10 – பாங்கு

அத்தியாயம்: 10 – பாங்கு.

பாடம் : 1

பாங்கின் துவக்கம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாகமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்; இதற்குக் காரணம் அவர்கள் அறிவில்லா மக்களாக இருப்பதேயாம். (5:58)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க(ப் பள்ளிவாசலுக்கு) விரைந்து செல்லுங்கள். (62:9)

603 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகை நேரம் வந்துவிட்டதை அறிவிக் கும் முறை ஒன்று தேவை என முஸ்லிம்கள் கருதிய போது) மக்கள் (அக்னி ஆராதகர்களைப் போன்று) நெருப்பு மூட்டலாம் என்றும், மணியடித்துக் கூப்பிடலாம் என்றும் (ஆலோசனை) கூறினர். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) எனச் சிலர் (மறுப்புக்) கூறினார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கு (அதான்) எனும் தொழுகை அறிவிப்பிற் குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (எனும் தொழுகைக்காக நிற்கும் போது சொல்லும்) வாசகங்களை ஒருமுறை மட்டும் சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.

604 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்த போது ஓரிடத்தில் ஒன்று கூடி தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது; அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்களின் (ஆலயங்களில் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள் என்று கூறினர். வேறு சிலர், யூதர்களிடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 2

பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை சொல்லவேண்டும்.

605 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை கூறும்படியும் இகாமத்தின் வாசகங்களை கத் காமத்திஸ்ஸலாத்’ (தொழுகை ஆரம்பமாகிவிட்டது) எனும் வாசகத்தை தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.

606 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவில்) மக்களின் எண்ணிக்கை அதிகமான போது அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதேனும் ஓர் (அறிவிப்பு) முறையில் தொழுகை யின் நேரத்தை அறிவிப்புச் செய்திட (அல்லது அறிந்துகொள்ள) ஆலோசித்தனர். அப்போது, நெருப்பு மூட்டலாம்; அல்லது மணி அடிக்கலாம் என்று (பல்வேறு கருத்துக்களைப்) பேசினர். ஆனால், பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை கூறும்படியும் (கத்காமத்திஸ் ஸலாத்’ எனும் வாசகத்தை தவிரவுள்ள) இகாமத்தின் (இதர) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

பாடம் : 3

இகாமத்தின் வாசகங்களில் கத்காமத்திஸ் ஸலாத்’ என்பதைத் தவிர மற்றவற்றை ஒரு முறை மட்டும் சொல்ல வேண்டும்.

607 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்களுக்கு பாங்கின் வாசகங்களை இரண்டிரண்டு முறை கூறும் படியும் இகாமத்தின் வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்தரவிடப்பட்டது.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இஸ்மாயில் பின் உலய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(கா-த் அல்ஹிதாஉ ளரஹ்ன அவர்கள் எமக்கு அறிவித்த) இந்த ஹதீஸை நான் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அவர்கள், கத் காமத்திஸ் ஸலாத்’ எனும் வாசகத்தை தவிர என்று (அதிகப்படியாக) அறிவித்தார்கள்.

பாடம் : 4

பாங்கு சொல்வதன் சிறப்பு.

608 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக்கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, இதை நினைத்துப் பார்;அதை நினைத்துப் பார் என்று அவர் அதற்கு முன் நினைத்திராத விஷயங் களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 5

உரத்த குரலில் பாங்கு சொல்வது.

(மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்லும் பொறுப்பிலிருந்தவரிடம்), (இராகமிட்டுக் கொண்டிராமல்) குரலெடுத்து பாங்கு சொல்லுங்கள்: அல்லது இப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள் ளுங்கள் என்று கூறினார்கள்.

609 அபூஸஅஸஆ அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், ஆட்டையும் பாலை வனத்தையும் விரும்புகின்றவராக உங்களை நான் காண்கிறேன். எனவே, நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ’ அல்லது பாலைவனத்திலோ’ இருக்க, (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒ-க்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும் பிற பொருள்களும் அதைக்கேட்டு (தொழுகை) அ(ழைப்புக் கொடுத்த)வருக்காக மறுமை நாளில் சாட்சியம் சொல்கின்றனஎன்று கூறிவிட்டு, இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று சொன்னார்கள்.

பாடம் : 6

பாங்கு சொல்லப்படுவதால் (ஓர் ஊரின் மீது) போர் செய்யலாகாது.

610 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டத்தாரை நோக்கி போரிடப் புறப்பட்டால் வைகறை (சுப்ஹு) நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த  மாட்டார்கள். (சுப்ஹு நேரம் வந்ததும்) கவனிப்பார்கள். (எதிர் தரப்பிலிருந்து) பாங்குச் சொல்லும் சப்தத்தைச் செவியுற்றால் அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்; பாங்கு சொல்லும் சப்தத்தைச் செவியுறாவிட்டால் அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பார்கள். இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அதிகாலையான போது பாங்கு சப்தம் வராததால் (அவர்களை நோக்கி தமது வாகனத்தில்) பயணமானார்கள். நான் அபூ தல்ஹா (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில் அமர்ந்து) பயணம் செய்தேன். அப்போது எனது கால் நபி (ஸல்) அவர்களது காலில் உராயும் (அந்த அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்). அப்போது யூதர்கள் தம் மண் வெட்டிகளையும் தம் (பேரீச்ச ஓலைகளாலான) கூடைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்த னர். நபி (ஸல்) அவர்களை அவர்கள் பார்த்ததும், முஹம்மதும்,அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும் (அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (இதோ வருகின்றனர்) என்று கூறினர். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்ததும்,அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழா(வது உறுதியா)கிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோ மாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று கூறினார்கள்

பாடம் : 7

பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.

611 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பாங்கு சப்தத்தைச் செவியுற்றால் பாங்கு சொல்பவர் கூறுவதைப் போன்றே நீங்களும் சொல்லுங்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

612 ஈசா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நாள் (பாங்கு சப்தத்தைச்) செவியுற்றபோது அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்’ என்பது வரை பாங்கு சொல்பவர் கூறியது போன்றே சொன்னார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் வந்துள்ளது.

613 யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்கள் சகோதரர்களில் ஒருவர் கூறினார்:

பாங்கு சொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று கூறிய போது, முஆவியா (ரலி) அவர்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலக முடியாது; நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவியலாது) என்று கூறினார்கள். மேலும், இவ்வாறுதான் உங்கள் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் என்றும் கூறினார்கள்.

பாடம் : 8

பாங்கு முடிந்த பின் ஓதவேண்டிய பிரார்த்தனை.

614 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும் போது அல்லாஹ்ýம்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா (இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவி ருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் ளஸல்ன அவர்களுக்கு மட்டுமே உரித்தான ளசொர்க்கத்தின்ன உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ் திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக) என்று பிரார்த்திக்கிறாரோ,அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 9

பாங்கு சொல்வதற்காக (போட்டி நிலவும் போது) சீட்டுக் குலுக்கிப் போடுவது.

பாங்கு (சொல்லும் பொறுப்பு) விஷயத்தில் ஒரு கூட்டத்தார் (தங்களுக்கிடையில்) சர்ச்சை செய்து கொண்டனர். அப்போது அவர்களுக்கிடையே சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் சீட்டுக் குலுக்கி (அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலா)னார்கள்.

615 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 பாங்கு சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும். ஃபஜ்ர் தொழுகையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது வந்து (சேர்ந்து)விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 10

பாங்கு சொல்பவர் மற்ற பேச்சுக்கள் பேசுவது.

சுலைமான் பின் ஸுரத் ரலி) அவர்கள் பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதே (இதரப் பேச்சுக்கள்) பேசினார்கள்.

ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதோ இகாமத் சொல்லிக் கொண்டி ருக்கும்போதோ ஒருவர் சிரிப்பது குற்றமல்ல என்று கூறினார்கள்.

616 அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சேறும் சகதியும் நிறைந்த (மழை தூறிக் கொண் டிருந்த) ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். பாங்கு சொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ்’ (தொழுகைக்கு வாருங்கள்) என்று சொல்லப்போன போது உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் (அஸ்ஸலாத் ஃபிர் ரிஹால்) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கச் சொன்னார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை (வியப்புடன்) பார்த்தனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இதோ இ(ந்த பாங்கு சொல்ப)வரை விடவும் சிறந்தவளரான நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும் கூட இவ்வாறுதான் செய்தார்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 11

தொழுகையின் நேரத்தை தெரிவிக்கின்ற ஒருவர் (உதவிக்கு) இருந்தால் பார்வையற்ற வரும் பாங்கு சொல்லலாம்.

617 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ரமளானில்) பிலால், (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள் என்று கூறினார்கள்:

இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் கண் பார்வையற்றவராக இருந்தார்கள். அவரிடம் சுப்ஹு நேரமாகி விட்டது; சுப்ஹு நேரமாகிவிட்டது என்று சொல்லப்படும் வரை அவர்கள் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்ல  மாட்டார்கள்.

பாடம் : 12

ஃபஜ்ர் நேரம் வந்த பின் பாங்கு சொல்வது.

618 (நபி ளஸல்ன அவர்களின் துணைவியார்) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாங்கு சொல்பவர் சுப்ஹு(த் தொழுகை)க்காக பாங்கு சொல்லி முடிந்து, வைகறை நேரம் வந்திருக்க, (ஃபஜ்ர்) தொழுகை நிலை நிறுத்தப்படுவதற்கு முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

619 ள நபி (ஸல்) அவர்களின் துணைவியார்ன ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையின் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.

620 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ரமளானில்) பிலால் (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். எனவே, இப்னு உம்மி மக்தூம் அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லாத வரை (சஹர் உணவு)உண்ணுங்கள்;பருகுங்கள்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 13

ஃபஜ்ர் நேரம் வருவதற்கு முன் பாங்கு சொல்வது.

621 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமளானில்) நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து பிலா-ன் பாங்கு உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவர் இரவிலேயே பாங்கு சொல்வது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர் திரும்பி வருவதற் காகத்தான்; உங்களில் தூங்கிக் கொண்டிருப்போரை உணர்த்துவதற்காகத்தான். ஃபஜ்ர் அல்லது சுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல.

(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

இதைக் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் தமது விரல்களை மேல்நோக்கி உயர்த்திக் கொண்டு பிறகு கீழ் நோக்கித் தாழ்த்திவிட்டு இவ்வாறு ஃபஜ்ர் தோன்றும் வரை என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு’ என்பதற்கு விளக்கமளிக்கை யில், தம் சுட்டு விரல்களில் ஒன்றை மற்றொன்றோடு (சேர்த்து) வைத்துப் பிறகு அவற்றை(ப் பிரித்து) வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் நீட்டி (நீளவாட்டில் தோன்றும் அதிகாலை வெளிச்சமே ஃபஜ்ர் ஆகும்; அகலவாட்டில் தோன்றுவதன்று’ என்பது போன்று) சைகை செய்தார்கள்.

622 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமளானில்) பிலால் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே, இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லும் வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

623 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ரமளானில்) பிலால் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார். எனவே இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ருக்காக) பாங்கு சொல்லும் வரை நீங்கள் (சஹர் உணவு) உண்ணுங்கள்; பருகுங்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 14

பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும்,தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதை யார் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.

624 அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல்முஸனீ (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு என்று மூன்று முறை கூறிவிட்டு,விரும்பியவர் (அதைத் தொழுது கொள்ளட்டும்) என்று கூறினார்கள்.

625 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லத் தொடங்கி, நபி (ஸல்) அவர்கள் (தொழுகை நடத்த) வருவதற்கு முன்னர் நபித் தோழர்களில் (முக்கிய) சிலர் பள்ளிவாச-ன் தூண்களை நோக்கி (அதை தடுப்பாக ஆக்கி சுன்னத் தொழ) போட்டியிட்டுக் கொண்டு செல்வார்கள். அவர்கள் இவ்வாறே மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையில் (இடைவெளி) ஏதும் இல்லாத நிலையில் (இவ்வாறு தொழுதனர்).

ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (பாங்கு, இகாமத் ஆகிய) அவ்விரண்டுக்கும் இடையில் சிறிதே (இடைவெளி) இருக்கும் நிலையில் என்று இடம் பெற்றுள்ளது.

பாடம் : 15

இகாமத் சொல்வதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது.

626 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபஜ்ர் நேரம் வந்து, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாம் தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்லி முடித்ததற்கும் ஃபஜ்ர் தொழுகைக்கும் முன்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். பின்னர் (இரண்டாம் தொழுகை அறிவிப்பான) இகாமத் சொல்(- தொழுகை நடத்து)வதற்காக தம்மிடம் முஅத்தின் (தம்மைக் கூப்பிட) வரும் வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.

பாடம் : 16

பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. விரும்பியவர் அதைத் தொழுதுகொள்ளலாம்.

627 அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (பாங்கு, இகாமத் ஆகிய) இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு. இரு தொழுகை அறிவிப்புகள் ஒவ்வொன்றுக்கும் இடையில் ஒரு (கூடுதல்) தொழுகை உண்டு என்று (இரண்டுமுறை) கூறிவிட்டு, மூன்றாம் முறை விரும்பியவர் (அதைத்) தொழலாம் என்றார்கள்.

பாடம் 17

பயணத்தில் ஒரேயொருவர் மட்டுமே பாங்கு சொல்ல வேண்டும்.

628 மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் எங்கள் (பனூ லைஸ்) கூட்டத்தார் சிலருடன் (தபூக் போர் ஆயத்தம் நடந்து கொண்டி ருக்கையில்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நாங்கள் அவர்களிடம் இருபது நாட்கள் தங்கி னோம். -நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடைய வர்களாகவும், நல்ல நண்பராகவும் இருந்தார்கள்.- (பிறகு) எங்கள் குடும்பத்தாரிடம் நாங்கள் (திரும்பிச் செல்ல) ஆசைப்படுவதைக் கண்ட போது நபியவர்கள்,நீங்கள் (உங்கள் குடும்பத்தாரிடம்) திரும்பிச் சென்று அவர்களிடையே (தங்கி) இருங்கள்; அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள்; (என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே) நீங்கள் தொழுங்கள்;தொழுகை நேரம் வந்ததும் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று கூறினார்கள்.

பாடம் : 18

பயணிகள் கூட்டமாகச் செல்லும் போதும் (ஹஜ்ஜின்போது) அரஃபா முஸ்த-ஃபாவில் இருக்கும் போதும் பாங்கு, இகாமத் ஆகிய இரண்டையும் சொல்வதும், தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) குளிரான இரவுகளிலும் மழை பெய்யும் நேரங்களிலும் உங்கள் இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அஸ்ஸலாத் ஃபிர் ரிஹால்’) என்று அறிவிப்புச் செய்வதும்.

629 அபூதர் (ஜுன்துப் பின் ஜுனாதா) அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்து கொண்டிருந்தோம். தொழுகை அறிவிப்பாளர் (பிலால் ளரலின அவர்கள் லுஹ்ர் தொழுகைக்கு) பாங்கு சொல்ல முற்பட்ட போது அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் (சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் அவர்கள் பாங்கு சொல்ல முற்பட்டார்கள். அப்போதும் அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், (சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். பிறகு (மூன்றாவது முறையாக) அவர்கள் பாங்கு சொல்ல முற்பட்ட போது அவர்களிடம் (சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். (எனவே, நாங்கள் வெப்பம் தணியும் வரை அந்த நாளின் லுஹ்ர் தொழுகையை பிற்படுத்தினோம்.) எந்த அளவிற்கென்றால் மேடுகளின் நிழல் அதே அளவிற்குச் சமமாக விழுந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெரு மூச்சின் காரணமாகவே உண்டாகிறது என்று சொன்னார்கள்

630 மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பயணம் புறப்படவிருந்த இருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள்,நீங்கள் பயணம் புறப்பட்டுச் செல்லும் போது (தொழுகை நேரம் வந்துவிட்டால்), தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்! என்று சொன்னார்கள்

631 மா-க் பின் ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சம (வயதுடைய) இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். – அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர் களாகவும் நல்ல நண்பராகவும் இருந்தார்கள். – (பிறகு) நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச் செல்ல) ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டு வந்த (எங்கள் குடும்பத்)தவர்களைப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, அவர்களிடையே தங்கியிருங்கள். அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள். (கடமையானவற்றைச் செய்யுமாறு) அவர்களைப் பணித்திடுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டு:ம. உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று கூறினார்கள். இன்னும் பலவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அவற்றை நான் மனனமிட்டேன்’ அல்லது அவை என் நினைவிலில்லை’.

632 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவை அடுத்துள்ள) ளஜ்னான்’ எனும் இடத்தில் குளிரான ஓர் இரவில் பாங்கு சொன்னார்கள். பிறகு உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (ஸல்லூ ஃபீ

ரிஹா-க்கும்’) என்று அறிவித்தார்கள். மேலும், பயணத்தின் போது குளிரான இரவிலோ அல்லது மழை பெய்யும் நேரத்திலோ தொழுகை அறிவிப்பாளர் பாங்கு சொல்லும் போது பாங்கின் இறுதியில் உங்கள் இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அலா! ஸல்லூ ஃபீ ரிஹா-க்கும்) என்று அறிவிக்குமாறும் தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்.

633 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் (புற நகர் மக்காவிலுள்ள) அப்தஹ்’ எனுமிடத்தில் கண்டேன். (அங்கு இருந்த போது தொழுகை நேரம் வந்தது.) அப்போது பிலால் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தொழுகை (நேரம் வந்து விட்டது) பற்றித் தெரிவித்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்கள் (இரும்புப் பூண் போட்ட) கைத்தடியுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அப்தஹ் எனும் அந்த இடத்தில் (தடுப்பாக) நட்டு வைத்துவிட்டு தொழுகைக்காக இகாமத்’ சொன்னார்கள்.

பாடம் : 19

தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொல்லும் போது தமது வாயை இங்குமங்கு மாக (வலம் இடமாக) திருப்பவேண்டுமா? அவர் பாங்கு சொல்லும் போது (ஹய்ய அலஸ் ஸலாஹ்,ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறுகையில் வலப் பக்கமும் இடப் பக்கமும் தலையைத்) திருப்பவேண்டுமா?

பாங்கு சொல்லும் போது பிலால் (ரலி) அவர்கள் தம் (சுட்டு) விரல்களின் நுனிகளை காதுக்குள் வைத்துக் கொண்டதாக அறிவிக்கப்படுகிறது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை பாங்கு சொல்லும் போது தம்மிரு (சுட்டு)விரல் நுனிகளை காதுகளில் வைக்க மாட்டார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், அங்கசுத்தி (உளூ) இல்லாமல் பாங்கு சொல்வதில் தவறில்லைஎனக் கூறினார்கள்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், (பாங்கு சொல்வதற்காக) அங்கசுத்தி (உளூ) செய்வது (மார்க்கத் தில்) உள்ளது தான் ; நபிவழியே என்று கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் (உளூவுடனும் உளூ இல்லாமலும்) அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

634 அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும் போது (இரு திக்கிலுள்ள மக்களுக்கும் கேட்பதற்காக) தம் வாயை இங்குமங்கும் (வலம் இடமாகத்) திருப்பிக் கொண்டிருப்பதைக் கண்டேன்.

பாடம் : 20

எங்களுக்குத் தொழுகை தவறிவிட்டது என்று கூறலாமா?

இவ்வாறு கூறுவதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் வெறுப்பிற்குரியதாகக் கருதினார்கள். மாறாக அவர், (தொழுகையை) நாங்கள் அடைந்துகொள்ளவில்லை’ என்று கூறலாம் என்றார்கள்.

(பின்வரும் ஹதீஸில் தவறிப்போனதை’ என்று நபி ளஸல்ன அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே,முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களுடைய கருத்தைவிட) நபி (ஸல்) அவர்களின் சொல்லே சரியானதாகும்.

635 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான) சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடிந்ததும், உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு )ஏற்பட்டது) என்று பதிலளித்தனர். அதற்கு

நபி (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும் போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 21

தொழுகையில் போய்ச் சேர அவசர அவசர மாகச் செல்ல வேண்டாம். நிதானமாகவும் கண்ணியமான முறையிலும் செல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள், (இமாமுடன்) உங்களுக் குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள். தவறிப் போன (ரக்அத்)தைப் (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள் என்று கூறினார்கள்.

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

636 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கூட்டுத் தொழுகைக்காக) இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்கு நடந்து செல்லுங்கள். அப்போது நிதானத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அவசரப்பட்டு ஓடிச் செல்லாதீர்கள். (இமாமுடன்) உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தைத் தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதை (பின்னர்) பூர்த்தி செய்யுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 22

(தொழுகைக்கு) இகாமத் சொல்லப்படும் போது இமாம் வருவதைக் கண்டால் மக்கள் (உடனே எழுந்து விடவேண்டுமா?) எப்போது எழ வேண்டும்?

637 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் (உடனே எழுந்துவிடாதீர்கள்.) என்னை நீங்கள் பார்க்காத வரை எழ வேண்டாம்.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள் என ஹிஷாம் அத்துஸ்துவாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 23

தொழுகைக்கு அவசரப்பட்டு விரைந்து செல்லலாகாது. நிதானமாகவும் கண்ணிய மான முறையிலும் எழுந்து செல்ல வேண்டும்.

638 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் (உடனே எழுந்துவிடாதீர்கள்) என்னை நீங்கள் பார்க்காத வரை எழ(வோ செல்லவோ) வேண்டாம். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.

இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 24

(இகாமத் சொன்ன பிறகு) ஏதாவது காரணத் திற்காகப் பள்ளியிலிருந்து வெளியே செல்லலாமா?

639 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு, தொழுகை வரிசைகள் சீர் செய்யப்பட்டு விட்டபின் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்தார்கள். அவர்கள் தம் தொழுமிடத்தில் (போய்) நின்றதும் அவர்கள் தொழுகைத் தக்பீர்’ சொல்வார்கள் என நாங்கள் எதிர் பார்த்தோம். ஆனால் (தாம் பெருந்துடக்கிற்காக கடமையான குளியலை நிறைவேற்றாதது நினைவுக்கு வரவே) அப்படியே இருங்கள் என்று கூறிவிட்டுத் திரும்பி (தம் இல்லத்திற்குச்) சென்றார்கள். ஆகவே, அவர்கள் நீராடிவிட்டுத் தலையில் நீர் சொட்ட எங்களிடம் வரும் வரை நாங்கள் (அவர்களை) எதிர்பார்த்தபடி அப்படியே நின்று கொண்டிருந்தோம்.

பாடம் : 25

(இகாமத் சொல்லப்பட்ட பின்) இமாம், நான் திரும்பி வரும்வரை அப்படியே இருங்கள் என்று (மக்களிடம்) சொல்லிவிட்டுச் சென்றால் (அவர் வரும் வரை) அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டும்.

640 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. மக்கள் தம் தொழுகை வரிசைகளை சீர் செய்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தொழுவிப்பதற்காக) முன்னே நின்றார்கள். அப்போது அவர்கள் பெருந்துடக்குடனிருந்தார்கள். (நினைவில்லாமல் நின்று விட்டதால்) அப்படியே இருங்கள்! என்று (மக்களிடம்) கூறிவிட்டு (தம் இல்லத்திற்குத்)திரும்பிச் சென்று நீராடினார்கள். பிறகு தம் தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருக்க(த் திரும்பி) வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

பாடம் : 26

ஒருவர் நாம் தொழவில்லை’ என்று சொல்லலாம்.

641 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! சூரியன் மறையும் நேரம் நெருங்கும் வரை என்னால் (அஸ்ர் தொழுகையைத்) தொழ முடியாமற் போய்விட்டது என்று கூறினார்கள். அ(வ்வாறு உமர் (ரலி) அவர்கள் கூறிய)து, நோன்பாளி நோன்புதுறக்கும் நேரத்திற்குப் பிறகேயாகும் அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதைத் தொழ (முடிய)வில்லை என்று கூறினார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் புத்ஹான்’ எனும் பள்ளத்தாக்கில் இறங்கினார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன் (அங்கு) அங்கசுத்தி (உளூ) செய்து சூரியன் மறைந்த பின் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள்

பாடம் : 27

இகாமத் சொன்ன பின் இமாமுக்கு ஏதாவது தேவை ஏற்படுவது.

642 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள் இஷாத்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. (ஆனால்,) நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் ஒரு பகுதியில் ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். (எவ்வளவு நேரம் அவர்கள் தொழுகையை பிற்படுத்தினார்களெனில்) மக்கள் உறங்கிவிடும் வரை அவர்கள் தொழுகைக்கு (வந்து) நிற்கவில்லை.

பாடம் : 28

தொழுகைக்கு இகாமத் சொன்ன பின் பேசுவது.

643 ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸாபித் அல் புனானீ (ரஹ்) அவர்களிடம், தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டபின் பேசிக் கொண்டிருப்பது பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட பின் ஒரு மனிதர்* நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (தொழுவிக்கவிடாமல்) இடைமறித்(துப் பேசிக் கொண்டிருந்)தார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டு விட்ட பின்னர் (இது நடந்தது).

பாடம் : 29

கூட்டுத் தொழுகை (ஜமாஅத்தாகத் தொழுவது) கடமையானதாகும்.

ஒரு தாய் (தன் மகன் மீதுள்ள) பாசம் காரணமாக இஷாத் தொழுகையின் ஜமாஅத்திற்கு செல்ல வேண்டாமென அவனைத் தடுத்தால் அதற்கு மகன் கட்டுப்படலாகாது என ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

644 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் (சுள்ளிகளாக உடைக்கப் படும்) விறகுகளைக் கொண்டுவர உத்தரவிட்டு விட்டு, (கூட்டுத்) தொழுகையை நடத்துமாறு பணித்து, அதற்கு அழைப்புக் கொடுக்கப்பட, ஒரு மனிதரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு பின்னர் (தொழுகைக்கு வராத) சில மனிதர்களை நோக்கிச் சென்று அவர்களுடைய வீடுகளை எரித்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளுக்கிடையிலுள்ள நல்ல இறைச்சித்துண்டுகளோ கிடைத்தாலும் கூட அவர் இஷாத் தொழுகையில் கட்டாயம் கலந்துகொள்வார்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 30

கூட்டுத் தொழுகையின் சிறப்பு.

அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் (தமது பள்ளிவாசலில்) கூட்டுத் தொழுகை (ஜமாஅத்) தவறிவிடும் போது வேறொரு பள்ளிவாசலுக்கு (கூட்டுத் தொழுகையில் சேரச்) சென்றுவிடுவார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் ஒரு பள்ளி வாசலுக்கு வந்தார்கள். அங்கு தொழுகை (நடந்து) முடிந்து விட்டிருந்தது. ஆகவே பாங்கும், இகாமத்தும் சொல்லி ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினார்கள்.

645 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

646 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனியாகத் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

647 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் அல்லது கடைத் தெருவில் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தில் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு (சிறப்பு) கூடுதலாக்கப்படுகிறது. அதற்குக் காரணம், ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அந்த அங்க சுத்தியை செம்மையாகச் செய்து, பின்னர் தொழுவதற்காகவே புறப்பட்டு பள்ளி வாசலை நோக்கிச் செல்வாரானால் அவர் ஒவ்வோர் எட்டு எடுத்துவைக்கும் போதும் அதற்காக அவருக்கு அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். அதற்காக அவரது பாவமொன்றை அவன் மன்னிக்கிறான். அவர் தொழுதால் வானவர்கள் அவருக்காக அவர் தாம் தொழுத இடத்தில் இருக்கும் வரை (அருள் வேண்டி) பிராத்தித்துக் கொண்டேயிருக்கின்றனர்:

இறைவா! இவர் மீது அருள் புரிவாயாக! இறைவா! இவர் மீது இரக்கங் காட்டுவாயாக என்று கூறுவார்கள்.

உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த் துக் காத்துக் கொண்டிருக்கும் வரை தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 31

ஃபஜ்ர் தொழுகையை (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவதன் சிறப்பு

648 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட (ஜமாஅத்துடன்) கூட்டாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஃபஜ்ர் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.

இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் அதிகாலையில் ஓதுவது (வானவர் களால்) சாட்சியம் சொல்லப்படக் கூடியதாகும் எனும் (17:78ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

649 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அ(வ்வாறு தனியாகத் தொழுவ)தைவிட (கூட்டாகத்தொழுவது,) இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும் (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்).

650 உம்முத் தர்தா (ஹஜீமா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபுத் தர்தா (ரலி) அவர்கள் என்னிடம் கோபமாக வந்தார்கள். அப்போது நான், தங்களுடைய கோபத்திற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் (வர வர நபியவர்களின் வழிமுறைகளில்) எதையுமே என்னால் (முன்புபோல்) பார்க்க முடியவில்லை. ஆனால் (ஐவேளைத் தொழுகைகளையும்) கூட்டாகத் தொழுகிறார்கள் என்று கூறினார்கள்

651 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் தொழுகையால் அதிக நற்பலன் அடைபவர் வெகு தொலைவிலிருந்து (பள்ளியை நோக்கி) வருபவராவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவராவார். யார் (கூட்டுத்) தொழுகையை இமாமுடன் தொழக் காத்துக் கொண்டிருக்கிறாரோ அவரே (தனியாகத்) தொழுது விட்டு உறங்கிவிடுபவரை அதிக நற்பலன் அடைபவர் ஆவார்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 32

லுஹ்ர் (உள்ளிட்ட) தொழுகையை ஆரம்ப நேரத்திலேயே (சென்று) நிறைவேற்றுவது.

652 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்கலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

653 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்:

1) பெரு நோயினால் இறந்தவர். 2) வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதியால் இறந்தவர். 3) தண்ணீரில் மூழ்கி இறந்தவர். 4) (வீடு, கட்டடம் உள்ளிட்டவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர்.

5) அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில் ஈடுபட்டு) இறந்தவர்.

தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்வதிலும், (கூட்டுத் தொழுகையின்) முதல் வரிசையிலும் உள்ள சிறப்பை மக்கள் அறிந்து, பிறகு சீட்டுக் குலுக்கிப் போட்டுத்தான் (இவற்றை) அடைந்து கொள்ள முடியுமெனும் நிலை (போட்டி) ஏற்பட்டால் சீட்டுக் குலுக்கிடத் தயங்க  மாட்டார்கள்

654 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையை) ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தேனும் (கூட்டுத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 33

(கூட்டுத் தொழுகை முதலிய நற்செயல்கள் புரிவதற்காக எடுத்து வைக்கும்) கால் எட்டுகளின் அளவுக்கு நன்மையை எதிர் பார்க்கலாம்.

655 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பனூ ச-மா குலத்தார் மஸ்ஜிதுந் நபவீ பள்ளி வாசலுக்கு அருகிலேயே குடியேறத் திட்டமிட்ட போது) நபி (ஸல்) அவர்கள், பனூ ச-மா குலத்தினரே! உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர்பார்க்கலாமே! என்று கூறினார்கள்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(36:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆஸாரஹும்’ எனும் சொற்றொடருக்கு அவர் களுடைய கால் எட்டுகள்’ என்று பொருள்.

656 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ ச-மா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குத் தொலைவிலிருந்த) தங்கள் குடியிருப்புகளை இடமாற்றம் செய்து நபி (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். மதீனா(வின் இதர பகுதிகள்) கா-யாவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். எனவே, (பனூ ச-மா குலத்தினரே!) உங்கள் கால் எட்டுகளின் அளவுக்கு நீங்கள் நன்மையை எதிர் பார்க்கலாமா! என்று கூறினார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(36:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள)அவர்களுடைய கால் எட்டுகள்’ என்பது அவர்கள் கால்நடையாக நடந்துவருவதால் ஏற்படும் காலடிச் சுவடுகளைக் குறிக்கும்.

பாடம் : 34

இஷாத் தொழுகையை கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவதன் சிறப்பு.

657 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்)குமாறு பணித்துவிட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்கு புறப்பட்டு வராமலிருப்பவரை (நோக்கிச் சென்று, அவரை) எரித்துவிட முடிவு செய்தேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

பாடம் : 35

இரண்டு பேரும் அதற்கு மேற்பட்டோரும் ஜமாஅத்’ ஆவர்.

658 மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பயணம் புறப்படவிருந்த இருவரிடம்) நபி (ஸல்) அவர்கள், தொழுகை நேரம் வந்துவிட்டால் தொழுகைஅறிவிப்பு (பாங்கு,) இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும் என்று சொன்னார்கள்

பாடம் : 36

தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாசலில் உட்கார்ந்திருப்பதும், பள்ளி வாசல்களின் சிறப்பும்.

659 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்தில் (கூட்டுத் தொழுகையை எதிர்பார்த்து) இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு சிறுதுடக்கு ஏற்படாதவரை (பிராத்திக்கிறார்கள்). இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணைபுரிவாயாக! என்று கூறுகின்றனர்.

தொழுகையானது, ஒருவரைத் தம் குடும்பத்தாரிடம் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவ்வாறு அவரைத் தொழுகை நிறுத்தியிருக்கும் வரை அவர் தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

660 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (-அடைக்கலம்) அளிப்பான்:

1. நீதி மிக்க ஆட்சியாளர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.

4. அல்லாஹ்வுக்காகவே நட்புக் கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.

5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்.

6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

661 ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மோதிரம் எதையும் அணிந்திருக்கிறார்காள? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம்; நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையை பாதி, இரவு வரை பிற்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து (எங்களுடன்) தொழுதுவிட்டு பின்னர் எங்களை நோக்கி, மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை தொழுகையிலேயே உள்ளீர்கள் (அது வரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்) என்று சொன்னார்கள்.

இப்போதும் நான் நபியவர்கள் அணிந்திருந்த மோதிரம் மின்னுவதைப் பார்ப்பது போன்றுள்ளது.

பாடம் : 37

பள்ளிவாசலுக்குச் சென்று வரும் மனிதர் அடையப் பெறும் சிறப்பு.

662 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பள்ளிவாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும் போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.

பாடம் : 38

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

663 அப்துல்லாஹ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒரு மனிதர் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுது கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கையை முடித்ததும் மக்கள் அந்த மனிதரை சூழ்ந்துவிட்டனர். அப்போது அந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? சுப்ஹு (என்ன) நான்கு ரக்அத்களா? என்று (கடிந்தவாறு) கேட்டார்கள்.

இன்னும் பல அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 39

ஜமாஅத்தை விட்டுவிடுவதற்குரிய நோயாளியின் நோயின் அளவு.

664 அஸ்வத் பின் யஸீத (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசிக் கொண்டி ருந்தோம். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்து, அதற் காக பாங்கு சொல்லப்பட்டது. அப்போது அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுவிக்கும்படி சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு, அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாக துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவார்கள்.) அவர்களால் மக்களுக்கு தொழுவிக்க முடியாது என்று சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் முன்பு சொன்னது போன்றே மீண்டும் சொன்னார்கள். மக்களும் முன்பு சொன்ன பதிலேயே மீண்டும் சொன்னார்கள். முன்றாவது முறை (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள் ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் புறப்பட்டு வந்து (இமாமாக நின்று மக்களுக்குத்) தொழுகை நடத்தி(டலா)னார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது உடல் நலம் சற்றுத் தேறியிருப்பதை (அப்போது) உணர்ந்த போது இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி புறப்பட்டு வந்தார்கள். நோயினால் (கால்களை ஊன்றமுடியாமல்) தம் மிரு கால்களையும் தரையில் பதித்து கோடிட்டுக் கொண்டு அவர்கள் புறப்பட்டு வந்ததை இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது (நபி ளஸல்ன அவர்கள் பள்ளிக்குள் வருவதை அறிந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அங்கேயே இருங்கள்’ என்று (கையால்) சைகை செய்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை (உள்ளே) கொண்டு வரப்பட்டது. அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அஃமஷ் (ரஹ்) அவர்கள் இதை அறிவித்துக் கொண்டிருந்த போது அவர்களிடம், (அப்போது) நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்த, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர்

 (ரலி) அவர்கள் தொழுதார்களா? அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின் பற்றி மக்கள் தொழுதனரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அஃமஷ் (ரஹ்) அவர்கள் தம் தலையால் ஆம்’ என (சைகையால்) பதிலளித்தார்கள்.

அஃமஷ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ஒரு பகுதியை அபூதாவூத் அத்தயா-ஸி (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அபூ முஆவியா (முஹம்மத் பின் ஹாஸிம்-ரஹ்) அவர்களின் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்(து தொழு)தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றவாறு தொழுது கொண்டிருந்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

665 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் உடல் கனத்தும் அவர்களுடைய நோய் கடுமையாகியும்விட்ட போது என் வீட்டில் (தங்கி) நோய்க் காலப் பராமரிப்புப் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கும் படி தம் மற்ற துணைவியரிடம் கேட்டார்கள்; அவர்களும் நபியவர்களுக்கு அனுமதியளித்துவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டில் தங்கியிருக்கையில் ஒரு நாள்) தம் இரு கால்களும் பூமியில் இழுபட இரு மனிதர் களுக்கிடையே தொங்கியபடி (தொழுகைக்குப்) புறப்பட்டார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறொரு மனிதருக்கும் இடையில்தான் (தொங்கியபடி) சென்றார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இ(வ்வாறு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய)தை நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அவர்கள் என்னிடம், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாமல் விட்ட மனிதர் யாரென்று தெரியுமா? என்று கேட்டார்கள். நான், இல்லை(தெரியாது என்று பதிலளித்தேன். அவர்கள், அந்த மனிதர் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள்தாம் என்று கூறினார்கள்.

பாடம் : 40

மழை மற்றும் (கடுங்காற்று போன்ற) வேறு காரணங்களை முன்னிட்டு ஒருவர் (ஜமாஅத்திற்கு வராமல்) தம் இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ள அனுமதி உண்டு.

666 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள் (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், (கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள் என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள் என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்

667 மஹ்மூத் பின் ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

கண் பார்வையிழந்த இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் தம் சமூகத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்துபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), அல்லாஹ்வின் தூதரே! (சில நாட்களில்) இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது. நானோ பார்வை மங்கியவன். எனவே, அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் வந்து) என் வீட்டில் ஓர் இடத்தில் தொழவேண்டும். அதை நான் தொழும் இடமாக ஆக்கிக்கொள்வேன் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று, (உங்கள் வீட்டில்) எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென நீங்கள் விரும்புகின்றீ ர்கள்? எனக் கேட்டார்கள். உடனே இத்பான் (ரலி) அவர்கள் வீட்டில் ஒரு பகுதியைக் சுட்டிக் காட்டினார்கள். அந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள்

பாடம் : 41

(மழை குளிர் போன்ற நேரங்களில்) வந்தி ருப்பவர்களுக்கு மட்டும் இமாம் தொழுகை நடத்தலாமா?வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் மழையிருந்தாலும் (குத்பா) உரை நிகழ்த்தவேண்டுமா?

668 அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சேறும் சகதியும் நிறைந்த (மழை தூறிக் கொண்டிருந்த) ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். பாங்குசொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்)’ என்று சொல்லப்போன போது (உங்கள்) இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அஸ்ஸலாத்து ஃபிர் ரிஹால்) என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அதை வெறுப்பது போன்று அ(ங்கிருந்த)வர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இவ்வாறு நான் செய்தது உங்களுக்குப் பிடிக்கவில்லை போன்று தெரிகிறது. ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும் என்னை விடச் சிறந்தவர் -நபி (ஸல்) அவர்கள்- இவ்வாறுதான் செய்தார்கள். உங்களுக்கு சிரமம் கொடுப்பதை நான் வெறுத்தேன் (எனவேதான் இருப்பிடங்களிலேயே தொழச் சொன்னேன்) என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், நீங்கள் முழங்கால் வரை சகதியை மிதித்துக் கொண்டு வருமளவிற்கு உங்களுக்கு சிரமம் சொடுப்பதை நான் வெறுத்தேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

669 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் (லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவு பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் (குறிப்பிட்டவற்றில் பின்வருமாறும்) கூறினார்கள்:

(திடீரென) ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அதனால் பள்ளிவாச-ன் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அப்போது அந்தக் கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்(டு தொழுகை நடத்தப்பட்)டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் சிரவணக்கம் (சஜ்தா) செய்ததால் அவர்களது நெற்றியில் களி மண்ணின் அடையாளத்தைக் கண்டேன்.

670 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒருவர் (நபி ளஸல்ன அவர்களிடம்) என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் தொழ முடிவதில்லை என்று கூறினார்- (ஏனெனில்) அவர் உடல் பருமனான மனிதராக இருந்தார். எனவே, அவர் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயார் செய்து தம் இல்லத்திற்கு வருமாறு அவர்களை அழைத்தார். (அவருடைய இல்லத்திற்கு நபி ளஸல்ன அவர்கள் வந்த போது) நபி (ஸல்) அவர்களுக்காக பாயொன்றை விரித்து (பதப்படுத்துவதற்காக) அந்தப் பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். அந்தப் பாயில் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஜாரூத் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை தொழுபவ ர்களாக இருந்தார்களா? என்று கேட்டார். அதற்கு அனஸ் பிஙன மாலிக் (ரலி) அவர்கள், அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் ளுஹா தொழுகை தொழுவதை நான் கண்டதில்லை என்று கூறினார்கள்.

பாடம் : 42

உணவு (முன்னே) வந்துவிட்ட நிலையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (முதலில் சாப்பிடுவதா? அல்லது தொழுவதா?)

(இத்தகைய நிலையில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் முதலில் சாப்பிடுவார்கள் (பிறகு தொழுவார்கள்).

ஒருவர் தமது (அத்தியாவசியத்) தேவைகளை நோக்கிச் சென்று (அவற்றை முடித்துவிட்டு) தமது உள்ளம் ஓய்வாக இருக்கும் நிலையில் தொழுகையில் ஈடுபடுவதே புத்திசா-த் தனமாகும் என அபூத் தர்தா

(ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

671 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்க தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் செல்லுங்கள்.)

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

672 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவதற்கு முன் உங்கள் முன்னால் உணவு வைக்கப்படுமானால்

முதலில் உணவை உண்ணுங்கள். அந்த உணவை விடுத்து (தொழுகைக்காக) அவசரப்படவேண்டாம்.

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

673 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு முன் இரவு உணவு வைக்கப்பட்டுக் கொண்டிருக்க தொழுகைக்கு இகாமத்’சொல்லப்பட்டுவிட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். அதை (உண்டு)முடிக்கும் வரை (தொழுகைக்காக) அவசரப்படவேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும். அவர்கள் (சாப்பிட்டு) முடிக்காத வரை தொழுகைக்குச் செல்லமாட் டார்கள். அப்போது இமாம் ஓதுவதைக் கேட்ட படியே (சாப்பிட்டுக் கொண்டு) இருப்பார்கள்.

674 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர் தம் தேவையை முடிப்பதற்கு முன்பாக அவசரப்ப(ட்டு எழுந்துவி)ட வேண்டாம். தொழுகைக்காக இகாமத்’ சொல்லப்பட்டாலும் சரியே!

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 43

இமாமின் கையில் உணவு இருக்கும் நிலையில் அவரைத் தொழுகைக்காக அழைக்கப்பட்டால்…

675 அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கரத்திலிருந்த கத்தியால் ஆட்டுச்) சப்பையைத் துண்டு போட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன் அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் கத்தியை கீழேபோட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். புதிதாக அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.

பாடம் : 44

வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட வேண்டும்.

676 அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்? என்று நான் ஆயிஷா (ரலி) அவர் களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டுவிட்டு) தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 45

நபி (ஸல்) அவர்களின் தொழுகையையும் அவர்களின் வழி முறையையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களுக்குத் தொழுகை நடத்துவது.

677 அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களது இந்த (பஸ்ரா) பள்ளிவாசலுக்கு மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து,உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை தொழுவிப்பது என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழுகக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன் என்று கூறி(விட்டு தொழுது காட்டி)னார்கள்.

இதன் அறிவிப்பாளர் அய்யூப் அஸ்ஸக்தியானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) எவ்வாறு தொழுவார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதோ (அம்ர் பின் சலமா எனும்) இந்த பெரியவரைப் போன்றே தொழுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

அம்ர் பின் சலமா முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக எழுவதற்கு முன் (நிலைக்கு உயரும் போது சிறிது) அமர்ந்துவிட்டு எழும் முதியவராக இருந்தார்.

பாடம் : 46

கல்வியும் சிறப்பும் உடையவரே தலைமை தாங்கித் தொழுவிக்க மிகவும் தகுதியுடையவராவார்.

678 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் அந்திமக் காலத்தில்) நோய்வாய்ப்ட்டார்கள். அவர்களது நோய் கடுமையான போது, அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள்என்று (தம் அருகில் இருந்தவர்களிடம்) கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர். (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நிற்கும் போது (மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவார்கள். எனவே) அவர்களால் மக்களுக்கு தொழுவிக்க முடியாது என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும் படி சொல்லுங்கள் என்று (மீண்டும்) கூறினார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு தொழுகை நடத்தச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு, (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் என்று கூறினார்கள். ளநபி (ஸல்) அவர்களின்ன தூதுவராக ஒருவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (தொழுவிக்கும் படி) சொன்னார். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும் போது (அவர்கள் இறக்கும் வரை) மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்

679 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது, அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான், அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற் காக) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர்கள் (மனம் நெகிழ்ந்து) அழுவதனால் மக்களுக்கு அவர்களால் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே மக்களுக்கு உமர் (ரலி) அவர்களை தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (நபி ளஸல்ன அவர்களிடம்) கூறினேன்.

மேலும் (நபி ளஸல்ன அவர்களின் துணைவி யரில் ஒருவரான) ஹஃப்ஸாவிடம், அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதனால் மக்களுக்கு அவர்கள் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே, மக்களுக்கு உமர் (ரலி) அவர்களை தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸா அவர்கள் (நான் சொன்ன படி) செய்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (போதும்) நிறுத்துங்கள்! நிச்சயமாக நீங்கள்தாம் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ர் அவர் களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம்,உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை என்று கூறினார்.

680 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களை (ஒவ்வொரு விஷயங்களிலும்) பின்பற்றுபவரும், நபியவர்களின் சேவகருமான நபித்தோழர் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எந்த நோயில் நபி (ஸல்) அவர்கள் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது அபூபக்ர் (ரலி) அவர்களே மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். மக்கள் திங்கட் கிழமையன்று (ஃபஜ்ர்) தொழுகையில் வரிசையில் நின்று கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா ளரலினஅவர்களது) அறையின் திரையை விலக்கி, நின்று கொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முகம் புத்தகத்தின் பக்கத்தைப் போல் (பொ-வுடன்) இருந்தது. பிறகு அவர்கள் (எங்களைப் பார்த்து) மகிழ்ந்தவர்களாய் புன்னகை புரிந்தார்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியினால் நாங்கள் (தொழுகையில் கவனம் சிதறி) குழம்பிவிடுவோமா என்று எண்ணிணோம் அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வர விரும்புகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்’ என்று (தம் கரத்தால்) சைகை செய்தார்கள்; (பிறகு அறைக்குள் நுழைந்து கொண்டு) திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்தார்கள்.

681 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இறுதியாக அமர்ந்து எங்களுக்கு தொழுகை நடத்திவிட்டுப் போனதிலிருந்து) மூன்று நாட்கள் வெளியில் வரவில்லை. (மூன்றாம் நாள்) தொழுகைக்கு இகாமத்’ சொல்லப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது அறையின்) திரையை உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் தெரிந்த போது (நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். எந்த அளவிற்கென்றால்,) எங்களுக்குக் காட்சியளித்த அவர்களின் முகத்தைவிட மகிழ்வூட்டும் எந்தக் காட்சியையும் நாங்கள் கண்டதில்லை (எனும் அளவிற்கு மகிழ்ந்தோம்). அப்போது நபி (ஸல்) அவர்கள் (பின்வாங்க முற்பட்ட) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் முன்னே செல்லுமாறு (மக்களுக்குத் தொழுவிக்கு மாறு) தமது கரத்தால் சைகை செய்தார்கள் (பிறகு அறையின்) திரையைத் தொங்க விட்டுவிட்டார்கள். பிறகு அதற்குக்கூட இயலாமல் இறந்துவிட்டார்கள்.

682 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அந்திமக்காலத்தில் நோயின்) வேதனை அதிகமான போது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், (என்தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாக துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடைய மனிதர். (நீங்கள் நிற்குமிடத்தில் நின்று) அவர்கள் குர்ஆன் ஓதினால் அவர்களுக்கு அழுகை மே-ட்டுவிடும் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் முன்பு சொன்னதையே மீண்டும் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் முன்போன்றே அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு, (பெண்களாகிய) நீங்கள் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் என்று சொன்னார்கள்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 47

ஒரு காரணத்தை முன்னிட்டு ஒருவர் இமாமுக்குப் பக்கவாட்டில் நின்று தொழுவது.

683 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்திமக் காலத்தில்) நோயுற்றிருந்த போது மக்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்களை (இமாமாக நின்று) தொழுவிக்குமாறு பணித்தார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தமது நோய் சற்றுக் குறைந்திருக்கக் கண்ட போது (இரண்டு மனிதர்களை கைத்தாங்கலாக்கி) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், பின் வாங்க முயன்றார்கள். அப்படியே இருங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்துவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள்.

பாடம் : 48

ஒருவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்க ஆரம்பித்துவிட, (வழக்கமாகத் தொழுவிக்கும்) முதலாவது இமாம் வந்து விட்டால், தொழுவித்துக் கொண்டிருக்கும் அவர் பின்வாங்கினாலும் பின்வாங்கா விட்டாலும் அவருடைய தொழுகை நிறைவேறிவிடும்.

684 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குபாவில் இருந்த பனூஅம்ர் குலத்தாரிடையே தகராறு நிகழ்ந்துவிட்டதாகச் செய்தி வந்ததை யொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரை நோக்கி அவர்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காகச் சென்றார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிட்டது. (நபி ளஸல்ன அவர்கள் வரத் தாமதமாகவே) தொழுகை அறிவிப்பாளர் (பிலால் ளரலின அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, நீங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்துகிறீர்களா, நான் இகாமத் சொல்கிறேன்? என்று கூறினார்கள் ஆம் (அவ்வாறே செய்வோம் என்று கூறிவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தலைமை தாங்கி) தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (தொழுகை வரிசைகளை) விலக்கிக் கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் அவர்களுக்கு நபி ளஸல்ன வந்துவிட்டதைத் தெரிவிக்க) கைத்தட்டினார்கள். (பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்க்க  மாட்டார்கள். மக்கள் கை தட்டுவது அதிகரித்த போது திரும்பிப்பார்த்தார்கள். (அங்கே முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அங்கேயே இருங்கள்’ என்று சைகை செய்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு தம்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணித்தற்காக (இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக) தமது கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று (நின்று) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும். அபூபக்ரே! நான் உங்களை நான் (அங்கேயே நின்று தொழுவிக்குமாறு) பணித்தும் நீங்கள் ஏன் அங்கேயே நிற்கவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), உங்களை ஏன் அதிகமாகக் கைத்தட்டக் கண்டேன்? ஒருவருக்கு அவரது தொழுகையில் ஏதேனும் ஐயம் (ஆட்சேபம்) ஏற்பட்டுவிட்டால் அவர் (அதை உணர்த்தும் முகமாக) இறைவனை (சுப்ஹானல்லாஹ்’-அல்லாஹ் தூயவன் எனக் கூறி)த் துதிக்கட்டும். ஏனெனில் அவர் இறைவனைத் துதிக்கும் போது அவரளவில் கவனம் செலுத்தப்படும். கைத்தட்டும் முறை பெண்களுக்குரியதாகும் என்று கூறினார்கள்.

பாடம் : 49

குர்ஆனை (மனனமிட்டு) ஓதுவதில் பலர் சமமாக இருப்பார்களானால் அவர்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்.

685 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவுக்குச்) சென்று ஏறத்தாழ இருபது நாட்கள் அவர்களிடம் தங்கியிருந்தோம் .-நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர் களாக இருந்தார்கள்.- (பிறகு நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல ஆசைப் படுவதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றால் நீங்கள் கற்றிருப்பதை அவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்; (கடமையானவற்றைச் செய்யுமாறு) அவர்களைப் பணியுங்கள். இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள்

பாடம் : 50

இமாம் ஒரு கூட்டத்தாரைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தலாம்.

686 இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் வீட்டில் தொழவாருங்கள்’ என்று நான்விடுத்த வேண்டுகோளை ஏற்று வந்த,) நபி (ஸல்) அவர்கள்,என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதியளித்தேன். உங்கள் வீட்டில் நான் எந்த இடத்தில் தொழவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் விரும்பிய இடத்தை அவர்களுக்கு சுட்டிக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்றார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். (தொழுதோம்) பின்னர் அவர்கள் சலாம் கொடுத்தார்கள்; நாங்களும் சலாம் கொடுத்தோம்

பாடம் : 51

மக்கள் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவே இமாம் நியமிக்கப்படுகிறார்.

நபி (ஸல்) அவர்கள் எந்த கோயில் இறந்துபோய்விட்டார்களோ அந்த நோயின் போது உட்கார்ந்தவாறே மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

இமாம் (குனிவு, சிரவணக்கம் போன்றவற்றிலிருந்து) தலையை உயர்த்துவதற்கு முன் (பின்பற்றித் தொழும்) ஒருவர் (தமது தலையை) உயர்த்திவிட்டால், தாம் (தலையை) உயர்த்திய அளவு நேரம் (மீண்டு சென்று பொறுத்து இருந்துவிட்டு பிறகு இமாமைப் பின்தொடர வேண்டும்.

இமாமுடன் இரண்டு ரக்அத்கள் தொழும் ஒருவர் (நெரிசல் முத-ய காரணங்களால்) (முதல் ரக்அத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய முடியாமற் போய்விடுகிறது. இவரைப் பற்றிக் கூறுகையில் ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள், அவர் இரண்டாவது ரக்அத்திற்குரிய இரு சஜ்தாக்களை செய்வார். பிறகு முதல் ரக்அத்தையும் அதன் சஜ்தாவையும் (எழுந்து) மீண்டும் நிறைவேற்றுவார் என்று சொன்னார்கள். ஒரு சஜ்தா செய்யாமல் மறந்து எழுந்துவிட்டால் உடனே சஜ்தாவுக்கு சென்று விட வேண்டும்என்றும் கூறினார்கள்.

687 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்திமக் காலத்தில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் கூறக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் (கூறுகிறேன்). நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது, மக்கள் தொழுதுவிட்ட னரா? என்று கேட்டார்கள். நாங்கள், இல்லை, அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். அப்போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, மக்கள் தொழுதுவிட்டனரா? என்று கேட்டார்கள். நாங்கள், இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கி றார்கள், அல்லாஹ்வின் தூதரே!என்று சொன்னோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்றார்கள். (அவ்வாறே நாங்கள் வைத்த போது) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்ட போது (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்த போது,மக்கள் தொழுதுவிட்டனரா? என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்று கூறினார்கள். (நாங்கள் தண்ணீர் வைத்தோம்.) அவர்கள் உட்கார்ந்து குளித்தார்கள். பிறகு அவர்கள் எழ முற்பட்ட போது (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் அவர்கள் மயக்கம் தெளிந்த போது (அப்போதும்,) மக்கள் தொழுதுவிட்டனரா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் துதரே! என்றோம்.-அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் வீற்றிருந்தனர்.-ஆகவே நபி (ஸல்) அவர்கள் (தூதர் ஒருவரை) அனுப்பி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள் என்று கூறினர்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள்-அன்னார் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர் (என்பது குறிப்பிடத்தக்கது.)-உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள் என்று (உமர் ளரலின அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், இதற்கு நீங்கள்தாம் என்னைவிட தகுதியுடையவர் என்று அபூபக்ர் (ரலி) அவர் களிடம் கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ர்

(ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்கு இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். பின்னர் (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் தமது நோய் சுற்றுக் குறைந்திருக் கக் கண்ட போது இரண்டு பேரிடையே (அவர் களைக் கைத்தாங்கலாக்கிக் கொண்டு) லுஹ்ர் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள்.- அந்த இரண்டு பேரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் பின் வாங்கிட முயன்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பின் வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்து வந்த இருவரிடமும்) என்னை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் உட்காரவையுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழத் துவங்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் உட்கார்ந்து தொழுது கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியதை நான் உங்களிடம் கூறட்டுமா?என்று கேட்டேன். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், சொல்லுங்கள் என்றார்கள். ஆகவே நான் ஆயிஷா

(ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அவர்கள் மறுக்கவில்லை. ஆயினும் ஆயிஷா (ரலி) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த வேறொரு மனிதரின் பெயரை உம்மிடம் குறிப்பிட்டார்களா? எனக் கேட்டார்கள். நான், இல்லை (குறிப்பிடவில்லை) என்று சொன்னேன். அவர்தாம் அலீ (ரலி) என்று கூறினார்கள்

688 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது தமது இல்லத்தில் (மாடியறையில்) உட்கார்ந்த படியே தொழுதார்கள். (அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்திருந்த) மக்கள் சிலர் அவர்களுக்குப் பின்னால் நின்றபடி தொழுதனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் உட்காருங்கள்’ என்று சைகை செய்தார்கள். தொழுகை முடிந்த போது, இமாம் பின் பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்படுகிறார். அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள் என்று சொன்னார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் பற்றிய விவரம் அறிய காண்க: பாகம்-6, ஹதீஸ் எண் : 5658)

689 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்து கொண்டி ருந்த போது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களது வலப் புற விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. ஆகவே (கடமையான) தொழுகைகளில் ஒன்றை அவர்கள் உட்கார்ந்தபடியே தொழு(வித்)தார்கள். ஆகவே நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். தொழுகை முடிந்த போது இமாம் பின்பற்றப்படு வதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்; அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்;அவர் குனிந்தால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்;அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ (தன்னைப் புகந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.) என்று சொன்னால் நீங்கள் ரப்பனா ல(க்)ல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்றே தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள் என்று கூறினார்கள்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர் அல்மக்கீ அல்ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

முன்பொரு முறை நோய்வாய்ப்பட்டிருந்தபோதே நபி (ஸல்) அவர்கள், இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்தே தொழுங்கள் என்று சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் (தம் அந்திமக் காலத்தில்) உட்கார்ந்து தொழுத போது (அவர்களுக்குப் பின்னாலிருந்த) மக்கள் நின்றே தொழுதனர். அவர்களை உட்காருமாறு நபி (ஸல்) அவர்கள் பணிக்கவில்லை. (பொதுவாக நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களில்) கடைசியானதை அடுத்துக் கடைசியானதையே எடுத்துக் கொள்ளவேண்டும். (எனவே, இமாம் உட்கார்ந்து தொழுதால் பின்பற்றுபவர்களும் உட்கார்ந்து தொழவேண்டும் எனும் விதி மாற்றப்பட்டுவிட்டது.)

பாடம் : 52

இமாமுக்குப் பின்னால் தொழுபவர் எப்போது சஜ்தா செய்ய வேண்டும்?

இமாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் செய்யுங்கள் என அனஸ் (ரலி0அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

690 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவரான பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னை புகழ்ந்தோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிவிட்டால் எங்களில் யாரும் அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்யாத வரை எங்கள் முதுகை (சிரவணக்கத்திற்காக) வளைக்கமாட்டோம்;அவர்கள் (சிரவணக்கத்திற்கு சென்ற) பின்புதான் நாங்கள் சிரவணக்கம் செய்வோம்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே (கருத்திலமைந்த) ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 53

(ருகூஉ, சஜ்தாவில்) இமாமுக்கு முந்தித் தலையை உயர்த்துவது குற்றமாகும்.

691 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக் கொண்டு தம் தலையை உயர்த்துவதால் அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தை கழுதையுடைய உருவ மாகவோ அல்லாஹ் ஆக்கிவிடுவதை அஞ்ச வேண்டாமா?

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 54

அடிமையும், விடுதலை செய்யப்பட்ட அடிமையும் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவர்களுடைய அடிமையான தக்வான் என்பார் (தலைமை தாங்கித் தொழுவித்தால்) குர்ஆனைப் பார்த்தே ஓதுவார்.

தவறான உறவில் பிறந்தவன், கிராமவாசி, பருவடையாத சிறுவன் ஆகியோரும் (தலைமை தாங்கித் தொழுவித்தால் தொழுகை செல்லும்.) ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (யார் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டும் என்பது குறித்துக் கூறுகையில்) அல்லாஹ்வுடைய வேதத்தை நன்றாக ஓதக் கூடியவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று (பொதுப்படையாகவே) கூறியுள்ளார்கள்.

692 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முதல்கட்டமாக (மதீனாவிற்கு நாடு துறந்து வந்த) முஹாஜிரீன்கள்-குபா பகுதியில் உள்ள- அல்உஸ்பா எனும் இடத்திற்கு வந்(து சேர்ந்)த போது அங்குள்ள மக்களுக்கு அபூஹுதைஃபா (ரலி) அவர்களின் அடிமை யிலிருந்த சாலிம் (ரலி) அவர்களே அவர்களுக்கு தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். இது நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து (மதீனாவிற்கு) வருவதற்கு முன்பு நடைபெற்றது. அவர் (சாலிம்) குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தார்.

693 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலர்ந்த திராட்சை போன்றத் தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற அடிமையொருவ)ர் உங்களுக்குத் தலைவராகக்கப்பட்டாலும் அவரது சொல்லுக்கு செவிசாயுங்கள்; அவருக்குக் கீழ்படியுங்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 55

தலைமைத் தாங்கித் தொழுவித்துக் கொண்டி ருப்பவர் (தொழுகையை) முழுமைப் படுத்தாவிட்டாலும் அவருக்கு பின்னால் இருப்பவர்கள் (அதை) முழுமைப்படுத்த வேண்டும்.

694 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இமாமாக நியமிக்கப்படுகின்ற) அவர்கள் உங்களுக்காகத் தொழுகை நடத்துகிறார்கள். அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கு நன்மை உண்டு; அவர்களுக்கும் நன்மை உண்டு. அவர்கள் தவறு செய்வார் களானால் (நீங்கள் சரியாகத் தொழுவதற்காக) உங்களுக்கு நன்மை உண்டு; (தவறிழைத்ததற்காக) அவர்களுக்கு தீமை உண்டு.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 56

குழப்பக்காரர், (மார்க்க அடிப்படையற்ற) நூதனக் கருத்துக்கள் உடையவர் (பித்அத் வாதி) ஆகியோர் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது.

நீ (அவன் பின்னால்) தொழுதுகொள்! அவனுடைய நூதனக் கொள்கை (பித்அத்) அவனுக்கே பாதகமாகும் என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

695 உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று, நீங்கள் மக்களின் இமாம் (தொழுகை நடத்துபவர்) ஆவீர்கள். உங்களுக்கு சோதனை ஏற்பட்டிருப்பதை (முற்றுகையிட்டிருப்பதை) நாங்கள் காண்கிறோம். இந்நிலையில் (இன்று) எங்களுக்கு குழப்ப இமாம் தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால் நாங்கள் (பாவத்தில் வீழ்கிறோமா என்ற அச்சத்தில்) மனவேதனை அடைகிறோம். (எனவே, அவருக்குப் பின்னால் நாங்கள் தொழலாமா?) என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், தொழுகை, மக்கள் செய்கின்ற செயல்களிலேயே மிக நல்ல செயலாகும். மக்கள் நன்மை செய்தால் நீங்களும் நன்மை செய்யுங்கள். அவர்கள் தவறிழைத்தால் அவர்கள் இழைக்கும் தவறுகளிலிருந்து நீங்கள் ஒதுங்கி விடுங்கள் என்று சொன்னார்கள்.

முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

தவிர்க்க முடியாத காரணமில்லாமல் (ஆணும் பெண்ணுமல்லாத) அ-க்குப் பின்னால் தொழக் கூடாது என்றே நாம் கருதுகிறோம்.

696 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், (உங்களுக்குத் தலைவராக்கப்படுபவர்) உலர்ந்த திராட்சை போன்ற தலையுடைய அபிசீனியராயிருப்பினும் அவரது சொல்லுக்கு நீங்கள் செவிசாயுங்கள்; அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று சொன்னார்கள்.

பாடம் : 57

இரண்டுபேர் (மட்டும் சேர்ந்து) ஜமாஅத்தாக தொழும் போது பின்பற்றித் தொழுபவர் தலைமைத் தாங்கித் தொழுபவருக்குச் சமமாக அவருக்கு நேராக வலப் பக்கத்தில் நிற்க வேண்டும்.

697 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷாத் தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் (தொழுது கொண்டி ருந்த) என்னை (இழுத்து) தமது வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அவர்களது (மிதமான) குறட்டைச் சப்தத்தை’ அல்லது லேசான குறட்டைச் சப்தத்தை’ நான் கேட்குமளவிற்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பின்னர் (சுப்ஹுத்) தொழுகைக்கு புறப்பட்டுச் சென்றார்கள்

பாடம் : 58

ஒரு மனிதர் இமாமுக்கு இடப் பக்கம் (போய்) நிற்க, இமாம் (தொழுகையில் இருந்தவாறே) அந்த மனிதரைத் (தமது கையால் இழுத்து) வலப் பக்கத்தில் நிறுத்துவதால் இருவரின் தொழுகையும் பாழாகிவிடாது.

698 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயாரும், நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்கள் வீட்டில் ஓர் இரவு) உறங்கினேன். மைமூனா (ரலி) அவர்களிடம் அன்றைய இரவில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நபியவர்கள் (சிறிது நேரம் உறங்கி எழுந்து) உளூ’ செய்துவிட்டு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் (தொழுகையில் இருந்தவாறே) என்னைப் பிடித்து தமது வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் பதி மூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் குறட்டைவிடும் அளவிற்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும் போது குறட்டைவிடும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள்.- பிறகு தொழுகை அறிவிப்பாளர் அவர்களிடம் வந்(து தொழுகை நடத்த அவர்களை அழைத்)த போது (பள்ளிக்குப்) புறப்பட்டுச் சென்று (புதிதாக) உளூ செய்யாமலேயே (சுப்ஹுத் தொழுகையை) தொழு(வித்)தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் ஹர்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த ஹதீஸை நான் புகைர் (பின் அப்துல்லாஹ் அல்அஷஜ்-ரஹ்) அவர்களிடம் அறிவித்த போது அவர்கள், இவ்வாறே ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப் பட்ட அவர்களின் முன்னாள் அடிமையானன குரைப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 59

தலைமை தாங்கித் தொழுவிக்கும் எண்ணமில்லாமல் (தனியாகத்) தொழுது கொண்டிருப்பவரை மற்றவர்கள் பின்பற்றித் தொழுதால் (தொழுகை நிறைவேறும்).

699 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக் கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கம் நின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தம் வலப் பக்கம் நிறுத்தினார்கள்.

பாடம் : 60

இமாம் தொழுகையை நீட்டித் தொழுது கொண்டிருக்கும் போது (அவசியத்) தேவை ஏதும் ஒருவருக்கு இருந்தால் அவர் (கூட்டுத் தொழுகையிலிருந்து விலகிச்) சென்று தனியே தொழுதுகொள்வது (செல்லும்.)

700 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு தலைமை தாங்கி (அந்தத் தொழுகையையே மீண்டும்) தொழுவிப்பார்கள்.

701 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்கூறியதாவது :

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். (ஒருமுறை அவர்களுக்கு) முஆத் (ரலி) அவர்கள் இஷாத் தொழுகை தொழுவித்த போது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். அப்போது (அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்றுவிட்டார். எனவே முஆத்

(ரலி) அவர்கள் அந்த மனிதரை கடுமையாக ஏசினார். போலும். (இந்தச் செய்தி) நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (முஆத் ளரலினஅவர்களிடம்)(நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? (நீரென்ன) குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர (அவ்சாத்துல் முஃபஸ்ஸல்) அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

 (நபி ளஸல்ன அவர்கள் ஓதுமாறு பணித்த) அவ்விரு அத்தியாயங்கள் (எதுவென) என் நினைவிலில்லை.

பாடம் : 61

இமாம் தொழுகையின் நிலை’யில் சிறிது நேரமே நிற்பதும் (அதே சமயம்) குனிவு, சிரவணக்கம் (ருகூஉ, சஜ்தா) ஆகியவற்றை பூரணமாக நிறைவேற்றுவதும்.

702 அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி ளஸல்ன அவர்களிடம் வந்து), அல்லாஹ்வின் மீதாணையாக, அல்லாஹ் வின் தூதரே! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு செல்லாமல் நான் தாமதித்துவிடுகிறேன் (ஜமாஅத்திற்கு செல்வ தில்லை.) என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய (தினத்தில் ஆற்றிய) உரையின் போது கோபப்பட்டதை விடக் கடுமை யாகக் கோபப்பட்டு நான் ஒரு போதும் கண்ட தில்லை. பிறகு அவர்கள், (மக்களே!) உங்களில் வெறுப்பூட்டுபவர்கள் சிலரும் உள்ளனர். ஆகவே, உங்களில் எவர் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுருக்கமா(கத் தொழுவி)கட்டும். ஏனெனில் (பின் பற்றித் தொழும்) மக்களில் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் உள்ளனர் என்று சொன்னார்கள்.

பாடம் : 62

தனித்துத் தொழுபவர் விரும்பிய அளவுக்குத் தொழுகையை நீட்டிக் கொள்ளலாம்.

703 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தும் போது சுருக்கமா(கத் தொழுவி)க் கட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்களும், நோயாளிகளும் முதியவர்களும் உள்ளனர். உங்களில் ஒருவர் தமக்காகத் தொழும் போது தாம் விரும்பும் அளவுக்கு நீட்டிக்கொள்ளலாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 63

நீண்ட நேரம் தொழுவிக்கும் தம் இமாமைப் பற்றி ஒருவர் (தலைவரிடம்) முறையிடுவது.

தொழுகையை நீட்டித் தொழுவித்த தம் புதல்வர் முன்திர் என்பவரிடம்) அபூஉசைத் மா-க் பின் ரபீஆ அல்அன்சாரி (ரலி) அவர்கள், அருமை மகனே! எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவித்துவிட்டீரே! என்று (கடிந்து) கூறினார்கள்.

704 அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இன்னார் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவிப்பதால் ஃபஜ்ர் தொழுகை(யின் ஜமாஅத்து)க்குச் செல்லாமல் நான் தாமதித்துவிடுகிறேன்என்று (முறையிட்டுக்) கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைக்கு கோபப்பட்டதைவிடக் கடுமையாக வேறு எந்த இடத்திலும் கோபத்துடனிருக்க நான் கண்டதில்லை பிறகு அவர்கள், மக்களே! உங்களில் வெறுப்பூட் டும் சிலரும் உள்ளனர். ஆகவே உங்களில் எவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துகிறாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட் டும். ஏனெனில் அவருக்குப் பின்னால் பலவீனர் களும், முதியவர்களும், அலுவல் உடையவர்களும் உள்ளனர் என்று கூறினார்கள்

705 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இரு நீரிறைக்கும் ஒட்டகங் களுடன் இரவின் இருள் படர்ந்த நேரத்தில் வந்த போது முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு இஷாத் தொழுகை) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். உடனே தமது ஒட்டகத்தைவிட்டுவிட்டு முஆத் (ரலி) அவர்களை நோக்கி வந்(து கூட்டுத் தொழுகை யில் சேர்ந்)தார். அப்போது முஆத் (ரலி) அவர்கள் (நீண்ட அத்தியாயங்களான) அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தை அல்லது அந்நிஸா (4ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை விட்டுவிட்டுச் ) சென்றுவிட்டார். இது பற்றி முஆத் (ரலி) அவர்கள் தம்மைக் கடிந்து பேசியதாக அந்த மனிதருக்குத் தெரிய வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் வந்து முஆத் (ர) அவர்களைப் பற்றி அவர் நபியவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (முஆத் ளரலின அவர்களை வரவழைத்து) முஆதே! குழப்பம் விளைவிப்பவரா, நீர்? என்று (மூன்று முறை) கேட்டார்கள். சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (86), வஷ்ஷம்ஸ வளுஹாஹா (91), வல்லை- இஃதா யஃக்ஷா (92) ஆகிய (ஓரளவு சிறிய) அத்தியாயங்களை ஓதி நீர் தொழுவித்திருக்கக் கூடாதா?ஏனெனில் உமக்குப் பின்னால் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் தொழுகின்றனர் என்றும் சொன்னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(ஏனெனில் உமக்குப் பின்னால்…எனத் தொடங்கும்) கடைசி வாக்கியம் நபி (ஸல்) அவர்களின் சொல் (அறிவிப்பாளரின் உரை அல்ல)’என்றே நான் கருதுகிறேன்

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றோர் அறிவிப்பில், முஆத் (ரலி) அவர்கள் அந்த இஷாத் தொழுகையில் அல்பகரா (2ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்’ என்று (மட்டும்) இடம் பெற்றுள்ளது.

பாடம் : 64

தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுவிப்பது.

706 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்க மாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரண மாகவும் தொழுவிப்பவர்களாக இருந்தார்கள்.

பாடம் : 65

(தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டி ருப்போரின்) குழந்தை அழுவதைக் கேட்டு (தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டி ருப்பவர்) தொழுகையைச் சுருக்கமாகத் தொழுது முடிப்பது.

707 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீண்ட நேரம் தொழுவிக்கும். எண்ணத்துடன் நான் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுவேன்.

இதை அபூகத்தாதா அல்ஹர்ஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

708 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களைவிட மிகச் சுருக்கமாகவும் (அதே சமயம் எதுவும் விடுபடாமல்) நிறைவாகவும் தொழுவிக்கக் கூடிய வேறு எந்த இமாமுக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. (பின்னால் தொழும் பெண்களின்) குழந்தை அழுவதை அவர்கள் கேட்க நேர்ந்தால் அக்குழந்தையின் தாயாருக்கு சஞ்சலம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.

709 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களின்) குழந்தை அழுவதை நான் செவியேற்பேன். குழந்தையின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமையாகக் கலங்குவதை நான் நன்கு அறிந்திருப்பதால் என் தொழுகையை சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

710 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குவேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களின்) குழந்தை அழுவதைச் செவியேற்பேன். குழந்தையின் அழுகுரல் கேட்டு அதன் தாய் கடுமையாகக் கண் கலங்குவதை நான் நன்கு அறிந்திருப்பதால் நான் (என் தொழுகையை) சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன்.

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 66

(இமாமுக்குப் பின்னால்) தொழுதவர், பிறகு (அதே தொழுகையை அவரே இமாமாக நின்று) மற்றவர்களுக்குத் தொழுவிப்பது.

711 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆத் (பின் ஜபல்-ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். பிறகு தம் சமுதாயத்தாரிடம் சென்று (அதேத் தொழுகையை) அவர்களுக்கு தலைமைத் தாங்கித் தொழுவிப் பார்கள்.

பாடம் : 67

இமாம் தக்பீர் சொல்வதை மக்களுக்குக் கேட்கும் விதமாக ஒருவர் (உரத்த குரலில்) கூறுவது.

712 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போய்விட்டார்களோ அந்த நோயின் போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிப்பதற் காக வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள்,அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு நான், (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவார்கள். அவர்களால் (தொழுகையில்) ஓத முடியாது என்று கூறினேன். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) சொன்னார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் (மீண்டும்) சொன்னேன். மூன்றாவது அல்லது நான்காவது தடவையில் அவர்கள் (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் (மக்களுக்குத்) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்ட போது) இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி (பள்ளிவாசலை நோக்கி) புறப்பட்டு வந்தார்கள். (நோயினால் கால்களை ஊன்ற முடியாமல் தம்மிரு கால்களையும் தரையில் பதித்து கோடிட்டு(க் கொண்டு அவர்கள் புறப்ப)ட்டு வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவிக்கும் இடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் நீங்கள் தொழுகை நடத்துங்கள்’ என்று (கையால்) சைகை செய்தார்கள். ஆயினும் அபூபக்ர் (ரலி) அவர்கள் சற்று பின்வாங்கிக் கொண்டார்கள். நபி (ஸல்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்(து தொழுவித்)தார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் கூறும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக் கொண்டிருந்தார்கள்

பாடம் : 68

இமாமைப் பின் பற்றி ஒருவர் தொழ, அவரைப் பின்பற்றி மக்கள் தொழுவது.

நபி (ஸல்) அவர்கள், (கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில் இருந்தவர்களிடம்) நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றட்டும் என்று சொன்னதாக அறிவிக்கப்படுகிறது.

713 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோய் அதிகரித்துவிட்ட போது அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிக்க வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான்,அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடைய மனிதராவார்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுவதால்) அவர் களால் மக்களுக்குக் கேட்கும்விதமாக (குர்ஆனை) ஓத முடியாது. உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் தொழுவிக்கச் சொல்லலாமே! என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் போசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உடல்நலம் சற்றுத் தேறக் கண்டார்கள். எனவே, இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி, தம்மிரு கால்கள் தரையில் பதித்து (அவற்றை சரிவர ஊன்ற முடியாமல்) கோடிட்டபடி வந்து பள்ளிக்குள் நுழைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வருவதை உணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கப் போனார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி (அங்கேயே நில்லுங்கள் என) சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றபடி தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அமர்ந்தபடி தொழுது கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழ,மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதனர்.

பாடம் : 69

இமாமுக்கு (தம் தொழுகை பற்றி) சந்தேகம் ஏற்பட்டால் (பின்பற்றித் தொழுத) மக்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளலாமா?

714 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையொன்றை) இரண்டு ரக்அத்களில் முடித்துவிட்டார்கள். அப்போது அவர்களிடம் துல்யதைன்’ என்பவர், தொழுகை (யின் ரக்அத்) சுருக்கப்ட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், துல்யதைன் சொல்வது சரிதானா? என்று (மக்களிடம்) கேட்க, மக்கள் ஆம்’ என்று பதிலளித்தனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (முன்னேசென்று விடுபட்ட) இன்னும் இரண்டு ரக்அத்களை தொழு(வித்)துவிட்டு சலாம்’ கொடுத்தார்கள். பிறகு தக்பீர்’கூறி (வழக்கமாகத்) தாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்வது போன்று’ அல்லது (அதைவிட) நீண்ட நேரம்’ (மறதிக்குரிய) சிர வணக்கம் செய்தார்கள்

715 அபூஹுûரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை இரண்டு ரக்அத் தொழுவித்தார்கள். அப்போது (அவர்களிடம்), நீங்கள் இரண்டு ரக்அத்கள்தாம் தொழு(வித்)தீர்கள் என்று சொல்லப்பட்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (இன்னும்) இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)துவிட்டு பிறகு சலாம் கொடுத்தார்கள். பின்னர் (மறதிக்குரிய) இரு சிரவணக்கங்கள் (சஜ்தா) செய்தார்கள்.

பாடம் : 70

தொழுகையில் இமாம் அழுதால்… (தொழுகை பாழாகிவிடுமா?)

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையின் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த நான், என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின் றேன் எனும் (12:86ஆவது) வசனத்தை (தொழுகை யில்) ஓதியபடி உமர் (ரலி) அவர்கள் தேம்பியழு வதை செவியுற்றேன்.

716 இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த) நோயிலிருந்த போது, அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான், அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுகையில்) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதன் காரணமாக அவர்களால் (குர்ஆன் ஓதி) மக்களைக் கேட்கச் செய்யமுடியாது. எனவே, உமர் அவர்களைப் பணியுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும் என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மக்களிடம்) கூறினார்கள். நான் (உமர் ளரலின அவர்களின் புதல்வியாரான) ஹஃப்ஸாவிடம், அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர் அழுவதன் காரணமாக மக்களுக்கு (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே உமர் (ரலி) அவர்களைப் பணியுங்கள் அவர் மக்களுக்கு தொழுகை நடத்தட்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறச் சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸாவும் செய்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நிறுத்து! (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபின் (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம், உன்னால் நான் எந்த நன்மையையும் அடையவில்லை என்று கூறினார்.

பாடம் : 71

இகாமத்’ கூறும் போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்துவது.

717 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்கு படுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திவிடு வான்.

இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

718 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள் ளுங்கள். ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

பாடம் : 72

வரிசைகளை ஒழுங்குபடுத்தும் போது இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.

719 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன் என்று கூறினார்கள்.

பாடம் : 73

முதல் வரிசை(யின் சிறப்பு).

720 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தண்ணீரில்) மூழ்கி இறந்தவர், கொள்ளை நோயினால் இறந்தவர், வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதியால் இறந்தவர், (கட்டட) இடிபாட்டில் சிக்கி இறந்தவர் ஆகியோர் உயிர்த்தியாகிகள் ஆவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

721 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையை) ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் விரைந்து வருவார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள (மகத்துவத்)தை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தேனும் (கூட்டுத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 74

வரிசையை நேராக்குவதும் தொழுகையை பூரணமாக்குவதேயாம்.

722 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் (தொழுகை நடத்துபவர்) ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவருக்கு நீங்கள் முரண்படாதீர்கள்! அவர் குனி(ந்து ருகூஉ செய்)யும் போது நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்! அவர் சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ (இறைவன் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) என்று கூறும் போது நீங்கள் ரப்பனா ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே!) என்று சொல்லுங்கள்! அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்! அவர் உட்கார்ந்து தொழும் போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் தொழுகை வரிசையை நேராக்குங்கள். ஏனெனில் வரிசை நேராக்குவது தொழுகையை அழகுறச் செய்வதேயாம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

723 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (நிறைவுடன்) நிலை நாட்டுவதேயாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 75

தொழுகை வரிசைகளை நிறைவு செய்யாமலிருப்பது குற்றம்.

724 புஷைர் பின் யசார் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் (பஸ்ராவிலிருந்து) மதீனாவுக்கு வந்த போது அவர்களிடம்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்து கொண்ட நடைமுறைக்கு மாறாக வித்தியாசமாக எதை நீங்கள் எங்களிடம் காண்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், நீங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள்வதில்லை என்பதைத் தவிர வேறெதையும் நான் உங்களிடம் வித்தியாசமாகக் காணவில்லை என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் அனஸ் பின் மா-க் (ரலி) அவர் களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 76

தோள் புஜத்துடன் தோள் புஜத்தையும் பாதத்துடன் பாதத்தையும் சேர்த்துக் கொண்டு (தொழுகை) வரிசையில் நிற்பது.

(தொழுகையில் நிற்கும் போது) எங்களில் ஒருவர் தமது கணுக்காலை தம் அருகிலிருப்பவரின் கணுக்காலுடன் சேர்த்துக்கொள்வதை நான் பார்த்துள்ளேன் என நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்:

725 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், உங்கள் (தொழுகை) வரிசைகளை நேராக்கிக்கொள்ளுங்கள்! ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன் என்று கூறினார்கள். (ஆகவே,) எங்களில் ஒருவர் (தொழுகையில்) தமது தோள் புஜத்தை தம் அருகிலிருப்பவரின் தோள் புஜத்துட னும், தமது பாதத்தை தம் அருகிலிருப்பவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொண்டு நிற்பார்கள்.

பாடம் : 77

இமாம் தமக்கு இடப் பக்கத்தில் நிற்பவரை தமக்குப் பின்புறமாக இழுத்து வலப் பக்கத்தில் நிறுத்தினால் அ(வ்விரு)வருடைய தொழுகை நிறைவேறவே செய்யும்.

726 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஓர் இரவு (என் சிறிய தாயார் மைமூனா ளரலின அவர்களின் வீட்டில்) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். அப்போது என் பின் தலையைப் பிடித்து என்னை தம் வலப் பக்கத்தில் நிறுத்தி தொழுதுவிட்டு, (படுத்து) உறங்கினார்கள். (ஃபஜ்ர் நேரமான போது) அவர்களிடம் தொழுகைஅறிவிப்பாளர் (அவர்களை தொழுகைக்காக அழைக்க) வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கசுத்தி (உளூ) செய்யாமலேயே தொழுதார்கள்

பாடம் : 78

(ஆண்கள் வரிசையில் சேராமல்) தனியாக நிற்கும் பெண்கூட ஒருவரிசை என்றே கருதப்படுவார்.

727 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களது வீட்டில் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) நானும் ஓர் அநாதைச் சிறுவரும் தொழுதோம். என் தாயார் -உம்மு சுலைம் (ரலி)- (எங்கள் வரிசையில் சேராமல்) எங்களுக்குப் பின்னால் (நின்று தொழுது கொண்டு) இருந்தார்கள்.

பாடம் : 79

பள்ளிவாச-ன் வலப் புறத்தையும் இமாமின் வலப் புறத்தையும் தேர்ந்தெடுப்பது.

728 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார் மைமூனா ளரலின அவர்களின் வீட்டில்) ஓர் இரவில் நபி (ஸல்) (அவர் களைப் பின்பற்றி) அவர்களுக்கு இடப் புறமாக நின்றேன். உடனே நபி (ஸல்) அவர்கள் எனது கையை’அல்லது எனது புஜத்தை’ப் பிடித்து (அப்படியே என்னை நகர்த்தி) தம் தம் வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள். அப்போது என்னை தமது கரத்தினால் பிடித்து தம் பின் பக்கமாகவே கொண்டு சென்றார்கள்.

பாடம் : 80

இமாமுக்கும் மக்களுக்குமிடையே ஏதேனும் சுவரோ அல்லது தடுப்போ இருந்தால் (கூட்டுத் தொழுகையைப் பாதிக்குமா?)

ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

உனக்கும் உன் இமாமுக்குமிடையே ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தாலும் (அவரைப் பின் பற்றி) நீ தொழுவதில் தவறில்லை.

அபூமிஜ்லஸ் லாஹிக் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இமாமுடைய தக்பீர் செவியில் விழுமானால் -இருவருக்கிடையே சுவரோ நடைபாதையோ இருந்தால்கூட- அந்த இமாமைப் பின்பற்றலாம்.

729 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தமது அறையில் தொழுபவர்களாக இருந்தார்கள். அந்த அறையின் சுவர் குட்டையானதாக இருந்தது. ஆகவே நபி (ஸல்) அவர்களின் உருவத்தை மக்களால் பார்க்க முடிந்தது. அப்போது மக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி (சுவருக்கு அப்பால் நின்றுத்) தொழலாயினர். (மறு நாள்) காலையில் இது பற்றி அவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்த போது அப்போதும் சிலர் அவர்களுடன் எழுந்து அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று இரவுகள் செய்தனர். அதன் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்திற்கு தொழ) வராமல் (வீட்டிலேயே) அமர்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றி (நபியவர்களிடம்) பேசிய போது, இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சினேன் (அதனால்தான் நான் வரவில்லை) என்று கூறினார்கள்.

பாடம் : 81

இரவுத் தொழுகை.

730 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது; பகலில் அதை விரித்துக்கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக்கொள்வார்கள். (அதற்குள் நின்று அவர்கள் தொழும் போது) மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு (வந்து) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுவார்கள்.

731 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக் கொண்டார்கள்- சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக் கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்த போது (அந்த இடத்திற்கு வராமல் தம் இல்லத்திலேயே) அமந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து, உங்களது செயல்களை நான் கண்டறிந்தேன். மக்களே! (உபரியானத் தொழுகை களை) உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள் ளுங்கள். ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர! என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 82

தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவது கட்டாயம்.

732 அனஸ் பின் மா-க் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையில் பயணம் செய்து கொண்டிருந்த போது (கீழே விழுந்து) அவர்களது வலப் பாகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. அன்றைய தினம் அவர்கள் (கடமையான) ஒரு தொழுகையை உட்கார்ந்தபடியே தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தபடியே தொழுதோம். பிறகு அவர்கள் சலாம் கொடுத்(து முடித்)த போது (பின்வருமாறு) கூறினார்கள்: இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் (குனிந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (தன்னைப் புகழ்ந்தோரின் புகழுரையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால், நீங்கள் ரப்பனா வல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று சொல்லுங்கள்.

733 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் அவர்களுக்கு (உட-ன் வலப் பாகத்தில்) சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது. (அன்றைய தினம்) அவர்கள் எங்களுக்கு உட்கார்ந்தபடியே தொழுகை நடத்தினார்கள். நாங்களும் உட்கார்ந்தபடியே (அவர்களுக்குப் பின்னால்) தொழுதோம். தொழுது முடித்ததும் அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார்’* அல்லது (பின்பற்றப்படுவதற் காகவே) இமாம் இருக்கிறார்’. அவர் தக்பீர் (அல்லாஹ்ý அக்பர்’ என்று) சொன்னால் நீங்களும் தக்பீர் (அல்லாஹ்ýஅக்பர் எனச்) சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள்; அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள்; அவர் (ருகூஉவிலிருந்து நிமிரும் போது) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறினால், நீங்களும் ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்.

734 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஊ செய்)யுங்கள்; அவர் சமிஅல்லாஹு

-மன் ஹமிதஹ்’ என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வல(க்)கல் ஹம்து’ எனச் சொல்லுங்கள்; அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் உட்கார்ந்து தொழும் போது நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 83

சரியாக, ஆரம்பத் தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்கும் போது இரு கைகளையும் உயர்த்துவது.

735 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும் போதும் சஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (;கைகளை உயர்த்த  மாட்டார்கள்).

பாடம் : 84

ஆரம்பத் தக்பீரின்போதும், ருகூஉவிற்குச் செல்லும் போதும், (ருகூவிலிருந்து) உயரும் போதும் இருகைகளையும் உயர்த்துவது.

736 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதற்காக நின்றால் தம் தோள்களுக்கு நேராக இருக்கும்படி தம்மிரு கைகளையும் உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். ருகூஉவிற் காகத் தக்பீர் கூறும் போதும் இவ்வாறு அவர்கள் செய்வார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள். ருகூவிலிருந்து (நிமிரும் போது) சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்றும் கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும் போதும், சஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

737 அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழும் போது (முதலில்) தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் ருகூஉவிற்குச் செல்ல நாடிய போது தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.

பாடம் : 85

கைகளை எந்த அளவு உயர்த்த வேண்டும்?

அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் பின் சஅத் அஸ்ஸாஇதீ-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்த போது நபி (ஸல்) அவர்கள் (தொழும் போது)தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தினார்கள் என்று கூறினார்கள்.

738 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறி தொழுகையைத் துவக்கினார்கள். தக்பீர் கூறும்போதே தம் கைகளை உயர்த்தி தோள்களுக்கு நேராக ஆக்கினார்கள். ருகூஉவிற்காக அவர்கள் தக்பீர் கூறிய போதும் அதைப் போன்றே செய்தார்கள். சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ என்று கூறிய போதும் அதைப் போன்றே செய்தார்கள். ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்றும் கூறினார்கள். சஜ்தா (சிரவணக்கம்) செய்யும் போது அவ்வாறு செய்ய மாட்டார்கள்; சஜ்தாவிலிருந்து தம் தலையை உயர்த்தும் போதும் (அவ்வாறு) செய்ய மாட்டார்கள்.

பாடம் : 86

இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போது கைகளை உயர்த்துவது.

739 ளஇப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை யானன நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ எனக் கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து நிலைக்கு உயரும் போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்தள்ளது.

மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் சுருக்கமாக இது இடம்பெற்றுள்ளது..

பாடம் : 87

வலக் கையை இடக் கையின் மீது வைப்பது.

740 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழும் போது ஒருவர் தம் வலக் கையை தம் (மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ள) இடது முன் கையின் மீது வைக்கவேண்டுமென கட்டளையிடப்பட்டனர்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இது நபி (ஸல்) அவர்கள் வரை அறிவிப்பாளர்தொடர் சென்று முடியும் ஹதீஸ் (மர்ஃபூஉ) என்றே நான் அறிகிறேன்.

பாடம் : 88

தொழுகையில் உள்ளச்சத்துடனும் பணிவுடனும் இருக்கவேண்டும்.

741 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் இந்த (கிப்லா) திசையில் முன்னோக்கிக் கொண்டிருக்கிறேன் (என்பதால் எனக்குப் பின்னால் தொழும் உங்களை நான் கவனிக்கவில்லை) என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுடைய குனிவும் (ருகூவும்) உங்களுடைய பணிவும் எனக்குத் தெரியாமல் போவதில்லை. என் முதுகுக்கு அப்பாலும் உங்களை நான் காண்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

742 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

 ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்கு பின்புறமாக’ அல்லது என் முதுகுக்குப் பின்புற மாக’ நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.

இதை அனஸ் பின் மாலிக்(ரலி) அறிவிக்கி றார்கள்.

பாடம் : 89

முதல் தக்பீர் கூறிய பின் ஓத வேண்டியவை.

743 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்…’ என ஓதியே தொழுகையை ஆரம்பிப் பார்கள்.

