71 – நூஹ்

அத்தியாயம்: 71 நூஹ் – ஓர் இறைத் தூதரின் பெயர், மொத்த வசனங்கள்: 28

இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. “உமது சமுதாயத்திற்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன் அவர்களை எச்சரிப்பீராக” என்று நூஹை அவரது சமுதாயத்திடம் நாம் அனுப்பினோம்.

2, 3, 4. “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள் என்று நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு அவகாசம் தருவான். அல்லாஹ்வின் தவணை வரும் போது அது பிற்படுத்தப்படாது. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?” என்று அவர் கூறினார்.

5. “என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும், பகலிலும் நான் அழைத்தேன்” என்று அவர் கூறினார்.

6. “எனது அழைப்பு வெறுப்பைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு அதிகமாக்கவில்லை”

7. “நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் தமது விரல்களைத் தமது காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். தமது ஆடைகளால் மூடிக் கொள்கின்றனர். பிடிவாதம் பிடிக்கின்றனர். அதிகம் அகந்தை கொள்கின்றனர்”

8. “பின்னர் அவர்களை நான் உரத்த குரலில் அழைத்தேன்”

9. “பின்னர் அவர்களைப் பகிரங்கமாகவும் அழைத்தேன். மிகவும் இரகசியமாகவும் அழைத்தேன்”

10. “உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்” என்று கூறினேன்.

11. “உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்”

12. “செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காகச் சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான்”

13. “உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வுக்கு எந்த மரியாதையையும் வழங்காதிருக்கிறீர்கள்”

14. “உங்களை அவன் பல வகைகளாகப் படைத்தான்”

15. “ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா?”

16. “அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான். சூரியனை விளக்காக அமைத்தான்”

17. “அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்”

18. “பின்னர் அதிலேயே உங்களை மீட்டுவான். (அதிலிருந்தே) உங்களை வெளியேற்றுவான்”

19, 20. “பூமியில் உள்ள பல வழிகளில் நீங்கள் செல்வதற்காக அல்லாஹ்வே உங்களுக்காக அதை விரிப்பாக அமைத்தான்” (என்றும் கூறினேன்.)

21. “என் இறைவா! அவர்கள் எனக்கு மாறு செய்து விட்டனர். எவனுடைய செல்வமும், சந்ததியும் அவனுக்கே இழப்பை ஏற்படுத்துகிறதோ அவனை இவர்கள் பின்பற்றுகின்றனர்” என்றும் நூஹ் கூறினார்.

22. மிகப் பெரும் சூழ்ச்சியை அவர்கள் செய்தனர்.

23. “உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள்! வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகியவற்றை (தெய்வங்களை) விட்டு விடாதீர்கள்!” என்று அவர்கள் கூறுகின்றனர்.

24. “அதிகமானோரை அவர்கள் வழிகெடுத்து விட்டனர். எனவே அநீதி இழைத்தோருக்கு வழி கேட்டைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!’ (என்றும் பிரார்த்தித்தார்.)

25. அவர்களது குற்றங்கள் காரணமாக மூழ்கடிக்கப்பட்டு நரகில் நுழைக்கப்பட்டார்கள். அல்லாஹ்வையன்றி தமக்கு உதவியாளர்களை அவர்கள் காண மாட்டார்கள்.

26. “என் இறைவா! பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே!” என்று நூஹ் கூறினார்.

27. நீ அவர்களை விட்டு வைத்தால் உனது அடியார்களை அவர்கள் வழிகெடுப்பார்கள். (உன்னை) மறுக்கும் பாவியைத் தவிர அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.

28. “என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே!” (எனவும் பிரார்த்தித்தார்)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: