் என்பது, உனக்கெப்படித் தெரியும்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். பின் யாரைத்தான் அல்லாஹ் கண்ணியப்படுத்துவான்? என நான் கேட்டேன். அதற்கு, நபி (ஸல்) அவர்கள், இவர் இறந்துவிட்டார். எனவே அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் விஷயத்தில் நன்மையையே நான் விரும்புகின்றேன். ஆயினும் நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் எனது நிலைமை (நாளை) என்னவாகும் என்பது எனக்குத் தெரியாது என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதற்குப் பிறகு நான் யார் விஷயத்திலும் (அவ்வாறு) பாராட்டிக் கூறுவதேயில்லை.

1244 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது தந்தை கொல்லப்பட்டுக் கிடந்த போது நான் அவரது முகத்தின் மீதிருந்த துணியை அகற்றி விட்டு அழுதேன். அப்போது (அங்கிருந்தவர்கள்) என்னைத் தடுத்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுக்கவில்லை. பிறகு எனது மாமி ஃபாத்திமா (ரலி) அவர்களும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். அப்போது, நீங்கள் அழுதாலும் அழாவிட்டாலும் நீங்கள் அவரைத் தூக்கும் வரை வானவர்கள் அவருக்குத் தங்களின் இறக்கைகளால் தொடர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 4

மரணமுற்றவரின் குடும்பத்தார்க்கு மரணசெய்தி அறிவித்தல்.

1245 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஜாஷி (மன்னர்) இறந்த அன்று அவரது மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள். பிறகு தொழுமிடத்திற்கு வந்து மக்களை வரிசைப்படுத்தி நிற்கவைத்து, நான்கு தக்பீர்கள் கூறி (ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்).

1246 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மூத்தா போரில்) ஸைத் (ரலி) கொடியைப் பற்றியிருந்தார். அவர் கொல்லப்பட்டதும் அதை ஜஅஃபர் (ரலி) பற்றினார். அவர் கொல்லப்பட்டதும் அதை அப்துல்லாஹ் பின்ரவாஹா (ரலி) பற்றினார். பிறகு அவரும் கொல்லப்பட்டார் என்று நபி (ஸல்) கூறிக் கொண்டிருந்த போது அவர்களது இரு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பிறகு, (ஏற்கெனவே) நியமிக்கப்படாதிருந்த காலித் பின் வலீத்(ரலி) அக்கொடியைப் பற்றினார். அவருக்கே வெற்றி கிடைத்துவிட்டது என்றும் கூறினார்கள்.

பாடம் : 5

ஜனாஸாத் தொழுகையை (த் தலைவருக்கு) அறிவித்தல்

நீங்கள் (ஜனாஸாத் தொழுத போது) எனக்குத் தகவல் அளித்திருக்கக் கூடாதா என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள்.

1247 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நோயுற்றிருந்த) ஒருவரை நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக விசாரிப்பவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இரவு அவர் இறந்துவிட்டார். அவரை மக்கள் இரவிலேயே அடக்கம் செய்துவிட்டனர். மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியை மக்கள் தெரிவித்தும் இதை அப்போதே எனக்கு நீங்கள் அறிவிக்காததன் காரணமென்ன? எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், கடுமையான இருள் சூழ்ந்த இரவு நேரமாக இருந்ததால் உங்களுக்குச் சிரமம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லைஎன்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், அவரது அடக்கவிடத்துக்கு (கப்று) வந்து ஜனாஸாத் தொழுகை தொழுவித்தார்கள்.

பாடம் : 6

தமது குழந்தை இறந்தும் பொறுமையுடன் இறைவெகுமதியை எதிர்பார்ப்பவரின் சிறப்பு.

அல்லாஹ் கூறுகிறான்: பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (2:155)

1248 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) இறந்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1249 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங் களேன் எனக் கேட்டுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், பெண்களுக்கு ஒருநாள் உபதேசம் செய்தார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகிவிடுவார்கள் எனக் கூறியதும் ஒரு பெண் இரு குழந்தைகள் இறந்தால்…? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரு குழந்தைகள் இறந்தாலும்தான்என்றார்கள்.

1250 மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் பருவமடையாத (குழந்தைகள்) என்று கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

1251 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லாருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: (எல்லாருமே நரகத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது) அதனை (நரகினை)க் கடக்காமல் செல்பவர் உங்களில் யாரும் இல்லை என்ற (19:71) இறைவசனத்தினடிப்படையில்தான்.

பாடம் : 7

அடக்கவிடம் அருகிலிருக்கும் பெண்ணிடம் நீ பொறுமையாயிரு என ஒருவர் கூறுவது.

1252 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அடக்கவிடம் (கப்று) அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், அல்லாஹ்வைப் பயந்துகொள்! பொறுமையாயிரு! எனக் கூறினார்கள்.

பாடம் : 8

இலந்தையிலை கலந்த நீரால் சடலத்தை நீராட்டி அங்கசுத்தி (உளூ) செய்வித்தல்.

சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களுடைய மகன் மரணமடைந்ததும் சடலத்துக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணம் பூசி அவரைச் சுமந்து சென்றார். (இதன் காரணமாக உளூ முறிந்துவிடாததால்) உளூச் செய்யாமலேயே ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

முஸ்லிம் உயிருடனிருக்கும் போதும் இறந்துவிட்டாலும் அசுத்தமாவதில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.

(இறந்துவிட்ட முஸ்லிம்) அசுத்தம் என்றிருந்தால் நான் அந்த சடலத்தைத் தொட்டிருக்க மாட்டேன் என சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் இறைநம்பிக்கையாளர் (மூமின்) அசுத்தமாவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1253 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது புதல்வி இறந்துவிட்ட போது எங்களிடம் வந்து, அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, இதை அவரது உடலில் சுற்றுங்கள் எனக் கூறினார்கள்.

பாடம் : 9

ஒற்றைப் படையாகத் தண்ணீர் ஊற்றி நீராட்டுவது விரும்பத் தக்கது.

1254 உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தமது கீழாடையைத் தந்து, இதை அவரது உடலில் சுற்றுங்கள்எனக் கூறினார்கள்.

ஹஃப்ஸா (ரலி) அவர்களின் அறிவிப்பில், ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி) நீராட்டுங்கள்; -மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்);- அவரது வலப் புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாகவும் உள்ளது என அய்யூப் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

பாடம் : 10

(நீராட்டுதலை) சடலத்தின் வலப் புறத்திலிருந்து ஆரம்பித்தல்.

1255 உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது மகளைக் நீராட்டும் போது, அவரது வலப் புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பியுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 11

சடலத்தை நீராட்டும் போது உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்து ஆரம்பித்தல்.

1256 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்த போது, சடலத்தின் வலப் புறத்திலிருந்தும் அதன் உளூச்செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 12

பெண் சடலம், ஆணின் கீழாடையால் கஃபனிடப்படலாமா?

1257 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள் இறந்ததும் அவர்கள், அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள் எனக் கூறினார்கள். நீராட்டி முடித்து அவர்களுக்குத் தெரிவித்ததும் தமது இடுப்பிலிருந்து கீழாடையைக் களைந்து இதை அவரது உடம்பில் சுற்றுங்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 13

(சடலத்தை நீராட்டும் போது) கடைசியில் கற்பூரத்தைப் பயன்படுத்துதல்.

1258 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் ஒரு மகள் மரணித்துவிட்டதும் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்து அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது தேவையென நீங்கள் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்; கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள் எனக் கூறினார்கள். நீராட்டிய பின் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்ததும் தமது கீழாடையைத் தந்து இதை அவரது உடம்பில் சுற்றுங்கள் என்று கூறினார்கள்.

1259 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது நீஙகள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் நீராட்டுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள் அந்த சடலத்தின் தலை(முடி)யில் மூன்று பின்னல்களை முடிந்தோம்என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாக ஹஃப்ஸா (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பாடம் : 14

பெண் சடலம் நீராட்டப்படும் போது பின்னல்களை அவிழ்த்துவிடல்.

நீராட்டப்படும் போது சடலத்தின் பின்னல் அவிழ்க்கப்படுவது தவறில்லை என இப்னு சீரீன் குறிப்பிட்டுள்ளார்கள்.

1260 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகளின் சடலத்திற்குத் தலை(முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பின்னியிருந்தார்கள். பிறகு அவற்றைப் பிரித்துக் கழுவிவிட்டுப் பிறகு மீண்டும் மூன்று சடைகள் பின்னினார்கள்.

பாடம் : 15

(பெண்)சடலத்தின் உடம்பில் துணியைச் சுற்றுவது எப்படி?