744 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஸர்ஆ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (சிறிது நேரம்’என்பதைக் குறிக்க) அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹுனையத்தன்’ எனும் சொல்லைக் கையாண்டதாகவே நான் கருதுகிறேன்.-

(தொடர்ந்து) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்? என்று கேட்டேன் அதற்கு அவர்கள் நான், அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்’ என்று கூறுகிறேன் என்றார்கள்.

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)

பாடம் : 90

745 அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையைத் தொழு(வித்)தார்கள். அப்போது நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்து) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் (மற்றொரு) ருகூஉ செய்தார்கள். அந்த ருகூஉவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) நிமிர்ந்து விட்டுப் பிறகு (சஜ்தாவிற்குச் சென்று) நீண்ட நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்தார்கள். பின்பு (முதல் சஜ்தாவிலிருந்து தலையை) உயர்ந்து விட்டுப் பிறகு (மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள்.

பிறகு (இரண்டாம் ரக்அத்திற்காக) எழுந்து நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பின்னர் குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து தலையை) உயர்த்தி நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். பிறகு குனிந்து நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு (ருகூவிலிருந்து தலையை) உயர்த்தி சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் (தலையை) உயர்த்திவிட்டு (மற்றொரு) சஜ்தா செய்தார்கள். அந்த சஜ்தாவையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அவர்கள் கூறினார்கள்:

(நான் தொழுது கொண்டிருந்த போது) என்னை சொர்க்கம் நெருங்கி வந்தது; எனக்கு சக்தியிருந்திருக்கு மானால் அதன் பழக்குலைகளில் ஒன்றை நான் (பறித்து) உங்களிடம் தந்திருப்பேன். என்னை நரகமும் நெருங்கி வந்தது. எந்த அளவிற்கென்றால், இறைவா! நானும் இ(ந்த நரகத்திலிருப்ப)வர்களுடன் இருக்கப் போகிறேனா? என்று நான்(மருண்டு போய்க்)கேட்டேன். அ(ந்த நரகத்)தில் ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூணை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது. இவளுக்கு என்ன நேர்ந்தது (ஏன் இவள் இவ்வாறு வேதனை செய்யப்படுகிறாள்)? என்று நான் கேட்டேன். அதற்கு அ(ங்கிருந்த வான)வர்கள், இந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை இந்தப் பெண் அடைத்துவைத்திருந்தாள். அதற்கு தானும் உணவளிக்க வில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்)கொள்ளட்டும் என்று அதை அவள் அவிழ்த்துவிடவுமில்லைஎன்று பதிலளித்தனர்.

பாடம் : 91

தொழும் போது இமாமை நோக்கிப் பார்வையை உயர்த்தலாமா?

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (சூரிய) கிரகணத் தொழுகையை தொழுவித்த போது, நான் பின்னே செல்வது போன்று என்னை நீங்கள் கண்ட போது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக் கொண்டிருந்ததை நான் கண்டேன் என்று கூறினார்கள்.

(குறிப்பு: விரிவாக விவரம் அறியக் காண்க: பாகம்-2, ஹதீஸ்-1213)

746 அபூமஅமர் (அப்துல்லாஹ் பின் சக்பரா அல்அஸ்தீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ஆம்’என்று பதிலளித்தார்கள். அ(வர்கள் மெதுவாக ஓது)வதை நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்?என்று நாங்கள் கேட்டோம். அதற்கு, அவர்களது தாடி அசைவதை வைத்து (நாங்கள் அறிந்து கொண்டோம்.) என்று அவர்கள் பதிலளித்தார்கள்.

747 அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உண்மைக்குப் புறப்பாகப் பேசாதவரான பராஉ (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது அவர்கள் ருகூஉவிலிருந்து (தலையை) உயர்த்தி சஜ்தாவுக்குச் சென்றுவிட்டதைப் பார்க்காத வரை நாங்கள் (சஜ்தாவுக்குச் செல்லாமல்) நின்று கொண்டேயிருப்போம்

748 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. (அதற்காக) அவர்கள் (சூரிய கிரகணத் தொழுகை) தொழு(வித்)தார்கள். (தொழுகை முடிந்ததும்) மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (தொழுது கொண்டி ருக்கையில்) எதையோ பிடிக்க முயன்றதைக் கண்டோம். பிறகு (அந்த முயற்சியிலிருந்து) பின் வாங்கியதையும் கண்டோமே (அது ஏன்?) என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எனக்கு சொர்க்கத்தை எடுத்துக் காட்டப்பட்டது. அதிலிருந்து ஒரு (பழக்) குலையைப் எடுக்க முயன்றேன். அதை நான் எடுத்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் அதை நீங்கள் உண்டிருப்பீர்கள் என்று கூறினார்கள்.

(குறிப்பு: காண்க: பாகம்-5, ஹதீஸ்-5197)

749 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (லுஹ்ர் தொழுகையைத்) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது ஏறி பள்ளிவாச-ன் கிப்லாத் திசையில் சைகை செய்தவாறு

உங்களுக்கு நான் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் போது இந்த (முன்) சுவரின் திசையில் சொர்க்கம் மற்றும் நரகத்தின் உருவம் காட்சியளிப்பதைக் கண்டேன். நன்மை தீமை(களின் விளைவு)களை இன்று போல் என்றும் நான் கண்டதில்லை என மூன்று முறை கூறினார்கள்.

பாடம் : 92

தொழுது கொண்டிருக்கும் போது வானத்தைப் பார்ப்பது.

750 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், சில மக்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? தொழும் போது அவர்கள் வானத்தை நோக்கித் தம் பார்வையை உயர்த்துகின்றனர்! என்று கூறினார்கள். இவ்வாறு செய்வது குறித்து நபி (ஸல்) அவர்கள் வன்மையாகவே கண்டித்தார்கள்; இதை விட்டும் அவர்கள் தவிர்ந்துகொள்ளவேண்டும். இல்லையெனில் அவர்களுடைய பார்வை பறிக்கப்பட்டுவிடும் என்று குறிப்பிட்டார்கள்.

பாடம் : 93

தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்ப்பது.

751 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்ப்பது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், அ(வ்வாறு செய்வ)து ஓர் அடியாருடைய தொழுகையை ஷைத்தான் பறித்துச் செல்வ(தற்கு வழிவகுப்ப)தாகும் என்று கூறினார்கள்.

752 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் சதுரமான கறுப்பு நிற ஆடையொன்றை அணிந்து தொழுதார்கள். அதில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. (தொழுது கொண்டிருந்த போது அந்த வேலைப்பாடுகளின் பக்கம் தம் கவனம் சென்றுவிடவே,) இதன் வேலைப்பாடுகள் (தொழுகையிலிருந்து) என் கவனத்தை ஈர்த்துவிட்டது. இதை (எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, (அபூ ஜஹ்மிடமிருக்கும் வேலைப்பாடுகளற்ற) அன்பிஜான் (நகர சாதாரண) ஆடையை என்னிடம் வாங்கிவாருங்கள்! என்று கூறினார்கள்.

பாடம் : 94

ஒருவர் தமக்கு ஆபத்து நேரப்போவதாக உணருகிறார். அல்லது (ஊறுவிளைவிக்கும்) எதையேனும் பார்த்துவிடுகிறார். அல்லது தொழும் திசையில் எச்சிலைக் காண்கிறார் இதுபோன்ற தேவைகளுக்காக தொழுகையில் அவர் திரும்பிப் பார்க்கலாமா?

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(இமாமாக நின்று தொழுவித்துக் கொண்டிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

(குறிப்பு: காண்க: இதேபாகம், ஹதீஸ்எண்-684)

753 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு முன் நின்று தொழுவித்துக் கொண்டிருந்த போது பள்ளிவாசலின் கிப்லாத் திசையி(லுள்ள சுவரி)ல் எச்சிலைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டிவிட்டார்கள். தொழுகை முடிந்ததும் (மக்களைப் பார்த்து), உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவரது முகத்துக்கெதிரே இருக்கிறான். எனவே தொழும் போது யாரும் தம் முகத்திற்கெதிரே (கிப்லாத்திசையில்) உமிழவேண்டாம் என்று கூறினார்கள்

754 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபூபக்ர் ளரலின அவர்கள் இமாமாக நிற்க) முஸ்லிம்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுது கொண்டிருந்த போது (உடல் நலமில்லாமல் இருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திடீரென எட்டிப்பார்த்து) மக்களை திகைப்புள்ளாக்கி விட்டார்கள். (இதன் விவரம் வருமாறு:)

நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர் களது அறையின் திரையை விலக்கித் தொழுகை யில் அணிவகுத்து நின்று கொண்டிருந்த மக்களைப் பார்த்து புன்னகை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (அறையிலிருந்து) வரப்போகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (இடம் விட்டு), (முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின் வாக்கில் வந்தார்கள். (நபி ளஸல்ன அவர்களைத் திரும்பிப் பார்த்த மகிழ்ச்சியினால்) மக்கள் தம் (கவனம் சிதறி) தொழுகை குழம்பிப் போகுமோ என எண்ணலாயி னர். உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களைப் பார்த்து உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்’ என்று சைகை செய்துவிட்டு (அறைக்குள் நுழைந்து) திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியிலே அவர்கள் இறந்தார்கள்.

பாடம் : 95

ஊரிலிருக்கும் போதும் பயணத்தின்போதும் நிறைவேற்றப்படும் எல்லாத் தொழுகைகளிலும் தலைமை தாங்கித் தொழுவிப்பவரும் , பின்பற்றித் தொழுபவரும் கட்டாயமாக (குர்ஆன் வசனங்களை) ஓதியாக வேண்டும் என்பதும், எந்தெந்தத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டும்?எந்தெந்தத் தொழுகைகளில் (சப்தமின்றி) மெதுவாக ஓதவேண்டும்? என்பதும்.

755 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் (ரலி) அவர்களிடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் (ரலி) அவர்கள் சஅத்

(ரலி) அவர்களை (பதவியிலிருந்து) நீக்கிவிட்டு அம்மார் (ரலி) அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் முறையீடுகளில் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து; அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?) என்று கேட்டார்கள். அதற்கு அபூஇஸ்ஹாக் (சஅத் பின் அபீவக்காஸ்-ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்துவந்தேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும் போது முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே’ என்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் ஒருவரை’ அல்லது சிலரை’ சஅத் (ரலி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் (ரலி) அவர்கள் குறித்து கூஃபாவாசிகளிடம் விசாரனை நடத்தினார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகளிடம் விசாரனை மேற் கொண்டார். (கூஃபாவிலிருந்த) ஒரு பள்ளி வாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ரலி) அவர்களை மெச்சி நல்லவிதமாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்த போது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூசஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்:

சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்ல மாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட  மாட்டார். தீர்ப்பு அளிக்கும் போது நீதியுடன் நடக்க மாட்டார் என்று (குறை) கூறினார்.

இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள், அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப்போகிறேன் என்று கூறிவிட்டு, இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்லியிருந்தால் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால் அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான அப்துல் ம-க் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பின்னர் (சஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்; சஅத் அவர்களின் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டதுஎன்று கூறுவார்.

அப்துல் ம-க் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பின்னா(ளி)ல் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகளில் செல்லும் அடிமைப் பெண்களை கிள்ளி அவர்களைத் துன்புறுத்துவார்.

756 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது.

இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

757 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிக்கு வந்து தொழுதார். (தொழுது முடிந்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (சலாம்) சொல்லிவிட்டு, திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர்,சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதை விட அழகாக எனக்குத் (தொழத்)தெரியாது. எனவே நீங்களே எனக்கு கற்றுத் தாருங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

நீர் தொழுகைக்காக நின்றதும், தக்பீர் (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூவில் (குனிந்ததும் நிமிர்ந்து விடாமல்) (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, நிலைகொள்ளும் அளவுக்கு இருப்பில் அமர்வீராக! இதையே (இதே வழிமுறையையே) உமது எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!

758 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கூஃபாவாசிகள் கூறிய புகாருக்கு) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் (கூஃபாவாசிகளான) அவர்களுக்கு மாலைத் தொழுகை(களான லுஹ்ர் அஸ்ர் ஆகிய) இரண்டையும் தொழுவித்துவந்தேன். (நபி-ஸல்) அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை; முதல் இரண்டு ரக்அத்களிலும் நான் நீளமாக ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன் என்று (விளக்கம்) கூறினார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், உங்களைப் பற்றி நமது எண்ணமும் அதுவே! என்று கூறினார்கள்.

பாடம் : 96

லுஹ்ர் தொழுகையில் (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டும்.

759 அபூகத்தாதா (ஹாரிஸ் பின் ரிப்ஈ-ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் (அல்ஃபாத்திஹா) ஆரம்ப அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். (அவ்விரு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள். அஸ்ர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) (அல்ஃபாத்திஹா) ஆரம்ப அத்தியாத்தையும் வேறு இரு அத்தியாயங் களையும் ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்டநேரம் ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தில் சுருக்கமாக ஓதுவார்கள்.

760 அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ஆம்’ என்று பதிலளித்தார்கள். அ(வர்கள் (மெதுவாக ஓதுவ)தை நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டிருந் தீர்கள்?என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அவர்களது தாடி அசைவதை வைத்து (அறிந்து கொண்டோம்)என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 97

அஸ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங் களை) ஓத வேண்டும்.

761 அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்’ என்று பதிலளித்தார்கள். நான், அவர்கள் (மெதுவாக) ஓதுவதை நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்ள முடிந்தது?எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், அவர்களது தாடி அசைவதை வைத்து தான்  என்று பதிலளித்தார்கள்.

762 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்களில் (அல் ஃபாத்திஹா) ஆரம்ப அத்தியாயத்தையும் (அவ்விரு ரக்அத்கள் ஒவ்வொன்றிலும்) மற்றோர் அத்தியாத்தையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்களை நாங்கள் கேட்கும் அளவுக்கு (சப்தமாக) ஓதுவார்கள்.

பாடம் : 98

மஃக்ரிப் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதவேண்டும்.

763 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் வல்முர்சலாத்தி உர்ஃபன்’ எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதை (என் தாயார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், என்னருமை மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீ இந்த அத்தியாயத்தை ஓதி எனக்கு (ஒன்றை) நிறைவுபடுத்திவிட்டாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் இ(ந்த அத்தியாயத்)தை ஓதக் கேட்டதே நான் இறுதியாக அவர்களிடமிருந்து செவியேற்றதாகும் என்று கூறினார்கள்.

764 மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த) என்னிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நீங்கள் என் மஃக்ரிப் தொழுகையில் மிகச் சிறிய அத்தியாயங் களையே ஓதுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்கள் நீளமான மிகப் பெரிய அத்தியாயங்கள் இரண்டை ஓத நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

பாடம் : 99

மஃக்ரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்.

765 ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர்’ (எனும் 56ஆவது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருக்கையில் நான் செவியேற்றேன்.

பாடம் : 100

இஷாத் தொழுகையில் சப்தமாக ஓதுதல்.

766 அபூ ராஃபிஉ (நுஃபைஉஸ் ஸாயிஃக்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழுதேன். அதில் அவர்கள், இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி (அதில் சஜ்தா வசனம் வந்ததும்) சஜ்தா (ஓதலுக்குரிய சிரவணக்கம்) செய்தார்கள். ஆகவே அது குறித்து நான் அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர்கள், அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (இந்த அத்தியாயத்திற்காக) நான் சஜ்தாச் செய்திருக்கிறேன். நான் அவர்களைச் சந்திக்கும் வரை (அதாவது இறக்கும் வரை) நான் அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்து கொண்டுதானிருப்பேன் என்று கூறினார்கள்.

767 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (98 ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத்தூனி’யை ஓதினார்கள்.

பாடம் : 101

இஷாத் தொழுகையில் சஜ்தா (வசனமுள்ள) அத்தியாயத்தை ஓதுவது.

768 அபூ ராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் இஷாத் தொழுகையை தொழுதேன். அதில் அவர்கள், இதஸ் ஸமாஉன் ஷக்கத்’ (எனும் 84ஆவது) அத்தியாயத்தை ஓதி, (ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். ஆகவே நான் (அவர்களிடம்) என்ன இது? (ஏன் இந்த அத்தியாயத்திற்காக சஜ்தா செய்தீர்கள்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுத போது) இ(ந்த அத்தியாயத்தை ஓதிய) தற்காக சஜ்தாச் செய்திருக்கிறேன். அவர்களை நான் சந்திக்கும் (அதாவது இறக்கும் வரை) அ(தை ஓதிய)தற்காக சஜ்தா செய்து கொண்டுதானி ருப்பேன் என்று கூறினார்கள்.

பாடம் : 102

இஷாத் தொழுகையில் (குர்ஆன் வசனங் களை) ஓத வேண்டும்.

769 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையில் (95ஆவது அத்தியாயமான) வத்தீனி வஸ்ஸைத் தூனி’யை ஓதக் கேட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களைவிட அழகிய குரலில்’ அல்லது அழகிய ஓதல் முறையில்’ வேறெவரும் ஓத நான் கேட்டதில்லை

பாடம் : 103

(இஷாத் தொழுகையின்) முத-ரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓத வேண்டும். இறுதி இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓத வேண்டும்.

770 ஜாபிர் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் சஅத் (பின் அபீவக்காஸ்-ரலி) அவர்களிடம், (கூஃபா நகர) மக்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர். (இது குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், நானோ முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக் காட்டிய முனையைப் பின்பற்றுவதில் நான் (எந்தக்) குறையும் செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், நீங்கள் உன்மையே கூறினீர்கள். உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்’ அல்லது உங்களைப் பற்றி எனது எண்ணமும்’ அதுவே என்று சொன்னார்கள்.

பாடம் : 104

ஃபஜ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதவேண்டும்.

(ஃபஜ்ர் தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் அத்தூர்’ (எனும் 56ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

771 சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையும் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் சென்று, (கடமையான) தொழுகைகளின் நேரம் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை சூரியன் (நடுவானிலிருந்து மேற்கு வாக்கில்)

சாயும் போது தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுகையை தொழுவார்கள். (எங்களில்) ஒருவர் (அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடி(யிலுள்ள தம் வீட்டு)க்குத் திரும்பிச் சென்றுவிடுவார். சூரியன் (வெளிச்சமோ வெப்பமோ குன்றாமல்) தெளிவாக இருந்து கொண்டிருக்கும்.

-மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன்.-

இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை பிற்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் பேசிக் கொண்டி ருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையை தொழுவித்து முடிப்பார்கள். அப்போது தொழுகையை முடிக்கும் ஒருவர் தம் அருகில் இருப்பவரை அறிந்துகொள்வார். (அந்த அளவிற்கு வெளிச்சம் வந்துவிட்டிருக்கும்.) நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹுத் தொழுகையின்) இரு ரக்அத்களில்’ அல்லது அவற்றில் ஒன்றில்’ அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள்

772 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எல்லாத் தொழுகைகளிலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்படவேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) நாம் ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாமும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்) குர்ஆனின் அன்னை(யான அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) விட அதிகமாக வேறெதையும் நீ ஓதாவிட்டாலும் (உன் தொழுகை) நிறைவேறிவிடும் ஆயினும்,அதை விட அதிகமாக நீ ஓதுவதே சிறந்ததாகும்.

பாடம் : 105

சுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுவது.

நபி (ஸல்) அவர்கள் அத்தூர்’ (எனும் 56ஆவது) அத்தியாத்தை ஓதித் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது மக்களுக்குப் பின்னால் நான் (இறையில்லத்தை தவாஃப்) சுற்றிக் கொண்டிருந்தேன் என உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

773 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உ(க்)காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச் செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது விண் கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக்கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல்) தம் கூட்டத்தாரிடம் திரும்பி வந்த னர். அப்போது அக்கூட்டத்தார்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டனர். ஷைத்தான்கள்,வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமி டையே திரையிடப்பட்டுவிட்டது; எங்கள் மீது விண்கொள்ளிகள் ஏவிவிடப்பட்டன என்று பதிலளித்தனர். புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்க வேண்டும். எனவே, நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங் களிலும் பரவிச்) சென்று புதிதாக நிகழ்ந்துவிட்ட இ(ந்த சம்பவத்)தை என்னவென்று ஆராயுங்கள்என்றனர்.

அவ்வாறே அந்த ஷைத்தான்கள் திரும்பிச் சென்றனர். (அவர்கள் எல்லாத் திசைகளையும் ஆராய்ந்தபடி) திஹாமா எனும் (மக்கா) பகுதியை நோக்கி வந்த போது, உகாழ்’ சந்தையை நோக்கிச் சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) அல்லாஹ்வின் மீதாணையாக! வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இது தான்  என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று, எங்கள் கூட்டாத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகின்றது. எனவே இறைவனுக்கு (இனி) நாங்கள் (ஒரு போதும்) யாரையும் இணையாகக் கருதமாட்டோம் என்று கூறினர். (இதையொட்டி) அல்லாஹ் தன் தூதருக்கு நபியே! நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது… என்று தொடங்கும் (இந்த 72ஆவது அத்தியாயத்தை)அருளினான்.

ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி வஹி’யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

774 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறைவன் உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) சப்தமிட்டு ஓதினார்கள். இறைவன் உத்தரவுக்கேற்பவே (சில தொழுகைகளில்) மெதுவாக ஓதினார்கள். (ஏனெனில்,) உம் இறைவன் மறப்பவன் அல்லன் (19:64) என்றும் அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உண்டு (33:21) என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

பாடம் : 106

ஒரே ரக்அத்தில் இரண்டு அத்தியாயங்களை ஓதுவதும், அத்தியாயத்தின் கடைசி வசனங்களை மட்டும் ஓதுவதும், அத்தியாயங்களை முன் பின்னாக ஓதுவதும், ஓர் அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை மட்டும் ஓதுவதும் (செல்லுமா?)

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் அல்முஃமினூன்’ (எனும் 23ஆவது) அத்தியா யத்தை ஓதித் தொழுவித்தார்கள். மூசா (அலை), ஹாரூன் (அலை) பற்றிக் குறிப்பிடும் வசனம்’ (23:45) அல்லது ஈசா (அலை) அவர்கள் பற்றிக் கூறப்படும் வசனம் (23:50) வந்ததும் நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டது. உடனே ருகூஉ செய்துவிட்டார்கள் என அப்துல்லாஹ் பின் சாயிப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.

உமர் (ரலி) அவர்கள் (தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல்பகரா (2ஆவது) அத்தியாயத்திலிருந்து நூற்றி இருபது வசனங்களை ஓதினார்கள்; இரண்டாம் ரக்அத்தில் (நூறுக்கும் குறைவான வசனங்களுடைய) அல்மஸானீ’ அத்தியாயங்களில் ஒன்றை ஓதினார்கள்.

அஹ்னஃப் பின் கைஸ் (ரலி) அவர்கள் (சுப்ஹுத் தொழுகையின்) முதல் ரக்அத்தில் அல் கஹ்ஃப்’ (எனும் 18ஆவது) அத்தியாயத்தையும், இரண்டாம் ரக்அத்தில் யூசுஃப்’ (12ஆவது) அத்தியாயத்தை’அல்லது யூனுஸ்’ (10ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். உமர் (ரலி) அவர்கள் இவ்விரண்டு அத்தியாயங்களையும் ஓதித் தொழுத போது அவர்களுக்குப் பின்னே தாமும் தொழுததாகவும் அஹ்னஃப் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தொழுகை யின் முதல் ரக்அத்தில்) அல்அன்ஃபால்’ (8ஆவது) அத்தியாயத்தில் நாற்பது வசனங்களையும் இரண்டாம் ரக்அத்தில் நடுத்தர (அல்முஃபஸ்ஸல்) அத்தியாயங்களில் ஒன்றையும் ஓதினார்கள்.