(கஃபனுடைய) ஐந்து துணிகளில் ஒன்றைக் கொண்டு மேலாடைக்கு உள்ளே தொடைகளையும் இடுப்பையும் சுற்றிக் கட்ட வேண்டும் என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

1261 இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களிடம்) உறுதிமொழிப் பிரமாணம் அளித்திருந்த அன்சாரிப் பெண்மணி உம்மு அத்திய்யா (ரலி) தமது மகனைத் தேடி பஸ்ராவுக்கு வந்தார். மகனைச் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர் எங்களிடம் சொன்னதாவது: நபி (ஸல்) அவர்களின் மகளை நாங்கள் நீராட்டிக் கொண்டிருந்த போது அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், சடலத்தை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான தடவைகள் இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டுங்கள்; மேலும் கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள் எனக் கூறினார்கள். நீராட்டி முடித்ததும் தமது கீழாடையைத் தந்து இதை அவரது உடலில் சுற்றுங்கள் என்றும் கூறினார்கள். அதற்கதிகமாக எதையும் கூறவில்லை.

நபி (ஸல்) அவர்களது புதல்விகளுள் இவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை என்று அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பெண் சடலத்துக்கு இடுப்பில் துணியைக் கட்டத் தேவையில்லை; ஆயினும் சுற்ற வேண்டும் என்றே இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கட்டளையிட்டு வந்தார்கள்.

பாடம் : 16

பெண் சடலத்தின் முடி மூன்று சடைகளாகப் பின்னலிடப்படுதல்

1262 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் மகளின் முடியை மூன்று சடைகளாகப் பின்னினோம்.

மூன்று சடைகள் என்பது முன் நெற்றிப்பகுதியில் ஒன்றும் பிடரிப் பகுதியில் இரண்டுமாகும் என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பாடம் : 17

பெண் சடலத்தின் முடி அதன் பின்புறம் தொங்கவிடப்படுதல்.

1263 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள்களில் ஒருவர் இறந்துவிட்டதும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து,சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப் படையாக நீராட்டுங்கள். கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நீராட்டி முடிந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்எனக் கூறினார்கள். நீராட்டி முடிந்து தெரிவித்ததும் தமது கீழாடையை (சடலத்தில் சுற்றுவதற்கு)த் தந்தார்கள். மேலும் நாங்கள் சடலத்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம்.

பாடம் : 18

கஃபனுக்கு வெண்மையான ஆடையைப் பயன்படுத்துதல்.

1264 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் யமன் தேசத்தின் பருத்தியினாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் செய்ய மாட்டார்கள். அம்மூன்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை.

பாடம் : 19

இரு ஆடைகளில் கஃபனிடுதல்.

1265 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஹ்ராம் கட்டிய) ஒருவர் அரஃபா மைதானத்தில் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தனது வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது உடலை இலந்தை இலை கலந்த நீரால் நீராட்டி இரு ஆடைகளால் பிரேத உடை (கஃபன்) அணிவியுங்கள்; அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்;அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் கட்டியிருந்த) அவர் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்…) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார் எனக் கூறினார்கள்.

பாடம் : 20

சடலத்திற்கு நறுமணமிடல்

1266 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஹ்ராம் கட்டியிருந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தமது வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர், தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரது கழுத்தை முறித்துவிட்டது. (எனவே அவர் இறந்துவிட்டார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடைகளால் பிரேத உடை (கஃபன்) அணிவியுங்கள்; அவரது உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா (லப்பைக் அல்லஹும்ம லப்பைக்…) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார் எனக் கூறினார்கள்.

பாடம் : 21

இஹ்ராம் கட்டியவர் இறந்தால் அவரது உடல் கஃபனிடப்படுவது எப்படி?

1267 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஹ்ராம் கட்டியிருந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களுடன் (அரஃபாவில்) இருந்த போது அவருடைய ஒட்டகம் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. (எனவே அவர் இறந்துவிட்டார்). அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடைகளால் கஃபனிடுங்கள்; நறுமணம் பூச வேண்டாம்; அவரது தலையை மூடவும் வேண்டாம்; ஏனெனில் அவரை அல்லாஹ் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்…) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்புவான் எனக் கூறினார்கள்.

1268 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஹ்ராம் கட்டியிருந்த ஒருவர் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களோடு தங்கியிருந்த போது தனது வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். -அது அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது என அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். வாகனம் அவரைக் கீழே வீழ்த்தியதால் அவரது எலும்புகள் முறிந்துவிட்டன என அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- எனவே, அவர் இறந்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள், அவரது உடலை இலந்தை இலை கலந்த தண்ணீரால் நீராட்டி இரு ஆடைகளில் பிரேத உடை (கஃபன்) அணிவியுங்கள்; அவருக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரது தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியா (லப்பைக்…) கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார் எனக் கூறினார்கள்.