இரண்டு ரக்அத்களிலும் ஒரே அத்தியாயத்தை ஒருவர் ஓதுவது அல்லது ஓர் அத்தியாயத்தை (இரண்டாகப் பிரித்து) இரண்டு ரக்அத்களிலும் ஓதுவது பற்றி கத்தாதா (ரலி) அவர்கள் குறிப்பிடுகையில் எல்லாம் அல்லாஹ்வின் வேதமே’ என்று கூறினார்கள்.

774-ஆ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் (குல்ஸும் பின் ஹித்ம் எனும்) ஒருவர் குபா பள்ளிவாசலில் மக்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிப்பவராக (இமாமாக) இருந்தார். (அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பின்) ஓதப்படும் அத்தியாயத்தை ஓதி மக்களுக்கு அவர் தொழுவிக்க ஆரம்பிக்கும்போதெல்லாம் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு முன் குல் ஹுவல்லாஹு அஹத்’ (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதியே ஆரம்பிப்பார்; (அதாவது குல்ஹுவல்லாஹு அஹத்’ அத்தியாயத்தை ஓதிய) பிறகுதான் மற்ற அத்தியாத்தை ஓதுவார். ஒவ்வொரு ரக்அத்திலும் அவர் இவ்வாறு செய்வது வழக்கம். இது குறித்து அவரிடம் மக்கள், நீங்கள் இந்த (குல் ஹுவல்லாஹு அஹத்) அத்தியாயத்தை ஓத ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அது போதாதென்று மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுகிறீர்களே! ஒன்று இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள்! அல்லது இதை விட்டுவிட்டு மற்றோர் அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள் (இரண்டையும் ஓதாதீர்கள்) என்று கூறினார்கள். அதற்கு அவர்,நான் இ(ந்த அத்தியாயத்)தை ஓதுவதைக் கைவிடமாட்டேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு (ஓதி தலைமை தாங்கித் தொழுவிக்கும் பணியைச்) செய்கிறேன். (இதை) நீங்கள் வெறுத்தால் நான் உங்களை(ப் பின்னிறுத்தித் தொழுவிப்பதை) விட்டுவிடுவேன் (உங்களுக்குத் தொழுவிக்க மாட்டேன்)என்றார்.

அம்மக்கள் அவரைத் தங்களில் சிறந்தவராகத் கருதிக் கொண்டிருந்தனர். அவரல்லாத மற்றொருவர் தங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வந்த நேரத்தில் இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), இன்னாரே! உங்கள் தோழர்கள் உங்களைப் பணிப்பது போன்று நீங்கள் ஏன் செய்யக்கூடாது? என்ன காரணத்தால் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தை கட்டாயப்படுத்திக் கொண்டீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், நான் இந்த அத்தியாயத்தை நேசிக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அ(ந்த அத்தியா யத்)தை நீர் நேசிப்பது உம்மைச் சொர்க்கத்தில் சேர்க்கும் என்று கூறினார்கள்.

775 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, நான் நேற்றிரவு அல்முஃபஸ்ஸல்’அத்தியாயங்களை ஒரு ரக்அத்தில் ஓதி முடித்தேன் என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், பாட்டுப் பாடுவதைப் போன்று அவசர அவசரமாக ஓதினீரா? நபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டாக ஓதிவந்த ஒத்த (பொருள் கொண்ட) அத்தியாயங்களை நான் அறிந்துள்ளேன் என்று கூறிவிட்டு, அல்முஃபஸ்ஸல் அத்தியாயங்களில் இருபது அத்தியாயங்களைக் குறிப்பிட்டார்கள்.

பாடம் : 107

(நான்கு ரக்அத் தொழுகையின்) பிந்திய இரண்டு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா’ ஆரம்ப அத்தியாயத்தை ஓத வேண்டும்.

776 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் முத-ரண்டு ரக்அத்களிலும் உம்முல் கிதாப் (குர்ஆனின் அன்னை எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும், இன்னும் இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் உம்முல் கிதாப்’ (அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை ஓதுவார்கள். ஒரு சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். இரண்டாவது ரக்அத்தைவிட முதல் ரக்அத்தில் நீளமாக ஓதுவார்கள். இவ்வாறே அஸ்ர் தொழுகையிலும் செய்வார்கள்; இவ்வாறே சுப்ஹுத் தொழுகையிலும் செய்வார்கள்.

பாடம் : 108

லுஹ்ர் தொழுகையிலும் அஸ்ர் தொழுகையிலும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுவது.

777 அபூமஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் கப்பாப் (ரலி) அவர்களிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகை யிலும் அஸ்ர் தொழுகையிலும் (எதையேனும்) ஓதுவார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம்’ என்று பதிலளித்தார்கள். நாங்கள், (அதை) நீங்கள் எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அவர்களது தாடி அசைவதை வைத்துத்தான் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 109

(சப்தமின்றித் தொழும் தொழுகையில்) இமாம் ஒரு சில வசனங்களை மற்றவர்களுக்குக் கேட்கும் வகையில் ஓதினால் (செல்லுமா?)

778 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகையின் முத-ரண்டு ரக்அத்களிலும் உம்முல் கிதாப் (குர்ஆனின் அன்னை’ எனும் அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தையும் அதனுடன் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். (இரண்டாவது ரக்அத்தைவிட) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்.

பாடம் : 110

(பொதுவாக எல்லாத் தொழுகைகளிலும்) முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுதல்.

779 அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் முதலாவது ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள்;இரண்டாவது ரக்அத்தில் குறைவாக ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள்.

பாடம் : 111

(சப்தமாக ஓதும் தொழுகையில்) இமாம் (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதிய பின்) உரத்த

குரலில் ஆமீன்’ கூறுவது.

ஆமீன்’ என்பது பிரார்த்தனையாகும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்களும் அவர்களைப் பின் பற்றித் தொழுவோரும் பள்ளி

வாசலில் பேரொ- எழும் அளவுக்கு (உரத்த குரலில்) ஆமீன்’ கூறினர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் தலைமைத் தாங்கித் தொழுவிப்பவரை அழைத்து, ஆமீன் கூறும் வாய்ப்பை எனக்குத் தவறும்படி செய்து விடாதீர் என்று கூறுவார்கள்.

நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆமீன்’ கூறாமல் இருக்க மாட்டார்கள்; (ஆமீன் கூறும்படி) மக்களுக்கு ஆர்வமுட்டுவார்கள். ஆமீன் கூறுவதில் நிறைய நன்மை இருப்பதாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

780 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும் போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள்.ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வாவனவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)து டன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (அவர்களின் மற்றோர் அறிவிப்பில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

பாடம் : 112

ஆமீன் கூறுவதன் சிறப்பு.

781 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஆமீன்’ என்று கூற, விண்ணுலகில் வானவர்களும் ஆமீன் கூற, ஆக இருசாராரின் ஆமீன் கூறலும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டால் அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 113

பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) ஆமீன் கூறுவது.

782 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று ஓதியவுடன் நீங்கள்,ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று சொல்லுங்கள். ஏனெனில் எவர் ஆமீன்’ கூறு(ம் நேரமா)வது வானவர்கள் ஆமீன்’ கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 114

தொழுகை வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டால்… (தொழுகை நிறைவேறுமா?)

783 அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்

-ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்து கொண்டிருந்த போது நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்து விட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப் படுத்துவானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர் என்று கூறினார்கள்

பாடம் : 115

ருகூஉவின் போது தக்பீரை முழுமையாகக் கூறுவது.

இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்.

மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள (818ஆவது) ஹதீஸும் இ(ந்தப் பாடத்)தில் அடங்கும்.

784 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பஸ்ரா நகரில் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். (தொழுது முடித்த பின் அலீ (ரலி) அவர்களைச் சுட்டிக் காட்டி) இந்த மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவூட்டு(ம் வகையில் தொழுவிக்)கிறார் என்று இம்ரான் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்கள் நிமிரும் போதும் தாழும் போதும் தக்பீர் கூறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்கள்.

785 அபூசலமா (பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவிக்கும் போது குனியும் போதும் நிமிரும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்த பின், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டியது போன்றே தொழுவிக்கிறேன் என்று குறிப்பிடுவார்கள்.

பாடம் : 116

சஜ்தாவின்போதும் தக்பீரை முழுமையாகக் கூறுவது.

786 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீ தா-ப் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்யும் போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள். தொழுகை முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு,

இவர் எனக்கு முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை நினைவூட்டினார்’ அல்லது முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுத முறைப்படி நமக்குத் தொழுவித்தார்’ என்று கூறினார்கள்.

787 ளஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலைசெய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையானன இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இறையில்லம் கஅபா அருகிலுள்ள) மகாமு இப்ராஹீம்’ அருகில் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதரை நான் கண்டேன். அவர் ஒவ்வொரு குனி விலும் நிமிர்விலும் எழும் போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார். (விளக்கம் கேட்கும் விதமாக இது குறித்து) நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்த போது அவர்கள், தாயற்றுப்போவாய்! அது நபி (ஸல்) அவர்கள் தொழுத தொழுகை போன்று இல்லையா? என்று கூறினார்கள்.

(குறிப்பு: பொருள் கருதாமல் தாயற்றுப் போவாய்’, தந்தையற்றுப் போவாய்’ என்று கூறும் வழக்கு முந்தைய அரபுகளிடையே இருந்தது என்பதைக் கவனத்தில்கொள்க!)

பாடம் : 117

சஜ்தாவிலிருந்து எழும் போது தக்பீர் கூறுவது.

788 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மக்காவில் ஒரு பெரியவருக்குப் பின்னால் (லுஹ்ர் தொழுகை)தொழுதேன். (அத் தொழுகையில்) அவர், இருபத்தி இரண்டு தக்பீர்கள் கூறினார். இது குறித்து நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகையில், அவர் ஓர் அறிவி-‘ என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உன்தாய் உன்னை இழக்கட்டும்; (அது) அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களின் வழிமுறைதான் என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

789 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காகச் சென்றால் நிலையில் நின்று தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉச் செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தமது முதுகை உயர்த்தும் போது சமி அல்லாஹு -மன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறுவார்கள். பிறகு நிலையில் நின்றவாறு ரப்பனா ல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது) என்பார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ரப்பனா வல(க்) கல் ஹம்து’ என்று இடம்பெற்றுள்ளது.-

பின்னர் (சஜ்தாவுக்காகக்) குனியும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தா செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (அந்த சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு தொழுகையை முடிக்கும் வரை தொழுகையின் எல்லா ரக்அத் களிலும் இவ்வாறே செய்வார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து (அத்தஹிய்யாத் முதல்) இருப்பை முடித்து எழும் போதும் தக்பீர் கூறுவார்கள்.

பாடம் : 118

ருகூஉவின் போது உள்ளங்கைகளை முழங்கால்கள் மீது வைப்பது.

பூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ

-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்) நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவில்) தம்மிரு (உள்ளங்)கைகளை முழங் கால்கள் மீது ஊன்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

790 முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டி ருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக்கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம் என்று கூறினார்கள்.

பாடம் : 119

ருகூவைப் பூரணமாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் குற்றம்).

791 ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(தொழுகையில்) தமது ருகூஉவையும் சஜ்தாவையும் (முறைப்படி) முழுமையாக்காத ஒரு மனிதரை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), நீர் தொழவே இல்லை (இந்த நிலையில்) நீர் இறந்துவிட்டால் அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களை எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு மாற்றமானதிலேயே இறக்கிறீர் என்று கூறினார்கள்.

பாடம் : 120

ருகூவில் முதுகைச் சமமாக வைப்பது.

அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்), நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக) சாய்த்தார்கள் என்று கூறியுள்ளார்கள்.

(குறிப்பு: காண்க: பின் வரும் ஹதீஸ்-828)

பாடம் : 121

ருகூஉவைப் பூரணமாக்குதல், (அதில்) நிலைகொள்ளுதல், (ஆடாமல் அசையாமல்) நிதானித்தல் ஆகியவற்றிற்குரிய வரம்பு.

792 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளதொழுகையில் நபி (ஸல்) அவர்களதுன நிலைநிற்றல், (அத்தஹிய்யாத்) இருப்பு ஆகியவை நீங்கலாக அவர்களது ருகூஉ, அவர்களது சஜ்தா, இரு சஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளி,ருகூஉவிலிருந்து அவர்கள் நிமிர்ந்தால் (நிலை கொள்ளும் நேரம்), ஆகிய அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன.

பாடம் 122

ருகூஉவை முழுமைப்படுத்தாத ஒருவரை திரும்பத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தது.

793 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் வந்து (ருகூஉ சஜ்தா ஆகியவற்றை முழுமையாக்காமல்) தொழுதார். பிறகு அவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் (சலாம்) சொல்லிவிட்டு, திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை என்று கூறினார்கள். அந்த மனிதர் (திரும்பிச் சென்று முன்போன்றே அவசர அவசரமாக) தொழுதுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில் நீர் (முறையாகத்) தொழவில்லை என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர், சத்திய (மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிட அழகாக எனக்குத் (தொழத்) தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத் தாருங்கள்! என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீர் தொழுகைக்காக நின்றதும் (அல்லாஹு அக்பர் எனத்) தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉவில் (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு (ஆற அமர நிதானத்துடன்) ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நிலையில் நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் செய்வீராக! பின்னர் (தலையை) உயர்த்தி, (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு இருப்பில் அமர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலைகொள்ளும் அளவுக்கு நீர் (மீண்டும்) சிரவணக்கம் செய்வீராக! பிறகு இதையே (இதே வழிமுறையையே) உமது எல்லாத் தொழுகைகளிலும் கடைப்பிடிப்பீராக!

பாடம் : 23

ருகூவில் பிரார்த்திப்பது.

794 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் சுப்ஹானக்கல்லா ஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ (இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.

பாடம் : 124

ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் (தொழுவிக்கும்) இமாமும் அவரைப் பின் பற்றித் தொழுவோரும் கூற வேண்டியவை.

795 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ எனக் கூறிய பின் அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று கூறுவார்கள். நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்யும் போதும் (ருகூஉவிலிருந்து) தமது தலையை உயர்த்தும் போதும் (அல்லாஹு அக்பர் எனத்) தக்பீர் கூறுவார்கள். இரண்டு சஜ்தாக்களை முடித்து (நிலைக்கு) எழும் போது அல்லாஹு அக்பர் என்று (தக்பீர்) கூறுவார்கள்.

பாடம் : 125

அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுவதன் சிறப்பு.

796 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் (தொழுகையில்) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து ‘ (இறைவா! எம் அதிபதியே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள். ஏனெனில் (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவரது (துதிச்)சொல் (ஒரே நேரத்தில்) ஒத்துஅமைகின்றதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 126

797 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்றே உங்களுக்குத் தொழுவிக்கிறேன் என்று கூறுவார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர் , இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் கடைசி ரக்அத்களில் (ருகூஉவிலிருந்து எழுந்து) சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறிய பிறகு குனூத் (சிறப்புப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் (மக்காவில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த) இறை நம்பிக்கையாளர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபிப்பார்கள்.

798 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்ப காலத்தில்) குனூத் (எனும் சிறப்புப் பிரார்த்தனை) மஃக்ரிப் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலுமே (நடைமுறையில்) இருந்தது.

799 ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய போது சமி அல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர் ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ ளஎங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. (பகட்டோ பெருமையோ கலவாமல்) தூய்மையும் சுபிட்சம் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்ன என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், (தொழுகையில் இந்த வார்த்தைகளை) மொழிந்தவர் யார்? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான்தான் என்றார். முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதை நம்மில் முதலில் பதிவு செய்வது யார்’ என (த் தமக்கிடையே) போட்டியிட்டுக்கொள்வதை நான் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பாடம் : 127

ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி, நிதானத்துடன் நிலைகொள்வது.

நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தி (தமது) ஒவ்வொரு முள்ளெலும்பும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமர்ந்து நிற்பார்கள் என அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ -ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(குறிப்பு: விவரம் அறியக் காண்க: ஹதீஸ்எண்-828)

800 ஸாபித் (அல்புனானீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தொழுத முறையை விவரிக்கும் முகமாக தொழுது காட்டுவார்கள். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் (தாம் தொழுகையில் இருக்கிறோம் என்பதையே) அவர்கள் மறந்துவிட்டார்கள்’ என்று நாங்கும் சொல்லும் அளவுக்கு (நிலை கொண்டு) நிற்பார்கள்.

801 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது ருகூஉவும், சஜ்தாவும், ருகூஉவிலிருந்து அவர்கள் எழுந்தா(ல் நிலை கொள்ளுத)லும், இரு சஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.

802 அபூகிலாபா (அப்துல்லாஹ் பின் ஸைத்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எப்படித் தொழுவார்கள் என எங்களுக்கு மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் (தொழுது) காட்டினார்கள். இ(வ்வாறு அவர்கள் செய்து காட்டிய)து எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை.

அப்போது அவர்கள் நிலையில் (நன்கு) நிலை கொண்டு நின்றார்கள். பின்னர் ருகூஉ செய்தார்கள். பின்னர் தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் நின்றார்கள். அப்போது அவர்கள் இதோ நம்முடைய இந்தப் பெரியவர் அபூபுரைத் (ரஹ்) அவர்கள் தொழுவது போன்று எங்களுக்குத் தொழுதுகாட்டினார்கள்.

தொடர்ந்து அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூபுரைத் (அம்ர் பின் சலமா-ரஹ்) அவர்கள் (தொழுகையின் இரண்டாம்) சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போது (சற்று நேரம்) நேராக அமர்ந்திருப்பார். பிறகுதான் எழுவார்.

பாடம் : 128

சஜ்தாச் செய்யும் போது தக்பீர் கூறியவாறே குனிய வேண்டும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் (சஜ்தாவிற்குச் செல்லும் போது) முழங்கால்களைத் தரையில் வைப்பதற்கு முன் தம் (உள்ளங்)கைகளை வைப்பார்கள் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

803 அபூபக்ர் பின் அப்திர்ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்), அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராயிருந்த போது) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கடமையானத் தொழுகைகளிலும் அஃதல்லாத (உபரித்) தொழுகைகளிலும் ரமளான் மாதத்திலும் ரமளான் அல்லாத மாதத்திலும் ஒவ்வொரு தொழுகையிலும் தக்பீர்’கூறுவார்கள்.

இந்த வகையில், தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறுவார்கள். பிறகு சஜ்தாச் செய்வதற்கு முன் (நிலை கொண்டு நின்று) ரப்பனா வல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழனைத்தும் உரியது) என்று கூறுவார்கள். பின்னர் சஜ்தாவுக்காகக் குனியும் போது அல்லாஹு அக்பர்’ என்று (தக்பீர்) கூறுவார்கள். பிறகு சஜ்தாவிலிருந்து (சிறு இருப்பிற்காக) தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள். பின்னர் (இரண்டாம்) சஜ்தா செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தக்பீர் கூறுவார்கள்.

பின்னர் இரண்டாம் ரக்அத்தில் (அத்தஹிய்யாத்) இருப்பில் அமர்ந்துவிட்டு (மூன்றாம் ரக்அத்திற்காக) எழும் போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகை முடியும்வரை ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறே செய்வார்கள். தொழுகை முடிந்ததும், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவது போன்றே உங்களுக்கு நான் தொழுவிக்கிறேன். இவ்வுலகைப் பிரியும் வரை இதுவே நபி (ஸல்) அவர்களின் தொழுகை யாக இருந்தது என்று குறிப்பிட்டார்கள்.

804 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும் போது சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) ரப்பனா ல(க்)கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறியபின் சில மனிதர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களு(டைய நலனு)க்காக பிரார்த் திப்பார்கள். அப்போது இறைவா! வலீத் பின் வலீத், சலமா பின் ஹிஷாம் மற்றும் அய்யாஷ் பின் அபீரபிஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப் அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் (இவர்களுக்கும்) அளிப்பா யாக!என்று பிரார்த்திப்பார்கள்.

(மதீனாவுக்கு) கிழக்கில் வாழ்ந்த முளர் குலத்தார் அன்று நபி (ஸல்) அவர்களுக்கு எதிரி களாய் இருந்தனர்.

805 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்த) குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டார்கள். இதனால் அவர்களது வலது (கணைக்கால்/தோள்பட்டை)ப் பகுதியில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. இதையொட்டி நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிடவே அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். நாங்களும் அமர்ந்து கொண்டோம் -சுஃப்யான் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் நாங்கள் அமர்ந்தவாறே தொழுதோம்’ என்று இடம்பெற்றுள்ளது.- அவர்கள் தொழுகையை முடித்ததும் பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்; அவர் குனிந்தால் நீங்களும் குனி(ந்து ருகூஉ செய்)யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறினால் நீங்களும் ரப்பனா வல(க்)கல் ஹம்து’ (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள்;அவர் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்களிடம், இவ்வாறுதான் மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்களா? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் (இவ்வாறே அறிவித்தார்கள்) என்று பதிலளித்தார்கள்.

உறுதியாக மஅமர் (ஸுஹ்ரீ ளரஹ்ன அவர்களிடமிருந்து இதை) (நன்கு) மனனமிட்டார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களும் (ருகூஉவிலிருந்து எழும் போது கூறவேண்டிய துதிச் சொல்லை) வல(க்)கல் ஹம்து’ என்றே அறிவித்தார்கள்.

மேலும் (நபி ளஸல்ன அவர்களுக்கு சிராய்ப்பு ஏற்பட்டது தொடர்பாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிட மிருந்து) நபி (ஸல்) அவர்களின் வலப் பாகத்தில் (சிராய்ப்பு ஏற்பட்டது) என்றே நான் மனனமிட் டேன். நாங்கள் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றபோது இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள்,நான் ஸுஹ்ரீ அவர்களுக்கு அருகில் இருந்தேன் நபி (ஸல்) அவர்களது வலது கணைக்காலில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது’ என்றே அறிவித்தார்கள் என்று குறிப்பிட்டார்கள்

பாடம் : 129

சஜ்தாவின் சிறப்பு.

806 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் (நபி ளஸல்ன அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? என்று வினவினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பௌர்ணமி இரவில் கீழே மேகம் சூழாத (வானில்) சந்திரனைக் காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா? என்று கேட்டார்கள். மக்கள்,இல்லை (ஐயம் கொள்ள மாட்டோம்), அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், கீழே மேகம் சூழாத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஐயம்கொள்வீர்களா? எனக் கேட்டார்கள். அதற்கும் மக்கள், இல்லை என்று பதிலளித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள்,இவ்வாறுதான் உறுதியாக நீங்கள் இறைவனைக் காண்பீர்கள் என்று கூறிவிட்டு (பின்வருமாறும்) கூறினார்கள்:

மறுமை நாளில் மக்கள் அனைவரும் ஒன்று குவிக்கப்படுவார்கள். அப்போது (உலகத்தில்)யார் எதனை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதனைப் பின்பற்றிச் செல்லட்டும் என்பான் (இறவைன்). ஆகவே,சிலர் சூரியனைப் பின்பற்றிச் செல்வர். இன்னும் சிலர் சந்திரனைப் பின்பற்றிச் செல்வர். வேறு சிலர் தீய சக்தி(களான சாத்தான்கள், சிலைகள், மந்திரவாதிகள் போன்ற வழிகேடர்)களைப் பின்பற்றிச் செல்வர். இறுதியில் (எனது) இந்த சமுதாயம் மட்டும் தங்களிடையே நயவஞ்சகர்கள் இருக்கும் நிலையில் எஞ்சியிருக்கும். அப்போது வ-வும் மான்பும் உடைய இறைவன் (அவர்கள் அறியாத தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நான் உங்கள் இறைவன் என்பான். உடனே அவர்கள் எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம்; எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம் என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் (அவர்கள் அறிந்த தோற்றத்தில்) அவர்களிடம் வந்து, நானே உங்கள் இறைவன்என்பான். அப்போது அவர்கள், நீ எங்கள் இறைவன்தான் என்பார்கள். பிறகு அவர்களை இறைவன் அழைப்பான். நரகத்தின் மேற்பரப்பில் பாலம் அமைக்கப்படும். (இறைத்தூதர்கள். தத்தம் சமுதாயத்தினருடன் அதைக் கடப்பார்கள். நானே அ(ந்தப் பாலத்)தை முதலாவதாகக் கடப்பவன் ஆவேன். அன்றைய தினத்தில் இறைத்தூதர்களைத் தவிர வேறுயாரும் பேச மாட்டார்கள். அன்றைய தினத்தில் இறைவா! காப்பாற்று! காப்பாற்று!’ என்பதே இறைத்தூதர்களின் பிரார்த்தனையாகும். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், அந்நரகத்தி(ன் பாலத்தி)ல் கொக்கிகள் அமைந்திருக்கும். அவை (ஊமத்தங்காயின் முள்வடிவில்) சஅதான்’ செடியின் முள்ளைப் போன்றிருக்கும் என்று கூறிவிட்டு,சஅதான்’ செடியின் முள்ளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். மக்கள்,ஆம்(பார்த்திருக் கிறோம்) என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் சஅதான் செடியின் முள்ளைப் போன்றிருந்தாலும் அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள் அப்போது அந்த கொக்கி மக்களை அவர்களின் (தீய) செயல்களுக் கேற்ப பற்றிப் பிடிக்கும். அவர்களிடம் தம் (தீய) செயல்களை முன்னிட்டு பேரழிவுக்கு உள்ளாபவர் களும் உண்டு. (அந்தப் பாலத்தில்) தட்டுத்தடு மாறிய பின் தப்புபவர்களும் உண்டு.

இறுதியாக இறைவன் நரகத்திற்குரியவர்களில் தான் நாடிய சிலர் மீது கருனை காட்ட நினைக்கும் போது வானவர்களிடம், அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெளியேற்றுவார்கள். சஜ்தாச் செய்த அடையாளங்களை வைத்து இவர் களை வானவர்கள் அடையாளம் காண்பார்கள் .சஜ்தா செய்ததனால் (ஏற்பட்ட) அடையாளங் களைப் புசிக்கக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துவிட்டான். ஆகவே (அல்லாஹ்வை வணங்கியவர்கள்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். சஜ்தா செய்த(தால் ஏற்பட்ட) வடுக்களைத் தவிர ஆதமின் மைந்த(னான மனித)ர்களுடைய முழு உடம்பையும் நரகம் புசித்துவிடும். இந்த நிலையில் அவர்கள் கருகிப் போனநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் மீது (மாஉல் ஹயாத் எனும்) ஜீவநீரை ஊற்றப்படும். உடனே அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று செழிப்புடன் எழுவார்கள்.

பின்னர் அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடிப்பான். இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. என்று கூறுவான். அப்போது அல்லாஹ், (உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப் பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா? என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்)என்பான். அந்தமனிதன் அல்லாஹ்விடம் தான் நாடிய உறுதிமொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அல்லாஹ் நரகத்தைவிட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக் கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்லவைப்பாயாக! என்று கேட்பான். அதற்கு இறைவன், முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே? என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! என்னை உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக்கூடாது! என்று கூறுவான். அதற்கு இறைவன், (நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா? என்பான். அம்மனிதன்,இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இஃதல்லாத வேறெதையும் நான் கேட்கமாட்டேன்என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்லவைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான்; அதிலுள்ள செழுமையையும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப்பா யாக!என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே! என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், இறைவா! உன் படைப்பு களிலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கி விடாதே!என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், நீ ஆசைப்படுவதைக் கேள்! என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும் போது (அவனிடம்) இறைவன், இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு! என்று சொல்லிக் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உன்னதனாகிய அல்லாஹ் உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு என்பான்.

இதன் அறிவிப்பாளரான அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தமக்கு இதை அறிவித்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம், உனக்கு இதுவும் உண்டு. இதைப்போன்று இன்னொரு மடங்கும் உண்டு’ என்றா அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து உனக்கு இதுவும் உண்டு. இதுபோன்று இன்னொரு மடங்கும் உண்டு’ என்றே இறைவன் கூறியதாகவே மனனமிட்டேன்என்றார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், இதுவும் உண்டு. இதுபோன்று பத்து மடங்கும் உண்டு’என்றே நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

பாடம் : 130

சஜ்தா செய்யும் போது புஜங்களை (விலாவுடன் சேர்க்காமல்) இடைவெளிவிட்டு வைக்கவேண்டும்; (தொடைகளைவிட்டும் வயிற்றைப்) பிரித்துவைக்க வேண்டும்.

807 அப்துல்லாஹ் பின் மா-க் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழும் போது (சஜ்தாவில்) தமது இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு ஒரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள்.

இதே கருத்தில் அமைந்த இன்னொரு ஹதீஸும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.

பாடம் : 131

சஜ்தாவின் போது கால் விரல்களைக் கிப்லாவை நோக்கி வைப்பது.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(குறிப்பு: காண்க ஹதீஸ் எண்-828)

பாடம் : 132

சஜ்தாவை பூரணமாக (நிதானத்துடன்) செய்யாவிட்டால் (ஏற்படும் கேடுகள்).

808 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் (ஆற அமர முறைப்படி) முழுமையாக்காத

ஒரு மனிதரை ஹுதைஃபா (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர் தொழுது முடித்ததும் அவரிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள், நீர் தொழவே இல்லை. (இந்த நிலையில்) நீர் இறந்துவிட்டால் முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதிலேயே இறந்தவராவீர் என்று கூறினார்கள்.

பாடம் : 133

ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிரவணக்கம் (சஜ்தா) செய்தல்.

809 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நெற்றி, இரு(உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரண்டு கால் (நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் (இறைவனால்) கட்டளையிடப்பட்டார்கள். (சஜ்தாவில்) தலை முடியோ ஆடையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டார்கள்.

810 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்; ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

811 அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உண்மைக்குப் புறம்பாகப் பேசாதவரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு (பின் வருமாறு) அறிவித்தார்கள்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியதும், அவர்கள் (சஜ்தாவிற்கு சென்று) நெற்றியைத் தரையில் வைக்காத வரை எங்களில் யாரும் (சஜ்தாவிற்காக) தம் முதுகை வளைக்க  மாட்டார்கள்.

பாடம் : 134

மூக்கு தரையில் படுமாறு சஜ்தாச் செய்தல்.

812 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நெற்றி, இரு(உள்ளங்)கைகள், இரு முழங் கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும் போது) தமது மூக்கின் மீது தமது கையால் (மூக்கு உட்பட என்பதுபோல்) சைகை செய்தார்கள்- தொடர்ந்து ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்றும் கூறினார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 135

களிமண்ணில் சஜ்தாச் செய்யும் போதும் மூக்குத் தரையில் படுமாறு சஜ்தாச் செய்வது.

813 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்று, எங்களுடன் தாங்கள் பேரீச்சந்தோட்டத்திற்கு வரக்கூடாதா? நாம் (அங்கு சென்று) பேசிக் கொண்டிருக்கலாமே! என்று கூறினேன். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அவர்களிடம்) நான், லைலத்துல் கத்ர் (எனும் கண்ணியமிக்க இரவு)’பற்றி நீங்கள் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்! என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் இஃதிகாஃப்’இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, நீங்கள் தேடக் கூடிய (லைலத்துல் கத்ர் ஆன)து உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது என்றார்கள். ஆகவே நபி (ஸல்) அவர்கள் நடுப்பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நீங்கள் தேடக்கூடியது உங்களுக்கு எதிர் வரும் (நாட்களில் உள்ளது) என்று கூறினார்கள்.

ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) சொற்பொழிவாற்றினார்கள். அதில் (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:

யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் (பள்ளிவாசலுக்கே) திரும்பவும் வரட்டும். ஏனெனில் லைலத்துல் கத்ர் இரவு பற்றி எனக்கு(க் கனவில்) காட்டப்பட்டது; அதை நான் மறக்கடிக்கப்ட்டுவிட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாளில் உள்ளது. நான் ஈரமான களி மண்ணில் சஜ்தாச் செய்வது போன்று கனவு கண்டேன். (அன்று மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ன் கூரை, பேரீச்ச மட்டையினால் வேயப்பட்டிருந்தது. வானத்தில் (மழைக்கான அறிகுறி) எதையும் நாங்கள் காண வில்லை. (இவ்வாறிருக்க) திடீரென ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அன்று எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நெற்றியின் மீதும் மூக்கு ஓரத்திலும் ஈரமான களிமண் படிந்திருக்கக் கண்டேன்.

பாடம் : 136

(தொழும் முன்) ஆடையை முடிச்சிட்டுக் கொள்வதும், அதை இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும், (தொழுது கொண்டிருக்கும் போது ஆடை நழுவி) மறைக்க வேண்டிய உறுப்புக்கள் வெளியில் தெரிந்துவிடும் என அஞ்சினால் தொழுகையிலேயே ஆடையை அணைத்துப் பிடித்துக்கொள் வதும்.

814 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி ளஸல்ன அவர்கள் காலத்து) மக்கள் தங்கள் கீழாடை சிறியதாக இருந்தால் அதைத் தம் பிடரிகள் மீது முடிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். எனவேதான், ஆண்கள்’இருப்பில் நேராக அமராத வரை நீங்கள் உங்கள் தலையை (சஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம்’என பெண்களுக்குக் கூறப்பட்டிருந்தது.

பாடம் : 137

(சஜ்தாவின் போது தரையில் படாதவாறு) தலைமுடியைத் தடுக்கக் கூடாது.

815 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப் பட்டார்கள். தமது ஆடையையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டார்கள்.

பாடம் : 138

தொழும் போது (தரையில் படாதவாறு) தமது ஆடையைப் பிடிக்கக் கூடாது.

816 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 139

சஜ்தாவில் துதிப்பதும் பிரார்த்திப்பதும்.

817 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக,தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் அதிகமாக சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஹ்ஃபிர்லீ’ (இறைவா! எங்கள் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம். இறைவா எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.

பாடம் : 140

இரு சஜ்தாக்களுக்கு இடையே (இருப்பில் சிறிது நேரம்) நிலைகொள்வது.

818 அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தம் தோழர்களிடம், அல்லாஹ்வின் தூதர்

(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள்.-அது எந்தத் தொழுகையின் நேரமாகவும் இருக்கவில்லை.-

அவர்கள் (நிலையில்) நின்றார்கள். பின்னர் தக்பீர் கூறியவாறு ருகூஉச் செய்தார்கள். பிறகு தம் தலையை உயர்த்திச் சிறிது நேரம் (நிலை கொண்டு) நின்றார்கள். பின்னர் (முதல்) சஜ்தா செய்தார்கள். பிறகு தமது தலையை உயர்த்தி சிறிது நேரம் (நிலை கொண்டு) இருந்தார்கள். (சுருங்கச் சொன்னால்) இதே நம்முடைய இந்தப் பெரியவர் அம்ர் பின் சலமா (ரஹ்) அவர்கள் தொழுவது போன்றே மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழுது காட்டினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அ(ந்தப் பெரிய)வர் (தொழும் போது) ஒரு முறையைக் கையாளுவார். ஆனால், மக்கள் அவ்வாறு செய்வதை என்னால் காணமுடியவில்லை. அவர் மூன்றாவது ரக்அத்தில் அல்லது நான்காவது ரக்அத்தில் உட்கார்ந்துவிட்டே எழுபவராக இருந்தார்.

819 மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இளைஞர்களான) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று (ஏறத்தாழ இருபது நாட்கள்) அவர்களிடம் தங்கினோம். (நாங்கள் ஊர் திரும்பும் போது) நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் சென்றதும் இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்கு தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள்.

820 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது ருகூஉ, சஜ்தா, அவர்களுடைய இரு சஜ்தாக்களுக்கு இடையிலான அமர்வு ஆகியன ஏறக்குறைய ஒரே (கால) அளவில் அமைந்திருந்தன.

821 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள், எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது போன்று நான் உங்களுக் குத் தொழுவிப்பதில் எந்தக் குறைவும் வைக்க மாட்டேன் என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்த போது) ஒன்னறச் செய்தார்கள். ஆனால் அதை நீங்கள் கடைப்பிடிப்பதைக் காணமுடியவில்லை. அனஸ் (ரலி) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி (நீண்ட நேரம் நிலை கொண்டு) நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள்’என்று ஒருவர் கூற இடமுண்டு. இரு சஜ்தாக்களுக்கு இடையிலும் அவர்கள் (நீண்ட நேரம் நிலை கொண்டிருப்பார்கள்). எந்த அளவிற்கென்றால் அனஸ் (ரலி) அவர்கள் மறந்துவிட்டார்கள்’ என்று ஒருவர் கூற இடமுண்டு.

பாடம் : 141

சஜ்தாவில் கைகளைப் பரப்பி வைக்கலாகாது.

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது கைகளைப் பரப்பி வைக்காமலும் அவற்றை (விலாவுடன்) ஒடுக்கி வைக்காமலும் சஜ்தாச் செய்தார்கள் என அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) கூறியுள்ளார்கள்.

822 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் எவரும் நாய் பரப்பிவைப்பது போன்று தமது கைகளைப் பரப்பி வைக்கவேண்டாம்.

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 142

தொழுகையில் ஒற்றைப் படையான ரக்அத்களை முடித்ததும் நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டுப் பிறகு எழுவது.

823 மா-க் பின் அல்ஹுவைரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தம் தொழுகையின் ஒற்றைப் படையான ரக்அத்களின் போது நிமிர்ந்து உட்காராமல் (அடுத்த ரக்அத்திற்காக) எழ மாட்டார்கள்.

பாடம் : 143

ஒரு ரக்அத்தை முடித்து அடுத்த ரக்அத்திற்காக எழும் போது பூமியில் கைகளை ஊன்றி எழ வேண்டுமா?

824 அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பஸ்ராவிலிருந்த) எங்களிடம் மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையானத்)தொழுகையை தொழுவிப்பது என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழக்கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுது காட்டுவதே என் நோக்கம் என்று கூறிவிட்டு எங்களுடைய இப்பள்ளிவாசலில் எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.

இதன் அறிவிப்பாளரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அப்போது நான் அபூகிலாபா (ரஹ்) அவர் களிடம், மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களின் தொழுகை எவ்வாறிருந்தது? என்று கேட்டேன். அதற்கு அபூகிலாபா (ரஹ்) அவர்கள், இதோ இந்தப் பெரியவர்-அம்ர் பின் சலமா அவர்கள்-தொழுவது போன்றிருந்தது என்று பதிலளித்தார்கள்.

அய்யூப் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்:

அந்தப் பெரியவர் தக்பீரை முழுமையாக்கு பவராக இருந்தார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக எழும் போது அமர்ந்து விட்டு, பூமியில் (கைகளை) ஊன்றி எழுவார்.

பாடம் : 144

இரண்டாம் சஜ்தாவிலிருந்து (அடுத்த ரக்அத்திற்காக) எழும் போது தக்பீர் கூறவேண்டும்.

இரண்டாம் சஜ்தாவிலிருந்து எழும் போது அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள்.

825 சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) எங்களுக்கு அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்கள் சஜ்தாவிலிருந்து தமது தலையை உயர்த்தும் போதும் சஜ்தாச் செய்யும் போதும் (சஜ்தாவிலிருந்து தமது தலையை) உயர்த்தும் போதும் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும் போதும் சப்தமாகத் தக்பீர் கூறினார்கள். (அது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்ட போது) நபி (ஸல்) அவர்களை இவ்வாறே நான் (தொழக்)கண்டேன் என்று கூறினார்கள்.

826 முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பஸ்ராவில்) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) ஒரு தொழுகையைத் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தாச் செய்யும் போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவிலிருந்து தலையை) உயர்த்தும் போதும் தக்பீர் கூறினார்கள்; இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போதும் தக்பீர் கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் சலாம் கொடுத்து முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, இவர் நமக்கு முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுதது போன்று தொழுவித்தார்’அல்லது இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவூட்டினார் என்று கூறினார்கள்.

பாடம் : 145

அத்தஹிய்யாத் இருப்பில் அமரும் முறை.

உம்முத் தர்தா அஸ்ஸுஃக்ரா (ரஹ்) அவர்கள் தமது தொழுகையில் ஆண்கள் உட்காருவது போன்றே உட்காருவார்கள். அவர் மார்க்கச் சட்டங்களை நன்கு விளங்கிய பெண்மணியாக இருந்தார்கள்.

827 அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும் போது சம்மணமிட்டு உட்கார்வதை நான் பார்ப்பேன். ஆகவே நானும் அவ்வாறே செய்வேன். அப்போது நான் சிறு வயதுடையவனாக இருந்தேன். இதைக் கண்ட (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாதென என்தைத் தடுத்துவிட்டு, தொழுகையில் உட்காரும் (சுன்னத்தான) முறை என்னவென்றால் உன் வலக் காலை நட்டு வைத்து, இடக் காலை மடித்து (படுக்க) வைப்பதாகும் என்று கூறினார்கள். அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் கால்கள் என்னைத் தாங்காது என்று பதிலளித்தார்கள்.

828 முஹம்மது பின் அம்ர் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக் கொண்டோம். அங்கிருந்த அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி உங்களில் நானே நன்கு மனனமிட்டுள்ளேன். நபி (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; அவர்கள் (முதல்) தக்பீர் கூறும் போது தமது கைகளை தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉ (குனிவு) செய்யும் போது தம் கைகளை முழங்கால்கள் மீது ஊன்றிக்கொள்வார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காக)ச் சாய்த்தார்கள். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும் போது தம் ஒவ்வொரு முள்ளெலும்பும் அதனதன் இடத்திற்கு வரும் அளவுக்கு நேராக நிமிர்ந்து நிற்பார்கள். சஜ்தாச் செய்யும் போது அவர்கள் தமது கைகளைப் பரப்பி வைக்கவு மாட்டார்கள்; அவற்றை விலாவுடன் ஒடுக்கி வைக்கவும்  மாட்டார்கள்; தம் கால்விரல் முனைகளை கிப்லாவை நோக்கி வைப்பார்கள்.

இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும் போது தமது இடக் கால்மீது அமர்ந்து வலக்காலை நட்டு வைப்பார்கள். கடைசி ரக்அத்தில் (அத்தஹிய்யாத் இருப்பில்) அமரும் போது இடது காலை (குறுக்கு வெட்டில் வலப்புறம்) கொண்டு வந்து, வலக் காலை நட்டு வைத்து தமது இருப்பிடம் தரையில் படியுமாறு உட்காருவார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 146

நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் உட்காரமலே எழுந்துவிட்டு மீண்டும் உட்காரவில்லை. ஆகவே, முதலாம் அத்தஹிய்யாத்’ இருப்பு’ கட்டாயம் அல்ல.

829 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை எங்களுக்கு லுஹ்ர் தொழுகைத் தொழுவித்துக் கொண்டிருந்த போது முந்திய இரு ரக்அத் முடிந்ததும் (அத்தஹிய்யாத் இருப்பில்) உட்காரமலேயே எழுந்துவிட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்துவிட்டனர். தொழுகையை முடிக்கும் தருணத்தில் நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அமர்ந்தபடியே அவர்கள் தக்பீர் கூறினார்கள்;சலாம் கொடுப்பதற்கு முன் (மறதிக்காக) இரு சஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் சலாம் கொடுத்தார்கள்.

பாடம் : 147

முதல் அத்தஹிய்யாத்’ இருப்பு.

830 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். (முதலாம் அத்தஹிய்யாத்) இருப்பில் அமரவேண்டியதிருக்க, அவர்கள் அதில் அமராமலேயே எழுந்து விட்டார்கள். தொழுகையின் இறுதியை அடைந்ததும் (சலாமுக்கு முன்) உட்கார்ந்தபடியே (மறதிக்குரிய) இரு சஜ்தாக்கள் செய்தார்கள்.

பாடம் : 148

கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்’ ஓதுவது.

831 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழும் போது அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, வ மீக்காயீல, அஸ்ஸலாமு அலா ஃபுலான் வஃபுலான்’ (ஜிப்ரீல் மீதும் மீக்காயீல் மீதும் சலாம் உண்டாகட்டும். இன்னார் மீதும் இன்னார் மீதும் சலாம் உண்டாகட்டும்)

என்று கூறுபவர்களாக இருந்தோம். (தொழுகை முடிந்ததும்) எங்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி, நிச்சயமாக அல்லாஹ்தான் ஸலாம்’ ஆக இருக்கிறான். உங்களில் ஒருவர் தொழு(கையின் இருப்பில் இருக்கு)ம் போது,

அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக் காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா, வஅலா இபாதில்லாஹிஸ் ஸா-ஹீன் ள(சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சலாமும் அல்லாஹ் வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர் மீதும் சலாம் உண்டாகட்டும்ன என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு’ ளஅல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்ன என்றும் கூறட்டும் என்றார்கள்.

பாடம் : 149

சலாம் கொடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய பிரார்த்தனை.

832 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும் போது, அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜா-,வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’ ளஇறைவா! அடக்கக்குழியின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜா-ன் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகப்புத்தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்ன என்று கூறுவார்கள்.

(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் கடன் படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள்.

833 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜா-ன் குழப்பத்திலிருந்து பாதுகாப்புத் தேடுவதை நான் செவியுற்றுள்ளேன்.

834 அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம், எனது தொழுகையில் நான் பிரார்த்திக்க எனக்கு ஒரு பிரார்த்தனையை கற்றுத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்ஸீ ழுல்மன் கஸீரன், வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம் ளஇறைவா! எனக்கு நானே அதிகமாக அநீதி இழைத்துவிட்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக! என் மீது கருணை காட்டுவாயாக! நிச்சயமாக நீ மன்னிப்பவனும் கருணையாளனும் ஆவாய்ன என்று கூறுங்கள்!என்றார்கள்.

பாடம் : 150

அத்தஹிய்யாத்துக்குப் பின் (சலாம் கொடுப் பதற்கு முன்) விரும்பிய பிரார்த்தனை செய்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள் ளது. அது கட்டாயம் கிடையாது.