பாடம் : 22

தைக்கப்பட்ட அல்லது தைக்கப்படாத மேல் சட்டையால் பிரேத உடை (கஃபன்) அணிவித்தலும் மேல்சட்டையின்றிக் பிரேத உடை அணிவிக்கப்பட்டவரின் நிலையும்.

1269 இப்னு உமர்(ரலி) கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டான். அப்போது அவனது (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள்; அவரை அதில் பிரேத உடை (கஃபன்) அணிவிக்க வேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது, அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, (ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுவிப்பேன் என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடிய போது, உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களை இழுத்து,நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை எனக்கு உள்ளதுஎனக் கூறிவிட்டு, நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை என்ற (9:80ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒரு போதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம் எனும் (9:84ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

1270 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபையின் சடலம் குழிக்குள் வைக்கப்பட்ட பின் அங்கு வந்த நபி (ஸல்) அவர்கள், அவனது உடலை வெளியிலெடுக்கச் செய்து அவன் உடலில் தமது எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் தமது சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள்.

பாடம் : 23

மேல் சட்டையின்றி பிரேத உடை (கஃபன்) அணிவித்தல்

1271 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மூன்று வெண்ணிறப் பருத்தி ஆடைகளால் கஃபனிடப்பட்டார்கள்; அவற்றில் சட்டையோ, தலைப்பாகையோ இருக்கவில்லை.

1272 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் உடல் மூன்று துணிகளில் கஃபனிடப்பட்டது; அவற்றில் சட்டையோ,தலைப்பாகையோ இருக்கவில்லை.

பாடம் : 24

தலைப்பாகையின்றி பிரேத உடை அணிவித்தல்

1273 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி(ஸல்) அவர்களின் உடல் (யமன் நாட்டுப்) பருத்தியாலான மூன்று வெண்ணிற ஆடைகளால் கஃபனிடப்பட்டது; அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை.

பாடம் : 25

(இறந்தவர் விட்டுச்சென்ற பொருளைப் பங்கிடுவதற்கு முன்) மொத்தச் சொத்திலிருந்து பிரேத உடைக்குச் செலவிடல்.

அதாஉ, ஸுஹ்ரீ, அம்ர் பின் தீனார், கத்தாதா (ரஹ்) ஆகியோர் இக்கருத்தைக் கொண்டவர்கள். அதில் நறுமண ஏற்பாட்டிற்கும் மொத்தச் சொத்திலிருந்து செலவு செய்யலாம் என அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறும் போது முதலில் பிரேத உடைக்கும் பிறகு கடனைத் தீர்க்கவும் செலவிட வேண்டும்; பிறகு மரணசாசனத்தை (வஸிய்யத்) நிறைவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும், சவக்குழி (கப்று) தோண்டுவது மற்றும் நீராட்டுவதற்கான கூலியும் பிரேதஉடைச் செலவில் சேர்ந்ததே என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

1274 இப்ராஹீம் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் அவரது உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட போது -அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார்- அவரது உடலில் சாத்துவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா (ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்ட போது -அன்னாரும் என்னைவிடச் சிறந்தவரே- அவரது உடலில் சாத்துவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே நல்லவை(க்கான நற்கூலி) களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன்கூட்டியே கொடுக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்! எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

பாடம் : 26

கஃபனிடுவதற்கு ஓர் ஆடை மட்டுமே இருந்தால்…?

1275 இப்ராஹீம் பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நோன்பாளியாக இருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) இடத்தில் (நோன்பை நிறைவு செய்வதற்காக) உணவு கொண்டு வரப்பட்டது. அப்போது அவர், என்னைவிடச் சிறந்தவரான முஸ்அப் பின் உமைர் (ரலி) கொல்லப்பட்ட போது அவரது உடல் ஒரு சால்வையால் கஃபனிடப்பட்டது. அப்போது அவரது தலைமறைக்கப்பட்டால் அவரது கால்கள் வெளியில் தெரிந்தன; கால்கள் மறைக்கப்பட்டால் தலை வெளியில் தெரிந்தது. மேலும் ஹம்ஸா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள். அவரும் என்னைவிடச் சிறந்தவர்தாம் (அவரும் அது போலவே பற்றாக் குறையுள்ள சிறிய சால்வையாலே கஃபனிடப்பட்டார்.) பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மை விட்டும் நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன’ அல்லது இந்த உலக(ச் செல்வ)த் திலிருந்து (இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்குத் தரப்பட்டது.’ நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டு விட்டதோ என்று நாம் அஞ்சுகிறோ என்று கூறினார்கள். பிறகு (தமக்காகக் கொண்டுவரப்பட்ட) உணவை உண்ணாமல் அப்படியே) விட்டுவிட்டு அழலானார்கள்.

பாடம் : 27

போதிய துணியின்றிக் கஃபனிடப்படும் போது சடலத்தின் தலை மட்டுமோ அல்லது கால்கள் மட்டுமோதாம் மறைக்கப்பட முடியும் என்ற நிலையேற்பட்டால் தலையையே மறைக்க வேண்டும்.

1276 கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி நபி (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தங்கள் பிரதிபலனை (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் இறந்துள்ளனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களும் ஒருவர். எங்களில் மற்ற சிலருக்கு (ஹிஜ்ரத்தின்) பலன் கனிந்து அதைப் பறித்து (அனுபவித்து)க் கொண்டிருக்கிறார்கள். முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் உஹுதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அன்னாரது உடலில் (கஃபனாகச்) சாத்த ஒரேயொரு சால்வை மட்டுமே இருந்தது. அதைக் கொண்டு அவரது தலையை மறைத்தால் கால்கள் வெளியில் தெரிந்தன;கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது அவரது தலையைத் துணியால் மறைத்துவிட்டு அவரது கால்களை இத்கிர் என்ற புல்லைப் போட்டு மறைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

பாடம் : 28

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முன்கூட்டியே பிரேதஉடையை (கஃபன்) தயாராக வைத்துக் கொண்டவரை நபி (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை.

1277 அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் (ரலி) அவர்கள் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் புர்தா- குஞ்சங் கட்டப்பட்ட சால்வை- ஒன்றைக் கொண்டு வந்தார் என்று கூறிவிட்டு- புர்தா’ என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்ட போது (அங்கிருந்தோர்) ஆம்! புர்தா என்பது சால்வைதானே! என்றனர். சஹ்ல் (ரலி) அவர்கள், ஆம் எனக் கூறிவிட்டு, மேலும், அப்பெண்மணி நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன் – என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்த போது ஒருவர் இது எவ்வளவு அழகாக இருக்கின்றது! எனக்கு இதை நீங்கள் அணியக்கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார். உடனே அங்கிருந்தோர் நீர் செய்வது முறையன்று; நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க  மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டுவிட்டீரே எனக் கூறினார்கள். அதற்கவர்,அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்துகொள்வதற்காகக் கேட்கவில்லை; அது எனக்கு பிரேதஉடை (கஃபன்) ஆகிவிட வேண்டும் என்றே கேட்டேன் என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 29

பிரேதத்தைப் பெண்கள் பின்தொடர்தல்

1278 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிரேதத்தைப் பின்தொடர்ந்து செல்ல (பெண்களாகிய) நாங்கள் (நபி (ஸல்) அவர்களால்) தடுக்கப்பட்டிருந்தோம்; ஆனால் வன்மையாக நாங்கள் தடுக்கப்படவில்லை.

பாடம் : 30

கணவர் அல்லாதவருக்காகப் பெண் துக்கம் கடைப்பிடித்தல்.

1279 முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உம்மு அத்திய்யா (ரலி) தம் மகன் இறந்த மூன்றாம் நாள் மஞ்சள் நிற வாசனைப் பொருளைப் பூசிக் கொண்டார். மேலும், கணவனைத் தவிர வேறு யாருக்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது என்று நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம் என்றும் கூறினார்கள்.

1280 ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூசுஃப்யான் (ரலி) அவர்களுடைய மரணச்செய்தி சிரியாவிலிருந்து வந்த மூன்றாம் நாள் (அவருடைய மகள்) உம்முஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிறவாசனை திரவியத்தை வரவழைத்து தமது கன்னங்களிலும் முழங்கைகளிலும் தடவிக் கொண்டார்கள். மேலும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள ஒரு பெண் தனது கணவன் இறந்தாலே தவிர வேறு யார் இறந்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிராவிட்டால் இ(ந்த வாசனைத் திரவியமான)து எனக்குத் தேவையற்றது தான் எனக் கூறினார்கள்.

1281 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள பெண், தனது கணவனைத் தவிர வேறு யாருடைய மரணத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; கணவன் இறந்தால் மட்டும் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்.

இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

1282 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், தமது சகோதரரை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர் நறுமணம் பூசிக் கொண்டு, இது எனக்குத் தேவையில்லைதான்; ஆயினும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண் தனது கணவனைத் தவிர வேறு யாருடைய இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது; தனது கணவன் இறந்துவிட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்றவாறு கூற நான் கேட்டிருக்கிறேன் என்றார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.