835 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது அஸ்ஸலாமு அலல்லாஹி மின் இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஃபுலானின் வஃபுலான்’ (அடியார்கள் சார்பாக அல்லாஹ்வுக்கு ஸலாம் உண்டாகட்டும்) என்று கூறிக் கொண்டிருந்தோம். (இதனை அறிந்த) நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வின் மீது ஸலாம் உண்டாகட்டும்’ என்று கூறாதீர்கள் ஏனெனில், அல்லாஹ்தான் ஸலாம்’ஆக இருக்கிறான். மாறாக, (சொல், செயல், பொருள் வடிவிலான) எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுக்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சலாமும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் ஏற்படட்டுமாக! எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார் அனைவர் மீதும் சலாம் உண்டாகட்டும்’ எனக் கூறுங்கள். இதை நீங்கள் கூறினால் வானம் பூமியிலுள்ள அனைத்து நல்லடியார்கள் மீதும் சலாம் கூறியதாக அமையும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாக இருக்கிறார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்’ என்றும் கூறட்டும் இதன் பிறகு உங்களுக்கு பிடித்தமான பிரார்த்தனையை தேர்ந்தெடுத்து (வேண்டி)க்கொள்ளுங்கள்.

பாடம் : 151

தொழுது முடிக்கும்வரை நெற்றி, மூக்கு ஆகியவற்றில் படிந்தவற்றைத் துடைக்காமலிருப்பது.

அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தொழும் போது நெற்றியைத் துடைக்கலாகாது என்று ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் அஸ்ஸபீர்-ரஹ்) அவர்கள் கூறக் கண்டேன்.

836 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதை நான் கண்டேன். அவர்களது நெற்றில் களிமண் படிந்திருந்ததையும் நான் கண்டேன்.

பாடம் : 152

(தொழுகை முடிவில்) சலாம் கொடுப்பது.

837 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் (தொழுத இடத்திலேயே) வீற்றிருப் பார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகை யில்,அல்லாஹ் நன்கறிந்தவன்! தொழுகை முடித்து திரும்பும் ஆண்கள் பெண்களிடம் வருவ தற்கு முன் பெண்கள் (அங்கிருந்து) புறப்பட்டுச் சென்றுவிடவேண்டும் என்பதற்காகவே நபி (ஸல்) அவ்வாறு வீற்றிருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன் என்றார்கள்.

பாடம் : 153

இமாம் சலாம் கொடுக்கும்போதே (பின்பற்றித் தொழுபவர்களும்) சலாம் கொடுப்பது.

இமாம் சலாம் கொடுக்கும்போதே (அவரைப் பின்பற்றி) பின்னால் தொழுவோரும் சலாம் கொடுப்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள் விரும்பக் கூடியவர்களாய் இருந்தார்கள்.

838 இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுவோம். நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுக்கும் போது நாங்களும் சலாம் கொடுப்போம்.

பாடம் : 154

இமாமுக்கு, பதில் சலாம் கூறாமல் தொழுகைக்காக மட்டும் சலாம் கொடுப்பது.

839,840 முஹம்மது பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த வாளியொன்றிலிருந்து நீர் அள்ளி ஒரு முறை உமிழ்ந்ததையும் எனக்கு நினைவிருக்கிறது.

பனூசாலிம் குலத்தாரும் அன்சாரியுமான இத்பான் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் என் சமுதாயத்தாரான பனூசாலிம் குலத்தாருக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திவந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அல்லாஹ்வின் தூதரே!) நான் என் கண்பார்வையை இழந்துவருகிறேன். (மழைக் காலங்களில்) என(து இல்லத்து)க்கும் என் சமுதாய மக்களின் பள்ளிவாசலுக்கும் குறுக்கே (உள்ள பள்ளத்தாக்கில்) தண்ணீர் ஓடுகிறது. (ஆகவே என்னால் அவர்களின் பள்ளிவாசலுக்குச் செல்ல முடியவில்லை.) எனவே, நீங்கள் வந்து, என் இல்லத்தில் (ஓர் இடத்தில்) தொழவேண்டும். அதை நான் தொழும் இடமாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இன்ஷா அல்லாஹ் (அவ்வாறே) செய்கிறேன் என்று கூறினார்கள். மறுநாள் நண்பகலில் என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் வர) அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நான் அனுமதியளித்தேன் அவர்கள் உட்காரக் கூட இல்லை. (அதற்குள்), (இத்பானே!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்கள். அவர்கள் (என் வீட்டில்) எந்த இடத்தில் தொழவேண்டும் என நான் விரும்பினேனோ அந்த இடத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன். (அந்த இடத்தில்) நபி (ஸல்) அவர்கள் (தொழ) நின்றார்கள். உடனே நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். (தொழுகை முடியும் போது) அவர்கள் சலாம் கொடுத்தார்கள். அவர்கள் சலாம் கொடுத்த போது நாங்களும் சலாம் கொடுத்தோம்

பாடம் : 155

தொழுகைக்குப் பின் இறைவனைப் போற்றித் துதிப்பது.

841 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் கடமையான (ஃபர்ள்) தொழுகையை முடிக்கும் போது சப்தமாக (இறைவனைப் போற்றி) திக்ரு செய்யும் நடைமுறை நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்தது. அவ்வாறு மக்கள் கூறக்கேட்டால் அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன்.

842 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை தக்பீரை வைத்து நான் அறிந்து கொள்வேன்.

843 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதுபோன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படி யான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின் றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே) என்று கூறினர்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட(செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களை பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.) (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர்34 தடவை கூறவேண்டும் என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹு மிகப் பெரியவன்) என்று 33தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவைக் கூறியதாக அமையும் என்று பதிலளித்தார்கள்.

844 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு என்னை எழுதச் சொன்ன கடிதத்தில் பின்வரும் தகவலையும் குறிப்பிட்டிருந்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் லாயிலாஹ இல்லல்லாஹு,வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்(க்)கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்- ஷையின் கதீர். அல்லாஹும்ம! லா மானிஅ -மா அஉதைத்த, வலா முஉத்திய -மா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத் ளஅல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் ஏகன். அவனுக்கு நிகர் எவருமில்லை (எதுவுல்லை). ஆட்சியதிகாரம் அவனுக்குரியது. புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்தின் மிதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவன் இல்லை. நீ தடுத்ததை கொடுப்பவன் இல்லை. எச் செல்வம் உடையவருக்கும் அவரது செல்வம் உன்னிடம் எந்தப் பயனுமளிக்க முடியாது.ன

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) அல்ஜத்’ எனும் சொற்சொடருக்கு செல்வம்’ என்று பொருள்.

பாடம் : 156

சலாம் கொடுத்ததும் இமாம் மக்களை நோக்கித் திரும்புவது.

845 சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுவித்து முடித்ததும் எங்களை நோக்கித் தமது முகத்தை நேராகத் திருப்பி (அமர்ந்து)விடுவார்கள்.

846 ஸைத் பின் கா-த் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா’ எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினர்.

அப்போது என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து,நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

847 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையை பாதி இரவுவரை பிற்படுத்தினார்கள். பிறகு அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். பிறகு (எங்களுக்கு) தொழுவித்துவிட்டு தம் முகத்தை எங்களை நோக்கி நேராகத் திருப்பி (அமர்ந்து), மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டனர். நீங்கள் ஓர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வரை அத்தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்) என்று சொன்னார்கள்.

பாடம் : 157

சலாம் கொடுத்த பின் இமாம் தொழுத இடத்திலேயே இருப்பது.

848 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் கடமையான தொழுகையைத் தொழுத இடத்திலேயே (சுன்னத், நஃபில் தொழுகைகளைத்) தொழுவார்கள். (அபூபக்ர் ஸித்தீக் ளரலின அவர்களின் பேரர்) காசிம் (ரஹ்) அவர்களும் இவ்வாறே செய்வார்கள். இமாம் (கடமையான தொழுகையைத் தொழுவித்த) அதே இடத்திலேயே உபரியானத் தொழுகைகளை தொழக்கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் சொன்ன தாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த தாகக் கூறப்படுகிறது. அது ஆதாரபூர்வமானதன்று.

849 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்ததும் அதே இடத்திலேயே சிறிது நேரம் (அமர்ந்து) இருப்பார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

தொழுகையை முடித்தப் பெண்கள் (முதலில்) சென்றுவிடட்டும் என்பதற்காகவே ளநபி (ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்து கொண்டிருந்தார்கள்ன என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கறிந்தவன்.

850 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுப்பார்கள். அவர்கள் (தம் இல்லத்திற்கு) திரும்புவதற்கு முன் பெண்கள் திரும்பிச் சென்று தம் இல்லங்களுக்குள் நுழைந்திருப்பார்கள். ள குறைந்த பட்சம் அவ்வளவு நேரம் நபி (ஸல்) அவர்கள் வீற்றிருப்பார்கள்.ன

இன்னும் பல அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில் சில வற்றில் இந்த ஹதீஸை உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் ஹிந்து பின்த் அல்ஹாரிஸ் ஃபிராஸிய்யா’ என்றும் வேறு சில அறிவிப்புகளில் ஹிந்து பின்த்தில் கர்ஷிய்யா’ என்றும் இன்னோர் அறிவிப்பில் குறைஷிப் பெண்மணி’ என்றும் பலவாறாக வந்துள்ளது.

பாடம் : 158

தொழுகை நடத்திவிட்டு, ஏதேனும் தேவை நினைவுக்கு வந்தவுடன் இமாம் (அமராமல்) மக்களைக் கடந்து செல்வது.

851 உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றி) அஸ்ர் தொழுகை தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் மக்களைத் தாண்டிக் கொண்டு தம் துணைவியரில் ஒருவரது இல்லம் நோக்கி விரைந்து சென்றார்கள். அவர்களது விரைவைக் கண்டு மக்கள் திடுக்குற்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் (திரும்பி) வந்த போது தாம் விரைவாகச் சென்றது பற்றி மக்கள் வியப்புற்றிருப்பதைக் கண்டார்கள். எனவே, எங்களிடம் இருந்த (ஸகாத் நிதியான) தங்கக்கட்டி ஒன்று (தொழுது கொண்டி ருக்கும் போது) என் நினைவுக்கு வந்தது. அது (பற்றிய சிந்தனை தொழுகையில் கவனம் செலுத்த விடாமல்) என்னைத் தடுத்துவிடுவதை நான் வெறுத்தேன். ஆகவே நான் (சென்று) அதைப் பங்கிட்டுவிடுமாறு பணித்(துவந்)தேன் என்று கூறினார்கள்.

பாடம் : 159

(தொழுது முடித்தபின் இமாம்) வலப் பக்கமோ இடப் பக்கமோ திரும்பி அமர்வதும், திரும்பிச் செல்வதும்.

னஸ் (ரலி) அவர்கள் (தொழுது முடித்த பின்) வலப் பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். இடப்பக்கமாகவும் திரும்பி அமர்வார்கள். வலப் பக்கம் திரும்புவதை மட்டுமே தேர்வு செய்வோரை அவர்கள் கண்டிப்பார்கள்.

852 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வலப் பக்கம் திரும்புவதே கடமை என்று எண்ணிக்கொள்வதன் மூலம் உங்களில் எவரும் தம் தொழுகையில் ஷைத்தானுக்குச் சிறிதளவும் இடமளித்து விடவேண்டாம். நபி (ஸல்) அவர்கள் நான் பார்த்திருக்கிறேன். பலசமயங்களில் அவர்கள் தம் இடப் பக்கமும் திரும்புவார்கள்.

பாடம் : 160

சமைக்கப்படாத வெள்ளைப் பூண்டு, வெங்காயம், காட்டுள்ளி (போன்ற வாடையுள்ளவற்றைச்) சாப்பிடுவது குறித்து வந்துள்ளவையும், பசி காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ வெள்ளைப் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சாப்பிட்டவர் (அதன் நெடி நீங்காத வரை) நமது பள்ளிவாசலுக்கு நெருங்கவேண்டாம் எனும் நபி மொழியும்.

853 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இந்தச் செடியிலிருந்து -அதாவது வெள்ளைப்பூண்டுடைச்- சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலுக்கு நெருங்கவேண்டாம் என்று கூறினார்கள்.

854 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு இந்தச் செடியிலிருந்து சாப்பிட்டவர் நம் பள்ளிக்குள் வர வேண்டாம் என்று கூறினார்கள்’என்றார்கள். அவர்களிடம் நான்,எந்த வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்ட நபியவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், சமைக்கப் படாத வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கன் என்றே நான் கருதுகிறேன் என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் நெடிவீசும் பூண்டைக் கருத்தில் கொண்டே கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

855 அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் நம்மை விட்டும் விலகியிருக்கட்டும்’ அல்லது நம் பள்ளிவாசலை விட்டும் விலகியிருக்கட்டும்’ அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தம் இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும் என்று சொன்னதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் சில கீரைகள் இருந்தன. (நன்கு வேகாத காரணத்தால்) அதில் நெடிவீசக் கண்டார்கள். ஆகவே அவற்றைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விவரம் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் அதைத் தம்முடனிருந்த ஒரு தோழருக்கு அதைக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அதைச் சாப்பிட்ட அத்தோழரும் வெறுப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், நீங்கள் சாப்பிடுங்கள் ஏனெனில்,நீங்கள் உரையாடாத சில (வானோ)ரிடம் நான் உரையாடுகிறேன் (அதனால்தான் நான் அதைச் சாப்பிட வில்லை) என்று கூறினார்கள்.

அஹ்மது பின் சா-ஹ் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடரில் வட்ட வடிவப் பாத்திரம் (பத்ர்) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது’ என்று அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாகவும் பத்ர்’ என்பது கீரைகள் இருந்த தட்டையே’ குறிக்கும் என்று அதற்கு விளக்கம் கூறிய தாகவும் இடம்பெற்றுள்ளது.

லைஸ் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் பாத்திரம் சம்பந்தமான குறிப்பெதையும் கூறவில்லை ஆகவே, அது அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் உரையா அல்லது நபி மொழியின் மூலத்திலேயே உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

856 அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அனஸ் (ரலி) அவர்களிடம், வெள்ளைப் பூண்டு குறித்து நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் என்ன செவியேற்றுள்ளீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், இந்தச் செடியிலிருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் நம்மை நெருங்க வேண்டாம்’ அல்லது நம்முடன் தொழ வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.

பாடம் : 161

சிறுவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்வதும், குளியலும் உளூவும் அவர்களுக்கு எப்பருவத்தில் கடமையாகும் என்பதும், கூட்டுத் தொழுகை (ஜமாஅத்), பெருநாட்கள் தொழுகை, ஜனாஸாத் தொழுகை ஆகியவற்றில் அவர்கள் கலந்து கொள்வதும், அவர்கள் தொழுகை வரிசை யில் (மற்றவர்களுடன்) நிற்பதும்.

857 சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மையவாடியின்) ஓரத்திலிருந்த ஒரு அடக்கக்குழி (கப்று)அருகே சென்று மக்களுக்கு இமாமாக நின்று (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். மக்கள் அந்த அடக்கக்குழி அருகில் அணிவகுத்து நின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்களுடன் அப்போது சென்றிருந்த ஒருவர் என்னிடம் கூறினார் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் , அபூஅம்ரே! உங்களுக்கு இதைக் கூறிய அவர் யார்? என்று கேட்டேன். அதற்கு ஷஅபீ (ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்று பதிலளித்தார்கள்.

858 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத்தில் குளிப்பது, பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

859 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டு, இரவின் ஒரு பகுதி ஆனதும் எழுந்து (சென்று) தொங்கவிடப்பட்டி ருந்த தோல்ப்பையிலிருந்து (தண்ணீர் எடுத்து) அங்கசுத்தி (உளூ) செய்தார்கள்.-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் (உறுப்புக்களை அதிகம் தேய்க்காமல் தலா ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை மட்டுமே கழுவிய) நபி (ஸல்) அவர்களின் அந்த உளூ எளிமையாகவும் அதே சமயத்தில் மிகக் குறைந்த பட்ச அளவிலும் அமைந்திருந்ததுஎன்று குறிப்பிட்டார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் நின்று தொழுதார்கள். உடனே நானும் எழுந்து அவர்களைப் போன்றே (சுருக்கமாக) உளூ செய்துவிட்டு வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே (தொழுது கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தம் வலப் பக்த்தில் நிறுத்திக் கொண்டார்கள். பிறகு அல்லாஹ் நாடியதைத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து (ஃபஜ்ர்) தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது அவர்கள் எழுந்து அவருடன் தொழுகைக்குப் போய் தொழுவித்தார்கள். ஆனால் அவர்கள் (உறங்கியதற்காக புதிதாக) உளூ செய்யவில்லை.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் கண்கள் உறங்குகின்றன;அவர்களின் உள்ளம் உறங்காது’ என்று மக்கள் கூறுகின்றனரே! (அது உண்மையா?) என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள், இறைத்தூதர் களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (வஹீ) ஆகும்’ என்று உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறக்கேட்டுள்ளேன் என்றார்கள்.

பிறகு, (மகனே!) உன்னை நான் அறுத்து (குர்பானி செய்து) விடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன் எனும் (37:102ஆவது) இறை வசனத்தையும் (தம் கருத்தக்குச் சான்றாக) ஓதிக் காட்டினார்கள்

860 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் (தாய் வழிப்)பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் உணவு சமைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (விருந்துண்ண) அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதைச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர், எழுங்கள்! உங்களுக் காக நான் (உபரியான தொழுகையை) தொழுவிக் கிறேன் என்று கூறினார்கள். (தொழுவதற்காக) நான் எங்களுக்குரிய பாயொன்றை (எடுக்க அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரித்ததனால் கறுப்படித்துப் போய்விட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீரைத் தெளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் பாயில் தொழுகைக்காக) நின்றார்கள். நானும் என்னுடன் ஓர் அநாதைச் சிறுவரும் (முதல் வரிசையில்) நிற்க அந்த மூதாட்டி எங்களுக்குப் பின்னால் (தனியாக) நின்று கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (இமாமாக நின்று உபரியான) இரண்டு ரக்அத்கள் தெழுவித்தார்கள்.

861 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) மினாவில் சுவர் (போன்ற தடுப்பு) எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன்-அந்நாளில் நான் பருவவயதை நெருங்கிவிட்டிருந்தேன்- (தொழுது கொண்டிருந்தவர்களின்) ஓர் அணியில் ஒரு பகுதியை நான் கடந்து சென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினூடே புகுந்து (நின்று) கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்து சென்ற)தற்காக யாரும் என்னை ஆட்சேபிக்கவில்லை.

862 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் அவர்களை அழைத்து, (தொழுகைக்கு வந்திருந்த) பெண்களும் சிறுவர்களு:ம உறங்கிவிட்டனர் என்று கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறுயாரும் இந்தத் தொழுகையைத் தொழவில்லை என்று கூறினார்கள்.

அன்றைய நாளில் மதீனாவாசிகளைத் தவிர வேறுயாரும் தொழுபவர்களாக இருக்கவில்லை.

863 அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாட்களில் (பெண்கள் பகுதிக்குப்) புறப்பட்டுச் சென்றபோது அவர்களுடன் நீங்களும் இருந்தீர் களா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆம் (இருந்தேன்). (உறவின் காரணத்தால்) அவர்களுடன் எனக்கு நெருக்கம் இல்லாதிருந்திருப்பின் சிறுவனாக இருந்தநான் அவர்களுடன் (பெண்கள் பகுதிவரை சென்று) இருந்திருக்க முடியாது. (பெருநாள் தொழுகையை முடித்துவிட்டு) நபி (ஸல்) அவர்கள் கஸீர் பின் ஸல்த் (ரலி) அவர்களின் வீட்டருகேயுள்ள அடையாள(க் கம்ப)ம் அருகில் வந்து (மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் புரிந்தார்கள். மேலும் (ஏழை எளியோருக்காக) தர்மம் செய்யுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். உடனே அப் பெண்கள் தங்களின் ஆபரணங்களை நோக்கி தங்களின் கைகளைக் கொண்டுசென்று (அவற்றைக் கழற்றி) பிலால் (ரலி) அவர்களின் (கையில் ஏந்தப்பட்டிருந்த) ஆடையில் போடலானார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) அவர்களும் இல்லம் சென்றனர்.

பாடம் : 162

இரவிலும் பின்னரவின் இருட்டிலும் பெண்கள் பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்வது.

864 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களை அழைத்து, பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்’ என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து,பூமியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாத் தொழுகையை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுதுவந்தனர்

865 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் துணைவியர் இரவில் பள்ளிவாசலுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கேட்டால் அவர்களுக்கு அனுமதி வழங்குங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பாடம் : 163

(தொழுகை முடிந்தபின்) இமாம் எழுவதை எதிர்பார்த்து மக்கள் அமர்ந்திருப்பது.

866 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள், கடமையான தொழுகையில் சலாம் கொடுத்ததும் எழுந்து (சென்று)விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர்களுடன்) தொழுகையில் கலந்து கொண்ட ஆண்களும் அல்லாஹ் நாடிய அளவுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள். (பெண்கள் சென்றபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுவார்கள்

867 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவிப்பார்கள். அப்போது பெண்கள் தங்கள் ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் போர்த்திக் கொண்டு (தொழுதுவிட்டு) திரும்பிச் செல்வார்கள். அவர்கள் (யார் யாரென) அறியப்பட மாட்டார்கள்.

868 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத் துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதைக் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.

இதை அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

869 அம்ரா பின்த் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்கள் (இன்று) நடந்துகொள்ளும் முறையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இன்று) கண்டிருந்தால் பனூஇஸ்ராயீல் பெண்கள் தடுக்கப்பட்டதுபோன்று இந்தப் பெண்களையும் (பள்ளிவாசலுக்கு வருவதைவிட்டும்) தடுத்திருப்பார்கள். (அந்த அளவுக்கு இன்று பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வருகிறார்கள்) என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் அம்ரா (ரஹ்) அவர்களிடம், பனூஇஸ்ராயீல் பெண்கள் (பள்ளி வாசலுக்கு வரக்கூடாதென) தடுக்கப்ட்டிருந்தனரா? என்று கேட்டேன். அதற்கு அம்ரா அவர்கள், ஆம்’ என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 164

ஆண்கள் (வரிசைக்குப்) பின்னால் பெண்கள் தொழுவது.

870 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்றுநேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள்

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன்,பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற் காகத்தான்’ என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

871 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (உபரித் தொழுகை) தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்மு சுலைம் அவர்கள் எங்களுக் குப் பின்னால் நின்றார்கள்.

பாடம் : 165

சுப்ஹுத் தொழுகை முடிந்ததும் விரைவாகப் பெண்கள் (பள்ளியிலிருந்து) திரும்பி விடுவதும் குறைந்த நேரமே அவர்கள் பள்ளியில் தங்குவதும்.

872 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையை இருட்டிருக்கவே தொழுவிப்பார்கள். இறை நம்பிக்கையுள்ள பெண்கள் (தொழுகையை முடித்து இல்லம்) திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்கள் (யார் யாரென) அறியப்பட மாட்டார்கள்’ அல்லது அவர்களில் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ள  மாட்டார்கள்.

இதை காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 166

பள்ளிவாசலுக்குச் செல்ல பெண்கள் தம் கணவரிடம் அனுமதி பெறுவது.

873 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் ƒதுணைவியர் (பள்ளிவாசலுக்குச் செல்ல) அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 167

ஆண்களுக்குப் பின் பெண்களும் தொழுவது.

874 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் தொழுதார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்முசுலைம் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்னால் நின்றார்கள்.

875 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று)விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள், எழுவதற்கு முன் சற்று நேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள். அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்கள் பெண்களை நெருங்குவதற்கு முன் பெண்கள் திரும்பிச் சென்றுவிடட்டும் என்பதற்காகத்தான்’ என்றே கருதப்படுகிறது. அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.